வி.எச்.எஸ் மருத்துவமனை தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர். எஸ்.மணிதாசனுடன் நேர்முகம்

தொழிலாளர் ஒற்றுமை குரலின் நிருபர், வி.எச்.எஸ் மருத்துவமனை தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளராக பல்லாண்டுகளாக பணியாற்றிவரும் தோழர். எஸ்.மணிதாசனிடம் இன்றைய நிலைமைகள் குறித்து நேர்முகம் கண்டார். அதன் சாராம்சம் பின் வருமாறு.

தொழிலாளர் ஒற்றுமை குரல் (தொ.ஒ.கு) - அண்மையில் சென்னையிலும், தமிழகத்தின் பிற நகரங்களிலும் மருத்துமனையில் பணியாற்றும் செவிலியர்களும், துணை மருத்துவப் பணியாளர்களும், பிற தொழிலாளர்களும் பல்வேறு போராட்டங்களை நடத்தியிருக்கிறீர்கள். இதன் பின்னணி என்ன?

manidasan_300தோழர். மணிதாசன் - உலகெங்கிலும் உள்ள நோயாளிகளுக்கு மருத்துவம் அளிக்கும் மருத்துவ சுற்றுலாவிற்கான முக்கிய இடமாக சென்னை இருந்து வருகிறது. உலகத் தரமான மருத்துவ சேவைகளை நம்முடைய செவிலியர்களும், பிற மருத்துவப் பணியாளர்களும் நோயாளிகளுக்கு அளித்து வருகின்றனர். இவர்களுடைய உழைப்பைக் கடுமையாகச் சுரண்டுவதன் மூலம், மருத்துவமனைகளை நடத்தும் முதலாளிகளும், டிரஸ்டுகளும் மிகப் பெரிய அளவில் இலாபத்தைச் சம்பாதித்து வருகின்றனர். ஆனால் இந்த இலாபத்தை உருவாக்கிய செவிலியர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள் மற்றும் மருத்துவ மனைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் ஊதியம் பல்லாண்டுகளாக எவ்வித மாற்றமுமின்றி இருந்து வந்திருக்கிறது. தொடர்ந்து உயர்ந்துவரும் விலைவாசி காரணமாகவும், பணவீக்கத்தின் காரணமாகவும் இவர்களுடைய உண்மை ஊதியம் கடுமையாக வீழ்ச்சியடைந்து வருகிறது. இதன் காரணமாக வாழ்க்கையே நடத்த முடியாத நிலைமைக்கு இவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இத்தகைய சூழ்நிலையில் அண்மையில் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனை, எம்.எம்.எம். மருத்துவ மனை, ஃபோர்டிசு மலர் மருத்துவமனை, வி.எச்.எஸ் மருத்துவமனை, விஜயா மருத்துவமனை, உட்பட பல்வேறு மருத்துமனைகளிலும், கோவை பி.எஸ்.ஜி மருத்துவமனையிலும், தமிழகத்தின் பிற நகரங்களிலும் பணிபுரியும் செவிலியர்கள், துணைமருத்துவப் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஒன்றுபட்டும் தனித்தனியாகவும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டோம். முதலில் எங்களுடைய போராட்டத்தை நசுக்குவதற்கு முதலாளிகளும், தமிழக அரசும் முடிந்த அளவும் முயற்சி செய்தனர். தொழிலாளிகளுடைய ஒற்றுமை காரணமாக இந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. பின்னர் நிர்வாகம் இறங்கி வந்து எங்களுடைய ஒரு சில கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டனர். இந்தப் போராட்டத்தின் காரணமாக ஓரளவிற்கு ஊதிய உயர்வைப் பெற முடிந்தது.

தொ.ஒ.கு - இன்று இந்தத் துறையில் பணி புரிபவர்களுடைய பிரச்சனைகள் என்னென்ன?

தோழர். மணிதாசன் - நிர்வாகத்தின் பேராசை காரணமாக பணியாளர்களைச் சுரண்டுவதும், வேலை பளுவும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெரும்பாலான மருத்துவமனைகளில் 10-12 மணி நேரம் நாங்கள் வேலை செய்ய வேண்டியுள்ளது. இந்த கடுமையான வேலைக்கு ஒவர்டயம் ஊதியமும் அளிக்கப்படுவதில்லை. நாளுக்கு நாள் உயர்ந்துவரும் விலைவாசிக்கு ஏற்ப எங்களுடைய ஊதியம் உயராததால், வாழ்க்கைத் தரம் படிப்படியாக குறைந்து வருகிறது. பெரும்பாலான பணிகளை ஒப்பந்த முறையில் நிர்வாகம் மேற்கொண்டு வருவதால், நிரந்தரப் பணியாளர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. ஒப்பந்தப் பணியாளர்களுடைய பணி நிலைமைகள் மிக மோசமாக இருக்கின்றன. இப்படிப்பட்ட நிலைமைகளை எதிர்த்துப் போராடும் பணியாளர்களுடைய அடிப்படை தொழிற் சங்க உரிமைகளைக்கூட முதலாளிகளும், அரசாங்கமும் மறுத்து வருகிறார்கள். மருத்துவப் பணியாளர்கள் தங்களுக்கு விருப்பமான தொழிற் சங்கம் அமைக்கும் உரிமையும், கோரிக்கைகளுக்காகப் போராடும் உரிமையும் சட்ட விரோதமாக மறுக்கப்படுகிறது.

அரசாங்கத்தின் தொழிலாளர் துறை அதிகாரிகள், நிர்வாகத்தின் கையாட்களாக செயல்படுகிறார்கள். நிர்வாகம் தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்தும், பல்வேறு தாக்குதல்களை நடத்தியும் வருகையில் அரசாங்கமும், தொழிலாளர் நலத்துறையும், அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு, நீதி மன்றங்களுக்கு செல்லுமாறு தொழிலாளர்களை அறிவுறுத்தி வருகின்றனர். நீதி மன்றங்களில் தொழிலாளர்களுக்கு நீதி கிடைப்பதில்லை என்பதையும் சில சிறிய வெற்றிகளைப் பெறுவதற்குக் கூட 10-20 ஆண்டுகள் போராட வேண்டியிருப்பதையும் நன்றாகத் தெரிந்து கொண்டே அரசாங்கமும் அதிகாரிகளும் போராடும் தொழிலாளர்களையும், தொழிற் சங்கத் தலைவர்களையும் அலைக்கழிக்கிறார்கள். மொத்தத்தில் அரசாங்கமும், அரசின் தொழிலாளர் நலத் துறையும், முதலாளிகளுடைய தேவைகளை நிறைவேற்றுவதற்காக செயல்படுகிறார்கள். தொழிலாளிகளைத் தாக்குகிறார்கள். இந்த நிலைமைக்கு தொழிலாளி வர்க்கம் முடிவு கட்ட வேண்டும்.

இன்றைய தாராளமயக் கொள்கைகளும், அந்நிய நேரடி முதலீடும் மற்ற எல்லாத் தொழிலாளர்களையும் மக்களையும் பாதிப்பது போலவே, மருத்துவனை பணியாளர்களையும் கடுமையாக பாதிக்கிறது.

தொ.ஒ.கு - அந்நிய முதலீட்டை நீங்கள் ஏன் எதிர்க்கிறீர்கள்?

தோழர். மணிதாசன் - அந்நிய முதலீடு இந்திய மக்களை மேலும் சுரண்டவும், நாட்டை அடிமைப்படுத்தவும் வழிவகுக்கிறது. நமது நாட்டிலுள்ள கோடிக்கணக்கான வணிகர்களும், விவசாயிகளும் தங்களுடைய வாழ்வுரிமை இழக்க நேரும். இதனால் வணிகமானது சிறுபான்மையான ஏகபோக வர்த்தக நிறுவனங்களின் கைகளில் சேர்ந்துவிடும். விலைவாசி மேலும் கடுமையாக உயரும், மக்களின் வாழ்க்கைத் தரம் கடுமையாக பாதிக்கப்படும்.

மெட்ஆல் (Medall) போன்ற பெரிய முதலாளித்துவ நிறுவனங்கள் சிறிய மருத்துவமனைகளையும், ஆய்வுக் கூடங்களையும் சீரழித்து வருகிறது. இதன் காரணமாக நடுத்தர மற்றும் சிறிய மருத்துவ ஆய்வுக் கூடங்களில் வேலை செய்யும் எண்ணெற்ற லேப் டெக்னிசியன்கள் வேலை இழக்கும் நிலை உருவாகி வருகிறது. அது போலவே ஜிகிட்சா நிறுவனமும் (Ziqutza Healthcare Ltd) மருத்துவம் சார்ந்த பல்வேறு சேவைகளில் நுழைந்து வருகிறது. இதன் காரணமாக தனிப்பட்ட முறையில் ஆம்புலன்சு சேவைகளை வழங்கி வந்தவர்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு வருகின்றனர். இந்திய மற்றும் பன்னாட்டு மூலதனத்தின் நுழைவின் காரணமாக மருத்துவத் துறையின் பல்வேறு பணியாளர்களும், மருத்துவ சேவைகளைப் பெறுகின்ற மக்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

இந்திய மக்களைப் பற்றி சிறிதும் கவலைப் படாத காங்கிரசு, பாஜக மற்றும் இவர்களுடைய ஆதரவுக் கட்சிகள் இந்திய பெரு முதலாளிகளுக்காகவும், அந்நிய முதலாளிகளுக்காகவும் அந்நிய நேரடி மூலதனத்தைக் கொண்டு வருகிறார்கள். அன்று இந்திய சுதந்திரத்திற்காக ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய போது, சில எட்டையப்பர்கள் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக செயல்பட்டனர். இன்று இந்தக் கட்சிகள் இன்றைய எட்டைப்பர்களாக அந்நிய மூலதனத்திற்காகவும், இந்திய ஏகபோக முதலாளிகளுக்காகவும், மக்களுக்கு எதிராகச் செயல்படுகின்றனர். தனியார்மயம், தாராளமயம் மூலம் உலகமயமாக்குதல், அந்நிய நேரடி முதலீடு, தொழிலாளிகள் மற்றும் மக்களுடைய உரிமைகள் மீறல் ஆகிய சூழல், இன்று நாம் மீண்டும் ஒரு சுதந்திரப் போர் நடத்த வேண்டிய தேவையைச் சுட்டிக் காட்டுகின்றன.

இன்று அன்றாடம் நடக்கும் பல்வேறு போராட்டங்களை அடக்கி ஒடுக்கி வரும் ஆளும் வர்க்கங்களுடய செயல்களும், வெளிப்படையாகவே மக்களுக்கு எதிரான கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதும் எதைக் காட்டுகின்றன? இன்று நாட்டை ஆண்டு வருபவர்கள், பரந்துபட்ட மக்களின் நலன்களுக்காக ஆளவில்லை, மாறாக முதலாளி வர்க்கத்தின் ஏவல்களை நிறைவேற்றும் நிர்வாகிகளாக இருக்கின்றனர்.

தொ.ஒ.கு - மக்களை எதிர் கொண்டுள்ள முக்கியப் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் இன்றைய ஊடகங்கள் எவ்வித பங்காற்றுகிறார்கள்?

தோழர். மணிதாசன் - ஊடகங்கள் இன்று மிகுந்த வளர்ச்சியடைந்துள்ளது. ஆனால் பல ஊடகங்கள் சினிமா, கேளிக்கை, பொழுதுபோக்கு மற்றும் பணம் ஈட்டும் கருவியாக தான் செயல்படுகின்றன. கடந்த காலங்களில் இவை அன்றைய மக்கள் பிரச்சனைகளை பிரதிபலித்து அவர்களுக்கு ஆதரவாகவும், காலக் கண்ணாடியாகவும் செயல்பட்டிருக்கிறார்கள். இன்று ஊடகங்கள் பெரு முதலாளிகளின் கைகளில் இருக்கின்றன. எனவே அவை நம்முடைய எல்லாப் போராட்டங்களையும் நசுக்குவதற்காக செயல்படுகின்றன. நம்முடைய போராட்டங்களைப் பற்றி இந்த ஊடகங்கள் குறிப்பிடுவது கூட அரிதாகிவிட்டது. எனவே நாம் தொழிலாளிகளுக்காக நம்முடைய சொந்த செய்தியிதழ்களையும் ஊடகங்களையும் உருவாக்க வேண்டும். அவை நம் மக்கள் அடிமை சங்கிலியை உடைத்தெறிய பக்க பலமாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட இதழ்களை நாம் மக்களிடையே பிரபலப்படுத்த வேண்டும்.

தொ.ஒ.கு - அந்நிய நேரடி மூலதனத்தை எதித்தப் போராட்டத்தில் தொழிலாளிகள் எவ்வித பங்காற்ற முடியும்?

தோழர். மணிதாசன் - அந்நிய மூலதனத்தை எதிர்த்த போராட்டத்தில் நமது நாட்டுத் தொழிலாளிகள் முன்னணியில் இருக்க வேண்டும். இந்திய விடுதலைப் போராட்டத்தில் நமது நாட்டுத் தொழிலாளர்கள் முக்கிய பங்காற்றினர். சென்னை, கோவை, தூத்துக்குடி மற்றும் பிற நகரங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடினர். மும்பையைச் சேர்ந்த மில் தொழிலாளர்களும், கப்பற் படை வீரர்களும் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் நின்றனர். ஆங்கிலேயர்களை விரட்டியதில் தொழிலாளர்கள் முக்கிய பங்கு வகித்தனர்.

இன்று தொழிலாளர்கள் தீவிரமாக அரசியலில் பங்கேற்க வேண்டும். இன்றுள்ள அரசியல் கட்சிகள் தொழிலாளர்களுடைய உரிமைகளைப் பாதுகாப்பார்கள் என்று எண்ணுவது பகற்கனவாகும். அரசியல் கட்சிகள் ஏகபோக முதலாளிகளுக்கு சேவைகள் செய்வதையே முதற் கடமையாக எண்ணுகிறார்கள். முதலாளிகளுடைய தேவைகளை நிறைவேற்றுவதற்காகவே - மூலதனத்தைக் கவருவதற்காகவே அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்திருப்பதாக, காங்கிரசு கட்சி ஒப்புக் கொள்கிறது. அந்நிய நேரடி முதலீட்டை எதிர்ப்பதாகக் கூறும் கட்சிகளும் கூட பாராளுமன்ற போட்டிக்காகச் சொல்கிறார்களே தவிர உண்மையில் அவர்கள் அதை எதிர்க்கவில்லை. ஏகபோக முதலாளிகளுக்காக ஆட்சி நடத்துகின்றவர்களும், அவர்களுக்காக விவசாயிகளிடமிருந்து நிலத்தை பிடுங்குபவர்களும் தொழிலாளிகள் - விவசாயிகளுடைய நலன்களைப் பாதுகாப்பார்கள் என்பதை நாம் நம்ப முடியாது.

தொ.ஒ.கு - தொழிற் சங்கங்கள் எப்படி செயல்பட வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

தோழர். மணிதாசன் - தொழிற் சங்கங்கள் தொழிலாளர்களை ஒன்றுபடுத்த வேண்டும். தொழிலாளர்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும், சுரண்டலை ஒழிப்பதற்காகவும் பாடுபட வேண்டும். தொழிலாளர்களுக்கு அரசியல் விழிப்புணர்வை தொழிற் சங்கங்கள் கொடுக்க வேண்டும். அதே நேரத்தில் தொழிற் சங்கங்கள் அரசியல் கட்சிகளுடைய வாலாக இருப்பதையும், வாக்கு வங்கிகளாக தொழிலாளர்களை நடத்துவதையும் நாம் கடுமையாக எதிர்க்க வேண்டும். பல தொழிற் சங்கங்களும், கட்சிகளும், தொழிலாளிகளை தங்களுடைய அடிமைகளாக நடத்தியும், அரசியல் விழிப்புணர்வை மழுங்கடித்தும் வேலை செய்து வருகிறார்கள். முதலாளி வர்க்கத்திற்கு எதிராகவும், தொழிலாளிகள் - விவசாயிகளை ஆட்சியதிகாரத்திற்குக் கொண்டு வருவதற்காகவும் பாடுபடும் கட்சிகளுடைய தலைமையில் தொழிலாளர்களை அரசியல் ரீதியாக ஒருங்கிணைக்க தொழிற் சங்கங்கள் பாடுபட வேண்டும். தொழிலாளி வர்க்கம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவது குறித்து தொழிலாளர்களிடையே பரந்துபட்ட விவாதங்களை நாம் நடத்த வேண்டும்.

தொ.ஒ.கு - நாம் மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும்?

தோழர். மணிதாசன் - தொழில் தகராறுகள் சட்டம், குறைந்தபட்ச கூலி சட்டம் போன்ற சட்டங்களைக்கூட செயல்படுத்த எண்ணமில்லாததாகவும் சிறுபான்மையான ஏகபோக முதலாளிகளுக்கு ஆதரவாகவும் எல்லா செயல்களிலும் ஆளும் வர்க்கங்களும் நிர்வாகமும் உள்ளன.

இப்படிப்பட்ட நிலமைகளில் தொழிலாளர்களின் நேரடி நடவடிக்கையான போராட்டம் மட்டுமே தீர்வை நோக்கிச் செல்லும் என தொழிலாளர்கள் வீதிகளில் போராட்ட களத்தில் இறங்கியுள்ளனர். நம்மை பிளவுபடுத்தும் அடிமை சங்கிலி என்ற இன்றுள்ள இந்த அரசியல் அமைப்பை மாற்றி புதியதொரு அரசியல் அமைப்பை, தொழிலாளர்கள் விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்களின் உரிமைகளை மீறப்படமுடியாததாக பாதுகாக்கும் ஒரு அரசியல் அமைப்பை நாம் நிறுவ வேண்டும். நாமே இந்தியா நாமே அதன் மன்னர்கள் என்ற முழக்கத்தோடு தொழிலாளிகள் விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்கள் அனைவரையும் ஒன்று சேர்ப்போம், போராடுவோம். விடுதலைப் போர் தொடர்கிறது. வெற்றி நமக்கு நிச்சயம்.

தொ.ஒ.கு - விழிப்புணர்வை ஊட்டும் வகையில் உங்களுடைய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

Pin It