இப்போதைய ஆந்திரபிரதேச மாநிலத்திலுள்ள தெலுங்கானா பகுதியை ஒரு தனி மாநிலமாக அறிவிக்க வேண்டுமென்ற கோரிக்கையை ஐமுகூ ஒருங்கிணைப்புக் குழு ஒருமனதாக சூலை 30, 2013 அன்று ஏற்றுக் கொண்டது. இதைத் தொடர்ந்து, காங்கிரசு செயற் குழு, "இந்திய அரசியல் சட்ட வழிமுறைப்படி, தெலுங்கானாவை ஒரு தனி மாநிலமாக உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு" மத்திய அரசைக் கேட்டு, ஒரு மனதாக தீர்மானத்தை நிறைவேற்றியது.

தெலுங்கானா மாநிலத்தை உருவாக்குவதென்ற ஐமுகூ-யின் முடிவு அறிவிக்கப்பட்டவுடன், எதிர்பார்த்தவாரே அதன் பிரதிபலிப்பு இருந்தது. மாநிலத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டுமென்ற இந்த முடிவுக்கு ஆந்திரப் பிரதேச கடற்கரை ஆந்திராவிலும், ராயல்சீமா பகுதியிலும் உள்ள எம்.பி.க்களும், அமைச்சர்களும் எம்.எல்.ஏ.க்களும் கட்சிகளைக் கடந்த அளவில் தங்களுடைய எதிர்ப்பை வெளிபடுத்தியிருக்கிறார்கள். இதற்கிடையே மேற்கு வங்காளத்தில் உள்ள டார்ஜிலிங், அசாமில் உள்ள போடோ, கார்பி பகுதிகளிலும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தனி மாநிலம் கேட்டு வெகுகாலமாக நடைபெற்றுவரும் ஆர்பாட்டங்கள் மீண்டும் எழுந்துள்ளன. மராட்டிய மாநிலத்திலிருந்து விதர்பாவை தனி மாநிலமாக உருவாக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையும் தற்போதைய உத்திரபிரதேச மாநிலத்திலிருந்து நான்கு மாநிலங்கள் உருவாக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையும் சில அரசியல் கட்சிகளிடமிருந்து ஆதரவைப் பெற்றிருக்கிறது. இந்தப் புதிய மாநிலங்கள் உருவாக்கப்படக் கூடாதென பிற அரசியல் கட்சிகள் எதிர்த்து வருகின்றன.

இந்த நிகழ்வுகளிலிருந்து இரண்டைத் தெளிவாகக் காணலாம். முதலாவதாக, 1950-இல் உருவாக்கப்பட்ட இன்றைய ஒன்றியத்தில், 63 ஆண்டுகள் கடந்த பின்னரும், தேசியப் பிரச்சனையானது தீர்க்கப்படாத பிரச்சனையாக இருந்து வருகிறது. அது மோசமடைந்து வருகிறது. இந்தியாவிலுள்ள பல்வேறு தேசங்களும் மக்களும், இன்றைய இந்திய ஒன்றியத்தின் வரையறைக்குள் அவர்களுடைய தேசிய விருப்பங்கள் நசுக்கப்படுவதாக உணர்கிறார்கள். இரண்டாவதாக, ஒரு குறிப்பிட்ட மாநிலம் உருவாக்கப்படுவதற்கு ஆதரவாகவோ எதிராகவோ இருப்பதாக ஆளும் வர்க்கத்தினுடைய அரசியல் கட்சிகள், கூறிக் கொண்டாலும், இந்திய ஒன்றியத்தை ஒரு கொள்கை அடிப்படையில் திருத்தியமைக்கின்ற கேள்வியை எடுத்துக் கொள்வதற்கு அவர்கள் விரும்பவில்லை. மாறாக, இந்தப் பிரச்சனை பற்றிய நிலைப்பாட்டிற்கு பின்னணியில், அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் முதலாளி வர்க்கப் பிரிவின் நலன்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகின்றன.

தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து சக்திவாய்ந்த ஆர்பாட்டங்கள் 1960-களில் எழுந்த காலத்திலிருந்து, அதைத் தொடர்ந்து தடுத்து வந்த காங்கிரசு கட்சி தற்போது தெலுங்கானாவிற்கு தன்னுடைய ஆதரவை அறிவித்திருப்பதற்குக் காரணம் வருகின்ற பாராளுமன்றத் தேர்தல்களின் இலாபம் கருதியே என்பது வெட்டவெளிச்சமாகும்.

காங்கிரசு கட்சி தன்னுடைய 2009 தேர்தல் அறிக்கையில் ஒரு தனி தெலுங்கானா மாநில கோரிக்கையை ஆதரித்ததை நாம் நினைவு கூறலாம். டிசம்பர் 2009-இல் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி டிஆர்எஸ் இன் தலைவர் திரு.கே.சந்திரசேகர் ராவ் காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்த பின்னணியில் தெலுங்கானாவைப் பற்றி உணர்வுகள் தூண்டப்பட்டிருந்த நிலையில், அப்போதைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், ஒரு தனி மாநிலத்திற்கான வழிமுறையின் துவக்கத்தை அளிவித்தார். இந்த அறிப்பைத் தொடர்ந்து, ஆந்திரப் பிரதேசத்தின் கடற்கரைப் பகுதிகளிலும், ராயல்சீமா பகுதிகளிலும் வன்முறை கிளர்ச்சிகள் எழுந்தன. இதற்கு முடிவுகட்ட, பிப்ரவரி 2010-இல் பிரச்சனைக்கு பல்வேறு தீர்வுகளை பிரிந்துரைக்க திரு.கிருஷ்ணா குழுவை அரசாங்கம் நியமித்தது. இக் குழுவின் அறிக்கையை, தனி தெலுங்கானாவின் ஆதரவாளர்கள் எதிர்த்ததால், அறிக்கை கடந்த 3 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது.

இன்றைய இந்திய ஒன்றியம் தேசிய உரிமைகளை மறுக்கிறது

இந்தியா ஒரு பல் தேசிய நாடு என்பதை இந்திய அரசியல் சட்டம் மறுக்கிறது. அது இந்தியாவில் தேசங்கள், தேசிய இனங்கள் மற்றும் மக்கள் இருக்கிறார்கள் என்பதையே மறுக்கிறது. இந்தியாவில் உள்ள தேசங்கள், தேசிய இனங்கள் மற்றும் மக்களுடைய தேசிய உரிமைகளை இது மறுக்கிறது.

இந்தப் பின்னணியில், தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த மக்களுடைய தனி மாநில கோரிக்கையை நாம் அணுகவும், புரிந்து கொள்ளவும் வேண்டும்.

நிசாம் ஆண்டுவந்த ஐதராபாத் அரசின் ஒரு பகுதியான தெலுங்கானாவில் நிலபிரபுத்துவத்திற்கு எதிராகவும், காலனியத்திற்கு எதிராகவும் நடைபெற்ற போராட்டத்திற்கு கம்யூனிச புரட்சியாளர்கள் தலைமை தாங்கினர். ஆங்கிலேய காலனிய ஆட்சிக்கு எதிராக 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் நமது நாட்டில் நடைபெற்ற போராட்டத்தில், மிகவும் புரட்சிகரமானவர்களாக கம்யூனிஸ்டுகள் பங்கேற்றனர். இந்தப் போராட்டத்தினூடே, நாற்பதுகளில், இப்பகுதியிலிருந்த புரட்சிகர போராளிகள் கிராம குழுக்களை உருவாக்கினர். இவற்றின் மூலம், நிசாமின் நிலபிரபுத்துவ சர்வாதிகாரத்தை எதிர்த்து ஆட்சி நடத்தினர்.

1947-இல் காலனிய ஆட்சி முடிவுக்கு வந்தபோது, இந்த நிலபிரபுத்துவ எதிர்ப்பு, காலனிய எதிர்ப்புப் போராட்டமானது நல்ல முடிவுக்குக் கொண்டு வரப்படவில்லை. காங்கிரசு கட்சியின் தலைவர்களால் பிரதிநிதித்துவப்பட்ட பெரு முதலாளிகளும் பெரு நில உடமையாளர்களும், அரசு அதிகாரத்தின் காலனிய அடித்தளங்களை நீடிக்க முடிவெடுத்தனர். தங்களுடைய எதிர்காலத்தைத் தாங்களே தீர்மானிப்பவர்களாக ஆக வேண்டுமென்ற நமது நாட்டு மக்களுடைய எண்ணம் நிறைவேறவில்லை.

1947-இல் நிறுவப்பட்ட அரசு அதிகாரமும், பின்னர் 1950-இல் அது சட்டரீதியாக ஆக்கப்பட்டதும், நம்முடைய மக்களுடைய விருப்பங்களுக்கு இழைக்கப்பட்ட துரோகமாகும். இந்தியக் குடியரசு, காலனிய பாரம்பரியத்தை தொடர்வதாக இருந்தது. இந்திய சமுதாயமாக இருக்கும், தேசங்கள் மற்றும் மக்கள் இருப்பதையோ, அவர்களுடைய உரிமைகளையோ அரசியல் சட்டம் அங்கீகரிக்க மறுக்கிறது. காலனிய ஆக்கிரமிப்பின் மூலமும், தேசங்கள் மற்றும் மக்களுடைய உரிமைகளை நசுக்குவதன் மூலமும் கைப்பற்றப்பட்ட பிராந்தியங்களை இந்திய ஒன்றியத்தின் பிரதேசமாக அது சட்டரீதியாக்கியது. பெருமுதலாளிகளின் கட்சிகள் ஆதிக்கம் செலுத்தும் மத்திய பாராளுமன்றத்திற்கு புதிய மாநிலங்களை உருவாக்குவதற்கான தனிப்பட்ட அதிகாரத்தை அது அளித்திருக்கிறது. ஒன்றியத்தின் ஒட்டுமொத்தமான நிலப்பரப்பைக் கட்டிக் காத்து வரும்வரை, மத்திய பாராளுமன்றம் பழைய மாநிலங்களை அழிக்கவும், அவற்றை எந்த வகையிலும் திருத்தியமைக்கவும் முடியும். மத்திய பாராளுமன்றத்தின் உச்ச நிலையை ஏற்றுக் கொள்ளாத எந்த இயக்கமும், "இந்தியாவின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும்" ஒரு அச்சுறுத்தலாக குறிவைக்கப்படும்.

சுதந்திரத்திற்குப் பின்னர், நேரு அரசாங்கம் மேற்கொண்ட முதல் அரசியல் நடவடிக்கைகளில் ஒன்று, ஐதிராபாத் அரசில் நடைபெற்றுவந்த பொது மக்களுடைய இயக்கத்தை நசுக்கியதாகும். இராணுவம் அங்கு அனுப்பப்பட்டது. போராடுகின்ற விவசாயிகளையும், கம்யூனிச புரட்சியாளர்களையும், காட்டுமிராண்டித்தனமாக ஒடுக்குவதன் மூலமும், முஸ்லீம் மக்களைப் படுகொலை செய்வதன் மூலமும் இந்த அரசானது, வலுக்கட்டாயமாக இந்திய ஒன்றியத்தில் 1948-இல் இணைக்கப்பட்டது.

1947-50 க்கு இடையில், அரசர்களால் ஆளப்பட்டு வந்த நாடுகள் Princely states, அரசியல் ஏமாற்றுக்கள் மூலமாகவும், சதிகள் மூலமாகவும், வன்முறையின் மூலமாகவும், இந்திய ஒன்றியத்தில் இணைக்கப்பட்டன. பின்னர் மொழிவாரியாக மாநிலங்கள் மாற்றியமைக்கப்பட்டபோது, பல்வேறு தேசங்கள் மற்றும் மக்களுடைய உரிமைகள் காலில் போட்டு நசுக்கப்பட்டு, சில பகுதிளில் மனம்போனவாறு பிளவுகளும், மற்றும் சில இடங்களில் செயற்கையான இணைப்புக்களும் உருவாக்கப்பட்டன. ஆங்கிலேய காலனியவாதிகள் உருவாக்கிய காயங்கள் மேலும் அழுக விடப்பட்டன. அதே நேரத்தில் புதிய காயங்கள் உருவாக்கப்பட்டன. எடுத்துக் காட்டாக, பஞ்சாப் மாநிலமானது, 1947 நாடு பிரிக்கப்பட்டபோது, வகுப்புவாத குருதி வெள்ளத்தில் முதலில் பிளவுபடுத்தப்பட்டது. பின்னர் அது மொழி அடிப்படையில் இந்திய அரசால் மீண்டும் பிரிக்கப்பட்டது.

அரசியல் சுதந்திரத்திற்குப் பின்னர் வந்த முதல் பத்தாண்டுகளில் பெருமுதலாளிகளும், அவர்களுடைய காங்கிரசு கட்சியும் தேசிய உணர்களைச் சூழ்ச்சியாகக் கையாண்டதன் காரணமாக முதலில் பலியானவர்கள் தெலுங்கானாவின் வீரஞ் செறிந்த மக்களாவர். மக்கள் அதிகாரத்தின் ஒரு வடிவமாகத் தோன்றிக் கொண்டிருந்த கிராமப்புற குழுக்கள் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டன. 1956-இல்

1. பழைய மன்னராட்சியான ஐதிராபாதிலிருந்து தெலூங்கானா பகுதியையும்,

2. முந்தைய மதராஸ் மாகாணத்திலிருந்த கடற்கரை ஆந்திரப் பகுதியையும்,

3. மதராஸ் மாகாணத்திலிருந்த ராயல்சீமா பகுதியையும் இணைத்து ஆந்திரப் பிரதேசம் என்ற புதிய மாநிலம் அமைக்கப்பட்டது. தெலுங்கு பேசும் எல்லா மக்களையும் கொண்டதாக இப் புதிய மாநிலம் உருவாக்கப்பட்டது, பாதிக்கப்பட்டவர்களுடைய எந்த உரிமையையும் அங்கீகரிக்காமல் மத்திய பாராளுமன்றத்தின் தீர்மானத்தின் மூலமாக மேலிருந்து திணிக்கப்பட்டதாகும். மக்கள் அதிகாரம் பெறுவதற்காக, தெலுங்கானாவில் நடைபெற்றுவந்த பொது மக்களுடைய இயக்கம் அழிக்கப்பட்டது. அதிகாரமானது, காங்கிசு கட்சி ஆதிக்கம் செலுத்தும் மாநில சட்ட மன்றத்தில் குவிக்கப்பட்டது பின்னர் பிராந்திய முதலாளித்துவ கட்சிகளும் இதில் ஆதிக்கம் செலுத்தத் துவங்கின.

ஆந்திரப்பிரதேசம் உருவாக்கப்பட்டதிலிருந்தே, தெலுங்கானாவைத் தனி மாநிலமாக்க வேண்டும் என்பதற்காக பெருமளவில் ஆர்பாட்டங்கள் மீண்டும் மீண்டும் நடைபெற்று வந்திருக்கின்றன. இது பழைய காயங்கள் தீர்க்கப்படவில்லை என்பதைக் காட்டுகிறது. கடந்த 3 ஆண்டுகளிம் மட்டும், இந்தப் போராட்டங்களில் தீக்குளித்தவர்கள் உட்பட, 1000-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. மையத்தில் அதிகாரத்திற்கு அடுத்தடுத்து வந்த கட்சிகளும் கூட்டணிகளும், இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்கு பதிலாக, தெலுங்கானா ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுவந்த பல்வேறு தலைவர்களையும், தங்களோடு சேர்த்துக் கொள்வதிலும், இந்தப் பகுதிக்கு அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளும் சிறப்பு திட்டங்களை அளிப்பதிலும் வேலை செய்தனர்.

இன்று தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த ஐதராபாத் நகர் மீதும் அதன் விலை உயர்ந்த நிலத்தின் மீதும் பெரு முதலாளிகளுக்கு இடையே முரண்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. ஐதராபாதிலிருந்து வந்து கொண்டிருக்கும், மேலும் வர இருக்கும் இலாபத்தினால் பயனடைந்து கொண்டிருக்கும் முதலாளித்துவக் குழுக்கள், தற்போதைய அரசியல் ஏற்பாட்டைத் கட்டிக் காக்க விரும்புகின்றனர். தங்களுடைய எதிராளிகளுடைய நிலையை பலவீனப்படுத்துவதன் மூலம் தங்களுடைய வாய்ப்பை விரிவுபடுத்த விரும்பும் முதலாளித்துவ குழுக்கள் தனி மாநிலத்திற்கான கோரிக்கையை சூழ்ச்சியாகக் கையாள்வதன் மூலம் ஐதராபாத்தை தங்களுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரும் குறுகிய நோக்கத்தை அடைவதற்கான கருவியாகப் பயன்படுத்த விரும்புகிறார்கள் இந்தச் சண்டையிடும் முதலாளித்துவ குழுக்களுடைய நலன்களே, காங்கிரசு கட்சி உட்பட ஆந்திர பிரதேசத்திலுள்ள எல்லா ஆளும் வர்க்கக் கட்சிகளுடைய தெலுங்கானாவிற்கு ஆதரவாகவும் எதிராகவும் நிலைப்பாடுகளைக் கட்டாயப்படுத்துகின்றன.

ஐதராபாத் பற்றிய பிரச்சனையை மட்டுமின்றி, ஆந்திரப் பிரதேசம் பிரிக்கப்பட்ட பின்னர் நதி நீர், மின்சாரம் எப்படி பிரிக்கப்படும் என்ற கேள்வியையும், அங்குள்ள அரசியல் சக்திகள் எழுப்பி வருகின்றன. இப்படிப்பட்ட சச்சரவுகளை ஆளும் வர்க்கங்கள் ஒரு கொள்கை அடிப்படையிலான முறையில் எப்போதுமே தீர்வு கண்டதில்லை என்பதற்கு பஞ்சாப் பிரிக்கப்பட்டதும், உத்திரப் பிரதேசம் பிரிக்கப்பட்டது போன்ற மாநிலங்களை உருவாக்கும் கடந்தகால எடுத்துக்காட்டுக்களும், 1950-களில் மொழிவாரி அடிப்படையில் மாநிலங்கள் திருத்தியமைக்கப்பட்டதில் தீர்க்கப்படாமல் இருக்கும் சச்சரவுகளும் தெளிவாகக் காட்டுகின்றன. மாறாக, அவ்வப்போது அரசியல் தேவைகளுக்கு ஏற்ப மத்திய அரசு இப்போது ஒருவருக்கும் பின்னர் மற்றொருவருக்கும் சாதகமாக நடந்து இந்த சச்சரவுகள் மேலும் அழுகி நாற்றமெடுக்க அனுமதிக்கப்படுகிறது.

இன்று நிலவும் இந்திய ஒன்றியம், டாட்டா, அம்பானி, பிர்லா மற்றும் பிற ஏகபோக குடும்பங்கள் தலைமை தாங்கும் முதலாளி வர்க்கம் நமது சமுதாயத்தின் மீது தன்னுடைய சர்வாதிகாரத்தை நடத்துவதற்கான கருவியாகும். நமது நாட்டிலுள்ள அனைத்து தேசங்கள் மற்றும் மக்களுக்கு இது ஒரு சிறைக்கூடமாக இருந்து வருகிறது. நாகர்கள் அல்லது மெய்திகளாக இருந்தாலும், அசாமியர்கள் அல்லது போடோக்களாக இருந்தாலும், தெலுங்கானா, கடற்கரை ஆந்திரப்பிரதேசம், அல்லது ராயல்சீமாவாக இருந்தாலும், நமது நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் இறையாண்மை மறுக்கப்படுகிறது. இணையாண்மை எனப்படும் உயர்மட்ட தீர்மானிக்கும் அதிகாரம் முதலாளிகள் மற்றும் அவர்களுடைய கட்சிகளுடைய கைகளில் மட்டும் இருக்கிறது. அது அரசு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இந்த நிலைமை, தெலுங்கானா என்ற புதிய மாநிலம் உருவாக்கப்படுவதன் மூலம் மாறப் போவதில்லை. 2000-இல் உருவாக்கப்பட்ட உத்திராகாண்டு, சார்கண்டு மற்றும் சத்தீசுகர் மாநில மக்களுடைய அனுபவம் இதை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது. இந்த மாநில மக்களுடைய இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பதன் மூலம், மிகப் பெரிய முதலாளித்துவ குடும்பங்கள் தான் பயனடைந்திருக்கின்றன. இந்த மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் பிற உழைக்கும் மக்களுடைய விருப்பங்கள் கொடூரமாக காலில் போட்டு நசுக்கப்பட்டு வருகின்றன.

தெலுங்கானா பிரச்சனைக்கும், ஒவ்வொரு சுய நிர்ணய உரிமைக்கான தேசிய இயக்கத்தினுடைய பிரச்சனைகளுக்கும் தீர்வு, இந்திய மறுமலர்ச்சியாகும். மறுமலர்ச்சி என்றால், காலனிய பாரம்பரியத்திற்கு முடிவு கட்டிவிட்டு, ஒரு புதிய தன்னார்வ அடிப்படையில் அமைந்த தொழிலாளர்கள், விவசாயிகளுடைய குடியரசுகளின் மூலம் இன்று நிலவும் இந்திய ஒன்றியத்தை மாற்றியமைப்பதாகும். ஒப்புக் கொள்ளும் மக்களெல்லாம் ஒன்றிணைந்து, பங்கேற்கும் ஒவ்வொரு மக்களுக்கும் அவர்களுடைய எதிர்காலத்தை அவர்களே தீர்மானிக்கும் உரிமைக்கு உத்திரவாதமளிக்கும் ஒரு புதிய அரசியல் சட்டத்தை ஏற்றுக் கொள்வார்கள் என்று பொருள். திருத்தியமைக்கப்பட்ட ஒன்றியம், வெவ்வேறுபட்ட மக்களுடைய நலன்களை சுமுகப்படுத்தி, அனைவருடைய நலனுக்கும் வழிவகுக்கும். ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும், எல்லா வடிவங்களிலும் தேசிய மற்றும் தனிப்பட்ட உரிமைகள் மீறப்படுவதை எதிர்த்தும், இத்துணைக் கண்டத்திலுள்ள மக்களிடையே ஒற்றுமையை அது கட்டி வளர்க்கும்.

இந்தியாவில் மறுமலர்ச்சியை உருவாக்க, நம்முடைய மக்கள் தொகையில் பெரும்பான்மையாக இருக்கும் தொழிலாளர்களும், விவசாயிகளும் தொழிலாளர்களுடைய தலைமையில் அரசியல் அதிகாரத்தைத் தங்களுடைய கைகளில் எடுத்துக் கொள்ள வேண்டும். அவர்கள், அதிகபட்ச முதலாளித்துவக் கொள்ளை என்றிருக்கும் பொருளாதாரப் போக்கை மாற்றி, அனைவருக்கும் வளமையையும். பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதாக அமைப்பார்கள். அது மட்டுமே, நமது நாட்டிலுள்ள தேசங்கள் மற்றும் மக்களுடைய தேசிய ஒடுக்குமுறைக்கு முடிவு கட்டும்.

Pin It