ஆசிரியர்: சத்யஜித் ராத்

Dr sathyajit 350சமூக மாற்றத்தில் அக்கறை கொண்ட விஞ்ஞானியான சத்யஜித் ராத் தில்லியில் உள்ள தேசிய நோயெதிர்ப்பு ஆய்வகத்தில் (NII) பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். புனேயில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (IISER) இணைப் பேராசிரியராகப் பணியாற்றியவர்.

தலைப்பு 1: மரபியலும் மனிதப் பரவலும்:

உயிரியல் பாரம்பரியம் குறித்துப் பல்வேறு முறைகளில் உற்றுநோக்க முடியும். உயிரியல் ஆய்வுகளிலிருந்து கிடைக்கும் தரவுகளை அவ்வாறு பரிசீலிக்கும் போது பழைய கேள்விகளுக்கான விடைகளைப் புரிந்து பெற்றடைய முடியும். இனவாதம் என்ற கருத்தாக்கத்தை மரபியல் அடிப்படையில் உற்றுநோக்குவோம். 18ஆம் நூற்றாண்டில் இனவாதம் உயிரியல் அடிப்படையில் அமையப் பெற்ற ஒரு கருத்தாக்கமாகக் கருதப்பட்டது. மனித இனங்கள் வெள்ளையினம், மஞ்சளினம், கறுப்பினம், பழுப்பினம் என வேறுபடுத்தப்பட்டுப் பிரிக்கப்பட்டிருந்தன. டார்வினுக்கு முந்தைய காலகட்டத்தில் வெள்ளை, மஞ்சள் என அழைக்கப்படும் ஒவ்வொரு மனித இனமும் ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாமல் தற்சார்பாக உருவானதாய் நம்பப்பட்டது. கார்ல் லின்னேயஸ் உயிரினங்களை வகைப்படுத்தினார். உயிரியல் வகைபாட்டின் அடிப்படையில் மனிதனை ஹோமோ சேபியன் என அழைக்கிறோம். (பேரினம்: ஹோமோ, சிற்றினம்: சேபியன்ஸ்). ஆனால் கறுப்பு ஹோமோசேபியன் என்றோ, வெள்ளை ஹோமோசேபியன் என்றோ எவரும் எங்கும் இல்லை என்ற போதிலும் கறுப்பின மக்கள், வெள்ளையின மக்கள் எனப் பிரித்துப் பார்க்கும் தவறான கருத்தாக்கம் காணப்படுகிறது.

மரபுவழியில் கடத்தப்படும் பாரம்பரியம் என்றால் என்ன? டி.என்.ஏ நகல்களின் மூலம் பெற்றோரிடமிருந்து அடுத்த சந்ததியினருக்குக் கடத்தப்படும் தகவல். டி.என்.ஏ வில் உள்ள தகவல்களை நகலெடுக்கும் போது என்ன நடக்கிறது என்று பார்ப்போம். உதாரணமாக இலக்கியப் படைப்புகளைப் பண்டைய காலங்களில் ஓலைச் சுவடிகளில் நகலெடுத்தார்கள், காகிதம் கண்டுபிடித்த பிறகு புதிய முறைகளில் நகலெடுக்கிறார்கள். அவ்வாறு நகலெடுக்கும் போது பிழைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அது போல் டி.என்.ஏ.வில் உள்ள தகவல்களை நகலெடுக்கும் போது 10 கோடி எழுத்துகளுக்கு (நியூக்ளியோடைடுகள்) ஒரு முறை பிழை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. (டி.என்.ஏவின் எழுத்துகள் போல் அடிப்படை அலகுகளாக நியூக்ளியோடைடுகள் உள்ளன. அடினோசின், குவானோசின், சைட்டோசின், யுராசின் என நான்கு விதமான நியூக்ளியோடைடுகள் உள்ளன). டி.என்.ஏவை நகலெடுக்கும் உயிரியல் நிகழ்வில் 10 கோடி எழுத்துக்களுக்கு (நியூக்ளியோடைடுகள்) ஒரு முறை பிழை ஏற்படுகிறது. டி.என்.ஏவை நகலெடுக்கும் போது 4 முறை பிழை ஏற்படுகிறது என வைத்துக் கொள்வோம், அது 4 விதமான மாறுபாடுகளை டி.என்.ஏ.வில் ஏற்படுத்துகிறது. இந்தப் பிழைகளே மரபியல் மாறுபாடுகள் (genetic variation) ஏற்படுவதற்கு அடிப்படையாக உள்ளன.

மனிதர்கள் எங்கு தோன்றினார்கள், எங்கெங்கெல்லாம், எப்படியெல்லாம் அவர்களது பரவல் ஏற்பட்டது என்பது குறித்து செய்த ஆய்வுகளிலிருந்து பார்த்தோமானால், நாம் அனைவரும் 1.5 லட்சம் ஆண்டுகளுக்கு முன் கிழக்கு மத்திய ஆப்பிரிக்காவில் தோன்றிய சிறு எண்ணிக்கையிலான மனிதக் குழுக்களிலிருந்து தோன்றியவர்கள்தாம் என்பது தெரியவரும். அவ்வாறு பார்த்தால் நாம் அனைவரும் ஆப்பிரிக்கர்கள்தான். உலகின் தூய்மையான, மிகத் தூய்மையான மனித இனம் ஆப்பிரிக்க இனம் மட்டுமே.

ஆதிகாலத்தில் ஆப்பிரிக்கா ஆசியாவுடன் நிலவழித் தொடர்புடன் இணைந்திருந்தது. ஆப்பிரிக்காவிலிருந்து வடக்காக மனித இனத்தின் பரவல் நடைபெற்றுள்ளது. அங்கிருந்து கருங்கடல், காஸ்பியன் கடலை சுற்றியுள்ள பகுதிகளுக்கு, ஈரான், ஆஃப்கானிஸ்தான், தெற்காசியா ஆகிய பகுதிகளுக்கு மனித இனம் பரவியது. இந்தோனேசியாவில் முதலில் பரவிய மனிதக் கூட்டம் எரிமலைகளால் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அழிந்து போனது. நாம் அதற்கடுத்துப் பரவிய மனிதக் குழுக்களிலிருந்து தோன்றியவர்கள். நாம் ஒரு மனித சமூகமாக இங்கு 50,000 ஆண்டுகளாக இருந்து வருகிறோம். அதற்கான மரபணுத் தடங்கள் நம் அனைவரிடமும் உள்ளது.

இந்தியாவில் 12,000 ஆண்டுகளுக்கு முன்பு மேற்காசியாவிலிருந்து வந்த மனிதர்களின் பரவல் ஏற்பட்டது. இந்தியாவில் வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கிடையே இந்த மரபணு வழித்தடங்களில் படிநிலை வேறுபாடு காணப்படுகிறது. மேற்காசியாவிலிருந்து வந்தவர்கள் விவசாயம் செய்யும் மக்கள் அல்ல. 10,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்துதான் மக்கள் இங்கு விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் பிறகு 4,000-5,000 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய ஆசியாவிலிருந்து வந்தவர்கள் இந்தியாவில் பரவினர். இந்தக் கடைசி இந்தோ-ஐரோப்பியர்களின் வருகையினால் ஏற்பட்ட மரபுவழித்தடத்தில் இந்தியாவின் வடக்கு, தெற்கு பகுதிகளிடையே பெரும் வேறுபாடு காணப்படுகிறது. சாதிகளிடையேயும் ஓரளவு வேறுபாடு காணப்படுகிறது. “உயர்சாதியினர்” என்று அழைக்கப்படுபவர்களிடம் இந்தோ-ஐரோப்பியர்களுக்கான மரபுத் தடங்கள் அதிகம் காணப்படுகின்றன. அறிவார்ந்தவர்களிடம் இது குறித்துப் பரந்த அளவில் ஒத்தக் கருத்தாக்கம் உருவாகி உள்ளது.

ஆனால் 2019 செப்டம்பரில் என்ன நடந்தது எனப் பார்ப்போம். தொல்பொருள் ஆய்வுகளிலிருந்து கிடைத்த படிமங்களிலிருந்து டி.என்.ஏ.வைப் பிரித்தெடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. வெப்ப மண்டல, மித வெப்ப மண்டலப் பகுதிகளில் உயிர்மப் பொருட்கள் விரைவில் சிதைவுறுவதால் அங்குள்ள படிமங்களிலிருந்து டி.என்.ஏ.வைப் பிரித்தெடுப்பது மிகவும் கடினம். ஆனால்,வறண்ட குளிர்ப் பிரதேசங்களில் நுண்ணுயிர்கள் குறைவாக உள்ளதால், உயிர்மப் பொருட்கள் சிதைவுறும் வீதம் குறைவு. அதனால்தான் வட துருவப் பகுதிகளில், உதாரணமாக ஃபின்லாந்தில் ஆதிகாலத்து பிரம்மாண்டமான விலங்குகள் உறைந்த நிலையில் அழியாமல் பெறப்பட்டன. தற்பொழுது தொழில்நுட்ப வளர்ச்சியால் அடர்ந்த எலும்புகளிலிருந்தும், காதின் குருத்தெலும்பிலிருந்தும் கூட டி.என்.ஏ.வைப் பிரித்தெடுக்க முடிகிறது. 2019 செப்டம்பரில் 2 ஆய்வுக் கட்டுரைகள் ‘செல்’ மற்றும் ‘சயன்ஸ்’ என்ற அறிவியல் ஆய்வு ஏடுகளில் வெளியிடப்பட்டன. இரண்டு ஆய்வுக் கட்டுரைகளிலும் ஆசிரியர்களில் 40 சதவீதத்தினர் பங்களித்துள்ளனர்.

35 வெவ்வேறு தொல் ஆய்விடங்களிலிருந்து பெறப்பட்ட 523 பண்டைய மனிதர்களின் எலும்பு மாதிரிகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர்களின் எலும்புகளிலிருந்து பெறப்பட்ட டி.என்.ஏ. தரவுகளை அவர்களுக்குள்ளும் ஏற்கெனவே பெறப்பட்ட டி.என்.ஏ. தரவுகளுடனும் ஒப்பிட்டும் இந்த ஆய்வு செய்யப்பட்டது. இதில் சிந்து சமவெளி நாகரிகத்தைச் சேர்ந்த ராக்கிகரியிலிருந்தும் (அரியானா) புதைக்கப்பட்ட ஒரு பெண்ணின் எலும்பிலிருந்து பெறப்பட்ட டி.என்.ஏ.வும் பயன்படுத்தப்பட்டது.

இந்த 523 டி.என்.ஏ. மாதிரிகளில், ஷஹ்ர்-இ-சோக்தா (கிழக்கு ஈரான்), கோனூர் (துர்க்மெனிஸ்தான்) ஆகிய இடங்களிலிருந்து பெறப்பட்ட 11 பேரின் டி.என்.ஏ. மாதிரிகள் மற்ற 511 பேரின் டி.என்.ஏ மாதிரிகளிலிருந்து வேறுபட்டுள்ளது. இந்த 11 பேரின் டி.என்.ஏ மாதிரிகளும் விவசாயம் செய்யப்படாத பகுதிகளிலிருந்து பெறப்பட்டவை. இந்தப் பகுதிகளுடன் சிந்து சமவெளி கலாசார தொடர்பில் இருந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த 11 பேரின் டி.என்.ஏ. மாதிரிகளும் மரபுவழியில் தமக்குள் தொடர்புடையவையாகவும், சிந்து சமவெளிப் பெண்ணின் டி.என்.ஏ.வுடன் தொடர்புடையவையாகவும் இருந்துள்ளன. அவரது தாய்வழி மரபு வழித்தடங்கள் (மைட்டோகாண்டிரிய டி.என்.ஏ.) 16,000 ஆண்டுகளுக்கு முன்னர் உள்வந்த குழுவிடமிருந்து பெறப்பட்டது எனத் தெரியவந்துள்ளது. அவரது உட்கரு டி.என்.ஏ. 12,000 ஆண்டுகளுக்கு முன்வந்த மேற்காசிய மரபு வழித் தடங்களைக் கொண்டுள்ளது. (மனிதர்களில் மரபுப் பாரம்பரியம் கடத்தப்படுவதில் இயற்கையில் பாலின வேறுபாடுகள் உள்ளன. மனித செல்களில் உட்கருவிலுள்ள டி.என்.ஏ. தாய், தந்தை இருவரிடமிருந்தும் பெறப்படுகிறது. ஆனால் மைட்டோகாண்டிரிய டி.என்.ஏ.வைத் தாயிடமிருந்து மட்டுமே பெற முடியும். தாயிடமிருந்து மைட்டோகாண்டிரிய டி.என்.ஏ. மகன், மகள் இருவருக்கும் கடத்தப்படுகிறது. ஒய் குரோமோசோம் டி.என்.ஏ. தந்தையிடமிருந்து மகனுக்கு மட்டுமே கடத்தப்படுகிறது.)

சிந்துசமவெளியைச் சேர்ந்த அந்தப் பெண்ணின் மரபுவழித்தடமானது. மேற்காசியாவின் விவசாயத்தில் ஈடுபடாத ஈரானியர்களுடைய மரபுவழித் தடங்களுடன் ஒத்ததாக உள்ளது. 12,000 ஆண்டுகளுக்கு முன் மேற்காசியாவில் விவசாயம் செய்வதற்கு முன்பு ஒரே மூதாதையரிடமிருந்து இருவேறு பிரிவினராக கிழக்கு துருக்கியிலும், சிந்து சமவெளியிலும் பிரிந்துள்ளனர். அந்தப் பெண் விவசாயத்தில் ஈடுபடும் ஈரானியர்களுடைய மரபுவழித் தடங்களைக் கொண்டிருக்கவில்லை. அதனால் சிந்து சமவெளியினர் தற்சார்பாக விவசாயத்தில் ஈடுபட்டிருக்கலாம். சிந்து சமவெளிப் பெண்ணிடம் ஸ்டெப்பி ஆயர்களின் மூலம் வந்த இந்தோ ஐரோப்பிய மரபணுக் கூறுகள் காணப்படவில்லை. சிந்துசமவெளியைச் சேர்ந்தவர்கள் வேதகாலத்துக்கு முந்தையவர்கள் என்னும் கருத்தாக்கத்தை இது உறுதிப்படுத்துகிறது.

ஆனால் இந்த ஆய்வுக்கட்டுரையின் முதல் ஆசிரியர் வசந்த் ஷிண்டே இதற்கு முற்றிலும் முரணான கருத்தைப் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார். இவர் டெகன் கல்லூரியில் பணிபுரிந்து ஓய்வு பெற்று தற்போது புனேயிலுள்ள தொல்லியல்துறையில் பணிபுரிகிறார். அந்த ராக்கிகரி பெண்ணின் எலும்பு மாதிரி வசந்த் ஷிண்டே மூலமே பெறப்பட்டது என்பதால் அவரை ஆய்வுக் கட்டுரையில் முதல் ஆசிரியராக குறிப்பிட்டுள்ளார்கள். வசந்த் ஷிண்டே பத்திரிக்கையாளர்களிடம் என்ன கூறினார் தெரியுமா? இந்த ஆய்வின் மூலம் நாம்தான் விவசாயத்தை முதலில் கண்டுபிடித்தோம் என்றும், இந்தியாவிலிருந்துதான் விவசாயம் மற்ற இடங்களுக்குப் பரவியது என்றும் கூறினார். ஆரியப் புலமப்பெயர்வு இந்த ஆய்வின் மூலம் பொய்யாக்கப்பட்டுள்ளதாகவும், சிந்துசமவெளியின் கலாசாரம் என்பது வேதக் கலாசாரமே என்றும், ராக்கிகரி பெண் வேதகாலத்துப் பெண் என்றும், அவர் சமஸ்கிருதம்தான் பேசியிருக்கிறார் என்றும் ஆய்வுக்குப் புறம்பாக அறிவியலைத் திரித்துக் கூறினார். அவர் ஒரு தீவிர இந்துத்துவா ஆதரவாளர் என்பதால் அறிவியலை இந்துத்துவ அரசியலுக்குத் தவறாகப் பயன்படுத்துகிறார். சமூகக் கட்டமைப்பில் விஞ்ஞானிகளின் ஆய்வு எவ்வாறு திரிக்கப்படுகிறது என்பதையும், அரசியல்வாதிகளிக்கு விலைபோகாமல் விஞ்ஞானிகள் சமூக உணர்வுடன் பாகுபாடற்றுச் செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள முடியும்.

பின் குறிப்பு: 

இந்த ஆய்வுக்கட்டுரைகளின் பிற ஆசிரியர்கள் எவரும் வசந்த் ஷிண்டேயின் கருத்துகளை ஆதரிக்கவில்லை.

ஆய்வுக்கட்டுரைகள்:

1.) Largest-ever ancient-DNA study illuminates millennia of South and Central Asian prehistory. Harvard Medical School, Science Daily, 5 September 2019.

2.) An Ancient Harappan Genome Lacks Ancestry from Steppe Pastoralists or Iranian Farmers
Cell 179, 1–7 October 17, 2019

தலைப்பு 2: அறிவியலும் சமூகமும்:

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தத்தில், அறிவியல் மனோநிலையை மக்களிடம் உருவாக்க வேண்டும் என்று கூறுவது கெடுவாய்ப்பானது. இது அடிப்படையில் தவறான கருத்தாக்கம். அறிவியல் மனோநிலை என்பது நம் இயற்கையான உள்ளுணர்வாக உள்ளது. சமூக மதிப்பீட்டில் அறிவியல் என்பது தொழில்நுட்பம் என்ற கண்ணாடியின் வழியாக மட்டுமே பார்க்கப்படுகிறது. அறிவியல் மனோநிலை என்பது அடிப்படையில் நம் மனித இனத்தின் உயிரியல் பண்பு. நம் அன்றாட வாழ்வில் நாம் நிகழ்வாய்ப்புகளைக் கணக்கிட்டவாறுதான் வாழ்கிறோம். பொதுவாக நம் அனைவருக்கும் அறிவியல் மனோநிலை ஆழ்மனத்தில் பொதிந்துள்ளது. அறிவியல் மனோநிலை என்பதை நம் அனைவருக்கும் பொதுவான நம் உள்ளுணர்விலிருந்து விளக்க முடியும்.

நம்மில் ஒவ்வொருவரும் நாளை என்ன நடக்கும், எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற நிச்சயமின்மையால் பதட்டம் கொள்கிறோம். நம் எதிர்காலம் நிச்சயமற்றது என்பதை அறிந்துள்ளோம். அந்த நிச்சயமற்ற எதிர்காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதையும் உணர்கிறோம். இது மனித இனமாக நம் அனைவரையும் எப்போதுமே கவலைகொள்ளச் செய்கிறது. இது மனித இனத்தின் பண்புகளில் ஒன்றாகும். எதிர்காலத்தில் என்ன நடைபெறும் என்பதை எப்படி முன்னரே தெரிந்து கொள்வது? கணிப்புகளின் மூலம்தான்.

நாம் கணிப்புகளை மேற்கொள்கிறோம். ஆனால் நம் கணிப்புகள் நாளை என்ன நடைபெறும் என்பதைச் சரியாகக் கூறவில்லையென்றால் அதனால் நம் அச்சம் குறையப் போவதில்லை. எதிர்காலத்தைக் கணிக்கும் முறையில் நம்பகத் தன்மையை அதிகரிக்கவும், நம்பகமின்மையை எவ்வளவுக்குக் குறைவாக்க முடியுமோ அவ்வளவு குறைவாக்கவும் நாம் முயற்சிக்கிறோம். இது விஞ்ஞானியின் கருவி மட்டும் அல்ல. இதுதான் எங்கெங்கும் உள்ள மனிதர்களின் தினசரி வாழ்வாகவும் உள்ளது.

இதில் உத்தி என்னவென்றால், நம் கணிப்புகளின் நம்பகத் தன்மையை எப்படி அதிகரிப்பது? அதை சோதனையிட்டு சரிபார்ப்பதும், தவறாய்ப் போனால் வேறுமுறைகளில் கணிப்பதும், மீண்டும் மறுசோதனை செய்து சரிபார்ப்பதும் என்று இவ்வாறு நம் கணிப்புகள் சரியாக இருக்கும் வரை அவற்றைத் தொடர் மறுசோதனைகள் செய்வதன் மூலம் நம்பகத்தன்மையை அதிகரிக்கிறோம். இது மனித இனமாகிய நாம் அறிவியல் மனோநிலையை அன்றாட வாழ்வில் கொண்டிருக்கிறோம் என்பதை எளிமையாகவும் வெளிப்படையாகவும் விளக்குகிறது. நாம் நம்மைச் சுற்றியுள்ள உலகத்தை, உயிரினங்களை, உயிரற்றவற்றை, சமூகத்தைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறோம். அதற்கான மாதிரிகளை உருவாக்குகிறோம், அதன்,மூலம் சோதனைகள் செய்து கணிப்புகள் மேற்கொள்கிறோம்.

மனித சமூகங்கள் தம்முன்னுள்ள நிச்சயமற்ற தன்மையைக் குறைத்து அனைத்தையும் முன்னுணர முயற்சி செய்கின்றன. சோதனை செய்து நிகழ்வுகளை முன்னறிந்து அழிவுகளைத் தடுக்க நாம் முயற்சிகள் மேற்கொள்கிறோம், அதில் பிழை ஏற்பட்டால் மீண்டும் வேறுவகையில் சோதித்துப் பார்க்கிறோம், தொடர் சோதனை முயற்சிகளால், பிழைகளைக் களைவதற்கும், வாழ்வின் நிச்சயமற்ற தன்மையை எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைப்பதற்கும் தொடர் முயற்சிகள் மேற்கொள்கிறோம்.

ஆகையால் அறிவியல் மனோநிலையை மக்களிடம் மீட்டெடுக்க வேண்டும் என்று கூற வேண்டுமே தவிர அறிவியல் மனோநிலையை உருவாக்க வேண்டும் என்றல்ல. அறிவியல் மனோநிலையில்தான் நாம் வாழ்கிறோம்.

பாரம்பரிய அறிவு அறிவற்றதாகக் கருதப்படுகிறது. பாரம்பரிய அறிவையும், மூடநம்பிக்கைகளையும் பிரித்தறிந்தால், மூடநம்பிக்கைகள் பயத்தின் அடிப்படையில் உருவாகியதை அறியலாம். பயத்திலிருந்து விடுபடவே மூடநம்பிக்கைகளை மக்கள் பயன்படுத்துகிறார்கள்.

பகுத்தறிவாளர் தபோல்கரிடம் ”கிராமங்களிலுள்ள இளைஞர்கள் மத நம்பிக்கையுடையவர்களாக உள்ளனரே, அவர்களை எப்படி உங்கள் சமிதியில் சேர்த்துக் கொள்கிறீர்கள்?” என்று கேட்டதற்கு, தபோல்கர் கூறினார். ”ஒவ்வொரு நாளையும் தாங்கக் கூடியதாக்க மக்களுக்கு உள்ள ஆதரவு அமைப்புகளை நாங்கள் மாற்ற முயற்சி செய்யவில்லை.” கலைவடிவங்கள் அப்படிப்பட்ட ஆதரவு அமைப்புகளாகத்தான் மக்களுக்கு உள்ளன. மூடப்பழக்கங்களின் மூலம் சமூகத்தில் சுரண்டல் நடைபெறுகிறது.

மூடநம்பிக்கைகள் ஒரே தன்மையுடையவை. இரண்டு நிகழ்வுகளைத் தொடர்புக்குரியவையாகக் கருதி அவற்றைக் காரண, விளைவுகளாகக் கருதுவது மூடநம்பிக்கை. தொடர்புடையவையாகக் கருதப்படும். அனைத்துமே காரண விளைவுகளாக இருப்பதில்லை (Correlation is not causation). அவற்றிற்கிடையே காரண விளைவு நிரூபிக்கப்பட்டுப் புரிந்துகொள்ளப்படுமானால் அது அறிவியல் பூர்வமானது. நிரூபிக்கப்பட்ட காரண-விளைவுகளையே அறிவியல் பூர்வமானவையாக நாம் ஏற்றுக் கொள்கிறோம். உதாரணமாக எஸ்கிமோக்களுக்கும் கிரீன்லாந்தில் உள்ள சமூகத்தினருக்கும் விட்டமின் டி குறைபாடு காணப்பட்டது ஆனால் நார்வே மக்களுக்கு விட்டமின் டி குறைபாடு இல்லை. இதற்கு என்ன காரணம் என ஆராய்ந்தால், நார்வேயினரின் கலாச்சார பாரம்பரியத்தில் காட் என்னும் கடல் மீனை சாப்பிடுவதாலும், கரடிகளை வேட்டையாடி ஈரலை உண்பதாலும் அவர்களுக்கு விட்டமின் டி குறைபாடு காணப்படவில்லை. கிரீன்லாந்தில் உள்ள சமூகத்தினர் மீன் ஈரல் சாப்பிடாததால் விட்டமின்-டி குறைபாடு ஏற்பட்டது.

நீங்கள் உண்மை என்று உணரும் ஒன்று மற்ற அனைவராலும் உணரப்படவில்லையென்றால் அது பகிரப்பட்ட பொது உண்மை அல்ல. உதாரணமாகப் பேய் என்ற கருத்தாக்கம். பகிரப்பட்ட உண்மைகளின் மூலம், எதிர்கால நிச்சயமின்மையைக் குறைக்க அதன் காரண காரியத் தொடர்புகளை நாம் உற்றுநோக்குகிறோம். ஒருவருக்கொருவர் ஆதரவாகச் செயல்படும் சமூகத்தில் மக்கள் ஒவ்வொருக்கொருவர் தங்களது சந்தேகங்களை, அவநம்பிக்கைகளை, கேட்டறிவர். அதனால் எதிர்கால மகிழ்ச்சியின்மையைக் குறைக்க முயற்சி செய்து தாம் வாழும் சூழலை மேம்படுத்த அவர்களால் முடியும்.

18ஆம் நூற்றாண்டின் மூடநம்பிக்கைகளின் தொடர்ச்சியாகத்தான் ஹோமியோபதிக்கு எதிராக அலோபதி உருவானது. அலோபதியில், அலோ என்றால் முரணான, வேறுபட்ட என்று பொருள். அலோபதியில் நோய்க்காரணிக்கு முரணான தன்மை கொண்ட மருந்து நோயை குணமாக்கும் என்று கருதப்படுகிறது. ஹோமோ என்றால் ஒத்த என்று பொருள். ஹோமியோபதியில் நோய்க் காரணியை ஒத்த மருந்து நோயைக் குணமாக்கும் என்று கருதப்படுகிறது.

மனித சமூகங்களின் அனுபவங்களின் மூலம் பெற்ற அறிவுச் சொத்தானது திறந்த முறை அமைப்பாக, அனைவருக்கும் பொதுவாக இருக்கும் பொழுது சமூகத்தில் உள்ள அனைவரும் அதில் பயன்பெற முடியும். ஆனால் அதைச் சமூகத்தின் ஒரு பகுதியினர் மட்டும் அபகரித்துக் கொள்ளும் போது அதனால் முழு சமூகமும் அந்த அறிவின் பயன்பாட்டைப் பெறுவதிலிருந்து தடுக்கப்படும். இன்றுள்ள படிநிலைகளைக் கொண்ட மேட்டுக்குடி அரசியல் கட்டமைப்பு அவ்வாறுதான் செயல்படுகிறது. சமூகத்துக்குப் பொதுவான அறிவுச் சொத்தைத் தனதாக்கித் தங்கள் அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்கான கருவிகளாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த மூடிய அமைப்பு மேட்டுக்குடிகளுக்குச் சாதகமாகவும், மற்றவர்கள் சரியான முறையில் அறிவு பெற்று உலகைச் சரியாகப் புரிந்து கொள்வதைத் தடுப்பதாகவும் இருக்கிறது. இன்றைய அரசியல் கட்டமைப்புதான் சமூகம் அறிவு பெறுவதைத் தடுத்து நம் அறிவியல் மனோநிலையை மறுக்கிறது.

பண்டைய சமூகத்தில் முடி திருத்துபவர்களே மருத்துவர்களாகவும், அறுவைசிகிச்சை செய்பவர்களாகவும் இருந்துள்ளனர். வயதான பெண்கள் மருத்துவ அறிவு கொண்டவர்களாக இருந்தனர். நாம் அறிவுச் சொத்தை இழந்து விட்டோம், பாரம்பரிய அறிவு அனைத்தும் மேட்டுக்குடி மக்களால் அபகரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சமூகத்திடமிருந்து அதைப் பிரித்தெடுத்து, தங்களுக்கு மட்டும் சொந்தமான வேத உரைகளாக்கி, அதன் அடிப்படையில் தம் மேலாதிக்கப் போக்கை நிலைநிறுத்திக் கொள்கின்றனர். அறிவுச் சொத்து முற்றிலும் ஒரு மேட்டுக்குடி சமூகத்தினரால், ஒரு மூடிய அமைப்பாக்கப்பட்டுள்ளது, சமூகத்திடம், மக்களிடம் கொண்ட உயிர்மத் தொடர்புகள் அறுபட்டதால், அந்த அறிவு வளர்ச்சியின்றி தேக்கமடைந்துள்ளது.

உதாரணமாக மருந்து எப்படி வேலை செய்யும் என்பது குறித்த அறிவைத் தங்களுக்குள் மட்டும் ரகசியமாக வைத்துக் கொள்ளும் மருத்துவ முறை, மக்களின் உயிர்மத் தொடர்பை இழந்ததால் வளர்ச்சியின்றி தேங்கிப் போகிறது. ஆயுர்வேதா ‘ஆயுர்வேதாவாகும்’ வரை அறிவியலாகத்தான் இருந்தது. அதன் அடிப்படை அறிவு மக்களுடையது.

அபகரிக்கப்பட்ட அறிவுச் சொத்தை சமூக நலத்தின் அடிப்படையில் பொதுக் கொள்கை உருவாக்கி மக்களுடையதாக்க வேண்டும். நம் பரந்துபட்ட சமூக நீதியின் ஒரு கூறாக இதனை மீட்டெடுப்பது மிகவும் அவசியம். அறிவுச் சொத்தைத் திறந்த அமைப்பாக மக்கள் மீட்டெடுக்க வேண்டும். சமூக நலன்களுக்காக, சமூக மேம்பாட்டிற்கு சேவை செய்யும் விதமாக அறிவியல் மனோநிலையை மீட்டெடுக்க வேண்டியதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். அதுவே நம் முன்னுள்ள பணி.                                                                           

தொடரும்

Pin It