சென்னை மற்றும் கொல்கத்தா விமான நிலையங்களை தனியார்மயமாக்க அரசாங்கம் மேற்கொண்டுவரும் முயற்சிகளை எதிர்த்து இந்திய விமான நிலையங்கள் ஆணையத் (ஏஏஐ) தொழிலாளர்கள் போர்க் கொடியை உயர்த்தியுள்ளனர். சென்னை மற்றும் கொல்கத்தா விமான நிலையங்களை இயக்குவதை தனியாரிடம் ஒப்படைப்பது என்ற விமானத்துறை அமைச்சகத்தின் முடிவைத் தொடர்ந்து தொழிலாளர்கள் இந்தத் தீர்மானத்திற்கு வந்துள்ளனர். இந்திய விமான நிலையங்கள் ஆணையம் - சென்னையைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சூன் 21, 2013 அன்று, தனியார்மயத்தை எதிர்த்து வேலை நிறுத்தப் போராட்டத்திலும் பிற எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடுவோமென அறிவித்துள்ளனர். அவர்களுடைய இந்தப் போராட்டத்தில் இந்திய விமான நிலையங்கள் ஆணையம் - கொல்கத்தாவையும் பிற விமான நிலையங்களையும் சேர்ந்தத் தொழிலாளர்களும் சேர்ந்து கொள்வார்களென எதிர்பார்க்கப்படுகிறது.

சூன் மாத நடுவில், பொதுத்துறை - தனியார் பங்கேற்பை விரைவு படுத்தவும், சென்னை, கொல்கத்தா உட்பட இந்திய விமான நிலையங்கள் ஆணையம் இயக்கிவரும் பல விமான நிலையங்களை நிர்வகிக்க தனியாரை நியமிக்கவும் அரசாங்கம் ஒரு “உள்கட்டுமான வளர்ச்சிக் குழுவை“ அமைத்தது.

“இந்திய விமான நிலையங்கள் ஆணையம், சென்னை விமான நிலையத்தில் 2000 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்த பின்னர் அதை தனியார்மயப்படுத்துவது மிகவும் கொடூரமானதாகும். சென்னையில் மட்டுமின்றி, கொல்கத்தாவும் மற்றும் பிற விமான நிலையங்களும் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தால் நவீன மயப்படுத்தப்பட்டன. அரசாங்கம் இவையனைத்தையும் தனியார்மயப்படுத்த விரும்புகிறது“ என இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் ஊழியர்கள் சங்கத்தைச் (ஏஏஐஇயு) சேர்ந்த ஒரு தலைவர் கூறினார். ஏஏஐஇயு-வின் இந்தப் போராட்டத்திற்கு சர்வதேச விமான நிலையங்கள் ஆணயத்தின் அதிகாரிகள் அசேசியேசனுடைய (ஐஏஏஓஓ) உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

விமான நிலையங்களைத் தனியார்மயப்படுத்தும் திட்டத்தின் முதல் கட்டமாக, தில்லி, மும்பை, பெங்களூரு, ஐதிராபாத் மற்றும் கொச்சி விமான நிலையங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டன என்பதை நாம் நினைவுகூறலாம். விமான நிலையங்களின் இயக்கத்தோடு, மிகவும் விலை மதிப்பு வாய்ந்த நிலத்தையும், மற்ற கருவிகளையும் சொத்துக்களையும் கூட தனியாருக்கு அரசாங்கம் வாரி வழங்கியது. இவ்வாறு மிகுதியான வருவாய்க்கான ஆதாரம் விட்டுக் கொடுக்கப்பட்டு விட்டது. இதுமட்டுமின்றி, தனியார்மயமாக்கப்பட்ட பிறகு தொழிலாளர்கள் தொடர்ந்து வேலையில் இருப்பார்கள் என்ற கொடுக்கப்பட்ட எல்லா வாக்குறுதிகளையும் மீறி, அவர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டனர். தனியார்மயமாக்கிய மூன்றாண்டுகளுக்கு உள்ளேயே, எல்லாத் தொழிலாளர்களும் விஆர்எஸ் எடுத்துக் கொண்டு வெளியே செல்லுமாறு நிர்பந்திக்கப்பட்டனர்.

அந்த நேரத்தில் சென்னை மற்றும் கொல்கத்தா  தொழிலாளர்களிடமிருந்து எழுந்த கடுமையான எதிர்ப்பு காரணமாக இந்த இரு விமான நிலையங்களும் தனியார்மய மாக்கப்படவில்லை. இந்திய விமான நிலையங்கள் ஆணையம் இந்த இரு விமான நிலையங்களையும் நவீனப்படுத்தியிருக்கிறது. இப்போது, இந்த விமான நிலையங்களின் செயல்பாட்டை தனியாரிடம் கொடுத்துவிட அரசாங்கம் விரும்புகிறது.

Pin It