சென்னையில் ஷாகின்பாக்:

thiyagu 600இந்தியா முழுவதும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் டெல்லியில் ஷாகின் பாக் பகுதியில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. அதனைத் தொடர்ந்து சென்னை *வண்ணாரப்பேட்டையில்* *சென்னையில் ஷாகின் பாக்* என்ற முழக்கத்தோடு மக்கள் கூடித் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 19.01.2020 ஆறாவது நாளான இன்று ததேவிஇ சார்பில் தோழர்கள் கலந்து கொண்டனர். இயக்கப் பொதுச்செயலாளர் *தோழர் தியாகு, தமிழ்த் தேசம் இதழின் பொறுப்பாசிரியர் தோழர் சமந்தா மற்றும் மனிதி சார்பில் தோழர் மார்டினா* ஆகியோர் உரையாற்றினர். அதனைத் தொடர்ந்து தொடர் போராட்டத்தின் மற்றொரு பகுதியான *மண்ணடியில்* போராடும் மக்களை சந்தித்துப் பொதுச்செயலாளர் தோழர் தியாகு வாழ்த்திப் பேசினார். 

தமிழ்க் குடியுரிமைப் பரப்புரை!

நாடு முழுவதும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் தொடர்கின்றன. நாம் இதற்குத் தீர்வாகத் தமிழ்நாட்டிற்குத் தனிக்குடியுரிமை வேண்டும் என்பதை முன்வைக்கின்றோம். இதனை மக்கள் இயக்கமாக்கத் தொடர் பரப்புரையும் செய்து வருகிறோம். அதனடிப்படையில் முதற்கட்டமாக ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் 11.01.2020 சனிக்கிழமை மாலை சரியாக 4 மணிக்கு அம்பாள் நகர் பகுதியில் இயக்கப் பொதுச்செயலாளர் தோழர் தியாகு தலைமையில் தோழர்கள் மகிழன் சமந்தா,மில்லர் ஆகியோர் ஒன்றுகூடி மக்களை வீடுவீடாகச் சந்தித்துத் துண்டறிக்கை வாயிலாகப் பரப்புரை தொடங்கினோம்.

பேராதரவும் பேருதவியும்

தொடக்கத்திலிருந்தே மக்கள் எங்களை மகிழ்வோடு ஆர்வமாக வரவேற்றனர். பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைவரும் ஆர்வமாக கேட்டுத் தெரிந்து கொண்டனர். வீடு, கடைகளென சுமார் 500 குடும்பங்களைச் சந்தித்துக் கோரிக்கையை விளக்கிப் பேசினோம். மக்கள் தங்களால் இயன்ற அளவில் இந்தக் கோரிக்கையின் தேவையைப் புரிந்து கொண்டு அதனை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கில் தாராளமாகப் பொருள் உதவி கொடுத்து எங்களை ஆதரித்தனர்.

thiyagu tea stall 600தொடர்ந்து இந்த பரப்புரையை சென்னையில் பல பகுதிகளில் செய்யத் திட்டமிட்டுள்ளோம். நீங்களும் பரப்புரையில் நேரடியாக வந்து கலந்துமாறு அழைப்பு விடுக்கின்றோம். 

சென்னையில் குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்புப் போராட்டங்கள்!

நாடுமுழுவதும் பல்வேறு இடங்களில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது தமிழகம் மௌனம் காத்துக் கொண்டிருந்தது. 19.12.2019 அன்று அந்த மௌனம் கலைந்து, முதல் போராட்டம் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்றது. CAA எதிர்ப்புக் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற அந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர். நமது இயக்க சார்பில் உரிமைத் தமிழ்த் தேசத்தின் பொறுப்பாசிரியர் தோழர் சமந்தா உரையாற்றினார்.

26.12.2019 சென்னை சேப்பாகத்தில் எழுத்தாளர்கள், திரைக்கலைஞர்கள், ஓவியர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் இணைந்து நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் இயக்கப் பொதுச்செயலாளர் தோழர் தியாகு கலந்து கொண்டு உரையாற்றினார். திசம்பர் 31 நள்ளிரவில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து புத்தாண்டைக் கொண்டாடுவோம் என்ற முழக்கத்தோடு சென்னை கவர்னர் மாளிகை அருகில் போராட்டம் நடைபெற்றது. நமது இயக்கத் தோழர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். 04.01.2020 அன்று சென்னை நிருபர்கள் சங்கத்தில் சுயஆட்சி இந்தியா கட்சி ஏற்பாடு செய்த கருத்தரங்கில் பொதுச்செயலாளர் தோழர் தியாகு சிறப்புரையாற்றினார்.

27.01.2020 அன்று சென்னை அம்பத்தூரில் தமிழர் விடுதலைக் கழகம் ஏற்பாடு செய்த பொதுக்கூட்டத்தில் தோழர் தியாகு உரையாற்றினார். பாசிச எதிர்ப்புக் கூட்டமைப்பு சார்பில் சென்னை சேப்பாகத்தில் நடைபெற்ற பெருந்திரள் பொதுக்கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்சிகள், இயக்கங்கள் கலந்து கொண்டனர். நமது இயக்கச் சார்பில் பொதுச்செயலாளர் கலந்து கொண்டு உரையாற்றினார்.

20.12.2019 அன்று மாலை அரசு அடக்குமுறை எதிர்ப்புக் கூட்டமைப்பு சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் மனித உரிமைகளுக்காகக் குரலெழுப்பும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் இயக்கப் பொதுச்செயலாளர் தோழர் தியாகு கலந்து கொண்டு பேசுகையில், புரட்சித் தலைவர் லெனின் நமக்கு கற்றுக் கொடுத்தது சனநாயகம் என்பது தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமை இல்லையென்றால் அர்த்தமற்றது, தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையின் ஒரு கூறுதான் ஒவ்வொரு தேசத்திற்கான குடியுரிமையும், அப்படி ஒவ்வொரு தேசத்திற்கான குடியுரிமையையும் கோருவதன் மூலம்தான் இந்தப் போராட்டங்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முடியும் என்று பேசினார். 

thiyagu muslim 600பாவாணர் கோட்டப் பாசறை சார்பில் 24.11.2019 அன்று முறம்புவில் பாவலரேறு பெருஞ்சித்திரனார் விழா முன்னெடுக்கப்பட்டது. முப்பெரும் விழாவாக நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ்- தமிழர் நோக்கும் போக்கும் என்ற தலைப்பில் தோழர் தியாகு கருத்துரை வழங்கினார்.

பாபர் மசூதி தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன ஆயம் வழங்கிய அநீதியான தீர்ப்பைக் கண்டித்து பாசிச எதிர்ப்புக் கூட்டமைப்பு சார்பில் 21 நவம்பர் 2019 அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். இந்தியா முழுவதும் பெரிய அளவில் எதிர்ப்பை வெளிப்படுத்த இயலாத நிலையில் தமிழகத்தில் 40க்கு மேற்பட்ட அமைப்புகள் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தன. நமது இயக்கத்தின் சார்பில் பொதுச்செயலாளர் தோழர் தியாகு பேசுகையில்; இந்த தீர்ப்பு இறுதி என எண்ண வேண்டாம். மக்கள் தீர்ப்பே இறுதியானது. மெரினாவில் கூடி சல்லிக்கட்டு இறுதி தீர்ப்பை மாற்றி சட்டம் இயற்றியது போல் இந்த தீர்ப்பையும் மக்கள் கூடி உடைத்தெறிவோம் என்று பேசினார். 

Pin It