டிசம்பர் 16, 2012 அன்று தில்லியில் ஒரு 23 வயது இளம் பெண் கொடூரமாக கும்பலாக கற்பழிக்கப்பட்டதும் அதைத் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனக் கோரி நாடெங்கிலும் நடைபெற்ற ஆர்பாட்டங்களைத் தொடர்ந்து அரசாங்கம் நீதிபதி ஜே.எஸ்.வர்மா குழுவை நியமித்தது. இந்தக் குழு தன்னுடைய பரிந்துரைகளை சனவரி 23, 2013-இல் வெளியிட்டுள்ளது.

இந்தக் கொடூரமான குற்றம் நடைபெற்றதற்குப் பின்னர் இரண்டு வாரங்களுக்கும் மேல் நாடெங்கிலும், குறிப்பாக தில்லியில் ஆயிரக்கணக்கான பெண்களும் ஆண்களும் வீதிகளில் குவிந்தனர். அவர்கள் பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசாங்கம் பொறுப்பற்று இருப்பதைக் கடுமையாக எதிர்த்துக் குரலெழுப்பினர். இந்த பொது மக்களுடைய போராட்டத்தை களங்கப்படுத்துவதற்காக, மிகவும் பிரபலப்படுத்தப்பட்டு வந்த பல்வேறு வகையான அரசியல்வாதிகளும் பிற தனிநபர்களும் கூறிய பிற்போக்குத்தனமான கருத்துகளையும், எதிர்மறையான போக்குகளையும் வன்மையாகக் கண்டித்தனர். காவல் துறையும், தில்லி அரசாங்கமும் தங்களுக்குத் தாங்களே "சிறப்புச் சான்றிதழ்" அளித்துக் கொள்ள எல்லாவகையிலும் முயற்சி செய்து கொண்டிருந்தாலும், ஆர்பாட்டமானது பெரும் மக்கள் வெள்ளத்தோடு தொடர்ந்து கொண்டிருந்தது. பொது மக்களுடைய பெரும் நெருக்குதல் காரணமாக வர்மா குழுவை அரசாங்கம் நியமிக்க வேண்டியதாகியது. குறுகிய மூன்று வார காலத்திலேயே, மக்களுடைய பல்வேறு அமைப்புக்களிலிருந்து ஏறத்தாழ 80,000 ஆலோசனைகள் அதற்கு வந்துள்ளதை அந்தக் குழு ஒப்புக் கொண்டிருக்கிறது. இந்த உண்மை மட்டுமே, மக்கள் தொகையில் பாதி பேருக்கு பாதுகாப்பை உறுதி செய்ய மறுக்கும் அரசின் மீது நமது மக்கள் கொண்டுள்ள பரந்துபட்ட கவலையையும், கடுமையான கோபத்தையும் வெளிப்படுத்துகிறது.

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தவிற்கத் தவறியதற்கு அரசாங்கத்தையும், அரசு இயந்திரத்தையும் முழு பொறுப்பாளியென வர்மா குழு கூறியிருக்கிறது. பெண்களுடைய பாதுகாப்பை உறுதி செய்ய நடைமுறைப்படுத்த வேண்டிய பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை அது பரிந்துரைத்திருக்கிறது.

அதனுடைய பரிந்துரைகளில், "ஆயுதப்படைகளும், பாதுகாப்புப் படைகளும் பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களை இழைத்தால் அவர்களுக்கு ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தின் (AFSPA) கீழ் பாதுகாப்பு அளிக்கப்படக் கூடாதென்பதும்" ஒன்றாகும்.

அதிகாரப் பொறுப்பு மீறப்படுவது குறித்த குற்றம் பற்றி ஒரு புதிய சட்டக்கூறுவை இந்திய குற்றவியல் சட்டத்தில் சேர்க்க வேண்டுமென அது பரிந்துரை செய்திருக்கிறது. அந்த சட்டக் கூறானது பின் வருமாறு - "காவல்துறை அல்லது ஆயுதப் படைகளுக்கு தலைமையில், கட்டுப்பாட்டில் அல்லது மேற்பார்வை செய்யும் பொறுப்பில் உள்ள ஒரு அரசுப் பணியாளர், தன்னிடம் உள்ளவர்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கத் தவறினால் அதன் காரணமாக பாலியல் குற்றங்கள் நிகழுமானால், அந்த அதிகாரி தலைமைப் பொறுப்பை மீறியதற்காக குற்றவாளியாக கருதப்படுவார்" என்பதாகும். இந்தக் குற்றத்திற்கு அது 7-இலிருந்து 10 ஆண்டுகள் கடுஞ்சிறைத் தண்டனை கொடுக்கலாமென அது வரையறுத்திருக்கிறது.

மேலும் அது கூறுகிறது - "ஒவ்வொரு காவலர் துறை அல்லது பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவரும் தன்னுடைய உயர் அதிகாரி கொடுக்கும் ஆணையை நிறைவேற்றக் கடமைப் பட்டிருக்கிறார் என்பதால், அப்படிப்பட்ட ஆணையானது சட்டத்திற்கு புறம்பாக இருக்குமானால் தண்டனைக்குரிய அந்த சட்டவிரோத செயலை நியாயப்படுத்த முடியாது. எனவே, ஒரு காவல் துறையைச் சேர்ந்தவர் தன்னுடைய சட்டபூர்வமான கடமையை நிறைவேற்றுவதில் எந்த அரசியல் தலையீடோ, வெளியாருடைய தாக்கத்தையோ மன்னித்துவிட முடியாது".

"ஒரு அரசியல்வாதிக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளில் அவருக்குத் தொடர்பு இருப்பதாக நீதி மன்றம் கருதிவிட்டால், அவரை தேர்தல்களில் போட்டியிடுவதற்கு தகுதியற்றவராக ஆக்க வேண்டுமென" வர்மா குழு பரிந்துரை செய்திருக்கிறது.

மேலும் அது, தனியார் துறைகளில் உள்ள பெரும் நிறுவனங்களில், வேலை செய்யுமிடங்களில் ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் வழக்குகளை விசாரிக்க ஒரு தீர்ப்பாயத்தை அரசாங்கம் நிறுவ வேண்டுமென அது பரிந்துரைத்திருக்கிறது.

இந்தக் குழுவின் பெரும்பாலான பரிந்துரைகளை ஆளும் நிறுவன அமைப்பினுடைய இந்த அல்லது அந்த பிரிவுகள் உடனடியாக எதிர்த்திருக்கின்றன.

ஐபிஎஸ், துணை இராணுவ அதிகாரிகள், தங்களுடைய தலைமையின் கீழுள்ளவர்களுடைய செயல்பாடுகள் மீது தங்களிடம் கட்டுப்பாடு இல்லை என்று சொல்லி, "தலைமைப் பொறுப்பை மீறிய குற்றவாளி" என்ற சட்டக் கூறை எதிர்க்கிறார்கள். பாராளுமன்றத்தில் உள்ள காங்கிரசு, பாஜக ஆகிய முக்கிய கட்சிகளும், இராணுவப் படைகளின் ஓய்வு பெற்ற தலைவர்களும்  "ஆயுதப்படைகளும், பாதுகாப்புப் படைகளும் பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களை இழைத்தால் அவர்களுக்கு ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தின் (AFSPA) கீழ் பாதுகாப்பு அளிக்கப்படக் கூடாது" என்ற பரிந்துரையை, நமது படைகள் வேறுபட்ட சூழ்நிலைகளில் செயல்படுகிறார்கள் என்றும், அவர்கள் "பயங்கரத்தின் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள்" என்றும் கூறி, அவர்கள் அதை எதிர்க்கிறார்கள். "ஒரு அரசியல்வாதிக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளில் அவருக்குத் தொடர்பு இருப்பதாக நீதி மன்றம் கருதிவிட்டால், அவரைத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு தகுதியற்றவராக ஆக்க வேண்டும்" என்ற பரிந்துரையை, ஏறத்தாழ எல்லா அரசியல் கட்சிகளுமே எதிர்க்கின்றன. குற்றவாளிகளாக அவர்கள் நிரூபிக்கப்பட்டால் மட்டுமே, இந்த அரசியல்வாதிகளைத் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவராக ஆக்க வேண்டுமென இக்கட்சிகள் கூறுகின்றன. பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் வழக்குகளை விசாரிக்க தங்களுடைய நிறுவனங்களில் ஒரு தீர்ப்பாயத்தை அரசாங்கம் நிறுவ வேண்டுமென்பதற்கு பெரும் நிறுவனக் குடும்பங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. வர்மா குழுவின் எந்த முக்கிய பரிந்துரையையும் அரசாங்கம் பெரும்பாலும் நடைமுறைப்படுத்தாதென அரசாங்கத்தின் முக்கிய செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.

தலைமைப் பொறுப்பைச் செயல்படுத்த வேண்டும் என்பது நாடெங்கிலும் உள்ள மக்களுடைய நெடுநாளைய கோரிக்கையாகும். அரசு திட்டமிட்டு நடத்தும் வகுப்புவாத மற்றும் குறுங்குழுவாத வன்முறையிலும், மக்களுடைய குறிப்பிட்ட பிரிவினரை இலக்காக வைத்து அரசு திட்டமிட்டு நடத்தும் வன்முறையிலும், மக்களைப் பாதுகாக்க வேண்டிய காவல் துறையும், பாதுகாப்புப் படைகளும் மக்களுக்கு எதிராக கற்பழிப்புகள், பாலியல் வன்முறைகள் உட்பட மிகவும் மோசமான குற்றங்களை நடத்துபவர்களாகவும், அல்லது அதற்குத் துணை போகிறவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதை நமது கட்சியும், மற்றும் பல மக்கள் அமைப்புக்களும் மீண்டும் மீண்டும் சுட்டிக் காட்டியிருக்கிறோம். எனவே குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை உறுதி செய்ய, தலைமைப் பொறுப்புக் கோட்பாட்டு மிகவும் அவசியமானதாகும். இந்தக் கோட்பாடு இதுவரை கொண்டு வராத காரணத்தால் தான் இப்படிப்பட்ட அரசு திட்டமிட்டு நடத்தும் குற்றங்கள் தண்டிக்கப்படாமல் இருப்பதோடு, தண்டிக்கப்பட மாட்டோமென்ற உறுதியோடு மீண்டும் மீண்டும் குற்றங்கள் நடத்தப்படுகின்றன. தலைமை வகிக்கும் ஒரு அதிகாரிக்கு தன்னிடம் வேலை செய்பவர்களுடைய செயல்கள் மீது எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்பதை நாம் எப்படி ஏற்றுக் கொள்வது? இது, பெண்களுக்கு எதிராக அரசுப் படைகள் இழைக்கும் மிகவும் மோசமான குற்றங்களிலிருந்து தண்டனையின்றி தப்பிச் செல்வதற்கு முன்வைக்கப்படும் ஒரு அற்ப வாதமாகும்.

ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டத்தின் கீழ், காசுமீரத்திலும், மணிப்பூரிலும் மற்றும் பிற வடகிழக்கு மாநிலங்களில் செய்வது போல மக்கள் மீது ஆயுதப்படைகள் பெரும் கற்பழிப்புக்கள் உட்பட, எல்லா வகையான சித்திரவதைகளையும் நடத்த அவர்களுக்கு பாதுகாப்பளிக்கிறதென்பது நன்கறிந்ததாகும். ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தின் மூலம் நிரந்தரமாக "பாதிக்கப்பட்ட பகுதிகளாக" அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் பகுதிகளில் மக்கள் மீது வெட்ட வெளிச்சமான அரசு பயங்கரம் நடத்தப்படுகிறது. ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் பின் வாங்கப்பட வேண்டும் என்பது நமது மக்களுடைய நீண்ட நாளைய கோரிக்கையாகும். இதை நம்முடைய ஆட்சியாளர்கள் தொடர்ந்து மறுத்து வருகிறார்கள். "பயங்கரத்தை எதிர்ப்பது" என்ற பெயரில் எந்த நாகரிக சமுதாயத்திலும், கற்பழிப்பையும், பாலியல் தாக்குதல்களையும், காட்டுமிராண்டித்தனமான சித்திரவதைகளையும் எப்படி நியாயப்படுத்த முடியும்?

பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும், சட்ட மன்ற உறுப்பினர்களும் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நடத்தி வருகிறார்கள் என்பது நன்கறிந்த உண்மையாகும். இக்குற்றங்களுக்காக தண்டிப்பது கிடக்கட்டும், அவற்றை முழுமையாக ஆராய்வதுகூட இல்லை. உண்மையில் கடந்த இருபது அல்லது முப்பதாண்டுகளில் இப்படிப்பட்ட குற்றங்களுடைய ஒரு நீண்ட பட்டியல் உள்ளது. இவற்றிற்குக் காரணமானவர் யார் என்பது பற்றி எவ்வித சந்தேகமும் இல்லை. இந்த குற்றங்களை மூடி மறைப்பதற்காக, உண்மைகளை வெளிக் கொண்டு வர முயற்சி செய்பவர்களுடைய உயிருக்கு அச்சுறுத்தல் உட்பட அதிகபட்ச நெருக்குதல் ஆய்வு நடத்தும் நிறுவனங்கள் மீது கொண்டு வரப்படுகிறது.

வேலை செய்யுமிடங்களில் பாலியல் துன்புறுத்தலைப் பொறுத்த மட்டிலும், தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து விடுவோமோ அல்லது பழிவாங்கப்படுவோமோ என்ற அச்சத்தால் மிகப் பெரும்பான்மையான நிகழ்வுகள் பதிவு செய்யப்படாமல் விடப்படுகின்றன. அப்படி முறையிட்டவைகூட அரிதாக தண்டிக்கப்படுகின்றன. பெரும்பாலான தனியார் நிறுவனங்களில், இப்படிப்பட்ட பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு வழிமுறைகள் கூட இருப்பதில்லை. இக்குற்றங்களை நிகழ்த்துகின்ற பெரு நிறுவன உயர் அதிகாரிகள் தண்டனை ஏதுமின்றி செல்கின்றனர்.

மக்களுடைய கோரிக்கைகளுக்கு ஏற்ப வர்மா குழு பல பரிந்துரைகளைச் செய்திருந்தாலும், இவற்றை எதிர்ப்பவர்கள்தான் அரசை கட்டுப்படுத்துபவர்களாகவும், நமது சமுதாயத்தின் அரசியல் அதிகாரத்தை தம் கைகளில் வைத்திருப்பவர்களாகவும் இருக்கின்றனர். அதாவது ஆளும் முதலாளி வர்க்கமும், அவர்களுடைய நலன்களுக்காக சேவை செய்யும் அரசியல் கட்சிகளும், அவர்களுடைய ஆணைகளை நிறைவேற்றும் அரசு அதிகாரிகளும் இருக்கின்றனர்.

பெண்களுடைய உரிமைகளையும், மதிப்பையும் காப்பதற்காக அரசு சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்பதை உறுதி செய்வதற்கான போராட்டம் அண்மை வாரங்களில் மிகப் பெரிய அளவில் பெருகியிருக்கிறது. அதை நாம் மேற் கொண்டு எடுத்துச் செல்ல வேண்டும்.

ஆளும் வர்க்கமும், அரசாங்கமும், ஆளும் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், காவல்துறையும், பாதுகாப்புப் படைகளும், நீதி மன்றமும் பெண்களுடைய பாதுகாப்பையும், மதிப்பையும் உறுதி செய்வதற்காக கவலை கொள்வார்களென்றோ, நடவடிக்கைகளை மேற் கொள்வார்களென்றோ எவ்வித மாயையும் மக்கள் கொண்டிருக்கக் கூடாது. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையானது, மக்களுடைய போராட்டங்களை நசுக்கவும் தங்களுடைய ஆட்சியை நீடிக்கவும், ஆளும் வர்க்கத்தின் அதிகாரபூர்வமான கொள்கையின் ஒரு அங்கமாகும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

பெண்களுக்கு மதிப்பையும், பாதுகாப்பையும், உரிமைகளையும் உறுதி செய்ய விரும்பும் பெண்கள், ஆடவரிடம், மக்கள் தான் இந்தப் பிரச்சனையைத் தீர்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும், இதைத் தீர்ப்பதற்கு நாம் அரசை நம்பி இருக்க முடியாதெனவும் நமது கட்சி தெளிவாகக் கூறுகிறது. எனவே நம்முடைய குடியிருப்புப் பகுதிகளிலும், வேலை செய்யும் இடங்களிலும் குழுக்களாக நாம் ஒன்றுபட வேண்டும். பெண்களையும் ஆடவரையும் அதிகாரம் கொண்டவர்களாக ஆக்கவும், நம்முடைய உரிமைகளுக்காக மதிப்பிற்காகப் போராடவும், இந்த அமைப்புக்களை நாம் கட்டியமைக்க வேண்டும். பெண்களுடைய மதிப்பு மற்றும் பாதுகாப்பு உட்பட மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் முன்னணியில் இருக்கும் ஒரு சக்தி வாய்ந்த, நாடு தழுவிய குழுக்களின் வலையை நாம் கட்டியமைக்க வேண்டும். அதே நேரத்தில், ஆயிரக் கணக்கான மக்களோடு சேர்ந்து, பெண்களுக்கு எதிராக குற்றங்களை இழைக்கும் குற்றவாளிகள் எந்த உயர் மட்டத்தில் இருந்தாலும் அவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் என்றும் அதன்மூலம் எதிர்காலத்தில் இப்படிப்பட்ட குற்றங்கள் நடைபெறா வண்ணம் இருக்க வேண்டுமெனவும் அதிகாரத்தில் இருப்பவர்களை நாம் தொடர்ந்து கோர வேண்டும்.

Pin It