எஸ். ஆவுடைநாதன், செங்கற்பட்டு

எகிப்து எழுச்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?

முப்பது ஆண்டுகளாக சர்வாதிகளார ஆட்சி நடத்திவந்த ஹோஸ்னி முபாரக் வெளியேற்றப்பட்டுவிட்டார். நல்லது. இந்த எழுச்சியில் 365 சிவிலியன்கள் உயிரை இழந்துவிட்டதாக அந்த நாட்டு சுகாதார அமைச்சகம் கூறியிருக்கிறது. இந்த மகத்தான தியாகத்திற்கு உரிய பலன் கிடைத்திருக்கிறதா என்பது அங்கே மெய்யான ஜனநாயக ஆட்சி மலரப் போகிறதா என்பதைப் பொறுத்தது. இப்போதைக்கு ராணுவத்தின் ஆளுகையில் அல்லவா அந்த நாடு இருக்கிறது?

கே. புனிதவதி, தஞ்சாவூர்

கம்யூனிஸ்டு அறிக்கையின் தமிழ் மொழிபெயர்ப்பு பற்றி "உயிர் எழுத்து" ஏட்டில் எழுதப்பட்டிருப்பதைப் படித்தீர்களா?

"ரா. கிருஷ்ணய்யாவின் பிரதியை அப்படியே நகலெடுத்து புதிய மொழிபெயர்ப்பு" என்று வெளியிட்டுவிட்டார்கள் என்று என். சி. பி. எச். நிறுவனத்தைக் குறை கூறியிருக்கிறார் அருண்மொழி. எனினும், அவரே "ஆங்காங்கே சில சொற்கள் மாற்றப்பட்டிருந்தன, சில வரிகளில் சில சொற்கள் இடம் மாற்றப்பட்டிருந்தன" என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இந்த மாற்றஹ்கள் எந்த அளவுக்கு அர்த்தமிக்கவை என்பதை ஆங்கில மூலத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால்தான் முடிவுக்கு வர முடியும். கட்டுரையாளர் கூறுவது போல அப்படியே அவை முக்கியமற்றவை என்றாலும் அதை வெளிப்படுத்தியிருக்கும் விதம் நாகரீகமாக இல்லை. கட்டுரையின் தலைப்பே "கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை : மொழி பெயர்ப்பு மோசடி? மார்க்ஸ், எங்கெல்ஸின் ஆவிகள் இவர்களை மன்னிக்காதிருக்கட்டும்!" என்று எரிச்சலூட்டுவதாக உள்ளது. அடேங்கப்பா, கம்யூனிஸ்ட் அறிக்கை பற்றி கம்யூனிஸ்டுகளை விட இந்த "உயிர் எழுத்து"க்காரர்களுக்கு ஏக அக்கறை போலிருக்கிறதே! இனி என்ன, கம்யூனிசம் பற்றிக் கம்யூனிஸ்டுகள் கவலைப்பட வேண்டியதில்லை!

எம். சந்திரமோகன், ராமநாதபும்

கலைமாமணி விருது ஒரு கேலிக்கூத்தாகத் தெரியவில்லையா?

அதை வாங்குபவர்களுக்கு அப்படித் தெரிவதாகத் தெரியவில்லை. அவர்கள் உற்சாகமாகப் போய் வாங்கியிருக்கிறார்கள். வாங்கிய கையோடு புறப்பட்டிருக்கிறார்கள். முதல்வரின் பேச்சைக் கேட்காமல்! குஷ்பூ புலம்பியிருக்கிறார் போகாதீர்கள் என்று! அப்படியும் அவர்கள் கிளம்பிவிட்டார்கள். கலைமாமணி விருது பெற்றவர்களுக்கு கலைஞரின் பேச்சுத்தான் அனாவசியமாகப் பட்டிருக்கிறது. இதுதான் கூத்து!

ரா. தட்சிணாமூர்த்தி, கடலூர்

2ஜி அலைக்கற்றை ஊழலைத் தொடர்ந்து மற்றொரு மெகா ஊழல் கண்டுபிடிக்கப்பட்ட அவலம் குறித்து. . ?

ஒரு ஊழலை ஒழிக்காமலேயே அதைச் சிறிதாக்க வேண்டும் என்றால் அதைவிடப் பெரிய ஊழலைச் செய்ய வேண்டும் - இதுவே, மன்மோகன் அரசின் கோட்பாடு! பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள விண்வெளித் துறையில் மாபெரும் ஊழல் நடந்திருக்கிறது. கேட்டால் அதைத்தான் ரத்து செய்யப் போகிறோமே என்கிறார். ஊழல் வெளியிடப்படாமல் இருந்திருந்தால் காரியம் நடந்திருக்கக்கூடுமே! "ஏண்டா, ஏறினாய் மரத்தில்" எனக் கேட்டதற்கு "அதுதான் இறங்கியாச்சுல" என்று பதில் சொன்ன கணக்குத்தான்!

இ. ராதாமணவாளன், கோயம்புத்தூர்

புத்தகம் பேசுது பிப்ரவரி இதழில் வெளிவந்துள்ள "நாயி வாயிச் சீல" நூலுக்கான மதிப்புரையைப் படித்தீர்களா? இத்தகைய நூல்கள் பற்றி உங்கள் கருத்து?

அந்த விரிவான மதிப்புரையிலிருந்து அந்த நூலந் பொதுத் தன்மை புரிகிறது. உரையாடல்களுக்கு மட்டுமல்லாது விவரணைகளுக்கும் கொச்சை வசவுகள் நிறைந்த வட்டார மொழி பயன்படுத்தப்பட்டிருக்கிறதாம். அதற்கென்று நீளமாய் உதாரணங்களும் கொடுத்திருக்கிறார் மதிப்புரையாளர். அவை சேலம் ஏர்வாடி வட்டார வழக்காம். அவர்களுக்கு வேண்டுமானால் புரியலாம், மதுரைக்காரனாகிய எனக்குச் சிரமமாக இருந்தது. இப்படிச் சொன்னால் அதிநவீனவாதிகள் கோபித்துக் கொள்வார்கள். "புரிதல் ஒரு பிரச்சனையே அல்ல" என்கிறார்கள் அவர்கள். இலக்கியத்தின் சமூகப் பயன்பாட்டை இரண்டு வழிகளில் ஒழித்துக்கட்ட முடியும். ஒரு வழி, மோசமான கருத்தை உள்ளடக்கமாகத் தருவது. இன்னொரு வழி, வட்டார மொழியைச் சித்தரிப்புக்கும் பயன்படுத்தி விரிந்த வாசகர் தளத்திற்கு எட்டவிடாமல் செய்வது. இதிலுள்ள கதைகள் இந்த இரண்டையும் கொண்டிருக்கும் போலும். மதிப்புரையாளர் கூறுகிறார் - "இத் தொகுப்பிலுள்ல கதைகளைப் போன்ற உள்ளடக்கம் கொண்டவற்றை கி. ரா. பாலியல் கதைகளென்றே தனியாக அடையாளப்படுத்துகிறார். ஹரி 'என் படைப்புலகமே இவைதான்' என்று முன்வைக்கிறார். இதற்கொரு துணிச்சல் தேவைப்படுகிறது". இந்தத் "துணிச்சல்" பாராட்டத்தக்கதா என்பதை முழு நூலையும் படித்தால்தான் - அதாவது படிக்க முடிந்தால்தான் - தீர்மானிக்க முடியும்.

செ. பூமிநாதன், சேலம்

"தமிழர்களுக்கு இது ஒரு பொற்காலம். கலைஞர்கள் மீதும், தமிழ் மீதும் எல்லை கடந்த அன்பு கொண்டவர் முதல்வர் கருணாநிதி" என்று ஜெயகாந்தன் புகழ்மாலை சூட்டியுள்ளாரே?

தன்னை வைத்து தரணியை அளக்கிற போக்கு இது. இவர் ஒரு காலத்தில் காங்கிரசில் இருந்தால், திமுக தலைவர்களைத் திட்டித் தீர்த்தார். திராவிட இயக்கம் என்றாலே கிண்டலும் கேலியும்தான். அவர்களது எழுத்துக்களில் எதையும் இலக்கியமாக அங்கீகரித்தலும் இல்லை. இன்று இன்னொரு கோடிக்குப் போய்விட்டார். இவரை திமுக தலைவர் நன்கு கவனிக்கிறார் விருதுகள் கொடுத்து. இவரும் அள்ளி விடுகிறார். பொற்காலமாம்! யாருக்கு? தமிழர்களுக்கு அல்ல, ரத்தன் டாடாக்களுக்கும் அனில் அம்பானிகளுக்கும். "அண்ணா அறிவாலயம்" வாசல் வரை வந்துவிட்ட அலைக்கற்றை அசிங்கம் பற்றியெல்லாம் அறியார் போலும்?

கோ. மணிவாசகம், தென்காசி

தலித் முரசு (டிச. 2010) ஏட்டில் "பார்ப்பனிய மண்ணில் மார்க்சியம் - ஓர் அம்பேத்கரிய ஆய்வு" எனும் கட்டுரை படித்தீர்களா?

"மார்க்சியத்தின் அறிவுரைகள் எவற்றிலும் உழைக்கும் வர்க்கத்தைச் சாராத ஒருவரால் உழைக்கும் வர்க்கத்தை அதிகாரப்படுத்த முடியும் என்ற கருத்துக்கு ஆதரவாகவோ, முன்னிருத்தியோ எதுவும் இல்லை" என்கிறார் அந்தக் கட்டுரையாளர் எஸ். கே. பிஸ்வாஸ். உழைக்கம் மக்களுக்கு புரட்சிகரத் தத்துவம் தந்த மார்க்சும் - எங்கெல்சுமே அந்த வர்க்கத்தைச் சார்ந்தவர்கள் அல்ல என்பதை அவர் மறந்து போனார். பாட்டாளி வர்க்கத்தின் விடுதலை அந்த வர்க்கத்தால்தான் சாத்தியம் என்பது அடிப்படையில் எப்படிச் சரியானதோ அதுபோல பிற வர்க்கங்களிலிருந்தும் சில தனி மனிதர்கள் பட்டாளி வர்க்கதிற்காகப் போராட முன்வருவார்கள் என்பதும் உண்மையே. மனிதர்கள் பொம்மைகளோ, இயந்திரங்களோ அல்ல. அந்தக் கட்டுரையின் நோக்கம் தலித்துகள் சூத்திரர்களின் விடுதலைக்கு உதவ பிராமணர்கள் உள்ளிட்ட இதர உயர் சாதியினர் முன்வர மாட்டார்கள் என்று சத்தியம் செய்வது. அவர் கூறுகிற மேற்கு வங்கத்திலேயே தலித்துகள் மீது வன்கொடுமைகள் தடுக்கப்பட்டிருப்பதன் காரணம் ஜோதிபாசு - புத்ததேவ் போன்ற தலித் அல்லாதவர்களின் ஆட்சியே என்பதைத் திட்டமிட்டு மறைக்கிறார் அந்தப் புண்ணியவாளர்.

பெ. வேதாசலம், புதுச்சேரி

சமீபத்தில் தாங்கள் படித்த நூல் பற்றிச் சொல்லுங்களேன்?

அது மாயாவதி தொகுத்த நூல்; பெயர் "பகுஜன் சமூஜும் அதன் கொள்கையும்". இதில் கன்ஷிராம் எழுதிய ஒரு கட்டுரை உள்ளது. அதில் 1993ல்தான் முலாயம் சிங் யாதவை உ. பி. யின் முதல்வராக ஆக்கியதையும், ஆனால் அவர் தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் ஆதிவாசிகள் மீதான தாக்குதல்களைத் தடுக்கத் தவறிவிட்டதையும் வேதனையோடு சுட்டிக்காட்டியிருக்கிறார். பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் ஒற்றுமை என்பது பின்னவர்கள் மீதான தாக்குதல்களைத் தடுத்து நிறுத்துவதன் மூலம்தான் கட்ட முடியும் என்பதை முலாயம் மறந்ததாகப் படுகிறது. அதன் "பலனை" அவர் இன்றுவரை அனுபவித்து வருகிறார்!