இலங்கைக்கு இராமேஸ்வரத்திலிருந்து இராமன் பாலம் கட்டினான் என்றும், அந்தப் பாலத்தை இடித்துவிட்டு சேது சமுத்திரத் திட்டத்தை அமுல் படுத்தக்கூடாது என்றும் இந்துத்துவவாதிகள் கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தனர். சுப்ரமணிய சுவாமியும் உச்சநீதி மன்றத்திலே வழக்கு தொடர்ந்தார். இப்போது நிலைமை எல்லாம் தலைகீழாக மாறிப்போய் இருக்கிறது. ‘இராமேஸ்வரம் கடல் பகுதியில் இராமர்  பாலம் இருந்ததாகக் கூற முடியாது’ இப்படிக் கூறியிருப்பவர், ஒன்றிய விண்வெளி மற்றும் அறிவியல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங். கூறி யிருக்கிற இடம் நாடாளுமன்றம். அவர் மேலும் கூறுகிறார், ‘19 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு என்பதால், இராமர் பாலம் பற்றி துல்லியமாக கண்டறிய முடியவில்லை என்றும், செயற்கைக் கோள் படங்களில் கடலில் சில பாறைகள் இருப்பது போல் கண்டறியப்பட்ட போதிலும், அது இராமர் கட்டிய பாலம் என்று கூறுவது கடினம்’ என்று தெரிவித்து இருக்கிறார்.

கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று கூறுவார்கள், அதேபோல 19 ஆயிரம் என்று ஒரு கால வரையறையை அமைச்சர் நிர்ணயிக் கிறார். எந்த அடிப்படையில் இவர் 19 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு என்று கூறுகிறார். புராணங்களுக்கு ஏதேனும் வரலாறு இருக்கிறதா? அறிவியல் தொழில்நுட்பம் அங்கே எந்த பாலமும் இல்லை என்று நிரூபித்து விட்டப் பிறகு, இப்படி ஒரு கட்டுக் கதையையும் சேர்த்து ஒரு உண்மையையும் சொல்ல வேண்டிய நிர்பந்தம், ஒன்றிய ஆட்சிக்கு ஏற்பட்டு இருக்கிறது. நம்பிக்கை என்பது வேறு. அறிவியல் உண்மை என்பது வேறு. அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்த அனைவரும் இராமர் கட்டிய பாலம் என்று கூறப்படும் எந்த கட்டுமானமும் இல்லை என்பதை ஏற்கெனவே தெளிவுபடுத்தி விட்டார்கள்.

அமெரிக்காவின் நாசா படம் பிடித்து அனுப்பி விட்டது என்றெல்லாம் கதை கட்டி விட்டவர்கள், அமெரிக்காவின் நாசா அப்படி எந்தப் படமும் அனுப்பவில்லை என்று மறுத்த போது, வாயை மூடிக் கொண் டார்கள். வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் தான் அயோத்தி யில் இராமன் பிறந்த இடத்தையும் தேர்வு செய்து மசூதியை இடித்து விட்டு பல்லாயிரக்கணக்கான ரூபாயை பாழடித்து கோவில் கட்டியிருக்கிறார்கள். ஒன்றிய ஆட்சி என்பது அறிவியலை அடியோடு புறக்கணித்துவிட்டு நம்பிக்கைகளை உயர்த்திப் பிடித்து மக்களை எப்படி ஏமாற்றிக் கொண்டிருக்கிறது என்பதற்கு ராமேஸ்வரம் கடல் பகுதியில் இராமர் பாலம் இருக்கிறது என்று கூற முடியாது என்று அவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் தருவதே சரியான சான்று ஆகும்.

- விடுதலை இராசேந்திரன்

Pin It