அன்பான தோழர் தா.பாண்டியன் அவர்களுக்கு,

வணக்கம்.

நீண்ட நாளாகவே உங்களுக்கு எழுத வேண்டும் என நினைத்த கடிதம் இது. இன்று தான் நேரம் கூடி வந்தது. நலமாய் இருக்கிறீர்களா? இந்த கடிதத்தைப் படிக்கும் போதே உணர்ந்து கொள்வீர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் எழுதியது என்று! அறிஞர் அண்ணா எழுதியதைத் தொடர்ந்து, டாக்டர் கலைஞர் எழுதியதைத்தொடர்ந்து தற்போது ஜனசக்தியில் தோழர்களுக்கு நீங்கள் தான் ஏராளமான கடிதங்களை எழுதி வருகிறீர்கள். ஆகவே, உங்களுக்கு இக்கடிதத்தை எழுதுகிறேன். என்னுடைய கடிதம் எழுப்பும் கேள்விகளுக்கு நீங்கள் பதில் அளிக்காமல் கூட இருக்கலாம். இல்லை, யாராவது ஒருவர் சொல்லக்கூடும். சமீப கால சர்ச்சைகளை முன்வைத்து மட்டுமின்றி, உங்களை கடந்த கால்நூற்றாண்டு காலமாக அறிந்தவன் என்ற முறையில் தான் இந்த கடிதம் எழுதப்படுகிறது.

தமிழை மிகச்சரியாக உச்சரிக்கத் தெரிந்த உங்கள் உதடுகள் பேசும் மொழி, மேடைப் பேச்சுகளைக் காதலிப்பவர்களுக்கு ஒரு மயக்கத்தைக் கொடுக்கும்.

தலித்துகளுக்கு எதிரான நிலை

tha_pandiyan_340அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமுதாயம் உயர்ந்த நிலைக்கு வரவேண்டும். அவர்கள் உயர்ந்த பதவிகளை அடைய வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்திற்கு இருக்க முடியாது. ஆனால், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த நீங்கள், பல நேரங்களில் தலித் சமுதாயத்திற்கு எதிராக கருத்துக்களைப் பதிவு செய்துள்ளீர்கள். அது உத்தப்புரம் பிரச்சனையில் அப்பட்டமாய்த் தெரிந்தது.

முன்னாள் பாரதப் பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி உள்ளிட்ட பல்வேறு தேசியத் தலைவர்களின் தமிழக சுற்றுப்பயணத்தின் போது உடன் சென்று அவர்களின் ஆங்கில உரையைத் தமிழாக்கம் செய்தீர்கள். அதுவே, தங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குவதற்கும் காரணமாக இருந்தது. இடதுசாரித் தத்துவங்களைப் பயின்ற ஒருவர் இப்படி காங்கிரசுடன் உறவைப் பேணியது சரியா?

நூலில் எழுதியது தவறா?

ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் விடுதலைப்புலிகள் நடத்திய மனித குண்டுவெடிப்பின் போது தங்களுக்கு கொடுங்காயங்கள் ஏற்பட்ட செய்தி, என்னைப் போன்ற மார்க்சிஸ்டுகளுக்கும் பேரதிர்ச்சியை உருவாக்கியது. பத்திரிகைகளில் முன்பு வந்த செய்திகள் பயம்கொள்ள வைத்தன. அடுத்த நாட்களில் வந்த செய்திகள் தான் தன் நிலைக்குக் கொண்டு வந்தன. உடல் முழுவதும் வெடிகுண்டு துகள்களைத் தாங்கி வாழும் தாங்கள், அந்த நேரத்தில் எழுதிய, “ராஜீவ்காந்தியின் கடைசி நிமிடங்கள்” என்ற நூலை பலருக்கு வாங்கிப் பரிசளித்தேன். தீவிரவாதம் குறித்த தங்களின் பார்வை மிகச்சரியாக அந்த நூலில் பதிவாகியுள்ளது என்பது என் கருத்து. அந்த நூலின் பல படிகளை வாங்கிப் பத்திரப்படுத்தி இன்னும் வைத்துள்ளேன். தாங்கள் எழுதிய அந்த நூல், சிபிஐ கட்சியின் நிறுவனமான பாவை பிரிண்டர்ஸ் மூலம் வெளியிடப்பட்டது. ஆனாலும், அந்த நூல் கடைகளிலோ, புத்தகத் திருவிழாக்களிலோ பகிரங்கமாக விற்பனை செய்யப்படாமல் பதுக்கி வைத்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். விடுதலைப் புலிகள் குறித்து தாங்கள் எழுதிய விமர்சனம் தற்போது தவறா என்ற கேள்வியை எனக்கு அது விளைவித்தது. எந்தக் கருத்தையும் உரக்கச் சொல்லும் உங்கள் கருத்துக்கள் எதற்காக பதுக்கப்பட்டது தோழர்?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை தேடி தேடி சேர்க்கும் உங்கள் கட்சியினர், அதையொட்டி நடக்கும் பொதுக்கூட்டங்களில், சிபிஐ தான் மிகச்சிறந்த கட்சி என பேசுகிறீர்கள்! சிபிஐ தான் சிறந்த கட்சி என்று மேடை தோறும் முழங்கும் நீங்கள் ஏன், ஐக்கிய பொதுவுடமைக் கட்சிக்குப் போனீர்கள் என்ற கேள்வியும் நீண்ட நாளாக என் மனதில் ஓடும் கேள்வி. மீண்டும் தான் தாய் கட்சிக்கு வந்து விட்டேனே என்று பதில் அளிக்காமல் நீங்கள் செய்தது சரியா என்று பதில் அளிப்பீர்களா?

தமிழக அரசு மீது “பாசம்”

தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு பட்டிமன்றங்களில் மறைந்த தவத்திரு குன்றக்குடி அடிகளாருடன் நீங்கள் பேசிய பேச்சை ரசித்த அதே ரசனையுடன் தான், ஜனசக்தியில் தாங்கள் தற்போது எழுதி வரும் கடிதங்களையும் படித்து வருகிறேன். “காகிதத்தில் ஒரு ஆயுதம்” என்ற வாசகத்தைத் தாங்கிய ஜனசக்தி, திடீரென தீக்கதிர் வெளியிட்டு வந்த மக்கள் நாளிதழை சுவீகரித்துக்கொண்டது. அது ஒன்றும் பிழையொன்றும் இல்லை.

ஜனசக்தியின் மூலம் மத்திய அரசின் பல கேடு கெட்ட கொள்கைகள் குறித்து தாங்கள் எழுதி வரும் கட்டுரைகளைத் தொகுத்தால் பல புத்தங்களை வடிக்கலாம். அந்த அளவு மத்திய அரசின் மீதான உங்கள் நிலை உள்ளது. ஏகாதிபத்தியம் குறித்தும், பிரணாப் முகர்ஜி குடியரசு தலைவராகக் கூடாது என்றும் பக்கம், பக்கமாக எழுதும் நீங்கள், தமிழக அரசை எதிர்க்காமல், வாலைச்சுருட்டி வைத்துள்ளது ஏன் என்ற கேள்வியும் இயல்பாகவே எழுகிறது. பேருந்து கட்டணம் உயர்வு, பால் கட்டண உயர்வு, மின்கட்டண உயர்வு ஆகியவற்றை எதிர்த்து அறிக்கைக்குள் ஒளிந்து கொண்டு நிழலுடன் சண்டையிடுகிறீர்கள். திருவாரூரில் சிபிஐ கட்சி சார்பில் காவல்துறையைக் கண்டித்து பல இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டது. காவல்துறை அமைச்சர் ஜெயலலிதா தான். ஆனால், உங்கள் ஜனசக்தியில் முதல்பக்கத்தில் மாவட்ட காவல்துறை கண்டித்து நடத்தப்பட்ட போராட்டம் என செய்தி வெளியிடுகிறீர்கள். அந்த அளவிற்கு தமிழக அரசு மீது பாசமா?

பசு மாடில்லையா?

“தமிழகத்தில் மதுக் கடைகளை மூடத் தேவையில்லை" என்று தாங்கள் தெரிவித்த கருத்திற்கு தினமணி நாளிதழில் அதிகபட்ச வாசகர்களின் கருத்து “முட்டாள்தனமானது” என்று வெளியாகியிருந்தது. “குடிப்பழக்கம் ஒரு நோய்” என உலக சுகாதார நிறுவனம் திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் அரசு மதுக் கடைகளை மூடினால் புதுச்சேரி, கேரளம், ஆந்திரம், கர்நாடக மாநிலங்களுக்குச் சென்று மது குடித்துவிட்டு வருவார்கள். எனவே, தமிழகத்தில் மதுக் கடைகளை மூடத் தேவையில்லை என்ற தங்களின் தத்துவவிசாரம் அபாரமானது.

“தமிழகத்தில் வறுமையால் செத்துப்போகும் நபர்களின் எண்ணிக்கையைப் போல, மதுபானத்தைக் குடித்து இறப்பவரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தினசரி மதுபானம் அருந்துவோரின் எண்ணிக்கை 49 லட்சம் என்பதும், அவர்களின் சராசரி வயது 28-லிருந்து 13 ஆகக் குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் 46 சதவிதம் மக்கள் போதை நோயாளியாகி உள்ளார்கள். தற்கொலைக்கு முயல்வோரில் 37 சதவீதத்தினர் மதுப்பழக்கம் உள்ளவர்கள்” என்பதையும் அறியவில்லையா நீங்கள்?

கடந்த 2003-2004-ம் ஆண்டு மதுபானக்கடைகள் மூலம் அரசுக்கு கிடைத்தது வெறும் 3639.93 கோடி ரூபாய் தான். ஆனால், 2004-2005-ம் ஆண்டு ரூ.4872.03 கோடி, 2005-2006-ம் ஆண்டு ரூ.6030.77 கோடி, 2006-2007-ம் ஆண்டு ரூ.7473.61 கோடி, 2007-2008-ம் ஆண்டு ரூ.8821.16 கோடி, 2008-2009-ம் ஆண்டு ரூ.10601.50 கோடி, 2009-2010-ம் ஆண்டு ரூ.12498.22 கோடி, 2010-2011-ம் ஆண்டு ரூ.14965.42 கோடி, 2011-2012-ம் ஆண்டு ரூ.18081.16 கோடி மொத்த வருவாய் கிடைத்துள்ளது. இந்த பணத்தை வைச்சு தான் அம்மாவின் ஆட்சி தமிழகத்தில் கருணையோடு பல திட்டங்களை அறிவித்து வருகிறது. இருக்கும் கடை போதாது என்று டிலைட் பார்களை திறக்க அம்மா ஆட்சி திட்டம் போடுவதை ஆதரிக்கிறீர்களா தோழர் தா. பா. அவர்களே?

குடி கெடுக்கும் குடி குறித்து நீங்கள் கூறிய கருத்திற்கு தினமலர் நாளிதழில் கேலிசித்திரம் 29.6.2012 அன்று வெளியிடப்பட்டது. ஜனசக்தியில் கார்டூன் வரைந்து கொண்டிருந்த கேலிச்சித்திரக்காரர் தான் தினமலரிலும் அந்தக் கேலிச்சித்திரத்தை வரைந்திருக்கிறார், அது சரியான நடைமுறைதானா?

மௌனம் சம்மதமா?

குடி குறித்த தங்களின் கருத்துக்கு அனைத்துப் பகுதிகளிலும் இருந்து எதிர்ப்பு கிளம்பியவுடன், ஜனசக்தி நாளிதழில் “பொய்க்கு ஆயிரம் நாக்குகள்” என அரைப்பக்க அளவிற்கு தாங்கள் எழுதிய கடிதம் எழுதினீர்கள். அதில், “மதுக்கடைகளை மூடுவதால் பயனில்லை என்பதற்கும் மூடக்கூடாது என்பதற்கும் வேறுபாடு தெரியாத எழுத்தாளர்கள் இருந்தால் செய்திகள் திரிந்து தான் வரும். ஒருவரை நான் பசு மாதிரி என்கிறேன். அதை நிருபர், மாடு என்று எழுதினால் என்ன அர்த்தம் வருமோ அந்த முறையில் தான் செய்தி வெளியாகியுள்ளது” என்று நீங்கள் எழுதியுள்ளீர்கள்.

பசு மாட்டிற்கும், சாதாரண மாட்டிற்கும் உள்ள வித்தியாசத்தை உங்களை விட இவ்வளவு சிம்பிளாக சொல்ல முடியாது!

தமிழகத்தில் தற்போது ஆட்சி நடத்துவது கருணாநிதியோ என்பது போலத் தான் உங்கள் அறிக்கைகள், செய்திகள் அனைத்தும் உள்ளன. மறந்தும் கூட முதல்வராக உள்ள ஜெயலலிதா கோபப்பட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறீர்கள். மழை விட்டும் தூவானம் விடாத மாதிரி, தேர்தல் கூட்டணி தேர்தலோடு முடிந்து போனாலும், இறங்க வேண்டிய இடம் வந்தும் இறங்காத ரயில்பயணி மாதிரி, இன்னும் அதிமுக அண்டியிருப்பது சரிதானா என்ற கேள்விக்கு என்ன பதிலளிக்கப் போகிறீர்கள்?

 “தமிழக முதல்வர் ஜெயலலிதாவை குளிர்வித்து அதன் மூலம் எப்படியாவது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை தாங்கள் பெற முயற்சிப்பதாக” பல பத்திரிகைகள் குற்றம்சாட்டி எழுதி வருகின்றன. இதுவரை இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஏன் உங்களால் பதிலளிக்க முடியவில்லை? மௌனம் சம்மதம் என்று எடுத்துக்கொள்ளலாமா?

சமீபத்தில் சிவகாசியில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும் போது,” மார்க்சிஸ்ட் கட்சியைக் கொலைகார கட்சி” என்று பேசினார்கள். அதற்கு நாகரீகமாக அந்த கட்சியின் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் அறிக்கை விட்டதற்கு, மீண்டும் நீங்கள், “உறவுக்கு இரு கரங்கள்” என்ற பெயரில் ஒரு கட்டுரையை காகிதத்தில் ஆயுதத்தில் தீட்டியுள்ளீர்கள். கட்டுரை எழுதிய ராமகிருஷ்ணன் கைபேசி மூலம் பேசியிருக்கலாமே என்று கிண்டல் அடித்துள்ளீர்களே... பதில் கட்டுரை எழுதியதற்குப் பதில் நீங்கள் கைபேசியில் பேசியிருக்கலாமே? இலவு காத்த கிளி போல, சட்டமன்றத் தேர்தலின் போது அதிமுகவில் இருந்து கழட்டி விடப்பட்ட போது, பல முறை பேச்சுவார்த்தை நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு வந்தீர்களே... இப்போது ஏன் பி.ராமமூர்த்தி இல்லத்தின் முகவரி மறந்து விட்டதா?

கொலைகார கட்சி எது?

கேரளாவில் கம்யூனிச இயக்கத்தை வேரறுக்க ஏகாதிபத்திய சக்திகளும், மதவாத அமைப்புகளும், காங்கிரஸ் கட்சியும் பணத்தைக்கொட்டி பணியாற்றிக் கொண்டிருக்கும் போது, காங்கிரஸ் கட்சியின் குரலில் மார்க்சிஸ்ட் கட்சி மீது கொலைப்பழியை ஏன் தோழர் நீங்கள் சுமத்தினீர்கள்? அதற்கு என்ன அவசியம் ஏற்பட்டது? பிபிசி சொல்வதற்கும், இடதுசாரியான நீங்கள் சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கிறதே?

ராஜபாளையத்தில் நடைபெற்ற சிபிஐ கட்சியின் மாநில மாநாட்டில் சிபிஎம் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பேசும் போது, "சரியான மாற்றுக் கொள்கையுள்ள இடதுசாரி சக்திகள் அரசியலிலும் ஒரு மாற்று சக்தியாக மலர வேண்டும். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் தமிழகத்தில் மக்கள் பிரச்சனைகளில் கூட்டு இயக்கத்தை நடத்திட வேண்டும். தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகளுடைய மக்கள் விரோதக் கொள்கையை எதிர்த்து இரு கட்சிகளும் இணைந்து மேலும் பல போராட்டங்களை நடத்த வேண்டும். தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் இதர பகுதி உழைப்பாளி மக்கள் நலன் காக்கவும் தீண்டாமை ஒழிப்புக்காக, பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக, மனித உரிமைகளுக்காக இரு கட்சிகளும் களம் காண வேண்டும். இரண்டு கட்சிகளிடையே ஒற்றுமையை பலப்படுத்திட வேண்டும்” என்றும் குறிப்பிட்டார்.

ஆனால், நாகபட்டினத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் நீங்கள் பேசிய பேச்சு நாகரீகமானது தானா? “கம்யூனிஸ்ட் கட்சிகள் பலமடைய வேண்டும். ஆனால், வலது பையில் உள்ள நூறு ரூபாயை இடது பையில் வைத்தாலும் அது நூறு ரூபாய் தான்” என்று சிலேடையாக சிபிஎம் கட்சியையே விமர்சித்தீர்கள்.

புதுக்கோட்டை, விழுப்புரம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் சிபிஐயில் இருந்து விலகி சிபிஎம் கட்சியில் சேர்ந்த கோபம் உங்களுக்கு இருக்கலாம். ஏன் இப்படி விலகிப் போகிறார்கள் என்று என்றாவது நீங்கள் ஆத்ம பரிசோதனை செய்தது உண்டா தோழர்?

கொலைகார கட்சி மார்க்சிஸ்ட் கட்சி என்று நீங்கள் பேசிய பேச்சு பத்திரிகைகளில் வந்து மை காய்வதற்குள், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பெரியார் திராவிடர் கழக அமைப்பாளர் பழனியை கொலை செய்ததாக தங்களது கட்சியின் தளி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதே. உங்கள் கட்சியினைச் சேர்ந்த பலர் நீதிமன்றங்களைத் தேடி சரணடைந்து வருகிறார்களே... முக்கிய குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் தலைமறைவாகியுள்ளார்களே... இந்தியாவில் எமர்ஜென்சி காலத்தின் போது தலைமறைவாகியிருந்தவர்கள் கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். இப்போது கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தங்கள் கட்சியினர் பதுங்கியிருப்பது சரியா?

தளி சட்டமன்ற உறுப்பினர் இராமச்சந்திரன் மீதும் அவர் குடும்பத்தினரும் பத்திரிகைகளில் பக்கம், பக்கமாக கட்டுரைகள் வருகிறது. 30 கொலைகள் என்கிறார்கள். 40 கொலைகள் என்கிறார்கள். இப்படிப்பட்ட செய்திகள் வெளியிடும் ஊடகங்கள் மீது பாய்ந்து பதிலளித்து வரும் உங்கள் தலைமை, கேரளாவில் காங்கிரஸ் கட்சியின் திட்டமிட்ட அவதூறுகளை தமிழகத்தில் ஊதிப் பெரிதாக்கினீர்களே, இது என்ன நியாயாம்?

கிருஷ்ணகிரியின் சிபிஐ முன்னாள் மாவட்டச் செயலாளரை எதிர்த்து சுயேட்சையாக நின்று போட்டியிட்ட காரணத்தால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து ராமச்சந்திரன் நீக்கப்பட்டார். அவர் வெற்றி பெற்று மார்க்சிஸ்ட் கட்சியில் சேர முயன்றார். ஆனால், அவரை மார்க்சிஸ்ட் கட்சி சேர்க்கவில்லை. ஏனெனில், அவர் சுயேட்சையாக போட்டியிட்ட போது சிபிஐ செய்த பிரச்சாரம் என்பது மார்க்சிஸ்ட் கட்சி சார்பாக நிறுத்தப்பட்ட வேட்பாளர் என்பதாகும். அப்படிப்பட்ட நபருக்குத் தான் ஞானஸ்தானம் வழங்கி உங்கள் கட்சியில் மீண்டும் சேர்த்துக் கொண்டீர்கள். அவரைப் பாதுகாக்கத் தான் படாதபாடுகிறீர்கள்.

அகில இந்திய அளவில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஒன்றிணைந்து மக்களுக்கான பல்வேறு இயக்கங்களை நடத்தி வருகின்றன. தமிழகத்தில் அத்தகைய முயற்சிகளுக்கு இடையூறாக இருப்பது எது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனாலும், அந்த முயற்சியை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தான் எடுத்து வருகிறது என்பதை நன்கறிவேன்.

“நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி

ஒல்லும்வாய் ஊன்றும் நிலை”

என்ற வள்ளுவனின் குறள் நெறியைப் படித்தவன் என்பதால் தான் இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதியுள்ளேன்.

ஏனெனில் வள்ளுவனின் குறள் உங்களுக்கும் பிடிக்கும் என்பது எனக்கும் தெரியும். என்னுடைய கேள்விகளுக்கான பதில்களை எதிர்பார்க்கிறேன்.

உங்கள் மீது பிரியம் கொண்ட தோழன்,

கமலன்

Pin It