ஊழலுக்கு எதிரான மாபெரும் போராட்டம் தொடங்கியிருப்பதான மயக்கநிலை உள்ள காலகட்டம் இது. ஊழலால் இந்தியத் துணைக்கண்டம் மூச்சுத் திணறிக் கொண்டிருப்பதான பிம்பத்தின் மாயக்கவர்ச்சி பலருக்குப் பிடித்திருக்கிறது. இலஞ்சமும் ஊழலும் ஏதோ திடீரென கிளம்பி பூதாகரமாக வளர்ந்துள்ளதாகச் சித்தரிக்கப்படுவது உண்மை இல்லை என்பது கொஞ்சம் யோசிப்பவர்களுக்குக் கூடப் புரியும். சரி, அப்படியானால் ஊழலின் ஊற்றுக்கண் எது என்பதையும் அதன் இன்றைய நிலையினையும் விளங்கிக் கொள்ளும்போது அன்னா கோஷ்டிகானத்தின் ரிதம் புலப்படும்.

ஊழல் என்பதன் சிறிய அலகு (முதல்படி) இலஞ்சம் ஆகும். அதிகாரத்தை அமல்படுத்துகின்ற, செயல்படுத்துகின்ற அமைப்புகளை (அரசு இயந்திரம்), மக்களும், தொழிலதிபர்களும் அணுகுகின்ற இடத்தில் இலஞ்சம் பிறக்கிறது. எளிய மக்கள் அத்தியாவசியத் தேவைகளின் பொருட்டு இந்த அமைப்புகளை நாடும்போது பலமுறை அலைக்கழிக்கப்படுகின்றனர். அத்தகைய சூழலில் வேறு வழியின்றி இலஞ்சம் கொடுத்தேனும் வேலையை முடிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இயல்பாக நிகழ வேண்டிய பணிகளுக்குக் கொடுக்கப்படக்கூடிய இலஞ்சம் இவ்வகையைச் சேர்ந்தது. ஆனால், தொழிலதிபர்கள் இதே அமைப்புகளை அணுகும் காரணமோ வேறுவிதமானது. அது நடைமுறைக்கு முரணான பணிகளையும் சாதாரண பணிகளை மிக விரைவாக முடித்திடவும் கொடுக்கப்படும் இலஞ்சம் ஆகும். முதல்வகைப்பட்ட இலஞ்சம் அதிகமாகப் பேசப்படும், விவாதிக்கப்படும். படைப்புகளில் இடம்பெறும். ஆனால், இரண்டாவது வகைப்பட்ட இலஞ்சத்தைப் பற்றிய குறைந்தபட்ச உரையாடல்களைக் கேட்பது கூட அரிது ஆகும்.

எளிய மக்களோடு தொடர்புடைய இலஞ்சத்தின் தாக்கத்தைவிட தொழிலதிபர்கள் X பெரு வணிகர்கள் X ஒப்பந்தகாரர்கள் ஆகியோரது இலஞ்சத்தினால் ஏற்படும் அதிர்வு ஆயிரம் மடங்கு ஆபத்தானது ஆகும். கிராம நிர்வாக, வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் சின்னச் சின்னக் காரணங்களுக்காகக் கைமாறுகின்ற சொற்பப் பணம் பற்றி அங்கலாய்ப்பவர்கள் மிக அதிகம். அவர்களும் கூட, தங்களது ஊர்களில் சாலை போடுதல், பாலம் கட்டுதல் போன்ற சற்று பெரிய வேலைகளில் புழங்கும் ஊழல் பணம் பற்றி பேசுவதோ, கேள்வி எழுப்புவதோ கிடையாது. தனிமனித ஒழுக்கம் அல்லது பயன்பாடு தொடர்பான நோயாகவே இலஞ்சம் பார்க்கப்படுகிறது. ஆனால், அதனைவிட சமூகத்தை, நாட்டை அழிக்கின்ற புற்றுநோயான ஊழல் மிகவும் அபாயகரமானது ஆகும். ஆனால், இது தொடர்பாக விவாதிப்பது திட்டமிட்டுத் தவிர்க்கப்படுகிறது. மேலும், தனிமனிதர் சரியானால் எல்லாம் சரியாகிவிடும் என, சமூக அறிவியலுக்குப் புறம்பாகப் பேசுவதையும் காணமுடிகிறது.

1990-களின் தொடக்கத்தில் உலகமயமாக்கல் என்னும் சந்தை விரிவாக்கம் தொடங்கிய பொழுது வந்த பாலச்சந்தரின் ‘வானமே எல்லை’ படத்தில், இலஞ்சம்; என்பது “out of passion” ஆகிவிட்டது என்ற வசனம் இடம் பெற்றது. அது இலஞ்சத்திற்கு மக்களைத் தயார்படுத்தியது. 1990-களின் பிற்பகுதியில் வந்த ‘இந்தியன்’ படமும் இலஞ்சத்தினைப் பற்றி மட்டுமே பேசியது. உலகமயமாக்கலின் இரண்டாம் கட்டமானது 2000-க்குப்பின் தீவிரமானது. அந்தக் காலகட்டத்தில் ‘அந்நியன்’ படம் வெளிவந்தது. அந்தப் படத்தில் சின்னத் சின்னத் தவறுகளுக்காக, சில கதாபாத்திரங்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டிருக்கும். அதற்குப் பதிலாக, மோசமான சாலை போட்டவர், இடிந்து விழுகிற பாலம் கட்டியவர், மணலை, மலையைத் திருடுபவர் போன்றோர், கதாபாத்திரங்களில் தண்டிக்கப்படுவதாக இருந்திருந்தால் ஒரு வேளை ஏதேனும் சில சமூக அசைவு நிகழ்ந்திருக்கக்கூடும். இங்கு சமூகப் பிரச்சினையினை விட தனிமனிதப் பிரச்சனையே தொடர்ந்து பேசுபொருளாக மாற்றப்பட்டு உள்ளது. (ரமணா திரைப்படம் தனிப்பட்ட விஜயகாந்த்துக்கு ஓர் அரசியல் கணக்குத் துவக்க உதவியதை நினைவில் கொள்ளலாம்) துரும்பைத் தூணாக்குவதும், தூணைத் துரும்பாக்குவதும் இங்கு பல தளங்களில் திட்டமிட்டு நடந்து வருகிறது. சரி, இனி அன்னாவின் குரல் யாருக்கானது, இப்பொழுது இந்த கோஷ்டிகானம் ஏன் ஓங்கி ஒலிக்கிறது போன்றவற்றையும் கவனத்திற்குட்படுத்துவோம்.

அன்னாவின் ஊழலுக்கு எதிரான குரலின் அடிப்படையும், ஊழலுக்கு எதிராகத்திரளும் பொதுமக்களின் ஆதரவு மனநிலையும் வேறு வேறானவை. அன்னா குழுவினர் முன்னெடுத்திருப்பது அரசியல்வாதிகளுக்கும் ஊழலுக்குமான தொடர்பு குறித்தது. இது மேற்கண்ட இருவிதத்திலிருந்தும் மாறுபட்டது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளான அரசியல்வாதிகளின் ஊழல் என்பது இதுவரை பிற எதிர்க்கட்சிகளால்தான் பேசப்பட்டுள்ளது. இப்பொழுது ஒரு சிறு குழுவின் வாயிலாக விவாதம் ஆக்கப்பட்டிருக்கிறது. இது புதுமையாக இருப்பதாலும், மக்களிடம் ஏற்கனவே உள்ள ஊழலுக்கு எதிரான பெருங்கோபத்தாலும் இந்த ஊழல் எதிர்ப்பு மேளா கோலாகலமாக கொண்டாடப்படுவதாக உள்ளது.

நாற்பது ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு நிகழ்வு. அன்றைய மாநில முதல்வரை ஒரு தொழிலதிபர் நேரில் சந்தித்து பேருந்து வழித்தடம் ஒன்று வேண்டி கோரிக்கை வைக்கிறார். உடனே முதல்வர், அதற்கான அனுமதி வழங்கியதும், தொழிலதிபர் அதற்கான பிரதிபலனாக என்ன செய்ய வேண்டும் எனக் கேட்கிறார். உடனே, முதல்வர் தனக்கு எதுவும் தேவையில்லை என்றும், ஆனால், தனது கட்சியின் மாவட்டச் செயலாளருக்கு (பேருந்து இயங்கப்போகும் மாவட்டத்தில் உள்ள) வேண்டியதை செய்து கொடுக்கச் சொல்கிறார். தொழிலதிபர் தலைநகரில் (சென்னையில்) இருந்து திரும்பியதும் அந்த மாவட்டச் செயலாளரை அவரது வீட்டில் சந்தித்து மேற்கண்ட விபரத்தினைத் தெரிவித்து என்ன வேண்டும் எனக் கேட்கிறார். அந்த மாவட்டச் செயலாளரோ, தன் மீதான (தலைவரின்) கருணையினை எண்ணி நெக்குருகிப் போகிறார். பின்பு ஒரு கோரிக்கை வைக்கிறார். அவர், என்ன கோரிக்கை வைத்திருக்கக்கூடும் என்பதை முடிந்தால் சில நிமிடங்கள் யோசித்துப் பாருங்கள். ஆனால், இன்றைய சூழலில் நமது கற்பனைக்கும் அப்பாற்பட்டது அந்த கோரிக்கை. அது என்ன தெரியுமா? ‘வீட்டில் பிள்ளைங்க பாலுக்கு கஷ்டப்படுதுங்க, ஒரு பால்மாடு வாங்கிக் கொடுத்தீங்கன்னா நல்லதாப் போகும்' என்பதுதான் அது. நம்மால் நம்பக்கூட முடியாத உண்மை இது.

தொடக்கத்தில் அரசியல்வாதிகளுக்கும், தொழிலதிபர்களுக்குமான தொடர்பு இந்த அளவினை ஒத்தது தான். தொழிலதிபர்கள் கொடுக்கும் இடத்திலும் அரசியல்வாதிகள் கைநீட்டி வாங்கிக் கொள்ளும் இடத்திலும் இருந்தனர். காலப்போக்கில் அரசியல்வாதிகள் கொஞ்சம் முன்னேறி சற்று அழுத்தமாக நன்கொடை பெறத்தொடங்கினர். பிறகு, மேலும் கூடுதலாக, கட்டாயமாக கட்சி நிதி கேட்டுக் கைநீட்டினர். கொடுக்க தயங்கியபோது, மறுத்தபோது கைநீட்டவும் ஆரம்பித்தனர். இதன் தொடர்ச்சியாக பொருளியல் காரணமாக அதிகாரம் மிக்க வலிமையான இணையாக, ஆள்பலத்தோடு சற்று பொருளியல் வலுவோடு கூடிய அரசியல்வாதிகள் உருவாகத் தொடங்கினர். இதன் காரணமாக, அரசியல்வாதிகளின் இலஞ்ச ஊழல் பற்றிய முணுமுணுப்புகளும் உரையாடல்களும் பரவலாக்கப்பட்டன.

இதற்கும் அடுத்த கட்டம்தான் மிக மிக அபூர்வமானது. அது உலகின், இதுவரையான சமூக, அரசியல் இயங்கியல் சட்டகங்களுக்கு அப்பாற்பட்ட புதிய விளைவு ஆகும். பொதுவாக, அரசியல்வாதிகளின் கடமை, பொறுப்பு மற்றும் பணியானது முதலாளித்துவ வர்க்கத்திற்கு சேவை செய்து சன்மானம் பெறுவதாகவே இருக்கும். ஆனால், உலகமயமாக்கலின் பின்பு இந்தியத் துணைக்கண்டத்தில் நிகழ்ந்த மாற்றம் புதிரானது. முதலாளித்துவ வர்க்கத்திடம் கெஞ்சி, மிரட்டி பணம் பெற்று வந்த அரசியல்வாதிகள், இப்போது அந்த நிலையினை முற்றிலும் கடந்து புதிய முதலாளிகளாகவும், தொழிலதிபர்களாகவும் மாறத் தொடங்கினர். இன்னும் கூடுதலாக, முதலாளித்துவ சமூகத்தை விட பொருளியலிலும் அதிகாரத்திலும் மிகப் பலம் வாய்ந்த புதிய வர்க்கமாக உருமாறத் தொடங்கினர். எடுபிடிகள் எஜமானர்களை மிஞ்சி உருமாறிய கதை இது. இரண்டு விதத்தில் இந்தக் கடவுளர்கள் தோன்றினர். ஒரு வகையினர் மாநிலங்களின் மிகப்பெரிய பொருளாதாரக் கேந்திரங்களான மாநில கிரிக்கெட் சங்கங்களைக் குறிவைத்தனர். அவை அதுவரை, மிகப்பெரும் தொழிலதிபர்களின் கைப்பிடிக்குள் மட்டுமே இருந்தன. அரசியல்வாதிகள் முதன்முறையாக அந்த கிரிக்கெட் சங்கத் தேர்தல்களில் தொழிலதிபர்களைத் தோற்கடித்து கைப்பற்றினர். அதே போன்று, இவர்களில் சில அரசியல்வாதிகளின் குடும்பத்தினர் அரசியல், வணிகம் இரண்டையும் சரிவரக் கலந்து செய்து, தெற்காசிய அளவில் பெரும் முதலாளிகள் பட்டியலில் புதிதாக இடம் பெற்றனர். மேற்கண்ட இருவகைப்பட்ட அரசியல் சூறாவளிகளையும் எதிர்கொள்ளத் தொழிலதிபர்கள் தடுமாறினர். அவர்களில் ஒரு பிரிவினர் வேறொரு அவதாரம் எடுக்க ஆரம்பித்தனர்.

சிலர், தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, அரசியல் முகமூடி அணியத் தொடங்கினர். சொத்துக்களை அரசியல்வாதிகளிடம் பறிகொடுத்துவிடாமல் இருக்க புதிய உத்தியை கண்டுபிடித்தனர். ஏதேனும் ஒரு அரசியல் கட்சியில் தம்மை இணைத்துக் கொள்வது அல்லது சொந்தமாக அரசியல் கட்சியைத் துவக்குவது. குறைந்த பட்சம் சட்டமன்ற, நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்களாகிவிடுவது போன்றவற்றை செயல்படுத்தலாயினர். மேலும், தங்களுக்கான பிரச்சனையினை பொதுமக்களின் பிரச்சனையாக மாற்ற வேண்டிய தேவையினையும் உணர்ந்தனர். முதலாளித்துவ வர்க்கத்தின் ஆதரவு சக்தியான ஊடகங்களின் மூலம் ஊழல் எதிர்ப்புப் பிரச்சாரம் முழுவீச்சில் செய்யப்பட்டது. ஏற்கனவே, வி.ஏ.ஓ., தாலுகா, கலெக்டர் அலுவலகங்களில் 50-க்கும் 100-க்கும் அல்லாடிக் கொண்டு, அவஸ்தையினை மனதுக்குள் போட்டுக் குமுறிக் கொண்டு இருந்த பொதுமக்களின் அமுக்கப்பட்டக் கோபம் எரிபொருளானது. நாம் இந்த மேற்கண்ட மூன்று விதமான ஊழல்களையும் எதிர்க்கிறோம். ஆனால், இன்றோ ஊழல் எதிர்ப்பு என்ற பதாகையின் பின் பல்வேறு சக்திகள் உள்ளதை அறியமுயடிகிறது. அனைவரும் பங்கேற்கும் வாய்ப்புள்ள பாராளுமன்ற ஜனநாயகத்தினை வெளியில் இருந்து கட்டுப்படுத்த விரும்புவோர், முதலாளித்துவசக்திகள், பன்னாட்டு வணிக நிறுவனங்கள், ஊடகங்கள், ஊழலில் இருந்து எப்படியாவது விடுதலை கிடைத்திட எண்ணும் எளிய மக்கள் என்று பல்வேறு மேகங்கள் அன்னாவைச் சுற்றி சூழ்ந்திருக்கின்றன. இவை யாருக்கான குரல்? யாருக்கான விளைவு?

அன்னா ஹசாரேயின் ‘காந்தி’ எளிமையான கோலத்தினை அடையாள அரசியலாகக் கொண்ட மோகன்தாஸ் காந்திக்குத் தொடர்பில்லாதது. ஆயிரம் ரூபாய் நோட்டில் சிரித்துக் கொண்டிருக்கிற காந்தியும் அன்னாகுழுவினரின் காந்தியமுமே நெருக்கமானது.

Pin It