தனியார் மயமாகிறது மாவட்ட அரசு மருத்துவமனைகள்

உலக வங்கி உத்தரவால் தமிழக அரசு, அரசு மருத்துவமனைகளில் உள்ள ஆய்வகங்களை தனியாருக்கு தாரைவார்க்க ஏற்பாடு செய்து வருகிறது.

தமிழகத்தில் ஏழை,எளிய மக்கள் அரசு மருத்துவமனைகளை நாடியே தங்களது மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்து வருகின்றனர்.இந்த மருத்துவமனைகளை மெல்ல, மெல்ல தனியார் மயப்படுத்தி கொள்ளை லாபம் கொழிக்க நினைக்கும் பெருமுதலாளிகளுக்கு சாதகமாக தமிழக அரசும் தற்போது நடவடிக்கையில் ஈடுபடத் துவங்கியுள்ளது.

உலக வங்கி உதவி என்ற பெயருடன் துவங்கியுள்ள இந்த நடவடிக்கை ஆய்வகத்தில் துவங்கி மெல்ல, மெல்ல அனைத்துத் துறைகளையும் ஊடுருவ உள்ளது. வளரும் நாடுகளுக்கு முதலீட்டுத் திட்டங்களுக்கு கடன் வழங்கும் பன்னாட்டு நிதிநிறுவனம் என்ற பெயரை உலக வங்கி கொண்டிருந்தாலும், அந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெறுபவர்கள் பெருமுதலாளிகள் என்பதை மறுக்க முடியாது.

உலகவங்கி உத்தரவு

உடல்நலம் மற்றும் குடும்ப நல துறை (தமிழ்நாடு அரசு) மூலம் செயல்படுத்தப்படும் தமிழ்நாடு சுகாதார அமைப்புகள் திட்டம் (TNHSP) துவங்கப்பட்டது. தமிழகத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் உலக வங்கி கடன் உதவியுடன் ரூ.597.15 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் காலம் 5 ஆண்டுகள் ஆகும். இத்திட்ட நடவடிக்கைகள் 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைந்தது. உலக வங்கியிடமிருந்து முதலில் பெறப்பட்ட நிதியை இத்திட்டம் முழுமையாகப் பயன்படுத்தியதால், உலக வங்கி கூடுதலாக ரூ.627.72 கோடி மதிப்பீட்டில் இத்திட்டத்தை 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ம் தேதி வரை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து செயல்படுத்த ஒப்புதல் வழங்கியுள்ளது. இத்தொகையில் ரூ.564.95 கோடி உலக வங்கி கடனாக வழங்கும்; ரூ.62.77 கோடி தமிழக அரசு வழங்கும் என்று மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை பற்றிய கொள்கை விளக்கக்குறிப்பு(2012-2013) ல் கூறப்பட்டுள்ளது.

உலக வங்கி உத்தரவின் கீழ் தமிழகத்தில் 7 மாவட்டத் தலைநகரங்களில் உள்ள அரசு மருத்துவ மனைகளில் உள்ள ஆய்வகங்களை தனியார்வசம் ஒப்படைக்க (அரசாணை எண்:105, 20.3.2012) தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடந்த3.7.2011 அன்று மருத்துவத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தியுள்ளார். இத்திட்டம் குறித்து அறிக்கை சமர்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

முழு சுகாதாரத்திட்டமாம்

தமிழ்நாடு முழு சுகாதாரத்திட்டம் என்ற நாமகரணம் சூட்டப்பட்ட இத்திட்டத்தின் வரைவை, திட்ட இயக்குநர் பங்கஜ்குமார் பன்சால், கடந்த 6.9. 2011 அன்று அரசுக்கு அனுப்பி வைத்தார். இத்திட்டத்தை அப்படியே ஏற்றுக்கொண்டுள்ள தமிழக அரசு, மாவட்டத் தலைநகரங்களான திருவண்ணாமலை, விழுப்புரம்,நாமக்கல், திருப்பூர், விருதுநகர், இராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உள்ள ஆய்வகங்களை தனியார்வசமாக்கத் திட்டமிட்டுள்ளது. அரசு-தனியார் கூட்டுத்திட்டம் என்று கூறப்பட்டாலும் இத்திட்டத்திற்கான முதலீடு என்பது மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட மருத்துவமனை, லட்சக்கணக்கான ரூபாய் கொண்டு வாங்கப்பட்டுள்ள லேப்பிற்கான நவீன கருவிகள் உள்ளிட்ட அனைத்தும் தமிழக அரசுக்குச் சொந்தமானது. தனியார் செய்ய வேண்டியது ஆய்வக நுட்பனர் மற்றும் கெமிக்கல் மட்டும் கொண்டு வந்தால் போதுமானது என்றும் கூறப்பட்டுள்ளது. “நீ அவல் கொண்டு வா, நான் உமி கொண்டு வருகிறேன். ஊதி, ஊதி சாப்பிடுவோம்" என்ற பழமொழியை ஞாபகத்திற்குக் கொண்டு வரும் வகையில், நிதியை தமிழக அரசு செலவு செய்யட்டும், தனியார் முதலாளிகள் கொள்ளையடித்துச் செல்லட்டும் என்பது போல உள்ளது உலகவங்கி போட்டுள்ள உத்தரவு. அந்த உத்தரவை சிரமேற்கொண்டு இத்திட்டத்திற்கு முதல்கட்டமாக, தமிழக அரசு 2 கோடியே 10 இலட்ச ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது.

தனியார் கையில் அரசு மருத்துவமனை ஆய்வகங்களை ஒப்படைத்தவுடன் அதில் மேற்கொள்ளும் ஆய்வுகளுக்கு பணம் வாங்கக்கூடாது. எத்தனை ஆய்வு நடத்தப்படுகிறது என்று கணினியில் பதிவு செய்தால் அதற்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்யும். அத்துடன் தனியார் மருத்துவமனைகளும் இந்த ஆய்வங்களில் பரிசோதனையை இலவசமாக நடத்திக்கொள்ளலாம் என்று திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, விழுப்புரம் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் நாமக்கல், திருப்பூர், விருதுநகர், இராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இத்திட்டம் முதலில் துவங்கப்பட உள்ளது.

தனியார் வசம் ஆய்வகங்கள் போனால் எந்தத் தவறு நிகழ்ந்தாலும் எங்கும் புகார் செய்யப்பட முடியாது. தனியார் நிறுவனங்களுடன் ஏற்படுத்திக்கொள்ளும் ஒப்பந்தங்களை வைத்து அவர்களின் பரிசோதனைகளை முழுமையாக இத்திட்டத்தின் கீழ் பார்த்து விட்டு நபர்கள் எண்ணிக்கையை கணினியில் பதிவு செய்து விட்டால் அதற்கும் அரசு நிதியளிக்கத் தயாராகவே உள்ளது. தமிழக அரசு நிதி என்பது மக்களின் வரிப்பணத்தில் உருவானது. மக்கள் வரிப்பணம் தனியார் கையில் கொண்டு செல்வதற்காக‌ கொண்டு வரப்பட்டுள்ளது தான் இந்த முழு சுகாதாரத்திட்டம். இத்திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் 500க்கும் மேற்பட்ட ஆய்வக நுட்பநர்களின் பணிநிலை கேள்விக்குறியாகியுள்ளது.

அரசு மருத்துவமனைகள் கபளீகரம்

இதுகுறித்து தமிழ்நாடு மருத்துவ ஆய்வக நுட்பநர் சங்கத்தின் பொதுச்செயலாளர் கோ.சுகுமார் கூறியதாவது: இத்திட்டத்தால் தனியார்மயம் மேலும் வலுப்படுத்தப்படும். அரசு மருத்துவமனைகளில் ஏற்கனவே பணி செய்து வரும் ஆய்வக நுட்பநர்களின் பணிநிலைமை கேள்விக்குறியாகும். அரசு மருத்துவமனை ஆய்வகம் தனியார் கையில் சென்றால், அவர்களை யாரும் கட்டுப்படுத்த முடியாது. அங்கு நடக்கும் தவறுகளுக்கு யாரிடம் போய் முறையிட முடியும்? இந்த தனியார் சேவை என்பது மக்களைப் பாதிக்கும். ஆகவே, இத்திட்டத்தை கைவிடக்கோரி முதல்கட்டமாக எங்கள் சங்கத்தின் சார்பில் தமிழக முதல்வர் மற்றும் துறை அதிகாரிகளிடம் முறையீடு செய்ய உள்ளோம். அதனைத் தொடர்ந்து சுவரொட்டி இயக்கம் நடத்த உள்ளோம். இதனைத் தொடர்ந்து தொடர் இயக்கங்களை நடத்த உள்ளோம் என்று அவர் கூறினார்.

கூடாரத்தில் ஒட்டகம் முதலில் மூக்கை உள்ளே நுழைத்தது போல, அரசு மருத்துவமனைக்குள் ஆய்வகத்தின் வழியாக நுழைந்துள்ள தனியார் அரசு மருத்துவமனை சேவை அனைத்தையும் கபளீகரம் செய்யப் போகிறார்கள். அதற்கு முன்பு இத்திட்டத்திற்கு எதிரான வலுவான மக்கள் இயக்கங்களாலேயே, அரசு மருத்துவமனைகளைக் காக்க முடியும்.

- ப.கவிதா குமார்

Pin It