தன்னைப் பெரியாரியல்வாதி என்று அறிவித்துக்கொள்ளும் பலர் நாத்திகராக இருப்பதிலும், கடவுள் மறுப்பாளராக இருப்பதிலும் கறாராக இருக்கிறார்கள். ஆனால், தனியுடமையாளராக, ஏகாதிபத்தியத்திய ஆதரவாளராக, தனது தனிப்பட்ட வாழ்வில் சாதியை, தீண்டாமையை கடைப்பிடிப்பவராக இருப்பதில் துளியும் கவலை கொள்வதில்லை. உதாரணமாக, பல பெரியாரியல்வாதிகள் தங்கள‌து திருமண மேடையிலும் திருமண அழைப்பிதழ்களிலும் பெரியார் படத்தையும் பிரபாகரன் படத்தையும் மட்டும் அச்சிடுகிறார்கள். பிரபாகரன் படத்தையும் பெரியாரின் படத்தையும் அச்சிடுவதில் நமக்கொன்றும் கருத்து மாறுபாடில்லை. ஆனால், பிரச்னை வரும் என்று தெரிந்தும் பிரபாகரன் படத்தை அச்சிடுபவர்கள் பிரச்னை வராது என்று தெரிந்தும் அம்பேத்கர் படத்தை அச்சிடாதது ஏன் என்கிற கேள்வி இயல்பாக எழுகிறது.

தனது திருமணம் சடங்கு மறுப்புத் திருமணமாக இருக்க வேண்டும் என அதிக சிரத்தை எடுத்துக்கொள்ளும் அவர்கள் தனது திருமணம் சாதி மறுப்புத் திருமணமாக இருக்க வேண்டும் என சிரத்தை எடுத்துக்கொள்வதில்லை. சடங்கு மறுப்புத் திருமணங்களில் மட்டும்தான் கலந்து கொள்வேன் எனத் துணிந்து அறிவிக்கும் தலைவர்கள் கூட சாதி மறுப்புத் திருமணங்களில் தான் கலந்து கொள்வேன் என அறிவிக்கத் தயங்குகிறார்கள். கறுப்புச்சட்டை போட்டுக்கொண்டு சாமி இல்லை என்று முழங்குபவர்கள் சாதி இல்லை என்று கூறத் தயாராக இல்லை. முடை நாற்றமெடுத்துப்போன சாதியச்சமூகத்தில், 'நாங்கள் யாரையும் சாதியாகப் பார்ப்பதில்லை' என்று கூறுவதற்கும் 'இப்ப எல்லாம் யாருங்க சாதி பாக்குறா?' என்று கேட்பதற்கும் பெரிய வேறுபாடு இல்லை.

                அதுபோலத்தான் மார்க்சியவாதி என்று அறிவித்துக்கொள்ளும் பலர் தனியுடமைச் சமுதாயத்தை எதிர்ப்பதில், பொதுவுடமைச் சமுதாயம் அமைப்பதில், ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதில் கறாராக இருக்கிறார்கள். ஆனால், கடவுளை மறுக்கவோ, மதப்பண்டிகைகளை கொண்டாடாமல் இருக்கவோ, பகுத்தறியவோ, சொந்த வாழ்வில் தீண்டாமையைக் கடைப்பிடிக்காமல் இருக்கவோ வெட்கப்படுவதில்லை. பகுத்தறிய மறுக்கிறார்கள் என்கிற சொல் பலரைக் காயப்படுத்தக்கூடும். ஆனால், எதையும் அறிவியலாகப் பார்க்க வேண்டும் என்று கற்றுக்கொடுக்கிற மார்க்சியத்தின் வெளிச்சத்தில் நடப்பவர்கள் ஆட்டுக்கறியும் மாட்டுக்கறியும் புரோட்டினும் வைட்டமினும் மினரலும் தான் என்பதை ஏற்றுக்கொள்ளாதது பகுத்தறிவான செயலா? என்கிற கேள்வியைக் கேட்க விரும்புகிறோம். ஆட்டுக்கறியும் மாட்டுக்கறியும் வேறு வேறு என்பதை மதம் தானே கற்றுக் கொடுத்தது? தீபாவளி போன்ற அறிவுக்குப் பொருந்தாத மக்களை மூடர்களாக்கும் விழாக்களை கொண்டாடுகிறார்கள். சிவப்புச்சட்டை போட்டுக் கொண்டு பொதுவுடமைச் சமுதாயம் அமைக்க விரும்புபவர்கள் தலித்துகளைத் தோழர்களாக ஏற்றுக்கொள்ளத் தயங்குவது வியப்பான வியப்பைத் தருகிறது.

                அம்பேத்கரியல்வாதிகள் மாத்திரம் எல்லாவற்றிலும் சரியாக இருக்கிறார்கள் என்று வாதிட விரும்பவில்லை. அம்பேத்கரியல்வாதி என்று தன்னை அறிவித்துக்கொள்ளும் பலர் தீண்டாமைக் கொடுமைகளை எதிர்ப்பதில், வன்கொடுமைகளை எதிர்ப்பதில், இழிவை ஒழிப்பதில் காட்டுகிற கறார்த்தனத்தை தீண்டாமைக்கு அடிப்படையான சாதியை, சாதிக்கு அடிப்படையான மதத்தை, மதத்துக்கு அடிப்படையான கடவுளை மறுப்பதிலும், உலகமயமாக்கல், ஏகாதிபத்தியம், தனியுடைமைச் சமுதாய அமைப்பு முறையை எதிர்ப்பதிலும் காட்டுவதில்லை. தலித்துகளை தலித்துகளை வைத்திருப்பதில் உலகமயமாக்கல், ஏகாதிபத்தியம், தனியுடைமைச் சமுதாய அமைப்பு முறை ஆகியவை முதன்மையான பாத்திரத்தை வகிக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ளத் தயாராய் இல்லை. நிலவுடமைக் குவியலை உடைப்பது ஏதோ கம்யூனிஸ்டுகளின் தனி வேலைத்திட்டம் என பல தலித் தலைவர்கள் கருதுகிறார்கள்.

                முதலாளித்துவ சமூக அமைப்பும் கடவுள் உள்ளிட்ட மூடநம்பிக்கைகளும் ஒழிக்கப்படாமல் தீண்டாமையையும் சாதியையும் மட்டும் ஒருவேளை ஒழித்து விடுவதாகவே வைத்துக்கொள்வோம். கடவுளும் முதலாளித்துவ சமூக அமைப்பு முறையும் சாதியை மீண்டும் உற்பத்தி செய்து விடாதா? ஆனால், தன்னை அம்பேத்கரிஸ்ட் என்று அறிவித்துக்கொள்ளும் ஒருவர் பகுத்தறிவாளராக, பொதுவுடைமையாளராக, இருப்பதை கூடுதல் தகுதி என்று கருதுகிறார். ஆனால் அம்பேத்கரிஸ்ட்டாக இருப்பதற்கான நிபந்தனைகள் அவை என்பதை ஏற்றுக்கொள்வதில்லை. நீலச்சட்டை போட்டுக்கொண்டு கடவுள் பக்தராக, முதலாளித்துவச் சமுதாயத்தை பாதுகாப்பவராக இருப்பது உள்ளார்ந்த கவலையாக இருக்கிறது.

                ஆனால், சமூக மாற்றத்தை உளமாற நேசிப்பவர்கள் மூன்று சிந்தனைகளையும் உள்ளடக்கியவராக இருக்க வேண்டிய அவசியம் உருவாகிறது.

                ஒத்த கொள்கை இல்லாதவர்கள் கூட அடுத்த தேர்தலை மையப்படுத்தி கூட்டணி அமைக்கும் வேளையில் அடுத்த தலைமுறைக்காக இப்படியானதொரு கூட்டணி அமையாமல் இருப்பது வேதனையிலும் வேதனை என்பதோடு அத்தகையதொரு கொள்கைக் கூட்டணியை இலட்சியக் கூட்டணியை அமைக்க உறுதியேற்பதே அவரவர்கள் ஏற்றுக்கொண்ட தலைவர்களுக்கு உண்மையாக இருப்பதாகும்.

                கறுப்பும் நீலமும் சிவப்பும் ஓங்கி உயர்ந்த கம்பங்களில், இணைந்து பறப்பதை விட ஒவ்வொருவரின் உள்ளங்களில் ஒன்றெனப் பறக்க வைக்கும் மகத்தான வரலாற்றுக் கடமை நம் முன் நிற்பதாகும்.

- நீலவேந்தன்

(ஆதித்தமிழன் இதழ் செப்டம்பர் மாத தலையங்கம்)

Pin It