சென்னையில் பா.ம.க நடத்திய அனைத்து சமூக அமைப்புகளின் கலந்தாய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகமும், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவும்  பங்கேற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முஸ்லிம்களின் நேச சக்திகளாக இருக்கும் பெரியாரிய, மார்க்சிய, அம்பேத்கரிய, தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் மத்தியிலும், மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியிலும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது. அந்தக் கூட்டத்தில் மருத்துவர் ராமதாசுடன் பெரியவர் குணங்குடி ஹனீபா சேர்ந்திருக்கும் புகைப்படத்தை பார்த்தவுடன் பலருக்கும் கடும்கோபமும், ஆத்திரமும் வந்துள்ளது. சந்தடி சாக்கில் இந்துத்துவ சக்திகளும், தலித் மற்றும் இஸ்லாமிய சமூகத்தினரிடையே இருக்கும் நல்லுறவை சீர்குலைக்க விரும்புபவர்களும் இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு முஸ்லிம்களை காய்ச்சி எடுக்கின்றனர். எனவே இந்தப் பிரச்சினையின் உண்மை நிலையை எடுத்துரைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ramadoss_haneefa_640

தருமபுரியில் தலித் மக்கள் மீது வன்னியர் சங்கம் மற்றும் பா.ம.க.வினர் முன்னின்று நடத்திய தாக்குதல்களைக்  கண்டித்து வெறுமனே அறிக்கையோடும் ஆறுதலோடும் நின்றுவிடாமல் உடனடியாக களத்திற்குச் சென்று தமது ஜனநாயகக் கடமையை ஆற்றிய முதல் தலித் அல்லாத சமூகத்தினர் இஸ்லாமியர்கள்தான் என்பதை இங்கே நினைவூட்டுகிறேன். மனிதநேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ, தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகிய முஸ்லிம் அரசியல் கட்சிகளும், ஜமாத்தே இஸ்லாமி போன்ற இஸ்லாமிய சமூக அமைப்புகளும் தருமபுரிக்கு நேரில் சென்றன. தலித்துகளுக்கு எதிரான தாக்குதலைக் கண்டித்து தலைநகர் சென்னையில் நடைபெற்ற முதல் போராட்டமே எஸ்.டி.பி.ஐ நடத்தியதுதான் என்பது கவனிக்கத்தக்கது. சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ம.ம.க. பொதுச் செயலாளர் அன்சாரியும், எஸ்.டி.பி.ஐ தலைவர் தெஹ்லான் பாக்கவியும் பங்கேற்று கண்டன உரையாற்றியுள்ளனர். இரு கட்சிகளின் பத்திரிகைகளிலும் தருமபுரி குறித்த செய்திகள் முக்கியத்துவத்துடன் வெளியிடப்பட்டு வருகின்றன.

தருமபுரிக்கு நேரில் சென்று வந்ததோடு, அந்த வன்முறைக்கு எதிராக படைப்பாளிகளின் சார்பில் தொடங்கப்பட்டுள்ள 'சமூக அமைதிக்கான படைப்பாளிகள் இயக்கம்' எனும் அமைப்பில் இஸ்லாமிய சமூகத்தைச் சார்ந்த நானும் ஒரு ஒருங்கிணைப்பாளராக இருந்து பல்வேறு களப்பணிகளை செய்து  வருகிறேன். 'சமநிலைச் சமுதாயம்' இதழில் தருமபுரி குறித்து தோழர் யாழன் ஆதி எழுதிய கட்டுரை அட்டைப்பட முகப்போவியமாக வெளிவந்துள்ளது. கூடங்குளம் பிரச்சனைக்கு அடுத்து  ஒரு பொதுப் பிரச்சனையில் தொடர்ச்சியாக முஸ்லிம்கள் தீவிரம் காட்டி வருவது தலித்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராகத்தான் என்பதை சொல்லியாக வேண்டும். ஆக இந்த அளவுக்கு களத்தில் தலித்களோடு கரம்கோர்த்து நிற்கும் முஸ்லிம் அமைப்புகள், ராமதாஸ் கூட்டிய கூட்டத்தில் பங்கேற்றது ஏன்? என்ற கேள்வி இயல்பாகவே அனைவரிடமும் இப்போது எழுந்துள்ளது. இந்தக் கேள்வி நியாயம்தான் என்றாலும், இதில் முஸ்லிம் அமைப்புகளின் கருத்தை கேட்டறிவதற்கு முன்னரே அள்ளித்தெளித்த அவசர கோலத்தில் விமர்சனக் கணைகளோடு பலர் கிளம்பியிருப்பதுதான் வேதனையளிக்கிறது.

ansari_dharmapuri_640

தருமபுரியில் பாதிக்கப்பட்ட தலித் மக்களைச் சந்தித்த மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி

விடுதலைக் குயில்கள் அமைப்பின் சார்பில் கடந்த 1-12-2012 அன்று எழும்பூர் இக்சா மையத்தில் நடைபெற்ற தருமபுரி வன்முறைக்கு எதிரான கருத்தரங்கத்தில் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், எஸ்.டி.பி.ஐ. தலைவர் தெஹ்லான் பாக்கவி ஆகியோர் பங்கேற்றனர். அப்போது மேடையில் இருந்த எனக்கு ம.ம.க. பொதுச் செயலாளர் அன்சாரியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. மறுநாள் பா.ம.க. நடத்தும் அனைத்து சமூக கூட்டத்திற்கு த.மு.மு.க.வுக்கு அழைப்பு வந்திருப்பதாகவும், அதுபற்றி தோழர் திருமாவிடம் சொல்ல வேண்டும் என்றும் சொன்னார். உடனே நான் அருகிலிருந்த தோழர் திருமாவிடம் அலைபேசியைக் கொடுத்தேன். இருவரும் பேசிக் கொண்டார்கள். முதலில் அந்தக் கூட்டத்தில் பங்கேற்பதில்லை என்றே முடிவெடுத்ததாகவும், பின்னர் பல விசயங்களையும் யோசித்தபோது அந்தக் கூட்டத்தை புறக்கணிக்காமல் கலந்து கொண்டு, தருமபுரியில் தாம் கண்டவற்றை தெளிவாக பதிவு செய்யப் போவதாகவும் அன்சாரி கூறினார். இதை அருகிலிருந்து கவனித்த எஸ்.டி.பி.ஐ. தலைவர், தங்கள் அமைப்புக்கும் அழைப்பு வந்திருப்பதாகவும், கலந்து கொள்வது பற்றி இறுதி முடிவு எடுக்கவில்லை என்றும், ஆனால் கலந்து கொண்டு நம் கருத்தைச் சொல்வதே சிறந்தது என்றும் கருத்துரைத்தார். அதன் பின்னரே இரு அமைப்புகளும் அந்தக் கூட்டத்தில் பங்கேற்றன.

மறுநாள் நடைபெற்ற கூட்டத்தில் ராமதாஸ் தலைமையில் சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட சமூக அமைப்பினர் பங்கேற்றுள்ளனர். அதில் பங்கேற்ற மற்ற சமுதாயத்தவர்களே முகம் சுளிக்கும் வகையில் தலித்துகளைப் பற்றியும், தோழர் திருமாவைப் பற்றியும் ஒருமையில் கேவலமாகப் பேசியுள்ளார் ராமதாஸ். அத்தோடு தலித்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றெல்லாம் உச்சகட்ட சாதிவெறியில் அங்கிருந்தவர்கள் உளறிக்கொட்டியபோது, உடனடியாக எதிர்ப்பு தெரிவித்து தமது கருத்துக்களைப் பதிவு செய்துள்ளன இரு முஸ்லிம் அமைப்புகளும். அதன்பிறகே அதுபோன்ற கிறுக்குத்தனமான முடிவுகள் தீர்மானமாக நிறைவேற்றப்படவில்லை என்பதை கவனிக்க வேண்டும். ஆனால் இதை எதையுமே கருத்தில் கொள்ளாமல், ஒரு புகைப்படத்தை மட்டும் பார்த்து விட்டு வானத்துக்கும் பூமிக்கும் பலர் குதிப்பது ஏன் என்பதுதான் விளங்கவில்லை. விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், இலங்கை அதிபர் ராஜபக்சேவை ஒரு குழுவோடு சென்று சந்தித்து வந்ததை கேவலப்படுத்தியும் இழிவுபடுத்தியும் விமர்சித்து வருகிற கும்பலே இந்த அருவருப்பான செயலிலும் வேகமாக ஈடுபட்டு வருகின்றனர்.

'தலித்களுக்கும் வன்னியர்களுக்குமான பிரச்சனையில் இஸ்லாமியர்களுக்கு என்ன வேலை? நீங்கள் பொதுவானவர்களாயிற்றே; இரண்டு சமூகமும் உங்களுக்கு வேண்டும் எனும்போது நீங்கள் ஒரு சார்பாக தருமபுரியில் போய் நிற்கிறீர்களே' என்றெல்லாம் தொடர்ச்சியாக இஸ்லாமிய அமைப்புகளை நோக்கி பலரும் கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். இன்னும் சிலர் ஒரு படி மேலே சென்று 'தலித் இளைஞர்கள் முஸ்லிம் பெண்களையும் கூடத்தான் ஊருக்கு ஊர் காதலித்து கூட்டிச் செல்கின்றனர்; அப்படியிருக்கும்போது நீங்கள் எங்களோடு சேராமல் தலித்களோடு போய் நிற்கிறீர்களே?' என்றும் சொல்லி உசுப்பேற்றி விடுகின்றனர். இத்தனை நுட்பமான  'லாபி'களையெல்லாம் தாண்டித்தான் முஸ்லிம் அமைப்புகள் தலித்களோடு களத்தில் இணைந்து நிற்கின்றனர். இன்னும் உறுதியோடு நிற்போம் என்பதையும் உரத்துச் சொல்லி வருகின்றனர்.

nallakannu_thiruma_ansari_mani

தருமபுரி தாக்குதலுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் இரவிகுமார், ஜி.ராமகிருஷ்ணன், தா.பாண்டியன், நல்லகண்ணு, திருமாவளவன், தமிமுன் அன்சாரி, கொளத்தூர் மணி, தெஹ்லான் பார்கவி

பெரும்பான்மைச் சாதிகளை ஒருங்கிணைத்து தலித்துகளை தனிமைப்படுத்தி அதன்மூலம் ஒரு அரசியல் அறுவடையைச் செய்யவே ராமதாஸ் முயன்று வருகிறார் என்பதையும், மற்றபடி அவருக்கு வன்னியப் பெண்கள் மீதோ, பிற தலித் அல்லாத சாதிகள் மீதோ எவ்வித பற்றும் கிடையாது என்பதையும், இது முழுக்க முழுக்க அரசியல் முழக்கம் என்பதையும் அனைவரும் உணர்ந்தேயுள்ளனர். எல்லோருக்கும் தெரிந்த இந்த விசயம் முஸ்லிம்களுக்கு தெரியாமல் இல்லை. இன்னும் சொல்லப்போனால் எல்லோரையும்விட தெளிவாக இதில் முஸ்லிம்கள் செயல்பட்டு வருகின்றனர்.

எப்படி ராமர்கோயில் பிரச்சனையைக் கையிலெடுத்து இந்தியா முழுவதும் வெகுமக்களின் மத உணர்வுகளைத் தூண்டி அதன்மூலம் பா.ஜ.க  ஒரு அரசியல் அறுவடையை எடுத்ததோ, அதைப்போலவே இப்போது பெண் பிள்ளைகளைப் பெற்ற ஒவ்வொரு பெற்றோரிடமும் தலித்களை எதிரியாகக் காட்டி ஒரு கேவலமான அறுவடையை எடுக்கத் துணிந்துள்ளது பா.ம.க. ஆக பா.ஜ.க.வுக்கும் பா.ம.க.வுக்கும் பெரிய வேறுபாடில்லை. அவர்களுக்கு மத உணர்வு; இவர்களுக்கு சாதி உணர்வு.

சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசிய ம.ம.க. பொதுச் செயலாளர் அன்சாரி ஒரு நுட்பமான விசயத்தைக் குறிப்பிட்டார். அதாவது 'தருமபுரியில் முன்திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலை தடுக்கத் தவறியது ஏன் என்று கேட்டால், அவர்கள் மரத்தை வெட்டி சாலையில் போட்டு விட்டார்கள்; அதனால் எங்களால் உள்ளே நுழைய முடியவில்லை என்று சொல்கிறது காவல்துறை. இது பாபர் மஸ்ஜித் இடிப்பின் போது, டயரைக் கொளுத்திப் போட்டுவிட்டார்கள்; அதனால் எங்களால் தடுக்க முடியவில்லை என்று ராணுவம் சொன்னதுபோல் இருக்கிறது' என்று பேசினார். 

ஆக, காவல்துறை என்றாலும், ராணுவம் என்றாலும், நீதித்துறை என்றாலும், ஊடகம் என்றாலும் தலித்துகளுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராகவே ஒன்றுபட்டு இயங்குகின்றன. ஆதிக்க சக்திகள் ஒன்றுபட்டு நிற்கும்போது, அவர்களை எதிர்கொள்ள தலித்துகளும் முஸ்லிம்களும் ஒன்றுபட்டு நின்றேயாக வேண்டும். இதை இரு சமூகத் தலைமைகளும் உணர்ந்து செயல்படுவதாகவே எண்ணுகிறேன்.

- ஆளூர் ஷாநவாஸ்

Pin It