(I)

கூடங்குளம் - இப்பெயர் தமிழக வரலாற்றில் திட்டவட்டமாக தன்னை பதிவு செய்துகொண்ட பெயராகும்.

 அணு உலை என்ற அடிப்படையில் மக்கள் விரோத இயற்கை விரோத அழிவுத்தன்மை என்ற எதிர்மறையான பதிவை கொண்டிருந்தபோதிலும் இடிந்தகரை மக்களின் உறுதி மிக்க போராட்டம் என்ற ஆக்கபூர்வமான முன்னுதாரணத்தை கொண்டிருக்கிறது.

 இச்சிறப்பு தன்மைக்கு பல காரணிகள் இருந்தபோதிலும் மீனவர்களின் இனக்குழுத்தன்மையிலான சமூக கட்டுக்கோப்பும் தொழில் சார்ந்த (உயிருக்கு உத்திரவாதமற்ற) பாரம்பரியம் மிக்க போர்குணம் கொண்ட உறுதிப்பாடும் அடிப்படையான தீர்மானகரமான காரணிகளாகும்.

 மேலும், அப்பகுதி மக்கள் மற்றும் போராட்டக் குழுவினரால் துவக்கத்தில் செய்யப்பட்ட போராட்ட தயாரிப்புகளுக்கு கடைபிடித்த உத்திகளும்கூட மிக முக்கிய காரணிகளாகும். முதல் சுற்றில் இந்திய ஒன்றிய அரசுக்கும் ஜெயலலிதாவிற்குமான முரண்பாடு ஓரளவு சாதகமாக இருந்தது.

 எப்படி இருந்தபோதிலும் பகுதி மக்களின் அகத்தன்மையின் பலத்திலேயே இப்போராட்டம் 300 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. புறநிலையை பொருத்தவரை சாதகம் இல்லை என்றே கூறலாம்.

இதை கீழ்காணும் பகுப்பில் பார்ப்போம்:

1. கூடங்குளம் அணுஉலையின் உண்மையான பயனாளிகள்.
2. கூடங்குளம் அணுஉலையும் தமிழக மக்களும்.
3. கூடங்குளமும் அரசியல் சக்திகளும்.

மேற்கண்ட கூறுகள் ஒவ்வொன்றையும் பரிசீலிப்போம்.

1. கூடங்குளம் அணுஉலையின் உண்மையான பயனாளிகள்

 கடந்த சில பத்தாண்டுகளில் ஏகாதிபத்திய நாடுகளில் (வளர்ந்த நாடுகள்) மின்சக்தியில் அணுமின்சக்தியே பெரும் பங்கு வகித்தது. ஆனால், ஏற்பட்ட அணுமின் நிலைய விபத்துகளும் அதை தொடர்ந்த மக்களின் போராட்டங்களும் எதிர்ப்பும் இதன் வளர்ச்சியை தடைபடுத்தியது.

அமெரிக்கா சில பத்தாண்டுகளுக்கு முன்பாகவே புதிய அணுமின் நிலையங்கள் நிறுவுவதை நிறுத்திவிட்டது. சமீபத்தில் ஐப்பானில் நடந்த புகுஷிமா சுனாமி விபத்திற்கு பின் ஐரோப்பாவில் முக்கிய நாடுகள் வரும் இருபது ஆண்டுகளில் படிப்படியாக அணுமின் சக்தியை பயன்படுத்துவதை முற்றிலும் கைவிடுவதாக கூறியுள்ளன.

 இப்படி ஒருபக்கம் தோல்வி அடைந்த, கைவிடப்பட்ட தொழில் நுட்பமாக அணுமின்சக்தி இருக்க, மறுபக்கம் இதன் உலக முதலாளிகள் கைவிடத் தயாரில்லை. அவர்கள் இவற்றை வளரும் நாடுகள் (இந்தியா போன்ற) மற்றும் பின்தங்கிய நாடுகளில் தலையில்தான் கட்ட வேண்டி உள்ளது.
 
 எனவேதான் இம்முதலாளிகள் கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தால் போடப்பட்ட அமெரிக்காவுடனான 123 அணுசக்தி ஒப்பந்தம் காரணமாக ஆட்சி கவிழும் சமயத்தில் இவர்களின் பாசமிகு அடிமையான மன்மோகன் கும்பலின் அரசாங்கத்தை காப்பாற்றுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி அரசை காப்பாற்றினர்.

 இதன் பலனாக இன்று பெரும் எண்ணிக்கையிலான புதிய அணு உலைகளை திறக்க ஒப்பந்தங்களை போட்டு காத்திருக்கின்றனர். கூடங்குளம் அணுஉலை திறக்காமல் போனால், புதிய ஒப்பந்தங்கள் செயற்படுத்த முடியாமல் போகும். இது மடடுமல்லாமல் ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் அணுஉலைகளையும் மூட வேண்டிய நிலையும் உள்ளது. இதனால்தான் மன்மோகன் அரசு கூடங்குளம் அணுஉலையை திறக்க கடுமையாக முயற்சிக்கிறது.

 உலக அணுஉலை முதலாளிகளே உண்மையான பயனாளிகள் ஆவர். மக்கள் அல்ல; அவர்கள் தங்களின் இலாப வேட்டைக்காக இயற்கை விரோத, மக்கள் விரோத தொழில்களை நடத்துவதில் துளியும் தயக்கம் இல்லாதவர்கள். இவர்களின் உண்மையான விசுவாசியாகிய மன்மோகன் கும்பல் கூடங்குளம் அணுஉலையை நிறுவுவதில் எவ்வித தயக்கமும் காட்டாது என்பதே கசப்பான உண்மையாகும்.

2. கூடங்குளமும் தமிழக மக்களும்

 தமிழக மக்களிடம் கூடங்குள அணுஉலைக்கு ஆதரவாக கருத்துகள் பலமாகவும் நுட்பமாகவும் கட்டமைக்கப்பட்டுள்ளன. இதை அரசு, ஊடகங்கள், நவீனத்தை கண்மூடித்தனமாக ஆதரிக்கும் முதலாளிய மற்றும் ஒருசில மார்க்சிய அறிவு ஜீவிகளுமே கட்டமைத்துள்ளனர்.

அறிவு ஜீவிகளைப் பொருத்தவரை அறிவியல் என்பது வளர்ச்சிக்கானது; அது தனது தவறுகளையும் வளர்ச்சி போக்கிலேயே தீர்த்துக்கொள்ளும் என்றும் கூறுகிறார்கள். பெரும்பான்மை மாணவர்களும் இதையே ஏற்றுக்கொள்கிறார்கள். பொதுவாக இவர்களின் வாதம் சரியாக இருந்தபோதிலும் அறிவியல் கண்டு பிடிப்பின் பயன்பாட்டில் அது பேரழிவை உருவாக்கும் சமயத்தில் நடைமுறைப் பயன்பாட்டில் இருந்து உடனடியாக நிறுத்தப்பட்டுவிடும். பின்னர், மீண்டும் அறிவியல் ஆராய்ச்சி மூலமாக ஆபத்துகள் நீக்கப்பட்ட பிறகே மீண்டும் பயன்பாட்டிற்கு வரவேண்டும். இதுவே சரியான அறிவியல் பார்வையாகும். இந்நடைமுறையினால்தால் வரலாற்றில் பயன்பாட்டில் தீமைகளை விளைவித்த எத்தனையோ அறிவியல் கண்டுபிடிப்புகள் காணாமல் போய் உள்ளன.

  மேலும் அறிவியலின் நன்மை, தீமைகள் எந்த சமூகசக்திகளின் சொந்தமாக அறிவியலின் கண்டுபிடிப்புகள் இருக்கின்றன என்பதிலிருந்தே தீர்மானிக்க முடியும்.

  இன்று அறிவியல் என்பது ஏகபோக முதலாளிகளின் கைகளிலே உள்ளது. இவர்களுக்கு இலாபம் ஒன்றே நோக்கமாகும். மனிதகுல நலன், இயற்கை பாதுகாப்பு என்பது பற்றி எல்லாம் அக்கறை கிடையாது. முதலாளிகள் தங்களின் இலாபத்திற்காக இயற்கையை எதுவும் செய்யத் தயாராக இருப்பார்கள் என்று எங்கெல்ஸ் முதலாளியம் உருவாகி வளர்ந்த காலகட்டத்திலேயே எச்சரித்தார்.
 
 எனவே அறிவியலின் கண்டு பிடிப்புகள் சமூகத்திற்கு தீமை (அ) அழிவை ஏற்படுத்தும் என்றால் கட்டாயம் பயன்பாடு நிறுத்தப்படவேண்டும். ஒருவேளை அதன் அழிவுத் தன்மைகளை நீக்கக் கூடிய அறிவியல் நுட்பம் உருவாக்கப்பட்டு பல பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பிறகே நடைமுறையில் பயன்படுத்துவதைப் பற்றி எதிர்காலமே தீர்மானிக்கும்.

  மேலும், வர்க்க சமூகத்தில் யாரிடம் அதிகாரம் உள்ளதோ அவர்களின் நோக்கத்திலிருந்தே சமூகத்தில் அறிவியல் பயன்பாடு இருக்கும்

  மேற்கண்ட இரண்டு அம்சங்களையும் கூடங்குளம் அணுஉலையை திறக்க வேண்டும் என்று கூறும் அறிவுஜீவ¦கள் உணரவேண்டும். நவீனத்தை கண்மூடித்தனமாக ஆராதிக்கக் கூடாது.

மேற்குறிப்பிட்ட அறிவு ஜீவிகளின் கருத்துகளை ஊடகங்கள் பெரிதும் பரப்புரை செய்கின்றன. மேலும் கூடங்குளம் அணுஉலை நிர்மாணம் வளர்ச்சிக்கான திட்டம் என்றும் இதை எதிர்ப்பவர்கள் நாட்டின் வளர்ச்சியை எதிர்க்கும் பிற்போக்கு சக்திகள் என்றும் தொடர்ந்து கருத்துகளை பரப்பி வருகின்றனர். ஊடகங்களின் இக்கருத்து பரப்பல்கள் நடுத்தர வர்க்கத்தின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

 உண்மையில் இவர்கள் கூறும் வளர்ச்சி என்பது யாருக்கான வளர்ச்சி என்பதுதான் கேள்வியாகும் . நாளுக்கு நாள் ஏழைகளின் எண்ணிக்கை பெருத்துக் கொண்டே போகிறது. உலகிலேயே அதிக ஏழைகளைக் கொண்ட நாடாக இந்தியா மாறியுள்ளது. மறுபக்கம் கணிசமான பணக்காரர்களைக் கொண்ட நாடாகவும் மாறியுள்ளது. இவர்களின் வளர்ச்சியைத்தான் ஊடகங்களும் வளர்ச்சி என்று நடுத்தர வர்க்கத்திற்கு போதையை தருகின்றன.

  ஒருபக்கம் வறுமை, வேலையின்மை, விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு, விவசாய நசிவு, தொழில்துறை வளர்ச்சி இன்மை, பாரம்பரிய சிறு தொழில்கள் அழிப்பு என்று கடும் நெருக்கடியை மக்கள் சந்தித்துக் கொண்டிருக்க, மறுபக்கம் இந்திய பிராந்திய பெரு முதலாளிகள் எல்லைகளை கடந்து தங்களது கொள்ளையை விரிவுபடுத்திக் கொண்டிருக்கின்றனர். இதைத்தான் வளர்ச்சி என்று ஊடகங்கள் கூறுகின்றன.
 
 அடுத்து, பிற்போக்குத்தனம் என்று கூறிக்கொண்டே கைவிடப்பட்ட பழைய தொழில்நுட்பமான அணுசக்தியை ஆதரிக்கிறார்கள். ஆனால், சூரியசக்தி போன்ற நவீன மாற்று சக்தி பற்றி பேசுவதில்லை. உண்மையில் இவர்கள்தான் நவீனத்தின் பக்கம் இருக்காமல் பிற்போக்குத்தனத்தை ஆதரிக்கிறார்கள். நாம் இவர்களின் கருத்தை திட்டவட்டமாக முறியடிக்க வேண்டும்.

  அடுத்ததாக, இந்திய ஒன்றிய, தமிழக அரசுகளைப் பொருத்தவரை, இரண்டு அரசுகளுமே மக்களை பிரித்தாள்வதிலும் ஒடுக்குமுறையிலும் சூழ்ச்சிகரமாகவே நடந்துகொண்டன. அணுசக்தி முதலாளிகளின் அரசியல் தரகனான மன்மோகன் தொடக்கத்தில் இருந்தே கூடங்குளம் அணுஉலையை திறப்பதில் பிடிவாதம் காட்டினார். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை இரசியா செல்லும் மன்மோகன் இந்த முறைக்கான நாள் நெருங்கியதும் மீண்டும் மீண்டும் தனது பசப்பு வார்த்தைகளால் கூடங்குளம் செயல்படும் என்று தெரிவித்துக் கொண்டிருந்தார்.

 ஆனால், இப்பயணத்தில் கூடங்குளத்தில் புதியதாக மேலும் இரண்டு அணுஉலைகளை நிறுவுவதற்கான ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இது அப்பகுதி மக்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்றே கூறலாம்.

அதே சமயத்தில், மாஸ்கோ செல்லுமுன்னே மன்மோகன் கேரளா உம்மன்சாண்டி மூலம் முல்லைப் பெரியாறு அணைச் சிக்கலை தூண்டிவிட்டார். அத்தருணத்தில் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் கேரளத்திலும் புரட்சிகர மற்றும் சனநாயக சக்திகளால் கேரளாவின் வடகோடியான ‘காசர் கோட்’லிருந்து தென் கோடியான திருவனந்தபுரம்வரை பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. திருவனந்தபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கேரள சட்டசபையில் கூடங்குளம் அணுஉலையை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.

  இப்படி, இருதேசிய இன மக்களும் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பில் ஒன்றுபடுவதை கண்டு அஞ்சிய மன்மோகன் அரசு முல்லைபெரியாறு சிக்கலை தூண்டிவிட்டு கூடங்குளத்தில் ஒன்றுபட்ட இரு தேசிய இன மக்களை மோதவிட்டது.
 
 இரசிய பயணத்திற்கு பிறகு சென்னை வந்த மன்மோகன் ஜெவிடம் ஒரு இரகசிய பேரத்தை முன்வைத்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அதாவது, “கூடங்குளத்தை நீங்கள் [ஜெயலலிதா] பார்த்துக் கொள்ளுங்கள். முல்லைப்பெரியாறை நான் [மன்மோகன்] பார்த்துக் கொள்கிறேன்” என்று மன்மோகன் பேரம் பேசியதாக செய்திகள் வெளியாயின.
 
 இதற்கு பிறகு ஜெவின் அணுகுமுறை தெளிவாகவே மாறியது. முதலில் ஜெ அரசுக்கும் ஒன்றிய அரசுக்குமான முரண்பாட்டிற்கான மிரட்டும் ஆயுதமாக கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டத்தை வெளிப்படையாகவே ஆதரித்தார். சில பேரங்கள் படிய ஆரம்பித்ததும் மறைமுக நெருக்கடியாக மின்வெட்டு மூலம் கூடங்குளம் அணு உலைக்கான ஆதரவு அலையை உருவாக்கினார்.

  முதலில், முல்லைப் பெரியாறு அணைக்கான ஆதரவு போராட்டங்கள் அணை ஆதரவு. அணுஉலை எதிர்ப்பு என்ற முழக்கங்களையே கொண்டிருந்தன. மன்மோகன் தமிழக வருகைக்குபின் மெல்ல அணைக்கும் ஆதரவு, அணு உலைக்கும் ஆதரவு என்பதாக மாறியது. இப்போக்கு தொழில்முனைவோர், பாசன விவசாயிகள், வணிகர் சங்கங்கள் என்று பெயரில் தொடங்கி வைக்கப்பட்டது. மக்களை பிளவுபடுத்தும் நோக்கில் இவைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், கடுமையான மின்வெட்டுக்கு பிறகு நிலைமை முற்றிலும் மாறிப்போனது.

உண்மையில், பெரு முதலாளிகள், பன்னாட்டு நிறுவனங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டியும் மின்கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு மக்களிடம் கடும் எதிர்ப்பும் நிலவிய சூழலில் மக்களுக்கு மின்பற்றாக்குறை என்ற தவிப்பை (நெருக்கடியை) உருவாக்குவதன் மூலம் மக்களை எந்த கட்டணத்தையும் செலுத்த தயாராக்கும் நோக்கிலும் மின்வெட்டு கொண்டுவரப்பட்டது. ஆனால் கடும் மின்பற்றாக்குறை என்ற போலியான நெருக்கடியை உருவாக்கி இந்நெருக்கடிக்கு கூடங்குளம் அணுஉலை செயல்படாததே காரணம் என்ற கருத்து பலமாக பரப்பப்பட்டு இதில் ஜெ அரசு முழுமையாக வெற்றி பெற்றது என்றே கூறலாம்.

  இதன்பிறகு ஜெ அரசு அணுஉலை எதிர்ப்பு போராட்டக்காரர்களை நேரிடையாக ஒடுக்கத் தயாரனது. சட்டமேலவை இரத்து போன்று ஒருசில பேரங்கள் முடிந்து சங்கரன் கோவில் இடைத்தேர்தல் நடந்த பிறகு ஜெ அரசு தனது வேலைகளை காட்டியது.
 
 ஒருபக்கம் 144 தடை உத்தரவு, எண்ணற்ற வழக்குகள் என்று அரசு பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிட்டது. மறுபக்கம், ஏற்கனவே மன்மோகன்-நாராயணசாமி கும்பலால் வெளிநாட்டு ஏஜெண்டுகள், தீவிரவாதிகள், வெளிநாட்டு பணத்தில் இயங்குகிறார்கள் என்று போராட்ட தலைமை குழுவினரையும் முன்னணி அரசியல் சக்திகளையம் வழக்கம்போல் அவதூறுகளை கிளப்பிக் கொண்டிருந்தனர். ஜெ அரசும் தனது பங்கிற்கு ‘நக்சலைட் - மாவோயிஸ்ட்’ பீதிகளை கிளப்பியது. சிலர் மீது வழக்குகளை தொடர்ந்தது. பிணையில் வெளிவராதபடி மீண்டும் மீண்டும் புதிய வழக்குகளை போட்டு காவல்துறை தனது விகலாசத்தை காட்டிக் கொண்டு இருக்கிறது.
 
 இவ்வாறு, ஒருபக்கம் ஜெயலலிதா தமிழக வரலாற்றில் மிக முக்கிய போராட்ட வரலாற்றை கொண்ட கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டத்தை நசுக்கிக் கொண்டே, ஒன்றிய அரசிடம் தனது பேரத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்.

  மறுபக்கம், அணுஉலை முதலாளிகளின் அரசியல் தரகரான மன்மோகன் தனது எசமான விசுவாசத்தை உறுதியாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
 
 மேற்கண்ட இரண்டு அரசுகளின் ஒடுக்குமுறையை முறியடித்து கூடங்குளம் அணுஉலையை தமிழ்நாட்டைவிட்டே ஓட்ட வேண்டிய தமிழக மக்கள் ஆளும் வர்க்கத்தின் பொய் பரப்பலில் சிக்கி உள்ளனர்.
 
 மேற்கண்ட மாயையிலிருந்து தமிழக மக்களை மீட்டெடுத்து கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போ£ராட்டத்திற்கு தலைமை தாங்க வேண்டிய தமிழக அரசியல் சக்திகளின் நிலை என்ன?

3. கூடங்குளமும் அரசியல் சக்திகளும்

  தமிழகத்தை பொருத்தவரை அரசியல் சக்திகள் ஒருபுறம் இந்தியப் பெரு முதலாளிகளின் நலனை முன்னிறுத்தும் அரசியல் கட்சிகளாகவும் மறுபுறம் சனநாயக கோரிக்கைகளை முன்னிறுத்தி செயற்படும் சிறு குழுக்கள் மற்றும் மா-லெ குழுக்களாகவும் உள்ளன.
 
 அரசியல் கட்சிகளில் காங்கிரசும் பி.ஜே.பி. பரிவாரங்களும் நேரிடையாக போராட்டக் குழுவிற்கு எதிராக களம் இறங்கின. முதலில் அவதூறு பிரச்சாரங்களை கட்டவிழ்த்துவிட்டன. வெளிநாட்டிலிருந்து பணம் வாங்குவது மற்றும் தீவிரவாதிகள் என்று பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விட்டன. போராட்டக் குழுவை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள், பேச்சு வார்த்தைக்கு வந்தவர்கள் மீது தாக்குதல்கள் என்பதாக வளர்ந்தது. போராட்டக்குழுவிற்கு எதிரான நடவடிக்கைக்காக நூற்றுக்கணக்கான கோடிகள் செலவிடப்பட்டதாக தெரிகிறது.
 
 1989ல் நடந்த சட்டசபை தேர்தலில் “கூடங்குளம் அணுஉலையை நிறுவமாட்டோம்” என்று கூறி ஆட்சியை பிடித்த கருணாநிதி அப்பொழுதே வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டார். இன்று எவ்வித கபடநாடகமும் இன்றி வெளிப்படையாகவே அணுஉலையை திறக்கவேண்டும் என்கிறார்.
 
 ஜெயலலிதாவோ இந்திய ஒன்றிய அரசிடம் தன்னுடைய பேரத்திற்காகவே அணு உலை விசியத்தில் கபட நாடகம் ஆடிக் கொண்டிருக்கிறார்.
 
 உலகமயத்தை எதிர்ப்பதாக கூறிக் கொள்ளும் வலது, இடதுகள் கூடங்குளம் அணுஉலையை ஆதரிர்க்கிறார்கள். இவர்கள் மக்கள் நலன், சமூக நலனை பின்னுக்கு தள்ளிவிட்டு, இரசிய எசமானனுக்கு தங்களின் கண்மூடித்தனமான விசுவாசத்தை காட்டுகிறார்கள்.

  கூடங்குளம் அணுஉலையை எதிர்ப்பதாக கூறும் இராமதாசு, வைகோ, திருமா, சீமான் போன்றவர்கள் எதிர்ப்பு கருத்துகளை வெளியிடும் அதே சமயத்தில் செயல்ரீதியாக தங்களது கட்சிகளை ஈடுபடுத்துவதில்லை. செயல் மௌனமே சாதிக்கின்றனர். இதுவும் அரசுக்கு முறைமுக ஆதரவுத் தன்மையே ஆகும். மேலும், அணுஉலை எதிர்ப்பு சக்திகளின் ஆதரவை பெறும் நோக்கத்திலும் செயற்படுகின்றனர். தங்களது சுயநலத்தின் உச்ச கட்டமாக யார் பெரிய ஆள் என்ற போட்டி இவர்களிடையே கடுமையாக நிலவுகிறது. இவர்கள் நேரிடையாகவும் மறைமுகமாகவும் ஆளும் வர்க்கத்தின் ஏஜெண்டாக செயல்படுவதால் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பிற்கான தகுதியை இழக்கிறார்கள்.

அடுத்து, இதர ஜனநாயக சக்திகள் மற்றும் புரட்சிகர சக்திகளின் செயற்பாட்டை பார்ப்போம். இவர்களில் பெரும்பாலான குழுக்கள் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு என்ற நிலைபாட்டையே மேற்கொண்டனர். முதலில் பகுதிகளில் தனியாகவோ கூட்டாகவோ அணுஉலை எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

  இதில் ஒரு பகுதியினர் முதலில் தனியாக ஆதரவு அமைப்பை கட்டுவது என கூடி பின்னர் அணுசக்தி எதிர்ப்பு மக்கள் இயக்கத்துடன் இணைந்து செயற்படுவது என தீர்மானித்து சென்னையில் மாநாடு நடத்தினர். மாநாட்டிற்கு பிறகு தனி கூட்டமைப்பாக செயல்படுகின்றனர். முன்னுக்கு பின் முரணான மாற்றங்கள் எதனால் நடந்தது? இவர்களால் மக்களிடம் சிறிதளாவது பாதிப்பை ஏற்படுத்த முடிந்ததா? என்பன போன்ற கேள்விகளுக்கு பதில் காணவேண்டிய தேவை உள்ளது.

  முதலில், இவ்வமைப்புகளின் தன்மைகளை பார்ப்போம்! இதில் ஒருசில அமைப்புகளே அரசியல் அமைப்பு கொள்கைகளை முறைப்படுத்திக்கொண்ட அமைப்புகளாகும். இதர பெரும்பாலான அமைப்புகள் ‘பாளையக்கார அமைப்புகள்’ ஆகும். இவர்கள் பிற்போக்கு நிலவுடைமைத்தன்மை மேலோங்கிய குட்டி முதலாளித்துவ பிரிவினரே ஆவர். மேலும் தனிநபர் (நிலக்கிழாரிய) ஆவர்த்தனத்தை அடிப்படையாகக் கொண்டவை ஆகும். திட்டவட்டமான வடிவங்களை (முக்கியமாக மார்க்சிய) மறைமுகமாகவோ (அ) நேரிடையாகவோ எதிர்ப்பது என்பதே இவர்களின் வாழ்வுக்கான மிக முக்கிய அடிப்படையாகும். அதாவது, தங்களின் குறுகிய அதிகாரத்திற்காக ஜனநாயக வேடம் போடுவதே இவர்களின் உயிர்சிறப்பு ஆகும்.

  மேலும், இவர்கள் யாரும் வர்க்கப்போராட்டம் (அ) இதர மக்கள் திரளினரை அணி திரட்டும் செயல் போக்கை கொண்டவர்கள் அல்லர். அதனால்தான் தங்களது சக்திகளை தக்க வைக்கும் நோக்கில் கருத்தரங்குகள், மாநாடுகள் என்று தங்களது அரிப்பை சொறிந்துகொள்ளும் குறுகிய சிந்தனை மற்றும் செயற்பாட்டையே கொண்டிருக்கிறார்கள். அதாவது ‘கிணற்றுத் தவளை சிந்தனை’, செக்கு மாட்டுத்தனமான ஒரே வேலைமுறை’ என்ற குறுகிய வட்டத்திற்குள் சிக்கி உள்ளனர்.

  இதனால்தான் இவர்களால் எந்த சிக்கலிலும், வீரியமுடன் மக்களை அணி திரட்ட முடியவில்லை. கூடங்குளம் சிக்கலைப் பொருத்தவரையிலும் இதேதான் விளைவு ஆகும்.

  முதலில் சுமார் 40க்கும் மேற்பட்ட அமைப்புகள் கூடின. இது கூட்டப்பட்டதே தனியாக ஆதரவு (கூடங்குளம் போராட்டத்திற்கு) அமைப்பை கட்டும் நோக்கில்தான். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு முதலில் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் வாழ்த்து தெரிவித்தார். தனது வாழ்த்துரையில் “கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டத¢தில் இருசக்திகளும் இருகோடுகளாக இணைந்து செல்வோம்’ என்று கூறினார். பின்னர், பேசிய அதே அமைப்பை சேர்ந்த மனோ. தங்கராஜ் முற்றிலும் முரண்பட்டு ஒரே அமைப்பாக செயற்படுவோம் என்று தொடர்ந்து வலியுறுத்தினார். இதற்கு பிறகு காட்சிகள் மாறின.   ஒரே அமைப்பாக செயற்படுவோம் என்ற குரலே ஓங்கி ஒலித்தது.  (இதில் எங்களது அமைப்பைச் சேர்ந்தவர்களின் குரலே முக்கியமானதாகும். இதை கடைசி பகுதியில் விரிவாக பார்ப்போம்)

  அதன்பிறகு வழக்கம்போல் மாநாடு திட்டமிடப்பட்டது. இம் மாநாட்டிற்கான திட்டம் போராட்டக்குழு மீது திணிக்கப்பட்டது. இதனால் மாநாடே இழுபறி நிலையில்தான் நடந்தது. மாநாடு முடிந்தபிறகு, போராட்டக்குழுவால் எட்டி உதைக்காத குறையாகத்தான் அமைப்புகள் தனியாக கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு கூட்டமைப்பு கட்டினர்.

 இன்னும் சில அமைப்புகளுக்கு எந்த பெயரில் இயங்கினோம் என்று தெரியவில்லை. ஏனெனில், முதலில் திட்டம் ஏன் மாறியது? ஏன் அணுசக்தி எதிர்ப்பு மக்கள் இயக்கத்தில் இணைந்தோம்? பிறகு ஏன் மீண்டும் பழைய முடிவின்படி தனி கூட்டமைப்பு கட்டினோம்? தகவலோ அல்லது மீளாய்வோ கிடையாது.

  மேலும் கூடங்குளம் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு இயக்கத்தை மக்களிடம் கட்டியமைப்பதற்கான திட்டம், மக்களிடம் நேரிடையாக செல்வதற்கான பரப்புரை வடிவங்கள் என்ற அடிப்படையில் செயல்திட்டங்கள் தீர்மானிக்கப்படவில்லை. மாறாக வழக்கம்போல் ஏற்கனேவே நடைமுறையில் இருந்த செக்குமாட்டுத்தன வேலைமுறையிலிருந்து மாநாடு தீர்மானிக்கப்பட்டது.
 
 அடுத்து, நமது பிற்போக்கு சமூகத்தன்மையான அடுத்தவர் உழைப்பில் தன்னை ஓட்டிக்கொள்வது என்ற பார்ப்பன ஒட்டுண்ணித்தனத்தில் இருந்து இடிந்தகரை மக்களும் போராட்டக் குழுவினரும் கட்டமைத்த அணுசக்தி எதிர்ப்பு இயக்கத்தில் தங்களை காட்டிக் கொள்ளவேண்டும் என்ற சிந்தனை போக்கு பல அமைப்புகளிடம் மேலோங்கி இருந்தது.
 
 உண்மையில் இடிந்தகரை மக்களும் போராட்டக்குழுவினரும் சரியாக போராட்டத்தை கட்டமைத்து இருந்தனர். இவர்களின் தன்மை வேறுவகையானது; அமைப்பு குழுக்களின் தன்மையோ வேறு வகையானது. எனவே, இரண்டு தன்மைகளுக்கேற்ப தனித்தனியான அமைப்பாக செயல்படுவதும் ஒருங்கிணைந¢து செயல்படுவதுமாக இரட்டை செயல் தன்மையை கொண்டிருக்க வேண்டும். போராட்டக்குழுவின் செயற்களம் கூடங்குளம் மற்றும் அதை சுற்றிய பகுதிகளுமே ஆகும். கூட்டமைப்புகளின் செயற்களம் தமிழகத்தின் பரந்த பகுதிகளாக செயல்பட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். சிலர் ஊழியர் பலம் இல்லை என்று கருதுகின்றனர். எவ்வளவு சிறிய சக்திகள் இருந்தாலும் மக்களிடையே நேரிடையான பரப்புரை செய்தவன் மூலம்தான் நமது சக்திகளை பெருக்க முடியும். ஊழியர் பலம் என்பது நேரிடையாக ஆகாயத்தில் இருந்து குதிப்பதில்லை. மக்களிடம் செல்லும் பொழுதுதான் ஊழியர்கள் கிடைப்பார்கள்.

அ. கூடங்குளமும் புரட்சிகர அமைப்புகளும்

  புரட்சிகர அமைப்புகளைப் பொருத்தவரை ம.க.இ.க. இப்போராட்டத்தில் வழக்கம்போல் தங்களது சகோதர அமைப்புகளுடன் இணைந்து பரப்புரை இயக்கத்தை மேற்கொண்டது. ஆயினும், கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டத்தின் தனிச் சிறப்பை இவர்கள் புரிந்துகொண்டு அதற்கேற்ப தங்களது திட்டத்தை அமைத்துக் கொண்டதாக தெரியவில்லை. வழக்கம்போல் அவ்வப்போது வரும் சிக்கல்களுக்கு (சமச்சீர் கல்வி, விலைவாசி உயர்வு போன்று) பிரச்சார இயக்கம் மேற்கொள்வதுபோல்தான் இதற்கும் மேற்கொண்டனர்.

  இவ்வியக்கத்தில் இவர்கள் தவறவிட்டது என்னவென்றால், தலைமைக்கான பாத்திரத்தை உணரவில்லை. இதனடிப்படையில் பார்போமானால் அதாவது முதலில் கூடங்குளம் போராட்டத்தின் தனிச்சிறப்பாக பகுதி மக்கள் திரளின் பலத்தை கொண்டிருக்கிறது எனலாம். அதுவும் போர்க்குணம் கொண்ட மீனவர்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பது ஒரு புதிய வரலாற்று நிலைமையாகும். எனவே, இதற்கான ஆதரவு தளத்தை தமிழகம் முழுவதும் படிப்படியாக கட்டமைக்கும் திட்டத்தினடிப்படையில் இவர்களது பிரச்சார இயக்கம் இருந்து இருக்க வேண்டும்.

 இரண்டாவதாக, மற்ற அமைப்புகளுடன் கூட்டமைப்பிற்கு வராமல், சுயம்புவாக புனிதத்தனம் காப்பது என்ற குறுங்குழுவாத செயல் முறையை கொண்டிருக்கிறார்கள். எதிரியை எதிர்த்த போராட்டங்களை ஒருங்கிணைக்காமல் சிதறவிடுவது எதிரிக்கு சாதகமானதே ஆகும். ஒருபக்கம் போராட்டங்களின் தலைமையை பற்றி விமர்சிப்பது, மறுபக்கம் நடைமுறையில் இப்போராட்டங்களுக்கு தலைமை தாங்க தயாரில்லாமல் இருப்பது என்ற முரண்தன்மையினை கொண்டிருக்கிறார்கள். இது குறிப்பாக ஒரளவு ஊழியர் பலத்தை கொண்டுள்ள இந்த கட்டத்தில் தலைமை பாத்திரத்தை தவறவிடுவது குறுங்குழுவாதத்தில் இருந்து கலைப்புவாதத்திற்கு நகருவதை காட்டுகிறது.

 மேலும், இவர்கள் கடந்த முப்பது ஆண்டுகளாக புரட்சிகர வர்க்கப் போராட்ட அனுபவத்தை கொண்டிருக்கவில்லை. பிரச்சார இயக்கங்கள் மூலம் சமூகத்தின் முன்னோடி சக்திகளையே வென்றெடுக்கின்றனர். ஆழமான அனுபவத்தையும் பெற்றவர்கள் அல்லர். இதனால்தான் புறச்சூழலின் சாதகங்களை தங்களது சாதகமாக மாற்றும் ஆற்றலை பெற்றிராமல் உள்ளனர்.

 அடுத்து, மாவோயிஸ்டு ஆதரவாளர்களை பொருத்தவரை, இச்சிக்கலில் மிகத் தாமதமாகவே விழித்துக் கொண்டனர். தனியாக கருத்தரங்கு நடத்தினர். பொதுவாக கூட்டமைப்பில் கலந்து கொண்டனர். இறுதியில் நெல்லையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் காட்சி ஊடகங்களில் இடம் பிடித்தனர்.

இவர்களைப் பொருத்தவரை தங்களது சிக்கல்களுக்கு மட்டும் கூட்டமைப்புகளை உருவாக்குகின்றனர். ஆனால், இதர சிக்கல்களுக்கு கூட்டமைப்பை உருவாக்குவதில்லை. பிறரால் உருவாக்கப்பட்ட சில அமைப்புகளிலும் பங்கு பெறுவதில்லை. இதற்கு அதில் பங்கு பெறும் சக்திகளை காரணம் காட்டுகிறார்கள். சரி, ஏதாவது அரசியல் முரண்பாடு என்றால் பரவாயில்லை. அற்பத்தனமாக தனிநபர் அவதூறுகள் (அ) உளவாளிகள் என்று முத்திரை குத்துவது என்ற பிற்போக்குத்தனமான பார்ப்பன நிலக்கிழாரிய முறைகளைக் கையாள்கிறார்கள். 

 இவர்களே கட்டும் கூட்டமைப்பிற்கு கூட அரசியல் அடிப்படை இல்லை. முரண் மற்றும் உறவுதான் அடிப்படையாக முன்னிறுத்துகிறார்கள். இதனால் பாட்டாளி வர்க்கத் தலைமை என்பதை பற்றி எல்லாம் எந்த அக்கறைவும் கிடையாது.

  அனைவரிடமும் தோழமைபூர்வமான அணுகுமுறை, எதிரிக்கு எதிராக அனைவரையும் ஒன்றுதிரட்டுவது என்ற மக்கள் யுத்தக் கட்சியின் பாரம்பரியத்துடன் துளியும் சம்மந்தமில்லாதவர்களாக உள்ளனர்.

 மேலும், மக்கள் திரன் இயக்கத்தை கட்டியமைப்பது என்ற எந்தவித திட்டமும் இல்லாததாலும் முன்னோடி சக்திகளை பொறுக்கி எடுப்பது என்ற செயற்திட்டத்தை மட்டும் இவர்கள் கொண்டிருப்பதாலும் இவர்களால் எந்தவித மக்கள் இயக்கத்தையும் வழி நடத்த முடியவில்லை.

  மேற்கண்ட சிந்தனைகள் மற்றும் செயற்போக்கின் காரணமாக இவர்களால் கூடங்குளம் எதிர்ப்பு போராட்டத்தில் ஆக்கபூர்வமான பங்களிப்பை செலுத்த முடியவில்லை.

  மொத்தத்தில் ம.க.இ.க. ஆர்ப்பாட்டத்திற்கு ஆள் பொறுக்குகிறார்கள். மாவோயிஸ்டுகள் ஆயுதக் குழுவிற்கு ஆள்பொறுக்குகிறார்கள். கூடங்குளம் போன்ற பலமான (அ) விதிவிலக்கான போராட்டத்தினை கூட தனதாக்கிக் கொள்ளவோ (அ) அதற்கு தலைமை தாங்கவோ தயாரில்லை என்பதையே பார்க்க முடிகிறது.
 
 மேற்கண்ட ஜனநாயக மற்றும் புரட்சிகர சக்திகளின் செயல்பாட்டின் பின்னணியில்தான் இடிந்தகரை மக்களின் போராட்டத்திற்கான ஆதரவு தளத்தின் வீரியமற்ற செயல் தன்மையை புரிந்துக்கொள்ள முடியும்.

 இனி இடிந்தகரை மக்களின் போராட்டம் மற்றும் போராட்டக்குழுவிரை பற்றி பார்ப்போம்,

இடிந்தகரை மக்களும் போராட்டக் குழுவினரும்

  முன்பே குறிப்பிட்டது போல் தமிழக வரலாற்றில் இடிந்தகரை மக்களின் அணுஉலைக்கெதிரான போராட்டம் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியதே ஆகும். தமிழகத்தில் கடந்த இருபது ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமுக - பொருளாதார மாற்றங்களின் சூழ்நிலையில் இது போன்ற சமூக கட்டுக்கோப்புடன் போராட்டங்களை நடத்துவதில் மீனவச் சமுகம் குறிப்பான தன்மையை பெற்று இருக்கிறது.

  அதாவது, இந்த நவீன கட்டத்திலும் தனது இனக்குழுத்தன்மையிலான சமூக கட்டுக் கோப்புகளை முழுமையாக உதறி தள்ளவில்லை. அடுத்து அவர்களின் தொழில் சார்ந்து நாள்தோறும் உயிரை பணயம் வைத்து ஈடுபடுவது என்பதால் உயிரை துச்சமாக மதித்து போராடும் போர்க்குணத்தை இயல்பாகவே பெற்றிருக்கிறார்கள் என்பதும் இவர்களது சிறப்பம்சமாகும்.

  இவர்களது தலைமையின் உறுதிப்பாடும் தமிழகத்தின் பிறபகுதிகளில் கிடைக்கும் ஆதரவை ஓட்டியுமே இவர்களது போராட்டத்தின் வெற்றியை உறுதி செய்ய முடியும்.

 மற்றபடி உதயகுமாரின் பேட்டியை மேற்கோள்காட்டி சிலர் ‘இடிந்தகரை குடியரசு’ என்றெல்லாம் மிகைப்படுத்துவது சரியான பேத்தல் ஆகும். குடியரசு என்பதெல்லாம் அரசியல் அதிகாரத்தோடு சம்மந்தப்பட்டது. பல சுற்றுகள் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு நடக்கும் யுத்தத்திலேயே மக்கள் அரசியல் அதிகாரம் பற்றி கற்றுக்கொள்கிறார்கள்.

 இடிந்தகரை மக்கள் இந்த அரசு அதிகாரத்தை கைப்பற்றுதல் என்பது பற்றி எல்லாம் பாவம் ஒன்றும் அறியாதவர்கள். சிலரின் “சிந்தனைப் போதைக்காக” அப்பாவி மக்களை பலியாக்க வேண்டாம். புறநானூற்று வீரம்பாடியே ஈழப் போராட்டமும் விடுதலைப்புலிகளும் அழிக்கப்பட்டார்கள். யதார்த்தத்தின் பக்கம் நிற்க வேண்டும். மிகைத்தனத்தின் சிந்தனைப் போதையில் உணர்வுபூர்வமாக பறப்பதை விட்டுவிட்டு அறிவால் பூமியில் காலூன்ற வேண்டும். அப்பொழுதுதான் உண்மைகளை புரிந்துக்கொள்ள முடியும். 

  அதேபோல், காடுகளிலும் மலைகளிலும் தேடுபவர்களும் இடிந்தகரையில் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை எடுத்து கொண்டால் உண்மையில் அவர்கள் இடிந்தகரையில் கற்றுக்கொள்வதற்கு தேவை இல்லை. ஆனால், அதே சமயத்தில் சதிஷ்கரிலிருந்தும் ஜார்கண்டிலிருந்தும் கற்றுக்கொள்வதற்கு இடிந்தகரை மக்களுக்கும் இங்குள்ள அரசியல் சக்திகளுக்கும் நிறைய உண்டு.


  மேற்கண்ட கருத்துகள் மார்க்சியத்தின் மீதான காழ்ப்புணர்விலிருந்தே வருகிறது. மாவோயிஸ்டுகளை விமர்சிப்பது என்பது அரசியல் (அ) கோட்பாட்டிலிருந்து விமர்சிக்கலாம். அவர்களின் மிகைப்படுத்தப்பட்ட விவரங்களை நிராகரிப்பது என்பது வேறு, ஆனால் சில அடிப்படை உண்மைகளை மறைப்பது என்பதன் நோக்கம் வேறு.
  
மேலும், தமிழகத்தில் புதுப்புது உத்திகளை கையாண்ட வீரம் செறிந்த மக்கள் போராட்டங்களின் எண்ணற்ற வரலாறுகள் உண்டு. தொழிலாளர், விவசாயிகள், நெசவாளர்கள் போராட்டம் என்று மிகப் பெரிய வரலாறு உண்டு. வரலாறுகளை புறக்கணித்துவிட்டு இடிந்தகரை போராட்டத்தை புனிதமாக பார்ப்பது குருட்டுப் பார்வையே ஆகும்.

 கடந்த இருபதாண்டுகளில் நடந்த போராட்டங்களில் கூடங்குளம் போராட்டம் குறிப்பிடத்தக்கது என்பதுதான் எதார்த்தமாகும். இந்த உண்மைக்கு மாறாக அணிகளுக்கும் மக்களுக்கும் போதை ஏற்றுவது எதிர்விளைவுகளையே உண்டாக்கும்.

  அடுத்து போராட்டக்குழுவை பொருத்தவரையில் சில தனி நபர்கள் மற்றும் ‘கிறித்துவ வெள்ளாளிய’ (பெங்களுரு குணாவியம்) சக்திகளை கொண்டதாக உள்ளது. இதில் ‘கிறித்துவ வெள்ளாளிய சக்திகள்’ செயற்பாட்டு வளர்ச்சிக்கு தடையாக உள்ளனர். இதில் இரண்டு முக்கிய சிக்கல்களை பார்ப்போம்.

கிறித்துவ வெள்ளாளியம் (குணாவியம்)

தமிழகத்தை பொருத்தவரை இந்திய ஆளும் வர்க்க கருத்தியலான நவீன பிராமணீயம் இரட்டைத்தலை நாகமாக உள்ளது. ஒன்று பிராமணீயம்; இரண்டு வெள்ளாளியம் ஆகும்.

 நவீன பிராமண¦யம் - இந்து, இந்தி இந்தியா என்ற கூறுகளைக் கொண்டது. நவீன வெள்ளாளியம் - சாதிய நிலவுடைமை, சைவசித்தாந்தம், பிராமணர் எதிர்ப்பு (பகுதியான அளவிலே; முழுமையாக அல்ல), தமிழ் தேசியம் (ஆதிக்க சாதி நலன்) என்ற கூறுகளைக் கொண்டது.

இதில் நவீன வெள்ளாளியத்தின் சைவ மதத்திற்கு பதிலாக கிறித்துவத்தை முன் வைப்பதே ‘குணாவியம்’ ஆகும். குணாவியத்தின் இலக்கு ஆளும் வர்க்கங்களோ ஆதிக்க சாதியினரோ அல்ல. உழைக்கும் மக்களையும் ஒடுக்கப்படும் மக்களையும் பிளவுபடுத்துவதே ஆகும்.

மேலும், தமிழக விடுதலையின் நட்பு சக்திகளான சிறுபான்மை தேசிய இன மக்களின் உழைக்கும் பிரிவினரை அழிப்பது என்ற அம்சம் மட்டும் அல்லாமல் வரலாற்று ஆய்வு என்ற பெயரில் தமிழர்களை தமிழர்கள் இல்லாதவர்கள் என்று எல்லையற்ற முறையில் மேலும் மேலும் பகுத்து பிளவுபடுத்துவது என்ற “இனக்குழுவாத பாசிசமே” குணாவியத்தின் சாராம்சமாகும்.

மேலும், மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் ஆகியவற்றை கடுமையாக எதிர்க்கிறார்கள். இக்கருத்தியல்களை ஏற்றுக் கொண்டவர்களை எதிரிகளாகவே பாவிக்கிறார்கள். ஏனெனில், இக்கருத்தியல்களின் மூலவர்கள் தமிழர்கள் இல்லையாம். ஏசுநாதர் பற்றியோ கிறித்துவத்தை பற்றியோ இந்த அளவுகோலை பொருத்திவிடாதீர்கள். ஏனெனில், குணாவியத்திற்கு இனவெறி கொண்ட அடிமுட்டாள்களே தேவையாகும். அறிவுபூர்வமாக சிந்திக்கக்கூடிய தமிழ் தேசிய அக்கறை கொண்டவர்கள் அல்ல.

மொத்தத்தில் தமிழக விடுதலையை குழப்புவது (அ) திசை திருப்புவது மூலம் ஆதிக்க சாதி ஆளும்வர்க்கத்தின் நலனுக்கு சேவை செய்வது என்பதே குணாவியத்தின் சாராம்சம் ஆகும்.

1. கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தை கேரள போராட்ட சக்திகளுடன் இணைந்து செல்வதற்கு தடையாக உள்ளனர்.

2.தமிழகத்தின் அரசியல் சக்திகள் தங்களை நெருங்கவிடாமல் தடுத்து வருகின்றனர். குறிப்பாக சிவப்போ(மார்க்சியம்), கருப்போ (பெரியாரியம்), நீலமோ (அம்பேத்கரியம்) நெருங்கவிடாமல் தடுக்கின்றனர். மாநாட்டை ஒட்டியும் இந்த வேலை நடந்தது(ஒருங்கிணைப்பாளர் கருப்பு சட்டையான கொளத்தூர் மணி என்பதால்).

  இவர்கள், குறுகிய இனவாதக் கண்ணோட்டத்தில் இருந்தே மேற்கண்ட செயல்களை செய்து கொண்டிருக்கின்றனர். போராட்டக் குழு இதை கவனத்தில் கொள்ள வேண்டும். கேரளாவுடன் ஒருங்கிணைப்பும் தமிழக அரசியல் சக்திகள் சுதந்திரமாக போராட்டக் குழுவுடன் உறவு கொள்ளுதலும் அணுஉலை எதிர்ப்பு போராட்டத்தில் மிக முக்கியமானதாகும். எனவே போராட்டக்குழு குறுகிய இனவாதம் தலைதூக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
 
இறுதியாக, மேற்கண்ட சூழல்கள், பின்னணிகள், தடைகள் காரணமாக கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டம் வீர்யமிக்கதாக இச்சுற்றில் மாற முடியாமல் போனது. எங்களது மீளாய்வின் கண்ணோட்டமும் இப்போராட்டத்தின் வளர்ச்சிக்கு உகந்தது எது என்பதேயாகும்.

  இதிலிருந்தே எங்களது விமர்சனங்கள் அமைந்திருக்கின்றன. தமிழக அரசியல் சக்திகளிடையே நமது சமூகத்தின் தன்மையான முரண் என்றாலே பகைத்தன்மையுடன் வள்மமாக அணுகுவது என்ற நிலவுடைமைச் சிந்தனையே மேலோங்கி உள்ளது. இது ஒவ்வொரு அமைப்பிற்குள்ளேயும் உள்ளது. அமைப்புகளுக்கிடையேயும் உள்ளது.

  கருத்துகளை நிராகரிக்க உரிமை உண்டு. எதிர்க்கருத்துகளை கூற உரிமை உண்டு என்ற ஜனநாயக அம்சம் முற்றிலும் நிராகரிக்கப்படுகின்றது. எப்படி இருப்பினும் திறந்த மனதுடன் எவ்வித விவாதத்திற்கும் தயாராக இருக்கிறோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

 இனி செய்ய வேண்டியது என்ன என்பதை பார்ப்போம்.

1. இடிந்தகரை மக்களும் போராட்டக்குழுவினரும் இப்பொழுதும் போராட்டத்தை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர். இந்த உத்தி சரியானது தான். ஆனால், இது ஆதரவுதளத்தை பெருக்காது. ஜனநாயக சக்திகளும் புரட்சிகர சக்திகளுமே இதை செய்ய முடியும். நேரிடையாக மக்களிடம் புதுப்புது வடிவங்களுடன் பல சுற்றுகள் ஆதரவு தளத்தை கட்ட முயற்சிக்க வேண்டும். அப்பொழுதுதான் புறநிலையில் தகுந்த சூழலுக்கான வாய்ப்பு கிடைக்கும் பொழுது ஆதரவு அலையை தட்டியெழுப்ப முடியும்.

2. தமிழகத்திற்கு வெளியேயும் அணுசக்தி எதிர்ப்பு சக்திகளுடன் ஒன்றிணைய வேண்டும். முக்கியமாக கூடங்குளம் அணுஉலையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள கேரளாவின் தென் மாவட்ட மக்களுடன் ஒன்றிணைய வேண்டும்.

3. அனல் மற்றும் அணு மின்சக்திக்கு மாற்றை முன் வைப்பதன் மூலம் மட்டுமே அணுசக்தி பற்றிய மாயைகளை அகற்ற முடியும். மாற்று மின் சக்திகளாக மறு சுழற்சிக்கு வாய்ப்புள்ள, இயற்கை சார்ந்த சூரிய ஒளி, காற்று, நீர், போன்றவைகள் பற்றி பரப்புரையை கொண்டு செல்ல வேண்டும்.

அதிலும் குறிப்பாக சூரிய மின்சக்தி பயன்பாடு பற்றி தீவிரமாக கொண்டு செல்ல வேண்டும். இதன் மீதான தவறான கருத்துகள் களையப்படவேண்டும். முக்கியமானது செலவு அதிகம் என்ற கருத்தாகும். எந்த ஒரு புதிய கண்டுபிடிப்பும் தொடக்கத்தில் அவ்வாறுதான் இருக்கும். சில பத்தாண்டுகளுக்கு முன் பெரிய அறை அளவு இருந்த கணிப்பொறி இன்று கையடக்கத்திலும் மிகக் குறைந்த விலையிலும் கிடைக்கிறது. இது தொடர்ந்து ஆய்வு மற்றும் பயன்பாடு என்ற சுழற்சி நிலையிலேயே இந்நிலையை அடைந்துள்ளது.

சூரிய மின் சக்தியும் பல வளர்ச்சிகளை பெற்று வருகிறது. சமீபத்தில் குஜராத்தில் 16,000 கோடி ரூபாய் செலவில் 500 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் சூரிய மின்சக்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. கூடங்குளம் அணுஉலைக்கு 30,000 கோடி செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
மேலும் மிகப் பெரிய மின்சக்தி திட்டங்களிலிருந்து ஒரு தனி வீட்டிற்கு தனியாக பயன்படுத்திக் கொள்வது வரை அதற்கான சுலபமான தொழில்நுட்பத்தை சூரிய மின்சக்தி கொண்டிருக்கிறது. எனவே சுலபமாக மக்கள்மயமாக்கும் சூரிய மின்சக்தி திட்டங்களை நிறைவேற்றக்கோரி நாம் போராட வேண்டியது மிக முக்கியமாகும். அவை

1. அனைத்து வீடுகளுக்கும் தனித்தனியாக சூரிய மின் தட்டுகளை இலவசமாகவோ குறைந்த விலையிலோ வழங்கலாம்.

2. கிராமம், குடியிருப்புகள், தெருக்கள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஒவ்வொன்றும் தனித் தனியாக தங்களுக்கான சூரிய மின்சக்தியை நிறுவிக் கொள்வதை கட்டாயமாக்கலாம்.

3. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனியாக சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையங்களை உருவாக்க வேண்டும்.

4. சூரிய மின்சக்தி மற்றும் மாற்று மின்சக்திக்கான ஆய்வகங்களை அமைப்பது.

5. சூரிய மின்சக்திக்கான உபகரணங்களுக்கு வரிவிலக்கு செய்யப்பட வேண்டும். மானியங்கள் அதிகரிக்கப்படவேண்டும்.

6. இதர தொழில்களில் உள்ள பெருமுதலாளிகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கான அனைத்து சலுகைகளும் இரத்து செய்யப்பட வேண்டும். சூரிய மின்சக்தி உபகரணங்கள் உற்பத்தி செய்யும் தொழில்முனைவோருக்கு வரிவிலக்கும் இதர சலுகைகளும் அளிக்கப்பட வேண்டும், பெரிய நிறுவனங்களுக்கும் ஒப்பந்த அடிப்படையில் குறிப்பிட்ட காலங்களுக்கு சலுகைகள் அளிக்கப்படவேண்டும்.

மேற்கண்டவற்றை நாம் மக்களிடையே பரப்புரை செய்வதும் இக்கோரிக்கைகளுக்காக அரசுகளிடம் போராடுவதன் மூலமும் சூரியசக்தியின் பயன்பாட்டை சமூகத்தின் பயன்பாடாக மாற்ற முடியும்.

  மேலும், சுற்றுச்சூழலை நாசப்படுத்தும் அனல் மின்சாரத்தையும் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய நாசகார அணுஉலைகளையும் சமூகப் பயன்பாட்டிலிருந்து அப்புறப்படுத்த முடியும்.

தோழர்களே!

  கூடங்குளம் போராட்டத்தின் பின்னடைவு பல தோழர்களை விரக்திக்குள்ளாக்கி உள்ளது. பலர் இதன் முழுப்பொறுப்பையும் உதயகுமாரின் மீது போட்டு அவர் முதுகுக்குப்பின் ஒளிந்து கொள்கின்றனர்.

  உண்மையில், உதயகுமாரின் தவறு திடீர் என்று உணர்ச்சிவசப்பட்டு சாகும்வரை உண்ணா நோன்பு போராட்டத்தில் ஈடுபட்டதுதான் ஆகும். ஒரு இறுதியான பட்டினிப் போராட்டத்தை நடத்தி போராட்டப் பொறியை கிளப்பக் கூடிய நிலையில் தமிழகத்தின் பிற பகுதிகளில் ஆதரவு போராட்டம் கிடையாது. எனவே காலப் பொருத்தமற்ற போராட்ட வடிவம் நமது கழுத்தை இறுக்கும் கயிறாகவே மாறும். இதுதான் இப்போராட்டத்திலும் நடந்தது.

கூடங்குளம் அணுஉலை நிறுவப்பட்ட காலத்தில் நடந்த போராட்டங்களை நாம் முதல் சுற்றாக கணக்கில் கொண்டால் இப்பொழுதைய போராட்டத்தை இரண்டாவது சுற்றாக கருதலாம். இந்த இரண்டாவது சுற்று சில சாதகங்களுக்கு பின் பின்னடைவை அடைந்துள்ளது.

கூடங்குளம் பகுதி சார்ந்த மக்கள் திரள், தமிழக ஜனநாயக மற்றும் புரட்சிகர சக்திகளின் ஒருங்கிணைந்த ஆதரவு என்பதுதான் சாதகத்தின் முக்கிய அம்சமாகும்.

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டத்தில் இனிவரும் 3வது சுற்றும் நிச்சயம் பலம் பொருந்தியதாக மாறும். இது உற்சாகத்திற்காக சொல்வது அல்ல. இது சமூக செயல் போக்கின் விதியாகும். அணுஉலை எதிர்ப்பு போராட்டம் என்பது ஏகாதிபத்தியத்தின் வளர்ச்சியடைந்த நாசகார கொள்ளையை எதிர்த்த போராட்டமாக மட்டுமல்லாமல் இது இயற்கை காப்பு, மாற்று மின் சக்திக்கான போராட்டமாகவும் இருப்பதால் அடுத்த கட்டத்தை நோக்கி நிச்சயப் நகரும்.

  மேலும் கூடங்குளம் மட்டுமல்லாமல் பல்வேறு போராட்டங்களும் உலகமயம், தாராளமயம், தனியார்மயத்திற்கு எதிராக நடப்பதால் மக்களை அணுஉலை எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக்குவது இயல்பிலேயே சுலபமாகவே இருக்கும். அணுஉலை எதிர்ப்பு போராட்டமும் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பாகமாக நடைமுறையில் மாறும். எனவே, கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டத்தின் இந்த இரண்டாவது சுற்றின் பின்னடைவு என்பது போராட்டத்தின் முடிவல்ல.... தொடக்கமே...

************

II

அணுஉலை வெடிக்கும் முன்னே வெடித்த அமைப்பு மற்றும் நடைமுறை சிக்கல்கள்

  கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு கூட்டமைப்பு செயற்பாட்டில் நடந்த குழப்பங்கள் மற்றும் தவறுகள் என்பன சிலரின் அக விருப்பங்கள் மற்றும் கத்துக்குட்டித்தனத்திலிருந்தே நடந்தன. இதில் முக்கிய பங்கு எங்களது அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கே உள்ளது. எனவே, எங்களது அமைப்பைச் சேர்நதவர்களால் செய்யப்பட்ட அனைத்து தவறுகளுக்கும் முதலில் சுயவிமர்சனம் செய்துகொள்கிறோம்.
 
 முதலில், இச்செயற்பாடுகளுக்கான எங்களது திட்டத்தை பார்ப்போம். தமிழக மக்கள் ஜனநாயக கூட்டமைப்பு முதலில் கூட்டப்பட்டது. ஒருசிலர் மட்டுமே கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கூடங்குள எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக தனியான கூட்டமைப்பு கட்டுவது என்றும் அதற்கு பிற அமைப்புகளை கூட்டி ஆலோசனை கூட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இத்தீர்மானம் எங்களது அமைப்பில் முன்வைக்கப்பட்டதே தன்னிச்சையாகத்தான். இருப்பினும் விவாதித்து கீழ்க்காணும் முடிவுகளை எடுத்தோம்.

1. தனியாக கூடங்குள எதிர்ப்பு கூட்டமைப்பு கட்டுவது.
2. கருத்தரங்கு, மாநாடுகள் இல்லாமல் மக்களிடம் செல்லும் பரப்புரை வடிவங்களை மேற்கொள்வது என இரண்டு அம்சங்கள் திட்டவட்டமாக தீர்மானிக்கப்பட்டது.

 மேற்கண்ட இரண்டு அம்சங்கள்தான் எங்களது திட்டத்தின் மிக அடிப்படைபானதாக கருதுகிறோம்.

 மேலும், ஆலோசனை கூட்டத்திற்கு மனோ.தங்கராஜ் கலந்துகொள்வார் என்று எங்களுக்கு தெரிவித்தபொழுது அவர் பார்வையாளராக கலந்துகொள்வார் என்று உறுதிபடுத்தப்பட்டது.

ஆனால், ஆலோசனை கூட்டத்தில் எல்லாம் தலைகீழாக நடந்தது.

1. மனோ.தங்கராஜ் கலந்துகொள்வது கூட்ட ஏற்பாட்டாளர்களுக்கே தெரியாது. மேலும் அவர் பார்வையாளராக மட்டும் கலந்துகொள்ளவில்லை. தனி அமைப்பு தேவையில்லை; அணுசக்தி எதிர்ப்பு இயக்கத்தில் இணைந்து அனைவரும் வேலை செய்யும்படி வலியுறுத்தவே அவர் வந்திருந்தார் என்பதும் முதலில் வாழ்த்துரை கூறிய உதயகுமாரின் கருத்துக்கு முரணாக தனது கருத்தை வலியுறுத்தினார் என்பதும் அதிர்ச்சிக்குரியதாக இருந்தது.

2. மேற்கண்ட முரண்பாட்டை கணக்கில் எடுத்து கொள்ளாமலும் ஆலோசனை கூட்டம் எந்த நோக்கத்திற்கு கூட்டப்பட்டதோ அதற்கு எதிராகவும் அணுசக்தி எதிர்ப்பு இயக்கத்தில் இணைந்து ஒரே அமைப்பாக செயல்படுவது என தீர்மானிக்கப்பட்டது. இதில் முக்கிய முரண்பாடு என்னவென்றால் எங்களது அமைப்பை சேர்ந்தவர்கள்தான் இதை வலியுறுத்தினார்கள் என்பதுதான்.

3. அடுத்து செயல் திட்டமாக மாநாடு (சென்னை) நடத்துவது என்று தீர்மானித்தது.
  
மேற்கண்ட தீர்மானங்கள் எங்களது அமைப்பில் விவாதிக்கப்பட்டு இதன் தவறுகள் கடுமையாக சுட்டிக் காட்டப்பட்டன. அதாவது, இரண்டு வெவ்வேறு தன்மைகளைக் கொண்ட சக்திகள் ஒன்று சேர்வது இரண்டு பேருக்குமே ஒவ்வொன்றுக்கும் உள்ள செயற்பாட்டு எல்லை மற்றும் சுதந்திரத்தை கடுமையாக பாதிக்கும் எனவும் ஒன்றிணைந்து செயற்படும் வளர்ச்சிப் போக்கில் எதிர்காலத்தில் இணைவதற்கு சாத்தியப்படலாம் என்று தெளிவுபடுத்த முயற்சித்தோம்.

மேலும், ஒரே அமைப்பாக செயற்படுவதில் மற்றொரு ஆபத்து உள்ளது என்றும் சுட்டிகாட்டினோம். அதாவது, ஏற்கனவே வெளிநாட்டு சதி, தீவிரவாதிகள் தொடர்பு என்று பரப்புரை நடந்துகொண்டிருக்கிறது; இச்சமயத்தில் போராட்டக் குழுவுடன் இணைவது அரசு விரிக்கும் வலையில் விழுவதாகும்; சங்கரன் கோயில் இடைத் தேர்தல் முடிந்ததும் அரசே திட்டமிட்டு ஏதாவது போலி வெடிவிபத்தை ஏற்படுத்தி ‘நக்சலைட்டுகள்’ கூடங்குளம் அணுஉலையை தகர்க்க சதி என்று அனைத்து போராட்டங்களையும் நசுக்கி துடைத்துவிடும் என்று எச்சரித்தோம்.

  எனவே, மாநாட்டுடன் (சென்னை) முடித்துக் கொண்டு பின்னர் விவாதித்து முடிவை எடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.
 
 ஆனால், மீண்டும் தன்னிச்சையாகவே செயற்பாடுகளை தொடர்ந்து மேற்கொண்டனர். எமது அமைப்பில் இல்லாத பதவியான இணைச் செயலர் என்று குறிப்பிட்டு “மாநாட்டு பணிகளைப் பற்றிய அனுபவ தொகுப்பு” என்ற அறிக்கை ‘பொதுமையர் பரப்புரை மன்றம்’ என்ற பெயரில் வெளியிடப்பட்டது. இதற்கும் எமது அமைப்பிற்கும் எந்த துளி சம்மந்தமும் கிடையாது. பிற அமைப்பினரே இதைப் பற்றி எங்களது கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

  இந்த அறிக்கையை பற்றி ஒரு வரியில் சொல்வதானால், அடையாள சிக்கலில் தவிக்கும் ஒரு தனி நபரின் சுய இன்பப்பிதற்றலே ஆகும்.
 
 இதில், எங்களது அமைப்பின் செயற்பாடுகளை பற்றி வானளாவ மிகைப்படுத்தப்பட்டிருந்தது. கூடுதலாக வேறுசில பொறுப்புகளையும் எடுத்து செயற்பட்டிருக்க வேண்டும் என்று மற்றவர்களை மட்டப்படுத்தி தம்மை மிகைப்படுத்தியிருந்தது. இவ்வாறு தங்களை மிகைப்படுத்தி காட்டிக்கொள்வதே அடையாளச் சிக்கலின் அவலமாகும்.
 
 உண்மையில் நாங்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய முன்னோடி சக்திகளை மட்டுமே கொண்டிருக்கிறோம். அம்மாநாட்டில் எங்களது பங்களிப்பு என்பது குறைவே ஆகும். எங்களது சக்திக்கேற்ப செயற்படுவது என்பதே முடிவாகும். மேலும், மாநாடு என்ற செயற்பாட்டில் உடன்பாடு இல்லாததால் சிலர் ஆர்வம் காட்டக் கூட இல்லை.
 
 அடுத்து, இம்மாநாடு (சென்னை) கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டத்தை தமிழகம் தழுவி விரிவாக்கி உள்ளது என்பது அடுத்த கதைப்பு ஆகும்.

இக்கூட்டமைப்பில் பங்கு பெற்ற அமைப்புத் தோழர்களே!
இதைப்படிக்கும் வாசகர்களே!

 கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டம் தமிழகம் தழுவி விரிவடைத்திருக்கிறதா? இடிந்தகரைக்குள் சுருங்கி உள்ளதா? என்பதை தயவு செய்து சிந்தித்து பாருங்கள்.

  இம்மாநாட்டிற்கு சொந்த சக்திகளை தவிர அல்லது கூடங்குளம் அணுஉலையை ஏற்கனவே எதிர்த்தவர்கள் இல்லாமல் வேறு புதிய சக்திகள் எத்தனை பேர் வந்தார்கள் என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.

  மாநாட்டிற்காக செலவழிக்கப்பட்ட நேரம், உழைப்பு, பணம் இதன் விளைவு என்ன? இதை நேரிடையாக மக்களிடம் சென்று பயன்படுத்தியிருந்தால் சில ஆயிரம் மக்களையாவது சந்தித்திருக்க முடியாதா? ஆதரவும் நிதியும் கூட கிடைத்திருக்காதா? சிந்தியுங்கள்.

  பின் இவர்களது செயல்பாட்டைப் பொருத்தவரை தமிழக மக்கள் ஜனநாயக கூட்டமைப்பின் முடிவுக்கு மாறாக வேறொரு முடிவை தீர்மானிக்க வைத்தது, முந்திரிக் கொட்டைத்தனமாக மாநாட்டின் துண்டு அறிக்கையை திருத்தியது போன்றவைகள் மட்டுமே எங்களுக்கு தெரியும். இத்தவறை நாங்கள் சுய விமர்சனமாக ஏற்றுக் கொள்கிறோம்.
 
 மற்ற குற்றச்சாட்டுகளைப்பற்றி எங்களுக்கு தெரியாது. அவைகளை தீர்க்கவும் முடியாது. ஏனெனில், அவர்கள் அமைப்பைவிட்டு வெளியேறிவிட்டனர். நாங்களும் அவர்களை அதிகாரபூர்வமாக எங்களது அமைப்பைவிட்டு நீக்கி உள்ளோம்.
 
 எப்படி இருப்பினும் எங்களது அமைப்பைச் சேர்ந்தவர்களது அனைத்து தவறுகளுக்கும் பொறுப்பேற்கிறோம். அதிலும் குறிப்பாக கூட்டமைப்பின் செயற்பாடுகளை தவறாக திசை திருப்பியதை தடுத்து நிறுத்த முடியாத இயலாமைக்கு வெட்கித் தலைகுனிகிறோம்.
       
- செயற்குழு, பொதுமையர் பரப்புரை மன்றம், தமிழ்நாடு

Pin It