சில வெளிவராத தகவல்களும் கேட்கப்படாத கேள்விகளும் 

நிலம் புயலா, நீலம் புயலா என்று நான் யோசித்துக் கொண்டிருக்கும்போது புயல் கரையைக் கடந்து விட்டது. நல்லவேளை பெரிய அளவு இழப்புக்கள் இல்லை என்று நிம்மதிப் பெருமூச்சு விடமுடியாமல் ஒரு கப்பல் தரை தட்டி ஐந்து உயிர்கள் பலியாகின. இச்சம்பவம் நிறைய கேள்விகளை எழுப்பியுள்ளது. ஆனால், அவற்றைப் பற்றி எந்தக் கவலையும் இன்றி பிரதான ஊடகங்கள், குறிப்பாக தமிழ் ஊடகங்கள் மௌனம் சாதிக்கின்றன. எனவே, இதனை எழுத வேண்டியதாயிற்று.

ship_and_boat

முதலில் ஒரு விஷயத்தைச் சொல்லியாக வேண்டும்:

இந்தக் கப்பலின் ஊழியர்களுக்குப் பல மாதங்களாகச் சம்பளம் தரப்படவில்லை. சென்னை துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த கப்பலின் என்ஜினை இயக்குவதற்குத் தேவையான எரிபொருள் இல்லை. கப்பலில் இருந்த ஊழியர்களுக்குச் சாப்பிட ஏதும் இல்லை. கப்பலில் இருந்த எலியையும் கரப்பானையும் கூட சாப்பிட வேண்டியிருந்ததாக ஆங்கில வலைமனைப் பதிவுகள் சொல்கின்றன. பல மாதங்கள் இருப்பில் இருந்த ரொட்டிதான் சற்று கவுரமான உணவு! ஒரு வார உணவை ஒரு மாதத்துக்குப் பிரித்துவைத்துச் சாப்பிட்டார்களாம். குடிநீர் இல்லாத காரணத்தால் மழை நீரைச் சேகரித்துத் தாகம் தணித்துக் கொண்டிருந்திருக்கின்றனர். இந்தக் கொலைப் பட்டினியால்தான் கடலில் விழுந்த உடனேயே அவர்கள் செத்துப் போயிருக்கிறார்கள்.

இப்படி மிகமோசமான நிலைக்கு 37 மனிதர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இது எந்த முதலாளியின் குற்றம்? அவர் வேறு யாருமல்ல மத்திய அமைச்சர் சரத்பவார்தான். அவரின் மனைவி பெயரான பிரதிபாதான் கப்பலின் பெயர். கப்பல் கம்பெனியின் பெயரும் பிரதிபா ஷிப்பிங் லிமிடெட்தான். மந்திரி மனைவியை எப்படி நடத்துகிறார் என்று தெரியவில்லை! மேற்படி நிறுவனம் மந்திரியின் குடும்ப நிறுவனமாம்.

தங்களின் சொந்த ஊழியர்களையே கொலைபட்டினிப் போட்டு, சம்பளத்தை வழங்காமல் மரணத்தைக் கூலியாக வழங்கும் மந்திரி எப்படி நாட்டு மக்களை நடத்துவார்?

மற்றொரு பிரச்சனை கப்பலின் வயது பற்றியது. கப்பலுக்கு 31 வயது ஆகிறது. கப்பல் கடலை எதிர்கொள்ளும் ஆற்றலை இழந்துவிட்டது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட, இறந்து போன கப்பல் ஊழியரின் உறவினர் மனு சொல்கிறது. அக்டோபர் 2 முதல் கடலில் பயணம் செய்யும் தகுதியை கப்பல் இழந்துவிட்டது என்று கடற்கரை பாதுகாப்புப் படையினர் சொன்னதாக NDTV செய்தி சொன்னது. அதனைப் பத்திரிகைகளும் சொல்லிவந்தன.

சரக்கை இறக்கிவிட்டு மும்பை சென்ற கப்பல் ஏன் திரும்பி வந்தது? திரும்பி வந்த கப்பலில் இன்னும் எப்படி எண்ணெய் இருக்கிறது? கப்பலை இயக்குவதற்கான டீசல் இல்லை என்ற நிலை ஏன் ஏற்பட்டது? இப்படி எண்ணற்ற கேள்விகள் இருக்கின்றன. பணியை விட்டுச் செல்ல வேண்டிய ஊழியர்களுக்குக் கூட சம்பளம் தராத‌து ஏன்? உணவு, நீர் போன்ற அடிப்படை அம்சங்களைக் கூட செய்ய முடியாத அளவுக்கு நிறுவனம் பிச்சையெடுக்கும் நிலைக்கு ஆளாகிவிட்டதா?

அதுமட்டுமல்ல, கப்பலில் இருந்து தப்பித்து உயிர்காப்புப் படகில் இறங்கியவர்களில் உயிர் காப்பு உடை (மிதப்பதற்கு உதவும் உடை) அணியாமல் இருந்திருக்கிறார்கள். ஏன் அது அவர்களுக்குக் கிடைக்கவில்லையா? உயிரைக் காக்க கடலில் இறங்கியவர்கள் உயிர்ப் பயம் இல்லாத காரணத்தால் உடையணிய மறந்துவிட்டார்களா? உயிர் காப்புப் படகு அருகிலேயே அவை இருந்திருக்க வேண்டுமல்லவா? அப்படியானால், போதுமான உயிர் காப்பு உடைகள் கப்பலில் இல்லை என்றுதானே பொருள்?

இப்படியான முறைகேடுகள் செய்வது யார்? நமது நாட்டின் மத்திய மந்திரியின் கப்பல் நிறுவனம். அந்த நிறுவனக்காரர்களை அஜாக்கிரதையின் காரணமாக மரணம் விளைவிப்பது என்ற கிரிமினல் குற்றத்தின்படி கைது செய்யாதிருப்பது எப்படி?

கைவிடப்பட்ட கப்பல்களை பிரித்தெடுப்பது ஒரு பெரிய வேலை. எதிலும் காசு பார்க்கும் நெறிகெட்ட முதலாளிகள் கப்பலை இந்தியக்கடல்களில் விட்டுவிடுவது மலிவானது என்று நினைக்கிறார்களாம். மும்பை துறைமுகத்திலும் சென்னை துறைமுகத்திலும் கப்பலை நிறுத்தி வைத்துவிடுவது சாதாரணமாக நடக்குமாம்.

கடல்சார் நிபுணர் வீரேஷ் மாலிக், ‘கப்பல்துறை இயக்குநரும் சென்னை துறைமுக அதிகாரிகளும் 31 வயதான கப்பல் இந்தியக் கடலில் இயக்கப்பட்டதற்குப் பொறுப்பு’, என்கிறார். (TOI, Nov 2, 2012) மேலும் அவர் சொல்கிறார், ‘இந்தியக் கடல்களில் செத்துப்போன கப்பல்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. சென்னையும் மும்பையும் செத்துப்போன கப்பல்களுக்குப் பாதுகாப்பான இடங்கள் ஆகிவிட்டன’, என்றும் அவர் குற்றம் சாட்டுகிறார்.

சென்னைத் துறைமுகத்தில் முதலாளிகளால் கைவிடப்பட்ட 12 கப்பல்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. அவற்றில் 5 கப்பல்கள் துறைமுகத்தின் வெளியே நிற்கின்றன என்றும் டைம்ஸ் ஆப் இந்தியா எழுதியிருக்கிறது.

ஓட்டைக் கப்பலை வாங்கி தட்டிக்கொட்டி, கப்பலாக்கி வணிகம் செய்து பின்னர் கைவிட்டுவிடும் முதலாளி, குற்றத்தனமிக்கவனாக சமூக விரோதப் பின்னணி கொண்டவனாக இருப்பான். சரத்பவார் அப்படியொரு முதலாளியா?

இந்தக் கப்பல் கரையொதுங்கியதை அடுத்து வேறு பல செய்திகளும் வெளிவருகின்றன.

இந்தியக் கடலில் எந்தவொரு கப்பலும் நுழையலாமாம். அதனைச் சரிபார்க்க எந்தவொரு அமைப்பும் இல்லையாம். என்ன நம்ப முடியவில்லையா? நான் சொல்லவில்லை, சாமி…! ஆங்கிலப் பத்திரிகைகள்தான் எழுதின.

இந்தியக் கடலுக்கு வருகை தரும் கப்பல்களை ஆய்வு செய்வது Mercantile Marine Deaprtmentன் பொறுப்பாம். அதற்கான அலுவலகம் ஒன்றும் சென்னையில் இருக்கிறது. அதில் எந்தவொரு மூத்த அதிகாரியும் இல்லை. துணை தலைமை அளவையாளர், கப்பல் அளவையாளர் என்ற முக்கியமான பொறுப்புகளில் ஆட்களே நியமனம் செய்யப்படவில்லை. இப்போது அந்த அலுவலகம் செய்யும் வேலை, மாலுமிகளின் சான்றிதழ்களைச் சரிபார்க்கும் வேலைதான். பலமுறை கேட்டும் கப்பல்துறை அமைச்சகம் ஆட்களை நியமனம் செய்யவில்லையாம்! சிக்கன நடவடிக்கை என்று சொல்கிறார்களே அது இதுதான் போலும். கப்பல்துறை அமைச்சர் சிக்கனம் பிடித்ததில் கப்பல்கள் கண்காணிக்கப்படுவதில்லை. ஊழியர்கள் செத்துப்போகிறார்கள். இப்படித் திறமையாகச் செயல்படும் துறையின் மந்திரி நம்ம ‘க’னா ‘மூ’னாவின் அரசியல் வாரிசு வாசன்தான். (சமீபத்திய மாற்றத்தில் அண்ணன் எங்கிருக்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை. இந்த நிமிடம்வரை கப்பல் துறையின் வலைமனையில் அவர் பெயர்தான் இருக்கிறது.)

சரி. கப்பல்துறை இயங்கவில்லை. செத்துப்போன கப்பல்களைக் கைவிடும் முதலாளிகளின் சொர்க்க பூமியாக இந்தியக் கடல் இருக்கிறது. இங்கே பிரச்சனை முடியவில்லை. இன்னும் இருக்கிறது.

ship_and_boat_640

இந்தியத் துறைமுகங்களைக் கட்டுப்படுத்துவது கப்பல்துறை அமைச்சகமும், கடற்கரையோர காவல் படையும்தான் என்று இந்தியக் கடற்படை கைகழுவிக்கொண்டது. செத்துப்போன கப்பல்களை இந்தியத் துறைமுகங்கள் பலவற்றில் நிறுத்தி வைத்திருக்கிறார்கள் என்றும் கடற்படை குற்றம் சாட்டியிருப்பதாக டைம்ஸ் ஆப் இந்தியா எழுதியது.

அதுமட்டுமல்ல, இந்தியக் கடல் எல்லைகள் பாதுகாப்பானவையாக இல்லை என்பதையும் கப்பல் கரையொதுங்கிய சம்பவம் காட்டியிருக்கிறது. 2008ல் மும்பையில் நடைபெற்ற கடல்வழித் தாக்குதலுக்குப் பின்பு முழுமையான கடல் பாதுகாப்பை உறுதி செய்வதாக அரசு சொன்னது.

ஆனால், பிரதிபா காவேரி கப்பலின் நங்கூரம் கழன்றுகொண்டு நகர ஆரம்பித்தவுடன், கப்பலின் கேப்டன் அவசர செய்தி அனுப்பியிருக்கிறார். கடலோரக் காவல் படை, கடல் போலீஸ், கடற்படை அனைத்துக்கும் செய்தி அனுப்பியிருக்கிறார். கம்பெனியையும் அழைத்துக் கூவியிருக்கிறார். சென்னைத் துறைமுகம் வழியாக மத்திய அரசின் கப்பல் துறையையும் அணுக முயற்சித்திருக்கிறார். அவர் அவசர செய்தியனுப்பியது பகல் 10 மணி துவங்கி என்று ஒரு செய்தியும் மதியம் 2.30 மணிக்குத் துவங்கி என்று ஒரு செய்தியும் இருக்கிறது. ஆனால், கப்பல் கரை ஒதுங்கும்வரை யாரும் அசையக்கூட இல்லை. இவர்கள் எப்படி இந்தியக் கடல்களைக் காப்பார்கள் என்று நாம் நம்புவது?

கல்பாக்கத்தைத் தாக்க ஒரு கப்பல் வருகிறது அல்லது அணுநீர் மூழ்கிக் கப்பல் வருகிறது என்றால், இந்த அனைத்து சூராதி சூரர்களும் என்ன செய்து கொண்ருப்பார்கள் என்று நான் கேட்கவில்லை, டைம்ஸ் ஆப் இந்தியா கேட்கிறது.

பாதுகாப்பை விடுங்கள். இந்தியக் கடல்களில் அன்னியக் கப்பல்கள் திருட்டுத்தனமாக மீன்பிடிக்கின்றன. இதுநாள் வரை அந்தக் கப்பல்களை மடக்கிய செய்தி எதையாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மீனவன் வாழ்வாதாரம் அழிந்துகொண்டிருக்கிறது. இந்திய, அன்னிய நிறுவனங்கள் மீன்பிடித்துக் கொழிக்க, திருட்டு மீன்பிடியையும் நிறுவன‌ முதலாளிகள் செய்து வருகின்றனர். இந்திய கடல்பாதுகாப்பு அமைப்புகள், கடற்படை உட்பட என்ன செய்திருக்கிறார்கள்? ஏமாந்த மீனவர்கள் மீது வழக்குப் போடுவதைத் தவிர?

சரி, கடைசியாக ஒரு பிரச்சனைக்கு வருவோம்.

புயல் போன்ற சூழலில் மீட்புப் பணியைச் செய்ய கடலோரக் காவல் படையினரால், இன்னபிற, இதுபோன்ற நிலைமைகளுக்கென்றே பயிற்றுவிக்கப்பட்டு சம்பளம் வாங்கி வாழ்ந்துவரும் வீரர்களால் முடியாதாம். அதனால், அவசர அழைப்பைக் கண்டு கொள்ளவில்லையாம்.

ஆனால், இந்த எந்த வசதியும் இல்லாத மீனவர்கள் படகு கவிழ்ந்தவுடன் கடலில் இறங்கி 15 ஊழியர்களைக் காப்பாற்றியிருக்கிறார்கள்.

கிழக்குப் பிராந்தியத்தின் கடலோரக் காவல்படையின் தலைமையகம் சென்னையில்தான் இருக்கிறது. நான்கு அதி நவீனப் படகுகள், இரண்டு ஹெலிகாப்டர்கள் அதன் கைவசம் இருக்கின்றன. ஆனால், அவர்களால் செய்ய முடியாத சாதனையை கட்டுமர மீனவர்கள் செய்திருக்கிறார்கள்.

மீனவர்கள் தாங்கள் மனிதர்கள் என்பதைக் காட்டியிருக்கிறார்கள்.

இப்போது இன்னும் சில கேள்விகளை நான் கேட்டே ஆகவேண்டும்.

1.            கப்பல் ஊழியர்களைப் பட்டினி போட்டு, செத்துப்போன கப்பலைக் கைவிட்டு உயிர் இழப்புக்குக் காரணமான சரத் பவார் நிறுவனத்தை விட்டுவிட்டு அதன் கேப்டனிடம் விசாரணை என்கிறார்களே… இது என்ன நியாயம்?

2.            செயல்படாத கப்பல் துறை, துறைமுக அதிகாரிகள், படைவீரர்கள் கொண்ட இந்த அரசாங்கம் இருந்து என்ன லாபம்?

3.            குற்றவாளிகளையும் கொள்ளையர்களையும் மந்திரியாக வைத்துக்கொண்டு தின்று கொழுத்துத் தூங்கும் அதிகாரிகளை/படைகளை வைத்துக்கொண்டு எப்படி அணு உலை போன்ற ஆபத்துகள் பாதுகாப்பானவை என்று சொல்கிறீர்கள்?

4.            அதிகாரத்தைப் பயன்படுத்திக்கொண்டு, தொழில் செய்து, ஊழியர்களைக் கொலைபட்டினிப் போட்டு மரணத்தின் பிடியில் தள்ளும் கோடீஸ்வர சரத் பவாரை, அவர் போன்றோரை மந்திரியாக வைத்திருக்கும் நாடாளுமன்றம் எப்படி இந்திய மக்களின் நாடாளுமன்றமாக இருக்க முடியும்?

5.            உயிரைக் இழக்கத் துணிந்து, உயிர்களைக் காப்பாற்றும் மீனவர்களை எப்படி உங்களால் தேசத் துரோகிகள் என்று சொல்ல முடிகிறது?

தேசத் துரோகிகள் தேசத்தை ஆள்வதும், தேசத்தை உருவாக்கும் மக்கள் சிதைந்து போவதும்தான் நிலைமை என்றால், அது வெகுநாட்கள் நீடிக்காது.

-              சி.மதிவாணன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It