எந்த ஒரு சமூகத்திலும், எது பற்றிய சட்டங்களும் மன்னராட்சி காலத்தின் தோற்றத்தோடே, உருப்பெற்றிருக்க முடியும் என்பது, அதாவது அதிகார நிறுவனம் என்று ஒன்று தோன்றிய பிறகுதான் மக்களைக் கட்டுப்படுத்தவும், அவர்கள் அதிகாரத்திற்கு எதிராகக் கிளர்ந்தெழாது தடுக்கவும் ஒழுங்கமைக்கவும் தேவைப்பட்டிருக்கும் என்பது கண்கூடு.

அதற்கு முன்பும் குழு ஒழுங்கமைப்புக்கு என்று சில நெறிமுறைகள் தேவைப்பட்டு அவை கடைப்பிடிக்கப்பட்டு வந் திருக்கும். என்றாலும் அதிகார நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட சட்டங்கள் மன்னராட்சியை யொட்டியே தோன்றியிருக்க முடியும் என்பது வெளிப்படை.

என்றாலும், இம்மன்னர்கள், பேரரசுகள் ஆட்சிக் காலத்தில் பிறப்பிக்கப்பட்ட சட்டங்கள், பெரும்பாலும் ஓலைச் சுவடிகளில் செப்பேடுகளில் பொறிக்கப்பட்டு அதன்படி அவை செயலாக்கப்பட்டு வந்திருக்கும். தவிரவும் இவை அந்தந்த மன்னரது ஆட்சிப் பரப்பு எல் லைக்கு உட்பட்டு அரசுக்கு அரசு வேறுபட்டதாகவும் இருந்திருக்கும்.

ஆனால் இப்படியில்லாமல் இந்தியத் துணைக்கண்டத்தில் வெள்ளையர்கள் ஆட்சிக்காலத்தில் தாங்கள் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தி வந்த அனைத்துப் பகுதிகளுக்கும் சேர்த்து ஒரே சட்டமாகப் பிறப்பிக்கப்படுவது, அதுவும் 18ஆம் நூற்றாண்டில் அச்சுக் கூடங்கள் வந்த பிறகு, தாளில், அச்சுப் பொறிகளால் அச்சாக்கம் செய்யப் பட்டு வெளி வரத் தொடங்கின. 1773 ஒழுங்கு முறைச் சட்டம், 1793 நிரந்தர நிலவரித் தீர்மானம், 1843 அடிமை நிலை ஒழிப்பு, 1858 இந்திய ஆட்சிச் சட்டம் போன்ற பல சட்டங்கள் நிர்வாகக் கட்டமைப்பு நோக்கில் இயற்றப்பட்டி ருந்தாலும், சமூக ஒழுங்கமைப்பு நோக்கில் அச்சு வடிவில் கொண்டு வரப்பட்ட முதல் சட்டம் 1860இல் வெளியிடப் பட்ட இந்தியத் தண்டனைச் சட்டம் என்றே தோன்றுகிறது. இந்தச் சட்டம்தான் பிரிட்டிஷ் ஆட்சிக்கு உட்பட்ட இந்தியத் துணைக் கண்டப் பகுதியில், சமூகத்தில் எவை எவை குற்றச் செயல்கள் எனவும், அவற்றுக்கு என்னென்ன தண்டனை எனவும் அறிவிக்கிறது. இக்குற்றச் செயல்களும் அதற்கான தண்டனைகளும் பலவானாலும் நாம் இங்கு எடுத்துக்கொண்டு ஆராய்கிற பாலியல் பிரச்சனைகளைப் பொறுத்த மட்டில், நாம் ஏற்கெனவே பார்த்தபடி இப்பிரிவுகள் சட்டத்தின் 292, 293, 294 ஆகிய பிரிவுகள் ஆபாச நடவடிக்கைகள் என்று வெள்ளை ஆட்சி கருதுகிறவற்றைத் தடை செய்தது.

அதாவது மக்களின் பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கை சார்ந்த நடவடிக்கைகளில் மிக இயல்பாகவும், இயற்கை யாகவும் வெளிப் பட்ட பாலுறவு சார்ந்த சித்தரிப்புகள், நையாண்டிகளை இந்தச் சட்டம் ஆபாசம் எனத் தடை செய்தது. இச்சட்டப் பிரிவுகளின் சாரமாவது:

பிரிவு 292 : புத்தகம், துண்டறிக்கைகள், குறு வெளியீடுகள், தாள்கள் இவற்றுள் காணப்படும் எழுத்துகள், சித்திரங்கள், ஓவியங்கள் முதலானவை ஆபாசமானவை எனக் கருதப்படுமாயின் அவற்றைத் தடை செய்ய வழி கோலுகிறது. தண்டனை : முதல் முறையானால் 2000 ரூபாய் அபராதமும் இரண்டாண்டுகள் சிறைத் தண்டனையும். இரண்டாவது முறையானால் 5000 ரூபாய் அபராதமும், 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும்.

பிரிவு 293 : மேலே குறிப்பிட்ட ஆபாச எழுத்துகள் மற்றும் படங்களை 20 வயதுக்குட்பட்டவர்களிடம் விற்பனை செய்தாலோ, விநியோகம் செய்தாலோ, சுற்றுக்கு விட்டாலோ முதல் முறை யானால் 2000 ரூபாய் அபராதமும், 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும். இரண்டாவது முறையானால் 5,000 ரூபாய் அப ராதமும் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கிறது.

பிரிவு 294 : இது பொது இடங்கயில் ஆபாச நடவடிக்கை களையும், கதைப் பாடல்கள் மற்றும் பிற பாடல்களில் உள்ள ஆபாச வார்த்தைகள், சித்தரிப்புகளையும் தடை செய்கிறது. இதற்கு ஒவ்வொரு சித்தரிப்புக்கும் மூன்று மாதச் சிறைத் தண்டனையும், அல்லது இத்துடன் அபராதமோ - அபராத வரையறை குறிப்பிடப் படவில்லை - தண்டனையாக அளிக்கப்படும் என்கிறது.

சமூகத்தில் ஆபாச ஒழிப்பு என்பதன் பேரால் உருவான இச்சட்டங்கள் அச்சு வடிவிலான நடவடிக்கைகளுக்குக் கூடுதல் தண்டனை வழங்குவதையும், வாய்வழி வெளிப்பாட்டிற்குக் குறைந்த தண்டனை வழங்குவதையும் கவனிக்க வேண்டும்.

இத்துடன் பிரிவு 294இல் கூறப்படும் நடவடிக்கைகள், கதைப் பாடல்கள் ஆகியன சமூகத்தின் பண்பாட்டு நடவடிக்கைகளில், பண்டிகைகள், விழாக்கள், இறை ஊர்வலங்கள் முதலான தருணங்களில் நடத்தப்பெறும் கலை நிகழ்ச்சிகளில் அதிகம் இடம் பெறுவன. இவற்றுள் பெரும்பாலும் பெண்களே அதிகம் பங்கேற்கிறவர்கள் அல்லது பெண்களது தோற்றம், நடையுடை, பாவனைகளே ஆபாசமானதாகக் கருதப்படு கிறவை என்கிற நோக்கில் இந்த ஆபாசத் தடை என்பது, பெண்களது இயல்பான கலை நடவடிக்கைகள் மேல் தொடுக்கப்பட்ட தாக்குதல் எனலாம். இதுவே இதுபோன்ற நட வடிக்கைகள் மீதான முதல் அடி என்று தோன்றுகிறது. இத்துடன் 2000 ரூபாய், 5000 ரூபாய் அபராதம் என்பதை இன்றைய நோக்கில் மதிப்பிடாமல் கிட்டத்தட்ட இன்றைக்கு 150 ஆண்டுகளுக்கு முற்பட்ட நிலையில் அப்போது அதன் மதிப்பு எப்படிப் பட்டதாக இருந்திருக்கும் என்கிற நோக்கிலும் இத்தண்டனைகளின் கொடுமையைப் புரிந்து கொள்ளலாம்.

சரி, இப்படித் தாக்குதல் வந்தால் இதன் விளைவு என்னாகும் என்று நினைக்கிறீர்கள். இதில் தொடர்புடைய பெண்கள், தொழிலை விட்டுப் போய் வேறு தொழிலைப் பார்க்க வேண்டும். அல்லது இந்த ஆபாசங்களைத் தவிர்த்த தூய, புனித பாடலைப் பாடி தொழிலைத் தக்கவைத்துக் கொள்ளவேண்டும்.

இந்த நிலையில் இத்தேவையை நிறைவு செய்ய, பண்டிதர்கள் பலர் இந்நிகழ்வுகளுக்கென்றே, பல புதிய தூய பாடல்களை இயற்றி னார்கள். இந்த தூய்மையோடு ஒத்துப் போக முடியாத அல்லது இந்தப் பண்டிதத் தனத்துக்கும் பாண்டித்திய மொழிக்கும் தங்களை உட் படுத்திக் கொள்ள இயலாத பாமரக் கலைஞர்கள் குறிப்பாகப் பெண்கள், பிழைக்க வேறு வழியற்றவர்களாகத் தங்களுக்கு வாய்ப் பான பரத்தைமை தொழிலில் ஈடுபடத் தொடங்கினார்கள்.

இங்கே, இதில் நாம் கவனிக்க வேண்டியது. இந்த ஆபாசங்களை வெள்ளை ஆட்சியாளர்கள் தடை செய்ய வேண்டிய அவசியமென்ன? இதனால் அவர்களுக்கு என்ன இடையூறு வந்தது? இதில் சமய சீர்திருத்த இயக்கங்களும், வெள்ளை ஆட்சிக்கு உறுதுணையாக இருந் திருக்கின்றன. என்றால், இவற்றுக்கு வெறும் சமூகத் தூய்மை மட்டும் தான் நோக்கமா? இதைத் தாண்டி வேறு நோக்கங்கள் அதாவது மனித உடல்கள், சொற்கள், நடவடிக்கைகள் இவற்றின் மீதான ஆதிக்கம், கட்டுப்பாடு போன்ற நோக்கங்கள் எதுவுமே ஆட்சியாளர்களுக்கு இல்லையா? என்றால் நிச்சயம் உண்டு. ஆக, அந்த நோக்கிலேயே இச்சட்டங்கள் பிறப்பிக்கப் பட்டன.

இத்துடன் இதுபற்றி இன்னொரு கோணத்திலும் யோசித்துப் பார்க்க வேண்டும். மனிதப் பேச்சுகளில், நடவடிக்கைகளில் இவை இவை ஆபாச வார்த்தைகள், இவை இவை கெட்ட நடவடிக்கைகள் என்கிற இன்றைய கருத்தாக்கம் எப்படித் தோன்றியிருக்க முடியும், யார் இதை உருவாக்கி யிருக்க முடியும்? இவை எவரால் எப்படிக் கட்டமைக்கப் பட்டிருக்க முடியும்? என்று சிந்தித்துப் பார்த்தால், இதன் பின்னணி ஓரளவுக்குப் புரியும். இத்துடன் இப்படிப்பட்ட சட்டங்கள், நடவடிக்கைகள் தானே ஒவ்வொரு குடும்பத்திலும், வீட்டிலும், வளரும் பிள்ளைகளை, பள்ளியில் பயிலும் பிள்ளைகளை, சமூகத்தில் நடமாடும் மனிதர்களை, இது இது நல்ல வார்த்தைகள், நல்ல நடவடிக்கைகள், இது இது கெட்ட வார்த்தைகள், கெட்ட நடவடிக்கைகள் என்று கருத வைத்திருக்க முடியும் என்பதும் புரியும்.

இத்துடன் பிரிதொரு கருத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது, ஆதிக்கங்களும், அதிகார மையங்களும் மேற் கொள்ளும் நடவடிக்கைகள், பிறப்பிக்கும் சட்டங்கள் அனைத்தும் ஆதிக்க நலன் சார்ந்தவையாகவே இருக்கும் என்று நாம் சொல்லும் போது, இவை முற்றாக ஆதிக்க நலன் சார்ந்ததே, சமூகத்துக்கு வேறு எந்தப் பயனும் விளைவிக்காததே என்று சொல்வதாக, தவறாக, வறட்டுத் தனமாக அர்த்தம் செய்து கொள்ளக் கூடாது.

காரணம் அதிகாரம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் ஆதிக்க நலனும் இருக்கும், அதன் உப விளைவாய் சில சமூக நலனும் இருக்கும். அதாவது சமூகத்திற்குச் சில நலன்களை, நலத் திட்டங்களை, சீர்திருத் தங்களை, நலிவுற்ற மக்களுக்கு வசதிகளை ஏற்படுத்தித் தந்தால்தான் தங்களது ஆதிக்கங்களை மேலும் வலுப்படுத்தி வைத்துக் கொள்ளமுடியும் என்கிற நோக்கிலும் இருக்கும்.

எனவே அதிகார மையங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், பிறப்பிக்கும் சட்டங்களை வறட்டுவாத நோக்கில் ஒற்றைக் கோணத்தில் மட்டுமே அணுகாது அவற்றை இரு வகையிலும் அணுகி, அதன் சாதக பாதகங்களை ஆராய்வதே பொருத்தமாயிருக்கும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இந்த வகையில் இந்த ஆபாச எழுத்துகள், படங்களை, கதைப் பாடல்களில் அதன் சித்தரிப்புகளை, மெய்ப்பாடுகளை ஆட்சியாளர்கள் தடை செய்ததன் மூலம் இவை சமூக நல நோக்கில் என்ன சாதகமான விளைவுகளை ஏற்படுத்தின? அதிகார நோக்கில் அவை எதைச் சாதித்தன? என்று நோக்க இதன் சாரம் புரியும். 

ஆதிக்க, அதிகார மையங்கள் கொண்டு வரும் சட்டங்களை இப்படி இரண்டு கோணத்திலும் நோக்கவேண்டும் என்று இங்கே குறிப்பிடுவதன் நோக்கம் 292, 293, 294 பிரிவுகள் மூலம் ஆபாச நடவடிக்கைகளைத் தடை செய்த இதே இந்தியத் தண்டனைச் சட்டம் 1860இன் பிரிவு 375 தான், இளம் சிறுமிகளிடம் வன்பாலுறவு கொள்வதைக் குற்றச் செயலாக்கி, இளம் பெண்களுக்குப் பாதுகாப்பு அளித்தது.

இந்த 1860 சட்டத்திற்கு முன் வேறு எந்தச் சட்டமும் இளம் பெண் களோடு வன்பாலுறவு கொள்வதைத் தடை செய்து, அவற்றைக் குற்றச் செயலாக அறிவித்ததாகத் தெரியவில்லை. இதுவரை நிலவிய வழக்கம் ஆண்களுக்குப் பெண்கள் மீது வயது வரம்பு பாராது மட்டு மீறிய சுதந்திரத்தைக் கொடுத்து, பெண்களை வெறும் போகப் பொருளாக, தங்கள் காம இச்சையைத் தீர்த்துக் கொள்ள வாய்த்த பண்டமாகவே கருதவைத்தது.

ஆனால் இந்த 1860 சட்டம்தான் முதன் முதலாக 10 வயதுக் குட்பட்ட சிறுமிகளோடு வன்பாலுறவு கொள்வதைக் குற்றச் செயலாக்கியது. பிறகு இது பல்வேறு மாற்றங்களுக்குள்ளாகி, தற்போது நடப்பில் இது 16 வயதாக மாற்றப்பட்டுள்ளது. அதே போல ஒருவள் தனக்கு மனைவியே ஆனாலும் அப்பெண்ணை அவள் விருப்பத்தின் பாலோ, விருப்பம் இல்லாமலோ பாலுறவு கொண் டாலும் அவள் 16 வயதுக்குட்பட்ட வளானால் அது வன்பாலுறவே என்று தற்போது நடப்பில் உள்ள சட்டம் 375இன் உட்பிரிவு 6 கூறுகிறது.

இவ்வாறு முதிர்வயதடையாத சிறுமிகளோடு பாலுறவு கொள் வதைத் தடை செய்த இந்திய தண்டனைச் சட்டத்தின் நீட்சியாக அதற்கு 20 ஆண்டுகள் கழித்துதான், 1929இல் குழந்தை மணத் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இது இ.த.ச. 1860, 375 இல், பாலுறவு கொள்ளும் பெண்களின் வயதை 10 என அறிவித்திருந்ததை 14ஆக ஆக்கியது.

இதற்கே இந்து சனாதனிகளிடமிருந்தும், சனாதன தேசியவாதி களிடமிருந்தும் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. இது குடும்ப உறவைச் சிதைத்துவிடும் எனவும், ஆண்களுக்கு இளம் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான கட்டுப்பாட்டைத் தகர்த்துவிடும் எனவும், இது காலம் காலமாக ஒழுகி வந்த மரபுகளின் மீறல் எனவும் அவர்கள் வாதிட்டனர்.

அதாவது இளம் சிறார், சிறுமிகளின் திருமண வயதை 14ஆக ஆக்கியதும், வன்பாலுறவுக் குற்றச் செயல்களுக்குத் தண்டனை வழங்கும் இ.த.ச. பிரிவு 375இல் மனைவியே ஆனாலும், அவள் விருப்பத்திற்குட் பட்டே ஆனாலும், அவள் 16 வயதுக்குட்பட்ட வளாயிருந்தால் அது குற்றச் செயலே என ஆக்கியதும் பெண்களின் மீதான ஆண்களின் கட்டுப் பாட்டை இழக்கச் செய்துவிடும், முதிர் வயதுடைய மூர்க்கத்தனமான கணவன் மார்களின் பாலுறவுத் தொல்லையிலிருந்து விடுதலை பெற இது பெண்களுக்கு வாய்ப் பளிப்பதாகிவிடும் என்றும் அவர்கள் அச்சம் தெரிவித்தனர்.

இவர்களின் எதிர்ப்பை யொட்டி இவர்களைத் திருப்திபடுத்தும் வகையில் ஆட்சியாளர்கள் 1882 இந்திய சிவில் சட்டம் பிரிவு 260-ல் உள்ள மணவாழ் உரிமையை இந்த சனாதனிகளுக்கு ஆதரவாகக் காட்டி எந்தப் பெண்ணும் கணவனோடு மணவாழ்க்கை வாழ மறுத்தால் அப் பெண்களுக்கு சிறைத் தண்டனை அளிக்க இதில் வழி வகை செய் திருப்பதாக அவர்களை ஆறுதல் படுத்தினர். எனினும் சில பெண்கள் சிறைக்குப் போனாலும் போவோமே தவிர, இப்படிப்பட்ட குரூரக் கணவன்களுடன் வாழமாட்டோம் என்று கணவனை விட்டுப் பிரிந்து போன சம்பவங்களும் நிகழ்ந்தன.

1884இல் ஒரு சம்பவம். தாதாஜி பிகாஜி என்பார் ருக்மாபாய் என்னும் தன் மனைவி தன்னோடு வாழ மறுக்கிறாள் என்று வழக்குத் தொடுக்கிறார். கல்வியறிவற்ற, முரட்டுத்தனமான, தன்னலமிக்க அக்கணவனுடன் வாழ இயலாது. அதுவும் தான் எந்த விபரமும் அறியாத 11 வயதில் தனக்கு நடத்தி வைக்கப்பட்ட திருமணத்தை ஏற்க முடியாது. சிறைக்குப் போனாலும் போவேனே தவிர, அவனோடு வாழ இயலாது என மனைவி பதில் தெரிவிக்க இந்த சிக்கல் சர்ச்சைக்குள்ளாகிறது. என்றாலும், இந்த உரிமையின் கீழ் கணவனோடு வாழ மறுக்கும் பெண்ணுக்குச் சிறைத் தண்டனை வழங்கும் சட்டம் 1923 வரை நீடித்தது. ஆனாலும் ருக்மாபாய் சம்பவத்தை அடுத்து சமூகத்தில் இதுபோன்று அவ்வப்போது நிகழ்ந்து வந்த வேறு பல சம்பவங்களும், பொதுவாகவே ஏற்பட்டு வந்த விழிப்புணர்ச்சியும் பெண்கள் சார்ந்த சட்டங்களில் மேலும் பல மாற்றங்களைக் கொண்டு வந்தன.

காட்டாக, மேற்கு வங்கத்தில் 35 வயது ஆணுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்ட புல்மோனி என்னும் 10 வயது சிறுமி கணவனுடைய வன்பாலுறவால் கொடுங்காயமுற்று மரணமடைய, இதுவும் இதுபோன்ற பல சம்பவங்களும் இளம் சிறுமிகளின் திருமண வயதை உயர்த்தக் கோரி கிளர்ச்சிகள் உருவாகக் காரணமாயின. விளைவாக, சிறுமிகளின் திருமண வயது ஏற்கெனவே 10 என்றிருந்ததை, 1891 இல் 12 வயதாக உயர்த்தி ஆட்சியாளர்கள் ஆணையிட்டனர்.

எனினும், இப்படிச் சட்டங்கள் பிறப்பிக்கப் பட்ட பின்னும் நடைபெறும் கொடுமைகளைப் புகாராகத் தந்து அதற்கு நியாயம் கோருமளவுக்குச் சம்மந்தப்பட்ட மக்கள் தயாராக இல்லை. ஆவணங்கள் தரும் தகவல்கள்படி 1891-92இல் இரண்டு வழக்குகளும், 1892 - 93இல் இரண்டு வழக்குகளும் மட்டுமே இது தொடர்பாக பதிவு செய்யப் பட்டுள்ளன. ஒரு சம்பவத்தில் ஆக்ராவில் நான்ஹி என்னும் சிறுமி தனது கணவனால் வன்பாலுறவுக்கு உள்ளாக்கப்பட்டு சீரிய நிலைமைக்கு ஆளாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின் மரணமடைந்திருக்கிறாள். இதையொட்டி கணவனுக்கு இரண் டாண்டு சிறைத் தண்டனை அளிக்கப் பட்டுள்ளது. இப்படிப்பட்ட பல்வேறு சம்பவங்களுக்கும், அனுபவங்களுக்கும் பின், 1929இல் ஊhடைன ஆயசசயைபந சுநளவசயiவே ஹஉவ 1929 கொண்டு வரப்பட்டு, திருமண வயது 12 இலிருந்து 14ஆக மாற்றப்பட்டது. பிறகு, 1978இல் இது 18ஆக ஆக்கப்பட்டது.

சிறப்புத் திருமணங்கள் சட்டம்

ஐரோப்பியர்கள் இந்தியத் துணைக் கண்டத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கியபோது இங்கு இருந்தவர்கள் இசுலாமியர்கள், சீக்கியர்கள், பார்சிகள், சமணர்கள், பௌத்தர்கள், சைவர்கள், வைணவர்கள் ஆகிய சமயப் பிரிவினரே. ஐரோப்பியர் வருகையோடு வந்ததே கிறித்துவம்.

எனவே வெவ்வேறு பழக்கவழக்கம், பண்பாடு கொண்ட இந்திய மக்களுக்கான திருமண உறவுகள் இம்மதங்கள் சார்ந்தோ, இம்மதங் களுக்குள்ளேயுள்ள உட்பிரிவுகள் மற்றும் சாதி சார்ந்தோ தான் தீர்மானிக்கப்பட்டன. எனவே, திருமண உறவு சார்ந்த சட்டங்கள் ஒவ்வொரு மதத்திற்குமாகத் தனித்தனியே இயற்றப்பட்டன.

இந்நிலையில் இதற்கு அப்பாற்பட்டு சாதி, மதச் சடங்குகள், பிற சம்பிரதாயங்களைக் கடந்து நடைபெறும் திருமணங்களை அங்கீகரிக்கும் பொருட்டு வெள்ளை ஆட்சியாளர்கள் 1872 இல் சிறப்புத் திருமணங்கள் சட்டத்தைக் கொண்டுவந்தனர். இச்சட்டத்தின் சிறப்பு ஒரு ஆண் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களைத் திருமணம் செய்து கொள்வதை இது தடை செய்ததுடன், சட்டப் பூர்வமான மண விலக்கிற்கும் இது வாய்ப்பளித்தது.

எனினும் எந்த மதப் பழக்க வழக்கங்களையும் சாராத, அதைப் பின்பற்றாதவர்களுக்கே இது பொருந்தும் என்பதாக, இதன் செயல் பாட்டெல்லை மிகக் குறுகியதாகவே அமைந்தது. இதை இந்துக்கள் அனைவருக்கும் உரியதாக ஆக்கும் கோரிக்கை சீர்திருத்தவாதி களிடமிருந்து எழுந்தது. ஆனால் பழமைவாதிகளிடமிருந்து இதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதோடு காலம் காலமாகத் தொடர்ந்து வரும் பழக்க வழக்கங்களை இது மீறுவதாகும் எனவும் இதை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்தது. நீதி மன்றங்களும், இந்தப் பழமைவாதப் போக்கிற்கு ஆதரவாகவே தீர்ப்பளித்தன.

காட்டாக, உதம்குமாரி எதிர் சராஜ்குமாரி என்னும் வழக்கில் உ.பி.யின் அலகாபாத் நீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பில், பார்ப்பனர்களுக்கும் சத்திரியர்களுக்கும் இடையேயான திருமணம் சட்டப் பூர்வ திருமணமாகாது. அது செல்லத்தக்கதல்ல என்றே தீர்ப்பளித்தது. தொல்கால நடைமுறை என்னவாக இருந்தாலும், நாட்டின் பிற பகுதிகளில் நிலவும் சட்டங்கள் என்னவாக இருந்தாலும், இந்தப் பகுதிக்கு அது செல்லாது என்று அது தன் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது.

இப்படி பழமைவாதிகளது எதிர்ப்பினாலும், நீதி மன்றங்களின் தீர்ப்பினாலும் ஒரு குறிப்பிட்ட வரம்புக்குட்பட்டே செயல்பாட்டுக்கு வந்த இச்சட்டம், படிப்படியாக ஏற்பட்ட சமூக மாற்றம், விழிப்புணர்ச்சி மற்றும் பிற சீர்திருத்த நடவடிக்கைகள் காரணமாகப் பெருமளவு அங்கீகாரத்திற் குள்ளாக, சுதந்திர இந்தியாவில் 1954இல் மேலும் பல விரிவான வாய்ப்புகளுடன் இச்சட்டம் புதுப்பிக்கப்பட்டு, அதாவது 1872 சட்டத்திற்கு மாற்றாக 1954 சட்டம் கொண்டு வரப்பட்டு இதுவே தற்போது நடப்பில் இருந்து வருகிறது. இது தவிர, இந்து திருமணங்கள் சட்டம் 1955இல், தமிழ்நாடு அரசு 1967இல் ஒரு திருத்தம் கொண்டு வர, இதுவே தற்போது நடைபெற்று வரும் பல சுய மரியாதை, சீர்திருத்தத் திருமணங்களுக்கு அங்கீகாரம் அளிப்பதாகவும் இருந்து வருகிறது.

Pin It