அதிகாரத்திலிருக்கும் கட்சியை மட்டுமின்றி, அரசியல் மற்றும் பொருளாதார அமைப்பையே மாற்ற வேண்டும்

சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், இராஜஸ்தான், மிசோராம் மற்றும் தில்லி மாநிலத் தேர்தல்களை தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இத் தேர்தல்கள் 2013 நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெறும்.

இந்த மாநிலங்களில் மூன்றில் பாஜக-வும், இரண்டில் காங்கிரசு கட்சியும் ஆட்சி செய்து வருகின்றன. இந்த இரண்டு கட்சிகளும், ஆட்சி அதிகாரத்திற்கான நாய்ச் சண்டையில் உண்மைகளைத் திருத்தி, அவர்கள் அதிகாரத்தில் இருக்கும் மாநிலங்களில் ஒரு பாட்டையும், அவர்களுடைய எதிராளி அதிகாரத்தில் இருக்கும் மாநிலங்களில் எதிர் பாட்டையும் பாடி வருகிறார்கள்.

மக்களுடைய வாழ்வாதாரங்கள் மீதும், அவர்களுடைய நல்வாழ்க்கை மற்றும் உரிமைகள் மீதும் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் சூழ்நிலையில் இத்தேர்தல்கள் நடைபெறுகின்றன.

வெங்காயம், காய்கறிகள், பருப்புவகைகள், அரிசி, கோதுமை, பெட்ரோல், டீசல், எரிவாயு, மின்சாரம், சாலை மற்றும் இரயில் போக்குவரத்து ஆகிவற்றின் விண்ணைமுட்டும் விலைவாசி இந்த மாநிலம் உட்பட நாட்டிலுள்ள பெரும்பான்மையான மக்களின் வாழ்க்கையை நரகமாக ஆக்கியிருக்கின்றன. வேலையில்லாத் திண்டாட்டமும், முழு நேர வேலையின்மையும் அதிகரித்து வருகிறது. இதனால் இளைஞர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கிராமப் புறங்களிலுள்ள 90 சதவிகித மக்களாலும், நகர்ப் புறங்களிலுள்ள 50 சதவிகித மக்களாலும் அரிசியையும், கோதுமையையும் சந்தையிலிருந்து வாங்க முடியாதென்பதை பாராளுமன்ற மழைக்கால தொடரில் உணவு பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றிய ஐமுகூ அரசாங்கம் ஒப்புக் கொண்டிருக்கிறது. இந்த மாநில மக்கள் வாக்களிக்கச் செல்லும் இந்த நேரத்தில், சுதந்திரம் பெற்று 66 ஆண்டுகள் கடந்த பின்னர் இது தான் நமது நாட்டிலுள்ள நிலைமையாகும்.

தங்களுடைய நிலைமை மோசமடைந்து வருவதும், அவர்களுடைய வாழ்வாதாரமும், உரிமைகளும் தாக்கப்பட்டு வருவதும் குறித்து இந்த ஐந்து மாநிலங்களிலுள்ள உழைக்கும் மக்கள் மிகவும் கவலையோடும், கோபத்தோடும் இருக்கின்றனர்.

முதலாளித்துவ ஏகபோகங்களின் தலைமையில் உள்ள இந்திய ஆளும் வர்க்கமும், முதலாளி வர்க்கத்தின் முக்கிய கட்சிகளும் இந்தத் தேர்தல்கள் எப்படி 2014 பாராளுமன்றத் தேர்தல்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பற்றி மட்டுமே கவலை கொண்டுள்ளனர். இந்தக் காலனிய, ஏகாதிபத்திய மனப்பான்மைதான் முக்கிய தொலைக்காட்சிகளில் இந்தத் தேர்தல்களைப் பற்றிய விவாதங்களில் ஆதிக்கம் செலுத்துகிறது. நரேந்திர மோடி, ராகுல் காந்தியின் கட்சிகளுக்கு இடையே நடைபெறும் பெரிய மோதல் என்று அழைக்கப்படுவதற்கு முன்னால் மக்களுடைய கவலைகள் இரண்டாம் பட்சமாக ஆக்கப்பட்டுவிட்டன.

அதிகாரபூர்வமான புள்ளி விவரங்களால் கூட, மக்கள் கடுமையான வறுமையிலும், மோசமான வாழ்க்கை நிலைமைகளிலும் இருப்பதை மறைக்க முடியவில்லை. வருமானம், கல்வியின் தரம், மக்களுக்கு வழங்கப்படும் சுகாதார சேவைகள் ஆகியவற்றின் அடிப்படையில் மக்களுடைய நல்வாழ்வு பற்றிய அளவீடு மற்றும் பிற சமூக குறியீடுகளை மனித வளர்ச்சி அளவீடென கூறப்படுகிறது. 2011-இன் ஒப்பீட்டு மனித வளர்ச்சி அளவீடு 29 மாநிலங்களில் 19-திற்கு மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் விடுபட்டவை ஏழு வட கிழக்கு மாநிலங்களும், ஜம்மு-காஷ்மீர், கோவா மற்றும் தில்லி ஆகிய 10 மாநிலங்களாகும். இந்த 19 மாநிலங்களில், இராஜஸ்தான் 13 ஆவதாகவும், சத்தீஸ்கர் 18 ஆவதாகவும், மத்திய பிரதேசம் 19 ஆவதாகவும் உள்ளன. பல பரிமாண வறுமையில், மக்கள் தொகையின் சதவிகிதமாக இந்த மாநிலங்கள் 2009-10 இல் முறையே 62.8, 69.7, 68.1 ஆக இருந்தன. அனைத்திந்திய அளவில் இந்த சதவிகிதமானது 53.7 ஆக இருக்கிறது. இது, இந்த மூன்று மாநிலங்களில் உள்ள மக்கள் எந்த அளவிற்கு மோசமான நிலையில் இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.

சுதந்திரமடைந்து 66 ஆண்டுகளுக்குப் பிறகும், நமது மக்கள் இந்த நவீன காலத்தில் மக்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலைகள் இன்றி, மிகவும் மோசமான நிலைமைகளில் வாழ்ந்து கொண்டிருப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது. இந்த ஐந்து மாநிலங்கள் சிறியனவாக இருந்தாலும் அல்லது பெரியனவாக இருந்தாலும், இயற்கை வளங்கள் நிறைந்திருந்தாலும், இல்லையென்றாலும், அங்குள்ள மக்களின்  நிலைமைகள் மிகவும் மோசமாக இருக்கின்றன என்பதுதான் வெட்டவெளிச்சமான உண்மையாகும். இந்த எல்லா மாநிலங்களிலும் உள்ள பெரும்பான்மையான மக்களுக்கு உள்ள யதார்த்த நிலையானது வறுமையும், இல்லைமையும் தான். அதே நேரத்தில் எந்தக் கட்சி ஆட்சி நடத்தினாலும், இந்த மாநிலங்களை ஆண்டு வரும் முதலாளி வர்க்கத்திற்கு உள்ள யதார்த்த நிலைமையானது வளமையும், செல்வக் குவிப்பும் ஆகும். இது பொருளாதாரத்தின் அடிப்படையான போக்காகும்.

பிரச்சனைகளின் ஆணிவேர்

இந்த ஐந்து மாநிலங்களிலும் உள்ள மக்களுடைய பிரச்சனைகளுக்கு அடிப்படைக் காரணமானது, காலனிய ஆட்சி முடிவுக்கு வந்து 66 ஆண்டுகளுக்குப் பின்னரும், அடிப்படையில் மாற்றமின்றி தொடரும் இன்றுள்ள பொருளாதார அரசியல் அமைப்பே ஆகும்.

உற்பத்திக் கருவிகள் முதலாளி வர்க்கத்தின் கைகளில் குவிந்திருக்கின்றன. பொருளாதாரமானது உழைக்கும் பெரும்பான்மையான மக்களை விலையாகக் கொடுத்து முதலாளி வர்க்கம் மேலும் கொழுப்பதற்கு வேலை செய்து வருகிறது. நமது நாட்டிலுள்ள பல்வேறு தேசங்கள், தேசிய இனங்கள் மற்றும் மக்களுக்குச் சொந்தமான நிலங்களும் பிற இயற்கை வளங்களும் இந்திய மற்றும் அயல்நாட்டு ஏகபோக மூலதனத்தின் இலாபத்திற்காக கொள்ளையடிக்கப்படுகின்றன.

பொருளாதார ரீதியாக ஆதிக்கம் நிறைந்த வர்க்கத்தின் ஆதரவு பெற்ற கட்சிகளின் கைகளில் மட்டுமே அரசியல் அதிகாரம் கொடுக்கப்படுவதை அரசியல் அமைப்பும், தேர்தல் வழிமுறையும் உறுதி செய்கின்றன. இப்படிப்பட்ட கட்சிகள், மக்கள் பெயரால் பேசிக்கொண்டு அதே நேரத்தில் சுரண்டல்கார முதலாளி வர்க்க நலனுக்காகச் செயல்படுகின்றன. சீர்திருத்தம் என்றழைக்கப்படும் தாராளமயம், தனியார்மயம் மூலம் உலகமயமாக்கும் திட்டத்தில் இக்கட்சிகள் உறுதியாக இருக்கிறார்கள். இந்தத் திட்டம், இந்திய மக்களின் நிலங்களையும், உழைப்பையும் அதிகபட்சமாக கொள்ளையடிக்கும், சுரண்டும் நோக்கம் கொண்ட தொழிலாளர் விரோத, விவசாயி விரோத, தேச விரோதத் திட்டமாகும். நமது நாட்டினுடைய, மக்களுடைய எதிர்காலத்தைக் காட்டிலும், தன்னுடைய பணப் பையைப் பற்றி அக்கறை கொண்ட ஒரு வர்க்கத்தால் முன்னேற்றப்படும் திட்டமாகும் இது.

இத் திட்டத்திற்கு எதிராகவும், தொழிலாளிகள், விவசாயிகள் மற்றும் ஒடுக்கப்பட்ட பிற மக்களுடைய வாழ்வாதாரத்திற்காகவும், உரிமைகளுக்காகவும் போராடுகின்ற கட்சிகளும், அமைப்புக்களும் இன்றுள்ள அரசியல் வழிமுறையால் ஓரங்கட்டப்பட்டு வருகின்றனர். முதலாளி வர்க்கத்தின் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் உறுதியாக இருக்கின்ற கட்சிகளை மட்டுமே அதிகாரத்திற்குக் கொண்டு வருவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள தேர்தல் வழிமுறையில் இவர்கள் மிகவும் சமனற்ற போட்டியைச் சந்தித்து வருகிறார்கள்.

மக்கள் தங்களுடைய பிரச்சனைகளுக்கான ஆணிவேரைப் புரிந்து கொண்டு அதைத் தீர்ப்பதிலிருந்து அவர்களைத் திசை திருப்பவும், குழப்புவதற்காகவும் மிகப் பெரிய அளவில் பரப்புரை நடத்தப்பட்டு வருகிறது. பிரச்சனையானது சில ஊழல் அரசியல்வாதிகளால் என்றும், அதற்குத் தீர்வு, இந்த ஊழல் அரசியல்வாதிகளை மாற்றி நேர்மையான அரசியல்வாதிகளைக் கொண்டு வருவதாகும் என்ற ஒரு கருத்து உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த பரப்புரை, பிரச்சனையானது இன்றுள்ள அமைப்பின் அடிப்படைத் தன்மையிலேயே இருக்கிறது என்ற உண்மையை மறைக்கும் நோக்கம் கொண்டதாகும். ஒரு சுண்டலான பொருளாதார அமைப்பையும், முதலாளிவர்க்கத்தின் அதிகபட்ச சுரண்டலையும் பாதுகாக்கின்ற காரணத்தால், இந்த அரசியல் அமைப்பு அதன் அடித்தளத்திலிருந்தே ஊழலானதாக இருக்கிறது. ஒரு பிரிவு அரசியல்வாதிகளை அல்லது கட்சிகளை மாற்றி இன்னொரு பிரிவினரை அதிகாரத்திற்குக் கொண்டு வருவதன் மூலம் மட்டுமே, பிரச்சனைக்குத் தீர்வு காண முடியாது.

மத்தியிலும் மாநிலங்களிலும் ஒன்றன் பின் ஒன்றாக வெட்டவெளிச்சமாகி வருகின்ற ஊழல்கள், மிகப்பெரிய ஏகபோகங்களுடைய கைகளில் எப்படி அதிகாரம் இருக்கிறது என்பதையும், அவர்களுடைய சொந்த ஆட்களையே அமைச்சர்களாகவும், அதிகாரிகளாகவும் அதிகார நிலைகளில் வைக்கிறார்கள் என்பதையும், அரசாங்க முடிவுகள் அவர்களுக்குச் சாதகமாக இருப்பதை உறுதி செய்கிறார்கள் என்பதையும் வெளிக் கொண்டு வந்திருக்கிறது. மிகப்பெரிய ஏகபோகங்கள் அரசு இயந்திரத்தின் மீது கொண்டிருக்கும் உடும்புப் பிடியைக் கொண்டு நமது மக்களுடைய நிலம், உழைப்பு மற்றும் இயற்கை வளங்களை கொள்ளையடிப்பதன் மூலம் எப்படி கொழுத்து வருகிறார்கள் என்பது பற்றி ஒரு காட்சியை அவர்கள் கொடுத்திருக்கிறார்கள். இது வழக்கத்திற்கு மாறான ஒன்றோ, ஒரு சில கட்சிகள் அல்லது ஒரு சில முதலாளித்துவ குழுக்களுக்களுடைய பிரச்சனையோ அல்ல. இப்படித்தான் முதலாளித்துவ அமைப்பு இன்று நமது நாட்டில் மட்டுமல்ல, முழு உலகத்திலும் இயங்கி வருகிறது. முதலாளித்துவ அமைப்பிற்கே முடிவு கட்ட வேண்டிய உடனடித் தேவை இருக்கிறது.

இதற்குத் தீர்வு, பொருளாதார மற்றும் அரசியல் அமைப்பில் ஒரு புரட்சிகர மாற்றத்தைக் கொண்டுவருவதில் இருக்கிறது. நாம் உடனடியாக எடுத்துக்கொள்ள வேண்டிய முதல் பணியானது, நமது நாட்டின் பயங்கரமான போக்கை மாற்ற விரும்புகின்ற அனைவருடனும் ஒரு பொதுவான மாற்றுத் திட்டத்தையொட்டி அரசியல் ஐக்கியத்தைக் கட்டுவதாகும். இப்படிப்பட்ட அரசியல் ஒற்றுமை, முதலாளிவர்க்கம் தன்னுடைய இடத்தை வலுப்படுத்திக்கொண்டு, தன்னுடைய சமூக விரோத திட்டத்தை மேற்கொண்டு எடுத்துச் செல்வதைத் தடுப்பதற்கு மிகவும் இன்றியமையாததாகும்.

எல்லா தொழிலாளிகள், விவசாயிகள், ஒடுக்கப்பட்ட தேசங்கள், தேசிய இனங்கள் மற்றும் மக்களுடைய கட்சிகளும், அமைப்புக்களும், பெண்களும், இளைஞர்களும் இந்த மாற்றுத் திட்டத்தையொட்டி ஒன்றுபடவும், அதற்காகப் போராடவும், அவற்றை செயல்படுத்தவும் முன்வர வேண்டுமென இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி அறைகூவல் விடுகிறது.

மாற்றுத் திட்டம்

பொருளாதாரத்தைத் திருத்தியமைக்கவும், மக்களுடைய உரிமைகளுக்கு உத்திரவாதமளிக்கவும், உழைக்கும் பெரும்பான்மையான மக்களை அதிகாரம் பெற்றவர்களாக ஆக்குவதற்கும் உடனடி நடவடிக்கைகளில்

  • அத்தியாவசிய சேவைகள் தனியார்மயப்படுத்துவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். இச்சேவைகள் முழுமையாக எல்லா மக்களுக்கும் அரசால் அளிக்கப்பட வேண்டும்.
  • பொருட்களையும், மூலதனத்தையும் இறக்குமதி செய்வதற்காக இருக்கும் திறந்த கதவுக் கொள்கையானது மாற்றப்பட வேண்டும். அது சுய சார்புக் கொள்கையைக் கொண்டு, இறக்குமதிகளும், ஏற்றுமதிகளும் ஒரு ஆதரவான துணை பங்காற்றுமாறு மாற்றியமைக்கப்பட வேண்டும்.
  • அயல்நாட்டு வாணிகத்தையும், உள்நாட்டு மொத்த வாணிகத்தையும் நாட்டுடமை ஆக்க வேண்டும். விவசாயிகளுடைய விளை பொருட்களை நிலையான, கட்டுபடியாகக் கூடிய விலையில் கொள்முதல் செய்ய வேண்டும். இவற்றின் மூலம் உணவு தானியங்கள், சர்க்கரை மட்டுமின்றி எல்லா அத்தியாவசிய நுகர் பொருட்களையும் கட்டுபடியாகக் கூடிய விலைகளில் கிடைக்கும் வகையில் ஒரு நவீன பொது வினியோக அமைப்புமுறை நிறுவப்பட வேண்டும்.
  • நிலத்தை ஒரு தேசிய சொத்தாக அங்கீகரித்து, சமுதாயத்தின் பொது நலன்களோடு ஒத்ததாக நிலத்தைப் பயன்படுத்துவோருடைய உரிமைகளைப் பாதுகாக்க, ஒரு புதிய சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். அது வரை நிலங்கள் கையகப்படுத்துவதையும், தனியார் நில பரிமாற்றங்களையும் நிறுத்தி வைக்க வேண்டும்.
  • அடிப்படைத் தேவைகளான ஊட்டச் சத்து, சுகாதாரம், கல்வி மற்றும் உறைவிடம் ஆகியவற்றை அனைவருக்கும் உறுதி செய்ய பொது முதலீட்டை அதிகரிக்க வேண்டும். இதற்குத் தேவையான நிதி ஆதாரத்தை, உற்பத்தியற்ற செலவீனங்கள், முதலாளிகளுக்குக் கொடுக்கப்பட்டு வரும் வரிச் சலுகைகள் ஆகியவற்றை நிறுத்துவதன் மூலமும், கருப்புப் பணத்தைக் கைப்பற்றுவதன் மூலமும் திரட்ட வேண்டும்.

இப்படிப்பட்ட நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த, இவற்றால் பயனடைய இருக்கும் உழைக்கும் பெரும்பான்மையான மக்கள் தங்களுடைய கைகளில் அரசியல் அதிகாரத்தைப் பெற வேண்டும். மக்களை அதிகாரம் பெற்றவர்களாக ஆக்குவதற்கு, சனநாயக அமைப்பிலும், அரசியல் வழி முறையிலும் அடிப்படை மாற்றங்களைச் செய்ய வேண்டும்.

நமது மக்களை உண்மையான ஆட்சியாளர்களாகவும், தீர்மானிப்பவர்களாகவும் ஆக்குவதற்கு ஒரு புதிய அரசியல் சட்டத்தை வடிவமைக்க ஒரு புதிய அரசியல் சட்ட நிர்ணய அவையை நமது நாட்டு மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். மனித, சனநாயக மற்றும் தேசிய உரிமைகளை நமது எல்லா மக்களுக்கும் உத்திரவாதமளிக்கும் ஒரு அரசியல் சட்டத்தை நாம் எழுத வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் இந்த உரிமைகள் மீறப்படாமல் இருப்பதை உறுதி செய்ய சட்டங்களும், நடைமுறைப்படுத்தும் வழிமுறைகளும் நமக்கு இருக்க வேண்டும்.

அரசியல் கட்சிகளை அதிகாரத்தில் அமர்த்துவதற்கு பதிலாக, மக்களே அதிகாரத்தை செலுத்துவதற்கான வழிமுறைகளை புதிய அரசியல் சட்டம் உறுதி செய்ய வேண்டும். அப்படிப்பட்ட அமைப்பில் மக்கள் நேரடியாக அதிகாரம் செலுத்துவதற்கு வழி வகுக்கும் பங்கை அரசியல் கட்சிகள் ஆற்ற வேண்டும்.

தேர்தலுக்கான வேட்பாளர்களை முடிவு செய்யும் உரிமை வாக்காளர்களுடைய கைகளில் இருக்க வேண்டும். அரசியல் கட்சிகளுக்கும், கட்சியல்லாத பொது மக்கள் அமைப்புகளுக்கும் வாக்காளர்கள் முன்னே வேட்பாளர்களை முன்மொழியும் உரிமை இருக்கும். ஆனால் வேட்பாளர்களை வாக்காளர்கள் மீது அவர்களால் திணிக்க முடியாது.

ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்களை முடிவு செய்யவும், தேர்தல் வழி முறையை மேற்பார்வையிடவும் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதிக் குழு இருக்க வேண்டும். இந்த வழிமுறைக்கான செலவுகளை அரசு செய்ய வேண்டும். தேர்தல் வழிமுறைக்காக எந்தக் கட்சியும், அல்லது வேட்பாளர்களும் செலவு செய்ய அனுமதிக்கக் கூடாது. தேர்தலில் பங்கேற்கலாமென முடிவு செய்யப்பட்ட எல்லா வேட்பாளர்களும் தங்களுடைய நிலைப்பாட்டை வாக்காளர்கள் முன்னர் தெரிவிக்க சமமான வாய்ப்பை தொகுதிக் குழுக்கள் ஏற்படுத்தித் தரவேண்டும். அப்படிப்பட்ட தொகுதிக் குழுவின் மூலம், மக்கள் தேர்ந்தெடுத்தவர்களைத் திருப்பியழைக்கவும், சட்ட வரைவுகளை முன்வைக்கும் உரிமைகளைச் செயல்படுத்தவும், தேர்ந்தெடுத்தவர்கள் வாக்காளர்களுக்கு பதில் சொல்ல கடமைப் பட்டவர்களாக இருப்பதையும் செயல்படுத்தும்.

இந்திய ஒன்றியமானது, எல்லா தேசங்கள் மற்றும் மக்களுடைய தன்னார்வ ஒன்றியமாக திருத்தியமைக்கப்பட வேண்டும். மத்திய அரசு, மாநில அரசாங்கள் மீது மேலாதிக்கம் செலுத்துவதையும், எல்லா மக்களுடைய மதிப்பு மிக்க இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. எல்லா அங்கத்தினர்களும் ஒன்றியத்தின் மூலம் பயனடையக்கூடிய ஒரு ஒன்றியம் நமக்குத் தேவை.

இந்தத் திட்டத்தையொட்டி ஒன்றுபட வேண்டுமென எல்லா முற்போக்கு அரசியல் சக்திகளையும் கம்யூனிஸ்டு கெதர் கட்சி கேட்கிறது. 

ஆபத்தான, பிளவுவாத அரசியல்

காங்கிரசு, பாஜக பின்பற்றிவரும் பாதையானது, வளமையையும், பாதுகாப்பையும் பெரும்பான்மையான நமது மக்களுக்கு மறுத்து வருகிறது. பாப்ரி மசூதியை இடித்துத் தகர்த்ததையும், குஜராத் படுகொலைகளையும், பாஜக-விலுள்ள தலைவர்கள் திட்டமிட்டு நடத்தியதாக காங்கிரசு கட்சித் தலைவர்கள் ஒவ்வொரு நாளும் குற்றஞ்சாட்டி வருகிறார்கள். சீக்கிய மக்களுடைய படுகொலைகளை காங்கிரசு கட்சி நடத்தியதாக பாஜக குற்றஞ்சாட்டி வருகிறது. இருவருமே உண்மையைக் கூறுகின்றனர். இந்த உண்மைகளை அவர்கள், குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கோ, நீதியை நிலைநாட்டுவதற்கோ பயன்படுத்தவில்லை. மாறாக, இவர்களில் யாராவது ஆட்சிக்கு வந்தால், மேலும் பல படுகொலைகள் நடைபெறுமென மக்களை அச்சுறுத்துவதற்காக அவர்கள் இதைச் செய்து வருகிறார்கள். இது பற்றி மக்கள் அதிக விழிப்புணர்வு பெற்று வருகிறார்கள். பாகிஸ்தானுடைய ஐஎஸ்ஐ உளவு நிறுவனம் பலியானவர்களை தங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்து வருகிறார்கள் என்ற ராகுல் காந்தியினுடைய கூற்றுக்குப் பின்னர், முசாபர் நகர் வகுப்புவாத வன்முறைக்கு ஆளான ஒருவர், கூறினார். – “நாங்கள் எல்லாவற்றையும் கலவரங்களில் இழந்துவிட்டு மிகவும் மோசமான சூழ்நிலையில் கடந்த 50 நாட்களாக நிவாரண முகாமில் வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு உதவுவதற்கு பதிலாக அவர்கள் எங்களை ஐஎஸ்ஐ-யோடு இணைத்துப் பேசுகிறார்கள்”. ஒரு முஸ்லீம் தலைவர் “முஸ்லீம் மக்களை கருவேப்பிலை போல உணவுக்கு மணம் சேர்க்கப் பயன்படுத்தப்பட்டு பின்னர் தூக்கியெறியப்படுகிறார்கள் என்ற அச்சத்தை, இது மேலும் உறுதிப்படுத்துகிறது” என்றார்.

அதிகாரத்திற்கு வருவதற்கும், அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் இக் கட்சிகள் மத, மொழி, வட்டார, சாதி போன்ற அடிப்படைகளில் பிளவுகளை வெளிப்படையாகவே தூண்டி விடுகிறார்கள். மக்களை அரசியல் சிந்தனை அற்றவர்களாகவும், ஒருவரை ஒருவர் எதிர்த்து சண்டைபோட வைப்பவர்களாகவும் ஆக்குவதற்காக அவர்களுடைய தேர்தல் பரப்புரைகள் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன. இக் கட்சிகள் தொழிலாளர் விரோத , விவசாயி விரோதக் கட்சிகள் மட்டுமின்றி முழுக்கவும் சமூக விரோத கட்சிகளாகும்.

முசாபர் நகர் வகுப்புவாத வன்முறை திட்டமிட்டு நடத்தப்பட்டிருப்பதும், தான் படுகொலை செய்யப்படலாமென ராகுல் காந்தி அறுதியிட்டுக் கூறியிருப்பதும், மோடியின் பாட்னா கூட்டத்தில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புக்களும், மாவோயிச கிளர்ச்சியை தேர்தல்களுக்கு முன்னரே நசுக்கப்போவதாக கூறிக் கொண்டு சத்தீஸ்கரில் இராணுவம் கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பதும் நமது மக்களுக்கு வர இருக்கின்ற பேரழிவுகளுக்கான குறியீடுகளாகும்.

அதிகாரம் முதலாளி வர்க்கத்தின் கைகளில் இருக்கும் வரை, பெரும்பான்மையான நமது மக்களுடைய எதிர்காலம் இருண்டதாகவே இருக்கும். ஆட்சியில் இருக்கும் ஒரு கட்சியை மாற்றி வேறு ஒன்றைக் கொண்டுவருவது எவ்வித மாற்றத்தையும் கொண்டுவராது. தேவைப்படுவது எதுவெனில், அரசியல் மற்றும் பொருளாதார அமைப்பில் மாற்றமாகும்.

காங்கிரசு, பாஜக-வினுடைய திசை திருப்பலான அரசியலை மக்கள் புறக்கணிக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி மக்களைக் கேட்டுக் கொள்கிறது. மக்கள் தங்களுடைய கைகளில் அதிகாரத்தை எடுத்துக் கொள்வதற்காக அவர்களை நாம் அணிதிரட்ட வேண்டுமென காலம் கேட்கிறது. இன்றைய அமைப்பை மாற்றி, நமது நாட்டினுடைய மக்களாகிய தொழிலாளர்கள், விவசாயிகள், பிற உழைக்கும் மக்கள் நாட்டினுடைய உண்மையான ஆட்சியாளர்களாக ஆகவும், நம்முடைய தேவைகளை நிறைவேற்றுவதற்கு பொருளாதாரத்தைத் மாற்றியமைப்பதற்கும், மத, சாதி, மொழி அல்லது தேசிய வேறுபாடுகளைக் கடந்த அளவில் அனைவருக்கும் பாதுகாப்பையும், வளமையையும் ஒவ்வொரு இந்தியருக்கும் உறுதிப்படுத்தவும், ஏகாதிபத்தியத்திற்கு எதிராக இந்தியா ஒரு வலுவான கோட்டையாக மாறுவதற்கும், இந்தப்பகுதியிலும் உலகிலும் அமைதிக்கான ஒரு காரணியாக அது இருப்பதற்கும் அயல்நாட்டுக் கொள்ளையை மாற்றியமைக்கவும், மக்களை அதிகாரம் கொண்டவர்களாக ஆக்குவதற்காக நிற்கும் எல்லா அரசியல் சக்திகளும் ஓரணியில் ஒன்றிணைய வேண்டும்.

Pin It