ஆனந்த விகடன் 7-11-2012 நாளிட்ட இதழில் வெளியான 'நேற்று... நான் விடுதலைப் போராளி, இன்று... பாலியல் தொழிலாளி' என்ற தலைப்பில் ம. அருளினியன் எழுதியிருந்த 'உண்மை' கதைக்கு எனது எதிர்வினையை ஆனந்த விகடன் இதழின் ஆசிரியருக்கு நேரிடையாக அனுப்பியிருந்தேன். அடுத்த இதழில் அது வெளியிடப்படுகிறதா என்பது அறியாமல் அதை பொது தளத்தில் வெளியிடுவது முறையாகாது என்பதால் பொறுத்திருந்தேன். இன்று வெளிவந்துள்ள ஆனந்த விகடனில் எனது எதிர்வினையையோ, வேறு எவரின் எதிர்வினையையோ வெளியிடாமல், ஆசிரியர் தானே ஓர் எதிர்வினையை எழுதி வெளியிட்டுள்ளார். அதில் அந்த ”உண்மைக்” கதைக்கு பல எதிர்வினைகள் வந்ததாகவும், அப்பெண்ணுக்கு உதவி செய்ய விரும்புவதாக பலரும் மனம் உருக கேட்டிருந்ததாகவும், சிலர் இதை வெளியிட்டது தவறு என்று எழுதியிருந்ததாகவும், வேறு சிலர் அது ஒரு புனைவு என்று குறிப்பிட்டிருந்தததாகவும் எழுதியுள்ளார். அப்பெண்ணின் பாதுகாப்பு கருதி அவரின் தொடர்பையோ அடையாளத்தையோ வெளியிட இயலாதென்றும் குறிப்பிட்டுள்ளார்.

சரி. “தானே“ புயலுக்கு நிதி சேகரித்து தானே நேரடியாக உதவி செய்தது போல், உதவ விரும்புபவர்களிடம் உதவியை பெற்று தானே நேரடியாக அப்பெண்ணுக்கு விகடன் அனுப்பி வைக்கலாமே! அத்துடன், இலங்கை அரசின் போர்க் குற்றங்கள் மீதான உலகளாவிய விசாரணைக்கான குரல்கள் வலுத்திருக்கும் இச்சூழலில், அப்பெண்ணின் வாக்குமூலத்தை பதிவு செய்து, போர்க் குற்றத்திற்கு எதிரான ஆதாரமாக விகடன் நேரடியாக அய். நா. வுக்கே அனுப்பி வைக்கலாமே. அவ்வாறான வாக்கு மூலத்துக்கு முகத்தைக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று அய். நா. வும் உலகச் சட்டங்களும் சொல்வது விகடனுக்குத் தெரியாதா?

இவை எதையும் செய்யாமல், மீண்டும், அப்பெண்ணின் குரலில் என்ற பெயரில் வக்கிரமான ஒரு பதிவை வெளியிட்டுள்ளது. ஏதோ அந்த பெண் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருப்பது குறித்து அந்தப் பெண்ணை குற்றம் சாட்டிதான் விமர்சனம் எழுந்தது போலவும் அதற்கான பதிலாக அப்பெண் சொல்வது போன்ற அந்த பதிவு, ஒரு தவறை மறைக்க மேலும் மேலும் தவறான பாதையில் விகடன் செல்வதையே காட்டுகிறது. அதுவும், இவ்வளவு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், இம்முறை, ஈழ மொழியில் அப்பெண்ணின் பதிவு என சொல்லப்பட்டிருப்பது வெளியிடப்பட்டுள்ளது. எப்பாடு பட்டேனும் தான் செய்த தவறை மறைதது, ஒரு பொய்யை உண்மையாக்க விகடன் எடுக்கும் பரிதாப முயற்சிதான் இதில் வெளிப்படுகிறது. ஆனால் அதை நம்பத்தான் யாரும் இங்கு தயாரில்லை.

விகடனுக்கு அனுப்பப்பட்ட எதிர்வினை 

ஆனந்த விகடன் 7-11-2012 நாளிட்ட இதழில் வெளியான 'நேற்று... நான் விடுதலைப் போராளி, இன்று... பாலியல் தொழிலாளி' என்ற தலைப்பில் ம. அருளினியன் எழுதியிருந்த 'உண்மை' கதை படித்து அதிர்ச்சியடைந்தேன். ஒரு விடுதலைப் போராளி பாலியல் தொழிலுக்குத் தள்ளப்பட்டிருப்பது அதிர்ச்சி என்றால், அந்த செய்தியினூடாக அருளினியன் தெரிந்தோ தெரியாமலோ உணர்த்தியிருக்கும் செய்திதான் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியது.

ஒரு போராளி பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளார் என்பதை உரக்கச் சொல்லும் அருளினியன், அச்சூழல் நேர்ந்ததன் காரணங்களை வெறும் நிகழ்வுகளாக மேலோட்டமாகச் சொல்லிச் செல்வது ஏன்?

அருளினியன் குறிப்பிட்டிருப்பது அரிதான ஓர் ஒற்றை நிகழ்வெனில் அதனை இத்தனை உரக்கச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இதுதான், போரில் பிழைத்த மக்களின் இன்றைய நிலைக்குச் சான்று எனில், இது இலங்கை அரசு பறைசாற்றும் மறுகட்டமைப்பு எத்தகு போலியானது என்பதற்கும் சான்று அல்லவா? மறு கட்டமைப்பு என்ற பெயரில் இந்தியா உட்பட பல உலக நாடுகளிடமிருந்து இலங்கை அரசு கோடி கோடியாக பெற்ற நிதி என்னவாயிற்று? இப்படியான ஏமாற்று வேலைக்கு இந்தியாவும் உலக நாடுகளும் ஏன் நிதி தர வேண்டும் என்ற கேள்வி ஏன் அருளினியனால் எழுப்பப்படவில்லை?

வன்புணர்வு நடந்ததை வெளியேச் சொல்வது என்பது, பாதிக்கப்பட்டப் பெண்ணுக்குதான் அவமானம் என்று கருதும் தமிழ்ச் சமூகம், 'தங்களை காக்கும் தெய்வங்கள்' என்ற உயர்நிலையில் வைத்து போற்றிய பெண் போராளிகள், சிங்களர்களால் வன்புணர்வு செய்யப்பட்டு, உடைகள் நீக்கப்பட்ட படங்களை, மனதில் ரத்தம் கசிய உலகெங்கும் பரப்பினார்களே, எதற்காக? சிங்களவனின் கொடூர முகத்தை உலகறிய செய்ய வேண்டும் என்ற ஒற்றை நோக்கம் தவிர அதில் வேறெதுவும் இல்லையே!

ஆனால், அருளினியனின் 'கதை', சிங்களவனை தோலுரிப்பதைவிட தமிழரின் மனதில் தோல்வி மனப்பான்மையை விதைப்பதில்தான் அதிக கவனம் செலுத்துகிறது.

இனப்படுகொலை என்பது உயிர்களை கொல்வது மட்டுமல்ல. இலங்கை அரசு தமிழர்களின் உயிரை மட்டும் பறிக்கவில்லை. அவர்களின் பாரம்பரியமான நில உரிமையை பறித்து, அங்கு சிங்கள மக்களை குடியேற்றியதின் மூலம் மக்கள் பரம்பல் அடிப்படையிலான இனப் படுகொலையை செய்து வருகிறது. (Demographic Genocide)

முகாம்களிலிருந்து 'விடுவிக்கப்பட்ட' மக்கள் மீள் குடியேற சொந்த நிலங்கள் இல்லை. வாழ்வாதாரங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டும் பறிக்கப்பட்டும் உள்ளன. முகாம் வாழ்வே மேலானதோ என்று தோன்றும் அளவுக்கு வெளியில் வாழ்க்கை துன்பகரமானதாக இருக்கிறது. புதிய கட்டுமானங்கள், புதிய தொழில்கள் என அனைத்தும் அங்கு குடியேற்றப்பட்டுவிட்ட சிங்களரின் நலன் சார்ந்தே மேற்கொள்ளப்படுகின்றன. தங்கள் வாழ்வை தாங்களே கட்டமைப்பதற்கான அனைத்து வழிகளும் அடைபட்ட நிலையில், தமிழர்கள் அங்கு ஒரு கட்டமைப்பு இனப்படுகொலைக்கு (Structural Genocide) ஆளாகி நிற்கின்றனர்.

இன்று அங்கு 89,000 விதவைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. வாழ்வாதாரங்களை இழந்த நிலையில் அன்றாட வாழ்வை நடத்த வேறு வழியின்றி, அருளினியன் குறிப்பிட்டிருப்பது போல சில பெண்கள், பாலியல் தொழிலுக்குள் தள்ளப்பட்டிருக்கலாம். மறுபுறம் 13 முதல் 16 வயதான சிறுமிகள், இராணுவத்திடமிருந்து தப்ப குழந்தை திருமணத்திற்குள் தள்ளப்படுகின்றனர். சிறுவர்களை. மிக எளிதாக கிடைக்கும் போதை பொருட்களின் பிடியில் சிக்காமல் காக்க பெற்றவர்கள் தவிக்கின்றனர். கல்வியை பெரிதாக மதிக்கும் அச்சமூகத்து குழந்தைகள், கல்விக்கு வழியின்றி முடங்கி கிடக்கின்றனர். இவை அனைத்தும் சிங்களப் பேரினவாதம் தமிழர்கள் மீது மேற்கொண்டுள்ள பண்பாட்டு இனப்படுகொலையின் (Cultural Genocide) விளைவுகளே.

ஈழத்தில் வாழும் தமிழர்கள் மீது தொடரும் இந்த மக்கள் பரம்பல், கட்டமைப்பு மற்றும் பண்பாட்டு இனப்படுகொலைகளுக்கு இணையாக, தமிழ்நாடு உட்பட உலகெங்கும் வாழும் தமிழ் மக்களிடம் தோல்வி மனப்பான்மையை நிரந்தரமாக ஏற்படுத்தும் வகையில் ஒரு மிகப் பெரும் உளவியல் இனப்படுகொலையை இலங்கை அரசு மேற்கொண்டுள்ளது.

இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட ஆயுதப் போர் 2009 ஆண்டில் நிரந்தரமாகவோ, தற்காலிகமாகவோ ஒரு முடிவுக்கு வந்திருக்கலாம். ஆனால் இன்று வரையில் தமிழர்கள் மீதான உளவியல் போர் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

'நாம் தோற்று விட்டோம். இனி ஒரு போதும் எழவே முடியாது' என்பதை ஒவ்வொரு தமிழனும் நம்ப வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். தோல்வியை விட தோல்வி மனப்பான்மை மிகக் கொடியது. அத்தகைய தோல்வி மனப்பான்மையை தமிழர்கள் மனதில் உருவாக்க இலங்கை அரசு கையில் கிடைத்திருக்கும் ஆயுதங்களே ஊடகங்கள்.

அருளினியனின் இந்த 'கதை'யும் அந்த உளவியல் போரின் கருவியாக, தமிழர்களின் மனதில் தோல்வி மனப்பான்மையை விதைக்கும் உளவியல் இனப்படுகொலைக்கு துணை செய்வதாக இருக்கிறதோ என்ற அய்யம் எழுகிறது.

கடந்த 30 ஆண்டு காலத்திற்கும் மேலாக ஈழ மக்கள் போருக்கு முகம் கொடுத்து வருகின்றனர். போரினால் ஏற்படும் சமூக விளைவுகளை எதிர்கொண்டே வந்துள்ளனர். 2009க்கும் முன்பும் கணவனை இழந்த பெண்களும், பெண்கள் தலைமையேற்ற குடும்பங்களும் ஈழத்தில் இருக்கத்தான் செய்தனர். பெற்றோரை இழந்த குழந்தைகளும் பெரும் எண்ணிக்கையில் இருக்கவே செய்தனர். ஆனால் 2009க்கு முந்தைய காலத்தில் இப்படி தனித்துவிடப்பட்ட பெண்கள் பாலியல் தொழிலுக்குள் தள்ளப்படும் நிலையோ, பெற்றோரை இழந்த குழந்தைகள் ஆதரவற்று வீதிகளில் திரியும் நிலையோ ஏற்படவில்லை. ஏனெனில் அன்று அந்த மக்களின் நலனைச் சிந்தித்துச் செயலாற்றும் ஓர் அரசு இருந்தது. அந்த அரசு, நார்வேயின் சமாதான ஒப்பந்த காலம் தவிர ஏனைய காலங்களில் உலக நாடுகளால் அங்கீகரிக்கப்படாத ஓர் அரசாக இருந்த போதும், அந்த அரசின் ஆட்சியில் அம் மக்களுக்கு பாதுகாப்பு இருந்தது. அவர்களின் வாழ்வியல் நலன்கள் பேணப்பட்டன. ஆனால் இன்று உலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட ஓர் அரசின் பிடியில் அம்மக்களின் வாழ்வதாரங்கள் அழிந்து சமூக வாழ்வும் சிதைந்து பாதுகாப்பற்ற நிலையில் அவர்கள் வாழ்கின்றனர். இந்தப் பேருண்மையைப் பேச ஊடகங்கள் மறுப்பது ஏன்?

முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்த போதும், அதற்கு முன்பும், போர் நடந்த காலம் முழுவதும், விகடன் ஈழச் செய்திகளை உடனுக்குடன் வழங்கி தமிழர்களின் நன்றியையும் பாராட்டையும் பெற்றது. அதன் பின்னரும் இந்த மூன்றரை ஆண்டுகளாக ஈழ மக்களின் அவலத்தை தொடர்ந்து எழுதி வருகிறது.

ஆனால், இவை அனைத்தும், ஈழத்தில் தொடரும் இனப் படுகொலையை உலகிற்கு வெளிக் கொணர்வதன் மூலம் உலகின் கவனத்தை ஈர்த்து, தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு ஏற்பட துணை செய்வதாக அமைய வேண்டும். மாறாக, இலங்கை அரசு மேற்கொண்டுள்ள உளவியல் போரின் கருவியாக, தமிழர்களிடம் தோல்வி மனப்பான்மையை விதைக்கும் உளவியல் இனப்படுகொலைக்கு துணை செய்வதாக அல்ல.

- பூங்குழலி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It