சென்ற செப்டெம்பர் 12ஆம் நாள் சென்னையில் நாம் தமிழர் கட்சி சார்பில் “தமிழரா? திராவிடரா?” என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கத்தில் “சங்கத் தமிழர் வாழ்வியல்” என்ற தலைப்பில் ஆசான் ம. செந்தமிழன் ஆற்றிய உரையை வலையொளியில் உண்மையாகவே வியந்து பார்த்தேன், கேட்டேன். கேட்கக் கேட்கத் தெவிட்டாத இன்பொழிவு!

ஆனால் அந்த உரையில் அவர் முன்வைத்த செய்திகளைத் திறனாய்வு செய்திட என் வியப்புணர்வு தடையாகலாகாது எனக் கருதுகிறேன். சங்க காலத் தமிழர் வாழ்வியலின் சிறப்புகளையும் தொல்காப்பியத்தின் மெய்யியலையும் அழகுற வண்ணித்துக் கூறிய பிறகு ஆசான் ம. செந்தமிழன் முத்தாய்ப்பாகச் சொல்கிறார்:

”இவையெல்லாம் வழக்கொழிந்து களப்பிரர்களிடமும் பல்லவர்களிடமும் தமிழர்கள் வீழ்ந்த பிறகு சங்க காலம் ஒரு முடிவுக்கு வந்தது. அது முடிவுக்கு வந்த போது தமிழர்கள் எதனை இழந்தார்கள் என்ற ஒரு கருத்தைச் சொல்லி விட்டு உரையை நிறைவு செய்கிறேன். மூன்றாம் தமிழ்க் கழகம் வீழ்ச்சியடையவில்லை. அது வீழ்த்தப்பட்டது. மூன்றாம் தமிழ்க் கழகம் வச்சிரநந்தி என்ற ஒரு சமண முனிவனால் வீழ்த்தப்பட்டது.

“இதை என்றுமே மறக்காதீர்கள். எப்பொழுதும் இதை மன்னிக்காதீர்கள். இதை மன்னிக்கவே கூடாது. மறக்கக் கூடாது மன்னிக்கக் கூடாது. ஏனென்றால் அவன் ஒரு பெரும் பாவம் செய்தான். தமிழைத் திரமிளம் என்று அவன் எழுதினான், இதை விட ஒரு பாவத்தை இந்த இனத்திற்கு எவனும் செய்ய முடியாது. எந்தத் தமிழை? ஓரறிவதுவே உற்றறிவதுவே என்று உலகத்திற்கே உயிரினத் தோற்றத்தைப் பதிவு செய்த தமிழை அவன் திரமிளம் என்று எழுதினான். பெரியோரை வியக்க வேண்டியதில்லை, சிறியோரை இகழ வேண்டியதில்லை என்ற சமத்துவத்தைப் பாடிய தமிழை அவன் திரமிளம் என்று எழுதினான். எழுதத் தெரியாமலா எழுதினான்? இல்லை. வேண்டுமென்றே எழுதினான்.”

மதுரையில் தமிழ் வளர்த்த கடைச் சங்கத்தைத்தான் மூன்றாம் தமிழ்க் கழகம் என்று செந்தமிழன் குறிப்பிடுகிறார். அது சரி. கடைச் சங்கமாகிய மூன்றாம் தமிழ்க் கழகம் வீழ்ச்சி அடையவில்லை, அது வீழ்த்தப்பட்டது என்கிறார். யாரால் வீழ்த்தப்பட்டது? வச்சிரநந்தி என்ற சமண முனிவனால் வீழ்த்தப்பட்டதாம்! எப்படி? தமிழைத் திரமிளம் என்று எழுதியதால்! வச்சிரநந்தி தொடங்கிய திரமிளர் சங்கம்தான் வரலாற்று ஆசிரியர்களால் திராவிட சங்கம் என்று குறிக்கப்படுகிறது. ஆகவே இந்தத் திராவிடக் கேடு வச்சிரநந்தியால்தான் ஆதியில் முளைத்தது என்ற முடிவுக்கு வருகிறார் செந்தமிழன். இது பெரும் பாவம், இந்தப் பாவம் செய்தவனை மறக்கவோ மன்னிக்கவோ கூடாது என்று பொங்குகிறார்.

செந்தமிழன் சொல்வது உண்மையா? கடைச் சங்கமாகிய மூன்றாம் தமிழ்க் கழகம் எப்போது முடிவுக்கு வந்தது? வச்சிரநந்தி திரமிளர் சங்கம் அமைத்தது எப்போது? செந்தமிழன் சொல்வது உண்மையானால், திரமிள சங்கத்தின் தொடக்கம்தான் முதலில் நிகழ்ந்திருக்க வேண்டும். மூன்றாம் தமிழ்க் கழகத்தின் முடிவு பிறகுதான் வந்திருக்க வேண்டும். ஆசான் ம. செந்தமிழன் தனது உரையில் இந்த இரு நிகழ்வுகளுக்கும் எவ்விதக் காலக் குறிப்பும் தர வில்லை. இதற்கெல்லாம் நாள், மாதம், ஆண்டு சொல்ல முடியாதுதான். ஆனால் குத்து மதிப்பாக எந்த நூற்றாண்டு என்று சொல்ல முயலலாம் அல்லவா?

பூச்சியபாதர் என்னும் தேவநம்பி ஆசாரியரின் மாணாக்கர்களில் ஒருவரான வச்சிரநந்தி ஆசாரியார் மதுரையில் திரமிள சங்கம் (திராவிட சங்கம்) தொடங்கிய ஆண்டு பொ.ஊ. (கி.பி.) 470 என்பதுதான் அனைத்து (அல்லது மிகப் பெரும்பாலான) வரலாற்றாசிரியர்களின் கணிப்புமாகும். செந்தமிழன் ”ஆய்வறிஞர் மயிலையார்” என்று மதிப்போடு குறிப்பிடும் – அடியேனும் மதிக்கின்ற – வரலாற்று ஆசிரியர் மயிலை சீனி. வேங்கடசாமி சொல்லும் ஆண்டும் இதுவே. அறிஞர் கே.கே. பிள்ளை சொல்லும் ஆண்டும் இதே 470தான். அதாவது ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதி. இந்த ஆண்டுக் குறிப்பில் மாறுபடும் ஜியோதி பிரசாத் ஜெயின் கி.பி. 604ஆம் ஆண்டு திரமிள சங்கம் அமைக்கப்பட்டதாகக் கூறுவது தவறு என்று குறிப்பிடும் மயிலையார் அந்தத் தவற்றுக்கான காரணத்தையும் சுட்டிக் காட்டுகிறார். ஆக, பொ.ஊ. 470க்கு முன் வச்சிரநந்தியின் திரமிள சங்கம் தொடங்கப் பெறவில்லை என்பதுறுதி.

ஆசான் உரையாற்றிய அதே கருத்தரங்கத்தில் மாலையில் உரையாற்றிய தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் தோழர் பெ.மணியரசன் திரமிள சங்கம் நான்காம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டதாகச் சொன்னது வாய்தவறிச் சொன்னதாகத்தான் இருக்க வேண்டும். 470ஆம் ஆண்டு என்றால் ஐந்தாம் நூற்றாண்டாகவே இருக்க முடியும். நான்காம் நூற்றாண்டுதான் என்றே வைத்துக் கொண்டாலும் வச்சிரநந்தியால்தான் - அவர் தொடங்கிய திரமிள சங்கத்தால்தான் -- மூன்றாம் தமிழ்க் கழகம் வீழ்த்தப்பட்டது என்பதை மெய்ப்பிக்க அது உதவாது. மூன்றாம் நூற்றாண்டில் நடந்த ஏதோ ஒன்றுக்கு ஐந்தாம் (அல்லது நான்காம்) நூற்றாண்டில் நிகழ்ந்த எந்த ஒன்றையும் எப்படிக் காரணமாகக் காட்ட முடியும்? இந்தக் குற்றம் காலவழு (anachronism) எனப்படும். தொன்மைக் கால வரலாற்றிலும் கூட சற்றொப்ப இரண்டு நூற்றாண்டுகள் நீட்சி கொண்ட காலவழுவை ஏற்பதற்கில்லை.

ஏனென்றால் வச்சிரநந்திக்கு வெகுகாலம் முன்பே – மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே -- கடைச் சங்கம் முடிந்து போயிற்று. வரலாற்று ஆசிரியர்கள் அனைவரும் இப்படித்தான் காலங்குறித்துள்ளனர்.

கே.கே. பிள்ளை சொல்கிறார்:

“மதுரை மாநகரில் நடைபெற்று வந்த கடைச்சங்கம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முடிவுற்றது. பாண்டி நாட்டில் மிகக் கொடியதொரு பஞ்சம் நேர்ந்ததாகவும் பன்னிரண்டாண்டுகள் அது நீடித்திருந்து மக்களை வாட்டியதாகவும், பாண்டிய வேந்தன் சங்கப் புலவர்களைப் பாதுகாக்க இயலாதவனாய் வெளியே பல இடங்கட்கும் சென்று வாழும்படி அவர்கட்கு விடைகொடுத்து அனுப்பி விட்டான் என்றும், அஃதுடன் தமிழ்ச் சங்கம் இறுதியான முடிவை எய்தியது எனவும் செவிவழி வரலாறுகள் கூறுகின்றன.” (கே.கே. பிள்ளை, தமிழக வரலாறு - மக்களும் பண்பாடும், சங்க காலத்தின் இறுதி)

சங்க காலம் முடிவுக்கு வந்தமைக்கு வேறு காரணங்களும் இருக்கலாம் என்பதை கே.கே. பிள்ளை ஏற்றுக் கொள்கிறார்:

”தமிழ்ச் சங்கம், முடிதற்கு வேறு காரணங்களும் சிலர் காட்டுவர்.அவை ஒன்றுக்கேனும் போதிய சான்றுகள் இல்லை. எனினும், சங்கம் அழிவுற்றதற்கும், தமிழரின் பண்டைய பண்பாடுகளும் கலைகளும் மறைந்து போனதற்கும் தக்க காரணங்கள் இல்லாமற் போகவில்லை. ஏற்கெனவே ஆரியப் பண்பாடுகளாலும் சமயக் கருத்துகளாலும் சமுதாயக் கொள்கைகளாலும் அரிப்புண்டிருந்த தமிழரின் சமூகம் வேறு பல புரட்சிகளுக்கும் உட்படுவதாயிற்று. தமிழகம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே களப்பிரர் என்ற ஒரு குலத்தினரின் படையெடுப்புக்குட்பட்டு அல்லலுற்றது. அவர்கள் தமிழரல்லர்.”

களப்பிரர் ஆட்சிதான் தமிழ்க் கழகத்தை அழித்தது என்று வைத்துக் கொண்டாலும், வச்சிரநந்தியின் திரமிள சங்கத்தின் மீதும் அதன் வழியாக திராவிடத்தின் மீதும் பழி போட இந்தக் கருதுகோள் உதவாது நண்பர்களே! களப்பிரர் படையெடுப்புக்கும் திரமிள சங்கத் தொடக்கத்துக்கும் அதே இருநூறாண்டு காலவழு இருக்கிறதே, என்ன செய்வது? ஆசான் ம. செந்தமிழன் விளக்கம் சொல்லட்டும்.

தமிழை வேண்டுமென்றே திரமிளம் என்று எழுதினாரா வச்சிரநந்தி? அவர் இப்படி எழுதியது ஏன்?

கழகமும் சங்கமும்

ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் (பொ.ஊ. 470) சமண முனிவர் வச்சிரநந்தியால் நிறுவப்பெற்ற திரமிள சங்கத்தால் மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ்க் கழகம் வீழ்த்தப்பட்டது என்று ஆசான் ம. செந்தமிழன் பழி சுமத்துவதன் காலவழுவை எடுத்துக்காட்டினேன்.

தொன்மையில் நிகழ்ந்த இந்தக் குற்றத்தைப் ”பெரும் பாவம்” என்று சாடும் ஆசான் ம.செந்தமிழன் அதை மறக்கவோ மன்னிக்கவோ கூடாது என்று இக்காலத் தமிழர்களாகிய நம்மை உசுப்புகிறார். அவர் சாற்றிடும் குற்ற மடலைக் கேளுங்கள்:

“திரமிள சங்கம் என்று அவன் சொன்னான். எவ்வளவு இறுமாப்பு! இந்த இனத்தின் மீது எவ்வளவு இகழ்வு அவனுக்கு இருந்தால் தமிழ்க் கழகம் என்று இருந்த கழகத்தை அதே மதுரையில் இனி இது தமிழ்க் கழகம் அல்ல, திரமிள சங்கம் என்று கொச்சையாக எழுதி அதை நிறுவி நடத்தினான். யானையை அடித்துத் துன்புறுத்திப் பிச்சை எடுக்க வைப்பதைப் போன்றது தமிழர்களுடைய கழகம் அமைந்த மதுரையில் எதிரிகள் வந்து உட்கார்ந்து கொண்டு திரமிளர் சங்கம் என்று அழைக்க வேண்டும் தமிழர் கழகம் என்று அழைக்கக் கூடாது என்று மிரட்டினார்கள்.”

செந்தமிழன் சொல்கிற படி பார்த்தால் வச்சிரநந்தியார் தமிழ்க் கழகத்தைக் கலைத்து விட்டு திரமிள சங்கத்தை அமைத்திருக்க வேண்டும். தமிழ் காக்கும் தமிழ்க் கழகத்தின் இடத்துக்கு தமிழை அழிக்கும் திரமிள சங்கம் வந்திருக்க வேண்டும். ஆனால் இரண்டுமே மொழி சார்ந்த அமைப்புகளாகவே இருந்திருக்க வேண்டும். இருந்தனவா?

மயிலை சீனி. வேங்கடசாமி சொல்கிறார்:

“சமண சமயத்தை வளர்ப்பதற்காக வச்சிரநந்தி அமைத்த திரமிள சங்கத்தையும் சங்க காலத்தில் பாண்டியர் தமிழ் மொழியை வளர்க்க அமைத்த தமிழ்ச் சங்கத்தையும் ஒன்று என்று கருதுவது தவறு. இந்த இரண்டு சங்கங்களும் வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு காரணத்துக்காக அமைக்கப்பட்ட சங்கங்கள். இரண்டையும் ஒன்றாக இணைத்துக் கூறுவது வரலாறு அறியாதவரின் தவறான கூற்றாகும்.” (களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.)

மேலும் தெளிவாகவே சொல்கிறார்:

”மூன்று வகையான சங்கங்கள்: களப்பிரர் ஆட்சிக் காலத்தில் கி.பி. 5ஆம் நூற்றாண்டில் (கி.பி. 470ஆம் ஆண்டில்) மதுரை நகரத்தில் திரமிள (திராவிட - தமிழ) சங்கத்தை வச்சிரநந்தி அமைத்தார் என்று அறிந்தோம். வச்சிரநந்தி ஏற்படுத்திய சங்கம் சைன மதத்தை வளர்ப்பதற்கான சங்கமாகும் (சங்கம்- கூட்டம்). பௌத்தப் பிக்குகளின் கூட்டத்துக்குப் பௌத்த சங்கம் என்பது பெயர். பௌத்தப் பிக்குகளின் சங்கத் தலைவர் சங்க பாலர் என்று பெயர் கூறப் பெற்றார். பௌத்தர்களுடைய மும்மணிகளில் பௌத்தப் பிக்குகளின் சங்கமும் ஒன்று. சங்கம் சரணம் கச்சாமி என்பது காண்க. இதன் பொருள் பௌத்த சங்கத்தைச் சரணம் அடைகிறேன் என்பது. சைனத் துறவிகளின் கூட்டத்துக்கும் சங்கம் என்பது பெயர். சங்கத்தைச் (கூட்டத்தை) சைனர் கணம் என்றும் கூறுவர். கணம் என்றாலும் சங்கம் என்றாலும் ஒன்றே. களப்பிரர் ஆட்சிக்கு முன்னே பாண்டியர் தமிழ் மொழியை ஆராய்வதற்குப் புலவர்களின் கூட்டத்தை ஏற்படுத்தினார்கள். அந்தக் கூட்டத்துக்குத் தமிழ்ச் சங்கம் என்பது பிற்காலத்துப் பெயர். அதன் பழைய பெயர் தமிழ்க் கழகம் என்பது. பிற்காலத்துப் பாண்டியர் அமைத்திருந்த சங்கம் மதச் சார்பான சங்கம் அன்று. அது தமிழ் மொழியை ஆராய்வதற்கு ஏற்பட்ட சங்கம்.” (மயிலை சீனி. வேங்கடசாமி, களப்பிரர் ஆட்சியில் தமிழகம், இணைப்பு 2: வச்சிரநந்தியின் திரமிள சங்கம்)

நாம் இப்போது தமிழ்ச் சங்கம் என்று குறிப்பிடுவதைத் தமிழ்க் கழகம் என்பதே சரி என்று ஆசான் ம, செந்தமிழன் சுட்டுவது சரியானதே, பாண்டியர் வளர்த்த தமிழ்ச் சங்கத்துக்குக் கழகம், கூடல் என்ற பெயர்கள் விளங்கின. மதுரையைக் கூடல் மாநகரம் என்பது இதனால்தான். முன்னால் போய்விட்ட தமிழ்க் கழகத்தைப் பின்னால் வந்த சமண சங்கத்தால் எப்படித் தடை செய்ய முடியும்?

ஓடையில் நீர் பருகிக் கொண்டிருந்த மான் குட்டியிடம் ஓநாய் வம்பு செய்த கதை நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. இருபதாம் நூற்றாண்டுத் திராவிடத்தின் மீது வெறுப்புற்று ஐந்தாம் நூற்றாண்டுத் திரமிள சங்கத்தை மூன்றாம் நூற்றாண்டுத் தமிழ்க் கழகக் கலைப்புக்குக் குற்றவாளியாக்கும் செந்தமிழனின் ஏரணமற்ற முயற்சி காலவழுவின் உச்சம். பாவம், பெரும்பாவம், இறுமாப்பு, இகழ்வு என்ற கடுஞ்சொற்களால் இந்தக் காலவழுவை மறைக்க முடியாது.

அது சரி. தமிழ் ஏன் திரமிளம் என்று திரிந்தது? வச்சிரந்தியின் திட்டமிட்ட சூழ்ச்சியால் என்பது ஆசான் ம. செந்தமிழனின் புரிதல், இந்தப் புரிதலுக்கு என்ன அடிப்படை? மொழியியல் சார்ந்து அவரால் இதற்கு விளக்கம் தர முடியுமா?

தமிழ் எவ்வாறு திரமிளம் ஆயிற்று?

வச்சிரநந்தி எனும் சமண முனிவரால் தமிழ்க் கழகம் வீழ்த்தப்பட்டது என்று குற்றஞ்சாற்றும் ஆசான் ம. செந்தமிழன் அது எப்படி நிகழ்ந்தது என்றும் சொல்கிறார். தமிழை திரமிளம் என்று எழுதியதாலாம்! வேண்டுமென்றே எழுதியதால்! தமிழைக் கெடுக்க வேண்டுமென்றே எழுதியதால்! என்கிறார்.

இந்தக் குற்றசாற்று உண்மைதானா? தமிழரல்லாதாரின் உச்சரிப்பில் தமிழம் திரமிளம் ஆகத் திரிந்தது பற்றி அறிஞர் பலரும் எழுதியுள்ளனர். பாவாணர் பார்வையை மட்டும் எடுத்துரைத்தல் போதுமெனக் கருதுகிறேன்.

devaneya paavanarதமிழர்கள் தங்களைத் திராவிடர்கள் என்று அழைத்துக் கொள்ளக் கூடாது என்று சொன்னவர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர். அதே போது திராவிடம் என்ற சொல் எப்படி வந்தது என்பதைப் பாவாணர் விரிவாக அலசியுள்ளார்.

”பழைய காலத்தில் நாட்டுப் பெயர்களும் மொழிப் பெயர்களும் பெரும்பாலும் அம் ஈறு பெற்றுத் தமிழில் வழங்கின. எடுத்துக்காட்டு: ஈழம், கடாரம், சீனம், யவனம், தமிழம். த்ரமிள (ம்) - த்ரமிட(ம்) – திராவிட(ம்) என்னும் முறையில் தமிழம் என்னும் சொல்லே திராவிடம் என்று திரிந்ததாகும். தமிழம் என்பது தவிள – தவிட – என்று பிராகிருதத்தில் திரிந்த பின்பு, தமிலி, தமில என்னும் வடிவங்கள் த்ரமிள, திரவிட, த்ரவிட என்று வடமொழியிற்திரிந்ததாக, பண்டிதர் கிரையர்கள் கூறுவர். எங்ஙனம் இருப்பினும் தமிழம் என்னும் சொல்லே த்ரவிட என்று திரிந்ததென்பதற்கு எட்டுணையும் ஐயமில்லை….”

“திராவிட மொழிகள் எல்லாவற்றிலும் தமிழம் என்னும் பெயரே பொதுப் பெயராக முதலாவது வழங்கி வந்தது. த்ராவிடம் என்னும் வடிவம் தமிழம் என்னும் பொருளிலேயே முதன் முதல் வழங்கியதாகும்.”

தமிழம்தான் வச்சிரநந்தி போன்ற பிற மொழியாளரால் திரமிளம் என்று சொல்லப்பட்டது என்பதற்குப் பெரிய விளக்கம் தேவையில்லை. மெது மிருது ஆனது போல் தமிழ் திரமிள் ஆயிற்று என்பர். ழகரம் தமிழுக்கே உரியது (கூடுதலாக மலையாளத்துக்கும் உரியது எனலாம்). தமிழர்களில் பலருக்கே ழகர உச்சரிப்பு கடினமாய் இருப்பது இன்றும் மெய்! வாழைப் பழத்தை வாளைப் பளமாகத் தான் பலரும் வழங்கி வருகின்றனர். இதில் சூழ்ச்சி, சதித் திட்டம் எதுவுமில்லை!

ஒவ்வொரு மொழிக்கும் உரிய ஒலியமைதி அப்படியே வேறு மொழிக்கு வாய்ப்பதில்லை. பிரான்சு நாட்டவர் பேசும் மொழியை ஆங்கிலேயர் பிரெஞ்சு என்கிறார்கள். நாமும் ஆங்கிலேயரைப் பின்பற்றி பிரெஞ்சு என்கிறோம். ஆனால் பிரான்சு தேசத்தவர் தமது மொழியை பிரான்சுவா (Francois) என்று சொல்வர். ஜோன் ஆஃப் ஆர்க் என்றும் ஆங்கிலேயரும் நாமும் சொல்வதை பிரெஞ்சியர் ழோன்தார்க் என்பர். ஆங்கிலேயர்க்கு சார்லஸ், பிரெஞ்சியருக்கு ஷார்ல்! ஆங்கிலேயருக்கு செயிண்ட் தாமஸ், பிரெஞ்சியருக்கு சாந்தோம்! ஆங்கிலேயர்க்கு இங்கிலீஷ், நமக்கு ஆங்கிலம்! இப்படிப் பல சான்றுகள் தர முடியும். இதில் சூழ்ச்சி, சதி ஒன்றுமில்லை.

தமிழ் பிற மொழியாளர் பேச்சில் திராவிடமாக மட்டும் திரியவில்லை. தமிழுக்குத்தான் எத்தனைப் பெயர்கள்! மு. வரதராசனார் சொல்வார்:

“தமுளியா என்ற திரிபை டச்சுப் பாதிரிமார்களும், தமிழிரி என்ற திரிந்த வடிவத்தை ரோமர்களும், தெஹிமோலோ என்ற திரிபை சீனரும் வழங்கியது போலவே, தமிழொலி பயிலாத ஆரியர் தமிழ் என்பதையே தமிளோ. தரமிளோ, திரமிளம், திரவிடம், திராவிடம் எனத் திரித்து வழங்கினர் எனக் கொள்வதே பொருந்தும்.”

தமிழொலி பயிலாத ஆரியர் என்று மு.வ. சொல்கிறாரே அத்தகைய ஒருவர்தான் வச்சிரந்தியார்!

தமிழொலி பயிலாதார் சூட்டிய திரிபுப் பெயரையே நாமும் சூட்டிக் கொள்ள வேண்டுமா? என்று ஆசான் ம. செந்தமிழன் கேட்டால் அதில் ஒரு ஞாயம் உண்டு! ஆனால் வச்சிரநந்தி வேண்டுமென்றே தமிழை திரமிள என்று திரித்துப் பெரும்பாவம் செய்து தமிழ்க் கழகத்தை வீழ்த்தி விட்டார் என்பது காற்றில் கம்பு சுற்றுவதே ஆகும்.

தமிழொலி பயிலாத ஐரோப்பியர் நம் ஊர்ப் பெயர்களை எப்படியெல்லாம் சிதைத்தார்கள் என்பது கூறாது விளங்கும். தஞ்சாவூர் டாஞ்சூர் ஆனது. திருநெல்வேலி டின்னவேலி ஆனது. தூத்துக்குடி டுட்டிகோரின் ஆனது. தமிழர்களும் ஐரோப்பியர் போலவே திரிந்த உச்சரிப்பை வலிந்து வழங்குவதுதான் குற்றம்!

பிழையாக எழுத்துக் கூட்டியதால் உச்சரிப்பு பிழைத்து அதுவே நிலைத்து விடுவதும் உண்டு. புதுச்சேரி அப்படித்தான் பாண்டிச்சேரி ஆயிற்று என்பர். புதுச்சேரியை பிரெஞ்சியர் Pouducheri என்று எழுதப் போய் மூன்றாம் எழுத்து u என்பதற்கு மாறாக n என்று படிக்கப்பட்டதாம். விரைவாக எழுதும் போது ஏற்படுகிற தோற்றப் பிழைதான் காரணமாக இருக்க வேண்டும். புதுச்சேரி என்று அதிகார முறையில் மாற்றிய பிறகும், புதுவை என்ற அழகான சுருக்கப் பெயர் இருந்தும் கூட இன்றளவும் படித்த தமிழர்கள் கூட பாண்டிச்சேரி என்றும், செல்லமாகப் பாண்டி என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே? புதுவை என்றால் போதிய ’கிக்’ இல்லை போலும்! புதுவையைப் பாண்டி நாட்டுக்குச் சொந்தமாக்கிக் கொள்ளும் சூழ்ச்சியோடு வேண்டுமென்றே இப்படித் திரித்துப் பெயர் சொல்கிறார்கள் என்று குற்றஞ்சொல்ல முடியாது அல்லவா?

தமிழொலி பயிலாத அயலார் செய்த பெயர்த் திரிபுகள் வேறு. திட்டமிட்ட ஆரியமயமாக்கத்தின் ஒரு பகுதியாகச் செய்த புரட்டுகள் வேறு. திருமுதுகுன்றத்தை விருதாசலம் ஆக்கியதும் திருமரைக்காட்டை வேதாரண்யம் ஆக்கியதும் மயிலாடுதுறையை மாயூரம் ஆக்கியதும் வடவரின் சூழ்ச்சித்தனமே என்பதில் ஐயமில்லை. தமிழம் திரமிளமாகத் திரிந்ததை இந்த வரிசையில் சேர்த்துக் குழப்பிக் கொள்ளத் தேவையில்லை.

தமிழ் என்ற சொல்லை சரியாக உச்சரிக்கத் தெரியாதது மட்டும்தான் வச்சிரநந்தியின் மீது செந்தமிழன் சீற்றம் கொள்ளக் காரணமா? அவர் சமணத்தைச் சாடுகிறார். சாடி விட்டுப் போகட்டும்! சமூக அறிவியலின் பக்கம் நின்று குற்றாய்வு செய்கின்றாரா என்றால் இல்லை. சைவத்தின் பக்கம் நின்று அதைச் செய்கிறார். சமணத்தின் மீது கண்மண் தெரியாத வெறுப்புக் கனல் உமிழ்கிறார். அந்த வெறுப்புதான் காலவழு கருதாமல் வச்சிரநந்தியைப் பழி தூற்ற அவரை நகர்த்திச் செல்கிறது என்பதற்கு நாம் தமிழர் கட்சியினர் “இறைப்பேருரை” என்று பரப்பி வரும் செந்தமிழன் உரையிலேயே அகச் சான்று உள்ளது.

- தியாகு

Pin It