periyar with cadres 480இந்தியாவில் தற்காலமிருக்கும் பல்வேறு மதங்கள், பல்வேறு ஜாதிகள் முதலியவைகளை உத்தேசித்து ஒருவருக்கொருவர் நம்பிக்கை உண்டாக்கவும் ஒற்றுமை உண்டாக்கவும் என்பதாகக் கருதி சென்ற சீர்திருத்தத்தின் போது தகுந்தபடி விசாரணை செய்து சில வகுப்புகளுக்கு பிரதிநிதித்துவ ஸ்தானங்கள் ஒதுக்கி வைத்தும், சில வகுப்பார்களுக்கே தனித்தொகுதிகள் மூலம் பிரதிநிதித்துவங்கள் ஏற்படுத்தியும் வைத்திருப்பது யாவரும் அறிந்த விஷயமே. இதிலிருந்து சமீபத்தில் வரப்போகும் சீர்திருத்த விசாரணைக் கமிஷன் போது முன்பு பொதுத் தொகுதியில் ஒதுக்கி வைத்த வகுப்பாரும் இனித் தங்களுக்குத் தனித் தொகுதி மூலம் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் என்ற கிளர்ச்சியைப் பார்த்து சிறு தொகையினரான நம் நாட்டுப் பார்ப்பனர்கள் இம்முறை அமுலுக்கு வந்து விட்டால் தாங்கள் இப்பொழுது அனுபவித்துக் கொண்டிருக்கிற ஏகபோக மிராசு போய் விடுமென்றும், தங்கள் சமூகத்துக்குத் தகுந்தபடி வீதாச்சாரம் கிடைப்பதாயிருந்தால் இப்பொழுது கிடைத்துக் கொண்டிருப்பதில் 10ல் ஒரு பாகங்கூட கிடைக்காமல் போய் விடுமே என்று பயந்து இக்கிளர்ச்சியையொழிக்க பல வழிகளிலும் சூழ்ச்சி செய்து வருவது யாவரும் அறிந்த விஷயமே.

இச்சூழ்ச்சிகளில் தலைமையான சூழ்ச்சியாக சில மகமதிய சகோதரர்களைப் பிடித்து தங்கள் சமூகத்துக்கு இனி தனித் தொகுதி வேண்டாமென்று சொன்னதாக ஏற்பாடு செய்து ஒரு பெரிய விளம்பரம் செய்து விட்டார்கள். இப்பொழுது அது “பிடிக்கப் பிடிக்க நமச்சிவாயம்” போல் வந்து முடிந்து விட்டது, அதாவது இந்து மகா சபையின் நடவடிக்கைகளிலிருந்தும், மகமதிய சமூகத்தார்களின் பிரமுகர்களிடமிருந்தும் தனித் தொகுதியே நிலைத்திருக்க வேண்டும் என்கிற மாதிரியாகவே விஷயங்கள் வெளியாகிக் கொண்டு வருகின்றன. இதிலிருந்து தென்னாட்டுப் பார்ப்பனர்களின் சூழ்ச்சி பலிக்கவில்லை என்றே தெரிகிறது.

(குடி அரசு - செய்திக் குறிப்பு - 24.04.1927)

ஒரு சிறு குறிப்பு

சென்னையில் உள்ள முக்கிய வைத்தியர்களில் அனுபவம் பெற்ற இரண்டு கனவான்கள் நமது உடல் நிலையைப் பற்றி கவனித்து சரீரத்தில் ரத்த ஓட்ட வேகம் அதிகமாயிருப்பதாகவும், சுமார் 150 டிக்கிரி பிரஷர் இருக்க வேண்டியது 200 டிக்கிரி போல் இருப்பதாகவும், இது போலவே கூடுதலாகிக் கொண்டு வருமாகில் ரத்தக் குழாய்கள் வெடித்து ரத்த ஓட்டம் நின்று கால் கை அல்லது மூளை முதலியதுகள் ஸ்தம்பித்துப் போகுமென்றும் அபிப்பிராயம் சொல்லி, அதற்கு சிகிச்சையாக குறைந்தது இரண்டு தடவை மூன்று மூன்று நாள்கள் முழுப்பட்டினி இருக்க வேண்டும் என்றும், இராத்திரி சாப்பாட்டை குறைத்துவிட வேண்டுமென்றும், மாமிச ஆகாரத்தை அறவே நீக்கி விட வேண்டும் என்றும், கண்டிப்பான சிகிச்சை சொல்லி இருக்கிறார்கள்.

ஸ்ரீலஸ்ரீ கைவல்ய சுவாமிகளுமிதற்கு முன்பே இதே அபிப்பிராயத்தை இரண்டு மூன்று தடவைகளில் சொல்லி இருக்கிறார். அன்றியும் நமக்கு சரீரத்தில் முன்னை விட எடை அதிகமாயிருந்தாலும், அதிகமான பலக்குறைவும், மூச்சு வாங்குதலும், அரை மணி நேரம் சேர்ந்தாப் போல எழுத முடியாதபடி அடிக்கடி சோம்பலும் கை வலியும் பேசப் பேச மறதியும் முதலிய குணங்கள் ஏற்பட்டிருக்கின்றன. வைத்தியரிடம் பட்டினி இருப்பதாய் ஒப்புக் கொண்டு வந்திருந்தாலும், தற்சமயம் ஏற்பட்டிருக்கும் இரண்டொரு சம்பவங்களை முன்னிட்டு கொஞ்ச நாளைக்கு பட்டினி விரதமெடுத்துக் கொள்ள சௌகரியமில்லாமலிருப்பதால் வைத்தியருக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத நிலைமையிலிருக்கிறோம். ஆனாலும், ஆகார விஷயத்தில் வைத்தியர் கட்டளைப்படி நடக்க முடிவு செய்து கொண்டிருப்பதால் மாமிச ஆகாரம் சாப்பிடுவதை நிறுத்தியிருக்கிறோம். ஆகையால் வெளிகளில் நம்மைக் கூப்பிடும் கனவான்கள் தயவு செய்து இந்த விஷயங்களை மாத்திரம் கவனித்துக்கொள்ள வேண்டுமாய்ப் பிரார்த்திக்கிறோம்.

(குடி அரசு - வேண்டுகோள் - 24.04.1927)

Pin It