தமிழ்நாட்டு மக்களை அவ்வப்போது அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், டெங்குக் காய்ச்சல் வரிசையில் புதுவிதநோய் ஒன்று அண்மையில் தமிழகத்தில் பரவிவருகிறது. இதில் கவலைக்குரிய செய்தி என்னவென்றால் இந்நோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப் படவில்லை. மெல்ல மெல்ல பரவிவரும் இந்த தொற்றுநோய் தனக்கும் வராதா என்று சிலர் ஏங்கித் தவிப்பதாகவும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. மருந்து கண்டுபிடிக்கப்படாத அந்த நோயின் பெயர் எழுத்தாளர் என்பதாகும். காதல், கீதல், சாதல் என்று எதையாவது எழுதி புத்தகம் ஒன்று வெளியிட்டு விட்டால் அவர் கவிஞர் ஆகிவிடுகிறார்.

சமூகப் பிரச்சனைகளை எழுதத் துணிவற்று தன் சொந்தக்கதை, சோகக் கதையை எழுதி வெளியிட்டுவிட்டால் அவர் எழுத்தாளராகிவிடுகிறார். அல்லது கவிஞராகவோ, எழுத்தாளராகவோ முன்னிறுத்தப்படுகிறார். தன்பெயருக்குப் பின்னால் சாதியை அடையாளப் படுத்தபவனுக்கும், சாதியைப் போட வெட்கப்பட்டு தான் படித்த படிப்பை அடையாளப் படுத்துபவனுக்கும் எப்படி அதிக வேறுபாடில்லையோ அப்படித்தான். தன் பெயருக்கு முன்னால் கவிஞன் என்றும் எழுத்தாளன் என்றும் அடைமொழி சூடிக்கொள்வதும் அல்லது சூட்டப்படுவதும் ஆகும். இந்த விளம்பர ஈசல்களின் தாய்ப்புற்று மூலம் எது தெரியுமா? திராவிடக் கட்சிகள்தான். தன் பெயருக்கு முன்னால் தன் ஊரின் பெயரான சாத்தூர், வீரபாண்டி, பண்ருட்டி, செஞ்சி என்றும், சிறைச்குச் சென்று திரும்பினால், பெயருக்கு முன்னால் தடா, பொடா, மிசா என்றும் தன் பெயரில் தனித்தன்மை இருக்க வேண்டுமென்பதற்காக ஈட்டிமுனை, தீப்பொறி, கனல், அஞ்சா நெஞ்சன், தளபதி என்றும் சூட்டிக் கொள்கிறார்கள். பெயரில் ஒரு நாகரீகத் தன்மையும், பகட்டும் இருக்க வேண்டுமென்று நினைத்துக் கொள்பவர்கள் மலிவு விலையில் விற்கப்படும் முனைவர், டாக்டர் பட்டங்களை சூட்டிக் கொள்கிறார்கள். இவர்களின் நீட்சிதான் திரைப்படங்களில் இன்று நாம் பார்க்கும் ‘பஞ்ச்’ பாலா, ‘கருத்து’ கந்தசாமி, ‘கடா’ குமார், ஓட்டேரி நரி, வட்டச் செயலாளர் ‘வண்டு’ முருகன், ‘தல’ தளபதி என்பதாகும்.

திராவிடக் கட்சிகளிடம் தொடங்கிய இந்தத் தொற்றுநோய் தமிழகத்தில் இன்று பல கட்சியினருக்கும் பரவியிருப்பதை கவனிக்க முடிகிறது. அரசியலில் வட்டச்செயலாளர், சதுரச் செயலாளர் தொடங்கி உச்சியில் இருப்பவர்கள் வரை எல்லோருக்கும் ஏதாவது ஒரு அடைமொழி இருக்கும் எதுவுமில்லா விட்டால் ஓ.ஓ.ந.ந.த., ங.த.ஓ, உ.ய.ஓ.ந., எனத் தலைப்பெழுத்தையே பட்டமாகச் சூடிக்கொள்பவர்களும் இருக்கிறார்கள். எந்தத் தகுதியும் இல்லாதவர்களுக்கு இத்தனைப் பட்டங்களும் அடைமொழிகளும் என்றால், கவிஞர், எழுத்தாளர் என்று ஒரு படைப்பாளி தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதில் தவறென்ன? என்ற கேள்வி நியாயமானதுதான். ஆனால் உணர்ச்சிக் கவிஞன் காசிஆனந்தனும், புரட்சிக் கவிஞன் இன்குலாப்பும் வாழும் மண்ணில், பொதுக் கழிப்பிடத்தில் தன் வக்கிரச் சிந்தனையை கிறுக்கிவிட்டுச் செல்பவனும் அல்லவா, தன்னைக் கவிஞன் என்று பிரகடனப்படுத்திக் கொள்கிறான்.

வேற்றுமை வெளிப்பட்டு விடக்கூடாது என்பதற்காக கொண்டுவரப்பட்ட பள்ளிச் சீருடையில்கூட காட்டன், பாலியஸ்டர் என்று தலைதூக்குவதுபோல எழுத்தின் தரத்தை மதிப்பிடாமல் புத்தகத்தாளின் தரத்தை மதிப்பிட மட்டுமே தெரிந்ததின் விளைவால் பலர் படைப்பாளிகளாக தூக்கி நிறுத்தப்படுவதுதான் வேதனையாகவும், வேடிக்கையாகவும் உள்ளது. இழவு வீட்டில் அழுவதுபோலவும், திருமண வீட்டில் வாழ்த்துவது போலவும், ஒரு சிலர் தற்போது நடிக்கப் பழகிக் கொண்டார்கள். சமூகச் சிந்தனையுடன் எழுத முன்வந்திருக்கும் இளைஞர்களை கவிஞன் என்றும் எழுத்தாளன் என்றும் ‘ஏத்திவிடும்’ எத்தர்கள் இவர்கள்.

தமிழ் மண்ணிலும் மக்களின் மனங்களிலும், பற்றிப் படர்ந்திருக்கும் மடமை இருளை சுட்டெரிக்கும் சூரியனாய் புறப்பட்டிருக்கும் இளைஞர்களை முன்ஏர் போல ஒழுங்கிபடுத்தி அழைத்துச் செல்வதற்குப் பதிலாக குறுக்குச் சால்ஓட்டி செயலை சிதைத்துவிடும் சிறுமதி கொண்ட இவர்கள் புகழ், விளம்பரம் எனும் போதைக்கு தங்களை ஒப்படைத்துக் கொண்ட அடிமைகள். இவர்களின் பசப்பு மொழிகளுக்கு முகம் கொடுக்காமல் தன் இலக்குநோக்கி இளைஞர்கள் நகர வேண்டும். ஆனால் நிலைமை அவ்வாறாக இல்லை என்பதுதான் உண்மை.

 என் தாய் கேபிள் டிவியை டேபிள் டிவி என்றும், பிரியாணியை பிராணி சாதம் என்றும் கடைசிவரை தவறாகவே உச்சரித்திருந்தாலும் ஒருவகையில் அவர்அப்படிச் சொன்னதுகூட சரியானதுதான் என்று எனக்குத் தோன்றுகிறது. என் வீட்டு டிவி டேபிளில் இருப்பதாலும் ஆடு, மாடு, கோழி போன்ற பிராணிகளைக் கொன்று சமைப்பதால் பிரியாணியை பிராணிசாதம் என்று சொன்னதில் என்ன தவறு இருக்கிறது? உழைப்பின் மேன்மையையும், இயற்கையின் மொழிகளையும் என் தந்தையை விட எனக்கு யாரும் அதிகமாகப் போதித்து விடவில்லை. உயர்நிலைப் படிப்பைக் கூட கடக்காத இவர்களின் நேர்மையான, பாமரத்தனமான ஆளுமையில்தான் நான் இயங்கிக் கொண்டிருக்கிறேன்.

நம் பாட்டிகளும், பாட்டன்களும் பூட்டிகளும், பூட்டன்களும் மிகச்சிறந்த படைப்பாளிகள் தான். ஆனால் அவர்கள் யாரும் தன்னைக் கவிஞன் என்றோ, எழுத்தாளன் என்றோ அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை. தன்னுடைய எழுத்தை அச்சேற்றி விட்ட தாலேயே ஒருவன் படைப்பாளி என்ற தகுதியை அடைந்து விடமுடியாது. ஒரு இனத்தின், மண்ணின், மொழியின் விடுதலைக்காக எவரது எழுத்து ஆயுதமாகப் பயன்படுகிறதோ அவரை அந்த இனம் போற்றும்போது அவர் படைப்பாளியாகிறார். அல்லது அந்த இனத்தை ஒடுக்குபவனால் படைப்பாளியும், அவர் எழுத்தும் சிறை பிடிக்கப்படும்போது அவர் படைப்பாளியென்பதையும் கடந்து புரட்சியாளராகவும் அறியப்படுகிறார். அவ்வையும், வள்ளுவனும், கம்பனும், இளங்கோவும், பாரதியும், பாவேந்தனும் தங்களைக் கவிஞன் என்றோ, எழுத்தாளன் என்றோ அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால் வரலாறு அவர்களை படைப்பாளியாக, மொழி, இன விடுதலையின் போராளியாக கொண்டாடிக் கொண்டிருக்கிறது.

அப்படியானால் தன் பெயருக்கு முன்னால் ஆசிரியர், பேராசிரியர், பொறியாளர், வழக்குரைஞர், நீதிபதி, மருத்துவர் என்று சூடிக் கொள்வது மட்டும் தவறில்லையா? என்ற கேள்வி எழலாம். தவறில்லை. மேலே குறிப்பிட்ட அனைத்தும் அவரவரின் தொழிலை அல்லது பணியைக் குறிக்கிறது. ஆனால் கவிஞனும், எழுத்தாளனும் எவனுக்கும் ஊழியம் செய்யவில்லை. இலாபம் ஈட்டுவதும், எழுத்தை சந்தைப்படுத்துவதும் அவன் நோக்கமாக இருக்குமானால் அவனால் 20 ரூபாய்க்கு 200 வகையான சமையல் குறிப்பு புத்தகங்களைத்தான் வெளியிடமுடியும். சமூகப் பிரச்சினைகளை எழுத முன்வந்திருக்கும் இளைஞர்களுக்கு அன்பு வேண்டுகோள் கவிஞன், எழுத்தாளன் என்ற நோயை உங்களுக்குள் அண்ட விடாதீர்கள். உங்களை கவிஞன் என்றோ எழுத்தாளன் என்றோ உயர்த்திப் பிடிப்பவர்களை நம்பாதீர்கள். அவர்கள் “பக்கத்து இலைக்கு பாயாசம் வேண்டுமென்று போர்க்கொடி உயர்த்தும் சுயநலவாதிகள்”.

Pin It