தமிழர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளனர். ஆந்திர மாணவர்கள் ஓசையில்லாமல் ஒரு ஆக்கிரமிப்பைத் தமிழ்நாட்டு மண்ணில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இம்முறை ஆக்கிரமிப்பு நிலத்திற்காகஅல்ல; உயர்கல்வி வாய்ப்புகளுக்காக. காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஐ.ஐ.ஐ.டி. எனப்படும் இந்தியத் தகவல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் B.E. படிப்பதற்கான மொத்தமுள்ள 82 இருக்கைகளில் 61 இருக்கைகளை ஆந்திரத்து மாணவர்கள் பெற்றுள்ளனர். தமிழ்நாட்டிலுள்ள 12 ஆம் வகுப்புப் பயிலும் இளம்மாணவர்கள் ஒரே ஒரு இடத்தை மட்டுமே பெற்றுள்ளனர். ஏனிந்தப் பின்னடைவு? இப்பின்னடைவை நாம் எவ்வாறு சரிசெய்யப் போகிறோம்? சற்று அலசுவோம்.
 
நடுவண் அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், தகவல் தொழில்நுட்பத் துறையை மேம்படுத்த ஐ.ஐ.ஐ.டி. எனப்படும் இந்தியத் தகவல் தொழில்நுட்பக்கல்வி நிறுவனங்களை நிறுவியுள்ளது. தற்போது இந்தியாவில் 5 ஐ.ஐ.ஐ.டி.கள் நிறுவப்பட்டுள்ளன. அவற்றில் தமிழ்நாட்டில் அமைந்தள்ள ஐ.ஐ.ஐ.டி.-காஞ்சியும் ஒன்று.

1.Indian Institute of Information Technology,Design and Manufacturing (IIITDM), Kanchi
 
2.Indian Institute of Information Technologyand Management (IIITM) , Gwalior.
 
3.Indian Institute of Information Technology,Amethi.
 
4.Indian Institute of Information Technology,Jhalwa.
 
5.Indian Institute of Information Technology,Design and Manufacturing (IIITDM), Jabalpur.
 
மேலும் பன்னிரெண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் (2012-17) இன்னும் 20 ஐ.ஐ.ஐ.டி.-களை நிறுவ நடுவண் அரசு உத்தேசித்துள்ளது. அவற்றில் ஒன்று திருவரங்கத்தில் தொடங்கப்பட உள்ளது.
 
தமிழ்நாட்டு அரசின் பங்கு:
 
தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஐ.ஐ.ஐ.டி.களுக்குத் தேவையான நிலம், மின்சாரம், சாலை வசதிகள், 35 விழுக்காடு கட்டுமான நிதி,....போன்றவற்றைத் தமிழ்நாட்டுஅரசு இலவசமாக வழங்குகிறது. இதைப் போல பிற மாநில அரசுகளும் தங்களது எல்லைகளுக்குள் அமைந்த ஐ.ஐ.ஐ.டி.களுக்கு வழங்குகின்றன.

உதாரணமாக, திருவரங்கத்தில் அமையவுள்ள ஐ.ஐ.ஐ.டி.க்கு 56.3 ஏக்கர் நிலத்தைத் தமிழ்நாட்டு அரசு இலவசமாக வழங்கியது. மேலும் 35 விழுக்காடு கட்டுமானச் செலவையும் தமிழ்நாட்டு அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.
 
சேர்க்கை முறை:
 
12 ஆம் வகுப்பு மாணவர்கள் இங்கு B.E. படிக்க Joint Entrance Exam-Main (JEE-Main) எழுத வேண்டும். இந்த நுழைவுத் தேர்வின்அடிப்படையில் அகில இந்தியத் தரவரிசைப் பட்டியல் (All India Rank) தயாரிக்கப்பட்டு B.E. இருக்கைகள் நிரப்பப்படுகின்றன.
 
தற்போதைய சேர்க்கை முறையால் தெலுங்குமயமாகிய ஐ.ஐ.ஐ.டி. காஞ்சிபுரம்:
 
ஐ.ஐ.ஐ.டி. காஞ்சிபுரத்தில் 2011 ஆம் ஆண்டில் B.E. படிப்பதற்கான இருக்கைகள் மொத்தம் 82. இவற்றில் 61 (அதாவது 74 விழுக்காடு) மாணவர்கள் ஆந்திர மாணவர்கள். தமிழ்நாட்டு மாணவர்கள் பெற்ற இடம் ஒரே ஒரு இடம். இப்போது ஐ.ஐ.ஐ.டி. காஞ்சிபுரம் வளாகத்தில் தமிழ்மொழியின் நிலைமை என்னவாகும் என்பதைக் கற்பனைச் செய்து பாருங்கள்!

இப் பிரச்சினைகளெல்லாம் ‘அதிகப்படியான நடுவணாக்கம்’ (Excessive Centralization) என்னும் நடுவண் அரசின் ஆதிக்கக் கொள்கையினால் விழைவதுதான். நடுவண் அரசிடமிருந்து தமிழ்நாட்டு மக்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் இந்த கொள்கையின் வழி ஒரு குறிப்பிட்ட இனத்தவரால் எவ்வாறு சுரண்டப்படுகின்றன என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். புரிந்த பின்னர் ஓர் அறிவுசார் சமூகமாக இயங்கி நடுவண் அரசிடமிருந்து தன் மாநிலத்தின் பங்கைப் பெறப் போராட வேண்டும்.

ஐ.ஐ.ஐ.டி.யில் 12ஆம் வகுப்பு படிக்க தற்போது பின்பற்றப்படும் நடைமுறை தமிழ்நாட்டு மாணவர்களுக்கு கடும் பாதகத்தை உருவாக்குவதால், பின்வரும் கோரிக்கைகளை நடுவண் மற்றும் தமிழ்நாட்டு அரசுகளிடம் வைக்க வேண்டும்.
 
(1) மொத்தமுள்ள B.E. இருக்கைகளில், ஐ.ஐ.ஐ.டி. அமைந்துள்ள மாநிலத்தவர்களுக்கு, 50 விழுக்காடு இருக்கைகள் ‘மாநில ஒதுக்கீடு’(State Quota) என்று வழங்கப்பட வேண்டும். இந்த 50 விழுக்காடு மாநில ஒதுக்கீடு இருக்கைகளில் மாநிலத் தரவரிசைப் பட்டியல் (State Rank) தயாரிக்கப்பட்டு இருக்கைகள் நிரப்பப்பட வேண்டும். இதன்படி, ஐ.ஐ.ஐ.டி. காஞ்சிபுரத்திலும், ஐ.ஐ.ஐ.டி திருவரங்கத்திலும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு, மொத்தமுள்ள இருக்கைகளில் 50 விழுக்காடு இருக்கைகள், தமிழ்நாட்டுத் தரவரிசைப் பட்டியலின்படி கிடைக்கும்.

(2) மீதமுள்ள 50 விழுக்காடு இருக்கைகளில் ஏற்கனவே பின்பற்றப்படும் அனைத்திந்தியத் தரவரிசைப்பட்டியல் முறையைத் தொடரலாம்.

50 விழுக்காடு மாநில ஒதுக்கீடினால் வரும் நன்மை:
 
உதாரணமாக, 50% மாநில ஒதுக்கீடு முறைப் பின்பற்றப்பட்டிருந்தால், தமிழ்நாட்டு மாணவர்களுக்கு ஐ.ஐ.ஐ.டி. காஞ்சியில் குறைந்தது 41 இருக்கைகள் கிடைத்திருக்கும். தற்போது ஒரே ஒரு இடம் மட்டுமே கிடைத்துள்ளது. மேலும், வரப்போகும் ஐ.ஐ.ஐ.டி. திருவரங்கத்திலும் தமிழ்நாட்டு மாணவர்களுக்குக் குறைந்தது 50 விழுக்காடு இருக்கைகள் கிடைக்கும்.
 
இதனை நடைமுறைப்படுத்த முடியுமா? என்ற வினா மக்களுக்கு எழும். அதற்கு பதில் “நிச்சயமாக முடியும்” என்பதுதான். ஏனென்றால் இந்த 50% மாநில ஒதுக்கீடு முறை ஏற்கனவே என்.ஐ.டி. எனப்படும் தேசியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் நடைமுறையில் உள்ளது.

எனவே, ஐ.ஐ.ஐ.டி.களில் என்.ஐ.டி.யில் உள்ளதைப் போல் இளநிலைப் பொறியியல் சேர்க்கைகளில்50 விழுக்காடு மாநில ஒதுக்கீடு (50% State Quota) முறையைக் கொண்டு வர குரல் எழுப்புவோம். நம் 12 ஆம் வகுப்பு இளம் மாணவர்களுக்கு நடுவண் அரசிடமிருந்து நியாயமாகக்.கிடைக்க வேண்டிய உயர்கல்வி வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுப்போம்.
 
- சா.வாகைச் செல்வன்

Pin It