இந்தியப் பெருநிலப் பரப்பில், மன்னராட்சி முடிந்து, காலனிய ஆட்சிகளும் முடிந்து, மக்களாட்சி தொடங்கி அறுபது ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால், இந்தியப் பல்கலைக் கழகங்கள் மட்டும் இன்னும் நியமனம் பெற்ற குறுநில மன்னர்களின் (அதாவது துணைவேந்தர்களின்) குரூரப் பிடிகளிலிருந்து விடுபடவே இல்லை. மக்களாட்சியின் வழி நியமனம் பெறும் துணைவேந்தர்கள் தங்களைக் குறுநில மன்னர்களாகக் கருதிக் கொள்வதும், பல்கலைக் கழகங்களின் ஆட்சிக் குழு உறுப்பினர்களை, மந்திரிப் பிரதானிகளாகக் கருதிக் கொள்வதும் அப்படியே நடந்து கொள்வதும் வெகு காலமாகவே புழக்கத்தில் இருந்து வருகின்றது. இதில் மத்திய, மாநில பல்கலைக் கழகங்களுக்கிடையில் பெருத்த வேறுபாடுகள் ஏதுமில்லை.

துணைவேந்தர்களை எப்படித் தெரிவு செய்வது என்பது குறித்து இந்தியச் சமூகம் அறுபது ஆண்டுகளாக விவாதித்துக் கொண்டிருக்கின்றது. 1948 ஆம் ஆண்டில் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் தலைமையிலும், 1964 -1966 காலப் பகுதியில் கோத்தாரி தலைமையிலும், 1990ல் ஞானம் தலைமையிலும், 1993ல் ராம்லால் பாரிக் தலைமையிலும் நிபுணர் குழுக்கள் அமைக்கப்பட்டு, பரிந்துரைகள் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், இதுவரை இந்தியாச் சூழலுக்கேற்ற சர்வதேசத் தரத்திலான ஒரு ஆரோக்கியமான தெரிவு முறையை நாம் உருவாக்கிக் கொள்ளவில்லை.

உலகமெங்கிலும் துணைவேந்தர்களைத் தெரிவு செய்வதில் அந்தந்தப் பல்கலைக் கழகங்களே முக்கிய பங்கு வகிக்கின்றன. 800 வருடப் பாரம்பரியம் கொண்ட கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகம் தனது துணை வேந்தரைத தானே தெரிவு செய்து கொள்கின்றது. இலங்கையில் துணைவேந்தர்களைத் தெரிவு செய்வதில் அந்தந்தப் பல்கலைக் கழகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்தந்தப் பல்கலைக் கழகத்தின் டீன் எனப்படும் புல முதன்மையர்கள் (அங்கே பீடாதிபதிகள் என்றழைக்கப்படுகின்றனர்) மட்டுமே துணை வேந்தர் தேர்தலின் மூலமான போட்டியில் தேர்ந்தெடுக்கப்படுவதற்குப் போட்டியிட முடியும். பல்கலைக் கழக ஆசிரியர்களால் தேர்ந்தெடுக்கப்படும் முதல் மூன்றிடங்களைப் பிடித்த பீடாதிபதிகளின் பட்டியல் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டு அதில் ஒருவர் துணை வேந்தராக நியமனம் பெறுகின்றார். பல்கலைக் கழகத்திற்கு வெளியிலிருந்து எவரும் திடீரெனத் துணைவேந்தராக ஆகி விடுவது அங்கே சாத்தியமல்ல.

ஆனால், தமிழக பல்கலைக் கழகங்களிலும், பாண்டிச்சேரி உள்ளிட்ட அனைத்து மத்திய பல்கலைக் கழகங்களிலும் துணைவேந்தர்கள் அவதார புருஷர்களாக, பல்கலைக் கழகங்களுக்கு வெளியிலிருந்தே அவதரிக்கின்றனர். அனுபவம் மிக்க உள்ளூர் பேராசிரியர்கள் ஒத்துழைப்புடன், புதிய சூழலுக்கு வெகு விரைவாக அவர்கள் தங்களை மாற்றிக் கொள்ள முடிகின்றது. உதவி செய்த, ஒத்துழைத்த பேராசிரியர்களுக்குக் கணிசமான சலுகைகளையும் அவர்களால் வழங்கிட முடிகின்றது. மிகுந்த நிறைவேற்று அதிகாரங்களுடன், இணைவிக்கப் பெற்ற கல்லூரிகளின் தாளாளர்கள், முதலாளிகளின் அரவணைப்புடனும், சின்டிக்கேட் எனப்படும் ஆட்சிக் குழுவின் ஒத்துழைப்போடும் கனவிலும் நினைத்து பார்க்க முடியாத அரச வாழ்வு முறைக்கு, பதவியேற்ற குறுகிய காலத்திற்குள் மாறிவிடுகின்றனர். அண்டிப் பிழைக்கும் பேராசிரியர்களுக்குச் சலுகைகளும், மண்டியிட மறுப்பவர்களுக்கு அவமரியாதைகளையும் செய்து, ராஜ வாழ்வைத் தொடர்கின்றனர்.

துணைவேந்தர்களின் பெருமளவு நேரம் நிதி சம்பந்தப்பட்ட, ஒப்பந்தப் புள்ளிகள் தொடர்பானவற்றிலேயே கழிகின்றது. குறிப்பாக, துணைவேந்தர்களைக் கட்டிட மேஸ்திரிப் பணிகளிலிருந்து விடுவிக்க வேண்டும். கட்டிட கான்டிராக்டர்களுடனும், புத்தக வியாபாரிகளிமிருந்தும், தரகு வேலை பார்க்கும் பணிகளிலிருந்தும் விடுவிக்க வேண்டும். இன்னும் 10 , 20 ஆண்டுகளிலாவது இந்தியப் பல்கலைக் கழகங்களிலிருந்து ஒரு நோபல் பரிசுக்குரிய ஆய்வையாவது வெளிப்படுத்தும் சூழல் உருவாக வேண்டுமென்றால், முதலில் துணைவேந்தர்களை இது போன்ற பணிகளில் விடுவிக்க வேண்டும்.

கள நிலவரங்கள் இப்படியிருக்க, உயர் கல்வி தொடர்பான நாட்டு நிலவரமோ அச்சமூட்டுவதாகவும், கவலை தருவதாகவும் உள்ளது. ஒரு புறம் வணிக மயமாகி வரும் கல்விச் சூழலில், துணை வேந்தர்களின் பொறுப்பும் கடமையும் நாட்டின் எதிர்காலச் சந்ததிகளை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிப்பதாகவே உள்ளது. மறுபுறம், உயர் கல்வி வளையத்திற்குள் ஈடுபடுவோரின் எண்ணிக்கையைக் கணிசமாக உயர்த்த வேண்டிய தேசியக் கடமையும் உள்ளது. 2020 ஆம் ஆண்டிற்குள் நாட்டு மக்கள் தொகையில் 30 சதவிகிதம் பேரை உயர்கல்வியில் ஈடுபடச் செய்ய வேண்டிய பெரும் பொறுப்பும் உள்ளது. நேர்மையான, தொலைநோக்குப் பார்வை கொண்ட, தொழில் நுட்பங்களின் உதவியுடன் கல்வியைப் பரவலாக்குவதில் ஆர்வமும், நாட்டின் சவால்களை உணர்ந்த, அற்ப விஷயங்களில் ஈடுபட்டுப் பொழுதை வீணடிக்காமல், சிறந்த தலைமைப் பண்புகளுடன், வழிகாட்டக் கூடிய பண்புகள் கொண்ட துனைவேந்தர்களே இன்றைய இந்தியப் பல்கலைக் கழகங்களுக்குத் தேவையாக உள்ளது.

அவ்வாறான, துனைவேந்தர்களைத் தெரிவு செய்யும் தேர்வுக்குழு, வெளிப்படையான முறையில் இயங்கி, ஆகப் பொருத்தமான ஒருவரைத் தெரிவு செய்து அளிக்கும் பொழுது, பொறுப்பேற்கும் துணைவேந்தருக்கும் சூழலின் அழுத்தங்கள் புரியும். அவரும் வெளிப்படையான நிர்வாகத்தைக் கைக்கொள்ள முன்வருவார். அப்பொழுது, மன்னராட்சிக்குரிய பண்புகள் ஒழிந்து, துணைவேந்தரைச் சுற்றி எழுப்பப்பட்டிருக்கும் ஒளி வட்டம் மறைந்து, சீரிய தலைவராக மட்டுமே அவர் இயங்கிக் கொண்டிருப்பார்.

12வது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் உயர் கல்விக்கான ஒதுக்கீடு, கடந்த திட்ட காலத்தில் ஒதுக்கப்பட்டதை விடக் குறைந்தது மூன்று மடங்காவது அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது. பல்கலைக் கழக மானியக் குழு பதினோராவது திட்ட காலத்தில் ரூ 46,632 கோடி ஒதுக்கீடு பெற்றது. 12வது திட்ட காலத்தில் ரூ 1,84,784 கோடிகளை ஒதுக்கக் கோரியுள்ளது. பாண்டிச்சேரி மத்திய பல்கலைக் கழகம் பதினோராவது திட்ட காலத்தில் சுமார் ரூ.300 கோடிகளைச் செலவிட்டிருக்கும் நிலையில், 12 வது திட்ட காலத்தில் சுமார் ரூ.1000 கோடிகளை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது. இந்த நிலையில் பாண்டிச்சேரி மத்திய பல்கலைக் கழகத்திற்குப் புதிய துணை வேந்தரைத் தெரிவு செய்யும் பணிகள் தொடங்கியிருக்கின்றன. ஐந்தாண்டுகளில் ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவழிக்கக் கூடிய வாய்ப்பே, பலரையும் துணைவேந்தர் பதவிக்கான வேட்பாளர்களாக்குகின்றது. ஏற்கனவே ருசி கண்டவர்களை அப்பதவியை விட்டு வெளியேற விடாமல் பதவி நீட்டிப்புக் கோரி அலைய வைக்கின்றது.

துணைவேந்தர் தெரிவுக் குழுக்கள், தாம் என்னென்ன கூறுகளை அடிப்படையாகக் கொண்டு தெரிவுகளை மேற்கொண்டோம் என்று வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். மொத்தம் எத்தனை பேர் போட்டியிட்டனர் என்பதையும், அவர்களில் எந்த மூன்று பேரை என்னென்ன காரணங்களுக்காகப் பரிந்துரைத்தோம் என்ற விவரங்களையும், தெரிவுக் குழுவினர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட மூவரும் மிகவும் பொருத்தமானவர்கள் என்பதை, மாணவர்கள் முதல் பேராசிரியர்கள் வரை ஒவ்வொருவரும் உணரும் வகையில் தகவல்கள் யாவும் பகிர்ந்து கொள்ளப் படவேண்டும்.

நூறு வருடங்களுக்கும் மேல் பாரம்பரியம் கொண்ட சென்னைப் பல்கலைக் கழகத்திலிருந்து ஏராளமான பேராசிரியர்கள் துணைவேந்தர்களாகப் பல பல்கலைக் கழகங்களுக்கும் தெரிவு செய்யப்பட்டு, சிறப்பான பணியையும் செய்து முடித்திருக்கின்றனர். என்றாலும், அக்டோபர் இரண்டாவது வாரத்தில் காலியாகும் சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பதவிக்கு, சென்னைப் பல்கலைக் கழகத்திற்குள்ளிருந்தே ஒருவரைத் தேர்ந்து கொள்ளும் வாய்ப்போ உரிமையோ உருவாகவில்லை. கடந்த ஆண்டு வெள்ளி விழாவைக் கொண்டாடிய பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தில் 400க்கும் அதிகமான கல்வியாளர்கள் பணிபுரிந்தாலும், அந்தப் பல்கலைக் கழகத்திலிருந்து பலர் பிற பல்கலைக் கழகங்களுக்குத் துணைவேந்தர்களாக நியமிக்கப்பட்டு வந்தாலும், அங்கிருந்தே ஒருவரைத் துணைவேந்தராகத் தெரிவு செய்து கொள்ளும் உரிமையும் இல்லை, வாய்ப்பும் இல்லை.

துணைவேந்தர்களின் செயல்பாடுகள் யாவும் வெளிப்படையாகும் பொழுது, அவரது பதவியின் மீதான மாயைகள் அற்றுப் போகும். குறுநில மன்னர் என்ற போதையும் விலகிப்போகும். விரிவான விதிகளை வகுத்துக் கொண்டு, ஒவ்வொரு செயலுக்கும் பதில் சொல்லும் கடமையையும் உருவாக்கிக் கொண்டால், பதவி விலகிய பின்பு, விசாரணைக் கமிஷன்களை நியமிக்க வேண்டிய தேவையும் அரசுக்கு ஏற்படாது. ஒவ்வொரு பல்கலைக் கழகமும் தனித்தனிச் சட்டங்களாலும், தனித் தனி ஆட்சிக் குழுக்களாலும் நிர்வகிக்கப் படுவதால், சுயாதீனமான நிருவாகம் நடந்ததோ இல்லையோ, ஆங்காங்கே குறுநில மன்னர்கள் உருவாவதை இதுவரைத் தடுக்க முடியவில்லை. தேசிய அளவில் ஒரு விரிவான பட்டியலைத் தயாரித்து, அதிலிருந்து துணை வேந்தர்களை நியமித்துக் கொள்ளும் யோசனையும் சட்ட வரைவாக முடங்கிக் கிடக்கின்றது.

பனிரெண்டாவது திட்ட காலம், உயர் கல்வியில் பெரிய மாற்றங்களைச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தச் சூழல் நிலவும் பொழுது, தகுதியான துணைவேந்தர்களைத் தெரிவு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. துணைவேந்தர் தெரிவுகளைப் பகிரங்கமாகவும், பட்டவர்த்தனமாகவும் மேற்கொள்ளும் பொழுது, இந்திய உயர் கல்விக்கான சீர்திருத்தத்திற்குப் தொடக்கப் புள்ளியாக‌ அது அமையும்.
_____________________

துணை நின்ற கட்டுரைகளும் இணைய தளங்களும் :

1. கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத் துணை வேந்தர் நியமனம் குறித்த குறிப்பு :
Cambridge :The Vice-Chancellor is nominated by the University Council (the principal executive and policy-making body) from among an international field, and elected by the Regent House - the University's governing body and electoral constituency, numbering around 4,600 academics and senior administrators (http://www.admin.cam.ac.uk/offices/v-c/)

2. இந்தியாவிலும் உலகின் பல பகுதிகளிலும் துணைவேந்தர்கள் நியமனங்கள் குறித்த ஆய்வு அறிக்கை : Research on 144 University appointments :www.aserf.org.in/presentations/vcpaper.pdf

3 இலங்கைப் பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர்கள் நியமிக்கப் படும் முறைகள் குறித்த குறிப்பு : Sri Lankan VC's appointments: The Vice-Chancellor of a University shall, subject to the provisions of paragraph (b), be appointed for a term of three years by the President, upon the recommendation of the Commission, from a panel of three names recommended by the Council of that University. http://www.ugc.ac.lk/en/policy/universities-act/31.html

4. How to choose a vice-chancellor :THE HIGHER EDUCATION AND RESEARCH BILL,2010,PROPOSES A CENTRAL REGISTRY PROCESS FOR THE APPOINTMENT OF VICE-CHANCELLORS. SURBHI BHATIA REPORTS
http://epaper.timesofindia.com/Default/Scripting/ArticleWin.asp?From=Archive&Source=Page&Skin=TOINEW&BaseHref=CAP%2F2010%2F08%2F16&EntityId=Ar03000&AppName=1&ViewMode=HTML

5. UGC seeks 1.8L cr in 12th 5-year Plan http://articles.timesofindia.indiatimes.com/2011-12-18/vadodara/30530947_1_model-colleges-gold-medals-ugc
6. 12th plan vision document of UGC www.ugc.ac.in/ugcpdf/740315_12FYP.pdf

7. MHRD All India Survey on Higher Education : http://mhrd.gov.in/sites/upload_files/mhrd/files/PilotReport_1.pdf

Pin It