மே 17 இயக்கத்தின் சார்பாக திரு. உமர் சில கேள்விகளை என்னிடம் கேட்டுள்ளார். அவற்றுக்கான பதில்களை ஒவ்வொன்றாகத் தர விரும்புகிறேன்.

குற்றச்சாட்டு 1:

"மார்ச் இரண்டாம் நாள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் முதல் கோரிக்கையாக ஐ. நா.வில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று முன்வைக்கப்பட்டுள்ளது" என்று என் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது உண்மைக்குப் புறம்பானது. ஏனெனில் மார்ச் இரண்டாம் நாளன்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் அப்படிப்பட்ட வாசகம் கொண்ட ஒரு கோரிக்கை முன்வைக்கப் படவேயில்லை. அச்சந்திப்பில் கொடுக்கப்பட்ட பத்திரிகைச் செய்தியில் கீழ்கண்டவாறுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.

"ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைக் குழு கூட்டத்தில் எப்பொழுதும் இலங்கைக்குச் சார்பாகவே செயல்படும் இந்தியா, இம்முறை தமிழ் மக்களின் உணர்வுகளை மனதில் கொண்டு இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டை மேற்கொள்ளவேண்டும்" என்றுதான் குறிப்பிடப் பட்டுள்ளதே தவிர "ஐ.நா.வில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும்” என்று எந்த இடத்திலும் குறிப்பிடப் படவில்லை.

குற்றச்சாட்டு 2:

"இதே கோரிக்கையை மையப்படுத்தி கடந்த பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி பத்திரிக்கையாளர் சந்திப்பிலும்கூட தெரிவித்திருந்தார்" என்பது அடுத்த குற்றச்சாட்டு. 

நான் என்றுமே சொல்லாத ஒரு கருத்தை என் தொண்டைக்குள் திணிக்கும் வேலையைத் திரு. உமர் செய்துள்ளார். பிப்ரவரி 3ம் தேதி அன்று சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மேம்போக்காகப் படிக்கும் ஒருவர்கூட மேற்காணும் குற்றச்சாட்டு எவ்வளவு தவறானது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். பிப்ரவரி 3ம் நாள் கருத்தரங்கத் தீர்மான நகல் இதற்கு ஆதாரமாக இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டு 3:

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணையம் (LLRC) குறித்து "மக்கள் நல்வாழ்வு இயக்கம் பிப்ரவரி 3ம் தேதி நடத்திய கருத்தரங்கிலும் கூட (இந்த) உண்மை நிலையைப் புறக்கணித்த நிலைப்பாட்டினை எடுத்துத் தீர்மானம் நிறைவேற்றியது" என்று அபத்தமான ஒரு குற்றச்சாட்டு அள்ளி வீசப்பட்டுள்ளது. 

மக்கள் நல்வாழ்வு இயக்கம் குறித்து இப்படிப்பட்ட தவறான புரிதல் ஏற்பட்டுவிடக்கூடும் என்ற காரணத்தினாலேயே பிப்ரவரி 3ம் நாள் நடைபெற்ற ஒரு நாள் கருத்தரங்கின் இறுதி அமர்வில் LLRC குறித்த அமைப்பின் நிலைப்பாட்டினை எனது உரையில் மேடையிலேயே தெளிவாக எடுத்துரைத்தேன். "LLRC என்பது சர்வதேச மனித உரிமை சட்ட விதிமுறைகளின் அடிப்படையில் நிறுவப்பட்ட ஓர் ஆணையம் அல்ல. எனவே அது நிராகரிக்கப் பட வேண்டும் என உலகளவிலான மனித உரிமை அமைப்புகள் அப்பொழுதே அம்பலப்படுத்தியுள்ளன. ஆகவே LLRC அடிப்படையில் தீர்மானங்கள் நிறைவேற்றுவது முற்றிலும் ஏற்கத்தக்கதல்ல" எனத் தெளிவாக அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் முன்னிலையில் பிரகடனப் படுத்தியுள்ளேன். கருத்தரங்கின் இறுதி வரை இருந்து ஒழுங்காக கவனித்தவர்கள் அனைவருக்கும் இந்த உண்மை நன்கு தெரியும்.

குற்றச்சாட்டு 4:

"அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்பதை முதல் கோரிக்கையாக முன்வைக்கும்போது, LLRCயின் மூலமாக சர்வதேச விசாரணையும் நல்லிணக்கத்தின் மூலமாக வாக்கெடுப்புக் கோரிக்கையும் அடிபட்டு போகின்றன" என்பது அடுத்த குற்றச்சாட்டு.   ஒரு வாதத்திற்காக இதை ஒப்புக்கொண்டாலும்கூட, அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரிப்பதாகக் கூறும் ஒருவர், நிலவும் புவிசார் அரசியல் சூழலில் சர்வதேச விசாரணையை எவ்வாறு கோரமுடியும்?. அதேபோல் பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்றும் எவ்வாறு கேட்கமுடியும்? இந்த உண்மையைக் கூடப் புரிந்து கொள்ளாமால் அவசரப்பட்டு, குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசுவது முறைதானா எனக் கேட்க விரும்புகிறேன். 

குற்றச்சாட்டு 5:

"நல்லிணக்கத்தை முன்வைக்கிற தீர்மானத்தை ஆதரிக்கவேண்டும் என்பது தமிழீழ விடுதலைக்கான உரிமையை மறுப்பதாகும்" எனத் திரு. உமர் எனக்குப் பாடம் எடுக்கிறார்.

தமிழீழ விடுதலைதான் ஒரே தீர்வு எனும் நிலைபாட்டில் எண்பதுகளில் இருந்தே நான் உறுதியாக இருக்கின்றேன். முப்பதாண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டின் மேற்கு மண்டலத்தில் மார்க்சிய லெனினிய இயக்கங்களோடு சேர்ந்து இதற்கான பரப்புரையை நாங்கள் முன்னெடுத்திருக்கிறோம் என்பதையும் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.    

புதிதாக அரசியல் களத்திற்கு வரும் இளைஞர்கள் ஒருவர் மீது குற்றம் சாட்டும் பொழுது, அவர் சொல்லியது என்ன என்பதை முழுமையாக உள்வாங்கிக்கொண்டு குற்றம் சாட்ட வேண்டும். அதேபோல் கடந்த காலத்தில் அப்பிரச்சினை மீது அவர் என்ன மாதிரியான செயல்பாடுகளையெல்லாம் முன்னெடுத்திருக்கிறார் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். "எடுத்தேன்; கவிழ்த்தேன்" எனப் பேசுவது தோழமைக்கு அழகல்ல!

மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் அவர்களை நான் நன்கு அறிவேன். எனது செயல்பாடுகளையும் நோக்கங்களையும் அவர் நன்கு அறிவார். அப்படியிருக்கும் பொழுது, திரு. உமர் என்பவர் எனது அடிப்படை நேர்மையையே கேள்விக்குட்படுத்துவது மிகுந்த மனவேதனையை ஏற்படுத்துகிறது. 

தமிழீழ ஆதரவாளர்கள் சிறு சிறு வேறுபாடுகளைக் கூட பகை முரண்பாடாக மாற்றக்கூடாது என்பதையும், தமிழீழ விடியலுக்காக ஒருமித்த கருத்துடையவர்கள் பிரிந்து நிற்காமல் எப்பொழுதும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என்பதில் அழுத்தமான நம்பிக்கை கொண்டவன் நான். இதற்கான முயற்சிகளில் எனது சொந்த இழப்புகளைப் பற்றிக் கவலைப் படாமல் பம்பரம் போல் தொடர்ந்து செயலாற்றிக் கொண்டிருப்பவன். எனவே மே 17 இயக்கம் இதைப் புரிந்துகொண்டு எதிர்வரும் நாட்களில் செயல்படும் என நான் உறுதியாக நம்புகிறேன்.

"ஒருவர் பொறை, இருவர் நட்பு" 

இறுதிக் குறிப்பு: ஒரு அமைப்பின் பெயரை எழுதும் பொழுது கவனமாக எழுத வேண்டுமென்பது அடிப்படை நாகரிகமாகும். ஆனால், திரு. உமர் அவர்கள் தனது புகார்ப் பட்டியல் முழுவதிலும் மக்கள் நல்வாழ்வு இயக்கத்தை மக்கள் நலவாழ்வு இயக்கம் என்றே குறிப்பிடுவது ஏற்கத்தக்கதல்ல! 

****************************************************************************
பிப்ரவரி 3ம் நாள் சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானங்கள்.
 
"தமிழீழ இனப் படுகொலையும்
தமிழ்ச் சமூகத்தின் கடமையும்”
சிறப்புக் கருத்தரங்கு
பிப்ரவரி 3, 2013 ஞாயிறு, லயோலா கல்லூரி, சென்னை.
 
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
 
1. இனப்படுகொலை புரிந்த சிங்கள் இனவாத இராஜபக்சே அரசின் மீது பொருளாதார தடை விதிக்குமாறு இந்திய அரசைக் கோரும் தீர்மானத்தை தமிழ்நாடு சட்ட மன்றத்தில் முதலில் நிறைவேற்றியதோடு அண்மையில் ஆளுநர் உரையிலும் அதனை மீண்டும் வலியுறுத்திக் குறிப்பிட்டுள்ளதை இச் சிறப்பு கருத்தரங்கு நன்றியோடு வரவேற்கிறது.

2. ஐக்கிய நாடுகளின் சாசனம் 99 பிரிவின் அடிப்படையில் இலங்கை இனப்படுகொலையை குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணை கமிஷன் ஒன்றை நியமிக்க ஐ.நா வின் செயலர் நாயகம் திரு. பான்.கீ.மூன் அவர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் தீர்மானம் ஒன்றை தமிழ் நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றுமாறு இச் சிறப்பு கருத்தரங்கு தமிழ்நாடு அரசை வேண்டுகிறது.

3. கிழக்கு தைமூர், தெற்கு சூடான் போன்ற உலக நாடுகள் தங்களது நீண்ட நெடிய போராட்டங்களின் விளைவாக ஐ.நா வின் மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பின் மூலம் தங்களுடைய விடுதலையை வென்றெடுத்திருக்கின்றன. அதைப் போலவே, ஈழம் என்பது ஒரு வெற்றுக் கனவல்ல, மாறாக அது அம்மக்களின் இன்றியமையாத தேவை என்ற அடிப்படையிலும், தமிழீழம் சாத்தியமானதே என்பதாலும், ஐ.நா வின் மேற்பார்வையில் தமிழீழத்தில் உள்ள தமிழர்களும் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களும், ஈழத் தமிழ் மக்களின் எதிர்காலம் குறித்து தீர்மானிக்க ஜனநாயக அடிப்படையில் பொது வாக்கெடுப்பு ஒன்றை ஐ.நா நடத்திட வேண்டுமென இச் சிறப்பு கருத்தரங்கு கேட்டுக்கொள்கிறது.

4. ஐ.நா வின் சிறப்பு பிரதிநிதியின் இனப்படுகொலை குறித்த அறிக்கையை வெளிப்படையாக அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் வெளியிட தமிழக அரசும் புலம் பெயர்ந்த பரப்புரை குழுக்களும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இச் சிறப்பு கருத்தரங்கம் கோருகிறது.

5. சிங்கள அரசுக்கு சார்பாகவே செயல்பட்டு வரும் இந்திய அரசு, இலங்கை அரசு குறித்த அயலுறவு கொள்கையை மாற்றிக் கொள்ள வேண்டுமெனவும், ஈழத் தமிழர்களுக்கு எதிரான இன அழிப்புக் குற்றம் குறித்து விசாரிக்க சுதந்திரமான சர்வதேச விசாணை ஆணையம் ஒன்றை ஐ. நா உருவாக்க இந்திய அரசு தக்க நடவடிக்கை எடுக்க  வேண்டுமென இச் சிறப்பு கருத்தரங்கு கோருகிறது.  இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த கொடுமைகளுக்கு தார்மீக பொறுப்பினை இந்தியா ஏற்றுக்கொண்டு இலங்கை அரசுக்கு எதிராக ஐ.நா வில் தீர்மானம் கொண்டு வர இந்தியா பாடுபட வேண்டும் என இச் சிறப்பு கருத்தரங்கு வலியுறுத்துகிறது.

6. பல்லாண்டுகளாக இலங்கை அரசு இந்தியத் தமிழ் மீனவர்களை இந்திய மற்றும் சரவதேச கடல் எல்லைகளில் கூட மீன் பிடிக்க அனுமதிக்காமல் அவர்களை மனித மாண்புக்கு புறம்பாக சித்திரவதை செய்வதையும், மனிதாபிமானமின்றி சட்ட விரோதமாக சுட்டுக் கொல்வதையும் வழக்கமாக செய்து வருகிறது. இதன் மூலம் இந்திய இறையாண்மையை கேலிக்குள்ளாக்கும் இலங்கை அரசையும் இதை வேடிக்கைப் பார்க்கும் இந்திய அரசையும் இச் சிறப்பு கருத்தரங்கு வன்மையாகக் கண்டிக்கிறது. தாக்குதலுக்கு உள்ளாகி வரும் இந்திய தமிழ் மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டுமெனவும், இதுவரை அப்பாவி் மீனவர்களை சுட்டுக் கொன்ற இலங்கை கடற்படை மீது இந்திய அரசு குற்றவியல் நடவடிக்கை  எடுத்து உரிய தண்டனை வழங்கத் தக்க வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இச்சிறப்பு கருத்தரங்கு வலியுறுத்துகிறது.

7. அகதிகளுக்கென உருவாகப்பட்டுள்ள சர்வதேச சட்ட விதிமுறைகள் எதையும் பின்பற்றாமல் ஈழத் தமிழ் அகதிகளை தொடர்ந்து கிரிமினல் குற்றவாளிகள் போல் இந்திய அரசு நடத்தி வருகிறது. இதே கண்ணோட்டத்தில் ஈழத்தமிழர்களை சிறப்பு முகாம் என்ற பெயரில் சித்திரவதை முகாமாக மாற்றி வருவதால் இச்சிறப்பு முகாம்களை தமிழ் நாடு அரசு இழுத்தி மூடி அங்குள்ளவர்களை திறந்தவெளி முகாம்களுக்கு மாற்ற வேண்டுமெனத் தமிழ் நாடு அரசை இச்சிறப்பு கருத்தரங்கு வேண்டுகிறது.

8. கச்சத்தீவு பாரம்பரியமாக தமிழ் நாட்டிற்கு சொந்த மானது என வலியுறுத்தும் தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை இச்சிறப்பு கருத்தரங்கு வரவேற்கிறது.

9. யாழ்ப்பான பல்கலைக் கழக மாணவர்கள் அறவழியில் அமைதியாக போரில் இறந்த தங்களது இரத்தச் சொந்தங்களுக்கு அஞ்சலி செலுத்திய காரணத்திற்காக அவர்களை சிறையில் இட்டு சித்திரவதை செய்து கொடுமைப்படுத்தும் இலங்கை அரசை இச்சிறப்பு கருத்தரங்கு வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும் கைது செய்யப்பட்ட நிரபராதி மாணவர்களை நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென இச் சிறப்பு கருத்தரங்கு வேண்டுகிறது.

10.  சட்ட நெறிமுறைகளைப் பின்பற்றாமல் இலங்கையின் தலைமை நீதிபதியை பதவியிலிருந்து நீக்கி, தொடர்ந்து இலங்கை நீதி அமைப்பையே கேலிக் கூத்தாக்கி வரும் இராசபக்சே அரசை இச்சிறப்பு கருத்தரங்கு வன்மையாகக் கண்டிக்கிறது.

11.  ஐக்கிய நாடுகள் சபை என்பது பல்வேறு நாடுகள் இணைந்து உருவாக்கிய ஒரு பொது மன்றமாகும். உலக நாடுகளுக்கிடையே சிக்கல் ஏற்படும் பொழுதும், ஒரு நாட்டிற்குள்ளேயே இன அழிப்பு, சனநாயகப் படுகொலை, மனித உரிமை மீறல்கள் போன்றவை நிகழ்கின்ற பொழுதும், அவற்றில் தலையிட்டு உரிய நீதியை வழங்க வேண்டியது அதன் வரலாற்றுக் கடமை யாகும்.  ஆனால் ஈழத்தில் மிகக் கொடூரமான இனப்படுகொலையை இலங்கை அரசு நிகழ்த்திய பொழுது, பான் கீ மூன் தலைமையிலான ஐ.நா அவை அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்ததோடு இனவாத சிங்கள அரசுக்குச் சார்பாகவே நடந்து கொண்டது வன்மையாகக் கண்டிக்கத் தக்கதாகும். இலங்கை படுகொலை குறித்த ஐ.நா அவையின் நடவடிக்கையை மறு பரிசீலனை செய்ய வேண்டுமென, ஐ. நா நியமித்த தாரூஸ்மன் தலைமையிலான மூவர் குழு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே எதிர்வரும் காலங்களில் ஐ.நா வின் செயலர் நாயகமான திரு பான் கீ மூன் அவர்களின் செயல் பாடுகளை கண்காணித்து இத்தகைய குற்றங்கள் மீண்டும் நிகழாவண்ணம் சர்வதேச சமூகம் விழிப்புடன் செயலாற்ற வேண்டுமென இச்சிறப்பு கருத்தரங்கு கோருகிறது.

12.  எப்பொழுதுமே சிங்கள இனவாத அரசுக்குச் சார்பாகவே செயல்பட்டுவரும் இந்திய அரசு, தனது போக்கை மாற்றிக் கொண்டு ஈழத்தமிழர்களின் இன்னல்களுக்கு விடிவு காணத்தக்க வகையில் 2013 பிப்ரவரி-மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ள ஐ. நா அவையின் மனித உரிமைக்குழு கூட்டத்தில், நடுநிலையோடு நடந்து கொள்ள வேண்டும். இதுவரை இலங்கையில் நடைப்பெற்றது இனப்படுகொலையே என்பதை இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் ஒப்புக்கொண்டு அதற்கேற்ப தங்கள் அணுகு முறையை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். தமிழீழ மக்களின் எதிர்காலத்தை தீர்மானிக்க, தமிழீழத் தமிழர்களும் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களும் பங்கேற்கும் வகையில் பொது வாக்கெடுப்பு ஒன்றினை ஐ.நாவின் மேற்பார்வையில் சனநாயக முறைப்படி நடத்தவேண்டும் என்ற மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து அரசியல் கட்சிகளும், பல்வேறு சனநாயக அமைப்புகளும் கட்சி வேறுபாடுகளைக் கடந்து கறுப்புக் கொடி உயர்த்தி, மார்ச் 4 ஆம் நாளை ஈழத் தோழைமை நாளாகக் (EELAM SOLIDARITY DAY) கடைப்பிடித்து, தமிழகம் எங்கும் மக்கள் திரள் ஆர்பாட்டங்களை நடத்திட வேண்டுமென இச் சிறப்பு கருத்தரங்கம் கேட்டுக்கொள்கிறது.

தொடர்புக்கு:

கண. குறிஞ்சி

மக்கள் நல்வாழ்வு இயக்கம், தமிழ்நாடு

Pin It