முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை பேரழிவு நடந்து முடிந்து மூன்று ஆண்டுகள் முடியப்போகிறது. அந்த தீரமிக்க, வீரமிக்க விடுதலைப்போரில் தாய்மண்ணுக்காகவும், மானுடம் காக்கவும் உயிர் நீத்த நம் தொப்புள்கொடி உறவுகளையும், போராளிகளையும் மற்றும் அப்பாவி பிஞ்சுக் குழந்தைகளின் தியாகங்களையும் நெஞ்சில் ஏந்தியும், மேலும் நம்முடைய இத்தகைய போராட்டங்கள் நம் இலக்கை அடையும் வரை நிச்சயம் ஒயாது என்பதனை எதிரிக்கு அறிவித்திடவும், வெற்றி ஒன்றே நமது இறுதி இலக்கு என்பதனை உலகுக்கு உணர்த்திடவும், இலங்கையின் கூட்டுக் களவானியான இந்தியாவின் நயவஞ்சகத்தனத்தை மேலும், மேலும் மக்களுக்கு நினைவூட்டும் நோக்கத்திலும், நுகர்வு கலாச்சாரத்தில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும் நம் மக்களிடையே, போராட்டம் என்ற ஒரு சொல்லையே கொச்சையாக சிந்திக்க வைத்த அரசாங்கத்திற்கு அறைகூவலாக போராட்டங்கள் அமையவும்,

"கெடல் எங்கே தமிழர் நலம்,
அங்கெல்லாம் தலையிட்டு கிளர்ச்சி செய்க" என்ற புரட்சிகவி.பாராதிதாசனாரின் கவிதை வரிகளை, கள வரியாக பாவித்து வருகிற மே19, 2012 அன்று காலை 10.00 மணிக்கு சென்னையில் அமையப்போக உள்ள சிங்களப் பேரினவாத அரசாங்கத்தின் "புதிய தூதரகத்தை இழுத்துப் பூட்டும் போராட்டம்" நடைபெற உள்ளது. இடம்: ஸ்டெர்லிங் சாலை, லயோலா கல்லூரி அருகில், நுங்கம்பாக்கம்
 
சித்திரவதை செய்யப்பட்டோ அல்லது துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்டோ இறந்து போன எமது தோழர்களுக்கும், எங்களது இதயங்களிலும், சிந்தனைகளிலும் நாங்கள் அனைவரும் சுமந்து கொண்டிருக்கின்ற நம்பிக்கைகள் மற்றும் தளரா உறுதி ஆகியவற்றினூடாக, அமைதியையும் விடுதலையையும் நேசிக்கும் அனைத்து மக்களுடனும் தன்னை அடையாளம் காண்பதுடன் முன்னேற்றமும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கையை வாழ்வதற்கு விரும்பும் எம் மக்களை இன்றும் சிங்களப் பேரினவாத அரசாங்கம்  நாய்களை விட கேவலமாகக் நடத்திக்கொண்டிருக்கின்றது.
 
ஒரே சொல் ஒடுக்கப்பட்டவனுக்கும், ஒடுக்குபவனுக்கும் வெவ்வேறு பொருள்தரும் என்பதை நாம் நன்றாகவே உணர்ந்திருக்கின்றோம். அவற்றில் விடுதலை என்ற சொல்லும் ஒன்று. அது எப்போதுமே அப்படித்தான் இருக்கும். அது வாழ்வின் நிய‌தி. நாம் ஒடுக்குமுறையாளர்களின் முகத்தில் காறித்துப்பினாலும் கூட அவர்கள் அதனை மழைத்துளி என்று தான் கூறுவார்கள். ஈழத்திலே போர் முடிந்து அமைதி திரும்பிவிட்டது என்றும், மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள் என பொய் பரப்புரை செய்து கொண்டு, அங்குள்ள இளைஞர்களையும் மற்றும் இளம்பெண்களையும் சித்திரவதைக்குட்படுத்தி, தமிழர்களின் மத மற்றும் பண்பாட்டு அடையாளங்களை அழித்துக் கொண்டிருக்கும், இலங்கை அரசாங்கத்தின் மீது பொருளாதாரத் தடை கொண்டுவர நாம் ஒற்றுமையுடன் இணைந்து நடத்தப்போக உள்ள இந்தப் போராட்டம் அரசுகளுக்கு மாபெரும் அழுத்தத்தினை உருவாக்கும் துவக்கமாக அமைய வேண்டும். 

ஈழத்தில் எல்லாம் முடிந்த பிறகு தமிழர்கள் அங்கு கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்ட பின்பும், இது போன்ற போராட்டங்களால் என்ன செய்துவிட முடியும் என்று கேட்பவர்களுக்கும் அல்லது போராட்டத்தில் பங்கு கொண்டு சலித்துப்போனவர்களுக்கும் நாங்கள் ஒன்று சொல்ல விரும்புகின்றோம்.

நம்முடைய எந்த ஒரு அரசியல் போராட்டமும் நிச்சயம் வீண்போகாது. மத்திய அரசு, மாநில அரசுகளோடு கூட்டு சேர்ந்து நம்மை நசுக்கினாலும் அல்லது மாநில அரசுகள், மத்திய அரசுடன் கூட்டு சேர்ந்து நம்மை அழித்தாலும் சரி அல்லது மாநில அரசும், மத்திய அரசும் தனித்தனியாக நம்மை ஒடுக்கினாலும் சரி நம்முடைய போராட்டம் ஒயாது.
மக்களை ஒன்று திரட்டி இந்தப் போராட்டத்தினை வெகுஜனப் போராட்டமாக மாற்றி மத்திய, மாநில அரசுகளை நம் கோரிக்கைகளுக்கு அடிபணிய வைக்கும் வரை நம் போராட்டம் நிச்சயம் தொடரும்.
 
ஒரே நாளில் 50000க்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொன்றழித்த இலங்கை, அதற்கு துணை போன இந்தியா மற்றும் பிற நாடுகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தவேண்டும் போன்ற மற்ற கோரிக்கைகளையும் இந்தப் போராட்டத்தில் முன் வைக்கிறோம்.
 
மத்திய, மாநில அரசுகளே!
 
இனப்படுகொலை நாடான இலங்கைமீது உடனே பொருளாதார தடைவிதி!
 
மத்திய, மாநில அரசுகளே!
 
தமிழர்களின் வழிபாட்டுத்தல‌ங்களை மற்றும் பண்பாட்டு சின்னங்களை அழித்து வரும் சிங்களப் பேரினவாத நிறுவனங்களை தமிழகத்தில் அனுமதிக்காதே!
 
தமிழக சட்டமன்றத்தில் இயற்றிய தீர்மானத்தை உடனே நிறைவேற்று!
 
"SRILANKAN AIRLINES" நிறுவனத்தை உடனே இழுத்து மூடு!
 
ஐ.நா மன்றமே! தனித்தமிழ் ஈழம் அமைய உடனே வாக்கெடுப்பு நடத்து!
 
உலகத்தமிழர்களே! இப்போராட்டத்தில் பங்குகொண்டு நம் பேதங்களை கலைந்து, நம் ஒற்றுமையை உலகுக்குக் காட்டிடுவோம். போராட்டத்திற்கு வலு சேர்த்திடுவோம்... போராட்டத்தை வெற்றிபெறச் செய்ய பாடுபடுவோம்...
 
இப்போராட்டத்தில் மற்ற எல்லா இயக்கங்களும், கட்சிகளும், கழகங்களும் மற்றும் அமைப்புகளும் தங்களுடைய அடையாளங்களுடன் தயக்கமின்றி கலந்துகொண்டு போராட்டத்திற்கு மேலும் வலுசேர்க்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
 
“புரட்சியின் பெறுமதி என்னவென்று நாம் யாவருமே அறிவோம். எமது நாடு முற்றாக அழிக்கப்படலாம். அதன் வயல்கள் உப்பாகவோ, சாம்பலாகவோ மாற்றப்படலாம், ஆனால் அது ஒரு போதும் வெற்றி கொள்ளப்படமாட்டாது". - ஜெயிம் விலொக்

Pin It