சுவிஸ்சிலிருந்து பீட்டர்ஸ்பர்க் செல்லவிருந்த அந்த ரயிலில் லெனினும் குரூப்ஸ்கையாவும் சகபுரட்சியாளர்களும் இருந்த பெட்டியை ஒரு சோஷலிஸ்ட் நண்பர் மூடி, அதன் மேல் சீல் வைக்கப்பட்டது என்று ஜெர்மன் மொழியில் எழுதினார்.

உலகப் போரில் நடுநிலை வகித்த ஸ்விஸின் ஜூரிச் நகரிலிருந்து ரயில் புறப்பட இருந்தது. ஒருபுறம் ரஷ்ய மன்னராட்சியின் ஆதரவாளர்கள் நின்று “துரோகிகள். ரஷ்யாவைச் சீர்குலைக்கச் செல்பவர்கள்” என்று முழங்கிக் கொண்டிருந்தனர். இன்னொரு புறம் புரட்சியாளர்களை வழியனுப்ப வந்திருந்த சுவிஸ் சோஷலிஸ்டுகளும் மற்றவர்களும் குழுமி நின்றிருந்தனர்.

ரயில் நகரத் தொடங்கியதும் லெனின் ஜன்னல் வழியே வெளியே தலை நீட்டிச் சொன்னார், “இன்னும் மூன்றே மாதம். ஒன்று நாம் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்போம். அல்லது ரஷ்யாவின் ஆட்சியைக் கைப்பற்றியிருப்போம்”.

------------------------------------

Lenin april thesesஜெர்மனியும் ஆஸ்தியா ஹங்கேரியும் இருமுனைகளில் போரிட்டுக் கொண்டிருந்தன. அமெரிக்கா பிரிட்டன் பிரான்ஸுக்கு ஆதரவாக போரில் இறங்க ஏற்பாடு செய்து கொண்டிருந்தது. அதற்கு முன் ரஷ்யாவைப் போரிலிருந்து அகற்றி விட்டால் பிரிட்டனையும் பிரான்ஸையும் முறியடித்து விடலாமென்று ஜெர்மன் தவித்துக் கொண்டிருந்தது.

பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யப் பேரரசுகளோடு போரிட்டுக் கொண்டிருந்த ஜெர்மன் சாம்ராஜ்ஜியத்தின் ராஜ தந்திரிகள் ரஷ்யாவின் பலவீனங்களை கண்டு கொண்டிருந்தனர். ஏறத்தாழ இருபது லட்சம் போர்வீரர்கள் போர்க்களத்தில் மடிந்திருந்தனர். இன்னொரு பத்து லட்சம் பேர் போர்க்கைதிகளாக இருந்தனர். ரஷ்யாவின் தொழில்வளம் ஜெர்மனியின் மொத்த உற்பத்தியில் ஐந்தில் ஒரு பங்கு கூட இல்லாமல் இருந்தது. எனவே ரஷ்யாவால் ஒருபோதும் ஆயுதபலத்தில் ஜெர்மனியையை விஞ்ச முடியாது. இருந்தபோதிலும் ஜெர்மனி மேற்கே பிரான்ஸ், பிரிட்டனுடனும் போரிட வேண்டிய நிலையில் இருந்ததாலும், ரஷ்யா தனது எல்லையற்ற நிலப்பரப்பு, மனித வளத்தின் காரணமாகவும், இறுதியாக முறியடிக்கப்பட முடியாததாக இருந்தது.

போரால் ரஷ்யா பெருஞ்சேதங்களைச் சந்தித்துக் கொண்டிருந்தது. 21 லட்சம் வீரர்கள் உயிரிழந்தனர். கைது செய்யப்பட்டனர். 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர். நாட்டில் பஞ்சம் ஏற்படும் சூழல் உருவாகிக் கொண்டிருந்தது. உணவு கிடைக்கவில்லை. மக்கள் நீண்ட வரிசைகளில் நின்றனர். அனாதைகள் கைவிடப்பட்டனர். ரொட்டிக் கலகங்கள் தொடங்கின.

ஜார் நிகோலஸ் போரைத் தான் நடத்துவதாகக் கூறி 1915ல் போர்முனை சென்றதும் அரசு ஜாரின் மனைவியின் கரங்களில் விழுந்தது. அடுத்த 17 மாதங்களில் 3 பிரதம மந்திரிகள், 5 உள்துறை அமைச்சர்கள், 3 வெளியுறவு அமைச்சர்கள், 3 போர் அமைச்சர்கள், 3 போக்குவரத்து அமைச்சர்கள், 4 விவசாய அமைச்சர்கள் மாற்றப்பட்டனர். ஊழல் உச்ச கட்டத்தை எட்டியது. அரசு நிர்வாகம் ஸ்தம்பித்துப் போனது.

1917 பிப்ரவரி மாதம் 200000 தொழிலாளர்கள் வீதியில் இறங்கினர். தடையுத்தரவு இருந்த போதிலும் பிட்டர்ஸ்பர்க் நகரின் அனைத்து தொழில் கூடங்களும் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டன. பாவோவ்ஸ்கி ரெஜிமெண்ட்டின் 4 வது படைப்பிரிவு, மக்கள் மீது தாக்குதல் நடத்த அனுப்பப்பட்ட ராணுவத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. மகத்தான அக்டோபர் புரட்சியின் முன்னோட்டமான பிப்ரவரி புரட்சி தொடங்கியது. தலைநகரம் திரும்பிய ஜார் ரஷ்யப் பாராளுமன்றமான டூமாவைக் கலைத்தார். ராணுவம் ஜாரைப் பதவி விலகவேண்டும் என்று கேட்டுக் கொண்டது. அடுத்த இடத்திலிருந்த மைக்கேல் அலெக்ஸாண்ட்ரோவிச் என்பவரை மன்னராக முடி சூட்டிக் கொள்ள ராணுவத் தலைமை அழைத்தது. அலெக்ஸாண்ட்ரோவிச் மறுத்துவிட்டார்.

ஜார் இரண்டாம் நிக்கோலஸ் தனது நாட்குறிப்பில் எழுதினார். “சமூக ஜனநாயகக் கட்சியும் தொழிலாளர் குழுக்களும் நடத்திவரும் போராட்டங்களுக்கு எதிராக அமைச்சர்களால் எதுவும் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது. நான் பதவி விலகுவதைத் தவிர வேறில்லை. ருஷ்யாவைக் காப்பாற்றவும் போரிடும் படைகளிடையே அமைதி நிலவச் செய்யவும் நான் பதவியைத் துறக்க ஒப்புக் கொண்டேன்."

பின்பு இளவரசர் ஜார்ஜ் லூவாவ் தலைமையில் தற்காலிக அரசு அமைக்கப்பட்டது. லூவாவ் முதல் நடவடிக்கையாக அரசியல் காரணங்களுக்காக நாடு கடத்தப்பட்டவர்களை வீடு திரும்ப அனுமதித்தார். ஆனால் தற்காலிக அரசாங்கம் ஜெர்மனியுடனான போரைத் தொடர்ந்து நடத்த உறுதி பூண்டிருந்தது.

பிப்ரவரி புரட்சி தொடங்கிய நேரத்தில் லெனின் சுவிட்சர்லாந்தில் இருந்தார். ரஷ்யா அவரைப் பரம விரோதியாகக் கருதியது. அவர் ரஷ்யர் என்பதால் ஆஸ்திரிய ஹங்கேரி போலீசார் அவர் உளவாளியாக இருக்கலாம் என்று சந்தேகித்தனர். எனவே நடுநிலை நாடான சுவிட்சர்லாந்தில் லெனினும் குரூப்ஸ்கயாவும் குடியேறியிருந்தனர். ஐரோப்பிய இடதுசாரிகள் உலகப் போரில் தங்கள் தங்கள் நாடுகளை ஆதரிக்க, போட்ஸ்விக் கட்சி போர் எதிர்ப்புப் போர் செய்வோம் என்ற நிலை எடுத்திருந்தது. நாடு பிடிக்கும் ஏகாதிபத்திய யுத்தத்தில் தொழிலாளர்களும், விவசாயிகளும் பங்கெடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஏகாதிபத்திய யுத்தத்தை உள்நாட்டுப் போராக மாற்றுவோம் என்பதே ருஷ்ய கம்யூனிஸ்டுகளின் நிலையாக இருந்தது.

ரஷ்யாவில் பிப்ரவரி புரட்சி வெடித்ததும் லெனின் நாடு திரும்ப ஆவல் கொண்டு துடித்துக் கொண்டிருந்தார். பிரிட்டனும், பிரான்ஸும் தங்கள் நண்பனான ஜாருக்கு எதிராகப் போரிடும் லெனினை தங்கள் நாடுகள் வழியாக ரஷ்யா திரும்ப அனுமதித்தார்கள். போலி பாஸ்போர்ட்டில் திரும்புவது என்பது அபாயகரமானது.

இந்தச் சூழலில்தான் ஜெர்மன் அரசோடு தொடர்புகள் ஏற்பட்டன. ரிச்சர்ட்வான் ஹியூமன் என்ற ஜெர்மன் வெளியுறவு அமைச்சர், 'லெனின் ஜார் அரசுக்கு எதிராகப் போரிடுபவர். இவர் ரஷ்யா சென்றால் உள்நாட்டில் சீர்குலைவு ஏற்படும். இத்தகைய சூழலை எதிரியின் பின்புலத்தில் ஏற்படுத்துவதுதான் சரியான ஜெர்மன் ராஜ தந்திரமாக இருக்கும்' என்று வாதாடி அரசை இணங்கச் செய்தார். வரலாற்றில் மிக முக்கியமான அந்த மாபெரும் பயணம் தொடங்கியது. லெனினுடன் இருபதொன்பது ரஷ்யர்களும், ஒரு போலிஷ் நாட்டவரும், ஒரு சுவிஸ் நாட்டவரும் சென்றனர். ரயில் ஜூரிச்சிலிருந்து புறப்பட்டு ஸ்டாக்ஹோம் சென்று அங்கிருந்து ரஷ்ய பின்லாந்து எல்லையிலிருந்த அப்ராண்டா என்ற சிறுநகரைக் கடந்து பீட்டர்ஸ்பெர்க் சென்று சேர்ந்தது. அப்ராண்டா நகரில் ஏப்ரல் 15 1917 அன்று இந்த இடத்தை லெனின் கடந்து சென்றார் என்ற வெண்கல அடையாளச் சின்னம் ஒரு நீலநிற சுவற்றில் பதிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய எல்லைக்கு அருகிலிருந்த டாம்பரே என்ற பின்லாந்து நகரில்தான் அதற்குப் பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு 25 வயது இளைஞன் லெனினை சந்தித்தான். அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க சந்திப்பில் நிகழ்ந்த டாம்பரே தொழிலாளர் அரங்கம் பின்பு மியூசியமாக மாற்றப்பட்டது. அதுவரை ஐரோப்பிய தொழிலாளர் கட்சிகள் அன்றாட செயல்பாடுகளிலும், போராட்டங்களிலும், சிறு சிறு வெற்றிகளிலுமே கவனம் செலுத்தி வந்தன. ஆனால் இத்தகைய செயல்பாடுகள் மையமான பொதுநோக்கான அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதை நோக்கி இருக்க வேண்டும் என்றார் லெனின். ஒரு பகுதி போராட்டமோ, ஒரு ஆலைத் தொழிலாளர்களின் போராட்டமோ தனியானதாகப் பார்க்கப்படக் கூடாது. அந்த இளைஞன் லெனினை மலைக் கழுகின் பார்வையைக் கொண்டவர் என்றும் அறிவித்திருந்தான். ஸ்டாலின் தான் அது. லெனினைப் போன்றவர்கள் வெளிநாடுகளில் வாழ நேர்ந்த காலத்தில் ரஷ்யாவில் ஒவ்வொரு செங்கல்லாக கட்சியைக் கட்டியவர் ஸ்டாலின் தான்.

1905ல் நிகழ்ந்த அந்தச் சந்திப்பு சுமூகமாக நிகழவில்லை. 1905ல் ரஷ்யாவில் ஜாருக்கு எதிராகத் தோன்றிய புரட்சியின் முதல் அலை அஸார் பைஜானில் அஸாரிகளுக்கும் ஆர்மினியர்களுக்கும் இடையிலான கலகமாக மாறியது. ஸ்டாலின் அஸார்பைஜான் சென்று போர்க்குழுகளை அமைத்து யூதர்களையும் அஸார்களையும் தாக்குதலிலிருந்து காக்கப் போராடினார். கலகம் நின்ற‌தும் அவர் அமைத்த குழுக்கள் தொடர்ந்து ஜாரின் படைகள் மீது தாக்குதல் நடத்தி வந்தன. அந்தச் சூழலில்தான் டாம்பரே நகரில் போலிஷிவிக் கட்சியின் மாநாடு நடைபெற்றது.

மக்களுக்கு சில சலுகைகளை ஜார் வழங்கியிருந்தார். டூமா என்னும் பாராளுமன்றத்தை அமைத்திருந்தார். ஸ்டாலின் 'புரட்சியை மேலும் தொடர்ந்து நடத்திச் செல்ல வேண்டும். பாராளுமன்றத்தில் பங்கெடுத்துக் கொள்வது வீண் வேலை' என்றார். ஆனால் லெனின் போலிஷிவிக் கட்சி பாராளுமன்றத்தில் பங்கு கொள்ள வேண்டும் என்று வாதாடினார். முதல் சந்திப்பில் கடும் விவாதங்கள் நடந்தன. இறுதியில் ஸ்டாலின் கட்சியின் முடிவை ஒப்புக் கொண்டார்.

இப்போது நிலைமை வேறாக இருந்தது. காமெனிவும் ஸ்டாலின் இருந்த பீட்டஸ்ட்ர்ஸ்பர்க் நகர போலிஷிவிக் கமிட்டி தற்காலிக அரசில் பங்கு கொண்டிருந்தது. லெனின் அந்த அரசைக் கவிழ்க்க விரைந்து கொண்டிருக்கிறார்.
-------------------

ஸ்வீடன் பின்லாந்து எல்லையிலிருந்த ஹரபாண்டா நகருக்கு அருகே உறைந்து போயிருந்த ஆற்றுக்கு அப்பால் ரஷ்யாவின் ஆதிக்கம் தொடங்கியது. ரயில் பாதை இல்லாததால் ஆற்றை மூடியிருந்த பனியின் மேல் பனிச்சருக்கு வண்டிகள் சென்று கொண்டிருந்தன. ஒவ்வொரு வண்டியிலும் இரண்டு பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும். ஏனெனில் அதிக எடை இருந்தால் ஆற்றை மூடியிருக்கும் பனிப்பாளங்கள் உடைந்து நீரே கல்லறை ஆகிவிடும். வெளிப் பார்வைக்கு அமைதியாகத் தோன்றிய லெனின் வண்டியில் ஏறி அமர்ந்தார். அவர் வாழ்நாளெல்லாம் காத்திருந்ததும் போராடியதும் ஓய்வில்லாமல் அலைந்து திரிந்ததும் இந்தத் தருணத்துக்குத்தான். இந்தப் பேரழிவு யுத்தத்தை தடுத்து நிறுத்தவும் விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் இதுவரை அவர்கள் வதைபட்டுக் கொண்டிருந்த நரகத்திலிருந்து விடுதலை அளிக்கவும் வாய்ப்பு இருந்தது.

ஆனால் அதற்கு அவர் வெற்றிகரமாக‌ ரஷ்யாவுக்குள் நுழைய வேண்டும். ஆற்றைக் கடந்ததும் அவர் கைது செய்யப்படலாம். தூக்கு மேடைக்கு அனுப்பப் படலாம். சுட்டுக் கொல்லப்படலாம். ஆற்றுக்கு அப்பால் இருந்தது நிச்சயமற்ற எதிர்காலம். எல்லையற்ற கால வெளியில் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையேயான நூலிழை போலிருந்தது அந்த உறைந்து போன ஆறு.

நதி கடக்கப்பட்டது. மனிதகுலம் இது வரை கண்டிராத மாபெரும் பரிசோதனை தொடங்கியது. அடுத்த எட்டாவது நாள் லெனினும் தோழர்களும் பயணம் செய்து வந்த ரயில் வண்டி பீட்ட்ரோ கிராத் ரயில் நிலையத்தில் நுழைந்தது. காவலர்கள் வந்து தன்னைக் கைது செய்வார்கள் என்று லெனின் எதிர்பார்த்ததற்கு மாறாக பிட்டரோகிராத் பாட்டாளிவர்க்கம் திரண்டு வந்து வரவேற்றது. சர்வதேச கீதம் இசைத்தது. உழைக்கும் மக்கள் லெனினைத் தங்கள் தோள்களில் தூக்கிக் கொண்டனர். கொண்டாட்டத்துக்குப் பிறகு லெனின் தனது உரையைத் தொடங்கினார், “ஏப்ரல் தீஸிஸ்” என்று வரலாற்றில் இடம்பெற்று விட்ட மகத்தான உரை அது.

லெனினது தாக்குதல் போல்ஷிவிக் கட்சியின் மீது அமைந்தது. பெட்ரோகிராத் கட்சி அரசு நிர்வாகம் சீர்குலைந்து விட்டது. எந்தவிதமான தகவல் தொடர்பும் வேலை செய்யவில்லை. நாடு முழுவதும் கலகமும் குழப்பமும் நடக்கிறது. எந்தவிதமான கட்சி நடவடிக்கையும் இப்போது சாத்தியமில்லை. ஆனால் ஒரு பாராளுமன்றம் உருவாகியிருக்கிறது. அதன் மூலம் சிலவற்றை சாதிக்க முடியும் என்று மென்ஷிவிக்கும் கருதியிருந்தனர். போலிஷிவிக் கட்சியும் ஓரளவு இதையொட்டியே சிந்தித்தது.

”இந்தக் காரணங்களாலேயே புரட்சி நடத்தப்பட வேண்டும். அரசியலதிகாரம் கைப்பற்றப்ப‌ட வேண்டும். தாமதிப்பது சாவுக்குச் சமம். அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்று போலிஷிவிக்குகள் மக்களிடம் சொல்லியிருக்க வேண்டும். விவசாயிகள் நிலங்களையும் தொழிலாளர்கள் ஆலைகளையும் கைப்பற்ற வேண்டும். தற்காலிக அரசை ஆதரிக்கும் போலிஷிவிக்குகளை கட்சியை விட்டு வெளியேற்ற வேண்டும். சமர்தர்ம சமூகத்துக்காக‌ப் போரிடுங்கள். பாட்டாளிவர்க்கம் தனது லட்சியங்களை முழுமையாக எட்டும்வரை போரிடுங்கள்” என்றார்.

Lenin and Stalinஅங்கிருந்த அறிவுஜீவிகளும், பத்திரிக்கையாளர்களும் பேரதிர்ச்சி அடைந்தனர். முன்கேட்டிராத அறைகூவல். மேல்மத்தியதர வர்க்கத்தில் பிறந்து வழக்குரைஞர் பட்டம் பெற்ற, பீத்தோவனி அப்பாஷனேட்டா சொனாட்டாவை விரும்பிக் கேட்கும், இதுவரை அனைத்துவிதமான பயங்கரவாத நடவடிக்கைகளையும் வெறுத்து வந்த லெனின் இப்போது அராஜகவாதியாகிவிட்டார். பகூனினைப் பின்பற்றத் தொடங்கிவிட்டார். அவர் மார்க்ஸிஸ்ட் அல்ல என்றார்கள்.

லெனினின் முதன்மையான தோழரும் ரஷ்யாவில் செங்கல் செங்கலாகக் கட்சியைக் கட்டியவரும், இப்போது பிட்டோகிராத் நகர சோவியத்தில் முக்கிய பொறுப்பு வகிப்பவருமான ஸ்டாலின் முன் இரண்டு வழிகள் இருந்தன. கட்சியைக் கட்டியவர் அவர் என்ற முறையில் தலைமைக்குப் போட்டியிட வாய்ப்பு இருந்தது. தற்காலிக அரசுடன் இணைந்து பதவிகள் பெறவும் வாய்ப்பிருந்தது. அல்லது லெனினை ஏற்றுக் கொண்டு திரும்பவும் வாழ்வா சாவா போரில் ஈடுபட வேண்டும். ஸ்டாலின் இரண்டாவதைத் தேர்ந்தெடுத்தார். மக்களின் விடுதலைக்கான பாதை தன் அன்புக்குரிய மலைக்கழுகின் பாதைதான் என்பதை ஏற்றுக் கொண்டார்.

மாபெரும் அக்டோபர் புரட்சிக்குப் பின்பு உலகின் முதலாவது பாட்டாளிவர்க்க அரசாக‌ சோவியத் யூனியனை போலிஷிவிக்கு பிரகடன‌ப்படுத்திய பின்பு பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட பதினான்கு நாடுகள் சோவியத் யூனியன் மீது படையெடுத்தன. லெனினின் தலைமையிலான போல்ஷ்விக் கட்சியும் அரசும் எப்படி உருக்கு போல நின்று இந்தப் பெரும்படையைத் தோற்கடித்தன என்பது ஓர் அற்புதமான கதை. சோவியத் வீரர்கள் துப்பாக்கி ஏந்தி போரிடவும் செய்தார்கள். துண்டுப் பிரசுரங்களைக் கொண்டு தங்களுக்கு எதிராக நவீன ஆயுதங்கள் தாங்கி நின்ற வீரர்களின் மனங்களின் மீது அதிரடித் தாக்குதலும் நடத்தினார்கள்.

எளிமையாகப் பேசுங்கள், நேரடியாகப் பேசுங்கள், உண்மையாகப் பேசுங்கள் என்றார் லெனின். துண்டுப் பிரசுரங்கள் ‘இந்தப் போரால் உனக்கு என்ன லாபம்' என்று ஏகாதிபத்தியங்களின் வீரர்களிடம் கேட்டன. “உனக்கும் எனக்கும் என்ன விரோதம்?” என்று வினவின. “உனது துப்பாக்கியைக் கொண்டு நீ பாதுகாப்பது யாரைத் தெரியுமா?” என்று அடையாளம் காட்டின. அடுத்த நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு ஏகாதிபத்திய உலகம் நடுநடுங்கிய கம்யூனிசப் பிரச்சாரம் இந்த எளிமையான கேள்விகளைத் தான் அடிப்படையாகக் கொண்டிருந்தது.

இரண்டாம் உலகப் போரில் ஸ்டாலின்கிராட்டில் சோவியத் படைகள் ஜெர்மன் பீல்டு மார்ஷல் பவுலூசையும் வேறு இரண்டு ஜெனரல்களையும் கைது செய்தன. அவர்களை தனது அறைக்கு கொண்டு வந்த சோவியத் தளபதி சுய்க்கோவ் சகவீரனுக்கு மரியாதை அளிக்கும் முகமாகவும் வெற்றி பெற்றவர்கள் முறியடிக்கப்பட்டவர்களின் மீது காட்டும் மனிதத் தன்மையின் வெளிப்பாடாகவும் தேனீர் தந்து உபசரித்தார். ஒரு ஜெர்மன் தளபதி பதறிப் போய் “இது பிரச்சாரமா” என்றாராம்.

“ஒரு கோப்பைத் தேனீரில் பிரச்சாரம் இருக்கிறது என்று ஜெனரல் கருதினால் அதைக் குடிக்கும்படி நான் வற்புறுத்தப் போவதில்லை” என்றார் சுய்க்கோவ் சிரித்தபடி. சோவியத் ஆயுதங்களை விட சோவியத் பிரச்சாரத்துக்கே ஏகாதிபத்தியவாதிகள் அஞ்சி நடுங்கினர்.

சோவியத் போர்முனையிலிருந்து திரும்பிச் சென்ற ஜெர்மன் படைகள் புரட்சியில் இறங்கின.

“இப்போது எங்களை சீரழித்துக் கொண்டிருக்கும் இந்தப் புரட்சியை எங்களுக்குத் தந்தவர்கள் லெனினும் அவரது கட்சியும்தான்” என்று கசந்து சொன்னார்கள் ஜெர்மன் தளபதிகள்.

சோவியத் யூனியன் மீது தொடுக்கப்ப‌ட்ட உள்நாட்டு வெளிநாட்டுத் தாக்குதலை லெனினும் சோவியத் வீரர்களும் எப்படி எதிர்கொண்டு முறியடித்தனர் என்பது பற்றி இதைப் போன்ற பல்லாயிரம் கட்டுரைகள் எழுதப் பட்டுள்ளன. எனவே சோவியத் புரட்சி எதையெல்லாம் சாதித்தது என்பது பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்.

1. 1917ல் பெண்களுக்கு ஓட்டுரிமை அளிக்கப்பட்டது. பெண்கள் 600 நகரங்களுக்கு மேயர்களாகினர். 6.5 மில்லியன் பெண்கள் அரசியல் செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டனர். இதன் பின்பு 1918-லேயே பிரிட்டனும் அமெரிக்காவும் பெண்களுக்கு ஓட்டுரிமை அளித்தன. பிரான்ஸ் 1944ல்தான் ஓட்டுரிமை அளித்தது.

2. பிரசவ விடுமுறை முதல்முறையாக அளிக்கப்பட்டது.

3. 8 மனிநேர வேலை. வாரத்துக்கு 40 மணிநேர வேலை. அதாவது இரண்டு நாட்கள் விடுமுறை. வருடத்துக்கு 15 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டது.

4. கல்வி முதுகலை வரை இலவசமாக அளிக்கப்பட்டது. பாட்டாளி வர்க்கத்தைச் சேர்ந்தவர்களின் பிள்ளைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.

5. மிகக்குறைந்த கட்டணத்தில் போக்குவரத்து வசதிகளை அளிப்பது அரசியின் கடமையாகக் கொள்ளப்பட்டது.

6. கருக்கலைப்பு உரிமைகளை வழங்கிய முதல் நாடு சோவியத் யுனியன் தான்.

7. மூன்று கோடி இஸ்லாமிய குடிமக்களுக்கு வழிபடும் உரிமைகளை வழங்கியது. ஜார் ஆட்சிக் காலத்தில் இது தடை செய்யப்பட்டிருந்தது.

8. குடும்ப விவகாரங்களில் இஸ்லாமிய சட்டங்களைப் பின்பற்ற அனுமதிக்கப்பட்டது.

9. இஸ்லாமிய சோஷலிஸ்டுகளுக்குப் பதவிகள் வழங்கப் பட்டன.

இவை தவிர சோவியத் இலக்கியத்திலும் சினிமாவிலும் ஏற்பட்ட முன்னேற்றமும் அதனால் உலக கலை இலக்கியத் துறையில் ஏற்பட்ட பெரும் பாய்ச்சலும் தோழர்கள் அறிந்ததுதான்.

எல்லாவற்றுக்கும் மாறாக லெனினின் மரணத்துக்குப் பிறகு அரசு நிலைப்படுத்தப்பட்டதும், சந்தையையும் லாபத்தையும் அடிப்படையாகக் கொண்ட அராஜக முதலாளித்துவ‌ உற்பத்தி முறைக்கு மாறாக மக்களின் தேவையை அடிப்படையாகக் கொண்ட சோஷலிச உற்பத்தி முறை நடைமுறைக்கு வந்தது. எதை உற்பத்தி செய்தால் லாபம் கிடைக்கும் என்பதை அறிந்து அதை மட்டும் உற்பத்தி செய்வதை அடிப்படையாகக் கொண்டது முதலாளித்துவ உற்பத்தி முறை.

ஆனால் சோவியத் யூனியன் நடைமுறைப்படுத்திய உற்பத்தி முறை, மக்களின் தேவைகள் என்னென்ன என்பதைக் கண்டுணர்ந்து அவற்றை படிப்படியாக நிறைவேற்றுவதை அடிப்படையாகக் கொண்டிருந்தது. முதலாளித்துவ உற்பத்தி முறையே முற்போக்கானது என்ற பொய்யை சோவியத் உழைப்பாளர்கள் தகர்த்தனர்.

ஹரபாண்டா நகரின் பனியாற்றை லெனின் கடக்க உதவிய ஸ்லெட்ஜ் வண்டி உலகை திரும்பிச் செல்லவியலாத இடத்துக்கு அழைத்துச் சென்று விட்டது.

- இரா.முருகவேள்

Pin It