தீவிரமான தேர்தல் சீர்திருத்தங்களை முன்னெடுப்பது அவசியம்

தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ‘மேற்கண்ட யாரும் இல்லை’ (நோட்டா) என்பதை ஒரு வாய்பாக இறுதியில் ஒரு பொத்தானை வைக்க வேண்டும் என்று செப்டம்பர் 27, 2013 இல், உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் தீர்ப்பளித்தது. செயலூக்கத்துடனும் ரகசியமாகவும் தங்கள் தொகுதியில் தேர்தலில் நிற்கும் எல்லா வேட்பாளர்களையும் நிராகரிப்பதை வெளிப்படுத்துவதற்கான வாக்காளர்களின் உரிமையை நடைமுறைப்படுத்துவதற்கான தீர்ப்பாக இது உள்ளது. குடியுரிமைகளுக்கான மக்கள் சங்கம் (பியுசிஎல்) உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவிற்கான தீர்ப்பே இது.

தற்போது வாக்காளர்கள், அனைத்து வேட்பாளர்களையும் நிராகரிக்க, தேர்தல் நடத்தை விதிகளில் 49 ஓ-வை பயன்படுத்தி வெளிப்படுத்த முடியும். இந்த விதியைப் பொறுத்தவரை வாக்காளர்கள் தங்களது வாக்குச்சாவடியின் தேர்தல் அதிகாரிகளிடம், வேட்பாளர்களின் முகவர்களின் முன்னிலையில், தான் பட்டியலிலுள்ள எந்த ஒரு வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்று பகிரங்கமாக சொல்ல வேண்டும். எனவே இந்த விருப்பத்தை பயன்படுத்த விரும்பும் பெரும்பான்மையானவர்களுக்கு இந்த முறை அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு, தேர்தலில் வாக்களிக்கும் போது ரகசியம் காக்கப்பட வேண்டும் என்ற அடிப்படை உரிமை மீறப்படுகிறது என்ற உண்மையை அடிப்படையாக கொண்டது.

அனைத்து வேட்பாளர்களையும் நிராகரிக்கும் உரிமை வாக்காளர்களுக்கு இருக்க வேண்டும் என்பது தேர்தல் சீர்திருத்தங்களில் உள்ள மக்களின் கோரிக்கைகளுள் ஒன்று. இந்த கோரிக்கையை ‘மேற்கண்ட யாரும் இல்லை’ (நோட்டா) நிறைவேற்றவில்லை. தேர்தல் முடிவுகளில் அதனுடைய தாக்கத்தைப் பொறுத்தவரையில், நோட்டா-வை தேர்ந்தெடுப்பதும் தற்போதுள்ள விதி 49 ஓ-வை பயன்படுத்துவதற்கும் எந்த வகையிலும் வேறுபாடு இல்லை. அது தேர்தல் முடிவில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. "100 நபர்கள் உள்ள ஒரு வாக்காளர் தொகுதியில் 90 வாக்காளர்கள் நோட்டா-வை தேர்ந்தெடுத்தாலும் மீதமுள்ள 10 வாக்குகளில் அதிகபட்ச வாக்குகள் எந்த வேட்பாளருக்கு கிடைக்கிறதோ அந்த வேட்பாளருக்கு ஆதரவாகவே தேர்தல் முடிவு செய்யப்படும்" என்று முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் என். கோபாலசாமி சுட்டிக் காட்டியுள்ளார்.

ஏன் இப்படி இருக்க வேண்டும் – என்பதே உச்ச நீதிமன்ற தீர்ப்பினால் எழுகின்ற முதல் பிரச்சினை. அனைத்து வேட்பாளர்களையும் நிராகரிக்கும் வாக்காளர்களின் கருத்து எப்படி தேர்தல் முடிவுகளை பாதிக்காமலிருக்கலாம்? ஒரு சனநாயகத்தில், இது தேர்தல் முடிவுகளை மாற்ற வேண்டும்.

நோட்டா-வை தேர்ந்தெடுத்த வாக்காளர்களின் எண்ணிக்கை, அதிகமான எண்ணிக்கையிலான வாக்குகளை பெற்ற வேட்பாளருக்கு வாக்களிக்கப்பட்ட வாக்குகளைவிட அதிகமாக இருந்தால், அந்த தொகுதியில் நடத்தப்பட்ட தேர்தலை ரத்து செய்துவிட்டு புதிய தேர்தல் நடத்த அடிப்படை உண்டு. இல்லையெனில், அது வாக்காளர்களின் விருப்பத்தை அவமதித்ததாகவும் சனநாயகத்தை மீறுவதாகவும் ஆகும்.

நோட்டா என்ற கோரிக்கையின் பின்னணியில் தாங்கள் முன்வைக்காத வேட்பாளர்களை நிராகரிக்கும் எண்ணமே உள்ளது. வாக்காளர்கள் தேர்வு செய்தே தேர்தலில் நிற்க அனுமதிக்க வேண்டும் என்று மக்கள் அதிக அளவில் குரல் எழுப்பி வருகிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்களுக்கு பதிலளிக்க கடமைப்பட்டிருக்க வேண்டும் என்றும் வாக்காளர்களின் ஆணையை பாராளுமன்றத்திலோ மாநில சட்டமன்றத்திலோ நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் மக்கள் எண்ணுகிறார்கள். உண்மையில், தற்போதைய அமைப்பு, இதை உறுதிப்படுத்துவதற்கு பதிலாக, உண்மையில் அதற்கு எதிரானதையே உறுதி செய்கிறது.

இன்றைய அமைப்பில், அவையில் பெரும்பான்மையைப் பெற்றிருக்கின்ற கட்சியோ, கூட்டணியோ அரசாங்கத்தை அமைக்கிறது. தேர்தல்களில் வெற்றி பெறத் தேவையான  பணபலம் கொண்ட முதலாளி வர்க்கத்தின் ஏதாவதொரு பிரிவின் ஆதரவு பெற்ற இக் கட்சிகள் முதலாளி வர்க்கத்தின் கட்சிகளாக இருக்கின்றன. ஆளும் கட்சியும், மற்ற அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் என்றழைக்கப்படும் கட்சிகளும் தேர்தலில் போட்டியிடுவதில் பல சிறப்புரிமை கொண்டவர்களாக இருப்பதை தேர்தல் அமைப்பு உறுதி செய்கிறது. அதிகாரத்திற்குப் போட்டியிடுபவர்களாக விளம்பரப்படுத்தப்படும் ஆளும் வர்க்கக் கட்சிகளில் ஏதாவதொரு வேட்பாளரைத் “தேர்ந்தெடுப்பதை”த் தவிர வாக்காளர்களுக்கு வேறு வழியில்லாதிருப்பதை முதலாளி வர்க்கம் உறுதி செய்கிறது. இந்த வேட்பாளர்கள் இருக்கும் கட்சிகள், ஆளும் வர்க்கத்தின் தேவைகளை நிறைவேற்றுவதில் உறுதியாக இருக்கின்றன. அவைகளுக்கு மக்களுடைய தேவைகளைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை. தங்களைத்  தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்காக, அவர்கள் மக்களை சாதி, மத, பிராந்திய, பிற அடிப்படைகளில் பிரித்து வெறியூட்டுகிறார்கள். அதன் மூலம் மக்கள் தங்களுடைய சொந்த நலன்களுக்காகப் போராட முடியாதவாறு செய்கிறார்கள். மக்கள் தங்களுடைய பிரச்சனைகளுக்காகப் போராட அவர்களை அணிதிரட்டுவதற்கு பதிலாக, மக்களை அரசியல் சிந்தனையற்றவர்களாக ஆக்குவதற்காக அவர்கள் வேலை செய்கிறார்கள்.

மக்கள் முன்வைக்கும் வேட்பாளர்கள், இன்றைய தேர்தல் வழிமுறையில் பாரபட்சமாக நடத்தப்படுகிறார்கள். அதிகாரத்திற்கான உண்மையான போட்டியாளராக கருதப்படும் ஒரு கட்சியைச் சார்ந்தவராக அவர்கள் இல்லாமல் இருக்கலாம். மக்களுடைய இப்படிப்பட்ட வேட்பாளர்கள், ஒரு வேளை தேர்ந்தெடுக்கப்பட்டாலும் கூட, பாராளுமன்றத்திலோ, சட்ட மன்றத்திலோ அவர்களுக்கு எந்த மதிப்பும் இல்லை. அவர்கள் “எதிர்கட்சி” வரிசையில் அமர வேண்டியிருக்கும். எனவே, இன்றுள்ள தேர்தல் அமைப்பில் மக்கள் வேட்பாளர்கள் என்பது ஒரு வழக்கமாக இருப்பதற்கு மாறாக அரிதானதாக இருக்கிறது.

வேட்பாளர்களைத் தீர்மானிக்கும் உரிமை மறுக்கப்பட்டிருப்பதை மக்கள் மென்மேலும் உணர்வதால்தான்  புறக்கணிக்கும் கோரிக்கை எழுந்திருக்கிறது. எனவே தேர்தல் சீர்திருத்தங்களின் துவக்கப்புள்ளியானது மக்கள் வேட்பாளர்களைத் தீர்மானிப்பதற்கும், அவர்களைத் தேர்ந்தெடுப்பதற்குமான உரிமையாக இருக்க வேண்டும்.

அரசியல் கட்சிகளுக்கு தேர்தலுக்கான வேட்பாளர்களை முன்வைக்கின்ற உரிமை இருக்கும். அதே நேரத்தில் தொழிற் சங்கங்கள், கூட்டுறவு நிறுவனங்கள், மகளிர் அமைப்புக்கள், இளைஞர் அமைப்புகள், ஒய்வு பெற்றவர்களுடைய அமைப்புகள், போன்ற எல்லா பிற அமைப்புகளும் கூட வேட்பாளர்களை முன்வைப்பதை தேர்தல் சட்டங்கள் உறுதி செய்ய வேண்டும். கட்சியல்லாத வேட்பாளர்களோடு ஒப்பிடுகையில் அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு எந்த சிறப்புச் சலுகைகளும் இல்லாமல் இருப்பதை அமைப்பு உறுதி செய்ய வேண்டும். முன்வைக்கப்பட்ட வேட்பாளர்களிலிருந்து, தொகுதிக்கான போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியலை வாக்காளர்கள் முடிவு செய்ய வேண்டும். இதிலிருந்து ஒரு வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

இறுதி செய்யப்பட்ட வேட்பாளர்கள் அனைவரும் தங்களுடைய தேர்தல் அறிக்கைகளையும், கருத்துக்களையும் வாக்காளர்கள் முன்வைக்க சமமான வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். இதை அத் தொகுதியின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதிக் குழு மேற்பார்வையிட வேண்டும். தேர்தல் பரப்புரைக்காக, எந்த வேட்பாளர் அல்லது கட்சி அல்லது அமைப்பிற்கும் பணம் செலவழிக்க உரிமை இருக்கக் கூடாது. முடிவு செய்யப்பட்ட வேட்பாளர்களுடைய தேர்தல் பரப்புரைக்கான முழு செலவையும் அரசாங்கம் செய்ய வேண்டும்.

இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அனைவரும் சேர்ந்து தங்களிடையிலிருந்து ஒரு அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பார்கள். இப்போது இருப்பது போல அவர்களிடையில் ஒரு ஆளும் கட்சியென்றும், ஒரு எதிர்க் கட்சியென்றும் பிரிவுகள் இருக்கக் கூடாது. தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரோ அல்லது சட்டமன்ற உறுப்பினரோ முறையாக மக்களை சந்தித்து தன்னுடைய வேலை பற்றி கணக்கு கொடுக்க வேண்டிய கடமையை தொகுதிக் குழு உறுதி செய்யும். பொறுத்தமற்ற பிரதிநிதிகளைத் திருப்பியழைக்கவும், சட்ட முன்வரைவுகளை முன்வைக்கவும் வாக்காளர்கள் தங்கள் அதிகாரத்தை இக் குழுவின் மூலம் செயல் படுத்துவார்கள்.

வேட்பாளர்களை மக்கள் முடிவு செய்யாமல் தேர்தல்கள் நடத்தக்கூடாது என்பதை நடைமுறைப்படுத்துவதில் துவங்கி, ஆழமான தேர்தல் சீர்திருத்தங்கள் இக் காலத்தின் உடனடித் தேவையாகும். வேட்பாளர்களைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை ஆளும் வர்க்க அரசியல் கட்சிகளின் கைகளிலிருந்து பிடுங்கி அது வாக்காளர்களுடைய கைகளில் வந்தவுடன், மக்கள் தங்களிடையிலிருந்து வேட்பாளர்களை முன்வைக்க முடியும். தேர்தலுக்கு முன்னர் வேட்பாளர்களை தீர்மானிப்பது என்பது ஒரு முக்கிய தேர்தல் சீர்திருத்தமாகும். இதற்காக நாம் போராட வேண்டும்.

வேட்பாளர்களைப் புறக்கணிக்கும் உரிமைக்கான போராட்டமானது, தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளும், ஒட்டுமொத்த அரசாங்கமும் வாக்காளர்களுக்கு பொறுப்புள்ளவர்களாக இருப்பதை உறுதி செய்வதற்கான போராட்டத்தின் ஒரு அங்கமாகும். தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பதில் நோடோ வாக்குகள் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது என்ற இன்றைய நிலை நமக்கு நிறைவானதாக இல்லை. நோடோ வாக்குகள் ஒரு தொகுதியில் அதிகபட்ச எண்ணிக்கையில் இருக்குமானால் அத் தொகுதியில் தேர்தல்களை மீண்டும் நடத்த வேண்டுமென நாம் கோர வேண்டும்.

இந்தப் போராட்டமானது, அரசாங்கத்தின் திட்டங்களைத் தீர்மானிப்பதும், முடிவெடுப்பவர்களும் மக்கள் என்பதை உறுதி செய்ய, அரசியல் அமைப்பிலும், வழிமுறையிலும் ஆழமான சீர்திருத்தங்களுக்கான போராட்டத்தின் ஒரு அங்கமாக நடத்தப்பட வேண்டும்.

Pin It