தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வை இரத்து செய்யக் கோரும் மசோதாவை நிறைவேற்றி தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி மூன்று மாதங்கள் ஓடிய பிறகும் ஆளுநர் மாளிகை அப்படியே கிடப்பில் போட்டு வைத்திருக்கிறது. முதல்வர் நேரில் சென்றும் அழுத்தம் தந்தும், காதில் போட்டுக் கொள்ளவில்லை. மாநிலங்களவையில் தி.மு.க. உறுப்பினர் வில்சன், நீட் இரத்து கேட்டு தனி நபர் மசோதாவை அறிமுகப்படுத்தி எதிர்ப்பைப் பதிவு செய்தார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு நேரிலும் வற்புறுத்தியுள்ளார்.
நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆராய தமிழக அரசு நியமித்த ஏ.கே. ராஜன் குழு நியமன ஆணையை இரத்து செய்யக் கோரி தமிழக பா.ஜ.க. சென்னை உயர்நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்தது. நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து விட்டது. அடுத்தகட்டமாக தமிழக அனைத்துக் கட்சி சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து வலியுறுத்தத் திட்டமிட்டுள்ளதாக டி.ஆர். பாலு இப்போது அறிவித்திருக்கிறார். இதற்காக தயாரிக்கப்பட்டுள்ள கோரிக்கை மனுவில் பா.ஜ.க.வும் அ.இ.அ.தி.மு.க.வும் கையெழுத்திட மறுத்து விட்டது என்ற தகவலையும் டி.ஆர். பாலு தெரிவித்திருக்கிறார். சட்டமன்றத்தில் நீட் எதிர்ப்பு மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த இந்த இரண்டு கட்சிகளும் இப்போது திடீர் என்று பல்டி அடித்துள்ளன. குடியரசுத் தலைவரை சந்திப்பதற்கு அழைப்பு விடுத்தும் உடன்வர மறுத்துள்ளனர்.
ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை இரத்து செய்வோம் என்று கூறினீர்களே; ஏன் இரத்து செய்யவில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி மேடைகளில் நீட்டி முழங்கி வருகிறார். நீட் மசோதாவுக்கு ஒப்புதல் தர முடியாது என்று குடியரசுத் தலைவர், தமிழக அரசுக்கு தெரிவித்த கருத்தை மக்களுக்கு தெரிவிக்காமலேயே ஓராண்டுக்கு மேல் மூடி மறைத்தவர் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்பதையும் மக்களிடம் நாம் நினைவூட்ட வேண்டியிருக்கிறது.
ஆயுதப் படையினர் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் நீக்கப்பட வேண்டும்
ஆயுதப் படையினர் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் கிழித்தெறியப்பட வேண்டும் என்று மக்கள் ஏன் கருது கிறார்கள்? இந்தச் சட்டம், அரசமைப்புச் சட்டத்தின்கீழ் செல்லுபடியாகக் கூடியதா என 1997இல் உச்சநீதி மன்றத்தில் அரசமைப்புச்சட்ட அமர்வாயம் பரிசீலித்து, இந்தச் சட்டமானது அரசமைப்புச் சட்டத்தின்கீழ் செல்லுபடியாகக் கூடியது என்றும், தன்னிச்சையாக செயல்படும் தன்மையிலிருந்தும் பாதிக்கப்படவில்லை என்றும் கூறியிருந்தது. (Naga People’s Movement of Human Rights v. Union of India, 1997). கோட்பாட்டின்படி இது சரியானதாக இருக்கலாம். ஆனால், அந்தச் சட்டம் அமல்படுத்தப்படும் விதத்தைப் பார்த்தால் அப்படிச் சொல்லமுடியாது என சந்தேகமறக் கூற முடியும்.
ஆயுதப் படையினருக்கு வங்கம், அஸ்ஸாம், கிழக்கு பஞ்சாப், தில்லி, நாடு பிரிவினையடைந்த போது அங்கேயிருந்த ஐக்கிய மாகாணங்கள் ஆகியவற்றில் எழும் நிலைமைகளைக் கையாள் வதற்காக அவசரச் சட்டங்கள் மூலமாக சிறப்பு அதிகாரங்கள் அளிக்கப்பட்டன. இந்த அவசரச் சட்டங்கள் பின்னர் 1948ஆம் ஆண்டு ஆயுதப் படையினர் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தால் மாற்றி யமைக்கப்பட்டன. இந்தச் சட்டம் ஆரம்பத்தில் ஓராண்டுக்கு மட்டும் கொண்டு வரப் பட்டது. பின்னர் அது ஒவ்வோராண்டும் நீட்டிக்கப்பட்டு, அதுபோன்று 1958 வரையிலும் தொடர்ந்தது. பின்னர் 1958இல் கொண்டு வரப்பட்ட சட்டம் ஆரம்பத்தில் அஸ்ஸாம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களுக்குக் கொண்டு வரப்பட்டு, பின்னர் வட கிழக்கு பிராந்தியம் முழுமைக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
இந்தச் சட்டத்தில் மொத்தம் ஆறு பிரிவுகள் மட்டுமே உள்ளன. இவற்றில் 3, 4 மற்றும் 6 ஆகிய பிரிவுகள் மிகவும் பிரச்சனைக்குரியவைகளாகும். 3ஆவது பிரிவு, ஒரு பகுதியை “அமைதி குலைந்த பகுதி” (disturbed area) என்று பிரகடனம் செய்வதற்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் சம்பந்தப்பட்டது. ஒரு பகுதி “அமைதி குலைந்த பகுதி” அல்லது ஆபத்தான பகுதி என்று சம்பந்தப்பட்ட அதிகார வர்க்கம் திருப்தி அடைந்தால் போதுமானது, இந்தச் சட்டம் அங்கே அமல்படுத்தப் படும். அதாவது, அங்கேயுள்ள அதிகாரிகளின் தன்னிலை திருப்தியை (subjective satisfaction) அடிப்படையாகக் கொண்டு அல்லது அங்கேயுள்ள புறநிலை எதார்த்த நிலைமையினை (objective material) அடிப்படையாகக் கொண்டு அங்கேயுள்ள அதிகாரி தன் விருப்பத்தை வைத்து இதனைப் பிரகடனம் செய்கிறார். இது மிகவும் முக்கியம். ஏனெனில், கடந்த காலங்களில் குடியரசுத் தலைவர் ஆட்சி பல மாநிலங்களில் வகைதொகையின்றி திணிக்கப்பட்டது.
இவ்வாறு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவதற்கு அங்கேயுள்ள புறநிலை எதார்த்த நிலைமை தேவை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய வரை குடியரசுத் தலைவர் ஆட்சி அந்த மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டு வந்தது. துரதிர்ஷ்டவசமாக உச்சநீதிமன்றம் இப்போது தன்னிலை திருப்தியா? இல்லை புறநிலை எதார்த்த நிலைமையா (subjective satisfaction versus objective material) என்பதை ஆராய்ந்திட வில்லை. ஆகையால், ஆட்சியிலுள்ளவர்களின் விருப்பு வெறுப்புக்கிணங்க ஒரு பிரகடனத்தை ஏற்படுத்திட முடியும். இவ்வாறு ஆட்சியாளர்களின் பிரகடனம் எதையும் நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்தி ரத்து செய்ததாக எடுத்துக்காட்டு எதுவும் இல்லை.
பிரகடனத்தின் கால அளவு குறித்தோ அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் அது நிர்வாகத்தால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்தோ சட்டத்தில் எதுவும் கூறப்படாமல் அது மவுனம் கடைப் பிடிக்கிறது. உச்சநீதிமன்றத்தின் முன் அட்டார்னி-ஜெனரல் பிரகடனங்களை ஒன்றிய அரசு இனிமேல் ஆய்வு செய்திடும் என்றும் அதனை ஒவ்வோராண்டும் செய்திடும் என்றும் கூறினார். ஆனால் உச்சநீதிமன்றம் இவ்வாறு ஆய்வு செய்யப் படுவதை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை செய்திட வேண்டும் என்று கூறி அவ்வாறு கட்டளையும் பிறப்பித்திருந்தது. இவ்வாறு மறு ஆய்வு செய்வது எந்திரரீதியாக இருக்கக்கூடாது என்றும், வழக்கமான ஒன்றாக அது மாறிவிடக் கூடாது என்றும் எதிர் பார்க்கப்பட்டது. ஆனாலும் இதுதொடர்பாக எதார்த்தத்தில் நடந்திருப்பது என்ன என்று எவருக்கும் தெரியாது. ஏனெனில் 1997க்குப் பின்னர் இதுநாள் வரையிலும் இத்தகைய பிரகடனங்கள் எவ்விதமான நீதித்துறை ஆய்வும் மேற்கொள்ளப் படாமல் தொடர்ந்து இருந்து வருகின்றன.
வேறொரு வழக்கில், உச்சநீதிமன்றமானது, திரும்பத் திரும்ப அவசரச் சட்டங்கள் பிறப்பிக்கப்படுவது அரசமைப்புச் சட்டத்தின் மீதான மோசடி என்று கூறி யிருக்கிறது. இந்த தர்க்க முறையை இதற்கும் பொருத்திப் பார்க்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட பகுதியைத் திரும்பத் திரும்ப “அமைதி குலைந்த பகுதி” என்று கூறுவது ஆயுதப் படையினர் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தின் மீதான மோசடியேயாகும். நாகாலாந்து மாநில அரசாங்கம், எங்கள் மாநிலத்தில் “அமைதி குலைந்த பகுதி” எதுவும் இல்லை என்று கூறுகிறது. ஆனால் ஒன்றிய அரசாங்கமோ அது “அமைதி குலைந்த” மாநிலம் என்கிறது. யார் கூறுவது சரி, ஏன்?
இறுதியாக, மேற்படி சட்டத்தின் 3ஆவது பிரிவு, ஆயுதப்படையினர் சம்பவ இடத்தில் உள்ள சிவில் நிர்வாகத்திற்கு உதவியாக செயல்பட வேண்டும் என்றே எதிர்பார்க்கிறது. ஆனால், நாகாலாந்தில் மோன் மாவட்டத்தில் சுரங்கத் தொழிலாளர்கள் சமீபத்தில் கொல்லப்பட்ட சம்பவத்தை, அங்கே ஆட்சிபுரியும் சிவில் நிர்வாகம் கொஞ்சம்கூட அறிந்திருக்கவில்லை என்றும், ஆயுதப்படையினர் மேற்கொண்ட அல்லது மேற்கொள்ள முடிவு செய்திடும் நடவடிக்கைகள் குறித்து அதற்கு எதுவுமே தெரியாது என்றும் கூறப்படுகிறது. மிகவும் மோசமான முறையில் நடந்துள்ள இந்த சம்பவத்திற்கு, யார் பொறுப்பு என்கிற பிரச்சனையையும் எழுப்பி யிருக்கிறது.
மேற்படி சட்டத்தின் 4ஆவது பிரிவு, ராணுவ அதிகாரி களுக்கு, சுடுவதற்கான அதிகாரத்தை அளிக்கிறது. ஆணையிடப்படாத அதிகாரிகள் (non-commissioned officers) உட்பட எந்த அதிகாரியாக இருந்தாலும், “அமைதி குலைந்த” பகுதி என்று பிரகடனம் செய்யப்பட்ட பகுதியில், சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் விதத்தில், ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடியிருந் தாலோ அல்லது எவரேனும் ஆயுதங்கள் வைத்திருந் தாலோ, அவர்களை அதிகாரிகள் சுடலாம். பொது ஒழுங்கை நிலைநிறுத்துவதற்கு துப்பாக்கியால் சுடுவது அவசியம் என்று அவர் (தன்னிச்சையாகவோ அல்லது புறநிலைமைகளைப் பரிசீலனை செய்தோ) முடிவுக்கு வந்தால் போதும். நாகாலாந்து மாவட்டத்தில் நடந்த நிகழ்வில், சம்பவ இடம் தொடர்பாக புலனாய்வு அறிக்கைகள் வந்திருந்ததாகவும், அதனால் அந்த அறிக்கைகளின் அடிப் படையில் அந்தச் சம்பவம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால், பொது ஒழுங்கு நிலைமை ஏற்பட்டிருந்ததா என்பது குறித்தோ, சுரங்கத் தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப் படுவதற்கு முன் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவோ எதுவும் தெளிவுபடுத்தப்படவில்லை. இவ்வா றெல்லாம் செய்யாதது இந்தச் சட்டப்பிரிவை முழுமையாக மீறிய செயல் என்று அறிக்கைகள் கூறுகின்றன.
சட்டத்தின் 4ஆவது பிரிவுக்கு உட்பட்டு நடக்காததால் ஏற்பட்டுள்ள விளைவுகள் என்ன? சட்டத்தின் 6ஆவது பிரிவு, ஒன்றிய அரசின் முன் அனுமதி இல்லாமல், இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் மீது வழக்குத் தொடரவோ, அல்லது இதர சட்ட பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளவோ தடை விதிக்கிறது. எனவே, இந்தச் சட்டத்தின் 4ஆவது பிரிவிற்கு உட்பட்டு செயல் படாமல் எந்த அதிகாரியாவது நடந்து கொண்டால், ஒன்றிய அரசின் முன் அனுமதியின்றி, அவர்கள் மீது எவ்விதமான நடவடிக்கையும் எடுக்க முடியாது. கடந்த 63 ஆண்டுகளில் ஒன்றிய அரசு இவ்வாறு முன் அனுமதி எவருக்கும் வழங்கியதுமில்லை என்று சமீபத்தில் ஒரு கட்டுரையில் ஒரு விமர்சகர் குறிப்பிட்டிருந்தார். (சஞ்சய் ஹசரிகா, இந்துஸ்தான் டைம்ஸ், 7 டிசம்பர் 2021). இவ்வாறு ஒன்றிய அரசு மறுத்ததை எதிர்த்து எவரும் நீதிமன்றத்தில் மேல்முறையீடு எதுவும் செய்ததாகவும் தெரியவில்லை.
இவ்வாறாக ஆயுதப் படையினர் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கும் விதம், இந்தச் சட்டமானது முற்றிலுமாக மாற்றி எழுதப்பட வேண்டும் அல்லது கிழித்து எறியப்பட வேண்டும் என்றே பரிந்துரைக்கிறது. இதைத் தவிர மூன்றாவது மாற்று எதுவும் இல்லை.
மாணவர்கள் கவனத்துக்கு: அரசு தேர்வாணையம் அறிவிப்பு
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் டிஎன்பிஎஸ்சி மூலம் 2022-ம் ஆண்டு 12,263 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 பதவிகளில் மட்டும் 11,086 காலி இடங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் பணியாளர்கள், அலுவலர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலமாக தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்காக டிஎன்பிஎஸ்சி அவ்வப்போது போட்டித் தேர்வுகளை நடத்தி, தகுதியான நபர்களை தேர்வு செய்துஅரசு துறைகளுக்கு வழங்குகிறது.
ஓராண்டில் எந்தெந்த அரசு பணிகளுக்கான தேர்வு அறிவிக்கை எப்போது வெளியிடப்படும், எப்போது தேர்வு நடக்கும், தேர்வு முடிவுகள், நேர்காணல் எப்போது நடைபெறும் என்ற விவரங்கள் அடங்கிய வருடாந்திர தேர்வுக் கால அட்டவணையை (Annual Planner) டிஎன்பிஎஸ்சி ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அரசு பணியில் சேர விரும்பும் இளைஞர்கள் போட்டித் தேர்வுக்கு முன்கூட்டியே திட்டமிட்டு படிப்பதற்கு தேர்வுக் கால அட்டவணை பெரிதும் உதவுகிறது. தற்போதுதமிழக முதல்வரின் செயலராகப் பணிபுரியும் த.உதயசந்திரன், டிஎன்பிஎஸ்சி செயலராக இருந்தபோது, இந்த நடைமுறையை அறிமுகப்படுத்தினார்.
இந்நிலையில், 2022-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வுக் கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி சமீபத்தில் வெளியிட்டது. அதில் 32 போட்டித் தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இடம்பெற்றன. குறிப்பிட்ட சில தேர்வுகளுக்கான அறிவிப்புகளில் மட்டும் உத்தேசகாலியிடங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. தற்போது ஒவ்வொரு தேர்வு மூலமாக உத்தேசமாக எத்தனை காலி இடங்கள் நிரப்பப்படும் என்ற விவரங்களுடன் திருத்தப்பட்ட புதிய தேர்வுக் கால அட்டவணை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, 2022-ம் ஆண்டு அரசின் பல்வேறு துறைகளில் 12,263 காலி இடங்கள் நிரப்பப்படுகின்றன. இதில் குரூப்-2, குரூப்-4பதவிகளில் மட்டும் 11,086 காலிஇடங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. குரூப்-2, குரூப்-2ஏ தேர்வு மூலமாக 5,831 இடங்களும், குரூப்-4தேர்வு மூலமாக 5,255 இடங்களும் நிரப்பப்பட உள்ளன. குரூப்-2 தேர்வை பட்டதாரிகளும், குரூப்-4 தேர்வை 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் எழுதலாம்.
மேலும், சிவில் நீதிபதி தேர்வு மூலம் 245 காலி இடங்களும், குரூப்-1 தேர்வு மூலம் 49 காலி இடங்களும், ஒருங்கிணைந்த பொறியியல் பணி தேர்வு மூலம் 167 காலி இடங்களும் நிரப்பப்படுகின்றன. இந்துசமய அறநிலையத் துறையில் செயல் அலுவலர் பதவியில் (கிரேடு-1, 3, 4) மொத்தம் 65 காலி இடங்கள் உள்ளன. அதிக எண்ணிக்கையிலான தேர்வர்கள் பங்கேற்கும் குரூப்-2தேர்வுக்கான அறிவிப்பு பிப்ரவரியிலும், குரூப்-4 தேர்வுக்கான அறிவிக்கை மார்ச்சிலும் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
அனைத்து தேர்வுகளுக்கான புதிய பாடத் திட்டம், தேர்வு திட்டம், அனைவருக்கும் பொதுவான கட்டாய தமிழ் மொழித் தாள் தேர்வு பாடத் திட்டம், தேர்வு திட்டம் ஆகியவற்றை தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) அறிந்து கொள்ளலாம். பொதுவாக, ஒரு தேர்வுக்கான அறிவிப்பு வெளியிட்டு, தேர்வு நடத்தி இறுதி முடிவுகள் வெளியிட டிஎன்பிஎஸ்சி 2 ஆண்டுகளுக்கு மேல் எடுத்துக்கொள்வதாக போட்டித் தேர்வுக்கு தயாராகி வருவோர் குற்றம்சாட்டுகின்றனர். மத்திய பொதுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) போல டிஎன்பிஎஸ்சியும் காலக்கெடு நிர்ணயித்து தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிட வேண்டும் என்பதே தேர்வர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
- விடுதலை இராசேந்திரன்