கூடங்குளம் பிரச்சினை மக்கள் மன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் நிற்கிறது. வழக்குகளை விசாரிக்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூடங்குளம் அணுமின் நிலையக் கழிவுகளை எங்கே வைத்து பாதுக்காக்கப் போகிறீர்கள் என்று கேட்டனர். இந்திய சாலிசிட்டர் ஜெனரல் திரு. ரோகித் நரிமன் கர்நாடக மாநிலம் கோலாரில் உள்ள பழையச் சுரங்கங்களில் வைப்போம் என்றார். அது அவராகவே கற்பனை செய்து சொன்னதல்ல. இந்திய அணுமின் கழகத்தின் இயக்குனர் (Executive Director of NPCIL) திரு அசோக் சவுகான் நவம்பர் 7, 2012 அன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணம் இதைத் தெளிவாகச் சொல்கிறது.
 
சுமார் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு 1964-ம் ஆண்டு  கோலாரில் நியூட்ரினோ திட்டம் என்ற ஒன்றைக் கொண்டுவந்து, 1992-ம் ஆண்டு அதை மூடிவிட்டார்கள். அந்த சுரங்கத்தில்தான் இப்போது கூடங்குளக் கழிவுகளை மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்தியக் கழிவுகளை வைப்பதாக திட்டமிடுகிறார்கள். வழக்கம் போல, அணுசக்தித் துறை உள்ளூர் மக்களிடமோ, அந்த மாநில அரசிடமோ எந்தக் கலந்தாலோசனையும் நடத்தவில்லை, எந்த முன்னறிவிப்பும் கொடுக்கவில்லை.
 
இந்த அறிவிப்பு வந்ததும் வராததுமான நிலையிலேயே, கோலார் திட்டத்துக்கு கர்நாடக மாநிலம் முழுவதும் பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. கூடங்குளம் மக்களை, ஒட்டுமொத்த தமிழர்களை, ஓர வஞ்சனையோடு நடத்தும் மத்திய அரசும், அணுசக்தித் துறையும் உடனடியாக இதை மறுக்கிறார்கள். அணுசக்தித் துறை செய்தித் தொடர்பாளர் திரு. எஸ். கே. மல்கோத்ரா “இப்படி ஒரு திட்டமே கிடையாது” என்று அடித்துச் சொல்கிறார். அமைச்சர் நாராயணசாமி இந்தியாவிலே எங்கேயும் புதைக்கமாட்டோம் என்று சத்தியம் செய்கிறார். “நான் இந்திய அணுமின் கழகத் தலைவரிடம் பேசினேன்; அவர் கழிவுகளை எங்கேயும் புதைக்கும் திட்டம் இல்லை என்று சொன்னார்” என்று புளுகுகிறார். அப்படியானால் கழிவுகளை என்ன செய்வதாக உத்தேசம் என்று யாரும் அவரிடம் கேட்கவில்லை.
 
“அணுக் கழிவுகளை எப்படி பாதுகாப்பது என்று இன்னும் முடிவு செய்யவில்லை” என்று அணுசக்திக் கழக முன்னாள் தலைவர் திரு. எம். ஆர். ஸ்ரீநிவாசன் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார். சாலிசிட்டர் ஜெனரல் திரு. ரோகித் நரிமன் சொன்னது உண்மைக்குப் புறம்பானது என்கிறார். “இந்தியாவின் அணுசக்தித் திட்டம் தொடங்கியது முதல் கழிவுகளை எங்கேயுமே புதைக்கவில்லை. தீய்ந்துவிட்ட எரிபொருள் மறுசுழற்சி செய்யப்பட்டப் பின்னர் எஞ்சியிருக்கும் கழிவு கண்ணாடிக் குவளைகளில் அடைக்கப்பட்டு மூன்று மறுசுழற்சி நிலையங்களில் பாதுகாக்கப்படுகிறது” என்று சொல்லியிருக்கிறார் ஸ்ரீநிவாசன்.
 
கோலார் திட்டத்துக்கு அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு
 
மேற்கண்ட உண்மை விளம்பிகளின் பின்னணி தெரிந்த கன்னட மக்கள் எதையுமே கண்டு கொள்ளவில்லை. நவம்பர் 23 அன்று கோலாரில் முழு அடைப்பு நடந்தது. இதற்கு அனைத்துக் கட்சிகளும் பேராதரவு தந்தனர். நவம்பர் 24 அன்று அனைத்து கட்சிகளும், சமூக இயக்கங்களும் சேர்ந்து ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். அனைத்து கர்நாடக ஊடகங்களும் இந்தப் பிரச்சினை பற்றிப் பெரிதாக விவாதித்தனர்.
 
காங்கிரஸ் கட்சியின் உள்ளூர் மத்திய அமைச்சர் முனியப்பா கோலார் பிரச்சினை சம்பந்தமாக பிரதமரை உடனடியாக சந்தித்துப் பேசினார். அவர் முறையிட்டதும் சுரங்க அமைச்சர், சட்ட அமைச்சர், பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஆகியோரோடு கூடிப் பேச பிரதமர் ஆணையிட்டார். மத்திய காங்கிரஸ் அமைச்சர் வீரப்ப மொய்லி கோலார் திட்டத்தை வரவிடமாட்டோம் என்கிறார். காங்கிரஸ் கட்சி கோலார் திட்டத்துக்கு எதிராக கர்நாடகா முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.
 
கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்து, நமது உழைத்து வாழும் மீனவ மக்கள், நாடார் மக்கள் மீது குண்டர் சட்டம் போட்டு, நமது பெண்களை சிறையில் அடைத்து பேயாட்டம் ஆடுகிற அ.தி.மு.க. கோலார் திட்டத்தை கடுமையாக எதிர்க்கிறது, போராடுகிறது.
 
கூடங்குளம் திட்டத்தை எதிர்ப்பதால் தேசத் துரோகிகள் என்று வர்ணித்து, நமது வாகனத்தை அடித்து உடைத்து, நம்மைக் கொல்ல முயன்ற பாசிச பாரதீய ஜனதா உள்ளிட்ட இந்துத்வா இயக்கங்கள் கோலார் திட்டத்தை கடுமையாக எதிர்க்கின்றனர். கர்நாடக முதல்வர்  ஜெகதீஷ் ஷெட்டர் கோலாரில் மட்டுமல்ல கர்நாடகத்தில் எங்கும் அணுக்கழிவை வைக்கவிட மாட்டோம் எனக் கூச்சலிடுகிறார்.
 
ஆனால் தமிழகத்தில் நடப்பது என்ன தோழர்களே?
 
கூடங்குளம் திட்டத்தை நாம் எதிர்ப்பதால் காங்கிரஸ் அமைச்சர் வாசன் நம்மை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என கொக்கரிக்கிரார். அமைச்சர் ப. சிதம்பரம். அமைச்சர் நாராயணசாமி, இளங்கோவன் போன்ற பிற காங்கிரஸ் தலைவர்கள், இவர்களின் அடியாட்கள் எல்லாம் நம்மை அமெரிக்கக் கைக்கூலி, இந்தியாவின் எதிரி, தேசத் துரோகி, என்று வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுகிறார்கள். கர்நாடகத்தில் அணுக்கழிவுகூட இருக்க கூடாது; ஆனால் தமிழகத்தில் எத்தனை அனுமின் நிலையங்கள் வேண்டுமானாலும் வரலாம் என்பதுதான் இவர்கள் நிலை.
 
தனது தோழர் வீரபாண்டி ஆறுமுகம் மறைந்தவுடன் கண்ணீர் விட்டுக் கதறி அழுத திரு. மு. கருணாநிதி கூடங்குளம், கல்பாக்கம் போன்ற தமிழ் மக்கள் பிரச்சினைகளில் எந்தக் கவலையும் இல்லாமல் இருப்பது ஏன்? “எனக்குத்தான் அனுமின் நிலையம் பற்றி எல்லாம் தெரியும், நான் ஆதரவாக பரப்புரை செய்யப் போகிறேன்” என்று திரியும் “அரசியல் நடிகர்களும்” “அற்புத விஞ்ஞானிகளும்” கோலார் பற்றி வாய் திறக்கக் காணோம். கர்நாடகத்தில் போய் சொல்ல வேண்டியதுதானே, அனைத்தும் அற்புதமாக இருக்கிறது கோலாரில் என்று? கூடங்குளம் அணுமின் நிலையம் வேண்டும் என்று அலறிக் கொண்டிருக்கும் (ரஷ்யாவின்) தோழர்கள் கர்நாடகாவுக்குச் சென்று அங்குள்ள மக்களை அமைதிப்படுத்தி கோலார் திட்டத்துக்கு ஒத்தாசையாக இருக்கலாமே?
 
புரிகிறதா, தமிழ் மக்களே, இந்த வேடதாரிகளின் கபட நாடகம்? நமக்கு ஒரு நியாயம், மற்றவர்க்கு ஒரு நியாயம்! காங்கிரஸ், பாரதீய ஜனதா, தி.மு.க., அ.தி.மு.க., சி.பி.ஐ.. சி.பி.எம். -- இவை “ஆபத்தான ஆறு கட்சிகள்”! தமிழர் விரோத சக்திகள். இவற்றோடு தமிழர்களைத் திட்டமிட்டு வதைக்கிறது மத்திய அரசு!
 
தமிழர்களை வஞ்சிக்கிறது மத்திய அரசு
 
தமிழக நலனுக்கு, உரிமைக்கு எதிராக முட்டுக்கட்டைப் போடுகிறது மத்திய அரசு என்று தமிழக முதல்வரே பலமுறை சொல்லிவிட்டார். மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரம் கேட்டால், மத்திய அரசு மறுக்கிறது; தில்லி மாநில அரசு தேவையில்லை என்று ஒப்படைத்த மின்சாரத்தையும் தமிழகத்துக்கு வழங்க மறுக்கிறது மத்திய அரசு என்று முதல்வர் சொல்கிறார். இதற்காக உச்ச நீதிமன்றத்தை தமிழக அரசு அணுகியிருக்கிறது.
 
வட சென்னை அனல்மின் திட்டத்திற்கு மத்திய அரசு 2006 மே 10 வரை சுற்றுச்சூழல் அனுமதி அளித்தது. விடியோகான் நிறுவனத்திடமிருந்து தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் இத்திட்டத்தை ஏற்றெடுத்தபோது மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் 2006 அக்டோபர் 9 அன்று கூட்டம் நடத்தி ஏற்கனேவே தரப்பட்ட அனுமதியை தர ஒப்புதல் தந்தது. ஆனால் தற்போது விடியோகானுக்கு தந்த அந்த அனுமதியை தர மறுக்கிறது. ஆனால் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு 25 ஆண்டுகளுக்கு முன்னால் தந்த அனுமதியை அங்கீகரித்து அதுவே போதும் என்கிறது இந்த அமைச்சகம்.
 
தேனி மாவட்டம் தேவாரம் பகுதியில் மலையைக் குடைந்து கொண்டு வரப்படும் நியுட்ரினோ திட்டம் எதிர்காலத்தில் அணுக்கழிவுகளைப் புதைக்கும் திட்டம்தான் என்பது பலரது கருத்து.
 
இன்றைய நிலை
 
நாம் கோலார் திட்டத்தையும் எதிர்க்கிறோம் என்பது வேறு விடயம். ஆனால் கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து தங்களுக்கு மின்சாரம் வேண்டும் என்று உரிமை கேட்கும் கர்நாடக அரசு, கழிவை மட்டும் வைத்துக்கொள்ள மறுப்பதேன்? கூடங்குளம் மின்சாரம் அனைத்தையும் தமிழகத்துக்கு வாங்கித் தருவோம் என்ற நாராயணசாமி வகையறாக்கள் இப்போது மாற்றிப் பேசித் திரிவதன் நோக்கம் என்ன? தான் கேட்பது போல 1,000 மெகாவாட் மின்சாரம் கிடைக்காது என்றுத் தெரிந்த பிறகும் தமிழக முதல்வர் மூன்றாமவர் போல வாளாவிருப்பதன் மாயம் என்ன? எல்லோருமாகச் சேர்ந்து தமிழர்களைக் காவு கொடுக்கலாம் என்றா?
 
கர்நாடகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும், சமூக இயக்கங்களும் ஒரே குரலில் கோலார் திட்டத்தை எதிர்த்துப் போராடும்போது, தமிழகத்தில் உள்ள கட்சிகள் ஒன்று சேராமல், தமிழர்களை காட்டிக் கொடுப்பதிலேயே குறியாய் இருப்பது ஏன்? இணக்கமான கட்சிகள்கூட பட்டும், படாமலும் தள்ளி நிற்பது ஏன்? இன்று வரை கூடங்குளம்— கோலார் குழப்பத்தில் மவுனம் காப்பது ஏன்?
 
இந்திய அணுமின் கழகம் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்திருக்கும் ஆவணத்தில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வெளிப்படும் தீய்ந்த எரிபொருள் ஏழாண்டு காலத்துக்கு அணுமின் நிலையத்திலேயே பாதுகாக்கப்படுமாம். இதற்கு எந்தவிதமான சுற்றுச்சூழல் அனுமதியும் பெறவில்லை. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து எவ்வளவு தீய்ந்த எரிபொருள் வெளிவரும், அது எங்கே மறுசுழற்சி செய்யப்படும், அதில் எவ்வளவு மீண்டும் உபயோகிக்கப்படும், எஞ்சியிருக்கும் கழிவை எங்கே வைத்து பாதுகாக்கப் போகிறோம்? எந்த கேள்விக்கும் பதில் இல்லை. மறுசுழற்சி செய்வது எங்கே, எப்படி, அந்த வசதி செய்யப்பட்டு விட்டதா? எப்போது செய்வதாக உத்தேசம்? யாரும் யாரிடமும், எதுவும் சொல்லவில்லை. மாய வலையில் சிக்கியிருப்பவர்கள் மடத்தமிழர்கள்தானே என்ற எண்ணமாயிருக்கலாம். எந்த விதமான முறையான, தெளிவான திட்டமும் இல்லாமல் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்கிற முறையில் அணுசக்தித் துறையும், மத்திய அரசும் கூடங்குளம் பிரச்சினையை அணுகுகின்றன.
 
என்ன செய்யப் போகிறோம்?
 
மேற்காணும் முக்கியமானப் பிரச்சினைகள் குறித்து தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் நிலையினை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்க, களம்காண முன்வர வேண்டும்.
 
தமிழர் விரோதப் போக்குடன் கூடங்குளம் அணுமின் நிலைய ஆதரவு நிகழ்வுகள் நடந்தால், ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கலந்து கொண்டு நமது கருத்துக்களை அமைதியான முறையில் எடுத்துச் சொல்லவேண்டும்.
 
தமிழகத்தில் நிலவும் தமிழர் விரோதப் போக்கை, நடைமுறையை எதிர்க்கும் விதமாக, எதிர்வரும் டிசம்பர் 10 அன்று கன்னியாகுமரி—மதுரை தேசிய நெடுஞ்சாலையிலும், கிழக்கு கடற்கரை சாலையிலும் காலை 10 மணிக்கு மறியல் போராட்டம் நடத்த அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் அழைப்பு விடுக்கிறது. ஆதரவுக் கட்சிகளும், சமூக இயக்கங்களும், தமிழுணர்வு கொண்டோரும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு, தமிழர்கள் அனாதைகளல்ல என்பதை உலகுக்கு எடுத்துச் சொல்ல அன்போடு அழைக்கிறோம். இந்தப் போராட்டம் எந்த விதமான வன்முறையுமின்றி அறப்போராட்டமாக நடக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
 
போராட்டக்குழு
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்

Pin It