மாற்றுத் திறனாளிகளுக்கான பயிற்சி மையத்தில் என்னை சந்திக்க ஒரு பெண் வந்திருப்பதாகச் சொன்னார்கள், உள்ளே அழைத்து வரும்படிக் கூறினேன். வந்த பெண்ணிற்கு சுமார் 25 வயது இருக்கலாம். இரண்டு கைகளிலும் தாங்கு குச்சிகளை உபயோகித்து மிகவும் சிரமப்பட்டு மெதுவாக நடந்து வந்தார். நாற்காலியில் மிகவும் சிரமப்பட்டு அமர்ந்தார். நீண்ட நேரம் அழுதிருக்கலாம். கண்கள் இரண்டும் சிவந்து வீங்கியிருந்தன. பத்து நிமிடங்கள் எதுவுமே பேசவில்லை. தேனீர் கொடுக்கச் சொன்னேன். தேனீர் பருகிய பின் மிகவும் தணிந்த குரலில் அவசர அவசரமாகக் கூறினார். "எனக்கு கணவர் இல்லை, இறந்து விட்டார். என் மகளுக்கு ஐந்து வயது. பள்ளிக்குச் செல்கிறாள். எனக்கு ஏதாவது ஒரு சுய தொழில் செய்ய உதவுங்கள். என் மகளுக்காக எதையாவது சேர்த்து வைக்க வேண்டும்" என்று கூறி அழுதார். அவரை சமாதானப்படுத்தி கண்டிப்பாக உதவுகிறேன் என்று கூறினேன். மேலும் அழுதபடி எனக்கு ஹெச்.ஐ.வி. பாசிட்டிவ், நான் ஒரு எய்ட்ஸ் நோயாளி என்று கூறி கதறி அழுதார்.

"என்னை ஒருவர் திருமணம் செய்து கொண்டு வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்தார். இரண்டு ஆண்டுகளில் அவர் இறந்துவிட்டார். அவர் இறந்த பொழுது எனக்கு மூன்ற மாத கைக் குழந்தை இருந்தது. எனது பெற்றோர் என்னை வீட்டைவிட்டு வெளியில் அனுப்புவதில்லை. எனக்கு எந்த வருமானமும் இருக்கக் கூடாது என்று நினைக்கின்றனர். வெளியில் வேலைக்கு அனுப்பினால் நான் ஒழுக்கத்துடன் இருக்க மாட்டேன் என்று நினைக்கின்றனர். எனது திருமணத்திறகு முன் வேலைக்குச் சென்று கொண்டுதான் இருந்தேன். ஆனால் திருமணத்திற்குப் பின் எனக்கு எய்ட்ஸ் என்று தெரிந்தவுடன் எனது பெற்றோர் என்னிடம் இருந்துதான் என் கணவருக்கு எய்ட்ஸ் வந்தது என்று கூறி என்னைத் திட்டி அடித்துத் துன்புறுத்தினார்கள். அதிலிருந்து என்னை வீட்டைவிட்டு வெளியில் எங்கும் அனுப்புவதில்லை" என்று கூறினார்.

ஏற்கெனவே எனக்குத் தெரிந்த பல மாற்றுத் திறனாளி மகளிர்கள் பலவிதமான கொடுமைகளை வீட்டிலும், வெளியிலும் அனுபவித்து வருகின்றனர். பெற்றோரும், உடன் பிறந்தோரும், உற்றாரும் பலவிதமான வார்த்தைகளால் குத்திக்கிழித்து அவர்களின் இதயத்தை ரணமாக்கிப் பார்ப்பதில் ஒருவிதமான தனிக் குரூரத்துடன் நடந்து கொள்கின்றனர். உடலில் ஒரு குறையுடன் இருக்கும் பெண்ணுக்கு எந்த வாழ்வுரிமையும் கிடையாது, எந்தவிதமான சமூக மதிப்பீடுகளும் கிடையாது. "அவங்களுக்கு தேவை சாப்பாடு, துணி அவ்வளவுதான்".. என்று சுருக்கமாகக் கூறுவார்கள். குறிப்பாக உடல் ரீதியான குறைபாடு உடைய பெண்களுக்கு, செவித்திறன் குறைவான பெண்களுக்கு, பார்வைக் குறைபாடு உடைய பெண்களுக்கு பாலியல் உணர்வுகளே கூடாது என்பதே சமூகத்தின் பொதுவான கருத்து. மாற்றுத் திறனாளிகளைப் பற்றிப் பேசும் பொழுது "இவங்கள்ளாம் காதலிச்சா நாடு தாங்குமா? எல்லாம் கலி காலம்" என்று விமர்சிக்கின்றனர்.

உடல்ரீதியான குறைகள் இருப்பவர்களுக்கு பாலியல் தேவைகளே கிடையாதா? அவர்களின் மனம் அத்தகைய விடயங்களை நாடுவதென்பதே பாவமா? உடல் ரீதியான குறைபாடு உடைய பெண்களை குறிப்பாக இரண்டு கால்களும் செயலிழந்த நிலையில் குறைவான கல்வி உடைய பெண்களின் நிலை என்பது சமூகத்தில் மிகவும் கீழான நிலையில் உள்ளது. ஒடுக்கப்பட்டவர்களைவிட இவர்கள் மிகவும் கீழாக உள்ளனர். இவர்கள் மேல் கடுமையான ஒடுக்குமுறை உள்ளது. இவர்கள் மற்றவர்களின் துணையோடு வாழ வேண்டிய நிலையில் உள்ளனர். இவர்களின் உழைக்கும் திறன் குன்றியுள்ளது. கல்வி குறைவாக இருப்பதினால் சரியான வேலை வாய்ப்பு இவர்களுக்கு இல்லை. சுயமாகத் தொழில் செய்வதற்குத் தேவையான வசதி வாய்ப்புகளும் இல்லை. உடல் குறைபாடு இவர்களை சராசரியான அன்றாடத் தேவைகளுக்கான பணிகளைக் கூட செய்ய அனுமதிப்பதில்லை. ஆனால் இவர்களும் காதல் வயப்படுகின்றனர்.

எந்த ஆதரவும் இல்லாத நிலையில் யாரேனும் ஒரு ஆண் ஆதரவாக இரண்டு வார்த்தைகள் கூறினாலோ, அல்லது காதல் மொழிகள் பேசினாலோ அதை இவர்கள் அதிகமாக நம்பி விடுகின்றனர். பெற்றோரின் அன்போ அரவணைப்போ இல்லாத இவர்கள், சகோதர, சகோதரிகளின் பாசமும் இல்லாத இவர்கள் எளிதில் வேற்று மனிதர்களை நம்பி விடுகின்றனர். இவர்களின் நிலையைத் தெரிந்து கொண்ட ஆண்கள் தேர்ந்தெடுத்த வார்த்தைகளின் மூலம் இந்தப் பெண்களின் நம்பிக்கையைப் பெறுகின்றனர். இந்த ஆண்களின் ஒரே குறிக்கோள் இத்தகைய பெண்களுடன் பாலியல் உறவு கொள்வது. (உடல் ஊனமுற்ற இந்தப் பெண்களிடம் பாலியல் உறவு வைத்துக் கொண்டால் தமது பால்வினை நோய், எய்ட்ஸ் நோய் ஆகியவை குணமாகும் என்ற மூடநம்பிக்கை பரவலாக இருக்கிறது).

உடல் ஊனமுற்ற இந்தப் பெண்களின் பெற்றோரும் எந்தவிதமான விசாரணையும் செய்யாமல், ஏதோ கடனைக் கழிப்பதைப் போல் இவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கின்றனர். அல்லது இத்தகைய ஆண்களின் பேச்சைக் கேட்டு இந்தப் பெண்கள் இவர்களை திருமணம் செய்து கொள்கின்றனர். விளைவு ஆறு மாதம் அல்லது ஒரு வருடம் இவர்களின் இல்லற வாழ்க்கை நல்லவிதமாக நடக்கின்றது. பெண் கர்ப்பமாக இருக்கிறாள் என்பது தெரிந்தவுடன் அவர்களை விட்டு விலகிச் சென்றுவிடுகின்றனர். வேறு மாநிலத்திற்கோ, சென்னை போன்ற நகரங்களுக்கோ இந்த ஆண்கள் சென்று விடுகின்றனர். பின்னர் இந்தப் பெண்ணுடன் எந்தவிதமான தொடர்பும் கிடையாது. மீண்டும் பாதிக்கப்பட்ட பெண்கள் தனித்து விடப்படுகின்றனர். இம்முறை இவர்களுக்கு மேலும் ஒரு சுமையாக குழந்தை வருகின்றது.

உடற்குறையின் காரணமாக அறுவை சிகிச்சை செய்து குழந்தையைப் பெற்றெடுக்கின்றனர். இது உடல் ரீதியாக மிகுந்த பின்னடைவைக் கொடுக்கின்றது. குழந்தையை வளர்க்க மற்றவர்களின் துணையையே பெரிதும் நம்பியுள்ளனர். தங்களின் விருப்பு, வெறுப்புகளையும், இன்ப, துன்பங்களையும் யாரிடமும் பகிர்ந்து கொள்ளக் கூட இயலாமல் தனிமையும், வெறுமையும் இவர்களை வாட்டி எடுக்கின்றது. குழந்தையை வளர்ப்பது, பள்ளியில் சேர்ப்பது போன்ற பணிகளைத் தொய்வில்லாமல் செய்து, அந்தக் குழந்தையை சமூகத்தில் ஒரு நல்ல நிலைக்கு உயர்த்துவதே தங்களின் இலட்சியமாகக் கொண்டு செயல்படுகின்றனர். ஆனால் இவர்களின் கணவனாக இருந்தவர்கள் எந்தவிதமான சமூகப் பொறுப்பும் இன்றி வேறு பெண்ணை மணந்து கொண்டு தங்கள் தொழிலைத் தொடர்கின்றனர். இத்தகைய ஆண்களைப் பற்றிய புகார்களை காவல்துறையினர் கண்டு கொள்வதே இல்லை.

எனக்குத் தெரிந்த சில மாற்றுத் திறனாளிப் பெண்கள் காவல் நிலையம் சென்று புகாரைப் பதிவு செய்யச் சொல்லும் பொழுது இந்தப் பெண்களை ஏளனமாகப் பேசி, "எல்லாமே உன் தப்புதாம்மா, உனக்கு எங்க புத்தி போச்சு?" என்று பல்வேறுவிதமாக விமர்சிக்கின்றனர். மேலும் அவர்களின் ஊனத்தைச் சுட்டிக்காட்டி மிகவும் அருவறுக்கத் தக்க வகையில் பேசுகின்றனர். எப்படி தலித் மக்களை சாதியைச் சொல்லித் திட்டக் கூடாது, அப்படித் திட்டினால் அது வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் குற்றம் என்று இருக்கின்றதோ அதே போல் மாற்றுத்திறனாளிகளையும் அவர்களின் ஊனத்தைச் சொல்லித் திட்டக் கூடாது என்ற சட்டம் வேண்டும். அவ்வாறு திட்டுபவர்கள் மீது வன்கொடுமைச் சட்டம் போன்ற சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

காவல் நிலையங்களில் இது போன்ற மாற்றுத்திறனாளிகள் அளிக்கும் புகார்களுக்கு முதல் தகவல் அறிக்கை கூடப் பதிவு செய்யப்படுவதில்லை என்பது வேதனைக்குரியது. மாற்றுத்திறனாளிப் பெண்கள் மேல்கூட வழக்குகள் பதிவு செய்யபடும். ஆனால் அவர்களை ஏமாற்றிவிட்டுச் செல்லும் ஆண்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படுவதில்லை. இதற்கு சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளிப் பெண்ணின் வீட்டாரும், மணமகனின் வீட்டாரும் உடந்தையாக இருக்கின்றனர். இவர்கள் காப்பாற்ற நினைக்கும் அந்தக் குற்றவாளி வசதியாக இன்னொரு இடத்தில் இன்னொரு மாற்றுத்திறனாளிப் பெண்ணைக் குறிவைப்பான்.

செவித்திறன் குறைபாடு உடைய பெண் குழந்தைகள் பிறந்தால் பெற்றோர்கள் அதை ஒரு சுமையாக நினைத்து அவர்களை விட்டு விலகி வேறு திருமணம் செய்து கொள்கின்றனர். இதில் அதிக அளவில் ஆண்கள் இரண்டு அல்லது மூன்று செவித்திறன் குறைபாடு உடைய குழந்தைகளுக்குத் தந்தையாக இருக்க மனமின்றி, உடனடியாக வேறு திருமணம் செய்து கொண்டு போய்விடுகிறார். இவர்களில் பலர் அரசு வேலையில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது போன்ற உடல் ரீதியான குறைபாடு உடைய குழந்தைகளை நடுத் தெருவில் விட்டு விட்டு, அந்தக் குடும்பத்தை அடுத்த வேளைச் சோற்றுக்கு கையேந்த வைத்து விட்டு செல்பவர்களிடம் எந்த சாதி வேறுபாடுகளும் இல்லை. அனைத்து சாதியினரும் இதில் அடக்கம். பல்வேறு மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் அல்லது கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பார்வைத்திறனும் செவித்திறனும் அற்ற குழந்தைகள், மூளை முடக்குவாதம் ஏற்பட்ட குழந்தைகள் அனைவரும் இந்த சமூகத்தில் ஒற்றைப் பெற்றோர்களுடன் இருக்கின்றனர். தாய் அல்லது தந்தை இவர்கள் இருவரில் ஒருவர் மட்டுமே இக்குழந்தைகளுடன் இருக்கின்றனர். பெரும்பாலும் தாய் மட்டுமே இருக்கிறார். சில இடங்களில் இரண்டு பெற்றோரும் இருப்பதில்லை. பாட்டி அல்லது இரக்கமுள்ள ஒரு உறவினர் இந்தக் குழந்தைகளை வளர்க்கிறார்.

பல மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள், காப்பகங்களில் உள்ள ஆண் பாதுகாவலர்கள், ஆசிரியர்கள், அலுவலக உதவியாளர் என்ற அனைத்து ஆண்களிடமிருந்தும் பல்வேறு விதமான பாலியல் தொந்தரவுகளை அனுபவித்து வருகின்றனர். பல நேரங்களில் இக்குழந்தைகள் வயிற்றில் கருவைச் சுமக்கும்போதே இந்தச் செய்திகள் வெளி உலகத்திற்குத் தெரிய வருகின்றது. ஆனால் இத்தகைய குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் அதிக அளவில் தண்டிக்கப்படுவதில்லை.

சமீபத்தில் கொல்கத்தாவில் செவித்திறன் குறைபாடு உடைய ஒரு பெண், தானியில் உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் செல்வதற்காக ஏறியிருக்கிறார். அவர் தானி ஓட்டுநரிடம் முகவரியைக் கொடுத்து போகச் சொன்ன பொழுது அந்த ஓட்டுநர் இவரது குறையைத் தெரிந்து கொண்டு அந்தப் பெண்ணைக் கடத்திச் சென்று தன் வீட்டில் அடைத்து வைத்து, பல நாட்கள் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டிருக்கிறார். ஒரு நாள் அந்தப் பெண் தப்பித்து வந்து, அக்கம் பக்கத்தில் இருந்தவர்களின் உதவியுடன் காவல் நிலையத்திற்குச் சென்று புகாரைப் பதிவு செய்திருக்கிறார். இந்தப் பெண் ஒரு மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டில் தேசிய தடகள வீராங்கனை என்பது கூடுதல் செய்தி. யாருக்கும் எந்தப் பாதுகாப்பும் இந்த நாட்டில் இல்லை என்பதையே இந்தச் சம்பவம் எடுத்துரைக்கிறது. படித்தவர், பட்டம் பெற்றவர், விளையாட்டு வீராங்கனை என்பதை விட அவர் செவித்திறன் குறைபாடு உடையவர் என்றே சமூகத்தால் பார்க்கப்படுகிறார்.

இது இப்படி இருக்கிறது என்றால் எனக்கு நன்கு அறிமுகமான மாற்றுத்திறாளி நண்பர் ஒருவர் (தலித்) வேறு சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்தார், அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு கூடலூர் அருகே உள்ள தமது கிராமத்திற்குச் சென்று திருமணம் செய்து கொண்டு இரண்டு நாள் குடும்பம் நடத்தியிருக்கிறார். மூன்றாம் நாள் காவல் துறையினர் வந்து மணமக்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, மணமகனை கடுமையாக மிரட்டி, 'உன் மீது கடுமையான வழக்குகள் பதிவு செய்வோம். இந்தப் பெண்ணிற்கு பதினைந்து வயதுதான் ஆகிறதென்று கூறி உன் மீது இளம் பெண்ணைக் கடத்திய வழக்கு போடுவோம்' என்று மிரட்டி, 'இனி இந்தப் பெண்ணுக்கும் எனக்கும் எவ்விதமான சம்பந்தமும் இல்லை. நான் தவறு செய்துவிட்டேன்' என்று எழுதி வாங்கிக் கொண்டு இருவரையும் பிரித்துவிட்டனர். மாற்றுத்திறனாளி ஒரு தலித் என்பதினாலேயே கூடுதலான பயத்துடன் வெளியில் யாரிடமும் எதுவும் சொல்லவில்லை. பின்னர் ஒரு வாரம் கழித்து எமது சங்கத்தை அணுகினார். மாவட்ட ஆட்சித் தலைவரிடமும், காவல் துறை ஆணையரிடமும் புகார் அளிக்கச் சொன்னோம். காவல்துறையின் மேல் இருந்த பயத்தின் காரணத்தினால் அவர் எதுவும் செய்யவில்லை.

எனவே மாற்றுத்திறனாளிகள் சமூகப் பாதுகாப்புடன் வாழ புதிய சட்டங்கள் பல இயற்றப்பட வேண்டும்.

1. மாற்றுத்திறனாளிகளை உடல் குறையைச் சொல்லி கிண்டல் செய்வது, கேவலமாகப் பேசுவது போன்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வேண்டும். இதற்கு வன்கொடுமைச் சட்டத்திற்கு இணையான சட்டம் வேண்டும்.

2. மாற்றுத்திறனாளிகளைத் தாக்குவோர்கள், மாற்றுத்திறனாளிகளை உடல் ரீதியான துன்பத்திற்கு உள்ளாக்குபவர்களை பிணையில் வெளிவர இயலாத சிறப்பு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்ய வேண்டும்.

3. மாற்றுத்திறனாளிகளை பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்குபவர்களுக்கு ஆயுள் தண்டனை போன்ற கடுமையான தண்டனைகள் வழங்கக் கூடிய சிறப்புச் சட்டம் வேண்டும்.

4. மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்புத் திருமணச் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். திருமணத்திற்குப் பின் எளிதில் மாற்றுத்திறனாளிகளை விட்டுவிட்டு செல்பவர்கள் மீது சிறப்புச் சட்டத்தின்கீழ் தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.

5. ஏற்‍கெனவே மாற்றுத்திறனாளிகளுக்கான ஐக்கிய நாடுகளுகளின் உரிமை சாசனம்(UNCRPD), மாற்றுத்திறனாளிகளுக்கான 1995ஆம் ஆண்டுச் சட்டம் (PWD Act 1995) போன்றவற்றை சரியாக நடைமுறைப்படுத்தாமல் இருப்பதைப் போல் இல்லாமல், மாற்றுத்திறனாளிகளுக்கு எதிராக இழைக்கப்படும் சமூகக் குற்றங்களுக்கு சிறப்பு சட்டத்தின் மூலமாக தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.

- சூர்ய.நாகப்பன், கோவை

Pin It