1992ல் உலக வணிக நிறுவனம் சொல்லிய உலகமயமாக்கலின் முக்கிய சாராம்சங்கள் இவை:

1. தங்கு தடையின்றி எந்த நாட்டினரும் எவருடனும் வணிகம் செய்து கொள்ளலாம். யார் அதிகம் உற்பத்தி செய்து விற்பனை/ஏற்றுமதி செய்கிறார்களோ அவர்கள் இலாபம் கொள்ளலாம்.

2. இதனால் நாடுகளுக்கிடையே, நிறுவனங்களுக்கிடையே போட்டி உருவாகும். அதனால் நுகர்வோர்கள் வளம் பெறுவார்கள். பொருட்களின் சந்தை விலை குறையும்.

3. உலகம் முழுதும் பொருட்களின் தரம் பற்றிய அறிவு வளரும். தரமான பொருட்கள் மட்டுமே சந்தையில் அனுமதிக்கப்படும்.

4. அனைத்து நாடுகளும் ஒரு குடைக்குக் கீழே வரும். ஒரு நாட்டிலே மிதமாய் இருக்கும் வளங்கள் (இயற்கை வளங்கள்) வளம் குன்றிய நாட்டினருக்குப் பகிர்ந்து அளிக்கப்படும்.

இவைகள் இல்லாமல் இன்னும் சில மீதமிருக்கின்றன‌. மேற்கூறியவையே முக்கிய அம்சங்கள்.

obama_manmohan_380இந்த‌ நோக்க‌ங்க‌ளினால் யாருக்குப் ப‌ய‌ன்? என்ப‌தை இன்று நாம் புரிந்து கொள்ள வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறோம். உலகின் பெரிய‌ண்ண‌னாக‌ வ‌ல‌ம் வ‌ரும் அமெரிக்காவின் ச‌மீப‌த்திய‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ள் வெளிச்ச‌ம் போட்டுக் காட்டுகின்ற‌ன‌. நேற்று அமெரிக்க‌ அதிப‌ர் ப‌ராக் ஒபாமா, அமெரிக்காவின் பொருளை உல‌கின் அனைத்து நாடுக‌ளுக்கும் விற்ப‌னை செய்வ‌தே அவ‌ருடைய‌ இல‌ட்சிய‌மாக‌க் கூறியிருக்கிறார். அதாவ‌து அமெரிக்காவிற்கு நிறைய‌ நுக‌ர்வோர்க‌ள் வேண்டும்.

எங்கிருந்து கிடைப்பார்க‌ள் இந்த‌ நுக‌ர்வோர்க‌ள்?. உல‌கின் மொத்த‌ ம‌க்க‌ள் தொகையில் ஆறில் ஒருவ‌ன் இந்திய‌னாக இருக்கும் போது, உல‌கின் மொத்த‌ நுக‌ர்வுத் தேவைக‌ளில் சுமார் 17 ச‌த‌ம் ந‌ம்முடைய‌தாக இருக்கும். வ‌ள‌ர்ந்து வ‌ரும் ம‌க்கள் தொகையை க‌ண‌க்கில் வைத்துக் கொண்டால், இன்னும் சில‌ ஆண்டுக‌ளில் 25 ச‌த‌மாக‌ நம்முடைய‌ நுக‌ர்வு வ‌ள‌ர‌க்கூடும். ஆக‌ அமெரிக்காவுக்கான‌ நுக‌ர்வோர்க‌ளாக‌ நாம் மாறியாக‌ வேண்டும் அல்ல‌து அவ‌ர்க‌ள் ந‌ம்மை மாற்ற‌ வேண்டும். இந்த‌ முய‌ற்சிதான் க‌ட‌ந்த‌ 20 ஆண்டுக‌ளாக‌ ந‌ட‌ந்து வ‌ந்தது. ந‌ம்மில் ப‌டித்த‌ கார்ப்ப‌ரேட் ஆசாமிக‌ள் ப‌ல ‌பேர் அவ‌ர்க‌ளின் நுக‌ர்வோர்க‌ளாக மாறி விட்டோம். இன்னும் மிச்ச‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளை லாவ‌க‌மாக‌ மாற்றும் முயற்சிதான் இப்பொழுது ம‌த்திய‌ அர‌சு செய்யும் முய‌ற்சி.

விவேகான‌ந்த‌ரின் கூற்றை இங்கே நினைவுப‌டுத்துவ‌து சரியான‌தாக இருக்குமென‌ நினைக்கிறேன். "எவ்வ‌ள‌வு அதிக‌மாக‌ வைத்துக் கொள்ள‌ வேண்டும் என‌ச் சொல்லுவ‌து மேலை நாட்டு நாக‌ரீக‌ம். எவ்வ‌ள‌வு குறைவாக‌ வைத்துக் கொள்ள‌ வேண்டும் என‌ச் சொல்லுவ‌து ந‌ம் நாக‌ரீக‌ம்". அவ‌ர‌து கூற்றின் சாராம்ச‌ம் என்னவென்ப‌து அனைவ‌ருக்கும் புரிய‌க்கூடும்.

ந‌ம்முடைய‌ தேவைக‌ளைக் குறைத்து அத‌ன் மூல‌ம் ந‌ம் இய‌ற்கை வ‌ள‌ங்க‌ளைப் பாதுகாத்து ந‌ம் பேர‌க்குழ‌ந்தைக்கும் சேர்த்து வைக்கும் ம‌ன‌ப்ப‌க்குவ‌ம் இந்திய‌ர்க‌ளுடையது என்ப‌துதான் அது. ந‌ம்முடைய‌ க‌லாச்சார‌ம் என்ப‌து உடை, மொழி, க‌லை, ப‌ழ‌க்க‌வ‌ழ‌க்க‌ம், பார‌ம்ப‌ரிய‌த்த‌ன்மை, வாழ்க்கைமுறை என‌ வெளிப்புற‌த்தையும், ப‌ண்பாடு என்ப‌து ப‌ண்ப‌ட்ட‌ ந‌ம் ம‌ன‌நிலையையும், ஜீவ‌த்த‌ன்மையையும், முக்தி நிலையையும் சொல்வ‌து. அதாவ‌து ப‌ண்ப‌ட்ட‌ நாம் முற்றிலும் நிறைவுற்ற‌ நிலையில் இந்த‌ ம‌ண்ணில் என்ன‌ விளைகிற‌தோ அதை ம‌ட்டுமே உண்டு, செரித்து வாழ‌க் க‌ற்றிருக்கிறோம். இன்னொருவ‌னுடைய‌ பொருளுக்கும், நாட்டிற்கும் நாம் ப‌டையெடுத்துச் சென்ற‌தாய் சான்று கிடையாது.

ஆக‌ முற்றிலும் எல்லா வ‌ள‌ங்க‌ளும் நிறைந்து ப‌ண்பாட்டிலும், இய‌ற்கை வ‌ள‌த்திலும், செல்வ‌த்திலும் கொழித்திருந்த‌தைக் கேள்விப்பட்டுத்தான் "கொல‌ம்பஸ்" இந்தியாவைத் தேடி ப‌ய‌ண‌ம் புரிந்தான். ஆனால் அமெரிக்காவைக் க‌ண்ட‌றிந்தான் என்ப‌து வ‌ர‌லாறு. ஆக அமெரிக்கா எனும் ஒரு நாடு உருவாவ‌த‌ற்குக் கார‌ண‌மே "இந்தியா" எனும் பண்பாட்டு விளை நிலத்தைத் தேடிய பயணத்தின் எச்சம் என்ப‌தை ம‌ற‌ந்து விட்டு அலைகிறார்க‌ள் அமெரிக்க‌ர்க‌ள். நாமும் ம‌ற‌ந்து விட்டோம் "ந‌ம் ம‌ண்ணின் வ‌ள‌த்தையும் பெருமையையும்".

பின்னால் ஊசி விற்க‌ வ‌ந்த‌ ப‌ர‌ங்கிய‌ர்க‌ளுக்கு ந‌ம் நாட்டையே தான‌ம் வார்ப்ப‌த‌ற்கு நம்மில் இருந்த‌ முக்கிய‌க் கார‌ண‌ம் ந‌ம் ஒற்றுமையின்மையும் அறியாமையும்தான். இன்றும் அது தொட‌ர்வ‌து இந்த‌ ம‌ண்ணின் துர்பாக்கிய‌ம். அன்று வ‌ந்த‌வ‌ர்க‌ள் பொன்னையும், பொருளையும், முடிந்த‌ அள‌வு நாட்டின் செல்வ‌த்தையும் கொள்ளை கொண்டு போய் அவ‌ர்க‌ள் நாட்டில் வைத்து அழ‌கு பார்த்தார்க‌ள். இன்று ந‌ம்மிட‌ம் மிஞ்சியிருக்கும் க‌லாச்சார‌த்தையும், ப‌ண்பாட்டையும், அறிவு ஞான‌த்தையும், இய‌ற்கை வ‌ள‌த்தையும், ம‌னித‌ வ‌ள‌த்தையும் கொள்ளைய‌டிப்ப‌த‌ற்கு அமெரிக்க‌ர்க‌ள் கொண்டு வ‌ந்த‌ புத்திசாலித்த‌ன‌மான‌ கொள்கைதான் "உல‌க‌மய‌மாக்க‌லின் மூல‌ம் ந‌ம்மை அவ‌ர்க‌ளின் ச‌ந்தைக்க‌ள‌மாக‌ப் ப‌ய‌ன்ப‌டுத்துவ‌து".

மேற்கூறிய‌ நான்கு அம்ச‌ங்க‌ளிலே நாம் எப்ப‌டி பாதிக்க‌ப்ப‌டுவோம் என்ப‌தை வ‌ரிசைப்ப‌டுத்த‌லாம்.

1.அதிக‌ உற்ப‌த்தி செய்ப‌வ‌ர்க‌ளே ச‌ந்தைக்குக் குறைந்த‌ விலையில் பொருட்க‌ளை எடுத்துச் செல்ல‌ முடியும் என்பது நிதர்சனம். ந‌ம் நாட்டின் இய‌ற்கை வ‌ள‌த்தையும், தொழில்நுட்ப‌ அறிவையும் ம‌ற்ற‌ நாடுக‌ளோடு ஒப்பீடு செய்து பார்க்கையில் நாம் மிக‌வும் பின் த‌ங்கிய‌ நிலையில் இருக்கிறோம். இன்ற‌ள‌வுக்கும் உண‌வு, உடை, ம‌ருத்துவ‌ம் மற்றும் இத‌ர‌ உற்ப‌த்தித் துறைக்குத் தேவையான தொழில் நுட்ப‌ங்க‌ளையும், இய‌ந்திர‌ங்க‌ளை‌யும் பிற‌ நாடுக‌ளில் இருந்துதான் இற‌க்கும‌தி செய்கிறோம். ந‌ம் க‌ச்சாப் பொருட்க‌ளுக்கு ஆகும் செல‌வை விட‌ தொழில் நுட்ப‌த்திற்கு ஆகும் செல‌வு அதிக‌ம். மேலும் அந்த‌ தொழில் நுட்ப‌த்திற்கு வ‌ருடா வருட‌ம் நாம் அளிக்க‌க்கூடிய‌ ப‌ய‌ன்பாட்டு ம‌ற்றும் பாதுகாப்புச் செல‌வு, ம‌ற்ற‌ நாட்டின‌ருக்கு நிர‌ந்த‌ர‌ வ‌ருவாயையும் ந‌ம‌க்கு நிரந்த‌ர‌ச் செல‌வையும் ஈட்டித்த‌ரும்.

வெளிநாடுகளில் அந்த‌ தொழில்நுட்ப‌த்தைத் த‌யாரிக்கும் குழுவில் க‌ட்டாய‌ம் ந‌ம் ம‌ண்ணின் மைந்த‌ர்க‌ள் இருப்பார்க‌ள் என்ப‌து கூடுத‌ல் சுவார‌ஸ்ய‌ம். ந‌ம் மண்ணின் மைந்த‌ர்க‌ளின் மூளைக்கு வாட‌கையாக‌ மாத‌ச் ச‌ம்ப‌ள‌ம் அளித்து அவ‌ர்க‌ளின் க‌ண்டுபிடிப்புக‌ளுக்குக் கார்ப்ப‌ரேட் க‌ம்பெனிக‌ள்

"காப்பி ரைட்ஸ்ம், இண்டெலெக்சுவ‌ல் ப்ராப‌ர்டி ரைட்ஸ்ம்" வாங்கிக்கொள்ளும். யாருக்கு உழைக்கிறோம்? என்றே தெரியாம‌ல் உழைக்கும் ந‌ம் அறிவுஜீவிகள், விஞ்ஞானியாக உல‌க‌ம் முழுதும் முக்கிய‌மாக‌ அமெரிக்க‌ ஐரோப்பிய‌ நாடுக‌ளிலே டால‌ர்க‌ளுக்காக‌ வாழ்ந்து கொண்டிருக்கிறார்க‌ள்.

2. உற்ப‌த்திப் பெருகுவ‌தினாலே ச‌ந்தை விலை குறையும் என்ப‌து ஒரு முர‌ண்பாடான‌ பொருளாதார‌க் கொள்கை. ப‌ல‌ நிறுவ‌ன‌ங்க‌ள் ச‌ந்தையிலே க‌டை விரித்து த‌ங்க‌ளுடைய‌ பொருள்க‌ளை விற்கிற‌ சூழ்நிலையின் ஆர‌ம்ப‌ கால‌க‌ட்ட‌த்தில்தான் விலை குறையுமே ஒழிய‌, பின்னாட்க‌ளில் போட்டி போட‌ முடியாத‌ சின்ன‌ச் சின்ன‌ நிறுவன‌ங்க‌ள் காணாம‌ல் போய்விடும் பட்சத்திலே, பெரிய‌ நிறுவ‌ன‌ங்க‌ள் ஒன்றிர‌ண்டு ம‌ட்டுமே தாக்குப் பிடிக்கிற‌ சூழ்நிலையில் அவ‌ர்க‌ள் இணைந்து விலை நிர்ண‌ய‌ம் செய்வார்க‌ள் அல்ல‌து ஒன்றை ம‌ற்றொன்று விழுங்கி, சந்தையின் ஒற்றை நிறுவ‌ன‌மாக‌ த‌ங்க‌ளை மாற்றிக்கொள்வார்கள். பின்பு அவ‌ர்க‌ள் வைத்த‌துதான் விலை.

ச‌ந்தைப் போட்டி என்ப‌து இல்லாம‌லே போய்விடும். இன்றைக்கு ந‌ம் ம‌த்திய‌ அர‌சு முய‌ற்சி செய்கிற‌ "சில்ல‌ரை வ‌ணிக‌த்தில் அய‌ல் நாட்டின‌ர்" எனும் கொள்கை ந‌ம் உள் நாட்டு நிறுவ‌னங்க‌ளுக்கு இன்னும் சில‌ ஆண்டுக‌ளில் சாவும‌ணி அடிப்ப‌த‌ற்கான‌ முய‌ற்சியாக‌த்தான் கொள்ள‌ வேண்டும். வெளிநாட்டு நிறுவ‌ன‌ங்க‌ள் ச‌ந்தைக்கு வ‌ந்தால் விவ‌சாய விளைபொருட்க‌ளின் கொள்முதல் விலை கூடும் என்ப‌தும் ஒரு பொய்யான‌ செய்தி. உள்ளூர் கொள்முத‌ல்கார‌னின் விலையை விட‌ அதிக‌மான‌ விலையை கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆரம்ப காலத்தில் வ‌ழ‌ங்கி உள்ளூர்க்காரனின் ம‌ர‌ண‌த்தை உறுதி செய்த‌ பிற‌கு விவ‌சாயிக‌ளின் க‌ழுத்தை நெரிப்பார்க‌ள்.

நெரிப்பது வேறு யாருமல்ல, நம் சகோதரர்கள்தான். அன்று வந்த கிழக்கிந்தியக் கம்பெனியிலே குமாஸ்தாவாக, கிளர்க்காக, போலிஸ்காரர்களாக இருந்து திறம்பட சேவையாற்றிய நம் இனத்தவர்களின் குழந்தைகள் இன்று மேனேஜர்களாக, வைஸ் பிரஸிடண்ட்களாக, அமெரிக்க "சியுவோ"வுக்கு ரிப்போர்ட் செய்வார்கள். ந‌ம்மிட‌ம் இருக்க‌க்கூடிய‌ ஒற்றுமை அவ‌ர்க‌ளுக்கு ந‌ன்றாக‌த் தெரியுமல்ல‌வே. அமெரிக்க "சியுவோ" சொன்னால் தன் சகோதரனையும் கொலை செய்வார்கள் நம் தர்மபுத்திரர்கள்.

இந்தியாவில் இருக்க‌க்கூடிய‌ ஜ‌ப்பான் கம்பெனிகள், கொரியக் கார் க‌ம்பெனிக‌ள், அவ‌ர்க‌ளுக்குத் தேவையான இய‌ந்திர‌ங்க‌ள் குறைந்த‌ விலையில் இந்தியாவிலேயே கிடைக்கும்பட்சத்திலும் அவர்கள‌து நாட்டு நிறுவ‌ன‌த்திட‌மிருந்துதான் அதிக‌ விலை கொடுத்து வாங்குகிறார்கள். தன் நிறுவனத்தின் இலாப‌ம் என்ப‌தை விட‌ த‌ன் மூல‌மாய் கிடைக்க‌க்கூடிய‌ இலாபமும் த‌ன் ச‌கோத‌ர‌னுக்குத்தான் போய்ச் சேர‌ வேண்டும் என்ப‌திலே ஜ‌ப்பானிய‌, கொரிய‌ நாடுக‌ள் சுதேசிய‌த்தைக் க‌டைப்பிடிக்கின்ற‌ன‌.

3. த‌ர‌மான‌ப் பொருட்க‌ள் சந்தையில் கிடைக்குமென்ப‌து ப‌ர‌வ‌லாக‌ச் சொல்லபடும் செய்தி. த‌ர‌ம் என்று அவ‌ர்க‌ள் கூறும் "ஸ்டான்டர்டைசேஸனின்" முக்கிய‌க் கூறுக‌ளை யார் நிர்ண‌யிப்ப‌து? அமெரிக்காவின் த‌ர‌ம் என்ப‌து இந்தியாவுக்கும், இந்தியாவின் த‌ர‌ம் சைனாவுக்கும் எப்ப‌டி ஒத்து வ‌ரும்? அமெரிக்க‌ரின் உண‌வுமுறை இந்திய‌ர்க‌ளுக்கு எப்ப‌டிப் பொருந்திப் போகும். த‌ர‌ம் என்ப‌து இருக்கிற‌ ப‌ல்வேறுப‌ட்ட‌ நுக‌ர்வுப் பொருளை ஒரு வ‌ரைய‌றையின் மூல‌ம் சுருங்க‌ச் செய்துவிடும்.

கேப்ரீஸ் த‌யாரிக்கும் சாக்லேட் ம‌ட்டும்தான் த‌ர‌மான‌து, அதே போல்தான் எல்லோரும் த‌யார் செய்ய‌ வேண்டுமென்றால், ந‌ம்மூர் இல‌ட்டு, சிலேப்பி, அல்வா, மைசூர்பாக்குக‌ள் என்ன‌வாகும். அவைக‌ள் எல்லாவ‌ற்றையும் ஒரு த‌ர‌க் குடைக்குள்ளே எப்ப‌டி கொண்டு வ‌ருவ‌து. இந்தியா முழுதும், உல‌க‌ம் முழுதும் ஒரே போல் இருக்க‌ வேண்டுமென்றால், ந‌ம் நாட்டின் வெவ்வேறு மாநில, பிராந்திய‌ உடை வ‌கைக‌ள்,மொழிகள், க‌லைக‌ள், க‌லாச்சார‌ம் என்ன‌வாவது? எல்லோரும் ஆங்கில‌ம்தான் பேச‌ வேண்டுமா? எல்லோரும் அமெரிக்க‌ ஐரோப்பிய‌ நாக‌ரிக‌க் குடைக்குள் நிற்க‌ வேண்டுமா? ப‌ண்பாட்டின் விளைநில‌ம் என்று தேடித்தானே உல‌க‌ நாடுக‌ள் அனைத்துமே க‌ட‌ந்த‌ ப‌த்து நூற்றாண்டுக‌ளாக‌ இந்தியாவின் மீது ப‌டையெடுத்துக் கொண்டிருந்த‌ன.

க‌ட‌ந்த‌முறை கிழ‌க்கிந்திய‌க் க‌ம்பெனி அழிக்க‌ முடியாம‌ல் விட்டுச் சென்ற "பார‌த‌ ப‌ண்பாட்டுக் க‌லாச்சாரத்தை" ந‌ம் கைக‌ளைக் கொணடு நாமே‌ ந‌ம் க‌ண்க‌ளைக் குத்துவதற்கு க‌ட‌ந்த‌ 65 காலமாக நம்மைத் த‌யார்ப‌டுத்தியிருக்கிறார்கள் வெள்ளையர்கள். அதற்கு முற்றிலும் துணை போகும் முய‌‌ற்சியாக ந‌ம் இளைஞ‌ர்களைத் தயார்படுத்திவிட்டார்கள். ப‌டித்த‌வ‌ர்க‌ள் எல்லோரும் ப‌ண்ப‌ட்ட‌வ‌ர்க‌ளாகி விட‌ முடியுமோ?

ந‌ம்முடைய‌ ப‌ண்பாடு என்ன‌ என்ப‌தைச் சொல்லிக் கொடுக்க‌த் த‌வ‌றிய‌ மெக்காலே க‌ல்வி அமைப்பின் மூல‌ம் விளைந்த‌ க‌ளைச் செடிக‌ள்தான் இன்று நாடு முழுதும் விர‌விக் காண‌ப்ப‌டுகிற‌து. அன்று ப‌டிக்காத‌வ‌னுக்கு ஆங்கிலேய‌ர்க‌ளின் மீதும் ஐரோப்பாவின் மீதும் இருந்த‌ மோக‌த்தை விட‌ இன்று ப‌டித்த‌வ‌னுக்கு அதிக‌மாக‌வே இருக்கிற‌து. ச‌ர்வீஸ் இண்டெஸ்ட்ரீஸ் மூல‌ம் த‌ன் அறிவை அட‌கு வைத்துவிட்டு வேற்று நாட்ட‌வனுக்குச் சேவை புரிவ‌தையே ப‌ண்பாட்டுப் பெருமையாக‌க் கொள்கிறார்க‌ள் ந‌ம் இளைஞ‌ர்க‌ள். ந‌ம்முடைய‌ புராதான‌மும், மொழியும், இல‌க்கிய‌மும், இசையும், நட‌ன‌மும் அழிக்க‌ப்ப‌ட வேண்டும் என்ப‌திலே நீள்கிற‌து உல‌க‌ நிறுவ‌ன‌த்தின் த‌ர‌ம் ப‌ற்றிய‌ கொள்கைக‌ள்.

4. க‌ட‌ந்த‌ ஐந்தாண்டுக‌ளில் இந்திய‌ மொத்த உள்நாட்டு உற்ப‌த்தியில் பெரும்ப‌ங்கு வ‌கிக்கும் துறைக‌ள் எதுவென‌ ப‌டித்த‌ க‌ண‌வான்க‌ள் அனைவ‌ரும் ச‌ற்று வ‌ரிசைப்ப‌டுத்திப் பார்க்க‌ வேண்டும். விவ‌சாய‌ம், தொழிற்சாலைக‌ள் மூலம் பெறப்படும் உற்ப‌த்தி ம‌ட்டுமே உண்மையான‌, நீடித்த‌, நிலையான‌ உற்ப‌த்தி. தொட‌ர்ந்து வ‌ருடா வ‌ருட‌ம் உற்ப‌த்தியை மீண்டும் மீண்டும் பெற‌க்கூடிய‌ (ரெனிவ‌பில்) வ‌ள‌ங்க‌ள். ஆனால் இந்த‌ உற்ப‌த்தி த‌லைகீழாச் ச‌ரிந்து குப்புற‌க் கிட‌க்கிற‌து. மொத்த‌ உற்ப‌த்தியில் ப‌த்து ஆண்டுக‌ளுக்கு முன்னால் 21 சத‌வீத‌ம் இருந்த‌ விவ‌சாய‌ம் இன்று 2 ச‌த‌வீத‌த்திற்கும் கீழே சென்றுவிட்ட‌து.

ரிய‌ல் எஸ்டேட், இன்ஃப்ராஸ்ட்ர‌க்ஸ‌ர், ம‌ண‌ல் எடுத்தல், க‌ல் குடைத‌ல், நில‌க்க‌ரி தோண்டுத‌ல் என‌ ந‌ம்மின் இய‌ற்கை வ‌ள‌த்திற்கு எவ்வ‌ளவு கேடு விளைவிக்க‌ முடியுமோ அந்த‌ தொழில்க‌ளின் மூல‌ம் ந‌ம் உற்ப‌த்தி பெருகியிருக்கிற‌து. இந்த இயற்கை வளத்தை அழித்துவிட்டால் மீண்டும் பெற முடியாது. அடுத்த‌ நிலையில் ச‌ர்வீஸ் இண்ட‌ஸ்ட்ரீஸ் இருக்கிற‌து. இந்த‌ ச‌ர்வீஸ் இண்ட‌ஸ்ட்ரீஸ் நிலையான வ‌ருவாயை வ‌ழ‌ங்குவ‌த‌ற்கு சாத்திய‌க்கூறுக‌ள் இல்லை. பெரும்பாலும் ஐடி, பிபிஒ, தொலைதொட‌ர்பு, வ‌ங்கி, காப்பீடு சேவைக‌ள் மூல‌ம் பெறும் வ‌ருமான‌ம் நிர‌ந்த‌ர‌மான‌து அல்ல‌. ஆனால் இவைக‌ள் மூல‌ம்தான் ந‌ம்மின் ஜிடிபி உய‌ர்வ‌தாய் ந‌ம்மை ந‌ம்ப‌வைத்துக் கொண்டிருக்கிற‌து ம‌த்திய அர‌சு.

அமெரிக்க‌ர்க‌ளுக்கு, ஐரோப்பிய‌ர்க‌ளுக்கான‌ கார்கள் தயாரிக்கும் நிறுவனத்தையும், அதிக‌ம் க‌ரிம‌த்தைக் க‌க்கும் தொழிற்சாலைக‌ளையும்தான் ந‌ம் நாட்டில் நிறுவியிருக்கிறார்க‌ள். உல‌கின் அதிக‌மான‌ தொழிற்சாலைக் க‌ழிவுக‌ளை பெற்றிருக்கும் நாடாக‌ தென்னாப்பிரிக்காவை மாற்றிவிட்ட‌து இந்த‌ உல‌க‌ம‌ய‌மாக்க‌ல். அதாவ‌து அறிவார்ந்த‌ அமெரிக்க, ஐரோப்பிய‌‌ அண்ண‌ன்க‌ள் வீசும் விச‌ம் தோய்த்த‌ பிஸ்க‌ட்டுக‌ளைத் தின்றுவிட்டு வாலாட்டி அவ‌ர்க‌ளுக்குச் சேவ‌க‌ம் புரியும் நாய்க‌ளாக‌த்தான் ந‌ம் ப‌டித்த‌ இன்றைய‌ இளைஞ‌ர்க‌ள் இருக்கிறோம்.

நாம் யார்? நம் நாக‌ரீக‌ம் என்ன‌? ஏன் அத்த‌னை உல‌க‌ நாடுக‌ளும் இந்தியாவை நோக்கி ப‌டையெடுத்தார்க‌ள்? ந‌ம் ப‌ண்பாடு எவ்வ‌ள‌வு ஆழ‌மான‌து, அற்புத‌மான‌து? தேவைக‌ளைக் குறைத்த‌ல் மூல‌ம் இருப்ப‌தை வைத்து வாழும் சமூக‌ வாழ்க்கை, சேர்த்து வைத்து வாழ்த‌லா? அல்ல‌து வாழ்ந்து சேர்த்து வைப்ப‌தா? ந‌ம் முன்னோருடைய‌ வாழ்க்கைமுறை யாது? எப்ப‌டிப்ப‌ட்ட தியாக‌ச் செம்ம‌ல்க‌ள் இந்த‌ நாட்டில் வாழ்ந்தார்க‌ள்? இந்த‌ நாட்டின் வேறுப‌ட்ட‌ ஆனால் நித்தியமான க‌லை, மொழி, க‌லாச்சார‌, ப‌ண்பாட்டு அறிவுப் பெட்ட‌க‌ங்க‌ள் யாது? என‌ நீளும் ந‌ம்மைப் ப‌ற்றிய, ந‌ம் முன்னோர்க‌ள் ப‌ற்றிய‌ தேடுத‌லைத் தொலைத்து விட்டால், ந‌ம் பிள்ளைக‌ளுக்கு நாம் சேர்த்து வைப்ப‌து வெறும் டால‌ர்க‌ளாக‌ ம‌ட்டும்தான் இருக்கும்.

மீண்டும் ஒரு விடுத‌லைக்கு பார‌த‌ம் த‌ன்னைத் த‌யார்ப‌டுத்திக் கொள்ள‌வில்லையென்றால், மிச்ச‌ம் என்று சொல்லுவ‌த‌ற்கு இங்கு ஒன்றும் இருக்காது.

- சோமா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It