'இந்தி'ய அரசு தமிழர்களுக்கு எதிராக செயல்படுவது இது ஒன்றும் முதல் முறையல்ல. ஈழப்போராட்டத்தின் போதே நாம் அதனை கண்டோம்.ஆனால் இப்போது இன்னும் அதிகமாக வெளிப்படையாகவும் தமிழ்நாட்டு மக்களின் மீது நேரடியாகவும் நடத்தப்படும் தாக்குதலை இப்போது கண்டு வருகிறோம். கூடங்குளத்தில், முல்லை பெரியாற்றில் தாங்கள் தமிழர் விரோதிகளென வெளிப்படையாகவே அறிவிக்கின்றனர். ஆனால் நாமோ துடுப்பில்லாமல் பயணம் செய்யும் படகை போல இலக்கில்லாமல் வெற்றி பெறும் வழிகளை தெரியாதவர்கள் போல பயணிக்கிறோம். இவற்றுக்காக போராட வேண்டுமா? வேண்டியதில்லையா? என்று கூட தெரியாமல் கருத்தொற்றுமைக்கு வர முடியாமல் தள்ளாடுகிறோம். இலக்கை நோக்கிய போரட்டங்களை தவிர்த்து அடையாள ஆர்பாட்டங்களையும், அடையாள பேரணிகளையும், அடையாள மறியல்களையும், உண்ணாவிரதங்களையும், எதற்கும் பயனில்லாத கூட்டங்கள் கூடுவதையும் மட்டுமே செய்கிறோம். இன்றைய தமிழக அரசியல், தொலைநோக்கு பார்வை கொஞ்சமும் இல்லாது, போராட்டங்களை வெறும் பதிவு என்ற நிலையில் மட்டுமே செய்யகூடிய நிலையில்தான் இருக்கிறது.

இன்றைக்கு, தமிழ்ச்சமுகம் எதிர்கொண்டிருக்கும் பிரச்சனைகளுக்காக தீர்க்கமான நிலைப்பாடுகளில் இருந்து போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்காமல் மரத்திற்கு மரம் தாவும் போக்கினையே இங்கு பலரும் கொண்டிருக்கின்றனர் என்பது நமது அரசியலுக்கு பெரும் பின்னடைவாக உள்ளது. அதாவது ஆழமாக இருக்ககூடிய பிரச்சனைகளுக்கு எந்த முடிவும் கிடைக்காத போதும், பிரச்சனைகள் இன்னும் கடுமையாக மாறிகொண்டிருக்கும் போதும் ஒரு புதிய பிரச்சனை வந்துவிட்டால் நடத்தி கொண்டிருக்கும் அத்தனை போராட்டங்களையும், செயல்பாடுகளையும் முற்றிலும் கைவிட்டு விட்டு புதிய பிரச்சனையின் பின்னே ஓடும் போக்கே அது. இத்தகைய சூழலில் கூடங்குளம் மற்றும் முல்லை பெரியாறு ஆகிய இரு போராட்டங்கள் குறித்து நமது நிலைப்பாடு என்னவாக இருக்க முடியும் அல்லது வேண்டும் என்பதற்கான சிறு விவாதமே இந்த கட்டுரை.
 
தமிழ்நாட்டில் மிக நீண்ட காலத்திற்கு பிறகு மக்கள் மிகப்பெரிய அளவிற்கு போராடும் களங்களாக கூடங்குளமும், முல்லை பெரியாறும் இருக்கிறது. இந்த அளவிற்கு மக்கள் எழுச்சியுற்று போராடுவது அரசுக்கும், அரசியல் கட்சிகளுக்கும், இயக்கங்களுக்கும் வியப்பினை தருவதாக உள்ளன. இந்த சூழலில் வரலாறு நமக்கு இந்த போராட்டங்களை காணும் வாய்ப்பினை வழங்குவதோடு மட்டும் நிற்காமல் பங்கெடுக்கும் வாய்ப்பினையும் வழங்குகிறது. இந்த வாய்ப்பினை இங்கே உள்ள ஒவ்வொருவரும் பயன்படுத்த வேண்டும் என்பதும் இந்த கட்டுரையின் நோக்கம்.
 
முன்னதாக, இந்த கட்டுரையின் துவக்கத்தில் நாம் வைத்த விமர்சனத்தின் மூலத்தை சற்றே பார்க்கலாம். ஈழப்போராட்ட துரோகம், தமிழக மீனவர் படுகொலை, போர்குற்ற விசாரணை முடக்கம், மூவர் தூக்கு தண்டனை சதி, பரமக்குடி படுகொலைகள், கூடங்குளம் அணுஉலை விவகாரம் என்று தமிழகம் தொடர்ந்து போராடி வந்தாலும் இன்று முல்லை பெரியாறு பிரச்சனையில் கவனம் குவித்து களமாடுகிறது. இந்த முல்லை பெரியாறு பிரச்சனையில் தமிழ்நாடு மக்களின் வாழ்வாதாரத்தையும், உரிமையினையும் பறிப்பதற்க்காக மத்திய அரசும், கேரளா மாநில அரசும் திட்டமிட்டு சதி செய்து வருகின்றன. ஆனால் இந்த சதிகாரர்களுக்கு எதிராக தமிழக மக்கள் புரிந்திருக்கும் எதிர்வினையானது மிகவும் எழுச்சிகரமாகவும், பலமானதாகவும், இந்த நாச வேலைக்கு காரணமாக இருந்தவர்களுக்கு மிகச்சரியான பதிலடியாகவும் இருக்கிறது. முல்லைபெரியாறுக்காக கம்பம், போடி, தேனி போன்ற பகுதிகளின் மக்கள் தன்னெழுச்சியாக திரண்டு அணையை நோக்கி பேரணியாக திரள்கின்றனர். தமிழ்நாட்டு பிரச்சனை என்றாலும் இந்த போராட்டம் தமிழ்நாடு காவல்துறையின் சகல ஒடுக்குமுறையையும் எதிர்கொண்டுதான் நடக்கிறது ஆனால் இந்த ஒடுக்குமுறை கண்டு அஞ்சாது மக்கள் கூடுகின்ற எண்ணிக்கைதான் கேரளா அரசுக்கும், மத்திய அரசுக்கும் பயத்தை கிளப்பி இருக்கிறது. தமிழ்நாட்டின் உரிமைக்காக மக்கள் நடத்தும் இந்த போராட்டம் வெல்லவேண்டும் அல்லது வென்றாக வேண்டும் என்பதுதான் நம் ஒவ்வொருவரின் எண்ணமாக உள்ளது.
 
ஆனால் வரலாறு நெடுக எப்பொழுதும் நாம் புரிந்து வரும் தவறினை இப்பொழுதும் தொடர்ந்து செய்யப்போகிறோமா? என்பதில் நமது கவனத்தை செலுத்தினால் நல்லது என்று நினைக்கிறோம்.
 
நம்மால் ஒன்றுப்பட்டு போராட முடியாததாலும், இலக்கில்லாமல் போராடியதாலும், பல துரோகங்களுக்கு ஆளானதாலும் ஈழப்போராட்டத்தில் கடும் பின்னடைவையும், பேரழிவையும் சந்தித்தோம். நமது தோல்விக்கு பகுதியாக காரணமானவர்களை பழிவாங்க சட்டமன்ற தேர்தலில் கவனத்தை குவித்து, ஈழப்போராட்ட துரோகிகளுக்கு எதிராக களமாடி நினைத்ததை சாதித்தோம். தமிழகத்தில் புதிய அரசு அமைந்த நேரத்தில் போர்குற்றம் தொடர்பான ஆவணப்படம் வெளியாகவே தமிழ்நாட்டில் அது தொடர்பான போராட்டங்கள் தொடர்ச்சியாக எழுந்தன. ஆனால் மூவருக்கு தூக்கு என்று அறிவித்ததுதான் தாமதம், நாம் போர்குற்றங்கள் மற்றும் மீனவர் படுகொலை தொடர்பான போராட்டங்களை அப்படியே போட்டுவிட்டு மூவர் தூக்கு எதிராக போராட வந்தோம். போராட்ட வலுவினாலும், செங்கொடி போன்றவர்களின் ஈகத்தாலும் ஈழப்பிரச்சனைக்கு போன்றே மூவர் தூக்குக்கும் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரமுடிந்ததே அன்று அந்த பிரச்சனைகளை இன்றளவிற்கும் சாதகமான முடிவிற்கு நம்மால் கொண்டு வர முடியவில்லை.

ஈழப்படுகொலையை நடத்திய போர்க்குற்றவாளிகள் இன்னமும் சுதந்திரமாக உலா வந்து கொண்டிருக்கின்றனர். நாமோ சட்டப்பேரவை தீர்மானங்களோடு திருப்தி அடைந்து விட்டிருக்கிறோம். மூவர் தூக்குக்கு எதிராக போராடி கொண்டிருக்கும் தருவாயில்தான் பரமக்குடி படுகொலைகள் நடந்தேறின. தமிழ்நாட்டின் உண்மையான பிரச்சனையை இங்கேதான் சந்தித்தோம். ஒன்றாக போராடியவர்கள் இப்போது பிரிந்து நின்று போராடியதை பார்த்தோம். நாம் எப்பொழுதெல்லாம் இணைந்து போராடுகிறோமோ அப்பொழுதெல்லாம் மத்திய ,மாநில அரசுகள் அனைத்து சூழ்ச்சிகளையும் செய்து நம்மை பிளவுபடுத்துவதொடு அதற்க்கு ஆதிக்க சாதி வெறி பிரிவுகளை துணையாக வைத்துகொண்டு நம்மை துண்டாடுவதையும் வழக்கமாக வைத்துக்கொண்டிருக்கிறது. இந்த வாய்ப்புகளை ஆதிக்க சாதிவெறியும் நன்கு பயன்படுத்திகொள்கிறது. இந்த மத்திய, மாநில அரசுகளையும், ஆதிக்க சாதி வெறியினையும் எதிர்த்தோமில்லை, எதிர்த்து உறுதியுடன் ஒற்றுமையாக நின்றோமில்லை.
 
இந்த சூழலில்தான் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராட்டம் வெடித்தது. இப்போதும் வழக்கம் போல இருக்கும் பிரச்சனைகளை கைவிட்டு விட்டு அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் கவனம் செலுத்தினோம்.50000 -இக்கும் மேற்ப்பட்ட மக்களின் பங்கேற்ப்பும், சாகும் வரை உண்ணாவிரதம் போன்ற போராட்டங்கள் மத்திய, மாநில அரசினை பாதித்தன. இன்றளவிற்கும் 130 நாட்களை கடந்து அணுஉலை வேண்டாம் என்று உறுதியுடன் போராடி கொண்டிருக்கும் போராட்டத்தை குலைக்கவே மத்தியை ஆளும் காங்கிரஸ் அரசும், கேரளாவை ஆளும் காங்கிரஸ் அரசும் இணைந்து முல்லை பெரியாறு பிரச்சனையை தமிழக மக்கள் மீது திணித்தனர். இன்று முல்லை பெரியாறு பிரச்சனைக்காக அனைவரும் போராடிகொண்டிருக்கிறோம். ஆனால் நாளையொரு புதிய பிரச்சனை கிளப்பப்பட்டால் அனைவரும் முல்லை பெரியாறு பிரச்சனையையும் அப்படியே போட்டுவிட்டு புதிதாக வரும் பிரச்சனையை கையில் எடுத்துக்கொண்டு திரிவோம் என்பதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. ஏனென்றால் நமது வரலாறு அப்படி இருக்கிறது .புதிய பிரச்சனைகள் கிளப்பப்படும்போது இருக்கும் பிரச்சனைகளை அப்படியே கிடப்பில் போட்டுவிடுகிறோம்.
 
ஈழத்தில் மக்களின் துயரங்கள் துடைக்கப்பட்டு விட்டதா? அந்த மக்களை விடுவிப்பது குறித்த போராட்டங்களை இன்றைக்கு காணோம்!போர்க்குற்றவாளிகளை தண்டித்துவிட்டோமா? அந்த கொடியவர்களை தண்டிக்க வலியுறுத்தும் எந்த போராட்டத்தையும் இன்று நாம் காணவில்லை. தமிழக மீனவர் படுகொலை தடுத்து நிறுத்தப்பட்டதா? மூவர் தூக்கு குறித்த கவனம் இல்லை, சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக குரல்கள் இல்லை. கூடங்குளம் போராட்டம் குறித்த ஆர்வம் மங்க துவங்கலாயிற்று, எப்படியும் துவங்கிவிடுவான் என்று வேறு சிலர்!, இன்றைய பாடு பொருளாக முல்லை பெரியாறு இருக்கிறது. இதுவும் இன்னும் எத்தனை நாளுக்கோ? ஆனால், உண்மையோ! ஈழ மக்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்த வண்ணம்தான் உள்ளன, போர்க்குற்றவாளிகள் திமிராக பேசிக்கொண்டு அலைகின்றனர், மூவர் தூக்கு இன்னமும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது, பரமக்குடி படுகொலைகளுக்கு காரணமானவர்கள் இன்னமும் சுதந்திரமாக உலா வருகின்றனர், கூடங்குளம் அணு உலையை திறந்தே தீருவோம் என்று மத்திய அரசு பல வழிகளில் ஒடுக்குமுறைகளை கட்டவிழ்த்துவிடுவதொடு போராடும் மக்களை கடித்து குதற சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் ஓநாயாக இன்று நின்று கொண்டிருக்கிறது.முல்லை பெரியாறு பிரச்சனையிலும் இரு மாநில மக்களின் உணர்ச்சிகளை தூண்டி விட்டு மோதல்களுக்கு வழி வகுத்து இருமாநில மக்களையும் துண்டாடி தனக்கு சாதகமான விடயங்களை சாதித்து கொள்ள நிற்கிறது மத்திய அரசு. இதன் மூலமாக அணு உலை எதிர்ப்பு போராட்டத்தில் கேரளா மக்களும் இணைந்து நின்றதையும் இப்போது பிரித்துவிட்டிருக்கிறது மத்திய அரசு.
 
முல்லை பெரியாருக்காக போராடும் பலர் கூடங்குளம் போராட்டத்தை பற்றிய தவறான புரிதலில் இருக்கின்றனர், அதே போல அணு உலை எதிர்ப்பு போராட்டத்தில் எடுப்பதும் பலர் முல்லை பெரியாறு பிரச்சனையை கையில் எடுக்க தயங்குகின்றனர்.

இங்கேதான் இந்த இடத்திலேதான் கூடங்குள போராட்டத்தை சிதைக்கும் உள்நோக்கத்தோடு கருத்துக்களை உருவாக்கி வெளியிடுகிறது மத்திய அரசு, தமிழக மக்களை துண்டாடவும் இதே கருத்தினை பயன்படுத்துகிறது மத்திய அரசு .அதுதான் கூடங்குளத்தில் பூகம்பம் வரும் என்கிறீர்கள்? முல்லை பெரியாற்றில் பூகம்பம் வராது என்கிறீர்கள்? நீங்கள் பேசுவது சரியில்லையே என்பதுதான் அது.இன்று வலுப்பெற்று வரும் முல்லை பெரியாறு பிரச்சனையில் கேரளத்தரப்பில் வைக்கப்படும் வாதங்களாவன அணை பலவீனமாக இருக்கிறது, அதனால் அதை இடித்து விட்டு புதிய அணை கட்டவேண்டும் என்பது. நமது தரப்போ அணை பாதுகாப்பானது, எந்த பூகம்பத்தையும் தாங்க வல்லது, மிகவும் தேர்ச்சி பெற்ற வல்லுனர்களை வைத்து உறுதிபடுத்தி இருக்கிறோம் என்று கூறுகிறது. இந்த வாதங்களை நாம் முன் வைக்கும் போது தயாராக இருக்கிறது ஒரு கேள்வி கூடங்குளத்தில் மட்டும் பூகம்பம், சுனாமி வந்துவிடும் என்கிறீர்கள்! அணை இருக்கும் பகுதியில் மட்டும் பூகம்பம் வராதோ என்று? இந்த கேள்வி கேட்கப்படும் தருணமும், சூழலும் மிகவும் பொருத்தப்பாடாகவும், நியாயமானதாக இருக்கிறதே என்று எண்ணத்தோன்றும் அளவிற்கும், சாதாரண மக்களை குழப்பும் அளவிற்கும் இருப்பதில்தான் இவர்களது திறமையும், சூழ்ச்சியும் இருக்கிறது. கூடங்குளத்தில் பூகம்பம் வரும், பெரியாற்றில் வராதா? வரும் நிச்சயமாக வரும் என்பதை ஒத்துக்கொள்கிறோம்.

முல்லை பெரியாரில் மட்டுமல்ல கூடங்குளத்திலும் பூகம்பம் மட்டுமல்ல, சுனாமி போன்றவைகளும் வரும் என்பதிலும் நாம் உறுதியாக இருக்கிறோம். இரு இடங்களிலுமே பூகம்பம் வருவதாக வைத்து கொள்வோம். என்ன நடக்கும்?முல்லை பெரியாறு அணை பூகம்பம் வந்து உடைந்தால் அந்த நீர் முழுவதும் அந்த ஆற்று ஒழுங்கிலே பயணித்து நேரடியாக இடுக்கி அணையினை வந்து சேரும். முல்லை பெரியாற்று அணையின் மொத்த நீரும் இடுக்கி அணையின் கொள்ளளவில் 10 சதத்திற்கும் குறைவான அளவே. முல்லை பெரியாறு அணை 2600 அடி உயரத்தில் இருக்கிறது, மக்கள் வசிக்கும் பகுதிகளோ 3200 அடிக்கு மேல் இருக்கிறது. மக்கள் எந்த வகையிலும் பாதிப்படைய மாட்டார்கள் என்பது தெளிவிலும் தெளிவு .அதே சமயத்தில் கூடங்குளத்தில் பூகம்பம் வருவதாக வைத்து கொள்வோம். அணு உலைகள் வெடித்து ஏற்படும் அழிவானது 20 லட்சம் மக்களை நேரடியாகவும், 2 கோடி மக்களை பகுதியாகவும் அழித்து நாசமாக்கும். (புகுஷிமா அணு உலைகளை மூட 78400 கோடி ரூபாயும் 40 ஆண்டுகளும் தேவை என்று அறிவித்திருக்கின்றனர்). அணு சக்தியினால் ஏற்படும் நாசம் இந்த தலைமுறைக்கு மட்டுமல்ல, பின் வரும் 40000 ஆண்டுகளுக்கு அதன் பாதிப்புகள் நீடித்திருக்கும்.மக்களையும், அவர்களது வாழ்வாதாரங்களையும் அழித்து, வரும் தலைமுறைகளுக்கு நஞ்சூட்டபட்ட நிலத்தையும், தண்ணீரையும், சுற்றுசூழலையும் தர எந்த அறிவியலுக்கும் உரிமையில்லை.

அதே போல அணுஉலை விபத்து இயற்கை அழிவுகளால் மட்டும் வருவதில்லை, மனித தவறுகளாலும் ஏற்படும்.புகுஷிமா அணுஉலை விபத்து இயற்கை அழிவினால் நடந்தது, செர்நோபில் விபத்து மனித தவறினால் நடந்தது. இன்றும் உலகின் பல பகுதிகளில் அணு உலை விபத்துகள் நடந்த வண்ணம்தான் உள்ளன. இதில் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் உலகம் முழுவதிலும் அணைகளில் ஏற்பட்டுள்ள விபத்து மிகச்சிலவே, அணு உலைகளில்தான் அதிகமான விபத்துகள் நடந்துள்ளன.
 
மொத்தத்தில் பூகம்பம், சுனாமி உள்ளிட்ட இயற்கை பேரிடர்கள் வருவதற்கு இரு இடங்களிலும் சாத்தியக்கூறுகள் உள்ளன. ஆனால் விளைவுகளை ஆய்வுக்கு உட்படுத்தி பார்க்கும் போது நாம் ஒரு தெளிவான முடிவுக்கு வந்து சேர முடியும் அதுதான் அணு உலையை மூடுவதும், அணையை காப்பதும் என்பதே.
 
ஒரே சமயத்தில் நாம் இந்த இரு போராட்டங்களையும் நடத்தி கொண்டிருப்பதால் இந்த இரு போராட்டங்களின் எதிர்காலம் குறித்து நாம் சற்றே தெரிந்து கொள்வதும் நமது செயல்திட்டத்திற்கு பெருமுதவியாக இருக்கும்.அதற்கான கண்ணோட்டத்தில் பார்த்தோமானால் இடிந்தகரை, கூடங்குளத்திலும் தொடரும் அணுஉலைக்கு எதிரான போராட்டம் இன்றைய நிலையில் மத்திய அரசிடம் இருந்து கடும் ஒடுக்குமுறைகளை சந்தித்து கொண்டிருக்கிறது மாநில அரசினையும் முழுவதுமாக நம்ப இயலாது அது எந்த நேரத்திலும் மத்திய அரசின் ஊதுகுழலாக மாறிவிடும் சந்தர்ப்பம் இருந்துக்கொண்டே இருக்கிறது. ஒரு வேளை மக்களின் பலம் உயர்ந்தால் மத்திய அரசின் நடவடிக்கைகள் சற்றே தள்ளி போகுமே தவிர, முடிந்து விடாது. மக்கள் போராட்டத்தை களைப்படைய வைத்து, தொய்வடைய வைத்து, கொஞ்சம் கொஞ்சமாக சிதைக்கும் திட்டத்தையும்,வாய்ப்பு கிடைத்தால் ஒரேஅடியாக ஒழித்துவிடும் திட்டத்தையும் தன்னகத்தே வைத்து கொண்டிருக்கும் இவ்வெதிரிக்கு எதிராக நாம் வழக்கம் போல தோற்க்கக்கூடாது. இன்னொரு புறம் முல்லை பெரியாறு அணை போராட்டத்தில் மக்கள் போராட்டம் வலுவடைந்து கொண்டிருக்கும் அதே வேளையில் இன்னும் அமைப்பு வடிவம் பெறாமலும், தன்னெழுச்சி வகையில் நடந்து கொண்டிருக்கும் இந்த போராட்டம் நீண்ட நாட்கள் தொடர்ச்சியாக நடந்தேறுவதர்க்கான வாய்ப்புகள் குறைவாகவே இருக்கிறது. மேலும் அரசு களைப்படைய வைக்கும், தொய்வடைய வைக்கும் போக்கினை கடைபிடிக்க துவங்கினால் இந்த போராட்டம் விரைவில் குறுகிவிடும்.
 
ஆனால் முல்லை பெரியாறு பிரச்சனையை பொறுத்தவரை, நாம் ஒற்றுமையாக நின்று கேரளா மாநிலத்தின் மீதான பிடியை இறுக்கினாலே முல்லை பெரியாறு போராட்டத்தை எளிதாக வெல்லலாம். மாறாக கூடங்குளம் அணு உலை பிரச்சனையில் உலக ஏகாதிப்பத்தியங்களின், இந்திய அரசின், பெரு முதலாளிகளின் நலன்கள் பெருமளவில் இருப்பதால் அவ்வளவு எளிதில் அவர்கள் விட்டு கொடுத்து விட மாட்டார்கள் என்பதோடு எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் இந்த போராட்டத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்கிவிட தயாராகவே இருக்கிறார்கள் .இந்த புரிதலின் மீது நின்று, இந்த இரு போராட்டங்களின் தகைமையையும், முக்கியத்துவத்தையும் உணர்ந்தோமானால் எந்த போராட்டதிற்கு எவ்வளவு கவனம் தரவேண்டும் என்ற தெளிவே நமக்கு கிடைக்கும். நெடியதும், கடியதும், போராட்டம் மிகுதியாக தேவைப்படும் கூடங்குள போராட்டத்தையும், வெல்லக்கூடிய முல்லை பெரியாறு பிரச்சனையையும் நாம் ஒரே கால கட்டத்தில் தொடர்ந்து கொண்டிருக்கிறோம். இந்த போராட்டங்கள் இயல்பாகவே தமிழகத்தின் இரு வேறு பகுதிகளில் மையம் கொண்டிருக்கின்றன. தொடர்பற்றும், நீண்ட தொலைவிலும் இந்த இரு போராட்டங்களும் ,அதன் ஆதரவாளர்களும் தங்களது எதிர் திசையில் நடக்கும் போராட்டங்கள் பற்றி மாறுபட்ட கருத்துக்கள் கொண்டிருக்கின்றனர் .இவை இந்த இரு போராட்டங்களும் இணைவதற்கான சாத்தியக்கூறுகளை குறைக்கின்றன. மாறாக நாம் தொலைநோக்கு பார்வையோடு இந்த இரு போராட்டங்களும் தமிழ்நாட்டின், தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டமே என்று உணர வேண்டும். தமிழ் தேசிய விடுதலை போராட்டத்தில் உள்ளடங்கிய அங்கங்களாக இந்த இரு நிகழ்ச்சிகளும் விளங்கும் இந்நேரத்தில் இந்த போராட்டங்களை கவனிப்பதும் காப்பதும் நமது கடமையாகும்.
 
இந்த தெளிவிலிருந்து நமது போராட்டங்களை தொடர முற்படும்போது நமக்கு முன்னே தடையாக இருப்பது வெற்றிக்கான செயல்திட்டமும் அதனை சாத்தியப்படுத்தும் வழிமுறைகளுமே ஆகும்.
நமது இறுதி இலக்கை மனதில் இருத்தும் அதே நேரத்தில் பல்வேறு போராட்டங்களும் நம்மை படி படியாகவும் அதற்குரிய தனித்தன்மையிலும், மாறுபட்ட வழிமுறைகளிலும் நமது இலக்குகளை நோக்கியதான உந்துவிசையாக இருக்கிறது என்பதையும் நாம் மனதில் இருத்த வேண்டும். பல்வேறு பிரச்சனைகளையும் அதற்க்கான போராட்டங்களையும் சரியான அளவிற்கு இணைத்து போராடுவதிலேதான் நமது வெற்றிக்கான கூறுகளும் பொதிந்து கிடக்கின்றன. இப்போது தனித்தனியாக நடக்கும் அணுஉலை எதிர்ப்பு போராட்டத்தையும், அணைக்கான போராட்டத்தையும் இணைப்பதோடு இந்த போராட்டங்கள் வழியாக அனைத்து போராட்டங்களின் கோரிக்கைகளையுமே எடுத்து செல்லும் விவேகம் நமக்கு வேண்டும்.
 
அதற்க்கு, சாதாரண காலத்தில் மக்களுக்கு இருக்கும் அரசியல் விழிப்புணர்வை காட்டிலும் போராட்டக்காலத்தில் மக்களிடையே ஏற்படும் விழிப்புணர்வு அசாத்தியமானது .போராட்டம் மக்களுடைய கற்றுக்கொள்ளும் ஆர்வத்தையும், போராடும் குணத்தையும் வளர்த்தெடுப்பதொடு போராட்டத்தின் நியாயப்பாட்டை பற்றிய உணர்வையும் வளர்த்தெடுக்கிறது. போராடும் மக்களுக்கு தங்களது போராட்டத்தின் நியாயம் மட்டுமல்ல. நியாயமாக போராடும் மற்றவர்களின் போராட்டங்களில் உள்ள நியாயப்பாட்டையும் புரிந்து கொள்கின்றனர்.
 
இந்த சாதகத்தைதான் நாம் பயன்படுத்தவேண்டும். முல்லை பெரியாறு பிரச்சனைக்காக போராடி உணர்வு பெற்று நியாயங்களை தேடிகொண்டிருக்கும் மக்களிடையே கூடங்குளம் போராட்டம் பற்றிய உண்மைகளை கொண்டு சேர்த்து அவர்களின் ஆதரவை பெற வேண்டும். அதே போல நீண்ட நாட்களாக போராடி அனுபவமும் உறுதியும் பெற்றிருக்கும் இடிந்தகரை,கூடங்குள மக்களிடையே முல்லை பெரியாறு பிரச்சனையை விளக்கி அவர்கள் ஆதரவு பெறவேண்டும்.
 
இந்த போராட்ட சூழல் இடிந்தகரை, கூடங்குள மக்களையும், கம்பம், போடி, தேனி பகுதி மக்களையும் அரசியல் ரீதியாக பெருமளவு முன்னேற்றியிருக்கிறது இந்த போராட்டங்கள் வலுப்பெற அவை விரிவுப்படுத்தபடவேண்டும். பரவலான மக்களின் ஆதரவை பெற வேண்டும். அரசியல் ரீதியாக, போராட்ட ரீதியாக, உணர்வு ரீதியாக வளர்ச்சி பெற்று போராடி கொண்டிருக்கும் அணு எதிர்ப்பு போராட்டம் முல்லை பெரியாறு பிரச்சனைக்காக போராட வேண்டும். அதே போல வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் முல்லை பெரியாறு போராட்டம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக போராட வேண்டும். இது தமிழ்நாட்டிற்கு எதிரான அனைத்து பிரச்சனைகளையும் ஒரு சேர முடிவு கட்டிவிட வேண்டும் என்பதற்கான போராட்டம். பல்வேறு போராட்டங்களை நாம் நீண்ட நாட்களாக முன்னெடுத்துகொண்டிருக்கிறோம். இம்முறையும் முடிவுகளை எட்டாது நமது போராட்டங்கள் பின்னடைவுக்கு உள்ளாகுமானால் நாம் எப்போது வழக்கமாக செய்யும் தவறினையே மீண்டும் செய்தவர்களாவோம். இம்முறை கவனமாக வழக்கமாக தவறுகள் செய்யும் தவறினை செய்யாமல் இருப்போம். இம்முறை உறுதியுடன், தெளிந்த பார்வையுடன், வழிமுறையுடன் போராடுவோம். நமது போராட்டங்களை தனித்தனியாக அல்ல, ஒன்றாக சேர்த்து போராடுவோம்.
 
அணு உலைகளை மூடுவோம்! அணைக்கட்டை நமதாக்குவோம்!.

Pin It