ஸ்ரீரங்கத்தில் 'பிராமணாள் ஹோட்டல்' என்று பெயர் வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிட கழகத் தோழர்கள் களம் இறங்கி போராடி வருகின்றனர். இந்தப் பிரச்சனையை பெரியாரிய‌வாதிகளுக்கும், பார்ப்பனர்களுக்கும் இடையே நடக்கும் விவாதமாக சராசரி வெகுசனம் வேடிக்கைப் பார்க்கிறது. 'முதல்' போட்டு கடை நடத்துபவனுக்கு பெயர் வைக்கும் உரிமை கூட கிடையாதா? என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர். மேலோட்டமாகப் பார்த்தால் நியாயமான கேள்விதான். ஆனால், அந்தப் பெயர் ஒட்டுமொத்த சமூ­கத்தையே இழிவுபடுத்தும் விதமாக இருக்கும் பட்சத்தில் கண்டனத்துக்குரியது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

தன்னை 'பிராமணாள்' என்று பொது அரங்கில் அறிவித்துக் கொள்ளும் போதே 'தான் உயர்ந்தவன்' என்று கூறிக் கொள்கிறான். 'தன்னை உயர்ந்தவன்' என்று சொல்லும் போதே மற்றவர்களை 'தாழ்ந்தவன்' என்று சொல்லாமல் சொல்கிறான். 'பிராமணாள்' என்று அடையாளப்படுத்துவன் மூ­லம் ஏனையோரை 'சூத்திரர்' என்றும், தனக்கு சேவகம் செய்யும் அடிமை சாதிகள் என்றும் அறிவித்துக் கொள்கிறான் என்பதே உண்மை. இதற்கு ஏன் இவ்வளவு உள் அர்த்தம் கற்பிக்க வேண்டும்? ஹோட்டல் அதிபர் தன்னை பிராமணன் என்றுதானே சொன்னார்? பிறரை சூத்திரர் என்று சொல்லவில்லையே? என்று திருவாளர் வெகுசனம் கேள்வி எழுப்பலாம். 'இந்துத்துவ' பொதுப்புத்தியில் தோய்ந்து போன வெகுசனத்திற்கு ஆரியமாயை இன்றளவும் தெளியவில்லை. இன்றைய கார்ப்பரேட் உலகத்திலும் சூத்திரனாகிய 'தமிழன்' பாடும் 'திருமறைகள்' கோவிலுக்குள் ஒலிக்கப்படுவதில்லை. Only for Bramins என்று எழுதி ஒட்டப்பட்ட வாடகை வீடுகள் இன்றளவும் சென்னையில் இருக்கின்றன. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்கிற சட்டத்தை இன்றளவும் நடைமுறைப்படுத்த முடியவில்லை.

இது போன்ற சம்பவங்கள் எல்லாம் இன்றளவும் சமூ­கத்தில் பார்ப்பானுக்கு இருக்கக்கூடிய பிறவி மரியாதையை காட்டுகின்றன. இத்தகைய சூழலில்தான் இறுமாப்புடனும், பிறவித்திமிரை பறைசாற்றும் விதமாகவும் 'பிராமணாள் கபே' என்று ஒரு பார்ப்பனர் பெயர் வைத்திருக்கிறார். எழுபது வருடங்களுக்கு முன்னரே இது போன்ற சாதி ஆதிக்க நடவடிக்கைகளை எதிர்த்தது அதனை ஒழித்துக் கட்டியவர் பெரியார். ஆனால், தற்போது விஞ்ஞான உலகத்தில் மீண்டும் தனது இருத்தலை ஆணித்தரமாக பதிவு செய்யத் துடிக்கிறது பார்ப்பனீயம்.

தேவர் ஹோட்டலும், வன்னியர் ஹோட்டலும் சரியா?

'பிராமணாள் கபே'வை எதிர்த்து போராட்டம் நடத்துபவர்கள் வன்னியர் ஹோட்டலுக்கு எதிராக, தேவர் ஹோட்டலுக்கு எதிராக போராட்டம் நடத்துவார்களா? இது திருவாளர் வெகுசனம் மட்டும் கேட்கும் கேள்வி அல்ல, சில அறிவுஜீவிகளும் இது போன்ற கேள்விகளை கேட்கின்றனர். அவர்களுக்கு ஒரு விஷயத்தை புரிய வைக்க வேண்டியது நமது கடமை. வர்ணம் என்பது வேறு; சாதி என்பது வேறு. 'பிராமணாள்' என்பது வர்ணம்; தேவர் என்பதோ வன்னியர் என்பதோ வெறும் சாதிதான். 'பிராமணாள்' என்கிற வர்ணத்திற்குள்தான் அய்யர், அய்யங்கார்கள், சவுட்டி பார்ப்பனர் போன்ற சாதிகள் அடங்கும். 'பிராமணாள்' என்பது பிரம்மாவின் முகத்தில் பிறந்த உயர்ந்த வர்ணம் என்று பொருளாகிறது. ஆகவே , நால்வர்ணத்தையும் ஏற்றுக் கொண்டு, 'சூத்திரர்கள்' பிரம்மனின் கால்பாதத்தில் பிறந்தவர்கள் என்பதை ஏற்றுக் கொள்ளச் சொல்கிறது.

'சூத்திரன்' என்றால் வேசிமகன் என்று மனுதர்மம் பொருள் கூறுகிறது. தன்னை 'பிரமாணாள்' வர்ணம் என்று சொல்லுவதன் மூ­லம் தமிழர்களுக்கு நாலாவது வர்ணமாகிய 'சூத்திரர்கள்' என்கிற பட்டத்தை வழங்குகிறார் 'பிராமணாள் கபே' உரிமையாளர். நால் வர்ணத்தைப் பாதுகாக்கும் 'பிராமணாள்' என்கிற பெயரை பொது அரங்கில் வைத்துக்கொண்டதால் ஒட்டு மொத்த தமிழ் சமூ­கத்தையும் 'வேசி மகன்கள்' என்று சொல்லி இழிவுபடுத்தியிருக்கிறார், 'பிராமணாள் கபே' உரிமையாளர். அது சரி, அப்படியென்றால் வன்னியர் ஹோட்டலும், நாடார் ஹோட்டலும் வைத்திருப்பவர்களை நாம் கண்டிக்க வேண்டுமா? என்றால் நிச்சயமாக‌ கண்டிக்க வேண்டும். 'பிராமணாள் கபே' உரிமையாளர் நமது பொது எதிரி என்றால் வன்னியர் ஹோட்டல் உரிமையாளரும், தேவர் ஹோட்டல் உரிமையாளரும் நமது சமூ­கத்திலுள்ள அறிவிலிகள். அயோக்கியர்களை எதிர்த்து போராட்ட‌ம் நடத்தலாம். அறிவிலிகளுக்கு முதலில் புரிய வைக்க வேண்டும்.

ஒருவர் வன்னியர், செட்டியார், முதலியார், தேவர் என்று தன்னை அறிவித்துக் கொண்டால் என்ன அர்த்தம்? தன்னை 'சூத்திரன்' என்று அவனே சொல்லிக் கொள்கிறான் என்றுதானே பொருள். நாலாம் வர்ணத்தில் பிறந்தவன் என்று பார்ப்பான் என்ன சொல்வது? நானே என்னை சூத்திரன் என்று பெயர் பலகை வைத்து கொள்கிறேன் என்கிறான் பிற்படுத்தப்பட்ட தமிழன். நால்வர்ணப் பெருமை பேசும் 'பிராமணாள் கபே' ஹோட்டல் அதிபர்கள் உருவாக்கி வைத்திருக்கும் 'இந்துத்துவ பொதுப்புத்தி'யில் அறிவிழந்து தவிக்கும் தேவரும், வன்னியரும், 'தமிழன்' என்கிற உணர்வினை இழந்து சாதிப் பெருமை பேசுகின்றான்.

        இடைநிலை சாதிகள் தங்கள் சாதிப் பெருமையை பேசுவதன் மூ­லம் தங்களைத் தாங்களே இழிவுபடுத்திக் கொள்கின்றனர். தங்களின் இழிவு நிலையை இவர்கள் உணராதவரை 'பார்ப்பனீயம்' தன்னை உயிர்ப்பித்துக் கொண்டுதான் இருக்கும்.

அவர்ணர்கள் அணி திரளட்டும்:–

        வர்ண பேதத்தை ஆதரிக்கும் 'பிராமணாள் கபே'வை எதிர்த்து, அவர்ணர்களான தாழ்த்தப்பட்ட மக்கள் அணி திரள வேண்டும். நால் வர்ண அமைப்பை ஏற்க மறுத்து புரட்சி செய்த போராளிகளை 'பஞ்சமர்' என்றும் 'சண்டாளர்' என்றும் சாடி மனுதர்ம அமைப்பு ஒதுக்கியது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் பார்ப்பன அமைப்பை எதிர்த்து சமர் புரிந்த தாழ்த்தப்பட்ட மக்களின் வரலாற்றை அம்மக்கள் நினைவு கொள்ள வேண்டும். வர்க்க பேதத்தை நிரந்தமான அமைப்பாக்கி பிறவி முதலாளித்துவத்தை இம்மண்ணில் நிலைநாட்டிய 'வர்ணாசிரமத்' திமிரை எதிர்த்து இடதுசாரிகள் போராட முன் வர வேண்டும். சுயமரியாதை உணர்வுடனும், வரலாற்ற‌றிவுடனும் சிந்தித்துப் பார்த்தால் 'மனிதனாகத்' தன்னை உணரும் அனைவரும் இந்த 'பிராமணாள் கபே'வைத் தகர்க்கும் 'ஆயுதங்களாய்' மாற வேண்டும்.

- ஜீவசகாப்தன்

Pin It