“விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்குவோம்! போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு இரண்டே நிமிடங்களில் பாடம் கற்பிப்போம்!”

இது ஏதோ திரைப்படங்களில் தீமைகளின் மொத்த உருவமாக இருக்கும் வில்லன் பாத்திரம் பொறி பறக்கப் பேசும் வசனம் போல அல்லவா இருக்கிறது?

இதைப் பேசியது யாரோ அல்ல, இந்திய அரசமைப்புச் சட்டத்தை செயலாக்கிச் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பில் உள்ள ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஷ்ரா ஆவார்.

’ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு’ என்பது போல இந்தப் பேச்சு கடந்த பத்து மாதங்களாக வெயில், மழை, குளிர் எதையும் பொருட்படுத்தாமல் தலைநகர் தில்லியிலும் அதன் அண்டை மாநிலங்களிலும் வேளாண் சட்டங்களை நீக்கக் கோரிப் போராடி வரும் விவசாயிகளை கோபப்படுத்தியது. எனவே அமைச்சருக்கு எதிராகப் போராட்டம் நடத்துவது என்று விவசாயிகள் முடிவெடுத்தனர்.

bjp ran over farmersஉத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரி பன்பீர்பூர்தான் அஜய் குமார் மிஷ்ராவின் சொந்த ஊராகும். இந்த லக்கிம்பூர் மாவட்டத்தில் ரூ.117 கோடி மதிப்பிலான 165 திட்டங்களைத் தொடங்கி வைக்கும் அரசு நிகழ்வுகள் நடைபெற்றன. அவற்றில் ஒரு நிகழ்ச்சி பன்பீர்பூர் கிராமத்திலும் நடைபெற்றது. இந்த நிகழ்வில் உத்தரப் பிரதேச மாநிலத் துணை முதலமைச்சர் கேசவ பிரசாத் மௌரியா, அஜய் குமார் மிஷ்ரா ஆகிய இருவரும் கலந்து கொள்ள வந்தனர். அவர்கள் இருவரின் வருகைக்கும் எதிர்ப்பு தெரிவித்தும் ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தியும் சென்ற அக்டோபர் 3ஆம் நாள் விவசாயிகள் கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

துணை முதல்வர் கேசவ பிரசாத் மௌரியா ஹெலிகாப்டர் மூலம் வரத் திட்டமிட்டிருந்தார். இதற்காக மகாராஜா அக்ரஸேன் விளையாட்டு திடலில் ஹெலிபேட் அமைக்கப்பட்டிருந்தது. இந்தத் திடலை ஆயிரக்கணக்கான விவசாயிகள் சூழ்ந்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் மௌரியா ஹெலிகாப்டர் பயணத்தைக் கைவிட்டு சாலை வழியாக நிகழ்விடத்திற்கு வந்தார்.

விவசாயிகளும் தங்கள் போராட்டத் திட்டத்தை மாற்றிக் கொண்டு சாலை வழியாக ஊர்வலம் நடத்தினர். இந்த ஊர்வலம் பன்பீர்பூர் – திகோனியா சாலை வழியாகச் சென்றது.

ஊர்வலத்தின் பின்புறமாக அஜய் மிஷ்ராவின் மகன் ஆஷிஷ் மிஷ்ரா பதினைந்துக்கு மேற்பட்ட நபர்களுடன் அவரது உறவினர்கள் மற்றும் அடியாட்களுடன் மூன்று ஊர்திகளில் வந்துள்ளார். வந்த வேகத்தில் திட்டமிட்டு ஊர்வலத்தின் மீது வாகனத்தை மோதினார். அத்துடன் துப்பாக்கியாலும் சுட்டுள்ளார். இதில் லவ்பிரீத் சிங் (20), குர்விந்தர் சிங் (19), தல்ஜீத் சிங் (35), நச்சட்டர் சிங் (60) ஆகிய 4 விவசாயிகள் கொல்லப்பட்டனர். 15 விவசாயிகள் காயமுற்றனர். நிகழ்வைப் பதிவு செய்து கொண்டிருந்த ஏபிபி செய்தி நிறுவன ஊடகர் ராமன் காஷ்யப்பும் இந்தக் கும்பலால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவர்களுடன் சேர்த்து விவசாயிகளின் எதிர் வன்முறையில் 4 பேர் என மொத்தம் 9 பேர் கொல்லப்பட்டனர்.

விவசாயிகள், எதிர்கட்சிகளின் போராட்டங்களும், அரசின் அடக்குமுறையும்

இந்தப் படுகொலை விவசாயிகள் நடுவில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சம்யுக்த கிசான் மோர்ச்சா, பாரதிய கிசான் யூனியன் ஆகியவை உத்தரப் பிரதேசத்திலும் இந்திய ஒன்றியம் முழுவதிலும் போராட்டங்கள் அறிவித்தன. விவசாயிகளின் போராட்டத்தைக் கட்டுப்படுத்த உத்தரப் பிரதேச அரசு அப்பகுதி முழுவதும் 144 தடையாணை பிறப்பித்தது. இணையத்தைத் தடை செய்தது. அமைச்சர் அஜய் குமார் மிஷ்ரா உள்துறை இணை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படவேண்டும், அமைச்சர், அவர் மகன் ஆஷிஷ் மிஷ்ரா இருவரும் கைது செய்யப்பட வேண்டும், உச்சநீதிமன்றக் கண்காணிப்பில் அவர்கள் வழக்கு விசாரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்தனர்.

அன்று இரவே விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் தலைமையில் 300க்கு மேற்பட்ட விவசாயிகள் அணிதிரண்டு திகோனியா சென்றனர். உத்தரப் பிரதேசக் காவல்துறையினர் சாலைகளில் தடுப்புகள், வாகன சோதனைகள் உள்ளிட்ட கடுமையான தடைகளை ஏற்படுத்தி, விவசாயிகளைத் தடுக்க முயன்றனர். இந்தத் தடைகளையும் தாண்டி அவர்கள் படுகொலை நடந்த பகுதிக்கு சென்றனர். படுகொலை நடந்த மறுநாள் உத்தரப் பிரதேசத்திலும் தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய ஒன்றியத்தின் பிற பகுதிகளிலும் மாவட்ட அளவில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து இன்றுவரை பல்வேறுவிதமான வடிவங்களில் விவசாயிகள் நீதி வேண்டித் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதே காலத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக எதிர்கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் தீவிரமான போராட்டத்தில் இறங்கினர். லக்கிம்பூர் கெரி செல்ல முயன்ற சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவையும் சமாஜ்வாதி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர்கள் பலரையும் வீட்டுச் சிறையில் வைத்தது உபி அரசு. இதைக் கண்டித்து அகிலேஷ் ’தர்ணா’வில் ஈடுபட்டார்.

நிகழ்வு நடந்த மறுநாள் அக்டோபர் 4ஆம் நாள் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா லக்கிம்பூர் கெரி புறப்பட்டுச் சென்றார். அவர் செல்லும் வழியிலேயே உத்திரப் பிரதேசக் காவல் துறையால் தடுத்து நிறுத்தப்பட்டுக் கைது செய்யப்பட்டார். சீதாபூர் அருகே 36 மணி நேரம் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் உபி வந்தார் அவரை லக்னோ விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தியது உபி காவல் துறை. இதையடுத்து அவர் விமான நிலையத்திலேயே தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டார். பஞ்சாப் துணை முதல்வர் சுகீந்தர் லக்கிம்பூர் செல்லும் வழியில் சஹரான் பூரில் தடுத்து நிறுத்தப்பட்டார்.

நீண்ட போராட்டத்திற்கு பிறகே; காங்கிரஸ் கட்சி ராகுல் உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட குழுவை அனுமதிக்க வேண்டும் என்று உபி அரசுக்குக் கடிதம் எழுதிய பிறகே உபி அரசானது ராகுல், பிரியங்கா உள்ளிட்டவர்கள் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரைச் சந்திக்க அனுமதி அளித்தது. ஆனால் தாங்கள் ஏற்பாடு செய்யும் ஊர்தியில்தான் செல்ல வேண்டும் என்று காவல்துறை நிபந்தனை விதித்தது. இதனால் மீண்டும் ராகுல் காந்தி, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி ஆகியோர் லக்னோ விமான நிலையத்திலேயே ’தர்ணா’ போராட்டத்தில் ஈடுபட்டனர். இறுதியாக காவல்துறை அவர்கள் விருப்பத்திற்கே அனுமதித்தது. பின்னர் ராகுல், பிரியங்கா இருவரும் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினர்.

இப்படி ஒரு மூர்க்கமான தொடர் அடக்குமுறையில் ஈடுபட்டது யோகி ஆதித்யநாத் அரசு. விவசாயிகள் படுகொலையைக் கண்டித்தும் அதன் பிறகான உபி அரசின் அடக்குமுறை நடவடிக்கைகளைக் கண்டித்தும் சரத் பவார், மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின், உத்தவ் தாக்கரே, அரவிந்த் கெஜிரிவால் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். மராட்டியத்தை ஆளும் “மகா விகாஸ் அகாதி” கூட்டணி அக்டோபர் 11 அன்று மாநிலம் முழுக்கப் பொது வேலைநிறுத்தம் நடத்தியது.

கொலைகாரர்களுக்குத் துணைபோன ஆதித்யநாத் அரசும், உச்சநீதிமன்றத்தின் கண்டிப்பும்

ஒரு பக்கம் அடக்குமுறை நடவடிக்கைகளை ஏவிக் கொண்டே மறுபக்கம் விவசாயிகளை அமைதிப்படுத்தும் சமரச நடவடிக்கைகளையும் யோகி அரசு மேற்கொண்டது. அப்படிச் செய்து கொண்டே குற்றவாளிகளைப் பாதுகாக்கும் வேலைகளில் இறங்கியது. நவராத்திரி படத்தில் சிவாஜி கணேசன் ஒரே நேரத்தில் ஒன்பது வேடங்களில் நடித்தது போல யோகி அரசானது ஒரே நேரத்தில் பல முகங்களைக் காட்டியது.

கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு 45 லட்சம் பண உதவி, குடும்பத்தில் ஒருவருக்கு வேலை, காயமுற்றோருக்கு 10 லட்சம் பண உதவி என அரசு அறிவித்தது. ஆஷிஷ் மிஷ்ரா உள்ளிட்ட 13 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தது. டிஐஜி உபேந்திர அகர்வால் தலைமையில் 9 பேர் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைத்தது. பிரதீப் குமார் ஸ்ரீவஸ்தவா என்ற ஓய்வு பெற்ற நீதிபதியை ஒற்றை உறுப்பினராக கொண்டு ஒரு விசாரணை ஆணையத்தை நியமித்தது. இந்த ஆணையம் இரண்டு மாதத்தில் விசாரணையை முடிக்கும் என்று கூறியது.

இவற்றைச் செய்து கொண்டே மற்றொரு புறம் ஆஷிஷ் மிஸ்ராவைக் காப்பாற்றும் வேலையையும் யோகி செய்ய ஆரம்பித்தார். எந்த ஆதாரமும் இன்றி எதிர் கட்சியினர் மீது வழக்குப் பதிவு செய்தவர்; கைது செய்தவர்; வீட்டுக் காவலில் வைத்தவர் ஆஷிஷ் மிஷ்ரா மீது ஆதாரமின்றி நடவடிக்கை எடுக்க முடியாது என்று கூறினார். ஆனால் இதற்கு முரண்பாடாக அவரே அக்டோபர் 4ஆம் நாள் ஆஷிஷ் மிஸ்ரா மீது வழக்குப் பதிவு செய்திருந்தார். வழக்குப் பதிவுக்குப் பயன்பட்ட ஆதாரம் கைது செய்ய எப்படிப் பயன்படவில்லை என்பதை அவர் தான் விளக்க வேண்டும்.

இதற்கிடையில் வழக்கறிஞர்கள் சிவக்குமார் திரிபாதி, சி.எஸ்.பாண்டா ஆகியோர் உச்சநீதிமன்றத்திற்கு எழுதிய கடித்தில், லக்கிம்பூர் நிகழ்வு தொடர்பாக நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும், சிபிஐ புலனாய்வுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், இந்தப் புலனாய்வை உச்ச நீதிமன்றம் நேரடியாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் கோரினர். இதை ஏற்றுக் கொண்டு உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து கடந்த 6ஆம் நாள் வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கு விசாரணையின் போது குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் பொருத்தமற்ற காரணங்களைக் கூறும் யோகி அரசை உச்ச நீதிமன்றம் கண்டித்தது. அதன்பிறகே அக்டோபர் 9ஆம் நாள் நள்ளிரவில் ஆசிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டார்.

கொடுநெறியாளருக்கு கொடுநெறியாளரே பக்கத்துணை

நாட்டில் இவ்வளவு பெரிய நிகழ்வு நடந்த பின்பும் கூட தலைமை அமைச்சரும் பாசிசக் கெடுமதியாளருமான நரேந்திர மோதி இன்று வரையிலும் வாய் திறக்கவில்லை. அவரது அமைச்சர்களில் ஒருவரான நிர்மலா சீதாராமன் மட்டும் அமெரிக்கா சென்றிருந்த நிலையில் அங்கே கேள்வி எழுப்பப்பட்ட நெருக்கடியின் காரணமாகப் பதிலளித்தார். அந்த பதிலிலும் கூட பிற மாநிலங்களில் இது போன்று நடக்கும் போது யாரும் பேசுவதில்லை எனவும், பாஜக ஆளும் மாநிலங்களில் நடக்கும் போது மட்டுமே எதிர்கட்சிகள் பேசுவதாகவும் சொல்லி நியாயப்படுத்தினார். இதன் மூலம் இது போன்ற நிகழ்வுகள் இந்தியாவில் பிற மாநிலங்களில் வழமையாக நடப்பது போன்ற பிம்பத்தையே உருவாக்குகிறார். குற்றத்தின் தன்மையை குறைத்துக் காட்டுகிறார். எதிர்கட்சிகள் அரசியல் செய்கிறார்கள் என்று திரிக்கவும் திசைதிருப்பவும் முனைகிறார்.

மோதி அரசானது நேரடியாக இது குறித்துப் பேச மறுக்கும் அதேவேளையில் அரசு நிர்வாகத்தின் மொழியில் பேச முனைகிறது. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் உறவினர் வீடுகளில் வருமானவரி சோதனை நடத்தப்பட்டது. இதுகுறித்துப் பேசிய சரத் பவார் தான் உபி படுகொலையை ஜாலியன் வாலாபாக் படுகொலையுடன் ஒப்பிட்டுப் பேசியதால்தான் தன்மீது வருமான வரிச் சோதனை நடத்தப்படுவதாகக் குற்றம் சாட்டினார். இதன் மூலம் பாஜகவையும் அரசையும் விமர்சிப்பவர்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளது மோதி அரசு.

கட்சிப் பொறுப்புகளில் உள்ள பிற பாஜக தலைவர்களும் தொண்டர்களும் நிர்மலா சீதாராமன் பேசியதைப் போன்றே திசைதிருப்பல்களையும் அவதூறுகளையும் செய்து வருகின்றனர்.

பாஜகவில் விவசாயிகள் படுகொலையை கண்டித்துப் பேசிய ஒரே தலைவர் மேனகா காந்தியின் மகன் வருண் காந்திதான். மேலும் அவர்தான் விவசாயிகள் மீது வண்டியை ஏற்றிப் படுகொலை செய்யும் காணொலி காட்சியைத் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டவர். இதன் காரணமாக பாஜக தேசிய செயற்குழுவிலிருந்து மேனகா காந்தியும் வருண் காந்தியும் நீக்கப்பட்டனர்.

பாசிச ஆற்றல்களின் ஊதுகுழலாக விளங்கும் நீதிமன்றமும் ஊடகங்களும்

இந்தக் குறிப்பிட்ட நிகழ்வில் உச்ச நீதிமன்றம் பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நின்று பேசினாலும் நிகழ்வு நடந்த மறுநாள் நடைபெற்ற விவசாயிகள் தொடர்பான வழக்கு ஒன்றின் விசாரணையின் போது அரசுக்குத் துணை போகும் வகையில் நீதிபதிகள் கருத்துகளை கூறினர். உச்ச நீதிமன்றம் வேளாண் சட்டங்களைப் பற்றி முடிவெடுத்த பின்பே விவசாயிகள் போராட வேண்டும் என்று போராட்ட உரிமைகளை மறுக்கும் வகையில் பேசினர். அதன் உச்சமாகப் போராட்ட உரிமை என்பது அடிப்படை உரிமைகளில் ஒன்றா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என்று மிரட்டினர். இது ஆளும் அரசின், ஆளும் வகுப்பின் அப்பட்டமான குரலாகும்.

இதைப் போலவே ஊடகங்கள் அனைத்தும் அரசின் குரலாகவே நடத்து கொண்டன. லக்கிம்பூர் படுகொலையை விவசாயிகள் கலவரம் என்று அவதூறு செய்தன அல்லது இந்தப் படுகொலையை மூடிமறைத்துக் கள்ள மௌனம் சாதித்தன. தமது ஊடகக் கருவிகளை ஆர்யான் கான் பக்கம் திருப்பி வைத்துக்கொண்டன. இவை அனைத்தையும் மீறியே விவசாயிகள் போராடி வருகின்றனர்.

படுகொலையின் பின் உள்ள அரசியல் நோக்கங்கள்

விவசாயிகள் போராட்டம் என்பது நிகழ்காலத்தில் உலக அளவில் கவனத்தை ஈர்த்த, ஈர்த்துக் கொண்டிருக்கிற மிகப் பெரிய போராட்டமாகும். மோதி அரசு உலக அரங்கில் தனக்கு மிகப்பெரிய தலைகுனிவை ஏற்படுத்திய போராட்டமாக இதைக் கருதுகிறது. எனவே எப்படியாவது முடிவுக்குக் கொண்டுவர நினைக்கிறது. கடந்த பத்து மாதங்களாகக் காவல் படைகளை ஏவிவிட்டு முடிவுக்கு கொண்டு வர முயன்றது. காலிஸ்தான் தீவிரவாதிகள், நக்சல் தீவிரவாதிகள் போராட்டத்தில் உள்ளனர், சீனா சதி, பாகிஸ்தான் சதி என்றெல்லாம் வதந்தி பரப்பித் தனிமைப்படுத்த முயன்றனர். இவை எதுவுமே அரசுக்குப் பலனளிக்கவில்லை. எனவே டெல்லியில் நடைபெற்ற என்ஆர்சி, சிஏஏ போராட்டங்களைக் குண்டர் படை மூலம் முடிவுக்கு கொண்டுவந்தது போல் விவசாயிகள் போராட்டத்தையும் முடிவுக்குக் கொண்டுவர நினைக்கிறது. இதற்காகவே பாஜகவானது குண்டர் படையை ஏவி விடுகிறது.

ஆர்எஸ்எஸ் – பாஜக அடிப்படையில் வன்முறையாளர்களைத் தலைவர்களாகவும் தொண்டர்களாகவும் கொண்ட இயக்கங்கள். அங்கே எவ்வளவுக்கு அதிக வன்முறை செய்கிறார்களோ அவ்வளவுக்குத் தலைவராக உயர முடியும். இன்றைய தலைமை அமைச்சர் மோதி கூட 2002இல் மதவெறிப் படுகொலை நடத்தித்தான் தலைவராக உருவெடுத்தார். தற்போது பாஜகவுக்குள்ளும் எதிர்கட்சிகளிலும் அடுத்த பாஜக தலைவராக அல்லது பிம்பமாக யோகி ஆதித்யநாத் உருவெடுத்து வருகிறார் என்ற கருத்து உருவாகி வருகிறது. இந்த நிலையில் அவரைப் போலவே அடுத்த மட்டத் தலைவர்களும் வன்முறையில் ஈடுபட்டுக் பாஜக, ஆர்எஸ்எஸ் தலைமைகளின் கவனத்தை ஈர்க்க முயல்கின்றனர். இதற்கு நல்ல எடுத்துக்காட்டு அண்மையில் அரியானா முதல்வர் மனோகர்லால் கட்டார் பேசியது ஆகும். பாஜகவினர் குழுக்களாகத் திரண்டு விவசாயிகளைப் பழிவாங்க வேண்டும். கட்டைகளைக் கையில் எடுங்கள், சிறை செல்வது குறித்தும் ஜாமீன் பற்றியும் கவலைப்படாதீர்கள், நாங்கள் பார்த்துக் கொள்வோம்; சிறையில் இருக்க நேர்ந்தால் கூட பின்னாளில் நீங்கள் பெரிய தலைவராக முடியும் என்று கூறியுள்ளார். இதுதான் பெரும்பாலான பாஜக தலைவர்களின் மனநிலை. இதைத்தான் அஜய் மிஷ்ராவும் ஆஷிஷ் மிஸ்ராவும் பின்பற்றி வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இத்தகைய ஒரு வன்முறைக் கும்பலுக்கு எதிராகத்தான் விவசாயிகள் போராடி வருகிறார்கள். இந்த வன்முறைக் கும்பலை விவசாயிகள் மட்டுமே தனித்து எதிர் கொண்டுவிட முடியாது. மக்கள் அனைவரும் ஒன்று திரண்டே விரட்டி அடிக்க முடியும்.

ஜெனரல் டயரால் கூட நசுக்க முடியாத மக்கள் போராட்டங்களை ‘நவீன ஜெனரல் டயர்கள்' மூலம் முடிவுக்கு கொண்டு வரப் பார்க்கிறார்கள். கொடுநெறியாளர்களின் கனவு ஒரு போதும் பலிக்காது!

- சிலம்புச் செல்வன்

Pin It