ஆறு விமான நிலையங்களைத் தனியார்மயப்படுத்த அரசாங்கம் மேற்கொண்டுவரும் முயற்சிகளை எதிர்த்து ஏர்போர்ட் அதாரிட்டி ஆப் இந்தியாவை (ஏஏஐ)ச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தை மேற்கொண்டு வருகிறார்கள்.

ஏர்போர்ட் அதாரிட்டி-யைச் சேர்ந்த பல்வேறு தொழிற் சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஒருங்கிணைந்து ஒரு கூட்டமைப்பை உருவாகியுள்ளனர். அவர்கள் தில்லியிலுள்ள விமானத்துறை அமைச்சரகத்தின் முன்பும், நாடெங்கிலும் ஏர்போர்ட் அதாரிட்டி ஆப் இந்தியாவின் அலுவலகங்கள் முன்பும் போராட்டத்தைத் துவக்கியுள்ளனர்.

இப் போராட்டத்தை நடத்திவருகின்ற, ஏர்போர்ட் அதாரிட்டி எம்பிளாயிஸ் யூனியனுடைய பொதுச் செயலாளர் தோழர் பி.எஸ்.அகலாவாட் பேசுகையில், “சென்னை, கொல்கத்தா, கௌகாத்தி, ஜெய்பூர், அமதாபாத் மற்றும் லக்நோவ் ஆகிய ஆறு விமானநிலையங்களைத் தனியார்மயப்படுத்த விமானத்துறை அமைச்சகம் மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு எதிராக நாங்கள் போராடி வருகிறோம். ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவழித்து ஏர்போர்ட் அதாரிட்டி இந்த விமான நிலையங்களை நவீனமயப்படுத்திய பிறகு அவை தனியார்மயப்படுத்தப்படுகின்றன” என்றார். தில்லி, மும்பை விமான நிலையங்கள் தனியார்மயப்படுத்தப்பட்டதால் அங்கு வேலை செய்து வந்த ஊழியர்கள் வேலையின்றி இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். “எங்களுடைய குரலுக்கு செவிசாய்க்க வில்லையென்றால் நாங்கள் வேலை நிறுத்தப்போராட்டத்திலோ, ஏர்போர்ட் அதாரிட்டி அலுவலர்களை முற்றுகையிட்டுப் போராடவோ வேண்டியிருக்கும்” என்றார் அவர்.

தொழிலாளர் ஒற்றுமை குரலில் முன்னர் குறிப்பிட்டிருந்தது போல, செப்டெம்பர் மாத துவக்கத்தில், அமைச்சரவை இந்த ஆறு விமான நிலையங்களை, பொதுத்துறை - தனியார் பங்கேற்பு முறையில் அவற்றின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகத்தை மேற்கொள்ள, 100 சதவிகித பங்குகளையும் தனியாருக்கு விற்பதென முடிவெடுத்துள்ளது. இதில் வெற்றிகரமாக தேர்ந்தெடுக்கப்படுபவர், இந்த விமான நிலையங்களை அடுத்த 30 ஆண்டுகளுக்கு நடத்தவும், நிர்வகிக்கவும், வசதிகளைப் பெருக்கவும் விமான நிலையத்தை நிர்வகிக்கும் அரசு நிறுவனமான ஏர்போர்ட் அதாரிட்டி ஆப் இந்தியாவுடன் ஒப்பந்தத்தில் ஈடுபடுவர். அவர்கள் ஆகாயத் துறைப்பகுதியிலும், நகரப்புற பகுதிகளிலும் உள்ள வசதிகள் உட்பட முழு விமான நிலையத்தையும் நிர்வகிப்பார்கள்.

இதில் ஆர்வம் கொண்ட தனியார் நிறுவனங்கள், சென்னை விமான நிலையத்தை ஆய்வு செய்ய முயற்சி செய்தனர். அதை சென்னை விமான நிலையத்தை இயக்கிவரும் 2000-க்கும் மேற்பட்ட ஏர்போர்ட் அதாரிட்டி-யைச் சேர்ந்த தொழிலாளர்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர். இந்த நேரத்தில், சென்னை விமான நிலையம் பல்வேறு ஆர்பாட்டங்களை சந்தித்து வருகிறது.

தனியார் மயத்தை எதிர்த்து நடைபெறும் ஏர்போர்ட் அதாரிட்டி தொழிலாளர்களுடைய இந்தப் போராட்டத்தை தொழிலாளர் ஒற்றுமை குரல் முழுமையாக ஆதரிக்கிறது. இந்த விமான நிலையங்களை தனியார்மயப்படுத்த மேற்கொள்ளப்பட்டுவரும் இந்த முயற்சிகளை ஒட்டுமொத்த தொழிலாளி வர்க்கமும் தீவிரமாக எதிர்க்க வேண்டும்.

தில்லி, மும்பை விமான நிலையங்களும், ஐதிராபாத், பெங்களூரு மற்றும் கொச்சி விமான நிலையங்களும் தொழிலாளர்களுடைய தீவிரமான எதிர்ப்புகளுக்கிடையே தனியார்மயமாக்கப்பட்டன. இந்த தனியார்மயத்தின் அனுபவம் என்ன?  விலை மதிப்பு மிக்க நிலங்கள் உட்பட, ஏர்போர்ட் அதாரிட்டியினுடைய மிகப்பெரும் வளங்களெல்லாம் அடிமாட்டு விலைக்கு புதிய உடமையாளர்கள் பெற்றிருக்கிறார்கள். இந்த விமான நிலையங்கள் தனியார் மயமாக்கப்பட்டதும், பயணிகளுக்கும், விமான நிறுவனங்களுக்கும் பயன்பாட்டு கட்டணங்களை கடுமையாக உயர்த்தினார்கள். எனவே, இப்போதைய தனியார்மய முயற்சிகளை விமான நிறுவனங்களும் எதிர்த்து வருகின்றன. மலிவு விலை விமான நிறுவனங்களுக்கு விமான எரிபொருளின் கடுமையான விலை உயர்வு மட்டுமின்றி, இந்த விமான நிலையங்கள் தனியார்மயப்படுத்தப்பட்டதும் பலத்த அடியாக அமைந்தது.

விமான நிலையங்களின் தனியார்மயத்தை ஏர்போர்ட் அதாரிட்டி தொழிலாளர்கள் கடுமையான எதிர்த்ததின் காரணமாக சென்னை, கொல்கத்தா உட்பட பிற விமான நிலையங்களின் நவீனமயமாக்கும் பொறுப்பை ஏர்போர்ட் அதாரிட்டியிடமே விடப்படுமென அப்போது அரசாங்கம் ஒப்புக் கொண்டது. இப்போது விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள விமான நிலையங்கள் மிகுதியான செலவில் ஏர்போர்ட் அதாரிட்டியால் நவீனமயப்படுத்தப்பட்டன. இப்படியிருக்கும் போது அவற்றை விற்பதற்கான காரணம் என்ன? இந்த விமான நிலையங்களைப் பயன்படுத்துகின்ற பயணிகளுடைய நலனோ, விமான நிறுவனங்களுடைய நலனோ, ஏர்போர்ட் அதாரிட்டியைச் சேர்ந்த தொழிலாளர்களுடைய நலனோ, இந்த விமான நிலையங்களைக் கட்டுவதற்கும், நவீனப்படுத்தவும் வரிப்பணம் தந்த ஒட்டுமொத்த இந்திய மக்களுடைய நலனோ அரசாங்கத்திற்கு ஒரு பொருட்டே இல்லை என்பது வெளிப்படை. விமான நிலையங்களை கட்டும் துறையில் உள்ள குறிப்பிட்ட முதலாளிகளும், அரசாங்கத்தில் உள்ள அவர்களுடைய ஏஜன்டுகளும் இந்த நிலைப்பாட்டைக் கொண்டு வந்திருக்கிறார்கள். இது, ஐமுகூ அரசாங்கத்தின் குற்றவியலான தன்மையையும், அது முழுக்க முழுக்க தொழிலாளர் விரோதியாகவும், தேச விரோதியாகவும் இருப்பதைக் காட்டுகிறது.

Pin It