(இந்தக் கட்டுரை, பாகனைக் கொன்றுவிட்டதற்காக அமெரிக்காவில் பொது இடத்தில் வைத்துத் தூக்கிலிடப்பட்ட பெண்யானை மரியாவுக்கு சமர்ப்பணம்)

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் கருணை மனுக்கள் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்தில் ஓர் எழுச்சிகரமான போராட்டம் நடைபெற்றது. அப்போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் முகாமிலிருந்தும் ஆதரவுக்குரல்கள் வந்தன.

ஆனால் அவை வெவ்வேறு நிலைபாட்டைக் கொண்டிருந்தன. அதில் மிக முக்கியமாக மரணதண்டனையை ஒழிக்க வேண்டுமா வேண்டாமா என்ற கேள்விக்கு கம்யூனிஸ்டுகள் தரப்பில் எடுத்த நிலைபாடுதான் நம்மை மிகவும் அதிர்ச்சியடைய வைத்தன. மரணதண்டனையை ஒழிக்கக் கூடாது என்று பாராளுமன்றவாதிகளிலிருந்து - பாராளுமன்ற புறக்கணிப்புவாதிகள் வரை பலரும் ஒரே குரலில் பேசினர். மரண தண்டனை குறித்த அவர்களின் கருத்துக்கள் வெகு விந்தையாக இருந்தன. அந்த வாதப்பிரதிவாதங்களுக்குள் செல்வதே தேவையற்றது எண்ணுவதால் மரண தண்டனை குறித்து மார்க்ஸிய அணுகுமுறை குறித்து விவாதிக்க விரும்புகிறோம்.

மரண தண்டனையின் கதை

வர்க்க சமூகம் உருவெடுத்தபோதுதான் குற்றம் ஆளும்வர்க்கத்தின் ஆட்சிநெறியாக மாறியது. இந்தியாவில் மனுநீதிச்சட்டம் அதை நமக்கு ஆவணச்சான்றாகத் தருகிறது. அவர்களால் ஆளப்படும் வர்க்கங்கள் வாழக்கைப் போராட்டத்தில் 'குற்றங்கள்' இழைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். வர்க்கத்தின் தோற்றத்துடன் சேர்ந்தே குற்றத்தின் வரையறை உருத்திரிந்தது. ஒரு அப்பத்தைத் திருடியவன் அடித்துக்கொல்லப்பட்டான். அதிகாரத்துடன் நாட்டையே கொள்ளையிட்டவன் பேரரசனானான். ராசராச சோழர்கள் கங்கை கொண்டார்கள்; கடாரம் வென்றார்கள்; சோழப்பிரஜைகள் சோளக்களியின்றி வாடினார்கள். சாட்டையடியும் சாணிப்பாலும் அரச தண்டனைகளாக ஆட்டிப்படைத்தன. பேரரசப்படைகளின் தேவைகளுக்காக உழைத்தவன், நெய்தவன், கருவிசெய்தவன் கந்தலானான். சளைக்க முடியாமல் நிமிர்ந்தவன் பேரரசச்சட்டங்களின் அரிவாள்களுக்கு கரம் கொடுத்தான்; சிரம்கொடுத்தான்.

அந்த வலியைத்தான்

'சிரமறுத்தல் வேந்தருக்கு பொழுதுபோக்கும் சிறியகதை:
நமக்கெல்லாம் உயிரின் வாதை" என்று பதிந்தான் பாரதிதாசன்.

நிலக்கிழாரிய கொடுங்கோன்மை நிலவிக் கொண்டிருந்தபோது பிரிட்டன் என்ற நவீன முதலாளித்துவப் பேரரசு வந்தது. அரிவாள்களும் கழுமரங்களும் மாற்றப்பட்டு துப்பாக்கிச்சூடு, தூக்குமரம், தலையில் ஆணியடித்தல், பீரங்கிவாயில் வைத்துப் பிளந்தெறிதல் என்று நவீன தண்டனைகளை அள்ளித்தந்தது. இந்திய இளவல்களுக்கு இலவசப் பயிற்சியும் தந்துவிட்டுப் போனது. 

சுதந்திரத்திற்குப் பின் நமது பெருமுதலாளிய புண்ணியவான்களிடம் சிக்கிய‌ அரசு, காணாமலடித்தல், என்கவுண்டர், தூக்கு, விதவிதமான நவீன சித்திரவதைகள் என்று தண்டனைகளை அள்ளி வழங்கி நீதிப்பரிபாலனம் செய்து வருகிறது.

மார்க்ஸியம் குற்றமென்று எதை குற்றம் காண்கிறது?

சகமனிதனின் உழைப்பில் ஒட்டுண்ணியாகப் பிழைக்கத் தொடங்கிய முதல் மனிதனிலிருந்து குற்றம் சமுதாய வாழ்வின் பரிக்கமுடியாத அம்சமானது. உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சி நவீனமாக நவீனமாக செல்வத்தின் அளவும் அதிகரித்தது. செல்வம் அதிகரிக்க அதிகரிக்க அது அதிகமாக அபகரிக்கப்பட்டது. அதிகமாக செல்வத்தை அபகரித்தவனுக்கு அதிகாரம் பெருக்கெடுத்து. அவனது குற்றங்களும் கேள்விகளுக்கப்பாற்பட்டதாக ஆனது. அவன் படைகள் வைத்துக் கொண்டான். அரசனானான், பேரரசனானான், மக்களிடமிருந்து வெகு உயத்திற்குச் சென்று தன்னை தெய்வத்திற்குச் சமமாக நிறுத்திக் கொண்டான். சமூக‌த்தின் சகலத்தையும் தீர்மானித்தான்.

திருடர்களை தண்டிப்பேன் என்று வெட்கப்படாமல் பேசினான். கொள்ளையர்களை அழித்தொழிப்பேன் என்று ஆத்திரப்பட்டான். கொலைக்குற்றத்திற்குக் கொலைதான் தண்டனை என்றான். ஸ்பார்ட்டகஸ்கள் குற்றவாளிகளாயினர்; மரணதண்டனை பெற்றனர்.

உடமை வர்க்கங்களின் கொள்ளையால் மக்கள் ஓட்டாண்டிகளாக்கப்படுகின்றனர். அவர்களிடமிருந்து கல்வி, சுகாதாரம், வாழ்க்கைக்கான பாதுகாப்பு என அனைத்தையும் பறித்துவிட்டு கடைசியில் அவர்களுக்கு சமுதாயத்தின் மீதும் சகமனிதன் மற்றும் உறவுகள் மீதும் இருக்கும் மென்மையான உறவுகள் அழிக்கப்பட்டு ஒரு கசப்பான கரடுமுரடான வாழ்க்கைப் போராட்டத்தில் தள்ளிவிடப்படுகிறார்கள். தம்மைப் போன்றவர்களின் துயருக்கு இந்தச் சுரண்டல்முறைதான் காரணம் என்றறியாத மக்களில் ஒவ்வொருவரும் தன்னைச் சுற்றியுள்ள‌ அனைத்து மனிதனையும் போட்டியாளனாக பாவிக்கிறான். கழுத்தை நெறிக்கும் போட்டியில் இறங்குகிறான். பெருமூலதனங்களின் பற்களால் குதறப்பட்டு விளிம்புக்குத் தள்ளப்படுகிறான். வயிற்றுப்பாட்டுக்கே அல்லாடிப்போய் அதற்காக எதையும் செய்யத் துணிகிறான்.

ஓட்டாண்டியாக்கப்பட்ட மக்களின் எதிர்வினை பல்வேறு விதத்தில் நடக்கிறது. ஒரு பிரிவு தற்கொலை, பிச்சையெடுத்தல், மனப்பிறழ்வுக்காளாதல் என்று தன்னை வருத்தி அழிகிறது. ஒரு பிரிவு திருட்டு, கொள்ளை என்று சிறுசிறு தாக்குதல்களில் இறங்குகிறது. ஆனால் எய்தவன் யாரென்று தெரியாமல் தனக்கு எளிதான இலக்காக இருக்கும் எளிய ஏழை, நடுத்தர மக்களைக் குறிவைத்து தாக்குகிறது. இந்தப் பாதையில் ஒருகட்டத்தில் தொழில்முறை குற்றவாளிகளாக உருமாறுகின்றனர். இதனை ஒருவகையில் அமைப்பாக்கப்படாத, திசைவழிதெரியாத, லட்சியமில்லாத வர்க்கப்போராட்டம் எனலாம். அதனால் தான் திருட்டை மூலதனத்திற்கெதிரான முதல் தாக்குதல் என்றார் காரல் மார்க்ஸ்.

ஒருபக்கம் நீதி நியாயம் பேசிக் கொண்டே, மறுபக்கம் தன் சட்டவிரோத செயல்களுக்குக் கூலிப்படைகளாக இந்தக் குற்றவாளிகளை முதலாளிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர். நில அபகரிப்பு, ஒப்பந்தங்களை கைப்பற்றுதல் - சந்தைகளைக் கைப்பற்றுதல், அதிகாரிகளை விலைக்கு வாங்குதல், போட்டியாளர்களை ஒழித்தல், தொழிலாளர் போராட்டங்களை ஒடுக்குதல் என்று தங்களின் கொள்ளைக்கார தொழிலை நடத்த தான் படைத்த உதிரிப்பாட்டாளிகளை கூலிப்படையாக பயன்படுத்திக் கொள்கின்றனர். முதலாளிகள் தமது மேஜையில் சட்டப்பூர்வ நடத்தையின் நற்சான்றிதழ்களைப் பரப்பி வைத்துக்கொண்டு, தமது இருக்கையிலோ சட்டவிரோத கோப்புகளைப் பரப்பி உட்கார்ந்திருக்கிறார்கள்.

தமது சுரண்டலை மறைக்க ஆளும் வர்க்கம் எப்போதுமே குற்றங்களுக்குத் தனிநபர்களையே பொறுப்பாளிகளாக்குகிறது. ‘எமது ஆட்சி மிகச்சரியாக நடக்கிறது. இதில் கெடுபுத்தியுள்ள குற்றவாளிகள் முளைக்கிறார்கள். அவர்களை நாங்கள் களையெடுப்பதன் மூலம் இந்த உன்னதமான சமுதாயத்தைக் காக்கிறோம்’ என்பது தான் அவர்கள் திணிக்கிற செய்தி. அதாவது அவர்களால் உருவாக்கப்பட்ட பாகுபாடான, ஏற்றத்தாழ்வான சமூக அமைப்பை யாரும் குறை கூறக்கூடாது. மரணதண்டனைக்குள்ளாகும் நபரைத்தவிர இந்த உலகம் நல்லவர்களால் நிரம்பிவழிகிறது என்று அனைவரும் நம்ப வேண்டும் என்பதேயாகும்.

ஒருவன் திருடன் என்றால் அவன் அதற்காகவே பிறந்தவன் என்றே சித்தரிக்கிறது. ஒருவன் ஏழையாக இருந்தால் அவனுக்கு சேமிப்புப் பழக்கம் இல்லாததுதான் காரணம் என்று அடித்துச் சொல்கிறது. ஒன்றரை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதற்கு சோம்பேறிகள்தான் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்று சொன்னார் மத்திய வேளாண் அமைச்சராக இருந்தவரும் சமீபத்தில் விலையேற்றத்திற்காக பஞ்சாப் இளைஞனிடம் அறைவாங்கியவருமான சரத்பவார். இப்படித்தான் குற்றங்களை ஆளும் வர்க்கம் பார்க்கிறது. மக்களையும் பார்க்கப் பழக்குகிறது.

குற்றங்களைத் தனிநபர் பொறுப்பாக்கி சமூக ஏற்றத்தாழ்வை மக்களின் கண்களிலிருந்து மறைக்கப் பாடுபடுகிறது. இப்படிக் குற்றத்தைப் பார்ப்பதிலும் குற்ற ஒழிப்பிலும் ஒரு மார்க்ஸியவாதி முதலாளித்துவவாதிகளுக்கு நேர் எதிராக நிற்கிறான். நமது கண்ணோட்டங்கள் ஆளும்வர்க்க கண்ணோட்டங்களுடன் இணக்கம் காண முடியாதவை.

அழித்தொழிப்பு: ஆளும்வர்க்கங்களின் வழிமுறை

காலங்காலமாக ஆளும் கும்பல்கள் எப்போதும் தன் கேடுகெட்ட சுரண்டலையும் அதிகாரத்தையும் காக்க அழித்தொழிப்பை ஒரு வழிமுறையாகப் பயன்படுத்தி வருகின்றன. அவர்களின் அருவருப்பான காட்டுமிராண்டித்தனமான சித்தாந்தம் தான் அழித்தொழிப்பு வழியாகும். தனிமனிதரைக் கொல்வதன் மூலம் சமூகத்தைக் காப்பாற்றுகிறேன் என்று ஒரு கயமையான நாடகத்தை அரங்கேற்றுகின்றன‌. இந்தியாவில் போராடும் இயக்கங்களின் தலைவர்களை குறிப்பாக மாவோயிஸ்ட் தலைவர்களை குறிவைத்துக் கொல்வதன் மூலம் தமக்கெதிரான கலகங்களை ஒடுக்கமுடியும் என்று இந்திய அரசு நம்புகிறது. முற்கால - பிற்கால மன்னர்களையும் ஒழித்து வெள்ளையனையும் விரட்டி, இன்றைய முதலாளித்துவ ஜனநாயக ஆட்சியமைவை உருவாக்கிய மக்களை இந்த அழித்தொழிப்புகள் ஒன்றுமே செய்துவிடவில்லை. பலசமயம் அது சமூகக் கொந்தளிப்புகளையே உருவாக்கியுள்ளது.

அழித்தொழிப்பு என்ற ஆளும்வர்க்கத்தின் காலாவதியான சித்தாந்தத்தின் எச்சம் தான் இன்றைய என்கவுன்டர்களும் தூக்குமரங்களும். இவர்களின் கைகளில் ஒரு கொலைக்களம் இருக்கட்டும் என்று நாம் வாளாவிருக்க முடியுமா? அமைதிக்காலங்களை விட அவசரநிலை என்ற பெயரில் ஒரு பாசிச ஆட்சி வந்தால் ஜனநாயகம் வேண்டி போராடுவோர் மரணதண்டனைக்காளாகக் கூடிய அபாயம் இன்னும் அதிகம். அரசியல் எதிரிகளை அழித்தொழிப்பதற்கான ஒரு வழிமுறையாகத்தான் மரணதண்டனை இருந்து வந்துள்ளது. பகத்சிங், கட்டபொம்மன் முதல் இன்றைய பேரறிவாளன், சாந்தன், முருகன் வரை அரசியல் அழித்தொழிப்பின் கால சாட்சியங்கள் அல்லவா?

மனுநீதிச் சோழன் தன் மகன் பசுவின் கன்றைக் கொன்றதற்காக அவனை தேர்ச்சக்கரத்தை ஏற்றிக் கொன்றான் என்பது போன்ற அபத்தக்கதைகள், காலாவதியான ஆளும்வர்க்கங்களின் அழித்தொழிப்புச் சித்தாந்தத்தை புனிதப்படுத்த உருவாக்கிய கதைகளின்றி வேறென்ன? ஆளும்வர்க்கம் தங்களின் பாரபட்சம் அம்பலப்படுவதை மறைக்க படாதபாடு பட்டுள்ளதை இந்தக் கதை புலப்படுத்தவில்லையா ?

யாருக்காக?

"எழுத்தில் என்னதான் எழுதப்பட்டிருந்தாலும் மரணதண்டனை, எப்போதுமே பலவீனமானவர்களுக்கும் ஏழைகளுக்கும் சிறுபான்மையினருக்கும் எதிராகத்தான் பயன்படுத்தப்படுகிறது”. _ பாட்பிரவுன், முன்னாள் கனடா ஆளுனர்

சுதந்திர இந்தியாவில் ஒரு மரணதண்டனையாவது ஆளும்வர்க்கத்தைச் சேர்ந்த எவர் ஒருவருக்காவது கொடுக்கப்பட்டுள்ளதா? இல்லை என்பதே உண்மை. இந்திய வரலாற்றில் முதன்முறையாக முதலாளிகளுக்கு ஒரு வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட ஒரு நிகழ்வுண்டு. அது சட்டீஸ்கர் மாநிலத்தில் 1991ல் படுகொலை செய்யப்பட்ட, புகழ்பெற்ற தொழிற்சங்கத் தலைவர் சட்டீஸ்கர் விடுதலை முன்னணியின் தலைவர் தோழர் சங்கர் குகா நியோகி அவர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தான்.

சிம்ப்ளக்ஸ்(symplex) என்ற நிறுவனத்தைச் சேர்ந்த மூல்சந்த் ஷா - நவீன் ஷா சகோதரர்கள் மற்றும் கேடியா & கேடியா(kedia & kedia) என்ற நிறுவனத்தைச் சேர்ந்த சந்திரகாந்த் ஷா ஆகிய 3 முதலாளிகளுக்கு முதன்மை அமர்வு நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது. மாநில காவல்துறை கைவிரித்தது. மத்திய புலனாய்வு அமைப்பு விசாரித்த பின்னணியில் அமர்வு நீதிமன்றம் தண்டனை வழங்கியது.

அவர்களால் அமர்த்தப்பட்ட கூலிக்கொலைகாரர்களில் பல்தான் முல்லா என்பவனுக்கு மரண தண்டனையும் அவனுடன் சென்றவர்களுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது.

வழக்கம்போல ஆளும் வர்க்க நீதித்துறை, கீழமை நீதிமன்றத்தின் இந்த தவறைச் சரிசெய்ய உதவிக்கு ஓடோடி வந்தது. கொலைக்கு கதை, திரைக்கதை அமைத்த குரூர முதலாளிகளை உயர்நீதிமன்றம் விடுதலை செய்து விட்டது. மரண தண்டனை பெற்ற கூலிக்கொலைகாரன் பல்தான் முல்லாவுக்கு தண்டனைக் குறைப்பு வழங்கியது. இந்திய வரலாற்றில் முதன்முறையாக தண்டனை பெற்ற முதலாளிகள் பின்ன‌ர் நிரபராதிகளாக விடுவிக்கப்பட்டனர்.

நமது தோழர்களால் தங்களின் மார்க்ஸிய வெளிச்சத்திலிருந்து இவ்வழக்கை ஆராய முடிந்தால் இந்தத் தண்டனைகளின் சாரம் புரியும்.

முதலாளிகள் தொழிலாளர்களைச் சுரண்டி ஏழையாக்குவதன் மூலம் தங்களை பணக்கரர்களாக்கிக் கொண்டார்கள். அதைத் தட்டிக் கேட்ட ஒரு தலைவனை, ஏழையிலிருந்து ஒருவனை கூலிக்கமர்த்தி நல்ல ஊதியம் கொடுத்து (உழைப்புக்கதிகமான ஊதியம் கொடுக்கும் ஒரே வேலை) கொலை செய்தார்கள். மக்கள் போராட்டத்தின் விளைவாக கீழ் நீதிமன்றம் தண்டனை வழங்கியது. முதலாளித்துவ நீதிமன்றங்கள், மக்கள் போராட்டங்களின் விளைவாகவோ சில சட்டவாதம் பேசும் நீதிபதிகளாலோ இதுபோன்ற 'பிழைகள்' ஏற்பட்டால் ஓடோடிவந்து சரிசெய்து விடுகின்றன. தமது வர்க்கத்தைக் காக்கும் தெளிவோடு உயர், உச்ச நீதிமன்றங்கள் அவர்களை விடுவித்துவிட்டன. கூலிக்கொலைகாரன் பல்தானமுல்லா செல்வாக்கில்லா மனிதன் ஆதலால் ஆயுள்தண்டனை அனுபவிக்கிறான்.

இப்படி நீதிபரிபாலங்களின் முதலாளித்துவ பரமபத விளையாட்டுக்கள் தெரிந்த நம் தோழர்கள் தான் மரணதண்டனை வேண்டும் என்கிறார்கள். மேற்சொன்ன வழக்கில் அமர்வு நீதிமன்றம், கூலிக்கொலைகாரனுக்குத்தான் மரணதண்டனை அளித்ததே தவிர, அதன் ஒட்டு மொத்த பொறுப்பாளிகளுக்கல்ல என்பதை சிந்திக்க முடிந்தால் நல்லது. இப்படிப்பட்ட முதலாளித்துவ நீதிமன்றங்களின் கைகளில் மரணதண்டனை இருக்கட்டும் என்றால் நாம் பாட்டாளிவர்க்கத்தின் மரண வியாபாரிகளாகிவிடுகிறோம்.

மரணதண்டனையும் குற்றமொழிப்பும்:

மரணதண்டனைகள் குற்ற எண்ணத்தைத் தடுக்கும் என்றொரு கருத்துரு அனைவருக்குள்ளும் ஆட்டிப்படைக்கிறது. அப்படிப் பார்த்தால் ஹிட்லரின் நாஜியரசும் ராஜபக்சேக்களின் அரசும்தான் இனப்பிரச்சனையை உலகில் முற்றாக ஒழித்த அரசுகளாக இருக்கமுடியும். ஏனென்றால் அவர்கள் தான் மரணதண்டனை மூலம் இனப்பிரச்சனைகளைத் தீர்க்க முற்பட்டவர்கள்.

உணர்ச்சிவயக் குற்றங்கள், ஆதாயக் குற்றங்கள், லட்சியக் குற்றங்கள், மனப்பிறழ்வுக் குற்றங்கள், இப்படி அனைத்துக் குற்றங்களையும் மொத்தமாகப் பகுத்தோமானால் எதுவுமே மரண தண்டனைகளைக் கண்டு அஞ்சி நிற்பதில்லை. இவையனைத்தும் ஏற்கனவே வீசப்பட்ட அம்புகள்.. எறியப்பட்ட எறிகணைகள்..

1. உணர்ச்சிவயக் குற்றங்கள் கணப்பொழுதில் நடந்துவிடக் கூடியவை.
2. லட்சியக் குற்றங்களை மரண தண்டனை தடுத்துவிடாது.
3. மனப்பிறழ்வுக் குற்றங்களை மரண தண்டனை தடுக்காது.
4. ஆதாயக் குற்றங்களைப் பொருத்தவரையில் அவர்கள் தங்களின் சதித்திட்டத்தின் நுட்பங்களை நம்பிச் செய்கிறார்கள். அதாவது தாங்கள் மாட்டிக் கொள்ளமாட்டோம் என்ற முழு நம்பிக்கையுடன் செய்கிறார்கள். எனவே அவர்களையும் தடுப்பதில்லை.

 ஆக மரண தண்டனைகள் வெறும் வெண்ணை வெட்டிகள்தான். பொது இடத்தில் வைத்து தலையை வெட்டினாலும் தொடர்ந்து குற்றங்கள் நடக்கும் அரபு நாடுகளே இதற்கு சாட்சி.

ஒருநாட்டில் கடும் தண்டனைமுறைகள் இல்லை என்பதால் குற்றங்கள் ஊற்றெடுப்பதில்லை. மனிதர்களிடையிலான சொத்துறவுகளின் தன்மைதான் அதன் அளவையும் பரிமாணத்தையும் நிர்ணயிக்கின்றன. பெரும்பாலான நாடுகள் இத்தகைய கசாப்பு தண்டனை முறைகளை விட்டுவிட்டன. இன்று சீனாவுக்கு அடுத்தபடியாக அதிகமாக மரணதண்டனையை விதிக்கும் அமெரிக்க நாட்டில் கடந்த 2005ல் சிறுவர்களை இனிமேல் தூக்கில் போடமாட்டோம் என்று நாகரீகமான(!?) முடிவெடுத்துள்ளனர். 1916ல் அமெரிக்காவின் டென்னிஸ் மாகாணத்தில் மரியா என்றொரு சர்ககஸ் யானை அதன் பாகனைக் கொன்றுவிட்டதற்காக அதை பொது இடத்தில் வைத்துத் தூக்கில் போட்ட புண்ணியவான்கள் தான் அமெரிக்கர்கள். அவர்கள் கூட இப்போது யானையைத் தூக்கில் போடுவதில்லை. சதாம் உசேன்களை மட்டும் தூக்கில் போடுமளவுக்கு 'நாகரீகம'டைந்துள்ளனர்.

தண்டனைக் குறைப்புகள் ஆளும் வர்க்கங்கள் இடும் பிச்சையா?

காட்டுமிராண்டித்தனமான தண்டனைகளை எந்த தேவதூதரும் தடுத்துவிடவில்லை. அல்லது ஆளும் வர்க்கம் கருணையே வடிவாகி கசிந்துருகிக் குறைக்கவுமில்லை. சித்திரவதைகள், உறுப்புகளைச் சிதைத்தல், குடுபம்பத்தைத் தண்டித்தல், பொது இடங்களில் வைத்து இழிவுபடுத்துதல் போன்ற வதைகள் மக்கள் போராட்டங்களின் விளைவாகத்தான் ஒழிக்கப்பட்டுள்ளன. ரௌலட் சட்டம், மிசா, தடா, பொடா, ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச்சட்டம் போன்ற ஆள்தூக்கிச் சட்டங்களின் நஞ்சுப்பற்கள் பிடுங்கப்பட்டு வருவதும் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களின் விளைவே.

முதலாளித்துவ நாடுகள் மரண தண்டனை உள்ளிட்ட பல கொடிய தண்டனைகளை தானாக விட்டுவிடவில்லை. மக்கள் போராட்டம் தான் அதைச் சாதித்தது. மரண தண்டனையை ஒரு குற்ற ஒழிப்புக் கொள்கையாக ஏற்க முடியாது என்ற நிலைபாடு காலங்காலமாக ஒடுக்கப்படும் மக்களின் கருத்தாகவே முன்வைக்கப்பட்டு வருகிறது. குற்றங்களைத் தொடர்ந்து தனிமனிதப் பிரச்சனையாக்க முயலும் ஆளும் வர்க்கங்களை அம்பலப்படுத்தி மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

அமெரிக்காவின் குவான்டனாமோ போன்ற கொடிய வதைக்கூடங்கள் உலகளாவிய மக்களின் எதிர்ப்பினால் அதன் அட்டூழியத்தைக் கொஞ்சம் குறைத்துள்ளது. இன்றைய உலகளாவிய அளவில் முதலாளித்துவப் பொருளாதாரம் சந்தித்துவரும் நெருக்கடியால் அமெரிக்காவும் ஐரோப்பாவும் ஆட்டங்கண்டு வருகின்றன. இந்த நெருக்கடியை அந்நாடுகளின் முதலாளித்துவ கும்பல் கொள்ளைக்காரப் போர்களை உருவாக்கித் தீர்க்க முனையும். எனவே இத்தகைய கால சூழலில் சித்திரவதை எதிர்ப்பு, போர் எதிர்ப்பு, மரண தண்டனை ஒழிப்பு, இனப்படுகொலை எதிர்ப்பு போன்ற நிலைபாடுகளை மக்கள் மத்தியில் விரைவாகவும் ஆழமாகவும் கொண்டு செல்லும் கடமையை முன்னெடுக்க வேண்டும்.

ஆளும் வர்க்க கருத்தியல்களுக்கு இரையாகவோ அல்லது கடந்த கால வரலாறுகளின் தவறான முன்னுதாரணங்களை நியாயப்படுத்தவோ முனையக்கூடாது.

புரட்சிகர வன்முறையும் மரண தண்டனையும்

புரட்சியில் வன்முறையின் பாத்திரம் என்பது தவிர்க்கவியலாதது. முதலாளித்துவ வர்க்கங்களின் மக்கள் விரோத அரசையும் அது பிரயோகிக்கும் வன்முறைக்கு எதிரான புரட்சிகர வன்முறையில் உயிர்ப்பலி தவிர்க்கவியலாதது. ஆனால் இது ஒரு தவிர்க்கவியலாத எதிர்வினை என்ற அடிப்படையில் மட்டும் தான். போரின் பகுதியாக புரட்சிகர யுத்தத்தின் பகுதியாக நடக்கும் அழித்தொழிப்புகள் என்பது வேறு. சீனப்புரட்சிகர யுத்தத்தில் அழித்தொழிப்பு யுத்தம் (war of annihilation) என்ற ஒரு போர் உத்தி கடைபிடிக்கப்பட்டது. நமது தோழர்கள் ஏதோ ஒரு விதத்தில் இதை மரணதண்டனையுடன் குழப்பிக் கொள்கிறார்கள் என்றே தோன்றுகிறது.

 ஒரு நிறுவனமயப்பட்ட பாட்டாளிவர்க்க அரசு இதைச் செய்யலாமா என்பது தான் கேள்வி. ஒரு அரசு உருவாக்கப்பட்ட பிறகு குற்ற ஒழிப்புக் கொள்கையாக அழித்தொழிப்பைக் கொண்டிருப்பது எப்படிச் சரி? அது குற்றங்களை குறைக்கவும் தடுக்கவும் செய்யுமா?

மார்க்ஸியவாதிகள் அறநெறிப்படி வன்முறையை ஒரு தற்காப்பு நிலையிலிருந்தே கையாள்கிறோம். நம்மேல் திணிக்கப்படும் வன்முறைக்கெதிராகவே வன்முறையைக் கையாள்கிறோம். போரை உலகிலிருந்து ஒழிப்பதற்காகவே நாம் போரை நடத்துகிறோம். நாம் சமூகத்தின் எந்தச் சிக்கலுக்கும் மனிதாபிமானமற்ற வதைகளை ஒரு தீர்வாக முன்வைப்பதில்லை.

யுத்தங்களில் திணிக்கப்பட்ட வன்முறைக்கெதிரான புரட்சியானது மனிதாபிமான விதிகளை எதிரியை விட மதித்துப் போற்றுகிறது. நிராயுதபாணிகளாக சரணடைவோரைக் கொல்லக்கூடாது என்ற விதிமுறையைக் கடைபிடிக்கிறது. போர்க் கைதிகளை அரசியல் சிறைவாசிகளாக நடத்துகிறது. இவற்றைக் கடைபிடிக்கையில் நாம் எந்த உணர்ச்சிகளுக்கும் பலியாவதில்லை; அவற்றை மீறுவதில்லை. ஒரு போர்ச்சூழலிலேயே இப்படி என்றால் மக்களால் நிறுவப்பட்ட ஒரு அரசு மரணதண்டனையை ஒரு குற்ற ஒழிப்புக் கொள்கையாக எதனடிப்படையில் வைத்துக் கொள்வது? இதில் ஒரு அரசு உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்கவியலாது; கூடாது.

பெரும்பான்மை மக்களுக்கு விரோதமாக சிறுகூட்டத்தினரின் நலன்களைக் கட்டிக் காப்பாற்றும் உடமை வர்க்கங்களின் அந்நியப்பட்ட ஆட்சி, தனிநபர் அழித்தொழிப்பை ஒருபோதும் நிறுத்தப் போவதில்லை. முதலாளித்துவ நாடுகள் சட்டத்தில் மரண தண்டனையை ஒழித்து விட்டாலும் அவை தனிநபர் அழித்தொழிப்பின் மூலம் தான் தங்களுக்கெதிரான நெருக்கடியைத் தீர்க்க முனையும்; தங்களின் மோசடியை மறைக்க முனையும். ஆனால் ஒரு சோசலிஸ அரசோ பெரும்பான்மை மக்களின் நலன்களுக்கான ஆட்சி என்பதுடன் பெரும்பான்மை மக்களிடமிருந்து அந்நியப்படாத மக்களாட்சியாக இருக்கும் நிலையில் தனிநபர் அழித்தொழிப்பு என்பது ஒரு சோசலிஸ அரசுக்குத் தேவையற்றது.

நமது குற்ற ஒழிப்புக் கொள்கை என்ன?

தோழர் மார்க்ஸ் இது குறித்து சொல்கையில் “பொதுவாக தண்டனையானது (குற்றங்களைக்) குறைப்பதற்கும் மற்றவர்களை அச்சுறுத்துவதற்குமானது என்ற வகையில் ஆதரிக்கப்படுகிறது. முதலில் மற்றவர்களை அச்சுறுத்துவதற்காகவும் குற்றங்களைக் குறைப்பதற்காகவும் என்னை தண்டிக்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? வரலாறும் அதனடிப்படையிலான புள்ளி விவரங்களும் முழுமுற்றான ஆதாரங்களுடன் ஒன்றை நிரூபித்துள்ளன: கெய்ன் காலம் தொட்டு தண்டனையால் உலகம் அச்சுறுத்தப்படவோ குற்றங்கள் குறைக்கப்படவோ இல்லை.” என்கிறார்.

(குறிப்பு : கெய்ன் - பழைய ஏற்பாட்டின்படி, கெய்ன் ஏபெல் ஆகியோர் ஆதாம் ஏவாளின் முதல் பிள்ளைகள் ஆவர். கெய்ன் பொறாமையால் ஏபெலைக் கொன்றாராம். அதற்காக கடவுள் அவரை நாடுகடத்தினாராம்.)

தோழர் மாவோ மரணதண்டனை குறித்து 60 ஆண்டுகளுக்கு முந்தைய மிகப் பின்தங்கிய சீன நிலைமைகளிலிருந்து அதை அணுகினார். ‘பொதுவாக உச்சபட்ச தண்டனை வழக்கமாக கூடாது என்றாலும் வெகுமக்களின் கோபத்தைக் கணக்கில் கொண்டு சிலவற்றுக்கு உச்சபட்ச தண்டனை அளிக்கலாம்’ என்ற ஓர் அணுகுமுறையை முன்வைத்தார். இதை அவர் முன்வைக்கையில் ‘வெகுமக்களின் கோபத்தைக் கணக்கில் கொண்டு’ என்று ஒரு விதிவிலக்கு அளிப்பதன் ஆழமான அர்த்தம் என்ன? கம்யூனிஸ்டுகள் அதில் உடன்பட ஒன்றுமில்லை என்பது தான். மரண தண்டனை என்பது மக்களின் கோபத்துடன் செய்யும் ஒரு சமாதானம் தவிர கொள்கை அல்ல. இன்றைய நிலையில் நாம் இந்தச் சமாதானங்களை விட்டொழிக்கலாம்.

இன்றைய உலகில் வெறும் 58 நாடுகள் மட்டுமே அதைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் நிலையில் மக்களுக்கு மரண தண்டனையின் வர்க்கத்தன்மை குறித்தும் ஒரு தண்டனையாக அதன் தகுதி குறித்த அறிவியல்பூர்வ கல்வியளிப்பதன் மூலமாக இவற்றைக் களைய முடியும். கசாப்புத் தண்டனைகள் மடடுமல்ல எந்த தண்டனையுமே குற்றத்தைத் தடுக்கவோ குறைக்கவோ போவதில்லை என்பதை உணர்த்த இயலும். 60 ஆண்டுகளுக்கு முந்தைய சீன நிலைமைகளிலிருந்து எடுத்த நிலையை நாம் இன்றைய கால நிலைமைகளிலிருந்து பரிசீலிக்க வேண்டும்.

சோசலிச ஆட்சியில் நாட்டிற்கெதிரான சதி, துரோகம் செய்வோரையும் கூட ஒரு சோசலிஸ அரசு மரண தண்டனையால் தடுத்துவிடவோ குறைத்துவிடவோ முடியாது. குற்றங்களுக்கு தண்டனை முறைகளைத் தேடுவதை விட குற்றச்சூழலை ஒழிக்கவே நாம் போராட முனைய வேண்டும். கடுங்காவல் தண்டனைக்காலம் ஒரு புதிய மனிதனைப் படைக்கும் சூழ்நிலை கொண்டதாக இருக்க வேண்டும். உடைமை வர்க்கங்களின் அழித்தொழிப்பு முறையை ஒழித்துவிட்டு மக்களோடு சேர்ந்து மக்களைப் பயிற்றுவித்தல், வாழ்வாதாரங்களை மேம்படுத்தல், விஞ்ஞானப் பூர்வமான சிந்தனை முறைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றைச் செய்ய வேண்டும். மக்கள் பிரச்சனைகளை மக்கள் அரங்கங்களே மேம்பட்ட கருத்தியல் விழுமியங்களைக் கொண்டு தீர்க்கும் முறைகளை வளர்த்தெடுத்துப் பயிற்றுவிக்க வேண்டும்.

பழைய வரலாற்றுத் தவறுகளின் படிப்பினைகளை மக்களுக்குப் பயிற்றுவித்து சரியான நீதிவழங்கும் முறைகளை உருவாக்க வேண்டும். இதுவே மக்கள் திரள் வழியில் தீர்வு காண்பதாக இருக்கும். மக்களுடன் மிக ஆழமான நெருக்கத்தை உருவாக்குவதன் மூலம் மட்டுமே அதைச் சாதிக்க முடியும். மக்களிடமிருந்து அந்நியமாதல் முதலாளித்துவ அரசுகளின் தவிர்க்கவியலா வரலாற்று விதி. மக்களோடு நெருக்கமாதல் மட்டுமே பாட்டாளிவர்க்க அரசுகளின் தவிர்க்கவியலா விதியாக இருக்க முடியும்.

இறுதியாக ஒரு கவிதை: 

விசாரணை

நீதிபதி விசாரிக்கப்படுகிறார்
கேள்வி ஒன்று கேட்கப்பட்டது
குற்றம் என்றால் என்ன?
“மரணத்தின் ஆட்சியில்
வாழ்தல் குற்றம்”

காவல் அதிகாரிக்குக் கைவிலங்கிடப்பட்டது
கேள்வி ஒன்று கேட்கப்பட்டது
சிறைப்படல் என்பதென்ன?
“உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிதல்”

சிறையதிகாரி கொட்டடிக்குள் தள்ளப்பட்டான்
கேள்வி ஒன்று கேட்கப்பட்டது
கொட்டடி என்பது என்ன?
“ஒருவன் தனக்குள் இருளைச்
சுமந்து திரிவது தான்.”

தீர்ப்பு வழங்கப்பட்டது.
அனைத்துக் குற்றங்களிலிருந்தும்
மனிதகுலம் விடுதலை செய்யப்பட்டது.
அமைப்பு முறை (system) கைது செய்யப்பட்டது.

- Recep marasli*.

*Capital Punishment — Mr . Cobden’s Pamphlet —  Regulations of the Bank of England -  KarlMarx in New-York Tribune 1853

- தங்கப்பாண்டியன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It