தமிழர் ஒரு தெளிவான தேசிய இனம் என்பதும், இந்தியர் என்பது ஒரு பரந்துபட்ட தேச அடையாளம் மட்டும்தான் என்பதும் நாம் அறிந்ததே. விடுதலைக்கு முன்னர் விநாயக் தாமோதர் சவர்கர் போன்ற இந்துத்துவவாதிகள்

“ஒரு தேவன், ஒரு தேசம், ஒரு பாசை;
ஒரு சாதி, ஒரு சீவன், ஓர் ஆசை”
(Ek dev, ek desh, ek bhasha;
ek jaati, ek jeev, ek aasha)

எனும் முழக்கத்தோடு புதிய இந்து/இந்தியத் தேசியம் படைக்க முற்பட்டார்கள். இந்தியரெல்லாம் இந்தி மொழி பேசுகின்ற, இந்து மதத்தை நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ பின்பற்றுகின்ற இந்துஸ்தானியர்கள் எனக் கொண்டு “இந்தி-இந்து-இந்துஸ்தான்” எனும் கோஷத்தை இந்து/இந்தியத் தேசியம் முன்வைத்தது. இந்தத் திட்டம் எங்கேயும் போய் கரை சேரவில்லை என்பதை நாமறிவோம். 
 
pavalareru_320ஆனால் அதே நேரம், இந்தியன் எனும் பரந்துபட்ட அடையாளத்தை இந்தியாவிலுள்ள பெரும்பாலான தேசிய இனங்கள் ஏற்றுக்கொள்கின்றன, அல்லது குறைந்தபட்சம் பெரிதாக எதிர்க்கவில்லை. காஷ்மீர் முஸ்லீம்களும், வடகிழக்கு மாநிலங்களிலுள்ள ஒரு சில தேசிய இனங்களும் எதிர்த்தாலும் அவர்களால் பெரிதாக வெற்றியடைய முடியவில்லை. தமிழர்களும் இந்த தேச அடையாளத்தை முழுமூச்சாக எதிர்க்கவில்லை என்றாலும், இந்திய தேசிய நீரோட்டத்தால் தலைகுப்புற அடித்துச் செல்லப்படுவதை எதிர்த்து நின்றோம், நிற்கிறோம். திராவிட தேசியத்தின் பங்களிப்பு இதில் கணிசமாக உண்டு என்றாலும் 1962-ம் ஆண்டு சீனப் போருக்குப் பிறகு தி.மு.க. தனது பிரிவினைவாத நிலைப்பாட்டைக் கைவிட்டது. கருணாநிதியின் தி.மு.க. “நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சியைத் தருக” என்று தேசிய நீரோட்டத்தின் நடுவே குதித்து, நீந்தித் திளைத்தது. எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க. “அகில இந்திய” எனும் முன்ஒட்டை தன் பெயரோடு இணைத்துக் கொண்டு தனது இந்தியத் தேசிய விசுவாசத்தை நிரூபித்தது. எனினும் வலுவான இந்தி எதிர்ப்புப் போக்கும், சன்னமான இந்தி(ய) ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வுகளும் தமிழ் சமுதாயத்தில் இன்றும் இழையோடிக் கொண்டுதானிருக்கின்றன.
 
மூன்று தெரிவுகள்:
 
இந்தியத் தேசியம் மற்றும் தமிழ்த் தேசியம் ஆகியவற்றின் ஊடாடுதலைப் பொருத்தவரை, தமிழர்களாகிய நம் முன்னால் மூன்று தெரிவுகள் இருக்கின்றன என்று நான் நினைக்கிறேன். ஒன்று, இப்போது இருப்பது போலவே காலத்தை ஓட்டுவது. இந்தித் திணிப்பு, நதிநீர் பங்கீடு, கட்சத் தீவு, மூன்று தமிழர் தூக்கு, மீனவர் படுகொலை, கூடங்குளம்-கல்பாக்கம் அணுஉலைகள், தமிழக வளம் அழிப்பு, தமிழர் நலம் ஒழிப்பு என நாம் முறையிட்டுக் கொண்டே இருப்போம்; தில்லி தான் நினைத்ததை செய்துகொண்டேயிருக்கும். நாம் கையைப் பிசைந்துகொண்டு கருவிக் கொண்டேயிருப்போம்; தில்லி நம்மை சந்தேகக் கண்ணோடு பார்த்துக்கொண்டே சங்கடங்களுக்கு உள்ளாக்கிக் கொண்டேயிருக்கும். தமிழ்க் கடலுக்கு அப்பால் நமது தொப்புள்கொடி உறவுகள் கொல்லப்படும் போது கூட, தில்லி சிவசங்கர மேனன்களையும், நாராயணன்களையும் தான் அனுப்புமே தவிர, நம்மவரைப் பங்கேற்க அனுமதிக்காது. தனது அண்மைக் கட்டுரை ஒன்றில், புகழேந்தி தங்கராஜ் அவர்கள் கேட்கிறார்:

ஒன்றரை லட்சம் தமிழ்ச் சொந்தங்கள் கொல்லப்பட்டதற்கு எங்கள் காந்தி தேசமான இந்தியா காரணமாய் இருந்திருக்கிறதே - என்று இங்கேயிருக்கிற நாம் கோபப்படுகிறோம். தமிழினப் படுகொலையைத் தடுத்துநிறுத்தத் தவறிய தலைவர்களைக் கண்டிக்கிறோம். இந்த உண்மை தெரிந்தும், ஒன்றுமே தெரியாதவர்களைப் போல், புலிகளைத் தோற்கடித்ததற்காகத்தான் நீங்கள் கோபப்படுகிறீர்கள் - என்று ஆட்சியிலிருப்பவர்கள் போக்குக் காட்டினால், ஒன்றரை லட்சம் உயிர்களை மதிக்காத கிராதகர்களின் பிடியில்தான் இந்தியா இன்னும் இருக்கிறதா . என்கிற வேதனையையும் வெறுப்பையும் தவிர தமிழினத்துக்கு வேறெது மிஞ்சும்? எங்களிடையே இப்படியெல்லாம் விரோதத்தை விதைப்பவர்களால், ஒருமைப்பாட்டை எப்படி அறுவடை செய்ய முடியும்?:

நாம் நடத்தப்படும் விதம் பற்றி நமக்குள் மனக்குமுறல் இருந்தாலும், நமது பலத்தை அதிகரிக்கவோ, நமது நிலையை உறுதியாக்கிக் கொள்ளவோ நாம் எதுவும் செய்யவில்லை. நம்மவரை மதிக்கவோ, விரும்பவோ எந்த முயற்சிகளையும் நாம் இன்னும் எடுக்கவில்லை. தமிழர் என்று ஒப்புக்குச் சொல்லிக்கொண்டாலும், உள்ளுக்குள் சாதி, மதம் பார்த்து வேற்றுமையைக் கண்போலக் காத்து வருகிறோம். “இரண்டு டம்ளர்” வைத்துக்கொண்டு “நான் இதில் குடிக்கிறேன், அவன் அதில் குடிக்கட்டும்” என்று தண்ணீர் குடிப்பதில்கூட சாதி பார்க்கிறோம். குறிப்பிட்ட சாதியினர் எங்கள் அருகே இருந்தால், காட்டில் போய் வாழ்ந்தாலும் வாழ்வோமே தவிர, அவர்களோடு வாழமாட்டோம் என்று குழந்தைத்தனமாக நடந்து கொள்கிறோம். நமது தாழ் நிலைக்கு நாம் பொறுப்பேற்காமல், இந்தி பேசுபவனையும், இந்துத்துவாகாரனையும், மலையாளியையும் காட்டியே காலம் தள்ளுகிறோம்.
 
பெரும்பான்மையான நம் அரசியல் தலைவர்கள், சமூக இயக்கத் தலைவர்கள் தமிழ் சமூகத்தின் எந்தப் பிரச்சினையிலும் ஒன்றுபட்டுப் போராட முன்வர மாட்டார்கள். தமிழக முதல்வரும், எதிர்கட்சித் தலைவரும் ஒருவரையொருவர் நேருக்கு நேர் பார்த்து வெறுமனே ஒரு வணக்கம்கூட சொல்லிக்கொள்ள மாட்டார்கள் நம் இன்பத் தமிழ் நாட்டிலே. மக்கள் பிரச்சினைகளைவிட தங்கள் அகங்காரம்தான் அதிமுக்கியம் வாய்ந்தது என்று நடந்து கொள்வார்கள் அவர்கள் எல்லாம். நாமும்கூட திராவிடத் தேசியம், தமிழ்த் தேசியம் என்று அர்த்தமின்றி, அவசியமின்றி சண்டையிட்டுக் கொள்வோம். கேரளாவைப் பாருங்கள்; முக்கியமான பிரச்சினைகளில் எல்லாம் அங்குள்ள கட்சிகள், தலைவர்கள் எல்லோரும் ஒன்றுபட்டு நிற்கிறார்கள். காங்கிரஸ்காரர்களும், கம்யூனிஸ்டுகளும், காவிகளும் ஒரே அணியில் ஒன்று திரள்வார்கள். தமிழகத்திலோ காவிரி நதிநீர்ப் பிரச்சினை என்றால் காவிரிப் படுகை மக்கள் போராடட்டும்; பாலாறுப் பிரச்சினை என்றால், வட தமிழக மக்கள் பார்த்துக் கொள்ளட்டும் என்ற நிலையில்தான் நாம் இருக்கிறோம். நாம் நம்மை இன்னும் தமிழர்களாய் பார்க்கத் துவங்கவில்லை. தமிழகம் தழுவிய நோக்கு, பார்வை நமக்கு இன்னும் வரவில்லை.
 
அதே போல இந்தியத் தேசத்தின் அதிகாரக்குவிப்புக் கட்டமைப்பை எதிர்க்கும் நாம், மாநில அளவில் அதே மையப்படுத்தல் போக்கையும், சிறுபான்மை மறுப்புப்போக்கையுமே கடைபிடிக்கிறோம். “எங்களுக்கு அதிக உரிமை தா” என்று தில்லியிடம் கோரும் நாம், மாநில அரசின் கீழ் இருக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு எக்காரணம் கொண்டும் எந்த உரிமையும் கொடுக்க முன்வரமாட்டோம். எங்களுக்குத் தன்னாட்சி வேண்டும் என்று கோரும்போது, எங்கள் கீழே இருக்கிறவர்களுக்கு எந்த தன்னாட்சியும் கொடுக்க மாட்டோம் என்பதுதான் நமது முரண்பாடான நிலை. வீட்டிலே மனைவிக்கும், குழந்தைகளுக்கும் உரிமைகள் கொடுக்க மாட்டோம். ஊரிலே பெண்களுக்கு, இளைஞர்களுக்கு எந்த அங்கீகாரமோ அல்லது அதிகாரமோ கொடுக்க மாட்டோம். ஆனால் இந்திக்காரனை மட்டும் எப்போதும், எதற்கும் திட்டுவோம். இப்படிப்பட்ட முரண்பாடுகளோடு, பொறுப்பற்றத் தன்மையுடன், மற்றவர்களைப் பழித்து, தன்னை அழித்துக்கொண்டு வாழ்ந்து முடிப்பது நம் முன்னிருக்கும் ஒரு தெரிவு. “அடிக்கிற வழியில் போகவில்லை என்றால், போகிற வழியில் அடிப்போம்” என்கிற இந்த நிலை முற்றிலும் புறந்தள்ளப் படவேண்டியது.
 
இரண்டாவது தெரிவு இந்தியாவோடு ஒட்டோ, உறவோ வேண்டாம், எங்களுக்கு தனிநாடு –தமிழ்நாடு- கொடு எனக்கேட்பது. எடுத்துக்காட்டாக, பாவலரேறு பெருஞ்சித்திரனார் கடைசிவரை இந்த நிலையில் மிக உறுதியாக இருந்தார். “தமிழக விடுதலைதான் நம் முழு மூச்சு, நோக்கம், கொள்கை, முயற்சி என்று தமிழர்கள் ஒவ்வொருவரும் உணர்தல் வேண்டும்” எனும் முழக்கம் அவர் நடத்திய தென்மொழி மாத இதழின் முன் பக்கத்தில் ஓங்கி ஒலித்தது. தன்னுடைய தனிநாடு நிலையை ஆணித்தரமாக அவர் எடுத்துவைத்தார்:

"இந்தியன் இந்து என்ற அடையாளம் இருக்கும் வரை தமிழர்களும் இந்தியனாகவும் இந்துவாகவும் இருக்கவேண்டும். தமிழினமும் தமிழ் மொழியும் இந்தியன் இந்து என்ற வஞ்சகத்திலிருந்தும் மேலாளுமையினின்றும் தமிழன் மீளவே முடியாது. அத்தகைய இந்தியன் இந்து என்ற அடையாளத்திலிருந்தும் பிடிப்புகளிலிருந்தும் தமிழன் மீளாதவரை, தமிழ் மொழி தூய்மையுறாது, தமிழினம் தலைதூக்காது, தமிழர் நாடு அடையவே அடைய முடியாது. ஆகவே நம் தமிழர்கள் இந்து மதத்திலிருந்தும் இந்தியன் என்ற அடையாளத்திலிருந்தும் விலகவேண்டும்."

பாவலரேறு பெருஞ்சித்திரனார் போன்றே தமிழ் மக்களின் அன்பையும் மதிப்பையும் பெற்றிருந்த மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் கூறுகிறார்:

வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்!
வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன்!
தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்!
தனியேனாய் நின்றாலும் என்கொள்கை மாறேன்!
சூழ்ந்தாலும் தமிழ்ச்சுற்றம் சூழ்ந்துரிமை கேட்பேன்;
சூழ்ச்சியினால் பிரித்தென்றன் உடலையிருகூறாய்ப்
போழ்ந்தாலும் சிதைத்தாலும் முடிவந்த முடிவே!
புதைத்தாலும் எரித்தாலும் அணுக்களெல்லா மதுவே!

ஈழப் பிரச்சினையில் இந்தியா கடைபிடிக்கும் இரண்டுங்கெட்டான் நிலைப் பற்றி பேசும் புகழேந்தி தங்கராஜ் தெளிவாக வாதிடுகிறார்:

"விடுதலைப் புலிகளுக்குத் தோல்வி - தமிழ் ஈழத்தால் இந்தியாவுக்கு ஆபத்து என்றெல்லாம் புருடா விடுவதன் மூலம் சிங்கள மிருகங்களைக் காப்பாற்ற தொடர்ந்து முயல்வதாக இருந்தால், வெளிப்படையாக அதை அறிவித்துவிடுங்கள். உங்களுடனான உறவை ஒட்டுமொத்தமாகத் துண்டிப்பதென்று நாங்களும் முடிவெடுத்து விடுகிறோம். சட்டத்தையும் நியாயத்தையும் வளைப்பதென்று நீங்கள் முடிவெடுக்கலாம்... அந்த இரண்டையும் நிமிர்த்த வேண்டுமென்று நாங்கள் முடிவெடுக்கக் கூடாதா? தடை.. எச்சரிக்கை... என்றெல்லாம் சீன் போடாமல், எது சௌகரியம் என்பதை உடனடியாகத் தீர்மானியுங்கள்."

தனிப்பட்ட அறிஞர்கள், செயல்வீரர்கள் போல, பல தமிழ் அமைப்புக்களும், இயக்கங்களும் தனிநாடு கோரிக்கையை முன்வைக்கின்றன. முன்னாள் நக்சலைட் அமைப்பினரான புலவர் கலியபெருமாள், தமிழரசன், அன்பழகன் (எ) சுந்தரம் போன்றோர் 1980களில் ‘தமிழ் நாடு விடுதலைப் படை’ எனும் ஒரு வன்முறை இயக்கத்தைக் கட்டமைத்து தனிநாடு பெற முயன்றனர். பின்னர் 2002-ம் ஆண்டு அந்த அமைப்பு தடை செய்யப்பட்டபோது, பலர் ‘தமிழர் விடுதலை இயக்கம்’ என்ற அமைப்பின்கீழ் பணியாற்றினர். வன்முறையிலோ, பயங்கரவாதத்திலோ நம்பிக்கையற்ற பல சனநாயக அமைப்புகளும் கூட தனிநாடு கோரிக்கையை முன்வைக்கின்றன. “இறையாண்மையுள்ள தமிழ்த் தேசக் குடியரசு” அமைப்பதே தமது இலக்கு என தமிழ்த் தேச பொதுவுடைமைக் கட்சி வலியுறுத்துகிறது. தமிழர் களம் அமைப்பு, "தமிழ் இனத்தின் விடுதலை என்பதை நோக்கும்போது பண்பாட்டுத் தளங்கள், இலக்கியம், மொழி, உள்ளம் உட்பட்ட பொருளியல் சமூகவியல் அரசியல் விடுதலையாகத்தான் நோக்க வேண்டும்” என வாதிடுகிறது.
 
ஆனால் விடுதலைக்குத் தன்னை அணியமாக்கிக் கொள்ளாத ஓர் இனத்தை சுபிட்சத்துக்கு அழைத்துச் செல்வது எப்படி? ஒரு கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஒரு தேசிய இனம் தான் விரும்பினால் பிரிந்து போகவும், தனது அரசியல் சுயநிர்ணய உரிமையை தக்கவைத்துக் கொள்ளவும் முழு உரிமை கொண்டிருக்கிறது, கொண்டிருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், அந்த அமைப்புக்குப் பெயர் கூட்டமைப்பு அல்ல, கொத்தடிமைத்தனம். இருபத்தொன்றாம் நூற்றாண்டில் இம்மாதிரியான அடிமைத்தனத்துக்கு ஆட்படமுடியாது. கூட்டுக் குடும்பத்தில், கூடிவாழ்வதில் பல சிரமங்கள், தடைகள், இக்கட்டுகள் இருக்கின்றன என்பது உண்மை. இந்தக் கூட்டமைப்பில் பிரச்சினை என்றால், எப்படி மற்றவருக்கு துன்பம் தராமல், உண்மையில் சொல்லப்போனால், இன்பம் தந்து, தனது நலன்களையும் காத்துக் கொள்வது என்று சிந்திக்க வேண்டும், செயல்பட வேண்டும். அதற்கான கட்டமைப்புகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். எனவே தனிநாடு எனும் இரண்டாவது நிலை ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதுதான்.
 
இந்தியா என்பது வரலாற்றின் துவக்கம் முதலே இருந்து வருவது போலவும், அதைக் கேள்விக்குள்ளாக்குவது பெரும்பாவம் என்பது போலவும் சிந்திப்பது, பேசுவது வேடிக்கையானது. ஆனால் “தமிழ்த் தேசியம்--இந்திய தேசியம்” உறவு என்பது மிகவும் நுட்பமான, சிக்கலான ஒரு பிரச்சினை. இந்தப் பிரச்சினையின் ஆழ, அகலங்களைப் புரிந்து கொள்ளாமல் ‘எடுத்தேன், கவிழ்த்தேன்’ எனக் கருத்துச் சொல்வதும், செயல்படுவதும் அபத்தமானது, ஆபத்தானது. ஒன்றுபட்ட இலங்கை வேண்டாமென்று சொல்வதற்கு வலுவான காரணங்கள் இருக்கின்றன. நாம் ஈழத் தமிழர்கள் போலக் கொடுமைப் படுத்தப்படவில்லை, கொல்லப்படவில்லை என்பதை ஒத்துக்கொண்டாக வேண்டும். ஆனாலும் நாம் பிரித்தாளப்படுகிறோம், வேறுபடுத்திப் பார்க்கப்படுகிறோம் என்பதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை. ஈழத் தமிழர் பிரச்சினையும் இப்படித்தான் ஆரம்பித்தது என்பதும் நமக்குத் தெரியும்.
 
தனிமரம் தோப்பாகாது; தனிநபர் தீவாக இரார். தனிநாடு அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வாகாது என்பதை அறிவோம். தனிநாடு வாங்கிவிட்டாலும், தமிழகத்தை அப்படியே வெட்டி எடுத்துக் கொண்டுபோய் ஆஸ்திரேலியா அருகே வைத்துவிட முடியாது. நமதருகே உள்ள மக்களோடு இணைந்து பணியாற்றியே தீர வேண்டும்.

யதார்த்தம் பெரிதாக மாறிவிடப் போவதில்லை. இந்தியாவில் வெள்ளையன் போய் கொள்ளையன் வந்தது போல, தனிநாடானத் தமிழ்நாட்டில் இந்திக்காரன் போய் ஓர் ஈட்டிக்காரன் வந்தால் என்ன செய்வது? இந்தியாவிடமிருந்து மதத்தின் பெயரால் பிரிந்த பாகிஸ்தானும், அவர்களிடமிருந்து மொழியின் பெயரால் பிரிந்த வங்காளதேசமும் இன்னும் தத்தளித்துக் கொண்டுதானிருக்கின்றன.
 
இந்த நிலையில் நமது நிலை என்னவாக இருக்க முடியும்? ஏகாதிபத்தியம், அடக்குமுறை எந்த உருவத்தில் வந்தாலும் அதை எதிர்ப்பது, தட்டிக்கேட்பது எனும் நமது இலட்சியக் கொள்கையை உறுதியாக்கிக் கொள்வோம். ஒரு தொடர் கருத்துப் பரிமாற்றத்தில் சிரத்தையுடன் பங்கேற்போம். ஒரு தாய்-மகன் (தாய்நாடு-“நீரதன் புதல்வர்”) சொந்தம் போல பாசம்/கடப்பாடு என்ற அடிப்படையில் அல்லாமல், மைய-மாநில உறவை கணவன்-மனைவி உறவாக கடமை/உரிமை அடிப்படையில் பார்ப்பதுதான் பொருத்தமாக இருக்கும். மணமுறிவு எனும் ஆபத்து இருந்தாலும், அல்லது இருப்பதால், ஒருவரையொருவர் அன்புடனும், மரியாதையுடனும் நடத்துகிறோம்.
 
இந்தக் குழப்பமான, சிக்கலான நிலையில் உடனடியாக தனிநாடு கோருவது என்பது சற்று விவாதிக்கப்பட வேண்டிய விடயம். “எண்ணித் துணிக கருமம்” என்பதுதான் இப்போது நமது நிலையாக இருக்க வேண்டும், இருக்க முடியும் என்பது எனது எண்ணம். இந்தப் பிரச்சினை குறித்து உகந்த முடிவெடுக்க, வள்ளுவர் அற்புதமாக உதவுகிறார்:

அழிவதூம் ஆவதூம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்.
 
தனித் தமிழ்நாடு கோரிக்கை நிறைவேறும்போது அழிவது எவ்வளவு, ஆவது எவ்வளவு என்று கணக்கிடுவது போல “வழி பயக்கும் ஊதியம்” பற்றி நாம் ஆழமாக சிந்தித்தாக வேண்டும். காஷ்மீரத்து மக்கள் படும் துன்பங்களும், காலிஸ்தானிகள் மற்றும் அவர்கள் ஆதரவாளர்கள் பட்ட இன்னல்களும் நினைவுக்கு வருகின்றன. இந்தியத் தேசியம் அவ்வளவு எளிதில் நம்மைப் பிரிந்து போகவிடாது. அப்படியே நாம் பிரிந்து போக எத்தனித்தால் நம்மை அடக்கி ஒடுக்கவும், ஒழிக்கவும் தயங்காது. இந்த அடக்குமுறைக்கு அஞ்சி, வன்முறைக்கு பயந்து ஒதுங்கி வாழ்வோம் என்பதல்ல எனது வாதம். தனிநாடு அடையும் முயற்சி ஏராளமான மக்களைக் கொன்று குவிக்கும்போது, எண்ணிறந்த இன்னல்களை நம் மக்களுக்கு இழைக்கும்போது, சுபிட்சமான வாழ்வு எனும் முடிவும், கொன்றொழிக்கப்படும் வழிமுறையும் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றனவே என்பதுதான் எனது ஆதங்கம். ஈழத்தில் நிலவுவது போன்ற ஓர் அச்சுறுத்தல், அத்துமீறல், அடக்குமுறை இங்கே நடக்காதபோது, மேற்குறிப்பிட்டத் துன்பங்களை, தியாகங்களை, சமரை, சாவை, சங்கடங்களை எப்படி நியாயப்படுத்த முடியும்? எனவே மூன்றாவது தெரிவாக, எங்கள் வாழ்வை நாங்களே தீர்மானிக்கிறோம்; அதற்கு அனுமதிக்கப்படவில்லை என்றால், நாங்கள் விடை பெறுகிறோம் என உறுதி பூணலாம். இன்றையச் சூழலில் “தன்னாட்சி அல்லது தனியாட்சி” என்ற முழக்கத்தை வைத்து செயல்படலாம்.
 
இன்றைய நிலைமை:
 
தெற்காசியாவில் அடிப்படை மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்பதும், தற்போது நிலவுவது இடைக்கால, தற்காலிக ஏற்பாடுதான் என்பதும் வெள்ளிடைமலை. எடுத்துக்காட்டாக, வங்காளிகள், பஞ்சாபிகள், காஷ்மீரிகள், தமிழர்கள் வெவ்வேறு நாட்டு குடிமக்களாகப் பிரிந்திருக்கிறோம். எந்தத் தேசிய இனமும் அங்கீகரிக்கப் படவுமில்லை, அவர்கள் தங்கள் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயித்துக் கொள்ளும் சுயநிர்ணய உரிமை வழங்கப்படவுமில்லை. தெற்காசிய மக்களின் நிலைத்து நிற்றல் (survival), சுகவாழ்வு (wellbeing), அடையாளம் (identity), சுதந்திரம் (freedom) அனைத்தையும் செயற்கையான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம் போன்ற கற்பனை தேசங்கள் கவனித்து வருகின்றன. ஒருவித நிலையற்றத் தன்மைதான் நிலவுகிறது.
 
இதற்கு மாற்று என்னவாக இருக்கும் என்பது பற்றி நாம் சிந்தித்து ஆகவேண்டும். சரியாக இருபது ஆண்டுகளுக்கு முன்னால், ஜப்பான் நாட்டின் கியோட்டோ நகரில் நடந்த ஒரு சர்வதேச மாநாட்டில் ஓர் இளைஞனுக்கே உரிய இலட்சிய தாகத்துடன் நான் முன்வைத்த கருத்து என் நினைவுக்கு வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, நேபாளம் போன்ற நாடுகளை தேசிய இனங்கள் அடிப்படையில் பிரிப்பது; பின்னர் அவற்றை ஒரு கூட்டமைப்பாக (federation) இணைப்பது என்பதுதான் அது. ஒவ்வொரு தேசிய இனமும் தன் நிலைத்து நிற்றல் (survival), சுகவாழ்வு (wellbeing), அடையாளம் (identity), சுதந்திரம் (freedom) அனைத்தையும் கவனித்துக் கொள்ளட்டும். எல்லோருமாகச் சேர்ந்து தெற்காசியப் பேரவை (confederation) ஒன்றை நிறுவி ஒட்டுமொத்த பாதுகாப்பை (defense), நிதி நிர்வாகத்தை (finance), நல்வாழ்வை மேலாண்மை செய்து கொள்ளலாம். இப்படிச் செய்து கொள்ளும்போது காஷ்மீரம், காலிஸ்தான், ஈழம் எனப் பல பிரச்சினைகள் தீர்க்கப்படும். குறைப் பிரசவங்களான இன்றையத் தேசங்கள் மாற்றியமைக்கப்பட்டு, நிறைகள் மிக்க நிம்மதி தருகின்ற குட்டிக் குடியரசுகள் பிறக்கும். ஆயுதப் போட்டி, படைபலப் போட்டி, இராணுவச் செலவு குறைக்கப்பட்டு, மக்களின் வளர்ச்சி, தன்னிறைவு முன்னிறுத்தப்படும். ஏழ்மையும், வறுமையும் மாறி ஏற்றமும், பெருமையும் பிறக்கும்.
 
அந்த உயரிய நிலை வரும் வரை என்ன செய்வது? இந்தியத் தேசியம் என்று எதுவும் இல்லை, இந்தியத் தேசத்தைப் பற்றித்தான் நாம் பேசிக்கொண்டிருக்கிறோம் என்பது தெளிவு. தமிழ்த் தேசியம், இந்தியத் தேசம் இரண்டும் மூச்சும், பேச்சும் போன்றவை எனக் கொள்வோம். மூச்சின்றி பேச்சில்லை; ஆனால் பேச்சில்லாமல் மூச்சு விட முடியும். மூச்சை நிறுத்திக் கொண்டு உயிர் வாழ முடியாது; ஆனால் பேச்சை நிறுத்திக் கொண்டு நிம்மதியாக இருக்கலாம். மூச்சு உயிரின் அங்கம், அடிப்படையானது; ஆனால் பேச்சு உயிர்வாழ்வின் பல அம்சங்களுள் ஒன்று. ஆழமாக மூச்சு விட்டால், அர்த்தமுள்ள பேச்சு வரும்; மேலோட்டமாக மூச்சு விட்டால், நிலை தடுமாறி வீழ்ந்து விடுவோம்.
 
தமிழர்களாகிய நம்மிடையே சில விடயங்களை நாம் தீர்மானிக்க வேண்டியிருக்கிறது. நம்மிடையே நிலவும் ஒற்றுமையின்மை; சாதி, மத வேறுபாடுகள்; இயற்கை வளங்களைப் பேணாமை; நாம் எங்கேப் போகிறோம், நமக்கு என்ன வேண்டும் என்பவற்றை அறியாமை; அவற்றை அறிய முயற்சி செய்யாமை --- போன்றவை நமது உடனடி கவனத்தைப் பெறவேண்டும். நமக்குள்ளும், நம்மோடிருப்பவரோடும் கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபடுவோம். தெளிவாகச் சொல்வோம். இந்தியத் தேசம் எனும் கூட்டுக்குடும்ப வீட்டின் எங்கள் பகுதியை நாங்கள் சுத்தம் செய்து கொண்டிருக்கிறோம். நாங்கள் தொடர்ந்து உங்களோடிருந்து வாழ்கிறோமா, அல்லது இடையே குறுக்குச் சுவர் கட்டுகிறோமா என்பது உங்கள் கைகளில் இருக்கிறது. விட்டுக்கொடுத்து வாழ்வதா அல்லது கட்டுப்படுத்தி உறவை அழிப்பதா என்பதை முடிவு செய்யவேண்டியது நீங்கள். கேள்வி நாங்கள் பிரிவினை வேண்டுகிறோமா என்பதல்ல; நீங்கள் எங்களை நிம்மதியாக, கௌரவமாக, உரிமைகளுடன், மாண்புகளுடன் இங்கே வாழ அனுமதிக்கிறீர்களா என்பதுதான்.
 
உதவிய கட்டுரைகள்:

[1] புகழேந்தி தங்கராஜ், “தடையை நீட்டிப்பதாக அறிவிக்கும் பாரதமே.....எங்கள் இனத்தின் அடையாளம் விடுதலைப் புலிகள்தான்!” தமிழக அரசியல். யூலை 23, 2012.
[2] தமிழ்ச்சிட்டு, குரல்-8, இசை-12.
[3] பெ. மணியரசன், “இந்தியத் தேசியம், திராவிடத் தேசியம் இரண்டையும் மறுக்கிறது தமிழ்த் தேசியம்,” கீற்று.காம், ஏப்ரல் 24, 2012.
[4] S. P. Udayakumar, "Disintegrate and Integrate: Educating for an Interdependent World through Three Stages." Presented at the 15th IPRA General Conference, Kyoto, Japan, July 27-31, 1992.

- சுப.உதயகுமார்

Pin It