எத்தனை ஆண்டுகள்! எத்தனை கலவரங்கள்! எத்தனை உயிர்ப்பலிகள்! எப்படியோ அமைதி திரும்பினால் சரி என்ற மனநிலைக்கு மக்களில் பெரும்பாலோர் வந்துவிட்ட தருணத்தில், அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளிவந்துள்ளது.

2010 ஆம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றம், 2.77 ஏக்கர் நிலத்தை மூன்று தரப்பினருக்கும் பங்கிட்டுக் கொடுத்துவிட வேண்டும் என்று கூறியிருந்தது. அத்தீர்ப்பு தவறானது என்று இப்போது உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அந்த இடத்தில், ராமர் கோயில் கட்டிக் கொள்ளலாம் என்றும், மசூதி கட்டுவதற்குத் தனியாக 5 ஏக்கர் நிலம் ஒதுக்கிக் கொடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

raman temple 600அதே தீர்ப்பில், "பாபர் மசூதி இடிக்கப்பட்டதும், அந்த இஸ்லாமிய அமைப்பு தகர்க்கப்பட்டதும், அதிர்ச்சி தரத்தக்க சட்ட மீறல் ஆகும்" என்றும் கூறப்பட்டுள்ளது. ( "The destructionof the mosque and the obliteration of the Islamic structure was an egregious violation of the rule of law") அந்த அதிர்ச்சி தரத்தக்க சட்ட மீறலுக்கு என்ன தண்டனை என்று கேட்டால், அது தனி வழக்கு, அதற்கும் இதற்கும் தொடர்பில்லை என்று கூறுகின்றனர். இரண்டுக்கும் தொடர்பில்லை என்றால், இந்த வழக்கிற்கான தீர்ப்பில், அது குறித்துப் பேசுவானேன்?

பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கு இனிமேல் நடந்து அதில் தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கையே இல்லாமல் போய்விட்டது.

அடுத்ததாக, இஸ்லாமியர்கள் தரப்பு சரியான ஆதாரங்களைத் தரவில்லை என்று நீதிமன்றம் கூறியுள்ளது. அப்படியானால், இந்து மதத் தரப்பினர் கொடுத்துள்ள ஆதாரங்கள் எவை என்று நமக்குத் தெரியவில்லை. மத நம்பிக்கைகளில் குறுக்கிடக் கூடாது என்பதே அத்தீர்ப்பின் சாரம்.

நிலைமை இவ்வாறிருக்க, சில இஸ்லாமிய அமைப்புகள் உள்பட அனைவரும் இதனை ஏற்றுக் கொண்டுள்ளது எதனால்? வேறொன்றுமில்லை, மதங்களுக்கு இடையிலான குழப்பம் ஏற்பட்டு, அது நாட்டின் அமைதியைக் கெடுத்திடக் கூடாது என்பதால்தான்,

இரண்டு நாடுகளுக்கு இடையில் நடந்த போர்களில் ஏற்பட்ட பாதிப்புகளையும், உயிர் இழப்புகளையும் விட, இரண்டு மதங்களுக்கு இடையிலும், ஒரே மதத்தின் உட்பிரிவுகளுக்கு இடையிலும் நடந்த மோதல்களால் ஏற்பட்ட பாதிப்பும், உயிரிழப்புகளும்தாம் மிகுதி!

அந்தக் கொடுமை இனியும் தொடர வேண்டாம் என்ற எண்ணம் பொதுவாகவே மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. அந்த அமைதி, நாட்டில் நீடித்து நிலைக்க வேண்டுமென்றால், அதற்கு ஒரு விலை கொடுத்துத்தானே ஆக வேண்டும்!

Pin It