பூமிப் பந்தின் பல்வேறு பகுதிகளின் மூலை, முடுக்குகளிலிருந்தும் தங்கள் நாட்டின் தேசியக் கொடிகளுடன் மிடுக்காய் நடைபோட்டு வந்தனர் பல நாட்டு வீரர், வீராங்கனைகள். இவர்களைக் காணவும், வீரர்களை ஊக்கப்படுத்திடவும் ஏராளமான பொதுமக்களும் பல்லாயிரக்கணக்கில் கூடியுள்ளனர். இன்னும் சொல்லப்போனால் ஒரு “குட்டி உலகமே” தற்காலிகமாக லண்டன் மாநகரில் மையம் கொண்டுள்ளது. ஆம் உலக நாடுகளை ஒன்றிணைக்கும் இந்த ஒலிம்பிக் திருவிழா லண்டன மாநகரில் கடந்த 27ம் தேதி கோலாகலமாய்த் துவங்கியது. தொடர்ந்து ஆகஸ்ட் 12ம் தேதி வரையில் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. நேரடியாகவும், தொலைக்காட்சிகள் வாயிலாக கோடிக்கணக்கானோர் கண்டு ரசிக்கவுள்ளனர்.

204 நாடுகளைச் சேர்ந்த 10,500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர். 26 வகையான விளையாட்டுகளில் தங்கஒ பதக்கம் மட்டும் 302 வழங்கப்படவுள்ளன. வழக்கம்போல சீனா மற்றும் அமெரிக்க நாடுகளின் வீரர்கள் யார் அதிகளவிலான பதக்கங்களைப் பிடிப்பது? யார் முதலிடம் பெறுவது? என்ற போட்டியில் களத்தில் விளையாடி வருகின்றனர். உலகத்திலுள்ள ஊடகங்களும், குறிப்பாக இந்திய, தமிழ்நாட்டு ஊடகங்களும் அவரவர் பங்கிற்கு ஒலிம்பிக் குறித்த செய்திகளுக்கும், விவாதங்களுக்கும் என தனியாக நேரம் ஒதுக்கியும், அச்சு ஊடகங்கள் தனியாக பக்கங்களை ஒதுக்கியும் தங்களது ஜனநாயகக் கடமையை திறம்பட ஆற்றி வருகின்றன.

அதேபோல் தேசப் பற்றுக்கு பெயர்போன நம் நாட்டு தேச பக்தர்கள் தொலைக்காட்சியையும், பத்திரிகைகளையும் ஆர்வமுடன் இடைவிடாது கண்காணித்தே வருகின்ற‌னர். பதக்கப் பட்டியலில் முதல் பதக்கத்தையும், முதல் தங்கத்தையும் சீனா கைப்பற்ற எங்கே நாங்கள் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல என அமெரிக்கர்களும் தொடர்ந்து பதக்க வேட்டையாடி வருகின்றனர். வேண்டுமென்றே விட்டுக்கொடுத்ததாக 8 வீராங்கனைகள் தகுதி நீக்கமும் செய்யப்பட்டுள்ளனர்.

6வது நாள் நிலவரப்படி 42 நாடுகள் பதக்கப் பட்டியலில் தங்களை இணைத்துக் கொண்டன. இதில் பிரிந்து போன கொரிய நாடுகள் 9 தங்கப் பதக்கங்களையும், குட்டி நாடுகளான கஜகஸ்தான், ருமேனியா, ஹங்கேரி போன்ற நாடுகளுடன் யாருக்கும் அதிகமாய் தெரிந்திராத உக்ரைன், ஜார்ஜியா, லிதுவேனியா, சுலோவேனியா போன்ற நாடுகளும் கூட தங்கத்தை தட்டிச் சென்றுள்ளன. அதேநேரம் 120 கோடி மக்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்திய தேசத்திலிருந்து பலர் களத்தில் குதித்திருந்தாலும், 'தங்கப்பதக்கம் இந்தா வந்துவிடும்? அந்தா வந்துவிடும்?' என்ற‌ நிலைதான் உள்ள‌து.

sivanthan_400இதையெல்லாம் கூர்ந்து கவனித்துவரும் உலகமும், இந்திய மக்களும், குறிப்பாக தாய் தமிழ்நாட்டு மக்களும் ஒன்றைத் தெரிந்து கொள்ளவேண்டும். ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றுவரும் லண்டனைச் சுற்றி அல்ல, லண்டன் ஒலிம்பிக் பூங்கா அருகிலேயே இன்னும் ஒரு சம்பவம்... ஆம் ஒலிம்பிக் போட்டிகள் துவங்குவதற்கு முன்னாலேயே ஜூலை 22ம் தேதி முதல் ஒலிம்பிக் போட்டிகள் முடியும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை ஒற்றை இளைஞன் ஆம் 'சிவந்தன்' என்ற லண்டன் வாழ் ஈழத்து இளைஞன் 5 கோரிக்கைகளை முன்வைத்து தனியாய் காந்தி கண்ட ஜனநாயக வழியில் உலகிலுள்ள அனைவரின் கவனத்தை ஈர்த்திடும் வகையில் உண்ணாநிலைப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளார். 

1) தொடர்ந்து தமிழ் இன அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் இலங்கையைச் சேர்ந்த வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதைத் தடை செய்யவேண்டும்.

2) ஐ.நா ஆணைக் குழுவினரால் பரிந்துரைக்கப்பட்டதற்கு ஏதுவாக இலங்கையின் சட்டமீறலை விசாரிக்க அனைத்துலகின் தன்னிச்சையான விசாரணை ஒன்றினை ஆரம்பிக்க வேண்டும்.

3) தமிழீழப் பகுதிகளில் நடைபெற்றுவரும் சிங்களர்களின் நில ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

4) சிங்களச் சிறைகளில் விசாரணைகள் ஏதுமின்றி அடைத்து வைக்கப்பட்டுள்ள போர்க் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்.

5) வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் அடையும் தமிழர்களை திருப்பி அனுப்புவதை உலக நாடுகள் கைவிட வேண்டும் என்ற இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தான் சிவந்தன் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அமைதியான வழியில் உலகின் கவனத்தை ஈர்த்திடும் வகையில் அமைந்துள்ள இந்த உண்ணாநிலைப் போராட்டத்தை லண்டன் மற்றும் பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்கள் மட்டுமல்லாது ஒலிம்பிக்கை காணவந்துள்ள பல நாடுகளைச் சார்ந்த பொதுமக்களும் சிவந்தனின் லட்சியம் நிறைவேற தங்களது மனமார்ந்த ஆதரவைத் தெரிவித்த வண்ணம் உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன‌.

அதேநேரம் ஒலிம்பிக் போட்டிகளுக்கு என சிறப்பு செய்தியாளர்களாய் லண்டன் மாநகத்திற்குச் சென்றுள்ள இங்குள்ள ஊடகப் பிரதிநிதிகளின் கண்களுக்கு மட்டும் சிவந்தனின் இந்த உண்ணாநிலைப் போராட்டமும், அவரை வாழ்த்த அலை, அலையாய் சென்று வரும் பொதுமக்களின் கூட்டமும் கண்களுக்குப் புலப்படாமல் உள்ளன. முள்ளிவாய்க்காலின் சோகத்தை முகமூடி போட்டு மறைக்க முடிந்த இவர்களால் இன்னும் எத்தனை நாட்களுக்குத் தான் உண்மைகளை மறைக்க முடியும்? இதோ சிவந்தனின் உண்ணாநிலைப் போராட்டம் காட்டுத் தீயாய் உலக மக்களிடையே பற்றத் துவங்கிவிட்டது;  பெட்டிக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஈழத் தமிழர்களின் துயரம் கொழுந்துவிட்டு எரியத் துவங்கிவிட்டது. ஓயாத அலைகளாக பொங்கி எழுத் துவங்கிவிட்டது. உலகமே ஒன்றிணைந்து சிங்களப் பேரினவாத அரசை கைகட்டவைத்து குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் நிலை நிச்சயம் ஒரு நாள் வரும், சிவந்தனின் போராட்டத்திற்கு வெற்றியும் நிச்சயம் கிடைக்கும். வெல்லட்டும் இந்த அறவழிப் போராட்டம்!

- மு.ஆனந்தகுமார்

Pin It