சூன் 6, 2013 இலிருந்து நோக்கியா சிமென்ஸ் சென்னை தொழிற்சாலையைச் சேர்ந்த 210-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் உருவாக்கியுள்ள தொழிற் சங்கத்தை அங்கீகரிக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து அவர்கள் போராடி வருகின்றனர்.

கம்பெனி 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி தொழில் நுட்பத்திற்கான எல்லா வகையான தொலை தொடர்பு சாதனங்களையும் உற்பத்தி செய்கிறது. இந்தத் தொழிற்சாலையில் 800 தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர்.

இந்தப் போராட்டத்தை நடத்திவரும் நோக்கியா சிமென்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் இ.முத்துக்குமார், இந்தப் போராட்டமானது முக்கியமாக தொழிற் சங்கத்திற்கு அங்கீகாரம் கோரி நடத்தப்படுகிறது என்றார். ஓராண்டிற்கு முன்னர் சங்கம் உருவாக்கப்பட்டபோது, நிர்வாகம் 72 தொழிலாளர்களை பணியிடை நீக்கம் செய்தது. அவர்களில் 5 பேர் இன்னமும் வேலையில் சேர்க்கப்பட வில்லை.

தொழிலாளர்கள் சங்கம் அமைப்பதை தாங்கள் எதிர்ப்பதாக நோக்கியா சிமென்சின் நிர்வாகம் வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறது. ”இங்கு தொழிற்சங்கம் தேவையில்லை ஏனெனில், அவர்கள் அரசியல் சிந்தனை கொண்ட குழுக்களாக இருக்கின்றனர். அவர்கள் பல்வேறு பிரச்சனையான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிற்சாலையில் உற்பத்தியைத் தடுப்பது போன்ற சட்டத்திற்கு எதிரான செயல்களிலும் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நாங்கள் நேரடியாக தொழிலாளர்களோடு விவாதிக்க விரும்புகிறோம்” என நிர்வாகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியிருக்கிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்தியாவில் முதலீடு செய்யும் பிற பன்னாட்டு நிறுவனங்களைப் போலவே இவர்களும் தங்களுக்குப் பிடித்த ஒரு தொழிற் சங்கத்தைத் தொழிலாளர்கள் உருவாக்குவதற்கான இந்தியாவின் தொழிற் சட்டங்களையும், ஐஎல்ஓ வின் சட்டங்களையும் வெளிப்படையாகவே மீறுகிறார்கள்.

நோக்கியா சிமென்ஸ், இரண்டாண்டுகளுக்கு முன்னர் 9.78 இலட்சம் கருவிகளை உற்பத்தி செய்த இடத்தில் 2013-இல் 13 இலட்சம் கருவிகளை உற்பத்தி செய்திருக்கிறார்கள். இந்தத் தொழிற்சாலை 2008-இல் துவக்கப்பட்டதாகும்.

Pin It