ஏப்ரல் 22, மிகப் பெரிய புரட்சிகரத் தலைவரும் தொழிலாளி வர்க்கத்தின் ஆசானுமாகிய வி.ஐ.லெனினுடைய 145-ஆவது பிறந்த நாளைக் குறிக்கிறது.

இந்தியாவிலும் உலகெங்கிலும் நடைபெறும் நிகழ்வுகள் முன் எப்போதும் இருந்ததை விட தற்போது லெனினிசத்தை படித்து புரிந்து கொள்ள வேண்டியத் தேவையைச் சுட்டிக்காட்டுகின்றன.

மேலும் மேலும் தீவிரமடைந்து வரும் முதலாளி வர்க்கத் தாக்குதல்களைத் தொழிலாளர்கள், உழவர்கள் மற்றும் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் இன்று இந்தியாவில் சந்தித்து வருகிறார்கள். பாஜக தலைமையிலான தேசகூ-யின் புதிய நிர்வாகத்தின் கீழ் தன்னுடைய தனியார்மய, தாராளமயத் திட்டங்களை முதலாளி வர்க்கம் தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறது. உலகப் பொருளாதாரத்தோடு இந்தியப் பொருளாதாரத்தை முதலாளி வர்க்கம் தீவிரமாக ஒருங்கிணைத்து வருகிறது. எல்லா இயற்கை வளங்களையும், சமூக உழைப்பு உருவாக்கும் எல்லா செல்வத்தையும், தான் கைப்பற்ற வேண்டுமென்ற முயற்சியை நிறைவேற்ற வேண்டுமென கூச்சலிட்டு வருகிறது. பெரும்பான்மையான உழைக்கும் வர்க்கம், உழைப்பாளிகள் மற்றும் உழவர்களின் நலன்களை விலையாகக் கொடுத்து இந்தக் கோரிக்கைகளுக்கு அதிகாரத்திலுள்ள அரசியல் வர்க்கம் உத்திரவாதமளித்து வருகிறது. அதை அவர்கள், முதலாளி வர்க்கத்திற்கு நிலத்தைக் கையகப்படுத்துவதன் மூலமும், கனிம மற்றும் பிற இயற்கை வளங்களை குறைந்த விலைக்கு முதலாளி வர்க்கத்திற்கு விற்பதன் மூலமும், குறைந்த வரிகள் மூலமாகவும், பல்வேறு பிற நடவடிக்கைகள் மூலமாகவும் செய்து வருகிறார்கள்.

அதே நேரத்தில், இந்திய முதலாளி வர்க்கத்தின் அரசு, தான் ஒரு சனநாயகம் என்றும், எதிரெதிரான நலன்களைக் கொண்ட மூலதனம் மற்றும் தொழிலாளி வர்க்கம் என இருவரின் நலத்திற்காக வேலை செய்து வருவதாகவும் கூறி வருகிறது. “அனைவருடனும், அனைவரின் வளர்ச்சிக்காக” என பிரதமரும், அவருடைய கட்சித் தலைவர்களும் மீண்டும் மீண்டும் வெறுப்பூட்டும் வகையில் கூறி வருகிறார்கள். ஆனால் உண்மையோ, சிறுபான்மையான பணக்காரர்களுக்கும், பெரும்பான்மையான மக்களுக்கும் இடையிலுள்ள இடைவெளி நாளுக்கு நாள் விரிவடைந்து கொண்டே வருகிறது.

இத்தகைய சூழ்நிலையில், லெனினுடைய போதனைகளின், குறிப்பாக, முதலாளி வர்க்க அரசின் பண்பு குறித்தும், முதலாளி வர்க்க சனநாயகம் பற்றியும் அவருடைய புகழ் பெற்ற நூலான "அரசும் புரட்சியும்" என்பதில் அவர் எழுதியுள்ள ஆய்வு மற்றும் விளக்கத்தின், இன்றைய காலப் பொருத்தத்தையும் முக்கியத்துவத்தையும் விளக்கிக் கூற வேண்டியத் தேவையில்லை. “கூலித் தொழிலாளர்களை மூலதனம் சுரண்டுவதற்கான ஒரு கருவியே நவீன பிரதிநிதித்துவ அரசு”, என அவர் தெளிவாக விளக்குகிறார். ஒரு முதலாளித்துவ அமைப்பில், அரசு மிகவும் சக்திவாய்ந்ததாகும். அரசின் மூலம், பொருளாதார ரீதியாக மேலாதிக்கம் கொண்ட வர்க்கம், அரசியல் ரீதியாகவும் மேலாதிக்கம் கொண்ட வர்க்கமாக ஆகிறது. இதன் மூலம் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தை, அடக்கி ஒடுக்கிச் சுரண்டுவதற்கு புதிய வழிகள் அதற்குக் கிடைக்கின்றன.

உலகிலேயே இந்தியா தான் மிகப் பெரிய சனநாயகமென இந்திய முதலாளி வர்க்கம் திரும்பத் திரும்பக் கூறி வருகிறது. இதற்கு ஆதாரமாக, அது பாராளுமன்றத்தையும், அனைவருக்கும் வாக்குரிமை இருப்பதையும், பல அரசியல் கட்சிகள் இருப்பதையும் சுட்டிக் காட்டி வருகிறது. இந்திய அரசியல் சட்டத்தின் முகவுரையில் எழுதப்பட்டிருக்கும் உயர்வான சொற்களை பயன்படுத்தி, அது இதை ஒரு சனநாயகக் குடியரசென அது கூறிக் கொள்கிறது. இந்த பிரச்சனையில் லெனின் நிறுவிய அடிப்படை உண்மையை மறைப்பதற்காக கடந்த 70 ஆண்டுகளாக முதலாளி வர்க்கம் இதே பொய்களை மீண்டும் மீண்டும் கூறி வருகிறது. முதலாளித்துவத்திற்கு ஒரு சனநாயகக் குடியரசே, கூடிய மட்டும் மிகவும் சிறப்பான அரசியல் கவசமாக எப்படி இருக்கிறது என்பதை லெனின் சுட்டிக் காட்டியிருக்கிறார். இந்த மிகச் சிறப்பான கூட்டை மூலதனம் கைப்பற்றியவுடன், அது தன்னுடைய அதிகாரத்தை மிகவும் பாதுகாப்பாகவும், உறுதியாகவும் நிறுவிக்கொள்கிறது. முதலாளித்துவ சனநாயகக் குடியரசில் ஆட்கள் மாறினாலும், நிறுவனங்கள் அல்லது கட்சிகள் மாறினாலும் எதுவும் தன்னை அசைக்க முடியாதவாறு அது தன்னை நிறுவிக் கொள்கிறது.

1950-இல் அரசியல் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாளிலிருந்து, இதுவே இந்திய மக்களுடைய அனுபவமாக இருந்து வந்திருக்கிறது. அரசியல் கட்சிகள் வந்து போய் இருக்கின்றன, பல்வேறு கூட்டணிகள் அரசாங்கத்தை அமைத்திருக்கின்றன, மாறி மாறி “ஆளும்” கட்சிகளும் “எதிர்க்” கட்சிகளும் அரசாங்கத்தில் இருந்திருக்கிறார்கள். ஆனால் இவை எதுவும் பெரும்பான்மையான மக்களுக்கு எவ்வித மாற்றத்தையும் கொண்டு வரவில்லை.

அரசும் புரட்சியும் நூலில் லெனின் கூறுகிறார் - “முதலாளித்துத்தின் கீழ், உண்மையில் சுரண்டப்பட்ட மக்கள் நாட்டை ஆளுவதில் எப்போதும் பங்கேற்றதில்லை, பங்கேற்கவும் முடியாது. ஏனெனில் முதலாளித்துவத்தின் கீழ், மிகவும் சனநாயகமான ஆட்சியிலும் கூட, அரசாங்கங்களை மக்கள் அமைப்பதில்லை”, பெரு முதலாளி வர்க்கம் தான் அமைக்கிறது. “பாராளுமன்ற சட்டபூர்வமான முடியாட்சிகளில் மட்டுமின்றி, பெரும்பாலான சனநாயகக் குடியரசுகளிலும், முதலாளி வர்க்க பாராளுமன்றத்தின் உண்மையான சாராம்சமானது, சில ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆளும் வர்க்கத்தின் உறுப்பினர்களில் யார் மக்களை பாராளுமன்றத்தின் மூலம் நசுக்குவது என்பதைத் தீர்மானிப்பதாகும்.”

இன்றுள்ள அரசியல் அமைப்பானது, பொருளாதார அதிகாரத்தை, மிகச் சிலருடைய கைகளில் மேலும் மேலும் குவித்து வைத்து வருகிறது. இவ்வாறு, அரசியல் மற்றும் பொருளாதார சக்தி மிகச் சிலருடைய கைகளில் குவிக்கப்பட்டு வருவதை, ஆணைகள் மூலம் ஆட்சி நடத்தும் போக்கும், பெரும் பான்மையான மக்கள் நாட்டின் அரசியல் வாழ்க்கையிலிருந்து மேலும் மேலும் ஓரங்கட்டப்பட்டு வருவதும் பிரதிபலிக்கிறது.

காங்கிரசு தலைமையில் இயங்கும் ஐமுகூ-யாகட்டும், பாஜக வின் தலைமையில் நடக்கும் தேசகூ-யாகட்டும், மூன்றாவது முன்னணியாகட்டும் அல்லது வேறு எந்த பெயரிலும் இந்த எல்லா கூட்டணிகளும் முன்னணிகளும், முதலாளி வர்க்கத்திற்கு சேவை செய்து வந்திருக்கின்றன. இன்று அவர்களில் ஒருவர் ஆட்சியில் இருக்கிறார்கள், மற்றவர்கள் எதிர்க்கட்சியாக இருக்கின்றனர். முதலாளி வர்க்கத்தின் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு வசதியாக, தங்களிடையிலுள்ள வேறுபாடுகளைத் தீர்த்துக் கொள்ள அவர்கள் பாராளுமன்றத்தைப் பயன்படுத்துகிறார்கள். தங்களுடைய வேறுபாடுகளைத் இவ்வாறு தீர்த்துக் கொள்ள முடியாவிடில், அவசரச் சட்டங்கள் மூலம் ஆட்சி நடத்துவதற்கு வழி கொடுக்கும் அரசியல் சட்டத்தில் உள்ள “நெருக்கடி கால அதிகாரங்களை” அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.

இதை இன்றும் கூட தெளிவாகக் காணலாம். பாஜக அரசாங்கம் கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்த பின்னர், இந்தியக் குடியரசுத் தலைவரால் ஒன்பது அவசரச் சட்டங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. மாநிலங்கள் அவையில் நில கையகப்படுத்தும் சட்டம் தோற்கடிக்கப்படும் என்று அரசாங்கம் அச்சம் கொண்டிருந்ததால், அதை வரவு-செலவு திட்டக் கூட்டத் தொடரின் போது வேண்டுமென்றே பாராளுமன்றம் முன்வைக்கவில்லை. கூட்டத் தொடருக்குப் பின்னர் அதை அவசரச் சட்டமாக கொண்டு வந்துள்ளனர். அண்மையில், ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை, மக்களின் விருப்பத்திற்கும், மாநில அரசின் விருப்பத்திற்குக்கூட இணங்காமல் அருணாச்சல பிரதேசத்திற்கு உள்துறை அமைச்சகம் விரிவிபடுத்தியுள்ளது.

 “முதலாளித்துவத்தின் கீழ் சனநாயகமானது முதலாளத்துவ சனநாயகமாக இருக்கிறது. அது சுரண்டும் சிறுபான்மையினருடைய சனநாயகமாகவும், சுரண்டப்படும் பெரும்பான்மையான மக்களுடைய உரிமைகளை கட்டுப்படுத்தும் அடிப்படையிலும், இந்தப் பெரும்பான்மையான மக்களுக்கு எதிரானதாகவும் அது இருக்கிறது. சுரண்டப்பட்டவர்களுக்கு உண்மையான உரிமைகளும், நாட்டை ஆளுவதில் பாட்டாளி மக்களுக்கும் உழவர்களுக்கும் உண்மையான பங்கேற்பும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தில் மட்டுமே கிடைக்க முடியும். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் கீழ், சனநாயகமானது பாட்டாளி வர்க்க சனநாயகமாக இருக்கும்” என லெனின் விளக்கியிருக்கிறார். சுரண்டப்பட்ட பெரும்பான்மையான மக்களுக்கு சனநாயகமாகவும், சுரண்டும் சிறுபான்மையினருடைய உரிமைகளைக் கட்டுப்படுத்துவதாகவும், இந்த சிறுபான்மையினருக்கு எதிரானதாகவும் அது இருக்கும்.

இந்தியாவின் “பிரதிநிதித்துவ பாராளுமன்ற சனநாயகத்தின்” தன்மை குறித்து நமக்கு எந்த மாயையும் இருக்கக் கூடாது. அரசியல் கட்சிகள் கொடுக்கும் எல்லா வெற்று வாக்குறுதிகளையும் இந்தப் பாராளுமன்றம் நிறைவேற்றப் போகிறதென நாம் எந்த மாயையும் கொண்டிருக்க முடியாது. இன்றைய இந்திய அரசின் நீதித் துறை, காவல் மற்றும் பிற நிறுவனங்கள் உழைக்கும் மக்களுடைய உரிமைகளைப் பாதுகாப்பார்களென எந்த மாயையும் நமக்கு இருக்க முடியாது. அரசும் புரட்சியும் நூலில் லெனின் விளக்குவது போல, “அரசின்” உண்மையான வேலையானது திரைக்குப் பின்னால் முதலாளி வர்க்கத்தாலும் அதற்கு விசுவாசமான அதிகார வர்க்கத்தாலும் நிறைவேற்றப்படுகிறது. பாராளுமன்றத்திற்குக் கொடுக்கப்பட்டிருக்கும் முக்கிய வேலையான, “பொது மக்களை” முட்டாளாக்குவதற்காக பேசுவதாகும் என்பதை அவர் விளக்கியிருக்கிறார்.

தோழர்களே, இன்றைய நமது தேவை, ஆளும் கட்சியை மட்டுமின்றி அரசின் தன்மையையும் ஆளும் வர்க்கத்தையும் மாற்றக் கூடிய ஒரு புரட்சிக்கு நிலைமைகளை தீவிரமாகத் தயாரிப்பதாகுமென நமது கட்சி நமக்குக் கற்றுத் தந்திருக்கிறது. முதலாளித்துவத்தை ஒழிக்கக் கூடிய ஒரு புரட்சி நமக்குத் தேவை. அது நிலபிரபுத்துவத்தின் எல்லா மிச்சங்களையும், காலனிய பாரம்பரியத்தையும் ஏகாதிபத்திய மேலாதிக்கத்தையும் கொள்ளையையும் ஒழித்துக் கட்டும். இன்றுள்ள அரசை மாற்றி, தொழிலாளர்கள் மற்றும் உழவர்களுடைய ஆட்சியை அமைக்கக் கூடிய ஒரு பாட்டாளி வர்க்க சனநாயகப் புரட்சி நமக்குத் தேவை.

“சோசலிசத்திற்கு பாராளுமன்றப் பாதை” என்ற கருத்தை எதிர்த்து நாம் தொடர்ந்து போராடி வந்திருக்கிறோம். பாட்டாளி வர்க்கப் புரட்சி நடை பெற முடியாது அல்லது, இந்த நேரத்தில் அது அவசியமில்லை என்ற கருத்தை நாம் சமரசமின்றி எதிர்த்து வந்திருக்கிறோம். இப்படிப்பட்ட எண்ணங்கள் சமரசத்தை நியாயப்படுத்தவும், ஏகாதிபத்தியத்துடனும் முதலாளி வர்க்கத்துடனும் சமரசம் செய்து கொள்ளவும் பரப்பப்பட்டு வருகின்றன. பாட்டாளி வர்க்கப் புரட்சியல்ல, ஒரு நடுத்தர வர்க்கப் புரட்சி தான் நடைபெற முடியும் என்ற எண்ணத்தை எதிர்த்து நமது கட்சி கடுமையான போராட்டத்தை நடத்துகிறது.

இந்தச் சூழ்நிலையில் விலை மதிக்க முடியாத லெனினச படிப்பினையானது – பாட்டாளி வர்க்கப் புரட்சி வெற்றி பெறவும், முதலாளி வர்க்கத்தின் மீது பாட்டாளி வர்க்க ஆட்சி தொடர்ந்து நீடிக்கவும் முக்கியமானது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமாகும். “ஒவ்வொரு புரட்சியின் அடிப்படைக் கேள்வியானது, அதிகாரத்தைப் பற்றியதாகும்.” பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும். அதைத் தொடர்ந்து தன்னிடம் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்று லெனின் சுட்டிக்காட்டினார். அது தன்னுடைய அதிகாரத்தை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். அது தூக்கியெறிந்த முதலாளி வர்க்கத்திற்கு எதிராக தன்னுடைய அதிகாரத்தை வலுவானதாகவும், யாரும் தோற்கடிக்க முடியாததாகவும் ஆக்கிக் கொள்ள வேண்டும், சோசலிசத்தைக் கட்டுவதற்காக அது, முதலாளி வர்க்கத்தைத் தொடர்ந்து ஒடுக்கி வைத்திருக்க வேண்டும்.

இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க வேலை நிறைவேற்றுவதற்கு, முதலாளி வர்க்க அரசை அழிக்கவும், புதிய அரசு அதிகாரத்திற்கான அடித்தளங்களை அமைக்கவும் கூடிய திறமை கொண்ட ஒரு அமைப்பு தேவைப்படுகிறது. இந்த புதிய அரசு அதிகாரமானது, மக்கள் அதிகாரத்தின் ஒரு வெளிப்பாடாகும். தொழிலாளர்கள், உழவர்கள், படை வீரர்கள் மற்றும் மாலுமிகளின் சோவியத்துக்களை அமைத்துக் கொண்ட இரசிய மக்கள், புரட்சியில் நேரடியாக பங்கேற்க முன்வந்தனர். அதைத் தொடர்ந்து, புதிய அரசு அதிகாரத்தைக் கட்டுவதிலும் பங்கேற்றனர். மக்களுடைய உடனடி அமைப்புக்களாக சோவித்துக்கள் இருந்தன. அதாவது சோவியத்துக்கள், மிகவும் சனநாயமாகவும், அதனால் மக்களுடைய மிகவும் அதிகாரபூர்வமான அமைப்புக்களாகவும் இருந்தன. அவை புதிய அரசைக் கட்டுகின்ற பணியிலும், அதை நிர்வகிப்பதிலும் மக்களுடைய முழு பங்கேற்பிற்கு வழிவகுத்தன. பழைய அமைப்பைத் தகர்க்கும் போராட்டத்திலும், புதிய பாட்டாளி வர்க்க அமைப்பைக் கட்டுகின்ற போராட்டத்திலும் சோவியத்துக்கள், மக்களுடைய முழு புரட்சிகர சக்தியையும், செயலூக்கத்தையும், ஆக்கபூர்வமான திறமைகளையும் முழுமையாக வெளிக் கொண்டுவந்து ஈடுபடுத்தின.

புதிய வகையான அரசியலில் நேரடியாக பங்கேற்க பெருந்திரளான மக்களை ஈர்க்கும் பணிக்கு, நமது கட்சியான இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி மிகவும் முக்கிய கவனம் செலுத்தி வந்திருக்கிறது. மக்களை அரசியலில் ஈடுபடுத்துவதும், வேலை செய்யும் இடங்களிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் மக்கள் குழுக்களை நிறுவுவதும் மக்களை அதிகாரம் கொண்டவர்களாக ஆக்கும் இயக்கத்தின் மைய வேலையாகும்.

மாபெரும் அக்டோபர் புரட்சியும், உலகின் முதல் சோசலிச அரசை நிறுவியதையும் செய்ய முடிந்ததற்கு காரணம், எஃகு போன்ற ஐக்கியத்தை தன்னுடைய அணிகளில் கொண்டிருந்த தொழிலாளி வர்க்கக் கட்சியான, லெனினிச கட்சியின் தலைமை இருந்ததாகும். தன்னுடைய எல்லா வேலையையும் மிகவும் முன்னேறிய புரட்சி அறிவியலின் அடிப்படையில் அமைந்த ஒரு கட்சியாக இரசிய கம்யூனிஸ்டு கட்சியை நிறுவுவதில் லெனின் ஒரு தீர்மானகரமான பங்கு வகித்திருக்கிறார்.

லெனின் தன்னுடைய வேலையை புரட்சிகர எழுச்சிகள் நிறைந்த காலத்தில் நடத்தியிருக்கிறார். தொழிலாளி வர்க்கத்தின் முன்னேறிய முன்னணிக் கட்சியாகவும், புரட்சிகர முறையில் அணி திரட்டப்பட்டதாகவும் ஒரு கம்யூனிஸ்டு கட்சியை அவர் உருவாக்கினார். ஒரு நவீன சமுதாயத்தின் தேவைகளோடு பொருந்தியதாக, அவர் சனநாயக மத்தியத்துவத்தை வடிவமைத்தார். அது, அப்படிப்பட்ட ஒரு கம்யூனிஸ்டு கட்சியின் அமைப்புக் கோட்பாடாக இருந்தது. சனநாயக மத்தியத்துவத்தின் கீழ் தலைமையானது, உறுப்பினர்களுடைய தீர்மானங்களுக்கும், அவர்களுடைய நோக்கங்களுக்கும் பதில் சொல்லக் கடமைப்பட்டதாக இருக்கும். உறுப்பினர்கள் தங்களுடைய கடமைகளை நிறைவேற்றுபவர்களாகவும், உயிரோட்டமான முறையில் தங்களுடைய உரிமைகளை உறுதி செய்பவர்களாகவும் இருப்பார்கள்.

ஒன்று போல எண்ணம் கொண்ட உறுப்பினர்களைக் கொண்டதாக ஒரு கட்டுபாடுகளற்ற அமைப்பாக கட்சி இருக்க வேண்டுமென விரும்பிய, தொழிலாளி வர்க்கத்தின் மிகவும் தாழ்ந்த விழிப்புணர்வுக்கு அடிபணிந்தவர்களை எதிர்த்து லெனின் ஒரு கடுமையான தத்துவார்த்தப் போராட்டம் நடத்தினார். கட்சி உறுப்பினர்கள், கட்சியின் திட்டத்தை ஏற்றுக் கொண்டு முறையாக சந்தா கொடுப்பவர்களாக இருந்தால் மட்டும் போதாது, அவர்கள் ஒரு கட்சி அமைப்பின் ஒழுங்கு முறையின் கீழ் வேலை செய்பவர்களாகவும் இருக்க வேண்டுமென அவர் சுட்டிக் காட்டினார். அதுவன்றி, முதலாளி வர்க்கத்தை வீழ்த்துவதற்கு தொழிலாளி வர்க்கத்திற்கு தலைமை தாங்கத் தேவையான கட்டுறுதியான ஐக்கியத்தைக் கட்சியால் சாதிக்க முடியாது.

லெனின் அவருடைய காலத்திய சூழ்நிலைகளுக்கு ஏற்ப மார்க்சிசத்தை உண்மையில் வளர்த்தார். “மக்களைக் கொண்டதாகவும், உண்மையிலேயே புரட்சிகரமான செயல் முறை நடவடிக்கையோடு நெருங்கிய தொடர்போடு மட்டுமே மார்ச்சிசம், இறுதி வடிவத்தைப் பெறுகிறது’, ஏனெனில் கருத்தியலானது நடைமுறைக்கு உதவ வேண்டும், ஏனெனில் “கருத்தியலானது நடைமுறை எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்”.

சனவரி 1924-இல், தோழர் லெனினின் மறைவின் போது உரையாற்றிய தோழர் ஜே.வி.ஸ்டாலின், தோழர் லெனினுடைய தலைமை காரணமாகவே, போல்ஷவிக் கட்சி ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தலைமை தந்து, அதிகாரத்தைக் கைப்பற்றவும், தங்களுடைய எதிர்காலத்தைத் தாங்களே தீர்மானிப்பவர்களாக மாற்றவும் முடிந்தது என சுட்டிக் காட்டினார். ஒடுக்கப்பட்டவர்கள், அவர்களை ஒடுக்குபவர்களை தூக்கியெறிய வேண்டுமென பல நூற்றாண்டுகளாக முயன்று வந்திருந்துங்கூட, அதைச் செய்ய முடியுமென அதுவரை நம்பவில்லை. தற்பொழுதுள்ள ஒடுக்குபவர்களுடைய இடத்திற்கு ஒரு புதிய ஒடுக்குபவர்கள் வந்தனர்.

“சோவியத்துகளுடைய குடியரசை உருவாக்குவதன் மூலம், விடுதலைக்கான நம்பிக்கை ஒழிந்துவிடவில்லை, நிலபிரபுக்கள் மற்றும் முதலாளிகளுடைய ஆட்சி குறுகிய காலமே இருக்கும், உழைக்கும் மக்களின் சொந்த முயற்சிகளின் மூலம் உழைப்போருடைய ஆட்சியை உருவாக்க முடியும், உழைப்பவருடைய உலகை சொர்க்கலோகத்தில் அல்ல இந்த மண்ணிலேயே உருவாக்க முடியுமென இந்த உலகிலுள்ள அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் நடைமுறையில் செய்து காட்டியதில் லெனினுடைய உயர்வு இருக்கிறது. இதன் மூலம், இந்த உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் உழவர்களுடைய இதயத்தில் விடுதலை நம்பிக்கைக்கான தீயை அவர் மூட்டியிருக்கிறார். எல்லா உழைக்கும் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுடைய இதயத்தில் மிகவும் அன்பிற்குரிய பெயராக லெனின் இருப்பது ஏன் என்பதை இது விளக்குகிறது”.

எனவே தான், அவரது மறைவுக்கு 90 ஆண்டுகளுக்குப் பின்னரும் அவருடைய வாழ்க்கை நமக்கு உற்சாகமூட்டுகிறது. மார்க்சிச கருத்தியல் மற்றும் உணர்வை முழுமையாகவும் உயர்ந்த அளவிலும் உள்வாங்கிக் கொண்டதும், இரசிய நிலைமைகள், இரசிய தொழிலாளி வர்க்கம், சாரிச எதேச்சையாட்சி மற்றும் பிற்போக்கு சக்திகள் ஆகியவற்றைப் பற்றிய அவருடைய ஆழமான அறிவும், ஆய்வும், கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி பாட்டாளி வர்க்கப் புரட்சிக்காக மார்க்சிச அறிவியலை நடைமுறைப்படுத்திய அவருடைய வீரமான தலைமையும், இவையெல்லாவற்றிற்கும் மேலாக, கம்யூனிஸ்டு கட்சி பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவ வேண்டுமென்றும், அதை இறுதிவரை பாதுகாக்க வேண்டுமென்பதிலும் அவருடைய உறுதி – வரலாற்றில் செதுக்கப்பட்டுவிட்டன.

மாபெரும் புரட்சிகர தலைவரும் ஆசானுமாகிய வி.ஐ.லெனின் அவர்களுக்கு செவ்வணக்கம்.

லெனினிசம் நீடூழி வாழ்க.

Pin It