Fast Food Leads Fast Death!

“நீண்ட கால நோக்கில் பார்க்கும்போது எந்திர துப்பாக்கிகளைவிட கொடிய ஆயுதங்களாக பதனப்படுத்தப்பட்டு டப்பாக்களில் விற்கப்படும் உணவு விளங்கும்”

- ஜார்ஜ் ஆர்வெல் என்ற ஆங்கில எழுத்தாளர் 1937ல் எழுதிய விசான் பயருக்கு செல்லும் “பாதை” என்ற நாவலிலிருந்து

சில பத்தாண்டுகளுக்கு முன்னர், காலையில் நீராகாரத்தைக் குடித்துவிட்டு வயலில் இறங்குவான் உழவன். அவனுக்கு மதிய உணவுக்காக கேப்பைக் களி உருண்டையும் புளித்த கீரை குழம்பும் காத்திருக்கும். இரவில்தான் அடுப்பு பற்ற வைத்து சுடுசோறாக்குவார்கள். இது பழங்கதையாகிப் போன அந்தக் கால உணவு முறை. இப்போது நீராகாரத்தைப் பற்றி பேசினாலே வேற்று கிரகத்திலிருந்து வந்திருக்கும் வினோதமான பிராணியாக உங்களைப் பார்ப்பார்கள்.

எண்ணெய் பலகாரங்கள் என்பதே நமது உணவு வகைகள் இல்லை என்பது யாருக்குத் தெரியும்? எண்ணெய் என்பதே தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட ஓர் உணவு ஆகும். நமது உணவு வகைகள் அவித்து உண்பதே ஆகும். இதில் வேடிக்கை என்னவென்றால் நம்மிடமிருந்த அவித்து உண்ணும் உணவுகள் இன்று வெள்ளைக்காரனிடம் போய் விட்டன. அவர்களிடமிருந்த எண்ணெய் பண்பாட்டு உணவு வகைகள் நம்மை ஆக்கிரமித்து விட்டன. அது மட்டுமின்றி பீசா சாப்பிடுவோரின் எண்ணிக்கையும் மெதுமெதுவாக அதிகரித்து வருகிறது. நம்முடைய பாரம்பரிய உணவு வகைகள் திட்டமிட்டு படிப்படியாக அழிக்கப்பட்டு வருகின்றன.

நமது தமிழகத்தில் சில பத்தாண்டுக்கு முன்பாக எத்தனை எத்தனை தனித்தன்மையான உணவு வகைகள்? திருநெல்வேலி அல்வா, திருவில்லிப்புதூர் பால்கோவா, கல்லிடைக்குறிச்சி அப்பளம், மணப்பாறை முருக்கு என்று ஒவ்வொரு பகுதியின் தனித்தன்மைக்கேற்ப சுவையுடன் கூடிய உணவு வகைகள். ஆனால் இப்போதோ திருநெல்வேலியிலும், மணப்பாறைக் கடைகளிலும் பதப்படுத்தப்பட்ட லேஸ் (lays) உருளைக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட்டுக்கள் தான் தொங்குகின்றன. சத்தான கடலை மிட்டாய்களும் எள்ளு மிட்டாய்களும் உலகமயமாக்கலில் காணாமல் போய் விட்டன. வெளிநாட்டு சாக்லெட்டுகள்தான் குவிந்துள்ளன.

நமது பாரம்பரியமே உணவை மருந்தாகக் கொண்டிருந்தது. உடல் உழைப்பை அதிகமாகக் கொண்ட வாழ்க்கை முறை இருந்தது. கேழ்வரகும், கம்பங் கூழும், சாமை வரகு, கொள்ளு போன்றவையும் சர்க்கரை நோயை விரட்டியடித்திருந்தன; கெட்ட கொழுப்பு சத்து உடலில் குடியேறாமல் பார்த்துக் கொண்டன. உடலுக்கு ஏற்படும் நோய்களுக்கு இயற்கையான உணவுப் பயிர்களையே மருந்தாக கொடுத்தனர். வயிற்றில் புழு இருந்தால் அகத்திக் கீரை உண்டோம். உடலில் சூடு அதிகமானால் வெந்தயக் கீரை சாப்பிட்டோம். பித்தம் அதிகமானால் இஞ்சி எலுமிச்சம் சாறு குடித்தோம். வயிற்றுப்போக்குக்கு ஓமவல்லிச் சாறும், இருமலுக்கு துளசிச் சாறும் குடித்தோம். இவை காணாமல் போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இவை இருந்த இடத்தில் ஆங்கில மருந்துகள் குவிந்துள்ளன. ஆங்கில மருந்துக் கம்பெனிகளுக்கு இலாபமோ இலாபம். சற்று தும்மினால் இ.என்.டி. டாக்டர் மருந்துச் சீட்டை நீட்டி விடுகிறார். எந்த இ.என்.டி டாக்டரும் உங்களுக்கு மூக்கிற்குள் வளைவு உள்ளது உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் அதற்கு முன்னர் ஒரு ஸ்கேன் செய்ய வேண்டும் என்றும் கூறுவார். இப்படி கூறாவிட்டால் அவர் இ.என்.டி டாக்டராக இருக்க முடியாது என்ற நிலைமை நீக்கமற நிறைந்து விட்டது. வயிறு சரியில்லை எனில் ஜெல் மருந்துதான் தீர்வு. மூட்டு வலியா ஆர்த்தோபடிக்ஸ் என்று மூட்டுவலி நிபுணர் வந்து விடுகிறார். ஏன் இப்படி? மாறிவரும் துரித உணவு பழக்கம்தான் காரணம்.

பெரும்பாலான நகரங்களில் காலை உணவை உண்பதையே விட்டுவிட்டனர். மூன்று வேளை உட்கார்ந்து சாப்பிடுகின்ற பழக்கம் நாட்டுப்புற அநாகரீகமாகி வருகிறது. அன்றாடம் புதிய காய்கறிகளை வாங்கி வந்து வீட்டில் சமைத்து உண்பது குறைந்து வருகிறது. இதைக் கேட்டால் சமைப்பதற்கு அதிகமான நேரமாகிறது என்று காரணம் கூறுகின்றனர். யூரோ மானிட்டர் இன்டர்நேஷனல் (Euro Monitor International) என்ற சந்தை ஆய்வு நிறுவனம் செய்த ஆய்வில், கடந்த 10 ஆண்டுகளில் வீட்டிற்கு வெளியில் சாப்பிடும் இந்தியர்கள் இருமடங்காக அதிகரித்து விட்டனர். ஆண்டுக்கு இந்தியாவில் வெளியில் சாப்பிடுவதற்காக 22,500 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது என்று கண்டறிந்துள்ளது.

துரித உணவு அறிமுகம் ஏன்?

உலகம் முழுவதும் உள்ள மக்களின் குறிப்பாக நமது மக்களின் உணவுப் பழக்கத்தை மாற்றி அமைத்து மேலை நாடுகளின்/பன்னாட்டு துரித உணவுக் கம்பெனிகள் துரித உணவு வகைகளை அறிமுகப்படுத்தி நம் மக்களை அடிமைகளாக மாற்றிவருகின்றன. இதன் மூலம் ஒவ்வொரு பகுதியிலும் உற்பத்தி செய்யப்பட்ட தனிச் சுவையுடன் கூடிய உணவு வகைகள் அழிக்கப்பட்டு ஒரே மாதிரியான உணவு வகைகள் மக்கள் மீது திணிக்கப்படுகின்றன. இந்த துரித உணவுகளில் சுவைதான் அதிகமாக இருக்குமே தவிர உடல் நலத்திற்குத் தேவையான சத்துக்கள் இருப்பதில்லை. இவற்றில் சேர்க்கப்படும் இரசாயனப் பொருள்களினால் உடல் நலத்திற்குத் தீமையே விளையும்.

ஊளைச் சதையர்கள்

துரித உணவுகளினால் தான் தொற்று நோய்கள் அல்லாத நோய்களான (Non-Communicable Diseases) நீரிழிவு, இருதய நோய்கள், புற்றுநோய்கள், பற்களில் வரும் நோய்கள், எலும்பு மற்றும் மூட்டுகளில் வரும் நோய்கள், நாளமில்லாச் சுரப்பிகளில் வரும் நோய்கள் (முன் கழுத்து கழலை, தைராய்டு) போன்றவை ஆரோக்கியமில்லாத உணவுகளினால் வருகின்றன என்று உல்லா உசிதாலோ, பிர்ஜோ பையட்னென் மற்றும் பெக்கா புஷ்கா போன்ற ரஷ்ய ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். (ஆதாரம்: Ulla Uusitalo, Pirjo Pietinen and Pekka puska in a paper entitled “Dietary Transition in Developing Countries. Challenges for Chronic Diseases Prevention”) பொதுவாக துரித உணவுகளில் மிக அதிகமான அளவில் கொழுப்புச் சத்தும் சர்க்கரையுமே உள்ளன. பர்கர், பிசா மற்றும் மென் பானங்கள் இவற்றுக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகத் திகழ்கின்றன. இந்த உணவு வகைகளில் சத்தில்லாமல் ஊளைச் சதையே பெருகும். அதிகமான பேர் குண்டர்களாக, சத்தற்ற நோயாளிகளாக நீரிழிவு நோய் நிபுணர் மருத்துவமனைகளில் வரிசையில் காத்துக் கிடப்பர்.

அதிகமான முதலீடு

உலக சுகாதார நிறுவனம் தொற்று நோய்கள் அல்லாத நோய்கள் பரவுவதற்கு முக்கிய காரணமாக உணவுப் பழக்கம், உடற்பயிற்சியின்மையுமே என்று கூறி அதற்கு தகுந்தாற்போன்று உணவு முறையையும் உடற்பயிற்சியையும் முன் வைக்கிறது. உலகம் முழுவதும் துரித உணவு பரவி வருகிறது. இத்தகைய துரித உணவு உற்பத்தியில் அதிக அளவு முதலீடு செய்வதற்கே உலக நாடுகள் ஆர்வங்காட்டுகின்றன. 1988லிருந்து 1997 வரை ஆசிய நாடுகளில் இத்தகைய உணவு தயாரிப்பில் போடப்பட்ட அமெரிக்க மூலதனம் 743 மில்லியன் டாலர்களிலிருந்து 2.1 பில்லியன் டாலர் வரை அதிகரித்திருக்கிறது. அதே போல் லத்தீன் அமெரிக்காவில் இடப்பட்ட அமெரிக்க மூலதனமானது 222 மில்லியன் டாலர்களிலிருந்து 3.3 பில்லியன் டாலர் வரை அதிகரித்திருக்கிறது. இது விவசாயத்தில் அமெரிக்கா இடும் மூலதனத்தைவிட அதிகமாகும். ஆக இவற்றிலிருந்து ஒரு விஷயம் தெளிவாகிறது. உலகளவில் உணவு உற்பத்தி சத்தற்ற ஊளைச் சதையர்களை உருவாக்குவதாக அமைந்துள்ளது. மக்கள் உண்மையான சத்தைப் பெற ஏகாதிபத்திய நாடுகளும்/நிறுவனங்களும் விரும்பவில்லை என்பது தெளிவு.

ஆரோக்கியமான உணவு வகைகளான காய்கறிகள், பழங்கள் உண்பது இளையதலைமுறையிடம் குறைந்து வருவதாகவும் நிபுணர்கள் அதிர்ச்சி தெரிவிக்கின்றனர். நாட்டின் எதிர்காலத் தூண்களே நோஞ்சான்களாகவும், ஊளைச் சதையர்களாகவும் மாறி வருகின்றனர்.

மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகள் ஒருபுறம் பட்டினியால் பரிதவிக்கும் நோஞ்சான்களாகவும் இன்னொருபுறம் வேண்டாத ஊளைச் சதையுடனும் அளவற்ற நீரிழிவு நோய் போன்ற தொற்று நோய் அல்லாத நோய்களுடன் மக்களை உருவாக்குகின்றன. இச்சதியை நாம் எப்போது புரிந்து கொண்டு விடுபடப் போகிறோம்?

துரித உணவு - பின்னணி

உலகமயமாக்கல் கொள்கைகள் பெற்றெடுத்த குழந்தையே துரித உணவு. உலகம் முழுவதும் உள்ள தேசங்கடந்த தொழிற்கழகங்களும், பன்னாட்டுக் கம்பெனிகளும் துரித உணவு தயாரிப்பதில் ஈடுபட்டு வருகின்றன. பெரும் இலாபம் இதில் கிடைப்பதால் மக்களின் உடல் நலத்தைப் பற்றியோ அக்கறை காட்டுவது இல்லை. அவர்களின் சுவை மிகச் சுவையான உணவு தயாரித்து இலாபத்தை ஈட்டுவது.

நமது மக்களின் உணவின் பன்முகத் தன்மையை அழிப்பதோடு உணவுக்கான உற்பத்தியைத் தடுத்து நிறுத்துவது முக்கிய குறிக்கோளாகும். உலகமயமாக்கல் கொள்கைகளின்படி உலக வர்த்தக அமைப்பிடம் (WTO)நமது நாடு ஒப்பந்தம் செய்து கொண்டது. WTO-யிடம் செய்து கொண்ட வேளாண்மை ஒப்பந்தம் உணவு உற்பத்திக்கு பதிலாக ஏற்றுமதிக்கான உற்பத்தியை வலியுறுத்துகிறது. பயோ டீசல் தயாரிப்பதற்கான காட்டா ஆமணக்கு, தேக்கு போன்றவற்றை உற்பத்தி செய்ய நமது விவசாயிகளைப் பணிக்கிறது. இன்னொருபக்கம் பயிர்களுக்கான விதைகளைப் பன்னாட்டுக் கம்பெனிகள்தான் தரும். ஆக, வேளாண்மையை அழிப்பது, உணவு பழக்க முறையை மாற்றி அவர்களின் உணவு பழக்கங்களுக்கு நமது மக்களை அடிமைப்படுத்துவது என சுற்றி வளைத்து தாக்குகின்றனர்.

நீங்களே முடிவு எடுங்கள். தலைமுறை தலைமுறையாக நோயாளிகளாக மாற்றி வரும் இந்த சர்வதேச சதியை எப்போது புரிந்து கொண்டு ஓர் அரசியல் முடிவு எடுக்கப்போகிறோம்?

- சேது ராமலிங்கம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It