திடீரென்று இரண்டு பேர்களின் பெயர்கள் பெரும் சூறாவளியாய்ச் செய்தி ஊடகங்களில் சுழன்று கொண்டிருக்கின்றன. ஒருவர், இந்திய அளவில் நீரா ராடியா; மற்றவர் உலக அளவில் ஜூலியன் அசாங்கே. இரகசியத் தகவல் பரிமாற்றங்கள் வெளிப்பட்டமையே இவ்இருவரின் பெயர்களும் பரபரப்பாகப் பேசப்படுவதற்கு அடிப்படையாகும்.
நீரா ராடியா ஒரு பெண்; வைஷ்ணவி தகவல் ஆலோசனை நிறுவனம் என்பதை நடத்தி வருபவர். நீரா ராடியா அரசியல்வாதிகளுக்கும் முதலாளிகளுக்கும் உயர் அதிகாரிகளுக்கும் செய்தி நிறுவனங்களுக்கும் இடையே தரகராகச் செயல்படுபவர்.
இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை (2ஜி) ஒதுக்கீட்டில் “முதலில் விண்ணப்பித்தவர்க்கே முன்னுரிமை” என்ற கொள்கை பின்பற்றப்பட்டதால் நடுவணரசுக்குப் பெரும் பணம் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த இழப்பு உருபா 30,000/- கோடியிலிருந்து 1.76 இலட்சம் கோடி வரை இருக்கும் என்கிற விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. இதையொட்டி நீரா ராடியாவின் தொலைபேசி விவரங்கள் வெளியாகியுள்ளன. அலைக்கற்றை ஒதுக்கீடு தவிர, பல்வேறு செய்திகளும் இந்த உரையாடல்கள் வாயிலாக வெளியாகியுள்ளன.
இந்தியாவின் பெருமுதலாளிகளான இரத்தன் டாடா, அம்பானி, சுனில் மிட்டல் போன்றவர்களும், அரசியல்வாதிகளும் என்.டி.டி.வி.யின் பர்கா தத் போன்ற புகழ்பெற்ற ஊடகவியலாளர்களும், அரசின் முடிவுகளைத் தீர்மானிப்பதில் எந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்கிற உண்மையை சாதாரண மக்களும் அறிந்துகொள்ள நீரா ராடியாவின் உரையாடல்கள் உதவுகின்றன. மக்களுக்கான ஆட்சி என்பது பொய்; முதலாளிகளுக்கான ஆட்சி என்பதே மெய். முதலாளிகளுக்குக் கையாள்களாக - தரகர்களாக - அரசியல்வாதிகளும், உயர் அதிகார வர்க்கமும், செல்வாக்கான ஊடக நிறுவனங்களும் செயல்படுகின்றனர் என்கிற உண்மையை நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்கள் மீண்டும் உறுதிப்படுத்துகின்றன.
ஜூலியன் அசாங்கே 2006ஆம் ஆண்டு விக்கி லீக்ஸ் (Wiki Leaks) என்ற இணையத் தளத்தை உருவாக்கினார். இவர் ஆஸ்திரேலிய நாட்டுக் குடிமகன். இப்போது இவர் 49அகவையர். உலகில் பல நாடுகளில்நடக்கும் மனித உரிமை மீறல்கள், சனநாயக ஒடுக்கு முறைகள் தொடர்பான ஆதாரங்களை - அந்நாடுகள் வெளியிட விரும்பாத இரகசிய ஆவணங்களைத் திரட்டி வெளியிடுவதே விக்கி லீக்சின் நோக்கம். மிரட்டிப் பணம் பறிப்பதோ, வெறும் இலாப நோக்கமோ இன்றி விக்கிலீக்ஸ் செயல்படுகிறது. விக்கி லீக்ஸ் ஒரு சிறிய அமைப்பு. ஏழு பேர் இதன் உறுப்பினர்கள். ஆனால் மனித சுதந்தரத்திலும் சனநாயகத்திலும் பற்றுடையோரும் இரகசிய ஆவணங்களை வெளிக்கொண்டு வருவதில் வேட்கை கொண்டோரும் விக்கி லீக்சுக்குப் பெருமளவுக்குச் செய்தி ஆதாரங்களையும், நிதி உதவியையும் அளித்து வருகின்றனர்.
1917இல் சோவியத் நாட்டில் லெனின் தலைமையில் சோசலிசப் புரட்சி வெற்றிபெற்று, ஆட்சி அமைக்கப்பட்டபின், இரஷ்யாவின் ஜார் மன்னனின் கொடுங்கோலாட்சியின் இரகசிய ஆவணங்கள் பெரும் எண்ணிக்கையில் வெளியிடப்பட்டன. அதன்பிறகு, விக்கி லீக்ஸ்தான் பல நாடுகளின் இரகசிய ஆவணங்களை வெளியிட்டுப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடக்கத்தில், மேற்கு ஆசியா, ஆப்பிரிக்கா, முன்பு சோவியத்து ஒன்றியத்தில் இருந்த நாடுகளின் இரகசிய ஆவணங்களை - உரையாடல்களை விக்கி லீக்ஸ் வெளியிட்டது. குறிப்பாக முதல் மூன்று ஆண்டுகளில் சீனாவில் அரசு மக்கள்மீது ஏவிவிட்ட அடக்குமுறைகளைப்பற்றி வெளியிட்டது. அதனால் அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும், விக்கி லீக்ஸ், மக்களின் சுதந்தரத்துக்காகவும் சனநாயகத்தை வளர்த்தெடுப்பதற்காகவும் பாடுபடுவதாகப் போற்றின.
2008இல் “எகானமிஸ்டு” செய்தி ஏடு பரிசு வழங்கி விக்கி லீக்சைப் பாராட்டியது. 2009ஆம் ஆண்டு உலகப் பொது மன்னிப்புக் கழகம், கென்யா நாட்டின் மனித உரிமை மீறல்களை உலகறிச் செய்ததற்காக - “மனித உரிமைக் காவலர்” என்று விக்கி லீக்சுக்குப் பரிசு வழங்கியது.
2008ஆம் ஆண்டு சுவிஸ் நாட்டில் ஜூலியல் பேர் என்கிற தனியார் வங்கி, கேமேன் தீவுகளில் உள்ள அதன் கிளை வங்கியில் சட்டப் புறம்பாகப் பணப் பரிமாற்றம் செய்ததற்கான ஆவணங்களை விக்கி லீக்ஸ் வலைத்தளம் வெளியிட்டது. இதற்காக அந்த வங்கி விக்கிலீக்ஸ் மீது வழக்குத் தொடுத்தது. அந்த வங்கியின் முறைகேடுகளை விக்கிலீக்ஸ் மேலும் அம்பலப்படுத்தியதால், அத் தனியார் வங்கி திருடனுக்குத் தேள்கொட்டியது போல் வழக்கைத் திரும்பப் பெற்றுக்கொண்டது. இதன்மூலம், பரபரப்பான - இரகசிய ஆவணங்களை வெளியிடும் இணையத்தளம் - விக்கி லீக்ஸ் எனும் புகழ் மேலை நாடுகளில் பரவியது.
தங்கள் நாட்டில் நிகழும் சட்டப்புறம்பான நடவடிக்கைகளை வெளியிடுவதற்காக விக்கிலீக்சைப் பலர் நாடிச் சென்றனர். கந்தநாமா சிறையில் அமெரிக்கா நடத்திய கொடுமைகள் பிரிட்டிஷ் இனவெறிக் கட்சியின் உறுப்பினர்கள் பட்டியல், சூழலியல் சீர்கேடுகள் குறித்து விஞ்ஞானிகள் மிகைப்படுத்திக் காட்டியதற்கான மின் அஞ்சல் சான்றுகள், ஈரானில் அணு சக்தி உற்பத்தி இடத்தில் நடந்த விபத்து, டிராஃபிகுரா என்கிற பன்னாட்டு நிறுவனம் அய்வரிகோஸ்ட் நாட்டில் நச்சுக்கழிவுகளைக் கொட்டியது முதலான ஆவணங்களை விக்கி லீக்சு வெளியிட்டது.
ஈராக் மக்களின் சுதந்தரத்தையும் அந்நாட்டின் சனநாயகத்தையும் காப்பதற்காக என்று கூறி அமெரிக்கா ஈராக் மீது படைகளை ஏவி அந் நாட்டைக் கைப்பற்றியது. ஆனால், அமெரிக்கப் படைகள் ஈராக்கில் செய்த அட்டூழியங்களை 2010 ஏப்பிரலில் விக்கிலீக்ஸ் வெளியிட்டது. இதேபோல, ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் தலைமையிலான கூட்டுப்படைகள் அந்நாட்டு மக்கள் மீது இழைத்த கொடுமைகள் குறித்த வீடியோ காட்சிகளையும், 92,000 ஆவணங்களின் நகல்களையும் விக்கிலீக்ஸ் வெளியிட்டது. இவற்றால் அமெரிக்காவின் படைத் தலைமையகமான பென்டகன் ஆட்டங்கண்டது.
2010 நவம்பர் 28 அன்று விக்கிலீக்ஸ் அமெரிக்காவின் மீது அணுக்குண்டு போட்டதுபோல் தாக்குதல் தொடுத்தது. உலக நாடுகளில் உள்ள அமெரிக்காவின் தூதரகங்களிலிருந்து அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட 2, 51, 287 இரகசிய ஆவணங்களை வெளியிட்டது. ஒளிவு மறைவு அற்ற-வெளிப்படையாகச் சட்டத்தின் ஆட்சி நடைபெறும் சனநாயக நாடுகள் என்று வட அமெரிக்காவும், மேற்கு அய்ரோப்பிய நாடுகளும் தம்பட்டம் அடித்துக் கொண்டுவந்தன. 2009ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பராக் ஒபாமா சீனாவுக்குச் சென்றிருந்தார். அப்போது, “ஒரு நாட்டின் மக்கள் தங்குதடையின்றி அந்நாட்டின் செயல்பாடுகள் குறித்துத் தகவல் பெறும் உரிமை இருக்கவேண்டும். எந்த அளவுக்கு இந்த உரிமை இருக்கிறதோ அந்த அளவுக்கு அச்சமூகம் வலிமையானதாக விளங்கும். அந்நாட்டின் அரசு மக்களுக்குக் கட்டுப்பட்டதாக இருக்கும்” என்று அறிவுரை வழங்கினார். ஆனால், அமெரிக்கத் தூதரகங்களிலிருந்து அனுப்பப்பட்ட இரகசிய ஆவணங்களை விக்கி லீக்ஸ் வெளியிட்டதும் அமெரிக்க ஏகாதிபத்தியம் சினங்கொண்ட மதயானை போலாகிவிட்டது.
விக்கி லீக்சின் வெளியீடு, உலகச் சமுதாயத் தின்மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல் என்று அமெரிக்க அயலுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் புலம்புகிறார். பொதுவாக, சுதந்தரமான பேச்சுரிமையை ஆதரிக்கும் சனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அசாங்கேவுக்கு 25 இலட்சம் ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்க வேண்டும் என்று பிதற்றியுள்ளார். விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள தகவல்கள் பொய்யானவை என்று அமெரிக்க அரசு மறுக்கவில்லை. மாறாக ஹிலாரி கிளிண்டன், அமெரிக்காவைப் பற்றிய தகவல்கள் வெளியாகி விட்டதற்காக உலகத் தலைவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
ஈழத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு மகிந்த இராசபக்சேவே காரணம் என்று இலங்கையில் உள்ள அமெரிக்காவின் தூதர் தகவல்களை அனுப்பி உள்ளார். ஹிலாரி கிளிண்டன், அய்.நா.வின் பொதுச் செயலாளர் உள்ளிட்ட பலரையும் ஒற்றறியுமாறு கூறியுள்ளார்.
ஆயினும், விக்கி லீக்சின் அசாங்கே மீது அமெரிக்க வழக்குத் தொடுக்க முடியவில்லை. விக்கி லீக்சின் தகவல்கள் செய்தி ஏடுகள், இணையத் தளங்கள் மூலம் வெளிவராதவாறு மிரட்டித் தடுத்து விடுகிறது. 2010 ஆகஸ்டு மாதம் அசாங்கே சுவீடன் நாட்டில் இருந்தபோது இரண்டு பெண்களுடன் தவறான பாலியல் உறவு கொண்டதாகக் குற்றஞ்சாற்றப்பட்டுக் கைது ஆணை பிறப்பிக்கப்பட்டது. சுவீடன் நாட்டுப் பாலியல் குற்றச் சட்டம் புதுமையானது. இரண்டு பெண்களும் அசாங்கேவின் பால் ஈர்க்கப்பட்டவர்கள். இருவருக்குமிடையான போட்டியின் காரணமாக அசாங்கே மீது புகார் கொடுத்தனர். ஒரு பெண்ணின் குற்றச்சாற்று-உடலுறவின்போது ஆணுறை கழன்று விட்டது என்பது. இன்னொரு பெண்ணின் குற்றச் சாற்று-தான் தூங்கிக் கொண்டிருக்கும்போது அசாங்கே உடலுறவு கொண்டார் என்பது! எங்கள் விருப்பத்திற்கு எதிராக வன்புணர்ச்சி கொண்டார் என்பதல்ல குற்றச்சாற்று!
அசாங்கே இலண்டனில் கைது செய்யப்பட்டு, பிணையில் வெளிவந்துள்ளார். விக்கிலீக்சின் தகவல்களை வெளியிட இலண்டன் நீதிமன்றம் தடை விதிக்கவில்லை.
உயர் தகவல் தொழில் நுட்பத்தைக் கருவியாகக் கொண்டு தங்கள் வல்லாதிக்கத்தை நிலைநாட்டி வந்த முதலாளிய வல்லரசுகள் மீது அதே ஆயுதத்தால் அசாங்கே தாக்குதல் நடத்தி உள்ளார். அசாங்கே தொடுத்துள்ள இணையத் தளப் போரில் அமெரிக்க ஏகாதிபத்திய அரசு வெல்ல முடியாமல் திக்குமுக்காடிப் போயுள்ளது.
கடந்த 30 ஆண்டுகளாக உலகமயம் என்ற பெயரால் மூலதனமும், உற்பத்தி செய்த பண்டங்களும் தங்குதடையின்றி உலகம் முழுவதும் வலம் வந்தன. இப்போது இணையத் தளத்தின் மூலமான இரகசிய தகவல்கள் ஆதிக்க அரசுகள் மீது சம்மட்டி அடி கொடுத்துள்ளன.
‘முதலாளியம் தனக்கான சவக்குழியைத் தானே தோண்டிக் கொள்ளும்’
- காரல்மார்க்சு.