நாடெங்கும் தோழர்கள் முன்னெச்சரிக்கை கைது

வீடு வீடாகக் காவல் துறையினர் சோதனை வாகனங்கள் முடக்கம்

500 தோழர்கள் கைது

தந்தை பெரியாரின் நினைவு நாளான டிசம்பர் 24ஆம் நாள் அரசியல் சட்டத்தின் 17ஆம் பிரிவில் தீண்டாமை ஒழிப்பு என்பதை சாதி ஒழிப்பு என்று மாற்ற வலியுறுத்தி சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் கருவறை நுழைவுப் போராட்டம் நடத்துவதென கழகம் அறிவித்திருந்தது. போராட்டத்தை விளக்கி நாடெங்கும் சுவரெழுத்து விளம்பரமும் விளக்கப் பொதுக்கூட்டங்களும் நடத்தி ஆயிரக் கணக்கான துண்டறிக்கைகள் விநியோகித்து கழகத் தோழர்கள் போராட்டத்திற்குத் தயார் நிலையில் இருந்தனர். ஒவ்வொரு பகுதியி லிருந்தும் தனியாக பேருந்து, வேன்களை ஏற்பாடு செய்து டிசம்பர் 24ஆம் தேதிக்காகக் காத்திருந்தனர்.

இந்நிலையில் டிசம்பர் 22ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதலே நாடெங்கும் கழகத் தோழர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் கைது செய்ய ஆரம்பித்து விட்டனர் காவல்துறையினர். சென்னை, மதுரை, ஈரோடு, திண்டுக்கல், கடலூர், பெரம்பலூர், கரூர், திருச்சி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கழக முக்கியப் பொறுப்பாளர்கள் கைது செய்யப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையினர் கைது செய்கிறார்கள் என்பதை அறிந்த மற்ற தோழர்கள் தலைமறைவாகிவிட்டனர். கழகத்தின் போராட்டத்தை ஒடுக்குவதற்காக அரசு மேற்கொண்ட கைது நடவடிக்கைக்குத் தப்பித்து தோழர்கள் வெளியேறினர். கழகத் தலைவர் ஆனூர் ஜெகதீசன் அவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். அவருடைய வீட்டைச் சுற்றி காவல்துறை குவிக்கப்பட்டது. ஒவ்வொரு தோழரின் வீட்டையும், கழகப் படிப்பகங்களையும் காவல்துறை தனியாக கண்காணித்தும் சோதனை செய்துகொண்டும் காவல் காத்துக்கொண்டும் இருந்தது. தோழர்கள் வழக்கமாக இருக்கும் இடங்களுக்கு எல்லாம் காவல்துறை ரோந்து சென்று தேடிக்கொண்டே இருந்தது. சென்னைக்குச் செல்ல தோழர்கள் ஏற்பாடு செய்திருந்த வாகன உரிமையாளர் களிடமும் காவல்துறை விசாரணை செய்தது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரால் கழகத் தோழர்களைக் கைது செய்தது கண்டிக்கத்தக்கது என்றும் அவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும் கழகப் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் அரசைக் கண்டித்து அறிக்கை வெளியிட்ட தோடு, எத்தனை அடக்குமுறையை அரசு கட்டவிழ்த்து விட்டாலும் திட்டமிட்டபடி டிசம்பர் 24ஆம் தேதியன்று கருவறை நுழைவுப் போராட்டம் சென்னையில் நடக்கும் என்றும் உடனே கழகத் தோழர்கள் சென்னைக்குப் புறப்பட்டு வருமாறும் அழைப்பு விடுத்தார். காவல்துறையினரின் கைது நடவடிக்கைக்குத் தப்பி தலைமறை வான தோழர்கள் அங்கிருந்தே சென்னைக்குச் செல்லும் வழிமுறைகளைத் திட்டமிடத் தொடங்கினர்.

நாடெங்கும் தோழர்கள் கைது செய்யப்படு வதையும் ரிமாண்ட் செய்யப்படுவதையும் தடுக்க காவல்துறை டிஜிபியை மூத்த வழக் கறிஞர் கழகத்தின் துணைத் தலைவர் செ.துரை சாமி, வழக்கறிஞர் இளங்கோவன், வடக்கு மண்டல அமைப்பாளர் கரு.அண்ணாமலை ஆகியோர் சந்தித்துப் பேசினர். டி.ஜி.பியை கழகத் துணைத் தலைவர் சந்தித்துப் பேசிய தற்குப் பின்னால் கைது நடவடிக்கையின், தேடுதல் வேட்டையின் வேகம் குறைந்தது. கைது செய்யப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படாத தோழர்கள் விடுவிக்கப் பட்டனர்.

மிகப் பெரிய அழிவிலிருந்து நாட்டைக் காப்பாற்ற அரசு காவல் துறையை ஏவி நடவடிக்கை எடுத்தால் எப்படி கெடுபிடிகள் இருக்குமோ அதுபோல, கழகத் தோழர்களை விரட்டி விரட்டி காவல்துறையினர் கைது செய்தனர். தீவிரவாதிகளைத் தொடர்ந்து கண்காணிப்பது போன்று கழகத் தோழர்கள் வெளியில் நடமாடமுடியாதபடி எங்கும் காவல்துறை நிரம்பியிருந்தனர்.

கருவறை நுழைவுப் போராட்டத்திற்கு வருவோரின் எண்ணிக்கையை பெருமளவு குறைக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவை ஏற்று காவல்துறை தீவிரமாகத் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டபோதும், போராட்டத்தை எழுச்சியோடு நடத்தியே காட்டுவோம்; அதுவரை நாங்கள் காவல்துறையினர் கையில் அகப்பட மாட்டோம் என்று கழகத் தோழர்கள் ஓடிக்கொண்டே இருந்தனர்.

காவல்துறைக்கும் கழகத் தோழர்களுக்கும் இடையே நடந்த போட்டி முடிவுக்கு வந்து, தோழர்கள் சென்னையில் டிசம்பர் 24இல் திரளத் தொடங்கினர்.

மயிலாப்பூர் லஸ் கார்னர் நாகேஸ்வரராவ் பூங்கா அருகில் கழகத் தலைவர் ஆனூர் ஜெகதீசன், கழகத் துணைத் தலைவர் செ.துரைசாமி ஆகியோர் முன்னிலையில் கழகப் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் கருவறை நுழைவுப் போராட்டம் தொடங்கியது. காவல்துறையினரின் கைது நடவடிக்கைக்குத் தப்பி தலைமறைவாக இருந்த தோழர்கள் அனைவரும் அணி அணியாக சென்னையில் திரண்டுகொண்டேயிருந்தனர்.

டிசம்பர் 23ஆம் தேதியிலிருந்து ஊடகங் களில் கழகத் தோழர்கள் கைது செய்யப் பட்டுள்ளதாகவும் மற்ற பொறுப்பாளர்கள் தேடப்படுவதாகவும் செய்திகள் ஒளிபரப்பாகிக் கொண்டேயிருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு, போராட்டம் நடக்குமா? என்கிற கேள்விக்குறியாக இருந்ததை முறியடித்து பெண்களும் குழந்தைகளும் மாணவர்களும் தோழர்களும் நாகேஸ்வரராவ் பூங்கா அருகில் கூடிக்கொண்டேயிருந்தனர். கழகத் தோழர் களின் கொள்கை உறுதியைக் காட்டும் வகையில் பெரும்திரள் கூடிவிட்டது.

"கல், மண், சுமக்கத் தமிழன்! காணிக்கை பெறுவது பார்ப்பானா?', "ஆண்டவர் முன் அனைவரும் சமம் என்றால் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்தினை எதிர்ப்பது ஏன்?', "அமுல்படுத்து! அமுல்படுத்து! அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக வகை செய்யும் சட்டத்திருத்தத்தை அமுல்படுத்து!' "கொலை செய்த பார்ப்பான் கருவறைக்குள் போகலாம்! கற்பழிக்கும் பார்ப்பான் கருவறைக்குள் போகலாம்! பக்தி யுள்ள பார்ப்பனரல்லாதவர்கள் கருவறைக்குள் போகக் கூடாதா?", "சட்டத்தைத் திருத்து! சட்டத்தைத் திருத்து! அரசியல் அமைப்புச் சட்டத்தைத் திருத்து! தீண்டாமை ஒழிப்பு என்பதற்குப் பதிலாக சாதி ஒழிப்பு என்று சட்டத்தைத் திருத்து!'', ''ஆலயம் கட்டத் தமிழன், பூசை செய்ய பார்ப்பானா?'' "முதல்வராகிய தமிழன், அமைச்சராகிய தமிழன், நீதிபதியாகிய தமிழன், வழக்கறிஞராகிய தமிழன், டாக்டராகிய தமிழன், தாசில்தாராகிய தமிழன், கலெக்டராகிய தமிழன், இன்ஜினியராகிய தமிழன், அர்ச்சகராக முடியாதா?" என்ற முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பரித்து நின்றனர் தோழர்கள். கோரிக்கைகள் அடங்கிய பதாகை களை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உயர்த்திப் பிடித்திருந்தனர்.

மயிலை கபாலீசுவரர் கோயிலை நோக்கி கருஞ்சட்டைப் பட்டாளம் நகரத் தொடங்கி யதும் தடுப்புக் காவலில் கைது செய்கிறோம் என்று காவல் துறையினர் தோழர்களைக் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர். கழகத் தோழர்கள் 500 பேர் வரிசை வரிசையாகக் கைதாகி மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக, சென்னை மாவட்டத்தில் போராட்டத்திற்கான ஆயத்தப் பணிகள் தீவிரமாக நடந்து வந்தது. திருச்சி சிறீரங்கம் பிராமணாள் பெயர் அழிப்புப் போராட்டத்தில் சிறை சென்று திரும்பிய பிறகு, தென் சென்னை மாவட்டச் செயலாளர் டிங்கர் குமரன் தலைமையில் காஞ்சிபுரம் மாவட்டத் தலைவரும் ஓவியருமான பரந்தாமன், கரிகாலன், குரு.சரவணக்குமார், ராஜ்குமார், வடசென்னை மாவட்டச் செயலாளர் வி.ஜனார்த்தனன், திலீபன், சசி, சுபாஷ் ஆகியோர் சென்னை முழுவதும் சுவரெழுத்து விளம்பரம் செய்திருந்தனர்.

கருவறை நுழைவுப் போராட்ட விளக்கப் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டபோது காவல்துறை மூன்று பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி மறுத்து விட்டது. கழகத் துணைத் தலைவர் வழக்கறிஞர் செ.துரைசாமி, வழக்கறிஞர் இளங்கோவன் ஆகியோர் மூலமாக நீதிமன்ற அனுமதி பெற்று பொதுக் கூட்டங்கள் நடைபெற்றது.

போராட்ட நிதியை வழக்கறிஞர் சு.குமார தேவன், வழக்கறிஞர் வை.இளங்கோவன், வடக்கு மண்டல அமைப்பாளர் கரு.அண்ணா மலை, தென்சென்னை மாவட்டத் தலைவர் செ.குமரன், மாவட்டச் செயலாளர் டிங்கர் குமரன் ஆகியோர் திரட்டினர்.

வழக்கறிஞர் சு.குமாரதேவன், வடக்கு மண்டல அமைப்பாளர் கரு.அண்ணாமலை, ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட அமைப் பாளர் ஏ.கேசவன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் டிங்கர் குமரன், காஞ்சி மாவட்டத் தலைவர் பரந்தாமன் ஆகியோர் போராட்டத் திற்கான ஏற்பாடுகளைச் சிறப்பான முறையில் செய்து ஒருங்கிணைத்திருந்தனர்.

தடுப்புக் காவலில் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டிருந்த கழகத் தோழர்களுக்கு நக்கீரன் இணை ஆசிரியர் அ.காமராஜ் பழங்கள், பிஸ்கட் வழங்கி தனது ஆதரவைத் தெரிவித்தார். கானா பாடகர் மரண கானா விஜி மண்டபத்தில் தோழர்களைச் சந்தித்து உரையாற்றினார். மதிய உணவுக்குப் பின் மண்டபத்தில் நடந்த கூட்டத்தில் எழுத்தாளர் வே.மதிமாறன் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்துப் பேசினார்.

கழகப் பிரச்சாரச் செயலாளர் சிற்பி இராசன் தனது பிறந்தநாளையட்டி தோழர்களுக்கு மாட்டுக் கறி பிரியாணி வழங்கினார். தோழர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

தடுப்புக் காவலில் கபாலீசுவரரும் கழகத் தோழர்களும்

கருவறை நுழைவுப் போராட்டத்தை லஸ் கார்னர் நாகேஸ்வர ராவ் பூங்கா அருகில் தொடங்கிய கழகத் தோழர்களை காவல் துறையினர் தடுத்து கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தடுப்புக் காவலில் அடைத்து வைத்தனர். கழகம் கருவறையில் நுழையப் போகிறது என்ற அறிவிப்பால் மயிலாப்பூர் கபாலீசுவரர்கோயில் கருவறையும் மூடப்பட்டு கபாலீசுவரரரும் கருவறைக்குள் காவல் வைக்கப்பட்டார். மயிலை கபாலீசுவரர் கோயில் மாலை வரை பூட்டப்பட்டிருந்தது. பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

திருமண மண்டபத்தில் காவல் வைக்கப்பட்ட கழகத்தினரை பத்திரிகையாளர்கள், ஆதரவாளர்கள் உணர்வாளர்கள் ஆகியோர் சந்தித்த வண்ணமிருந்தனர். ஆனால், கருவறைக்குள் காவல் வைக்கப்பட்ட கபாலீசுவரரோ அன்று ஒரு நாள் முழுவதும் யாருக்கும் தரிசனமும் கொடுக்கவில்லை. அவரை யாரும் தரிசிக்கவும் முடியவில்லை.

தடுக்கப்பட்ட காஞ்சி மக்கள் மன்றத்தினர்

 கருவறை நுழைவுப் போராட்டத்தை கழகம் 24-12-2012 அன்று நடத்தியபோது, போராட்டத்தில் கலந்துகொள்ள காஞ்சி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த தோழர்கள் புறப்பட்டுக்கொண்டிருந்தனர். கழகத்தின் போராட்டத்தை நசுக்க நினைத்துச் செயல்பட்ட தமிழ்நாடு அரசின் காவல்துறை காஞ்சி மக்கள் மன்றத் தோழர்கள் மகேஷ், ஜெசி, தஞ்சை தமிழன் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டவர்களை அங்கேயே தடுத்து நிறுத்தி காவலில் வைத்திருந்தனர்.

பார்ப்பன இந்துத்துவாவிற்குத் துணை போன தமிழக அரசு

 மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் கருவறைக்குள் நுழையும் போராட்டத்தை கழகம் அறிவித்தது முதல் பார்ப்பன - இந்துத்துவ அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்து வந்தன. போராட்டம் நடைபெறும் நாளில் கோவிலின் புனிதம் காப்போம் என்று கபாலீசுவரர் கோவிலுக்கு முன்னால் பி.ஜே.பி., இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, தமிழ்நாடு இந்து மகா சபா, இந்து மறுமலர்ச்சி முன்னேற்றக் கழகம், அனுமன் சேனா போன்ற மதவெறி அமைப்பினர் திரண்டிருந்தனர். அரசின் அனுமதியில்லாமல் திரண்ட பார்ப்பன-இந்து மத வெறி அமைப்பினரைக் கலைந்து போகச் செய்யாமலும் கைது செய்யாமலும் அவர்களிடம் காவல்துறை சமாதானம் பேசியது. ஆனால் இழி சாதி, இழி மக்கள் என்கிற இழிவைப் போக்கப் போராடிய கழகத்தினரைத் தடுப்புக் காவலில் கைது செய்கிறார்கள். இந்தச் செயல்களால் தமிழக அரசு தனது பார்ப்பனப் பாசத்தை வெளிப்படுத்திவிட்டது. தமிழர்களை - பார்ப்பனரல்லாத மக்களை இழிவுபடுத்தும் இந்து மத ஆச்சாரம் காப்பாற்றப்பட வேண்டும் என்கிற இந்துத்துவாவிற்கு தமிழக அரசு துணை போனது கண்டனத்துக்குரியதாகும். 

முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் சிறையிலடைக்கப்பட்ட தோழர்கள்

சென்னை மாவட்டம்

ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட அமைப்பாளர் எ.கேசவன், வடசென்னை மாவட்டச் செயலாளர் வி.ஜனார்த்தனன், திரு.வி.க. நகர் வெங்கடேசன், அயன்புரம் மணிவண்ணன், தகில், நாகராஜ், பரசுராமன், சைதை ராஜு, எம்.ஜி.ஆர். நகர் மாசிலா விநாயகமூர்த்தி, சந்தோஷம், ராமாவரம் சுப்பிரமணி, ராயப்பேட்டை வெங்கடேசன், ரஞ்சித்

காஞ்சிபுரம் மாவட்டம்

மாவட்ட அமைப்பாளர் கண்ணதாசன், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் பிரதாப், அனகை நகரச் செயலாளர் து.முருகவேல்

மதுரை மாவட்டம்

மாநகர் மாவட்டத் தலைவர் வெ.குமரேசன், மாநகர் மாவட்ட அமைப்பாளர் மு.தமிழ்ப்பித்தன்

திண்டுக்கல் மாவட்டம்

தெற்கு மண்டல அமைப்பாளர் துரை.சம்பத், மாவட்ட இணைச் செயலாளர் இரா.கிருஷ்ணமூர்த்தி

கடலூர் மாவட்டம்

மாவட்ட அமைப்பாளர் கு.அழகிரி, விஜி, முருகன்

கோவை மாவட்டம்

சித்தாபுதூர் ஆறுமுகம், கோபால், அறிவழகன், ராஜா, ஜெகன், ஆனந்தன், அன்னூர் ஜோதிராம், ராமன்

பெரம்பலூர் மாவட்டம்

மாவட்டத் தலைவர் இலட்சுமணன், மாவட்டச் செயலாளர் ஜெ.ஜெயவர்த்தனா, பெரியார் நேசன்

ஈரோடு மாவட்டம்

மாவட்டச் செயலாளர் குமரகுருபரன், மாவட்ட அமைப்பாளர் குணசேகரன், கோபி நகரச் செயலாளர் ஜெயராமன், ரவி, செந்தில்

கரூர் மாவட்டம்

மாவட்டத் தலைவர் தனபால், மாவட்டச் செயலாளர் சரவணன்

திருச்சி மாவட்டம்

மாவட்டத் தலைவர் ஜெகநாதன்

 கழகத்திற்கு எதிராக அணி திரண்ட பார்ப்பனர்கள்

 சென்னை மயிலாப்பூர் கிளை தமிழ்நாடு பிராமணர் சங்கம் கருவறை நுழைவுப் போராட்டம் நடத்திய கழகத்தை எதிர்த்து ஆயிரக் கணக்கான துண்டறிக்கையை விநியோகித்து இருந்தது. அதில், "இல்லை யென்று சொன்னவர்கள் உண்டென்று சொல்லி இறந்ததுண்டு! கடவுளே இல்லை எனும் இவர்கள் கடவுள் கருவறையில் ஏன் நுழைய வேண்டும்? பொறுத்தது போதும்! பொங்கி எழுங்கள் இந்து மக்களே! இறையாண்மை காக்க எழுந்தோடி வாருங்கள்!" என்று கழகத்திற்கு எதிராக அணி திரட்ட அழைப்பு விடுத்திருந்தது.

1008 தேங்காயுடன் அணிவகுப்போம் என்ற தலைப்பில் இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா, இந்து மறுமலர்ச்சி முன்னேற்றக் கழகம், விவேகானந்தா நற்பணி இயக்கம், அகில பாரத இந்து மகா சபா, இந்து திராவிட மறுமலர்ச்சிக் கழகம், இந்து காவிப் புலிகள், ருத்ரசேனா, ஸ்ரீராம் சேனா, மறத்தமிழர் சேனா போன்ற அமைப்புகள் "ஐந்தறிவு பிராணியாய் சுற்றித் திரிவும் பெரியார் தி.க. ராமகிருஷ்ண னுக்கு 6ஆம் அறிவைப் பயன்படுத்தும் புத்தியைக் கொடு" என அருள்மிகு கபாலீஸ்வரரை வேண்டி 1008 தேங்காய் உடைக்கும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுதல், ஆளுக்கொரு தேங்காயுடன் அணிவகுப்போம்!" என்று துண்டறிக்கை வெளியிட்டு கோவில் கருவறை காக்கத் திரண்டனர்.

தர்மபுரியில் தலித்துகள் தாக்கப்பட்ட போதும், சாதி வெறியை நாட்டில் சிலர் பரப்புகின்றபோதும் எங்கேயோ இருந்த இந்த இந்து மதவெறி அமைப்புகள் கோவில் கருவறையில் நுழைவோம் என்றதும் பார்ப்பனர்களுக்கு ஆபத்து என்றதும் துள்ளிக் குதித்து வீதிக்கு வந்து இந்துக்களே அணி திரள்வோம் என்று அணி திரட்டுகிறது.

Pin It