இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையில் 1965-இல் நடைபெற்ற போரின் 50-ஆவது ஆண்டு நிறைவு விழாவை மத்திய அரசு கொண்டாடி வருகிறது. இந்த விழா ஆகஸ்ட் 28, 2015-இல் துவங்கி ஒரு மாத காலத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் நடத்தப்படுகிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மின்னணு மற்றும் அச்சு ஊடகங்கள் மூலம் பெரிய அளவில் தேசிய ஆரவாரமும், வெறியும் தூண்டி விடப்படுகிறது.

இப் போரைப் பயன்படுத்தி மோடி அரசாங்கம் ஆரவார தேசிய வெறியைத் தூண்டிவிடுவது குறித்து பாகிஸ்தானுடைய நவாஸ் சரீப் அரசாங்கம் கவலை தெரிவித்துள்ளது. இது, இரு நாடுகளுக்கிடையே உள்ள நீண்ட நாளைய பிரச்சனைகளை அமைதியான முறையில் தீர்ப்பதில் இந்திய அரசாங்கத்திற்கு அக்கறையில்லை என்பதைக் காட்டுவதாக அது கூறியிருக்கிறது. செப் 6 நாளை பாகிஸ்தானுடைய பாதுகாப்பு நாளாக அது கடைபிடித்து வருகிறது. இந்தியாவுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிக்கு தன்னுடைய பங்களிப்பாக இந்த நாளை விடுமுறை நாளாக கடைபிடிப்பதை நவாஸ் சரீப் அரசாங்கம் நிறுத்திக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்புக் குழு கொண்டு வந்த போர் நிறுத்தத் தீர்மானத்தை இந்தியாவும் பாகிஸ்தானும் ஏற்று செப்டெம்பர் 22, 1965 அன்று போரை நிறுத்தினர். இந்தியா பாகிஸ்தான் மீது போரை செப் 5, 1965 அன்று துவக்கியது. ஆனால் போருக்கு வழிவகுத்த நிகழ்வுகள் அதற்கு முன்பாகவே தொடங்கின. அறிவிக்கப்படாத போர் காசுமீரில் ஆகஸ்டு 1965 முழுவதும் நடைபெற்றது. ஆகஸ்டு 28, 1965 இல் இந்திய இராணுவம் காசுமீரில் உள்ள ஹாஜி பிர் கணவாயைக் கைப்பற்றியது.

போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து, சோவியத் யூனியனில் இந்தியா - பாகிஸ்தான் தலைவர்களுக்கிடையே தாஷ்கென்ட் அமைதி ஒப்பந்தம் 1966-இல் கையெழுத்தாகியது. இந்த ஒப்பந்தப்படி, இரு நாடுகளும் தத்தம் இராணுவங்களை போருக்கு முந்தைய எல்லைக்கு பின்வாங்கிக் கொள்ளுமெனவும், தூதரக உறவுகளை மீண்டும் அமைத்துக் கொள்வதென்றும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இராணுவ ரீதியில் 1965 இந்திய பாகிஸ்தான் போரானது "வெற்றி தோல்வி அற்றதாக"க் கருதப்படுகிறது. ஆனால் இந்திய அரசு இந்தப் போரை "மாபெரும் வெற்றியாக" அறிவித்து வரலாற்றை மாற்றியெழுத முயற்சித்து வருகிறது. இந்த விழாக்களை இந்திய அரசு இந்த நேரத்தில் நடத்தி வருவதன் நோக்கம் என்ன என்ற கேள்வி எழுகிறது.

1965 போர் நடைபெற்ற சூழல்

தங்களுடைய குறுகிய நலன்களை முன்னேற்றும் நோக்கத்தோடு இந்திய, பாகிஸ்தானிய ஆளும் வகுப்பினர் நடத்திய ஒரு பிற்போக்கான போர்தான் 1965 போராகும். இந்திய ஒன்றியத்தில் தங்களுடைய நிலைமை மீது வெறுப்படைந்திருந்த காசுமீர மக்கள், 1965-இல் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர். இந்தியாவின் "தேச ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும்" ஒரு அபாயமாக பாகிஸ்தான் இருப்பதாகக் கூறி காசுமீர மக்களுடைய இந்தக் கிளர்ச்சியை இந்திய ஆளும் வகுப்பினர் நசுக்கினர். இன்னொரு பக்கம், காசுமீர மக்களுடைய கிளர்ச்சியைப் பயன்படுத்தி, காசுமீரத்தைத் தன்னுடையதாக பாகிஸ்தான் நியாயப்படுத்த விரும்பியது. காசுமீர் மீது போட்டியிடும் சக்திகள் தங்களுடைய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக 1965 இந்தியா-பாக் போர் நடத்தப்பட்டது. ஆனால் அது எதையும் தீர்க்கவில்லை.

இந்தியாவும், பாகிஸ்தானும் மேலும் இரண்டு போர்களை நடத்தியிருக்கின்றன. அவை 1971 போரும், கார்கில் போரும் ஆகும். இரு நாடுகளுமே காசுமீர் அவர்களுக்குச் சொந்தமென்று கூறுகின்றன. 1965 போர் நடைபெற்று 50 ஆண்டுகள் கடந்த பின்னர், காசுமீர் மீது தன்னுடைய அதிகாரத்தை இராணுவ ஆட்சியின் மூலம் இந்திய அரசு நடத்தி வருகிறது என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. காசுமீர மக்களைப் பற்றியோ அவர்களுடைய விருப்பங்களைப் பற்றியோ இந்திய ஆளும் வகுப்பினர் ஒரு துளி கூட கவலைப் பட்டதில்லை. காசுமீர மக்கள் மீது இவர்களுடைய அணுகு முறையானது காலனிய, ஏகாதிபத்திய அணுகுமுறையாக இருந்து வந்திருக்கிறது.

இந்தியா, பாகிஸ்தானுடைய ஆட்சியாளர்கள் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருக்கும் பகைமை, 1947 - லிருந்து தொடர்ந்து வரும் பாரம்பரியமாகும். காலனியத்திலிருந்தும், ஏகாதிபத்தியத்திலிருந்தும் பிளவுபட்டு வருவதை உறுதி செய்யும் ஒரு தீவிரமான புரட்சியில் இந்திய மக்கள் ஈடுபடுவதைத் தடுப்பதற்காக ஆங்கிலேய காலனியவாதிகள் ஆகஸ்டு 1947-இல் இந்தியத் துணைக் கண்டத்தை இரத்த வெள்ளத்தில் துண்டாடினர். ஆங்கிலேய ஏகாதிபத்தியர்களுடைய சதித் திட்டமானது, ஆசியாவில் புரட்சிக்கு எதிரான ஒரு தளமாக தெற்காசியா இருப்பதை உறுதி செய்வதாகும். இந்த நோக்கத்திற்காக, ஏகாதிபத்தியர்கள் இந்தியாவையும், பாகிஸ்தானையும் ஒருவருக்கு எதிராக ஒருவரை இடைவிடாது தூண்டிவிட்டு வந்திருக்கிறார்கள். இந்த இரு நாடுகளுக்கும் ஏகாதிபத்தியர்கள் ஆயுதங்களை வழங்கி வந்திருக்கின்றனர். ஐம்பதுகளில் அமெரிக்காவின் தலைமையில் உள்ள சியாடோ, சென்டோ போன்ற இராணுவ கூட்டணிகளில் சேர்ந்து கொள்ளுமாறு பாகிஸ்தானுக்கு ஆர்வமூட்டினர். சீனாவுக்கு எதிராக இந்தியாவை அமெரிக்க ஏகாதிபத்தியர்கள் தூண்டிவிட்டதன் காரணமாக இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையே 1962 போர் நடைபெற்றது.

1965 போரின் போது இந்தியா, பாகிஸ்தானுடைய இரண்டு அரசாங்கங்களும் ஒருவருக்கு எதிராக ஒருவர் அமெரிக்காவிடமும், ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்புக் குழுவிடமும் முறையிட்டனர். ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்புக் குழு இரு நாடுகள் மீதும் ஒரு ஆயுதத் தடையை விதித்து, போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது.

பனிப் போர் காலத்திலும், அதற்குப் பின்னரும் இந்திய - பாக் உறவுகள்

1965 போர், பனிப் போர் காலத்தில் நடைபெற்றது. சோவியத் யூனியன் ஒரு சோசலிச நாடாக இருந்ததிலிருந்து ஒரு சமூக ஏகாதிபத்திய நாடாக மாறி, உலக ஆதிக்கத்திற்காக அமெரிக்காவோடு ஒத்துழைத்தும், மோதியும் வந்த காலம் அது.

தாஷ்கென்ட் ஒப்பந்தத்திற்குப் பிறகு, அமெரிக்கா, சோவியத் யூனியன் ஆகிய இரு நாடுகளுமே இந்தியத் துணைக் கண்டத்தில் அதிக பங்கு வகிக்க ஆரம்பித்தனர். பாகிஸ்தானுக்கும், இந்தியாவிற்கும் முக்கிய ஆயுதத் தளவாடங்களை விற்பவர்களாக முறையே அமெரிக்காவும், சோவியத் யூனியனும் ஆகின. இந்தியாவும், சோவியத் யூனியனும் 1971 ஆகஸ்டில், இந்தோ - சோவியத் இராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதைத் தொடர்ந்து 1971 இல் இந்தியா - பாகிஸ்தான் போர் நடைபெற்றது. அதன் விளைவாக, பாகிஸ்தான் உடைக்கப்பட்டு, பங்களாதேசம் உருவானது. அந்தப் போரைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையே சிம்லா ஒப்பந்தம் கையெழுத்தானது. தங்களுடைய சொந்த ஏகாதிபத்திய நலன்களை முன்னேற்றும் நோக்கத்தோடு, பனிப்போர் காலம் முழுவதும், இந்த இரு வல்லரசுகளும் இந்தியாவையும் பாகிஸ்தானையும் ஒருவருக்கு எதிராக ஒருவரைத் தூண்டிவிட்டு வந்தனர்.

பனிப்போர் முடிவடைந்து, சோவியத் யூனியன் உடைந்த பின்னர், அமெரிக்க ஏகாதிபத்தியர்கள், இந்தியாவையும், பாகிஸ்தானையும் ஒருவருக்கு எதிராக ஒருவரைத் தூண்டிவிட்டு வருகின்றனர். அதே நேரத்தில் அவர்களுக்கிடையில் அமைதியைக் கொண்டுவர முயற்சிப்பதாக வேடம் போட்டு வருகின்றனர். அமெரிக்காவின் நோக்கமானது, அவர்களுடைய நலன்களை தெற்காசியாவில் முன்னேற்றுவது மட்டுமின்றி, அமெரிக்க ஏகாதிபத்தியர்களின் நலன்களுக்கு ஏற்ப இந்த இரு நாட்டு ஆளும் வகுப்பினரும் தங்கள் திட்டங்களை வகுத்துக் கொள்ள வேண்டும் என்பதும் ஆகும்.

போர்களுக்கு இடைப்பட்ட காலத்தில், இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையிலுள்ள உறவை "போரும் இல்லை, அமைதியும் இல்லை" என்று தான் விவரிக்க முடியும். "போரில்லாத" காலங்களை, போருக்குத் தயாரிக்கும் காலமாக மட்டுமே கூற முடியும். இந்த "போரில்லாத" காலங்களிலும், எல்லையிலுள்ள இரு நாட்டு துருப்புக்களுக்கு இடையே நடைபெறும் மோதல்களைப் பற்றி ஒவ்வொரு நாளும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அத்துடன் அரசாங்கமும், ஊடகங்களும் கூட்டாக நடத்தும் நச்சு வெறிப் பரப்புரையும் சேர்ந்து வருகிறது. 1965-க்கு 50 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்றுங்கூட இதே நிலைதான் தொடர்கிறது.

நம்முடைய மக்கள் சந்தித்து வரும் பிரச்சனைகளிலிருந்தும் அவர்களுடைய வாழ்வாதாரத்தின் மீதும் உரிமைகள் மீதும் ஆளும் வகுப்பினர் நடத்தும் தாக்குதல்களிலிருந்தும் கவனத்தைத் திசை திருப்ப, பாகிஸ்தானுக்கு எதிரான போர் வெறிப் பரப்புரையும், போர் பற்றிய நிலையான அச்சுறுத்தலும் ஆளும் வகுப்பினருக்கு மீண்டும் மீண்டும் பயன்பட்டு வந்திருக்கிறது. தொழிலாளி வகுப்பினர், உழவர்கள் மற்றும் எல்லா உழைக்கும் மக்களையும், தன்னுடைய ஏகாதிபத்திய நோக்கங்களுக்குப் பின்னால் அணி சேர்க்கவும், பாகிஸ்தானுடைய அச்சுறுத்தலிருந்து "தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை"ப் பாதுகாப்பது என்ற பெயரில் அரசு பயங்கரவாதத்தையும், மக்களுடைய உரிமைகள் மீது தாக்குதல்களையும் நியாயப்படுத்த இது இந்திய முதலாளி வகுப்பினருக்கு உதவியிருக்கிறது.

அமெரிக்க ஏகாதிபத்திய திட்டத்தில் இந்தியா

சோவியத் யூனியன் 25 ஆண்டுகளுக்கு முன்னர் உடைந்ததற்குப் பின்னர், எஞ்சியிருக்கும் ஒரே வல்லரசான அமெரிக்கா இந்த நூற்றாண்டில் போட்டியற்றதாக தன் மேலாதிக்கத்தை நிறுவுவதற்காக திட்டத்தைக் கடைபிடித்து வருகிறது. தன்னுடைய இந்த நோக்கத்தை அடைவதற்காக, அது இறையாண்மை கொண்ட மக்கள் மீதும் நாடுகள் மீதும் வெளிப்படையான மற்றும் மறைமுகமான போர்களை நடத்தி வருகிறது. தன்னுடைய நாட்டில் பாசிசத்தையும், வெளிநாடுகளில் போரையும் நியாயப்படுத்துவதற்காக அது பல்வேறு நாடுகளில் குழப்பத்தையும், வன்முறையையும் பரப்புவதற்காகவும், அரசாங்கங்களை பலவீனப்படுத்தவும், நம்பிக்கையிழக்கச் செய்யவும் உலகெங்கிலும் பயங்கரவாதக் குழுக்களை அது ஆதரித்து வருகிறது. "பயங்கரவாதத்திற்கு எதிராகப் போர்", "சனநாயகத்தைப் பாதுகாப்பது", "மனித உரிமைகளைப் பாதுகாப்பது" போன்ற பல்வேறு முழக்கங்களின் கீழ், அது இராணுவ ஆக்கிரமிப்புக்களையும் அதைத் தொடர்ந்து ஆட்சி மாற்றங்களையும் நியாயப்படுத்தியிருக்கிறது. அமைதிக்கும், மக்கள் மற்றும் நாடுகளுடைய இறையாண்மைக்கும் முக்கிய ஆபத்தானது "இஸ்லாமிய பயங்கரவாதத்திலிருந்தும், அடிப்டைவாதத்திலிருந்தும்" வருகிறதென உலக மக்களை நம்பச் செய்வது அதனுடைய ஏகாதிபத்தியத் திட்டத்தின் ஒரு அங்கமாகும்.

அமெரிக்கா இந்த நேரத்தில் தன்னுடைய "ஆசிய மையக் கொள்கையை"ப் பின்பற்றி வருகிறது. உலகைக் கைப்பற்ற வேண்டுமென்ற தன்னுடைய கொள்கைக்கு முதலடியாக ஆசியாவைக் கைப்பற்றுவது இருப்பதாக அமெரிக்கா கருதுகிறது. சீனாவைச் சுற்றிலும், தன் தலைமையின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சப்பான், ஆஸ்திரேலியா மற்றும் சில தென்கிழக்கு ஆசிய நாடுகள் அடங்கிய ஒரு இராணுவக் கூட்டணியில் இந்தியாவும் சேர வேண்டுமென அமெரிக்கா முயற்சித்து வருகிறது. அமெரிக்காவின் ஊக்குவிப்பினால் சப்பான் வெளிப்படையாகவே இராணுவ மயமாக்கப்பட்டு வருகிறது.

இந்தியப் பெரு முதலாளி வகுப்பு, ஏகாதிபத்திய பேராசைகளை எப்போதும் வளர்த்து வந்திருக்கிறது. பனிப் போர் முடிவடைந்த பின்னர் இந்தப் பேராசைகள் ஒரு புதிய வேகத்தோடு வளர்ச்சி பெற்றன. உலகை மறு பங்கீடு செய்வதற்காக நடைபெற்று வரும் இந்தப் போரில், இந்தியா தனக்கான ஒரு சொந்த செல்வாக்குப் பகுதியை உருவாக்கிக் கொள்ள விரும்புகிறது. சீனாவுக்கு ஒரு சவாலாக இருக்கும் ஒரு வாய்ப்பைக் கருதி அது களிப்பில் ஆழ்ந்திருக்கிறது. அது சீனாவை, ஆசிய பசிபிக் பகுதியில் எதிர் கொள்ள அமெரிக்காவின் கூட்டுறவோடு, " கிழக்கு நோக்கிப் பார் என்ற கொள்கையை"ப் பின்பற்றி வருகிறது. இந்திய முதலாளி வகுப்பு, இந்தியப் பெருங்கடலை தன்னுடைய மேலாண்மைக்கு உட்பட்ட பகுதியாகப் பார்க்கிறது. இதற்காக அது மலாகா கடற்பகுதியிலிருந்து, செங்கடல் உட்பட ஆப்ரிகாவின் கிழக்குக் கடற்கரை வரையில் உள்ள இந்தியப் பெருங்கடலை மேற்பார்வையிடுவதற்காக அமெரிக்காவின் ஒத்துழைப்போடு தன்னுடைய கப்பற் படையைக் கட்டி வருகிறது. மேற்கு ஆசியாவில் தன்னுடைய முக்கிய நலன்களைக் கட்டிக் காக்கும் நோக்கத்தோடு, அங்குள்ள பல நாடுகளோடு பொருளாதார, அரசியல் உறவுகளை இந்தியா பலப்படுத்தி வருகிறது. சுருக்கமாகச் சொன்னால், ஆசியாவிலும், ஆப்ரிகாவிலும் அது மேற்கொண்டுள்ள முதலீடுகளுக்குப் பக்கபலமாக, அது தன்னுடைய இராணுவ பலத்தைக் கட்டிக் கொள்ள விரும்புகிறது.

முஸ்லீம் நம்பிக்கை கொண்ட மக்களைப் பற்றி, வகுப்புவாத நச்சை இந்திய முதலாளி வகுப்பு எப்போதுமே பரப்பி வந்திருக்கிறது. "இஸ்லாமிய பயங்கரவாதத்தை"ப் பற்றியும், எல்லைக்கு வெளியே இருந்து வரும் பயங்கரவாதம் குறித்தும் அது கடந்த இருபது ஆண்டுகளாக காது கிழிய பரப்புரை செய்து வருகிறது. முஸ்லீம் நம்பிக்கை கொண்ட மக்களுக்கு எதிராக, அமெரிக்க ஏகாதிபத்தியர்கள் உலகெங்கிலும் செய்துவரும் பரப்புரை, இந்திய முதலாளி வகுப்பினர் முஸ்லீம் மத நம்பிக்கை கொண்ட மக்களைக் குறிவைத்து வகுப்புவாத பாசிசத் தாக்குதல்களை நடத்தவும், பாகிஸ்தானுக்கு எதிராக வெறியைத் தூண்டிவிடவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

வளர்ந்து வரும் இராணுவமயம் - ஏகாதிபத்தியத் திட்டத்தின் ஒரு அங்கம்

சீனாவிற்கும், அமெரிக்காவிற்கும் அடுத்ததாக, இந்திய இராணுவப் படைகள் ஏற்கெனவே உலகிலேயே மிகப் பெரிய இராணுவ சக்தியாக இருந்து வருகிறது. உலகிலேயே அதிக அளவில் இராணுவத் தளவாடங்களை இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா இருக்கிறது. தன்னுடைய முக்கிய நோக்கங்களை மனதில் கொண்டு, இந்திய முதலாளி வகுப்பு நவீன ஆயுதங்களை வாங்குவதில் எந்தவொரு ஏகாதிபத்திய நாட்டுடனும் தன்னைக் கட்டிப் போட்டுக் கொள்ளவில்லை. இந்திய முதலாளி வகுப்பின் ஏகாதிபத்திய பேராசைகள், இந்தியாவில் ஒரு இராணுவ-தொழில் கூட்டு வளாகத்தை நிறுவி வருகிறது.

அண்மைக் காலம் வரை, இராணுவத் தளவாட உற்பத்தியின் பெரும் பகுதி பொதுத் துறை இராணுவ நிறுவனங்களின் கைகளில் இருந்து வந்துள்ளது. இது தற்போது மாற்றப்பட்டு வருகிறது. அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள், இராணுவ உற்பத்தித் துறையை தனியார் நிறுவனங்களுக்கு திறந்துவிட்டு வருகின்றனர். ஏற்கெனவே டாடா, எல் & டி, ரிலையன்சு முகேஷ் அம்பானி குழுமம், மகேந்திரா & மகேந்திரா, பாரத் போர்ஜ் இந்தத் துறையில் உள்ளனர். அனில் அம்பானி குழுமத்தைச் சேர்ந்த ரிலையன்சு ஏடிஏஜி-யும், இந்தத் துறையில் அண்மையில் நுழைந்துள்ளனர். அவர்கள் ஹெலிகாப்டர்கள், விமானத் துறை கருவிகள், விமானங்கள், ஆயுதங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்வதற்கான உரிமத்திற்காக விண்ணப்பித்துள்ளனர்.

இராணுவத் துறையில் 49 % அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க வேண்டுமென்ற தற்போதைய அரசாங்கத்தின் முடிவானது, இந்திய இராணுவத்திற்கும், சர்வதேச ஆயுதத் தளவாட சந்தைக்கும் ஆயுதங்களை வழங்கக் கூடிய பெரிய நிறுவனங்களாக இந்திய பெரு முதலாளி வகுப்பு ஆக வழிவகுக்கும் நோக்கம் கொண்டதாகும். "இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள்" என முழக்கம் எழுப்பியதிலிருந்து, அதிக முதலீடுகள் வந்துள்ள ஒரே பொருளாதாரத் துறையானது, இராணுவ உற்பத்தித் துறையாகுமென அறிக்கைகள் கூறுகின்றன. இது இயற்கையே. இந்தத் துறையில் இந்திய முதலாளிகளுக்கும், அன்னிய ஆயுத உற்பத்தியாளர்களுக்கும் ஒரு உத்திரவாதமான சந்தைக்கு இந்திய அரசு உறுதியளித்து வருகிறது.

ஆபத்தான போக்கு

1965 போரின் 50-ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சியில் முதலாளி வகுப்பு, தேச வெறிப் பரப்புரையை நடத்தி வருகிறது. அது "நாட்டுப் பற்று" என்ற பெயரில் தன்னுடைய ஏகாதிபத்திய நோக்கங்களை மறைத்து வருகிறது. உலகளாவிய ஒரு பொருளாதார நெருக்கடி இருக்கும் சூழ்நிலையில் அது வேண்டுமென்றே நமது பொருளாதாரத்தை இராணுவமயப்படுத்தி வருகிறது. ஏனெனில், நமது நாட்டுத் தொழிலாளர்கள் மற்றும் உழவர்களுடைய விருப்பங்களை நசுக்கவும், வல்லரசு என்ற நிலையை அடைவதற்கும் இராணுவமயமாக்கலையும், பாசிசத்தையும், போரையும் ஒரு பாதையாக அது பார்க்கிறது. தொடர்ந்து அதிகரித்துவரும் இராணுவச் செலவினங்களுடைய சுமை நமது நாட்டு உழைக்கும் மக்கள் மீது விழுகிறது. பெரு முதலாளி வகுப்பும், ஏகாதிபத்தியர்களும் ஏற்பாடு செய்யும் போர்களில் நம்முடைய போர் வீரர்கள் தான் தங்கள் உயிரைத் தர வேண்டியிருக்கிறது.

1965 இந்திய பாகிஸ்தான் போரிலிருந்தும், இந்திய அரசு பங்கேற்ற பிற போர்களிலிருந்தும் ஏதாவதொரு படிப்பினையைக் கற்றுக் கொள்ள வேண்டுமென்றால் அது, காலனிய, ஏகாதிபத்திய பாரம்பரியத்திலிருந்து முற்றிலுமாக விடுபட்டு வர வேண்டிய தேவையைக் குறித்ததாகும். ஆனால், இந்திய அரசு பின்பற்றிவரும் பாதையானது, பிளவு என்ற காலனிய பாரம்பரியத்தை பலப்படுத்துவதும், தெற்காசியாவில் ஏகாதிபத்திய மேலாதிக்கத்தை பலப்படுத்துவதாகவும் இருக்கிறது.

இந்திய முதலாளி வகுப்பு முழுவதுமாக துரோகத்தனமான ஒரு வகுப்பாகும். நம்முடைய மக்களைப் பற்றியோ, நமது நாட்டினுடைய இறையாண்மையைப் பற்றியோ அதற்குக் கொஞ்சமும் கவலையில்லை. அது தன்னுடைய பணப் பைகளைப் பற்றி மட்டுமே திட்டமிடுகிறது. நமது நாட்டின் தொழிலாளி வகுப்பினரும், பாடுபடும் உழவர்களும் ஒரு திட்டத்தின் கீழ் ஒன்றிணைந்து, முதலாளி வகுப்புக்கு எதிரான, நிலவுடமைக்கு எதிரான, காலனியத்திற்கு எதிரான, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான புரட்சியை முழுமையடைச் செய்யும் வாய்ப்பை எண்ணி அது மிகவும் அச்சப்படுகிறது. எனவே தான் அது வேண்டுமென்றே, நாடு பிளவுபடுத்தப்பட்டதன் காயங்கள் மறைந்து விடாமலும், தினந்தோரும் புதிய காயங்களை ஏற்படுத்தியும் வருகிறது. எனவே தான் அது, வகுப்புவாத அடிப்படையில் உழைக்கும் மக்களுடைய ஒற்றுமையை உடைத்தும், பாகிஸ்தானுக்கு எதிராக தேச வெறி, போர் வெறியைத் தூண்டிவிட்டும் வருகிறது.

பெரு முதலாளிகள் மற்றும் ஏகாதிபத்தியர்களுடைய குறுகிய நலன்களுக்கு சேவை செய்வதற்காக நடத்தப்படும் போர் வெறியையும், இராணுவமயமாக்கலையும் வெட்ட வெளிச்சமாக்கி எதிர்க்க வேண்டியது எல்லா நாட்டுப் பற்றுள்ள, அமைதியை விரும்பும் மக்களுடைய கடமையாகும். இந்தியா, அமெரிக்காவுடனும், பிற ஏகாதிபத்தியர்களுடனும் வைத்திருக்கும் இராணுவக் கூட்டணியை நாம் எதிர்க்க வேண்டும். இந்தப் பகுதியிலிருந்து ஏகாதிபத்தியர்களைத் தூக்கி எறிய நாம் போராட வேண்டும். தேச வெறியைத் தூண்டிவிடவும், மக்களை இன்னொரு துயரமான போரில் ஈடுபடுத்தவும் இந்திய பாகிஸ்தானிய ஆட்சியாளர்கள் மேற் கொள்ளும் தொடர் முயற்சிகளை நாம் விடாப்பிடியாக வெட்ட வெளிச்சமாக்கி எதிர்க்க வேண்டும். பாகிஸ்தானிய மக்களோடும், பிற அண்டை நாட்டு மக்களோடும் நெருங்கிய நட்புறவை வளர்ப்பதற்காக நாம் போராட வேண்டும்.

Pin It