கடந்த 7ம் தேதி தமிழ்ப் புலிகள் கட்சியின் நிறுவனத் தலைவர் தோழர் குடந்தை அரசன் அவர்களின் திருமணம் நடைபெற்றது. அந்த திருமண நிகழ்விற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், இசுலாமியத் தலைவர்கள் என அனைவரையும் அன்புடன் அழைத்திருந்தார் தோழர் குடந்தை அரசன் அவர்கள். அந்தத் திருமணத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலர் தோழர் தமிமுன் அன்சாரி அவர்களும் கலந்துகொண்டார். அந்தத் திருமணத்தில் கலந்துகொண்டது பற்றிதான் அவர்மீது விமர்சனம் வைக்கப்படுகிறது. திருமணத்தில் கலந்து கொண்டதில் என்ன தவறு என்கிறீர்களா..?

kudanthai_arasan_marriage_640

ஆம் குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும் புலவர்கள் நிறைந்த அண்ணனின் அவையில், யார் குற்றம் அதிகமாகக் கண்டுபிடித்தார்கள் என்ற போட்டியில் தற்போது 'குடந்தை அரசன் திருமணத்தில் தாலி எடுத்துக் கொடுத்தார், தவில் வாசித்தார்' என தோழர் தமிமுன் அன்சாரி அவர்கள் மீது அண்ணனின் நிலைய வித்துவான் ஒருவர் ஒரு புகைப்படத்தை முகநூலில் போட்டு வழக்கமான அவதூறுகளை அள்ளிவிட்டுக் கொண்டிருக்கிறார். இதைப் பற்றி தமிமுன் அன்சாரியும் அவர் அமைப்பைச் சேர்ந்தவர்களும் பதில் கூறிக்கொள்ளட்டும். நாம் அதற்குள் போகாமல் மார்க்கம் பேசிக் கொண்டே அவதூறுகளையும், இழிவான வார்த்தைகளையும் பேசும் இவர்களைப் பற்றி கொஞ்சம் பார்ப்போம்.

ஒரு மூமின் இன்னொரு மூமின் மீது அவதூறு சொல்லுவதும் அவரை அசிங்கப்படுத்துவதும்தான் மார்க்கமா..? இதுதான் தவ்ஹீத் சிந்தனையா..?

இந்த உலகத்தில் மாற்றுக்கருத்துக்கள் கூற எவருக்கும் உரிமையுண்டு. அந்த கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்வதே சிறந்த ஜனநாயகம். இசுலாமிய மார்க்க ஒழுக்க நெறிகளுக்குள் வாழ்வதாக சொல்லப்படும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்வாதிகளின் மாற்றுக்கருத்துக்களுக்கான எதிர்வினைகளைப் பார்த்தால் குமட்டல்ரகமாக இருப்பது மட்டுமல்லாமல் சமூகத்திற்கு அவப்பெயரைத் தருவதாகவும் அமைகிறது. சமீபத்தில் இலங்கையில் இருந்து தன் குடும்ப வறுமை தீர்க்க தனது 17 வயதில் சவூதி அரேபியாவிற்கு வேலைக்குச் சென்று, கொலைக் குற்றம் சுமத்தி, கொல்லப்பட்ட ரிசானா என்ற சகோதரியின் மரண தண்டனைக்கு எதிராகப் பேசிய மனுசியபுத்திரன் என்ற எழுத்தாளரையும், நக்கீரன் வார இதழையும் மூன்றாம் தரப் பேச்சாளர்கள் பேசுவது போல் பேசியும், தமிழகம் முழுக்க மிருகபுத்திரன் என சுவரொட்டிகள் ஒட்டியும், அவரின் ஊனத்தைக் கேலி செய்தும் தனது பாசிச சிந்தனை அரிப்பை தீர்த்துக் கொண்டார்கள்.

அவரின் மாற்றுக்கருத்திற்கு இசுலாமிய அடிப்படையில் அழகிய முறையில் பதில் கூற வேண்டும். இசுலாமிய அடிப்படையில் எப்படி அவருக்கும் மக்களுக்கும் விளக்க வேண்டுமோ அப்படி விளக்க முனைய வேண்டும். அதுதான் இசுலாமிய அறநெறி.

விஸ்வரூபம் படம் ஒரு சமூகத்தின் மீதான வன்மத்தை விதைக்கிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதற்கு எதிராகப் போராட வேண்டும்தான். ஆனால் மகளோடு கமலை சேர்த்துப் பேசுவதுதான் எதிர்ப்பியக்கமா..?

இவர்கள் பொது சமூகத்திடம் இப்படி நடந்து கொள்கிறார்கள்; தங்கள் சொந்த சமூக சகோதரர்களிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்று பார்த்தால் இன்னொரு அமைப்பை மையத் கட்சி என்பதும், மாமா கட்சி என்பதும் இணையதளங்களில் மஞ்சள் பத்திரிக்கையை விட மோசமாக பச்சை, பச்சையாக எழுதுகிறார்கள். இதுதான் மார்க்கமா..?

இதில் கேவலம் என்னவென்றால் இவர்கள் பேசுவதுதான் இஸ்லாம் என்று இஸ்லாமிய சமுகத்தை மற்றவர்கள் தவறாகப் புரிந்துகொள்வதற்கு ஏதுவாக இவர்களின் செயல்பாடுகள் இருப்பதுதான். இது சமூகங்களிடையே பிரிவினையை அதிகப்படுத்தவே உதவும்.

பொதுத்தளங்களில் மாற்றுக் கருத்தாளர்கள்மீது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கட்சியினர் வைக்கும் குற்றச்சாட்டுகளும் ஆபாச அர்ச்சனைகளும், இன்னும் சொல்லப்போனால் முஸ்லீம் சகோதரர்கள் குறித்தும், மற்ற முஸ்லீம் அமைப்புகள் குறித்தும் அதன் தலைவர்களைப் பற்றியும் எழுதுவதும், பேசுவதும் அதன் தலைமையின் அங்கீகாரத்தோடுதான் நடக்கிறதா..? இல்லை கண்டும் காணாமல் இருக்கிறார்களா..?

பொதுத்தளத்தில் இவர்களின் விவாத முறையைப் பார்க்கும் போது, இவர்கள் அழகிய மார்க்கம் பற்றி பேச எந்த தகுதியும் இல்லை என்றுதான் தோன்றுகிறது.

பொதுத்தளத்தில் இயங்குபவர்கள் சில தவிர்க்கமுடியாத இக்கட்டுகளில் மாட்டிக்கொள்வது உண்டு. அப்படியான சூழ்நிலைகளில் அழகிய முறையில் அதை எடுத்துக் கூறுவதும், அவர் உண்மையில் முரண்பாடான செயலில் இருந்தால், அச்செயலில் இருந்து தன்னை மாற்றிக்கொள்ளத்தக்க அளவிற்கு நம்முடைய விமர்சனம் தர்க்க ரீதியாகவும் உண்மையாகவும், ஆதாரப்பூர்வமாகவும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அந்த நபரின் செயல்களை மாற்றிக்கொள்ள நீங்கள் உதவிபுரிந்ததாக ஆகும். ஆனால் அதை விடுத்து குற்றம், குறை கண்டுபிடித்து அதைக்கொண்டு அசிங்கப்படுத்தவேண்டும் என்ற நோக்கோடு உங்கள் செயல்கள் அமைவது மார்க்க அடிப்படையில் கூடுமா..? என்பதுதான் எம்முடைய கேள்வி.. 'அல்லாஹ், ரசூல் வழியை அப்படியே கடைபிடிக்கிறோம் பேர்வழி' என்று ஊரெல்லாம் தம்பட்டம் அடித்துக்கொண்டு தன் சொந்த சகோதரனை இழிவுபடுத்துவதுதான் அல்லாஹ், ரசூல் வழியா..?

இந்திய அளவில் ஒப்பிடும்போது, தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் குறைவாக இருப்பதற்குக் காரணம், முஸ்லிம் மக்களுக்கு துணையாக செயல்படும் பெரியாரியவாதிகள், தலித்தியவாதிகள் மற்றும் இடதுசாரிகள். இந்துத்துவ சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் இவர்கள்தான் முஸ்லிம் மக்களின் உற்ற நண்பர்கள். இதை உணர்ந்துதான் தமிழகத்தில் செயல்பட்டு வரும் முஸ்லிம் அமைப்புகள் இவர்களோடு கைகோர்த்து பல்வேறு தளங்களில் போராடுகிறார்கள். ஆனால், இத்தகைய ஒன்றுபட்ட போராட்டங்கள் நடைபெறும் போதெல்லாம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கட்சியினர், இந்த சனநாயக சக்திகளை 'காபீர்கள்' என்று தூற்றுவதும், அவதூறு பேசி வம்புக்கு இழுப்பதும் நடைபெற்று வருகிறது. முஸ்லிம்களின் தோழமை சக்திகளை எதிர்ப்பது இராமகோபாலனின் வேலை அல்லவா? தமிழர் நலன் சார்ந்த பிரச்சினைகளில் சனநாயக சக்திகளோடு முஸ்லிம் அமைப்புகள் ஒன்று சேர்வதைத் தடுக்கும் வகையில் இழிவாகப் பேசுவது யாருக்கு நலன் சேர்க்கும் வேலை?

பொதுத்தளத்தில் இயங்குகிறோம்; நம்மை அனைவரும் உற்று நோக்கி வருகிறார்கள் என்பதை நினைவில் நிறுத்தி, முன் மாதிரிகளாக இருக்கவேண்டும். ஆனால் அண்ணனின் நிலைய வித்துவான்கள் வாய் கூசச் செய்யும் அளவிற்கு கெட்ட வார்த்தைகளால் பேசுவதும், ஒருவரை மற்றொருவர் இழிவுபடுத்துவதும் எந்த வகை முன்மாதிரியாகும்?

இவைகள் அனைத்தும் ஒரு இயக்கத்தின் பெயரால்தான் நடக்கிறது என்பது அந்த இயக்கத்திற்குத் தெரிந்தும், அந்த இயக்கத்தின் தலைமை இவ்விடயத்தில் என்றாவது மார்க்க அடிப்படையில் கண்டித்ததுண்டா..?

உண்மையையும், சத்தியத்தையும் கொண்டு இயக்கத்தை வளர்த்தெடுங்கள்! மக்களை சத்தியத்தின்பால் வென்றெடுங்கள்! அதை விடுத்து அவதூறுகளால் இயக்கம் வளர்க்க முயற்சிக்க வேண்டாம்.

பல்சமுக மக்கள் வாழும் நாட்டில் இந்த மண்ணின் மைந்தர்களாக வாழ்ந்து வருகிறோம். ஒருவருக்கு ஒருவர் இண‌க்கமான சூழலைத்தான் உருவாக்க வேண்டும். அதுதான் சகோதரத்துவத்தை வளர்க்கும். உங்கள் மார்க்க நெறிகளை அனைத்து மக்களும் நல்ல சூழலில் கேட்க வைப்பது; அதை எடுத்துச்சொல்வது உங்கள் பால் அவர்களை திரும்பிப் பார்க்க வைக்கும். அதை விடுத்து இசுலாமிய சமூக இளைஞர்களிடம் மற்ற சமுகத்தின் மேல் வெறுப்பு கொள்ள வைத்து, ராமகோபலன்களின் பணிக்கு உதவியாக இருக்க வேண்டாம் என்பதே எமது வேண்டுகோள்.

அண்டை வீட்டாரிடமும், நாம் வாழும் சமூகச் சூழலிலும் மற்ற சமூக மக்களின் திருமண நிகழ்வுகள், இறப்பு நிகழ்வுகளில் நாம் பங்கு பெறுவது இயல்பான ஒன்று. அதையும் கூட அசிங்கப்படுத்துவதும், மார்க்க நெறிமுறைகளில் தாங்கள்தான் சுத்தமாக இருப்பதைப் போல் காட்டிக்கொண்டு மற்றவர்களைத் தூற்றும் செயலை முதலில் தலைமையில் இருப்பவர்கள் நிறுத்த வேண்டும். அப்பொழுதுதான் உங்கள் மீது விசுவாசமும், பக்தியும் மட்டுமே வைத்துக்கொண்டு, 'நாங்கள்தான் சொர்க்கவாதிகள்; மற்றவர்கள் அனைவரும் நரகத்திற்குச் செல்வார்கள்' என்று இறைவனிடம் இருந்து நேராக தூதுச் செய்தியை பெற்றது போல் இறுமாப்பு கொண்டிருக்கும் உங்கள் உறுப்பினர்கள் திருந்துவார்கள்.

இதை எழுதுவதால் என்ன வகையான விளைவுகள் ஏற்படும் என்று தெரிந்தே எழுதுகிறேன்.

அண்ணனின் அடிமைகள் என் மீது பாய்வார்கள், அசிங்கமாக எழுதுவார்கள், சவால் விடுவார்கள், இவன் காபீர் என்று 'பத்வா' கொடுப்பார்கள், விடுதலைப் புலி ஆதரவாளன் என்பார்கள், பண மோசடி, தமிழ்த் தீவிரவாதி, அநீதியான வழக்கறிஞன் எனத் திட்டுவார்கள். இருப்பினும் எழுதுகிறேன்.

இந்த நாட்டில் வாழ்ந்தால் மாற்றுமத நண்பர்கள், சகோதரர்களின் வீட்டில் நடக்கும் நல்லது, துக்க காரியங்கள் போன்றவற்றில் கல‌ந்து கொள்ள வேண்டியிருக்கும். மாற்றுமத சகோதரர்களின் கடைகளில் பொருட்கள் வாங்க வேண்டியிருக்கும். அவர்கள் நிறுவனங்களில் வேலை செய்து, அவர்கள் கொடுக்கும் பணத்தில் நாம் வாழ்கையை ஓட்ட வேண்டியிருக்கும். நிர்பந்தமாக காந்தி படம் போட்ட ரூபாய் நோட்டை சட்டைப் பையில் வைத்திருக்க வேண்டியிருக்கும். சாலையில் நடந்தால் கண்ட கண்ட கருமாந்திரப் படங்களை எல்லாம் பார்க்க வேண்டியிருக்கும். இவற்றைத் தவிர்க்க முடியாது.

இல்லை.. முடியவே முடியாது என்றால், ஓர் ஒப்பந்தத்திற்கு வருவோம். இந்திய முஸ்லீம்கள் அனைவரையும்.. வேண்டாம்... தமிழக முஸ்லீம்களை மட்டுமாவது ஓரிட‌த்தில் கூட்டுவோம். ராமகோபாலன்களுக்கு வேலை வைக்காமல்… முழுமையாக இஸ்லாமியர்கள் வாழும், அனைத்து அறநெறிகளையும் முழுமையாகப் 'பின்பற்றும்' சவூதி அரேபியாவுக்கோ அல்லது இஸ்லாம் 'பூத்துக் குலுங்கும்' பாகிஸ்தானுக்கோ புலம் பெயர்வோம்!

நான் ரெடி, நீங்கள்..?

- உமர்கயான்.சே, இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்.

Pin It