“கூலியும் விலைவாசியும்” என்னும் தலைப்பில் “தொழிலாளர் போராட்டம்” இதழ், ஒரு கலந்துரையாடல் கூட்டத்தை சென்னையில் செப்டெம்பர் மாத இறுதியில் ஏற்பாடு செய்து நடத்தினர். இக்கூட்டத்தில், பல்வேறு தொழிலாளர்களும், மாணவர்களும், தொழிலாளர் ஒற்றுமை இயக்கம், மக்களாட்சி இயக்கம், இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி மற்றும் பல்வேறு தொழிற் சங்கப் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். தோல் மற்றும் தோல் பொருட்கள் சனநாயகத் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் தோழர் சுகுந்தன் கூட்டத்திற்கு தலைமை வகித்து நடத்தினார். இக்கூட்டத்தில், கூலி அல்லது ஊதியம் இன்றைய முதலாளித்துவ உற்பத்தி முறையில் எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது என்பதும் நியாயமான ஊதியம் என்பது எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

தோழர் சுகுந்தன், நிலவுடமை சமுதாயத்திலிருந்து இன்று முதலாளித்துவ சமுதாயம் தோன்றிய வரலாற்றையும் அத்தோடு உற்பத்தி முறையில் ஏற்பட்ட மாபெரும் மாற்றங்களையும், தொழிலாளர்களுடைய வாழ்வாதார மாற்றங்களையும் விவரித்தார். முதலாளித்துவ சமுதாயம் தொழிலாளர்களுடைய உழைப்பு சக்தியைக் கடுமையாக சுரண்டி தங்களுடைய இலாபத்தைப் பெருக்கி வருவதையும், தொழிலாளர்களுடைய அடிப்படை உரிமைகளும் மனித உரிமைகளும் மறுக்கப்படுவதையும் எடுத்து விளக்கினார். அரசின் அரசியல் சட்டத்தில் தொழிலாளர்களின் தேவைகள் குறித்தும், ஊதியத்தைத் தீர்மானிக்க எடுத்துக் கொள்ள வேண்டிய காரணிகள் குறித்தும் விரிவாகக் கூறப்பட்டிருந்துங்கூட, நடைமுறையில் இந்த வழிமுறைகள் புறக்கணிக்கப்படுகின்றன. இன்றைய குறைந்த பட்ச ஊதியம் தொழிலாளர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யாமல் இருப்பதோடு, இந்த குறைந்த பட்ச ஊதியம் கூட பெரும்பாலான நமது தொழிலாளர்களுக்கு எட்டாக்கனியாக இருந்து வருகிறது. மேலும் குறைந்த பட்ச ஊதியம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் விலைவாசிக்கு ஏற்ப உயர்த்தப்படாமல் உண்மை ஊதியம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் தொழிலாளர்கள் கூலியின் முழு பரிமாணத்தைப் புரிந்து கொள்ளவும், அதைப் பெறுவதற்கான தங்கள் முயற்சியைத் தீவிரப்படுத்தவும் வேண்டியத் தேவையை அவர் சுட்டிக்காட்டினார். இது பற்றிய கருத்துக்களை பங்கேற்ற அனைவரும் விவாதித்தனர்.

பங்கேற்றவர்கள், முதலாளித்துவ சமுதாயத்தில் எப்படித் தொழிலாளர்கள் கடுமையாகச் சுரண்டப்படுகிறார்கள் என்பது குறித்தும், அரசும் அரசின் நிறுவனங்களான நீதி மன்றங்கள், காவல்துறை, நிர்வாகம் போன்றவை முதலாளிகளுக்கு ஆதரவாகவும், தொழிலாளர்களுக்கு எதிராகவும் செயல்பட்டு வருவது குறித்தும் எடுத்துரைத்தனர்.

நியாயமான ஊதியம் எப்படி இருக்க வேண்டுமென தோழர் சுகுந்தன் எழுப்பிய கேள்விக்கு கலந்துரையாடலில் பங்கேற்ற பலரும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தனர். பரவலான கருத்தானது, தொழிலாளர்களுடைய ஊதியம், இந்தச் சமுதாயத்தில் மதிப்போடு வாழவும், தன்னையும் தன் குடும்பத்தினரையும் நன்கு பராமரிக்கவும், அவர்களுடைய உணவு, உறைவிடம், கல்வி, சுகாதாரம், எதிர்காலத் தேவைகள், குடும்ப மற்றும் சமூக விழாக்களில் பங்கேற்றல், எதிர்கால காப்பீடு போன்ற அனைத்து அடிப்படைத் தேவைகளையும் சந்திக்கக் கூடிய வகையில் இருக்க வேண்டும். மேலும் அது நாளுக்கு நாள் பெருகி வருகின்ற பொருளாதார, பண்பாட்டு, பொழுது போக்குத் தேவைகளையும் நிறைவேற்றுவதாக இருக்க வேண்டும். உயர்ந்துவரும் விலைவாசிக்கு ஏற்ப, ஊதியமானது ஈடுகொடுப்பதாக தொடர்ந்து மாற்றயமைக்கப்பட வேண்டும் என்பன போன்ற கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

ஏஐடியுசி-யின் தோழர் பி.ஆர்.இரவீந்திரன் அவர்கள் இன்று ஒப்பந்தத் தொழிலாளர்களும், பாதுகாப்பு பணித் தொழிலாளர்களும், துப்புரவுத் தொழிலாளர்களும், பிறரும் மிகவும் குறைவான ஊதியத்தில் கடுமையாகச் சுரண்டப்படுவதையும், 10-12 மணிநேரம் வேலை செய்ய வேண்டியிருப்பதையும், அடிப்படை உரிமைகளின்றி இருப்பதையும் எடுத்துரைத்தார். இன்றைய சமூக அமைப்பு அவர்களுடைய விழிப்புணர்வை மழுங்கடித்து வைத்திருப்பதை எடுத்துக்கூறிய அவர், அதை மாற்ற நாம் முழு முயற்சி மேற்கொள்ள வேண்டிய தேவையையும் வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற கம்யூனிஸ்டு கெதர் கட்சியின் தோழர் பாஸ்கர், காரல் மார்க்சை மேற்கோள் காட்டி, இந்த முதலாளித்துவ சமுதாயத்தில் கூலி அல்லது ஊதியமானது உழைப்பு சக்திக்குக் கொடுக்கப்படுகின்ற விலையாகும் என்பதும், அது தொழிலாளி செலவழிக்கும் உழைப்பிற்கான விலையல்ல என்பதையும் எடுத்து விளக்கினார். உழைப்பின் படைப்பு சக்தியைப் பயன்படுத்துவதன் மூலம் முதலாளி, உழைப்பு சக்திக்குக் கொடுக்கப்படும் விலையைக் காட்டிலும் அதிக உழைப்பை/மதிப்பை தொழிலாளர்களிடமிருந்து சுரண்டிப் பெறுவதன் மூலம் உபரி மதிப்பை இலாபமாக அடைகிறார்கள். எனவே உபரி மதிப்பில் தங்களுடைய பங்கை அதிகரிப்பதற்காக தொழிலாளர்கள் முதலாளிகளோடு கடுமையாகப் போராட வேண்டியுள்ளது. தொழிலாளர்களும் விவசாயிகளும் இன்றுள்ள முதலாளிகளுடைய அரசைத் தூக்கி எறிந்துவிட்டு நாட்டின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றி, உழைப்பாளர்களுடைய ஆட்சியை நிறுவுவதன் மூலம் சுரண்டலுக்கு முடிவு கட்ட வேண்டும். அதன் மூலம் தொழிலாளிகள் தங்களுடைய கடுமையான உழைப்பு உருவாக்கும் உபரி மதிப்பைத் தொழிலாளி வர்க்கமே கைப்பற்றி தங்களுக்காகப் பயன்படுத்த இயலும் என்பதை எடுத்துக் கூறினார்.

குறைந்த பட்ச ஊதியமாக ரூ 10,000 இருக்க வேண்டுமென்ற கோரிக்கையோடு, இந்த குறைந்த பட்ச ஊதியமானது அரசாங்கம் தீர்மானிக்கும் அரசு ஊழியர்களுடைய ஊதியத்திற்கு சமமானதாக இருக்க வேண்டுமென தொழிலாளிகள் கோரிக்கை எழுப்ப வேண்டும் என குளோபல் மருத்துவமனை வார்டு அசிஸ்டெண்டு தொழிற் சங்கத்தின் தலைவர் தோழர் மாந்தைநேயன் வலியுறுத்தினார். இருசாராருடைய கோரிக்கைகளை ஒருமுகப்படுத்துவதன் மூலம், உழைக்கும் மக்களுடைய போராட்ட ஒற்றுமையை வலுப்படுத்த வழிவகுக்கும்.

கூட்டத்தைத் தொகுத்துரைத்த தோழர் சுகுந்தன், நியாயமான ஊதியத்திற்கான போராட்டமானது எல்லாத் துறைகளிலும், நிறுவனங்களிலும் தீவிரப்படுத்தப்பட வேண்டுமெனவும், அது உபரி மதிப்பை தொழிலாளர்கள் கைப்பற்றுவதற்கான போராட்டமாகுமெனவும் கூறினார்.

நிறைவாக உரையாற்றிய “தொழிலாளர் போராட்டம்” இதழினுடைய ஆசிரியர் - தோழர் குழல், “கூலியும் விலைவாசியும்” என்ற இந்தக் கூட்டமானது மிகவும் பயனுள்ளதாக இருந்ததைக் குறிப்பிட்டார். தொழிலாளி வர்க்க அரசியலில் ஈடுபட்டுள்ள பல அமைப்புகள் இப்படிப்பட்ட கூட்டங்களை நடத்த முன்வராத சூழ்நிலையில் நாம் நடத்தியிருப்பது மிகவும் பெருமைக்குறியதென அவர் கூறினார்.

கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்தோடும், கருத்துக்களை அறிந்து கொள்ளும் உற்சாகத்தோடும், தொழிலாளர்களுடைய பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் நோக்கத்தோடும் பங்கேற்றனர். விவாதித்தக் கருத்துக்களை தொழிலாளர்களிடையே கொண்டு செல்ல வேண்டுமென்றும் கூறினர். கூலியைப் பற்றியும், தொழிலாளர்களுடைய பிற உரிமைகள் குறித்தும் தொழிலாளர்களிடையே விழிப்புணர்வை உருவாக்க நாம் தொடர்ந்து வேலை செய்ய வேண்டுமென தோழர் மாந்தைநேயன் கூறினார். இதை நடத்துவதற்காக ஒரு குழு உருவாக்கப்பட்டதுடன் கூட்டம் நிறைவு பெற்றது.

தொழிலாளர்களுடைய விழிப்புணர்வை உயர்த்துவதற்காக “தொழிலாளர் போராட்டமும்”, பிற தோழர்களும் மேற்கொள்ளும் இந்த செயலூக்கத்தை “தொழிலாளர் ஒற்றுமைக் குரல்” பாராட்டி ஆதரிக்கிறது.

Pin It