வருகின்ற மார்ச் 4 ஆம் தேதி மக்கள் நல வாழ்வு இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெறவுள்ள இலங்கை தூதரக முற்றுகை போராட்டத்திற்காக, மார்ச் 2 ஆம் தேதி பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் தமிழீழ விடுதலையை ஆதரிக்கிற அனைத்து கட்சிகள், இயக்கங்களின் தலைவர்களும் பங்கேற்றனர். அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கண.குறிஞ்சி அவர்கள் ஐந்து கோரிக்கைகளை வெளியிட்டிருந்தார். அதில் முதல் கோரிக்கையாக ஐ.நாவில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று முன்வைக்கப்பட்டுள்ளது. இதே  கோரிக்கையை மையப்படுத்தி கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி அவர் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் கூட தெரிவித்திருந்தார்.

அமெரிக்க தீர்மானம் என்பது LLRC(கற்றுக் கொண்ட பாடங்கள் மற்று நல்லிணக்க ஆணையம்) விசாரணையையும், நல்லிணக்கத்தையுமே அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. இந்த தீர்மானம் அடிப்படையில் ஒன்றுபட்ட இலங்கைக்குள், இலங்கையின் அரசியல் சாசனத்தினை ஏற்று தமிழர்கள் தீர்வு காணவேண்டும் என்பதை முன்வைக்கிறது. இந்த காரணத்திற்காகவே கடந்த வருடமும் கூட இந்த தீர்மானம் முன்வைக்கப்பட்ட போது மே பதினேழு இயக்கம் பிற தோழமை இயக்கங்களுடன் இனைந்து சென்னை மெரினாவில் மார்ச் 18 ஆம் தேதியன்று ஒன்று திரட்டலை நிகழ்த்தி,கிட்டதட்ட 4000 தமிழர்கள் கலந்து கொண்டு இந்த தீர்மானத்தின் உள்ளடக்கமாக இருக்கும் நல்லிணக்கத்தினை எதிர்க்கிறோம் என்று அறிவித்தார்கள். மாறாக தமிழீழத்திற்கான சர்வதேச வாக்கெடுப்பும், இலங்கை அரசின் மீதான சர்வதேச சுதந்திர விசாரணையும் முன்வைக்கப்பட வேண்டும் என்ற இரு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இந்த வருடமும் கூட நல்லிணக்கத்தினை மையப்படுத்தி மேலும் திருத்தப்பட்டதாக ‘இலங்கை அரசின் அனுமதியோடு’ இயங்கும் சூழலையும் முன்வைக்கும் அமெரிக்க தீர்மானத்தினை மே 17 இயக்கம் பல்வேறு தளங்களில் அம்பலப்படுத்தி இருந்தது. இது தொலைக்காட்சி ஊடகங்களிலும் மே 17 தோழர்களால் முன்வைக்கப்பட்டது. இதே நிலையை ஆதரித்தே மதிமுக, த.வா.க, தி.வி.க, தபெதிக, ததேபொக உள்ளிட்ட தோழமை அமைப்புகள்  நிலைப்பாட்டினை எடுத்தன. மேலும் ஐ. நா அதிகாரிகளின் நேரடியான தலையீட்டின் காரணமாகவே 2009 ஜூலை மாதத்தில் முன்வைக்கப்பட்ட சர்வதேச விசாரணை என்கிற - ஐ. நாவின் மனித உரிமைக்குழு, பான் - கி-மூனின் சட்ட வல்லுனர் குழுவின் பரிந்துரைகளை - பான் - கி-மூன், விஜய் நம்பியார், ஜான் ஹோல்ம்ஸ் ஆகியோர் தடுத்தனர் என்கிற உண்மையை அம்பலப்படுத்தினோம். இதனடிப்படையில் தொடர் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு ஐ.நா அலுவலகம் சென்னை, இந்தியா நகரங்கள் மற்றும் ஐ. நாவின் தலைமை அலுவலகமான நியூயார்க் அலுவலகத்தினையும் மே17 இயக்கமும் தோழமை இயக்கங்களும் முற்றுகை இட்டன. ஆனால் மக்கள் நலவாழ்வு இயக்கம் பிப்.3ஆம் தேதி நடத்திய கருத்தரங்கிலும் கூட இந்த உண்மை நிலையைப் புறக்கணித்த நிலைப்பாட்டினை எடுத்து தீர்மானம் நிறைவேற்றியது. மேலும் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தினை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்கிற  தனது நிலைப்பாட்டினை வெளிப்படையாகத் தெரிவிக்காமல் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பிற தோழமை பங்கேற்பு இயக்கங்களின் ஒப்புதல் பெறாமல் செய்திக் குறிப்பாக வெளியிட்டதும், பத்திரிக்கையாளர் சந்திப்பிற்குப் பிறகும் கூட தனது நிலைப்பாட்டினை வெளிப்படையாக திரு. கண.குறிஞ்சி அவர்கள் மாற்றிக் கொள்வதாக செய்தி வெளியிடப்படாத நிலையைக் காண்கிறோம்.

அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்பதை முதல் கோரிக்கையாக முன்வைக்கும் போது, LLRCயின் மூலமாக சர்வதேச விசாரணையும், நல்லிணக்கத்தின் மூலமாக பொது வாக்கெடுப்பு கோரிக்கையும் அடிபட்டு போகின்றன. இலங்கை அரசே இலங்கையை விசாரித்துக் கொள்ளும் LLRC தீர்மானத்தை ஏற்கிறபோது, பின்னர் எப்படி சர்வதேச விசாரணை சாத்தியமாகும்? இதனால் கண.குறிஞ்சி அவர்களால் முன்வைக்கப்பட்ட முதல் கோரிக்கையானது, அடுத்ததாக உள்ள நான்கு கோரிக்கைகளிலிருந்து முரண்பட்டு நிற்கிறது. நல்லிணக்கத்தை முன் வைக்கிற தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்பது தமிழீழ விடுதலைக்கான உரிமையை மறுப்பதாகும்.

நல்லிணக்கத்தை முன்வைக்கும் அமெரிக்கத் தீர்மானம் என்பது ஏற்புடையது அல்ல என்பதை பத்திரிக்கையாளர் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து தலைவர்களும் ஏற்றுக் கொண்டவர்கள். ஆனால் கண.குறிஞ்சி அவர்கள் தானாக அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று முதல் கோரிக்கையாக பத்திரிக்கையாளர்கள் அறிக்கையில் சேர்த்ததற்கான காரணம் கேள்விக்குரியதாக உள்ளது.  இந்த கோரிக்கையை மே பதினேழு இயக்கம் ஏற்காது மற்றும் இதை அவர் தொடர்ந்து முன்வைக்கும் பட்சத்தில் தோழமை இயக்கமாக செயல்பட இயலாது போகும் நிலை ஏற்படும் என்பதை தெரிவிக்க விரும்புகிறோம். பிற தோழமை இயக்கங்கள் தீர்மானத்தில் மாற்றம் கொண்டுவருவதில் உறுதியான நிலைப்பாட்டினை எடுத்த காரணத்தினால் மார்ச்4ம் தேதி முற்றுகையில் கலந்து கொள்வதாக முடிவெடுத்து இருக்கிறோம். மேலும் திரு. கண.குறிஞ்சி அவர்களின் நிலைப்பாட்டிற்கான விளக்கத்தினை அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறோம்.

- உமர், மே பதினேழு இயக்கம்.

Pin It