காடு, மலை, கடலையெல்லாம் கார்ப்ரேட்டுகளுக்கு காணிக்கை அளித்துவிட்டு அடுத்து எதைக் காவு கொடுக்கலாம் என்று பாசிசத்தின் கர்ப்பகிரகத்தில் சப்பணமிட்டு அமர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்த தருணத்தில் பாஜக அரசின் நெற்றிக்கண்ணில் தெரிந்தது அணு உலைகள்தான். அணு உலை என்றாலே ஆபத்தின் மொத்தக் கிடங்கு எனலாம். அந்த அணு உலை சட்டங்களுக்கே பாஜக அரசால் ஆபத்து வந்துள்ளது. திருநெல்வேலிக்கே அல்வா கொடுப்பது என்பது போல் ஆபத்திற்கே பெரும் ஆபத்தை அளிக்கிறது பாஜக அரசு.
அணுசரனையான அணுசக்தித்துறை
1954 ஆகஸ்ட் 3 அன்று குடியரசுத் தலைவர் உத்தரவின் மூலம் ஒன்றிய அரசில் தனியாக அணு சக்தித் துறை ஏற்படுத்தப்பட்டது. 1962 இல் அணு சக்திச் சட்டம் (Atomic Energy Act 1962) இயற்றப்பட்டது. இது அணு சக்தி தொடர்பான அனைத்து பணிகளை மேற்கொள்ளவும் யூரேனியம் மற்றும் அணு சக்தி தொடர்பான பிற கனிமங்களையும் கண்டறிந்து எடுக்கவும் இந்திய அரசுக்கு அதிகாராம் அளிக்கிறது. அணுசக்தி உற்பத்தி, பராமரிப்பு, பாதுகாப்பு அம்சங்களையும் வரையறுக்கிறது. அணுசக்தி தொடர்பான தொழில்நுட்பங்கள் மற்றும் உபகரணங்களைத் தனியாருக்கு அனுமதிக்காமல் தடுக்கிறது. மக்கள் மற்றும் தேசப் பாதுகாப்புடன் இணைந்த அணுசக்தி உற்பத்தியே இந்தச் சட்டத்தின் முக்கிய நோக்கமாகும். அணு உலைகளை இயக்குவதற்காக இந்தச் சட்டத்தின் கீழ் இந்திய அணுமின் கழகம் (Nuclear Power Corporation of India) என்ற பொதுத்துறை நிறுவனம் உருவாக்கப்பட்டது.
சர்வதேச மாநாடுகளும் இழப்பீட்டு சட்டங்களும்
1960 பாரிஸில் நடைபெற்ற அணு சக்தித் துறையில் 3 ஆம் நபர்களின் கடப்பாட்டிற்கான மாநாடு ( Paris Convention on Third Party Liability in the Field of Nuclear Energy 1960) அணு உலை விபத்துகளுக்கு அதை நிறுவியவர் இழப்பீடு வழங்க வேண்டுமென வழிகாட்டியுள்ளது. 1986 செர்னோபில் அணு உலை விபத்துக்குப் பிறகு விதிகளை வலுப்படுத்தும் முயற்சிகள் நடந்தன.. 1997 இல் வியன்னாவில் நடைபெற்ற அணு விபத்து சேதாரங்களுக்கான குடிமைக் கடப்பாட்டிற்கான மாநாடு (The Vienna Convention on Civil Liability for Nuclear Damage 1997) மற்றும் அணு விபத்து சேதாரங்களுக்கான துணை இழப்பீட்டிற்கான மாநாடு (The Convention on Supplementary Compensation for Nuclear Damage 1997) ஆகியவை குறைந்தபட்ச தேசிய இழப்பீட்டையும் உறுதி செய்கிறது.
அதன் பிறகு அணு விபத்துகள் மற்றும் அதன் இழப்பீடுகள் தொடர்பாக இந்திய அரசுக்கு மெல்ல மெல்ல விழிப்புணர்வு ஏற்பட்டு 2010 இல் மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு முன்னணி அரசு -2 ஒரு சட்டம் இயற்றியது. அது 'அணு விபத்து சேதாராங்களுக்கான குடிமைக் கடப்பாடுச் சட்டம் 2010' (The Civil Liability for Nuclear Damage Act 2010–CLNDA) ஆகும். அணு விபத்து இழப்பீட்டுச் சட்டம் என்று சுருக்கமாகச் சொல்கிறோம். இச்சட்டம் அணு உலை விபத்து அல்லது பேரழிவால் ஏற்படும் சேதத்திற்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கிடைப்பதை உறுதி செய்கிறது. பிரிவு 17(b) நம் நாட்டிலுள்ள அணுவுலைகளில் விபத்து ஏற்பட்டால் அதனை நிறுவிய, உபகரணங்கள் வழங்கிய நிறுவனங்கள் அவை வெளிநாட்டு நிறுவனங்களாக இருந்தாலும் இழப்பீடு வழங்க வேண்டுமென பணிக்கிறது.
முதலில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில் இழப்பீட்டுத் தொகைக்கான உச்சவரம்பு 500 கோடி என்றிருந்தது. எதிர்க்கட்சியாக இருந்த பா.ஜ.க.வும் ஒப்புதல் அளித்தது. உட்சவரம்பு கூடாது என்றும் பாதிப்புகளுக்கு ஏற்றவாறு தொகை எவ்வளவாக இருந்தாலும் வழங்க வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக ஆட்சேபித்தது. 1984 போபால் விசவாயுக் கசிவு பேரிடரில் போதிய இழப்பீடு கிடைக்கவில்லை என்பதையும் அமெரிக்காவின் யூனியன் கார்பைடு நிறுவனமும் அதன் அதிகாரிகளும் எவ்வித தண்டனையும் இன்றி தப்பித்ததையும் சுட்டிக்காட்டி எச்சரித்து சப்ளையரின் பொறுப்பை அறுதியிட வலியுறுத்தியது. அதன் பிறகு அந்த உட்சவரம்பு 1500 கோடி என உயர்த்தப்பட்டு சட்டம் இயற்றப்பட்டது.
இந்தச் சட்டம் போதுமானது இல்லை என்றாலும் குறைந்தபட்ச பாதுகாப்பை அளிக்கிறது. இழப்பீட்டிற்கான உட்சவரம்பு 1500 கோடி என்பதை நீக்கிவிட்டு உட்சவரம்பற்ற இழப்பீடு வழங்க வழி வகுக்கும் வகையில் சட்டத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும். ஆனால் பா.ஜ.க. அரசு அதற்கு மாறாகச் சட்டத்தைப் பலகீனப்படுத்தும் வகையில் திருத்துவதற்கான குழுக்களை அமைத்தது.
பேரழிவுக்கான புதிய மசோதா
அணுசக்தி தொடர்பாக 15.12.2025 அன்று மக்களவையில் புதிய சட்ட மசோதாவை தாக்கல் செய்துள்ளது. “இந்தியாவை மாற்றுவதற்கான அணுசக்தியின் நிலையான பயன்பாடு மற்றும் மேம்பாடு மசோதா 2025” (Sustainable Harnessing and Advancement of Nuclear Energy for Transforming India – SANTHI) என்ற மசோதாவை தாக்கல் செய்தது. நிலைக்குழுவின் பரிசீலனைக்குக்கூட அனுப்பாமல் எதிர்க்கட்சிகளின் கடும் ஆட்சேபனைகளை புறந்தள்ளிவிட்டு அவசர அவசரமாக இரண்டே நாட்களில் 17.12.2025 அன்று மசோதாவை நிறைவேற்றிவிட்டது.
இந்த மசோதா மேலே சொன்ன 1962 ஆண்டின் அணு சக்திச் சட்டம் மற்றும் 2010 ஆண்டின் அணு விபத்து இழப்பீட்டுச் சட்டம் ஆகியவற்றை முற்றிலும் ரத்து செய்கிறது. இந்தச் சட்டங்களை திருத்த வேண்டுமென அமெரிக்கா, பிரான்ஸ், கனடா உள்ளிட்ட மேலை நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. அடிக்கடி வெளிநாடு செல்லும் நமது பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அந்த நாடுகளின் அழுத்தத்திற்கு அடிபணிந்துவிட்டார் என்பதைத்தான் இந்த மசோதா உணர்த்துகிறது.
இழப்பீடு துறப்பும் கணக்கிடல் துரோகமும்
2010 அணு விபத்து இழப்பீட்டுச் சட்டம் தரமற்ற உபகரணங்கள், சேவைகள், அலட்சியம் காரணமாக விபத்து ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கிய இழப்பீட்டை அணு உலையை, உபகரணங்களை விநியோகம் செய்த சப்ளையர் நிறுவனத்திடமிருந்து வசூல் செய்யும் உரிமையை அணு உலையை இயக்கும் நிறுவனத்திற்கு அளித்துள்ளது. ஆனால் புதிய மசோதாவில் அந்த விதியை வேண்டுமென்றே தவிர்த்துள்ளனர். இதனால் அணுவுலைகளைத் தயாரித்து இந்தியாவிற்கு விற்ற, விற்கிற வெளிநாட்டு நிறுவனங்கள் விபத்துகள் ஏற்பட்டால் எவ்வித இழப்பீடும் கொடுக்காமல் தப்பித்துக்கொள்ள வாய்ப்பளிக்கிறது.
முந்தைய சட்டம் பாதிக்கப்பட்டவர்கள் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உரிமை அளித்தது. புதிய மசோதா அந்த உரிமையைப் பறித்துள்ளது. உரிமை கோரல் ஆணையம் (Claims Commission) மூலமாக மட்டுமே தீர்க்கப்படும் என்கிறது.
இழப்பீடு கணக்கிடலிலும் பெரும் பாதகத்தைத் திணித்துள்ளது. சேதத்தின் அளவின் அடிப்படியில் அல்லாமல் அணு உலையின் வெப்ப ஆற்றல் அளவின் அடிப்படையில் இழப்பீட்டை நிர்ணயம் செய்ய வழிவகுக்கிறது. புகுஷிமா உள்ளிட்ட உலக நாடுகளில் ஏற்பட்ட அணு உலை விபத்து பாதிப்புகளை சரிப்படுத்த பல லட்சம் கோடிகள் செலவு செய்தும் இன்னும் முழுமையாக சரிப்படுத்த இயலவில்லை. இந்தப் படிப்பினையின் வெளிச்சத்தில் பார்த்தால் புதிய மசோதாவில் புகுத்தியுள்ள இழப்பீட்டைக் கணக்கீடும் புதிய முறை என்பது ஒட்டு மொத்த தேசத்திற்கும் மக்களுக்கும் பெரும் துரோகமானது.
தனியாரிடம் ஆபத்தை ஒப்படைக்கும் பேராபத்து
அணுமின் நிலையங்களை இயக்கி வரும் இந்திய அணுமின் கழகத்தைச் சீர்குலைத்துவிட்டு பேராபத்து மிக்க அணுஉலைகளைத் தனியார் கார்ப்ரேட் நிறுவனங்களிடம் ஒப்படைப்பதற்கான பெரும் சதி இந்த மசோதாவில் அரங்கேற்றியுள்ளது. புதிய அணு உலைகள் சொந்தமாக அமைக்கவும் இயக்கவும் தனியாருக்கு அனுமதி அளிக்கிறது. இதுவரை இந்திய அணுமின் கழகத்தின் முழுக் கட்டுப்பாட்டிலிருந்த அணு உலையின் முக்கிய எரிபொருளான “யுரேனியம் -235” செறிவூட்டல், தயாரிப்பு, கையாளுதல், அணுசக்தி தொழில்நுட்பம், உபகரணங்கள் ஏற்றுமதி- இறக்குமதி என அனைத்திற்கும் தனியாரை அனுமதிக்கிறது.
அதே சமயம் கனநீர் உற்பத்தி, கதிரியக்கக் கழிவுகள் மேலாண்மை, எரிபொருள் மறுசுழற்சி ஆகிய அதிக செலவு ஏற்படும் செயல்பாடுகள் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் தொடரும் என்கிறது. அதாவது செலவு அரசுத்துறைக்கும் லாபம் கார்ப்ரேட்டுகளுக்கும் எனக் கார்ப்ரேட் கள்ளக் கூட்டணியைக் கொஞ்சமும் கூச்ச நாச்சமில்லாமல் வெளிப்படுத்தியுள்ளது.
தொலைத் தொடர்பு, காப்பீடு உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் தனியாரை அனுமதித்தும் இந்தியன் ஏர் லைன்ஸ் உள்ளிட்ட நாட்டின் முக்கிய பொதுத் துறைகளை எல்லாம் தனியாருக்கு விற்றுத் தீர்த்து வருகிற பா.ஜ.க. ஒன்றிய அரசு இறுதியில் கதிரியக்க ஆபத்துமிக்க அணு சக்தித் துறையின் கதவுகளையும் தனியாருக்கு அகலத் திறந்துவிட்டுள்ளது. சொந்த மக்களுக்கு கதிரியக்க அபாயம் ஏற்பட்டாலும் பரவாயில்லை தங்களுக்கு கார்ப்ரேட்டுகள்தான் முக்கியம் என்ற குரூரமான கொள்கையில் கொடூர உறுதியுடன் உள்ளது மக்களைப் பற்றி அவர்களுக்கு கிஞ்சித்தும் கவலையில்லை. அணு விபத்து நடந்தால் என்ன? கதிரியக்கம் ஏற்பட்டால் என்ன? மக்களுக்கு பேரழிவு ஏற்பட்டால் என்ன? கார்ப்ரேட்டுகள் ஷேமமாக இருந்தால் போதும் அல்லவா.
- மு.ஆனந்தன்