ஓய்வூதிய நிதி முறைப்படுத்துதல் மற்றும் வளர்ச்சி ஆணைய மசோதா 2011, ஆகஸ்டு 2013 பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கொண்டு வரப்பட இருக்கும் மசோதாக்களில் ஒன்றாகும். நமது நாட்டின் ஓய்வூதிய அமைப்பில் கொண்டுவரப்பட இருக்கும் சீர்திருத்தம் மிகவும் தீவிரமாக விவாதிக்கப்பட்ட ஒன்றாகும். தங்களுடைய எந்தக் கவலையையும் தீர்க்காத இந்த முயற்சியை, உழைக்கும் மக்களின் பல்வேறு பிரிவினரும் எதிர்த்து வருகிறார்கள்.

ஓய்வுதியமானது அனைவருக்கும் உரிய உரிமையாக அங்கீகரிக்கப்பட வேண்டும். எல்லா மதிப்பையும் தொழிலாளர்கள் தாம் தங்களுடைய உழைப்புச் சக்தியின் மூலம் உருவாக்குகிறார்கள். எனவே நாம் வேலை செய்யும் வாழ்க்கையின் போது, நம்முடையத் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய ஊதியத்திற்கான உரிமை மட்டுமின்றி, ஓய்வு பெற்ற பின்னர் ஒரு ஓய்வூதியம் பெறுவதற்கும் நமக்கு உரிமை உண்டு.

உழைக்கும் மக்கள் கோருவது என்னவென்றால், அரசுப் பணியிலோ அல்லது தனியார் துறையிலோ அல்லது வேறு எந்த வேலையிலோ வேலை செய்யும் ஒவ்வொறு தொழிலாளிக்கும் ஒரு போதுமான மாதத் தொகையை ஓய்வு பெற்றபின் பெறுவதற்கு உரிமை உண்டு. இதற்கு அரசாங்கம் உத்திரவாதமளிக்க வேண்டும். இந்த உரிமையானது, ஊதிய மட்டத்தையோ, எந்த வேலை செய்கிறார் என்பதையோ அல்லது யாரிடம்  வேலை செய்கிறார் என்பது போன்றவற்றிற்கு அப்பாற்பட்ட வகையில் எல்லாத் தொழிலாளர்களுக்கும் உரியதாகும். ஓய்வூதியம் பெறுபவருக்கு உறுதியான உண்மை மதிப்பு கிடைப்பதற்காக ஓய்வூதியமானது பணவீக்கத்திலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும். வயது முதிர்ந்த நிலையில் பாதுகாப்பு என்பது ஒரு உரிமையாகும். அந்த உரிமை சமுதாயத்தால் உத்திரவாதமளிக்கப்பட வேண்டும்.

இந்த ஓய்வூதிய சீர்திருத்தமானது, அனைவருக்கும் ஓய்வூதியம் கொடுக்கப்பட வேண்டுமென்பதையோ, அது உத்திரவாதமான பயனைக் கொடுக்க வேண்டுமென்ற தேவையையோ நிறைவேற்றவில்லை. இந்த ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கு முன்னரும், ஒருவருடைய ஓய்வூதிய காலம் முழுவதும் பணவீக்கத்திலிருந்து பாதுகாக்கப்பட்டதாகவும், அனைவருக்கும் உரியதாகவும் ஓய்வூதியத் திட்டம் எதுவும் இல்லை. இந்த புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டுவருவதன் மூலம், தொழிலாளர் ஓய்வூதியத் திட்டத்தினாலும், பிற திட்டங்களினாலும் பாதுகாக்கப்படாத எல்லாத் தொழிலாளர்களுக்கும் இத்திட்டம் "விரிவுபடுத்துவதாக" முதலாளி வர்க்கம் கூறிக் கொள்கிறது. ஓய்வூதிய நிதியை தனியார்மயப்படுத்துவதன் மூலம், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மேலும் அதிக தொகை கிடைக்குமென்றும் அது கூறுகிறது. ஆனால் இந்த இரண்டுமே பித்தலாட்டமானவையாகும். எல்லாத் துறைகளிலும் உள்ள தொழிலாளர்கள் அனைவருக்கும் உரியதாக ஒரு ஓய்வூதிய நிதியை அரசு உருவாக்காமல் அதை ஒவ்வொறு தனிப்பட்ட முதலாளிகளுடைய விருப்பத்திற்கு விட்டுவிடும் வரையில், எல்லாத் தொழிலாளர்களுக்கும் அறுதியிடப்பட்ட ஓய்வூதிய மதிப்பு கிடைப்பதற்கு உறுதியில்லை. புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், ஒரு தொழிலாளி தன்னுடைய ஓய்வூதியத்திற்கு கொடுக்க வேண்டிய சந்தாத் தொகை வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் தொழிலாளிக்குக் கிடைக்க வேண்டிய பயன்களை வரையறுக்கவில்லை.

புதிய ஓய்வூதியத் திட்டம் வருவதற்கு முன்னர், எல்லா அரசாங்க ஊழியர்களும் தத்தம் திட்டங்களின் கீழ் பாதுகாக்கப்பட்டிருந்தனர். "அணிதிரட்டப்பட்ட" துறையென அரசாங்கம் அழைக்கும் பதிவு செய்யப்பட்ட வியாபார நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள், தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனத்தினுடைய தொழிலாளர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் இருந்தனர். இது மாதத்திற்கு ரூ 6500 வரை ஊதியம் பெறுபவர்களுக்கு மட்டுமே உரியதாகும். "அணிதிரட்டப்படாத" துறையினரென அரசாங்கம் அழைக்கும் பதிவு செய்யப்படாத நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கும், பதிவு பெற்ற நிறுவனங்களில் மாதத்திற்கு ரூ 6500-க்கு மேல் ஊதியம் பெறுபவர்களுக்கும் எந்த ஓய்வூதியத் திட்டமும் இல்லை.

புதிய ஓய்வூதியத் திட்டமானது 2004-இல், வரையறுக்கப்பட்ட பங்களிப்புத் திட்டமாக கொண்டு வரப்பட்டது. இது கொண்டு வரப்பட்ட நாள் முதல், வேலையில் சேரும் எல்லா மத்திய அரசாங்க ஊழியர்களுக்கும் இத்திட்டம் பொருந்தும். மேலும், இத்திட்டமானது, பதிவு செய்யப்படாத நிறுவனங்களில் வேலை செய்யும் எல்லாத் தொழிலாளர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இவர்கள் தன்னார்வ சந்தாதாரர்கள் என்ற பிரிவின் கீழ் வருகிறார்கள். அரசாங்க ஊழியர்கள் அளிக்கும் பங்களிப்பிற்கு சமமான தொகையை அரசாங்கம் தருகிறது. தன்னார்வ சந்தாரர்களைப் பொறுத்தமட்டிலும், ஊழியர் தரும் பங்களிப்பிற்குச் சமமான தொகையைத் தருவதா இல்லையா என்பது வேலை கொடுப்பவரின் தீர்மானத்திற்கு விடப்பட்டுள்ளது. அதாவது அது கட்டாயமாக்கப்படவில்லை. வேலைக்கு வைத்திருப்பவரும், ஊழியரின் பங்களிப்போடு சேர்த்துத் தன் பங்களிப்பைத் தர முன்வந்தாலன்றி, எதிர்காலத்தில் அவர்களுடைய ஓய்வூதியமானது அவருடைய சொந்த பங்களிப்பிலிருந்து மட்டுமே கிடைக்கும். தொழிலாளர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ளவர்களுக்கு இந்த புதிய ஓய்வூதியத் திட்டம் எவ்வித மாற்றத்தையும் கொண்டு வரவில்லை.

புதிய ஓய்வூதியத் திட்டமானது, தற்போது எவ்வித ஓய்வூதிய திட்டத்திலும் இல்லாமல் இருக்கும் கோடிக்கணக்கான மக்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காகக் எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கையாக விளம்பரப்படுத்தப்படுகிறது. ஊழியர் அளிக்கும் தொகைக்கு சமமாக வேலைக்கு வைத்திருப்பவரும் தொகையை அளிக்க வேண்டுமென சட்டப்படி கட்டாயப்படுத்தாத நிலையில், தற்போது எந்த ஓய்வூதியத் திட்டத்திலும் இல்லாமல் விடப்பட்டுள்ள கோடிக் கணக்கான மக்களுக்கு ஓய்வூதியம் கிடைக்க, புதிய ஓய்வூதியத் திட்டம் எதுவும் செய்யவில்லை. தினக்கூலி பெறுபவர்களுக்கும், சுயமாக வேலை செய்பவர்களும், ஒப்பந்தத் தொழிலாளர்களும், குறைந்த பட்சமாக ஆண்டிற்கு ரூ 1000 செலுத்த வேண்டும். அதற்குச் சமமான பங்களிப்பு இல்லாமல், அவர்கள் செலுத்தும் இந்தத் தொகை மூலம் கிடைக்கும் ஓய்வூதியம் மிகவும் குறைவாக இருக்கும். புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேருவதற்காக தொழிலாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு வருவார்களென்ற அரசாங்கத்தின் பரப்புரைக்கு மாறாக, புதிய சந்தாதார்கள் மிகவும் சொற்பமே.

ஓய்வு பெற்றவருக்கு கிடைக்கும் தொகையை ஒப்பிட்டுப் பார்த்தால், தொழிலாளர் வைப்பு நிதி - தொழிலாளர் ஓய்வூதிய (EPF-EPS) திட்டத்தைக் காட்டிலும், புதிய ஓய்வூதியத் திட்டம் (NPS) மோசமாக இருக்கிறது. தொழிலாளர் வைப்பு நிதி (EPF) குறித்த விகிதத்தில் தொகையைத் தொழிலாளர்களுக்குத் திருப்பித் தருகிறது.  தொழிலாளர் ஓய்வூதியத் திட்டம் (EPS) ஓய்வூதியகாரருக்கு பின் அவரைச் சார்ந்து இருப்பவர்களுக்கு பயன் அளிக்கிறது. புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழுள்ள ஒரு சந்தாதாரர் ஓய்வு பெறுவதற்கு முன்னரே இறக்க நேரிட்டால், அதுவரை எவ்வளவு பணம் சேர்ந்திருக்கிறதோ அது மட்டுமே அவருடைய  குடும்பத்தினருக்குக் கிடைக்கும். தொழிலாளர் ஒய்வூதிய திட்டத்தில் அவருடைய மனைவிக்கு 50% ஓய்வூதியத் தொகையும், பிள்ளைகள் இருவருக்கு 25% தொகையும் கிடைக்கும்.

நுகர் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்து இரண்டு இலக்கு பணவீக்க உயர்வைச் சந்தித்து வருவதால், ஓய்வூதியமானது, பொருத்தமான விலைவாசி குறீயீட்டின் மாற்றத்திற்கு ஏற்ப ஆண்டிற்கு ஒரு முறையோ, அல்லது மேலும் அதிகமாகவோ திருத்தப்பட வேண்டுமென அண்மையில் நடைபெற்ற இந்தியத் தொழிலாளர்கள் கருத்தங்கில் தொழிலாளர்கள் வாதிட்டனர். முதலாளி வர்க்கம் மற்றும் மத்திய அரசாங்கத்தின் பிரதிநிதிகள், கருத்தரங்க விவாதத்தின் போது இந்த நியாயமான கோரிக்கையை நிராகரித்துவிட்டனர். இதற்கு பதிலாக, குறைந்தபட்ச ஓய்வூதியமானது மாதத்திற்கு ரூ 1000-மாக இருக்க வேண்டுமென பிரதமர் அறிவித்துள்ளார். இந்த அற்பமான சிறிய தொகையின் வாங்கும் சக்தி காலப்போக்கில் மேலும் சுருங்கும்.

இந்தச் சீர்திருத்தங்களுக்குக் கடுமையான எதிர்ப்பு இருக்கும் இந்தச் சூழ்நிலையில் ஓய்வூதிய நிதி முறைப்படுத்துதல் மற்றும் வளர்ச்சி ஆணைய மசோதா பல ஆண்டுகளாக முடக்கி வைக்கப்பட்டிருந்தது. ஓய்வூதிய நிதி முறைப்படுத்துதல் மற்றும் வளர்ச்சி ஆணைய மசோதாவின் வரைவு 2003-இல் அமலாக்கப்பட்டது. இதனை சட்டபூர்வமாக ஆக்குவதற்காக ஒரு மசோதாவானது 2005-இல் கொண்டுவரப்பட்டது. பரந்துபட்ட மக்களுடைய எதிர்ப்பு காரணமாக அது நிறைவேற்றப்படவில்லை. முந்தைய பாராளுமன்றத்தின் காலம் முடிவடைந்த போது, இந்த மசோதாவும் காலாவதியானது. 2011 மார்ச்சில் ஒரு புதிய மசோதா பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. பாராளுமன்ற நிலைக் குழு சில மாற்றங்களோடு இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தது. நிலைக் குழு தன்னுடைய அறிக்கையை ஆகஸ்டு 2011-இல் கொடுத்தது. திருத்தங்களோடு, மசோதாவிற்கு அமைச்சர் குழு அக்டோபர் 2012-இல் ஒப்புதல் வழங்கியது.

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளி வர்க்கத்தின் பிற பிரிவினரின் ஓய்வூதிய சந்தாக்களை, புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற்றி ஏப்ரல் 2008-இல் ஏற்கெனவே தனியார்மயப்படுத்தியிருக்கிறது. இது, ஓய்வூதிய நிதி முறைப்படுத்துதல் மற்றும் வளர்ச்சி ஆணைய மசோதா ஏற்றுக் கொள்ளப்படும் போது சட்டரீதியாக்கப்படும். இது ஓய்வூதிய மேலாண்மையை இந்திய மற்றும் அயல்நாட்டு நிதி முதலாளிகளுக்கு கொடுத்து விடுவதையும், கோடிக்கணக்கான தொழிலாளர்களின் எதிர்கால நலன்களை யூகங்களுக்கு விட்டுக் கொடுக்கும் முயற்சியையும் முறைப்படுத்திவிடும்.

ஓய்வூதியத் திட்டம் மற்றும் அதன் மேலாண்மை சீர்திருத்தங்களுக்கு பின்னால் உள்ளது என்ன?

பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்வதற்கும், யூகங்களில் ஈடுபடுவதற்கும் நிதி முதலாளிகளுக்கு மிகப் பெரிய அளவில் நிதிகள் கிடைக்கும் என்ற அடிப்படையில் ஓய்வூதிய சீர்திருத்தங்களை முதலாளி வர்க்கம் பார்க்கிறது. அதே நேரத்தில், உழைக்கும் மக்களுக்கு ஓய்வூதியத்திற்கு உத்திரவாதமளிப்பதில் அரசின் பொறுப்பை அது தட்டிக் கழிக்க விரும்புகிறது. இதற்கு நேரெதிராக உழைக்கும் மக்களுடைய கோரிக்கையோ, ஒரு முறையான ஓய்வூதிய திட்டத்தை அரசு பணியாளர்களுக்கு மட்டுமின்றி பெரும்பான்மையான மக்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்பதாகும். ஓய்வூதியத்தை, இலாபத்திற்கான ஒரு வழியாகவும் அரசாங்கத்தின் நிதி பொறுப்பைப் குறைப்பதற்கான ஒரு வழியாகவும் காண்பதற்கு பதிலாக, புதிய ஓய்வூதிய திட்டமோ அல்லது வேறு எந்த திட்டமோ மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டிற்கான வரம்பை 49 % மாக உயர்த்தியிருப்பதும், அதை ஓய்வூதிய துறைக்கும் விரிவுபடுத்தியிருப்பதும், இந்தத் துறைகளைத் தனியார்மயமாக்கும் ஒட்டுமொத்தத் திட்டத்தின் அங்கங்கள் ஆகும். செயல் திறனை உயர்த்துவது என்ற பெயரிலும், புதிய ஓய்வூதிய திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவது என்ற பெயரிலும், இந்திய மற்றும் அயல்நாட்டு தனியார் மூலதனத்தை வரவேற்று வருகின்றனர். ஓய்வூதிய நிதிகளை தனியார்மயப்படுத்துவதையும், அந்நிய நேரடி மூலதனத்தை அதிகம் கொண்டு வருவதையும், ஓய்வூதியம் பெறுபவர்கள் அவர்கள் போட்ட சந்தாவைக் காட்டிலும் அதிகமாகத் திரும்பப் பெறுவார்கள் என்ற பெயரில் நெருக்கித் தள்ளப்படுகிறது. தங்களுடைய எதிர்கால பயன்களுக்கான முதலீடுகளை நிதிச் சந்தைகளில் உள்ள பல்வேறு நிதி ஆதாரங்களில் முதலீடு செய்ய அனுமதிப்பதன் மூலம், அவர்களுக்கு அதிக இலாபம் கிடைக்கலாம். ஆனால் இதில் மறைக்கப்படுவது என்னவென்றால், நிதி சந்தைகளில் முதலீடு செய்வதானது, மிகவும் ஆபத்தானது என்பதும், உழைக்கும் மக்கள் மிகவும் கவனத்தோடு சேமித்து எல்லாவற்றையுமே இழக்க நேரிடலாம் என்பதும் ஆகும்.

முதலாளி வர்க்கத்தின் சீர்திருத்தங்கள், தொழிலாளி வர்க்கத்திற்கும், மக்களுக்கும் நன்மை பயக்குமென அவர்கள் கூறும் வாக்குறுதிகளெல்லாம் பெரிய மோசடி..ஏமாற்று என்பது தன்னுடைய சொந்த அனுபவத்திலிருந்தே தொழிலாளி வர்க்கத்திற்கு தெரியும். நமக்கு இது பற்றி எந்த மாயையும் இருக்கக் கூடாது. பணவீக்கத்திலிருந்து பாதுகாக்கப்பட்ட ஓய்வூதியம் உட்பட, உத்திரவாதமான ஓய்வுகால பயன்களை அனைவருடைய உரிமையாகப் பெறுவதற்கான ஒரே வழி, வர்க்கம் விட்டுக் கொடுக்காமல் போராடுவதாகும்.

Pin It